Saturday, February 25, 2017

யாம் உண்ட கலமும், உடுப்பனவும்,சூடுவனவும் உனக்காக.........


விசாரசருமர் அந்தணர் குலத்தைச் சேர்ந்தவர். இடையச்சிறுவன் பசுக்களை அடித்து துன்புறுத்துவது கண்டு தானே பசுக்களை மேய்க்கத் தொடங்குகிறார். மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லும் பசுக்களில் பால் கறந்து தன் சிவபூசைக்குப் பயன்படுத்துகிறார்.  ஊரார் இது குறித்து அவரது தந்தையிடம் முறையிடுகின்றனர்.  அவரும் மறைந்திருந்து விசாரசருமரின் செயல்பாடுகளை கவனித்து, உண்மை என்றறிகிறார். கடுங்கோபத்தில் விசாரசருமரின் பூசையைக் கலைக்க முற்படும்போது விசாரசருமர் மழுவால் தன் தந்தையின் கால்களை தறிக்கிறார். உடனே எம்பெருமான் தோன்றி எனக்காக உன் தந்தையை வெட்ட முற்பட்டதால் இன்று முதல் நானே உனக்குத் தகப்பனாகிறேன். நான் உண்டகலமும்  உடுப்பனவும் உனக்கேயாம். உமக்கு சண்டீசன் எனும் பதம் தந்தோம் என்று வாழ்த்தி சரக் கொன்றை மாலையெடுத்து சண்டீசருக்குச் சூட்டி வாழ்த்தியருளுகிறார்.

அன்றிருந்து சிவாலயச் சொத்துக்களுக்கும் பொருட்களுக்கும் அவரே காப்பாளராகிறார்.  கோயிலுக்கு வழங்கும் அனைத்துச் செல்வங்களும் சண்டிகேசர் பெயருக்கே வழங்கப் படுவது வழக்கமாயின.


இந்தப் பெரிய புராணக் காட்சியை கங்கை கொண்ட சோழபுரத்தில் அழகாய் வடிவமைத்து நம் கண்முன்னே நிறுத்தியிருக்கிறார் சிற்பி.  நீண்ட நாட்களாய் நினைவில் இருந்து மறையாத ஒரு அழகிய சிற்பம்.


வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்
-திருத் தொண்டத் தொகை.

ஈன்ற தாதை விழ எறிந்தாய்; அடுத்ததாதை இனி உனக்கு நாம்-பெரிய புராணம்.

நாம் உண்ட கலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காகச் சண்டீசன் எனும் பதம் தந்தோம்-பெரிய புராணம்.

பொன் தடமுடிக்குத் துண்ட மதிசேர் சடைக் கொன்றை மாலை வாங்கிச் சூடினார்-பெரிய புராணம்.
 





No comments :