Saturday, January 06, 2018

பேரா. ம.லெ.தங்கப்பா











 நாஞ்சில் நாடனின் பனுவல் போற்றுதும் புத்தகத்தில்,   “ சிற்பி இலக்கிய விருது “க்கான தேர்வுக் குழுவில் இருந்த போது, பேரா. ம.லெ. தங்கப்பாவின் பெயரை பரிந்துரைத்ததாகக் கூறும் நாஞ்சில், அந்தப் பரிசளிப்பு விழாவில்  தமிழ்க் கவிதை உலகில் பாரதிதாசனைவிட தங்கப்பாவுக்கு நான் முதலிடம் தருவேன் என்று பேசியதாக குறிப்பிட்டிருந்தது எனக்குள் ஏதோ செய்து கொண்டே இருந்தது.

தமிழ் இலக்கிய பெருவியாதிகளையெல்லாம் தெரிந்து வைத்திருந்த  எனக்கு இந்தத் தமிழறிஞரை தெரியாமல் போனதில் ஆச்சரியமேதுமில்லை. நிறைகுடங்கள் எப்பொழுதும் தளும்புவதில்லையே. இன்று காலை தினசரியில்  ஈரோடு தமிழ் இலக்கியப் பேரவை ஆண்டு விழா 7-1-2018 ஞாயிறு மாலை 6 மணியளவில் நடைபெற உள்ளதாகவும் அதில், எஸ்.கே. எம். இலக்கிய விருது திரு.ம.லெ.தங்கப்பாவுக்கு கொடுக்க இருப்பதாகவும் செய்தி வந்திருந்தது.  யார் இந்த பேரா. ம.லெ.தங்கப்பா? இவரைப் பற்றி இத்தனை நாள் தெரிந்து கொள்ளாமலே இருந்துவிட்டோமே என்று வருத்தமும் கூடச்சேர்ந்தது.

தேவநேயப்பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனாருக்குப் பின் அவர்களைப் பின்பற்றி, இலக்கியப்பணியாற்றும் இவர் சங்கத் தமிழ்நூல்களையும், திருவருட்பா, முத்தொள்ளாயிரம், பாரதி, பாரதி தாசன் ஆகியோரின் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இருப்பதும், மொழிபெயர்ப்புகளுக்கான சாகித்ய அகடமி விருது பெற்றிருப்பதும் அறிந்தேன்.  பெரும் தமிழறிஞரான இவர் பல ஆங்கிலக் கவிதைகளையும் எழுதியுள்ளார். இவருடைய சங்கப் பாடல் மொழிபெயர்ப்பை, (LOVE STAND ALONE,  HUES AND HARMONIES FROM AN ANCIENT LAND)  லண்டன் பென்குயின் பதிப்பகம் செம்பதிப்பாக வெளியிட்டுள்ளது.  பெருஞ்சித்திரனாரின் தென்மொழி இதழில் இவருடைய படைப்புகள் தொடர்ந்து வெளிவந்திருக்கின்றன.

தனித்தமிழில், கவிதை, கட்டுரைகள் எழுதலாம். ஆனால் சிறுகதைகளோ, புதினங்களோ எழுதமுடியாது என்ற கருத்தை மறுக்கும் இவர், அதற்கான எடுத்துக்காட்டுகளாக, “தெளிதமிழ்”. “வெல்லும் தூய தமிழ்” போன்ற இதழ்களை சுட்டிக்காட்டுகிறார்.

 “இன்றைக்கும் நூற்றுக்கு நூறு தனித்தமிழை மக்களிடம் எடுத்துச் செல்லத் தேவையில்லை. மிகமிக மடத்தனமான, அருவருக்கத்தக்க ஆங்கிலமொழிச் சொற்கலப்பைத் தமிழிலிருந்து அகற்றியே தீரவேண்டும்.” என்று வலியுறுத்துகிறார்.

”பெறுதல் அன்று; கொடுத்தலே வாழ்க்கை. எழுத்தென்பது ஒரு கொடுத்தல்.  ஒரு தவம். எழுத்தாளன் உலகுக்கு, மக்களுக்குப் பயன் விளைப்பவனாகத் தன்னை உருவாக்கிக் கொள்ளல் வேண்டும்.   திறமையைக் காட்டினால் மட்டும் அது எழுத்தாகாது.  வாழ்தலின் மலர்ச்சியே இலக்கியம். இலக்கியத்துக்குத் தனி இருப்பு இல்லை. அன்பினின்று பிறவாத எந்தச் செயலும் செயல் ஆகாது.   அது செயற்போலி. எனவே நான் இளம் எழுத்தாளர்களுக்குச் சொல்வது இதுதான். முதலில் அன்புடைய, மாந்தநேயமிக்க மாந்தராயிருங்கள்.   அந்த அன்பிலிருந்து, மாந்த நேயத்திலிருந்து உங்கள் எழுத்துகள் பிறக்கட்டும். அப்பொழுதுதான் நீங்கள் உண்மை எழுத்தாளர் ஆவீர்கள். என்ற இவரது ஒரு பேட்டி புதிதாய் எழுத வருபவர்களுக்கு ஒரு பெரும் வழிகாட்டி.


http://keetru.com/literature/essays/thangappa.php தமிழினம் கொஞ்சமும் தற்காப்புணர்வு அற்று இருப்பது ஏன் என்ற இந்தக் கட்டுரை அவரை சிறப்பாக அடையாளப்படுத்தும்.

"'கர உச்சரிப்பு வராத தமிழர்களுக்கான ஒரு பாடல்
"கழுவின பழம் அது
வழுவுது வழுவுது
வழுவின பழம் அது
நழுவுது நழுவுது
நழுவின பழம் அது
முழுகுது முழுகுது
முழுகின பழம் அது
அழுகுது அழுகுது!'

பால புரஸ்கார்  விருது பெற்றசோளக் கொல்லை பொம்மை' நூலில் இருந்து.

தேன் துளிகள்:

 விரிகின்ற நெடுவானில், கடற்பரப்பில்
விண்ணோங்கு பெருமலையில், பள்ளத் தாக்கில்
பொழிகின்ற புனலருவிப் பொழிலில், காட்டில்
புல்வெளியில், நல்வயலில், விலங்கில் புள்ளில்
தெரிகின்ற பொருளிலெல்லாம் திகழ்ந்து நெஞ்சில்
தெவிட்டாத நுண்பாட்டே, தூய்மை ஊற்றே,
அழகு என்னும் பேரொழுங்கே, மெய்யே, மக்கள்
அகத்திலும் நீ குடியிருக்க வேண்டுவேனே.”- (.66)

மன்னும் உயிர் வகையுள் மாந்தர் சிறப்பென்பார்:
பன்னுமுயிர் நாகரிகப்பாங்கில் உயர்வென்பார்:
ஆயினுமென் பட்டறிவால் ஆய்ந்தபடி நான் சொல்வேன்
தீயவர்காண் மாந்தர் செயலால் மிக இழிந்தோர்.
கூனல் நிமிர்ந்து குரங்குநிலை போனாலும்
மானிடரின் கீழ்மை மறைக்குந் தரமாமோ?
காட்டு விலங்கினிலும் கானகத்துப் புள்ளினும்
மேட்டுக் குடிமாந்தன் மிக்க இழிஞனடா”.  (உயிர்ப்பின் அதிர்வுகள், .56)

(புயற்பாட்டுகடைதிறப்பு)
வங்கக் கடலின் மிசை எழுந்து
வளரும் அலையில் நடைபயின்று
பொங்கி எழுந்து, தனைவளர்த்த
புரையில் கடல்தனை யும் பகைத்துப்
பாறை உருவித்திசை உருவிப்
பாயும் உரம்சேர் கால் வீசிப்
போரை நாடித் துடிப்பார்; தம்
புயம் கொண்டது அப்புயல் அன்றே:”    (மேலது, .88)

1 comment :

Unknown said...

பேரறிவு சார்ந்த அட்கமான தமிழ் அறிஞர் அவர் வாழ்க!