Saturday, January 23, 2010

அம்மா.............................

நேற்று இரவு நண்பர் ஒருவரின் வீட்டிற்குச்  சென்றிருந்தேன். அப்போது மணி இரவு பத்து. நண்பரின் மனைவியும் குழந்தையும் ஊருக்கு சென்றிருந்தார்கள். கையிலிருந்த தன் சாவியில் கதவை திறந்து உள்ளே தாழிடும் போது, ஒரு வயதான குரல்..


நன்றி:
by Jinson Joseph Elayidom
www.getjins.com
                                                                     

ஏங்கண்ணு  வந்திட்டியா?  சீக்கிரம் வந்து படுத்துக்கலாமுல்ல,  பனி காலத்தில வெளில சுத்திகிட்டு.......??

ம்ம்...ம்ம்....நீங்க சாப்பிடீங்களா?  சரி தூங்குங்க.........என்று  சொல்லிவிட்டு, அவரின் பதில் கேட்காமல் அவர் இருந்த அறையைத் தாண்டி என்னை அழைத்துச் சென்றார் நண்பர்.

மீண்டும் அவர் குரல்....ஏங்கண்ணு யாரு வந்திருக்கா கூட?  காலடி சத்தத்தை கேட்டுருப்பாரென்று நினைத்தேன்,

நண்பர் வந்திருக்கார். என்று சொல்லி, என்னை உள்ளே அவர் அறைக்கு அழைத்துச் சென்றார்.

இரவு ஒரு மணிவரை பேசிக் கொண்டிருந்தோம். காலை 5 மணிக்கு விழித்து,  முகங்கழுவிக் கொண்டு டீ குடிக்க  வெளியே கிளம்பினோம்..  முன் அறையை தாண்டும் போது,

" ஏங்கண்ணு ? இந் நேரத்திலே முழிச்சிகிட்ட"?  டீ போட்டு தரட்டுமா?? மீண்டும் அம்மாவின் குரல். 

வேண்டாம், வெளியில போயி குடிச்சிக்கிறோம் என்ற நண்பரின் பதிலை ஏற்காமல்,

"இரு சாமி, நிமசத்தில டீ போட்டு தாரேன்". என்றபடியே போய் ஒரு நல்ல டீ கொண்டு வந்து கொடுத்து விட்டு,

"வெறு வயித்தில வெளிய போக வேண்டாங் கண்ணு, இருங்க ரெண்டு தோசையூத்தறேன், சாப்டுபோட்டு புறப்படுங்க"....என்றார்.

இவங்க எப்பத் தூங்கி எப்ப விழிக்கிறாங்கன்னே தெரியலையே?????இந்த வயதிலும் இவ்வளவு வளர்ந்த மகனின் மேல் எவ்வளவு அன்பு கொண்டிருக்கிறார் என்று எண்ணியபடி, வீட்டை விட்டு வெளியே வந்தேன்.

                     ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்றுப்
                    "பையல்" என்ற போதே பரிந்தெடுத்துச்-செய்யவிரு
                    கைப்புறத்தில் ஏந்தி கனகமுலை தந்தாளை
                     எப்பிறப்பில் காண்பேன் இனி.


என்ற  பட்டினத்தாரின் பாடல் வரிகள் ஏனோ  நினைவிற்கு வந்தன..........

தொல்காப்பியர் தொட்டு, சங்ககாலம் முதல் பின்னால் வந்த பாரதிவரை, எல்லோருமே, காதலியைப் பற்றி . தலைவனைப் பற்றி, நாட்டைப் பற்றி, சமூகம் பற்றி, இயற்கையழகு பற்றி இப்படி எவையெவற்றையெல்லாம் பாடியிருந்தாலும், மனைவி பற்றியோ, தாயைப் பற்றியோ பெரும் புலவர்கள் யாரும் பாடியதாக நினைவில் இல்லை. அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம், தாயிற் சிறந்ததொரு கோவிலும் இலை என்ற ஒரு சில வரிகள் தவிர.. 

பட்டினத்தடிகள் கூட தன் தாய் இறந்தபோது சிதைக்கு தீ மூட்டும் போதுதான் தாயின் பெருமைகளை நினைவு கூர்ந்து பல பாடல்கள் எழுதியிருக்கிறார்.


                             முந்தித் தவங்கிடந்து, முன்னூறு நாள் சுமந்தே
                             அந்திபகலாச் சிவனை ஆதரித்து- தொந்தி
                            சரியச் சுமந்து, பெற்ற தாயார் தமக்கோ
                            எரியத்தழல் மூட்டுவேன்.....

                            நொந்து, சுமந்து பெற்று,  நோவாமல் ஏந்தி முலை
                            தந்து, வளர்த் தெடுத்து தாழாமே-அந்திபகல்
                           கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய் தனக்கோ
                            மெய்யிலே தீ மூட்டுவேன்.

                            அரிசியோ நானிடுவேன், ஆத்தாள் தனக்கு,
                            வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல்-உருசியுள்ள
                            தேனே, அமிர்தமே செல்வத்திர வியப் பூ
                             மானே என அழைத்த வாய்க்கு..

                             அள்ளியிடுவ தரிசியோ, தாய் தலைமேல்
                             கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல்-மெள்ள
                             முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
                              மகனே என்றழைத்த தாய்க்கு.

                           வெகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பல்
                           ஆகுதே, பாவியேன் ஐயகோ-மாதக்
                            குருவி பறவாமல் கோ தாட்டி என்னை
                            சுருதி வளர்தெடுத்த கை....

                              முன்னையிட்ட தீ முப்புறத்திலே
                             பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே
                             அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே
                             யானுமிட்ட தீ மூள்க மூள்கவே....


காதற்ற ஊசியிம் வாராது  காண் கடைவெளிக்கே.. என்று கூறி .முற்றுந் துறந்த பட்டினத்தாருக்கே, தாயின் இறப்பை தாங்க முடியவில்லை யென்றால் நாமெல்லாம் எம்மாத்திரம். தாய் பற்றை துறக்கக் கூடாது, துறக்கவும் முடியாது என்பதை சமூகத்திற்கு விளக்கும் வண்ணமாக அமைந்திருப்பது பட்டினத்தாரின் வாழ்வு.




Thursday, January 21, 2010

நூறா யிரத்தில் ஒருவன்.........


சமீபத்தில், என் நண்பர் ஒருவரை நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்திக்கச் சென்றேன்.  அந்த ஊரின் மிகப் பெரிய வியாபார நிறுவனத்தின் உரிமையாளரான அவர், பலமுறை என்னை அவர் வீட்டுக்கு அழைத்தும் செல்ல முடியவில்லை.   இந்த முறை கண்டிப்பாக நீங்கள் வரும்போது எங்கள் வீட்டிற்கு வந்து விட்டுத்தான் செல்ல வேண்டும் என்று அன்பு கட்டளையிட்டிருந்தார்.

அதேபோல், நகர எல்லையை கார் தொட்டதும் அவரை அழைத்த போது, அவரின் அலுவலகத்திற்கு வழி சொல்லி அங்கேயே வரச் சொன்னார்.  மிகப் பெரிய அலுவலகம், வருடத்திற்கு பல கோடி ரூபாய்களுக்கு விற்பனை செய்து வரும் நிறுவனம் அது.  அவர் தந்தையாரால் தொடங்கப் பட்ட அந்த நிறுவனம், அவருக்கு உடல் நலமிண்மையால் மகனிடம் வியாபாரத்தை ஒப்படைத்து விட்டதாகவும், வீட்டிலேயே ஓய்வில் இருப்பதாகவும் அறிந்தேன். நண்பரோடு, பலவற்றையும் பேசிக் கொண்டிருந்து விட்டு, மதிய உணவிற்கு அவர் வீட்டிற்குச் சென்றேன்.

பளிங்கு மாளிகைகள், வில்லாக்கள், வெளிநாட்டுக் கார்கள் இப்படி எல்லாவற்றிலும் செல்வத்தை வெளிக்காட்டிக் கொண்டிருந்த அந்த குடியிருப்பு பகுதியில் இருந்த அவரின் புதிய வீட்டிற்கு சென்றோம். கடந்த ஆண்டுதான் அவர் தந்தையின் மேற்பார்வையில் கட்டி முடிக்கப் பட்டதாகவும்,  பல லட்ச ரூபாய் செலவானது என்றும் நண்பர் சொன்னார்.

வரவேற்பறையில் அமர்ந்திருந்த எனக்கு நண்பரின் மனைவி பழரசம் கொடுத்தார்கள். அவரின் தாயார் வந்து நலம் விசாரித்து விட்டு, பேசிக் கொண்டிருங்கள் என்று கூறிவிட்டு உள்ளே சென்றார். நண்பரும் வாருங்கள் அப்பாவை சந்தித்துவிட்டு வருவோம், என்று கூறி அருகிருந்த பெரிய அறைக்கு அழைத்துச் சென்றார்,

விசாலமான அறை, சென்னையில் பல வீடுகளே அந்த அறை அளவுதான் இருக்குமென்று நினைக்கின்றேன். குளிரூட்டப்பட்ட அந்த அறையின் சுவற்றில் ஒரு மிகப் பெரிய தொலைக் காட்சிப் பெட்டி  மாட்டப்பட்டு, அதில் பங்கு வணிகம் குறித்த தகவல்கள் ஓடிக் கொண்டிருந்தது. அறையின் நடுவில் உயரமான ஒரு கட்டில், அதில் படுத்துக் கொண்டு, மார்புவரை ஒரு போர்வையால் உடலை போர்த்திக் கொண்டு, தொலைபேசி ஒன்றை மார்பின் மீது வைத்துக் கொண்டு  பங்குகள் வாங்கவும், விற்கவும் சொல்லிக் கொண்டிருந்தார்.

என்னைப் பார்த்ததும், லேசாக சிரித்து தலையசைத்து விட்டு தன் பேச்சை தொடர்ந்து கொண்டிருந்தார்.  சில நிமிடங்களுக்குப் பிறகு, என்னைப் பார்த்து, "சொல்லுங்க...எப்படி இருக்கிறீங்க?" என்று மிகவும் உற்சாகமான குரலில் பேசத் தொடங்கியவர், தான் சிறுவயதில்,  ஈரோட்டில், சிறு தலைச் சுமை வியாபாரியாக தொழில் தொடங்கியதிலிருந்து தொடங்கி, பல நிகழ்வுகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.   இடையிடையே, பல தொலைபேசி அழைப்புகள்.  பங்கு வர்த்தக ஆணைகள் என்று தொடர்ந்து கொண்டிருந்தது.

அப்போது, யாரோ வந்திருப்பதாக உதவியாளர் ஒருவர் வந்து சொன்னதும், அவரையும் உள்ளே வரச் சொன்னார். வந்தவர்  இடம் வாங்க, விற்க உதவும் ஒரு இடைத்தரகர் என்பதை அவர்கள் பேச்சிலிருந்து தெரிந்து கொண்டேன். வந்தவர், அந்த நகரின் மையப்  பகுதியிலிருந்த ஒரு கட்டிடம், விலைக்கு வந்திருப்பதாகவும், விலை சுமார் 3 கோடி என்றும் சொன்னார்.   நண்பரின் தந்தையார், வேறு ஒரு கட்டிடத்தின் பெயரைக் குறிப்பிட்டு அதற்கு அருகிலிருக்கும் கட்டிடம் தானே நீங்கள் சொல்வது,  அது ரோடு குத்தாக இருக்குமே என்றார்.  வந்தவர் இல்லை என்று சாதித்தார்.  பிறகு விற்பவரிடமே தொலைபேசியில் பேச முடிவு செய்யப் பட்டு விசாரித்ததில் விற்பவர் ஆமாம், கட்டிடத்தின்  வட பகுதி ரோடு குத்தாக வரும் என்றார்.

வந்தவர் விடைபெற்றுச் சென்றவுடன், அவர், சற்றே தொலைவில் சுவற்றில் சாய்ந்து கொண்டிருந்த அவரின் துணைவியாரை,  அதாவது நம் நண்பரின் அம்மாவிடம் ஏதோ சொன்னார்.  உடனே நண்பரும் அவர் தாயாரும் சேர்ந்து, அவரை இடதுபுறமக திருப்பி படுக்க வைத்தனர்.   கட்டில் கீழ் சக்கரங்கள் பொருத்தப் பட்டிருந்ததால், கட்டிலும் அரைவட்டமாக சுற்றப் பட்டு தொலைக் காட்சி பெட்டியை பார்க்கும் வண்ணம் நிறுத்தப் பட்டது.

அதன் பிறகு தொடர்ந்து அவர் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து, நீங்கள் சாப்பிட்டு வாருங்கள் என்று சொல்லிவிட்டு, மீண்டும் தொலைபேசியில் யாருடனோ பேச ஆரம்பித்தார்.  வெளியே வந்து மதிய உணவிற்கு பிறகு, அவரிடம், நண்பரிடமும் விடைபெற்று வீட்டுக்கு வெளியே வந்தேன். என் கார், நண்பரின் அலுவலத்தில் நிறுத்தி விட்டு வந்திருந்தேன். நண்பருக்கு வீட்டில் ஏதோ வேலை இருப்பதாகவும், தன் காரில் போய் அலுவலத்தில் இறங்கி கொள்ளுங்கள் என்று கூறி அவரின் உறவினர் ஒருவருடன் என்னை அனுப்பி வைத்தார்.

செல்லும் வழியில் நண்பரின் உறவினர் சொன்ன தகவல்கள் என்னை, ஆச்சரியத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றுவிட்டது.  சுமார்,  10 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நாள் அதிகாலை, நண்பரின் தந்தையாருக்கு .  மார்புக்கு கீழே எந்த உறுப்பும் செயல்பட வில்லையாம். எத்தனையோ மருத்துவர்கள், மருத்துவமனைகள்..பலன் ஒன்றுமில்லை.

அவரும் அமைதியாக அதை ஏற்றுக் கொண்டு, படுத்த படுக்கையிலிருந்தபடி உலக விசயங்களையெல்லாம் பேசுகிறார்.  ரியல் எஸ்டேட், பங்கு வர்த்தகம், இப்படி பல தொழில்களை படுக்கையிலிருந்த படியே செய்து வருடத்திற்கு பல கோடிகள் சம்பாதித்து வருகிறார்.  என்று சொன்னார். படுக்கைப் புண் வராமல் இருக்க ஒவ்வொரு அரை மணிக்கொருமுறையும் அவரை இடதுபுறமாக அல்லது வலதுபுறமாக திருப்பி படுக்க வைக்கிறார்கள்.

நண்பரோடு பேசிக் கொண்டிருந்த போது தன் தந்தையின் மேற்ப் பார்வையில் புதிய வீடு கட்டியதாக சொன்னது நினைவிற்கு வந்தது. அது குறித்து கேட்டபோது, உண்மைதான். தினமும் காலை, உதவியாளர், துணைவியாருடன், கட்டிடப் பணி நடக்கும் இடத்திற்கு ஒரு வேனில் வருவார். ஸ்டெர்ட்சரில் படுத்துக் கொண்டே கட்டிட வேளைகளை பார்வையிடுவார்.  சிமெண்ட், மணல், இரும்பு போன்ற அனைத்திற்கும் படுக்கையிலிருந்தபடியே பலரிடமும் விலைபேசி வாங்கிவிடுவார்.  கட்டிடத்தில் சிறு குறைபாடு இருந்தாலும் கண்டுபிடித்துவிடுவார்.  மொட்டைமாடிக்கு மட்டும் தான் அவரால் செல்ல முடியவில்லை. என்பதை சொன்னவர், மேலும், சொன்னது என்னை வியப்பில் ஆழ்த்தியது.

வீடு கட்டி முடித்தபின், பழைய வீட்டிலிருந்த பொருட்களை புதிய வீட்டிற்கு மாற்றும் போது, பழைய வீட்டின் போர்டிக்கோவில் ஸ்டெர்ச்சரில் படுத்துக் கொண்டு, வெளியே செல்லும் பொருட்களை பட்டியலிட்டுக் கொண்டாராம்,  அந்த லாரி கிளம்பிச் சொல்லும் போது தானும் வேனில் கிளம்பி, புதிய வீட்டின் வாயிலில் உள்ள போர்டிக்கோவில் படுத்துக் கொண்டு உள்ளே வருவது சரியாக இருக்கிறதா  என்பதை உறுதி செய்து கொண்டாராம்.

என் வாழ்வில் அத்தனை உற்சாகமான ஒரு ஊனமான மனிதனைக் கண்டதில்லை.  என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்லுவார்,  " சுயமா எப்ப நம்ம காரியத்த நம்மால செய்யமுடியலையோ, அதுக்கப்பறம் உசிரோட இருக்கக் கூடாது" ஆனால் இவர் 15 ஆண்டுகளாக இப்படியே வாழ்கிறார், எந்த கவலையும், வருத்தமும் வெளியில் தெரியவில்லை. உற்சாகமாக செயல்படுகிறார்.

வாழ்க்கைப் போராட்டத்தில் அடிக்கடி சோர்வாகிப் போய்விடுகின்ற இந்த மனிதர்கள் மத்தியில் இவர் தனித்து தெரிகின்றார். நான் ஒவ்வொருமுறை சிறு தோல்விகளால் சலிப்பும் மன வேதனையும் அடையும் போதும் அவரை நினைத்துக் கொள்வேன்.  எனக்குள் மீண்டும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.

பல ஆண்டுகளுக்கு முன்னால் கண்ட ஒரு கட்டிடம் அல்லது இடத்தின் அமைப்பை இன்றும் சரியாக கணக்கிடும் மனிதரை பார்க்க ஆச்சரியமாக இருந்தது.  நடமாட முடியாத சூழலிலும், சுமார் நூறுக்கும் அதிகமான தொலைபேசி எண்களை நினைவில் வைத்துக் கொண்டு, எதையும் பார்க்காமல், தொலைபேசி மூலமே அனைத்தியும் நடத்திவரும் அந்த அற்புத மனிதர் நமக்கெல்லாம் ஒரு எடுத்துக் காட்டு.

சிறு தொய்வுக்களுக்கெல்லாம், உயிர் மாய்த்துக் கொள்ளும், அல்லது சோர்ந்து விழுந்துவிடும் மனிதர்கள் மத்தியில் இவர் ஒரு மாமனிதர்.  இப்படிப்பட்ட மனிதர்கள் நூறாயிரத்தில் ஒருவர் தான் இருப்பார்கள் என்று நம்புகின்றேன்.