Saturday, November 14, 2009

கதம்பம்.................

இன்று காலைப் பத்திரிக்கைகளில் வந்த செய்திகளும், அதைத் தொடர்ந்து என் நினைவிற்கு வந்தவைகளையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.......


செய்தி:
முல்லைப் பெரியார் வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு திகைப்பும், வியப்பும் ஏற்படுத்துகிறது. 

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த இயலாத வகையில் புதிதாக ஒரு சட்டத் திருத்தத்தை நிறைவேற்றிட கேரள முதல்வர் போன்று எனக்கு துணிவில்லை.


1998ல் இருந்து நடைபெரும் வழக்கில் 11 ஆண்டுகளுக்குப் பிறகும் தீர்ப்பை எதிர் நோக்கும் நேரத்தில் மீண்டும் ஒரு விசாரணை, ஐந்து நீதிபதிகள் தலைமையில் குழு, என்ற முடிவு-இன்னும் எத்தனை ஆண்டுகளோ என்று வருத்தப் படாமல் இருக்க முடியவில்லை. தாமதிக்கப் பட்ட நீதி- மறுக்கப்பட்ட நீதி என்ற ஆங்கில பழமொழி பலித்துவிடாமல் இருக்க- யாரிடம் போய் முறையிடுவதென்றே தெரியவில்லை.


நினைவிற்கு வந்தது:
விடங்கொண்ட மீனைப் போலும்
வெந்தழல் மெழுகைப் போலும்
படங்கொண்ட பந்தழல்வாய் பற்றிய தேரை போலும்
இடங்கொண்ட ராமபாணம் செருக்களத்து உற்ற போலும்
கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் ஈழ வேந்தன்.

                                                        -கம்பன்
                                                                        
சராசரி இழிச்ச வாயன்(இந்தியன்):
உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவிற்கு,தமிழக அரசின் வழக்கறிஞர் முதலில் ஆட்சேபம் தெரிவித்தவர், பின் எழுத்துப் பூர்வமாக ஏற்பதாக எழுதிக் கொடுதிருப்பதாக முல்லைப் பெரியார்  அணை உரிமை மீட்புக் குழுவின் தலைவர், பழ.நெடுமாறன் குற்றஞ்சாட்டியுள்ளாரே …………….

                   *********************************

 
செய்தி:
இடைத் தேர்தலில் அனைத்து கட்சிகளும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில்லை என முடிவெடுத்தால்  தேர்தலில் போட்டியிடுவோம்-மருத்துவர் ராமதாஸ்.

 படித்ததும் நினைவிற்கு வந்தது

ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்றார்கள்
எதிர்க்கட்சி என்று ஏதுமில்லை
ஆளுங்கட்சி, ஆளவிரும்புகிற கட்சி
என இரண்டு கட்சிகள் தான்

                                                       -தமிழன்பன்

சராசரி இழிச்சவாயன்:
இன்னா.....டாக்டரு…….இன்னாதிது? கெலிச்சுப் போய் நீங்க வாங்குவீங்க..எங்களுக்காண்டி வேற கேமா? (game)

லாபத்திலயா பங்கு கேக்கறோம்…….எதோ புரோக்கரேஜ் மாதிரி ஒரு சின்ன டிப்ஸ் வாங்கிக்கறம்..அது பொறுக்கலையா? உங்களுக்கு.

                   **************************************


செய்தி:

தேசிய ஒருமைப் பாட்டு வாரவிழா- ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரம் நடைபெறும். மாவட்ட ஆட்சியர் சுடலைக் கண்ணன் தகவல்

19/11/2009- தேசிய உறுதிமொழி தின விழா
20/11/2009-பிற்பட்டோர் &சிறுபாண்மையினர் நல தினம்
21/11/2009 மொழி ஒற்றுமை தினம்
22/11/2009-நலிவுற்ற பிரிவினர் தினம்
23/11/2009-கலாச்சார ஒற்றுமைதினம்
24/11/2009-மகளீர் தினம்
25/11/2009-பாதுகாப்பு தினம்

நினைவிற்கு வந்தது:
வெளுத்ததெல்லாம் பாலுமல்ல இந்தியாவே- வெளி
வேசமெல்லாம் உண்மையல்ல இந்தியாவே.

பழுத்த சூதர் தலைவரைப்போல் இந்தியாவே-இங்கு
பழகக் கண்டோம் விழித்துக் கொள்வாய் இந்தியாவே

உதட்டிலே தேன் உள்ளத்திலே நஞ்சு இந்தியாவே-கொண்ட
உத்தமர்கள் மெத்த உண்டு இந்தியாவே

சிலந்திவலை ஈயைக் கொல்லும் இந்தியாவே- தனிச்
செல்வர் கட்சி பொதுமை கொல்லும் இந்தியாவே

மலம் விரும்பும் ஜந்து போல்வார் இந்தியாவே- பண
மகிமை பேசிக் கொள்கை விற்பார் இந்தியாவே.

பணத்தின் ஜாலம் பசப்பு வார்த்தை இந்தியாவே- கொள்கை
பறித்திட நீ பார்த்திடாதே இந்தியாவே

அனைத்தும் தியாகம் செய்தும் இந்நாள் இந்தியாவே- வெற்றி
அடைய லெனின் கொடியின் கீழ் நில் இந்தியாவே

                                                -ஜீவா கவிதைகள்

சராசரி இழிச்ச வாயன்:
தேசியன்ன இன்னாதுபா..ஒரே மெரசளாக் கீது…?

பின்னாடிக்கறவனையும், நலிஞ்சவனையும், நம்ம மினியம்மாளையும் முன்னாடி இட்டாறதுதான் தேசியம் மாமு……..


                                    ******************************************

செய்தி:
இந்தியாவில் குடும்ப அமைப்புகள் சீரழிவதற்குக் காரணம் ஒழுக்கக் கேடான ஆண் பெண் உறவுகளே……….தன்னார்வ தொண்டு நிறுவனம் அறிக்கை

படித்ததும் நினைவிற்கு வந்தது
அப்பனுக்கு அறுபதினாயிரம் மனைவிகள்
ஒரு சந்தேகமும் இல்லை
மகனுக்கு ஒரு மனைவி
ஆயிரம் சந்தேகங்கள்
                                                        -கபிலன்

சராசரி இழிச்சவாயன்:

நோ……..கமெண்ட்ஸ்………..

                                          ************************************************** 

செய்தி:
செல்போனில் வேகமாக பரவும் ஆபாச காட்சிகள்
மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக ஆசிரியருக்கு தர்ம அடி
பெருந்துறை பெண் மர்ம சாவுகள்ளக்காதலனிடம் விசாரணை


படித்ததும் நினைவிற்கு வந்தது:
நமது காலத்தில் காதல் பண்டைக் காலத்து மக்களின் காதலைப் போல் முற்றும் பாலுறவு வேட்கையிலிருந்து பிறந்ததல்ல. முதலாவதாக, இது பரஸ்பார காதலாக இருக்கிறது. இந்த அம்சத்தில் ஆணுக்குச் சமமாக பெண் இருக்கிறாள்.  இரண்டாவதாக இருதரப்பினரும் அன்புடையவர் அருகில் இல்லாத, அதாவது பிரிவைப் பெரிய துன்பமாக கருதுகின்றனர். அதனால் அவர்கள் காதல் தீவிரமும்,நிரந்தரமும் பெற்று விளங்குகிறது.

அவர்கள் ஒருவரையொருவர் அடைய உயிரைப் பணயம் வைப்பதற்கு கூட முன்வருகின்றனர்.

பிரடரிக் எங்கல்ஸ்
குடும்பம், தனிச் சொத்து,அரசு ஆகியவற்றின் தோற்றம்



சராசரி இழிச்சவாயன்:

தோழர்சொன்னா கரீட்டாத்தான் இருக்கும்பா…….. அவுரு அவுங்க நாட்டப் பத்தித்தான் சொல்லிருப்பாரு………நாங்க சோசலிஸத்தை வுட்டு நாளாச்சுல்ல……..இப்பல்லாம் நாங்க முதலாளில்ல……





Tuesday, November 10, 2009

யாராச்சும் சொல்லுங்களேன்..........ப்ளீஸ்

இன்று அதிகாலையில் விழித்து விட்டேன். வீட்டின் முன் அறையில் இருக்கும் கணிணியை உயிர்ப்பித்து படித்துக் கொண்டிருந்தேன். நேரம் போனதை அறியவில்லை.

வெளியே ஏதோ சத்தம் கேட்டது………..

என் இரண்டாவது வாண்டு உள்ளே நுழைந்தான்……….

நான்: என்னடா……..பண்ணையக்காரி சத்தம் கேக்குது….என்ன குறும்பு செஞ்ச……………?

அவன்: ஹூம்……….உங்களத்தான் திட்டிகிட்டிருக்கறாங்க……… ஏம்பா? எத்தன தடவ சொன்னாலும் புரியாதா உங்களுக்கு? குட்பாயா நடந்துக்க….மாட்டீங்கறீங்க…………..
இருங்க…இருங்க…..உங்கம்மாகிட்டயே சொல்லறன்………….

நான் : ஏய்….உத வாங்கப் போற…….

அவன்: ம்ம்ம்ம்…..ஏங்கிட்டத்தான் உங்க வீரமெல்லாம்……(இது எப்படி இவனுக்குத் தெரியும்) போங்க……. போங்க..…. மேடம் கூப்படறாங்க…

சமயலறைக்குள் நுழையும் போதே அர்ச்சனை காதில் கேட்கத் தொடங்கியது.

ஒரு பொறுப்பும் இல்ல….இங்க நான் ஒருத்தி காலைல இருந்து தனியா அல்லாடறன்……வேலைக்காரி லீவு………..கூடமாட ஒத்தாச பண்ணாம காலங்கார்த்தால கம்ப்யூட்டர் முன்னால போய் உக்காந்திட்டா…….. என்னதான் செய்யறது……….. ?

இல்லம்மா…….வந்திட்டன்ல…..என்ன செய்யனும்……. .சொல்லு என்று சொல்லி முடிக்குமுன்……

இந்த கத்திரிக்காயை சின்ன சின்னதா வெட்டிக்கொடுங்க…….

நான் சரி என்று ஒரு பாத்திரத்தை கையிலெடுக்க……

பெரிய பாத்திரத்தை எடுத்து காயை நல்லா கழுவீட்டு வெட்டுங்க……

தண்ணீர் பிடித்து, “அஞ்சலி கட்டரை எடுத்து டேபிளின் மேல் வைத்து வெட்டத் தொடங்குமுன்…..

ரொம்ப பெரிசு பெருசா வெட்டாதீங்க……. பொடியா வெட்டுங்க

சரி..........

காம்பை வெட்டிட்டு அப்பறம் வெட்டுங்க……

சரி என்று காம்புகளை வெட்டிவிட்டு காய்களை கழுவிக் கொண்டிருந்த போது……….

என்ன பண்ணிகிட்டிருக்கிறீங்க ……?, எல்லாவற்றையும் தன் பக்கம் எடுத்து வைத்து அவளே வெட்டத் தொடங்கியவள்……

மச மசன்னு நின்னுகிட்டிருக்காதீங்க……. பசங்களுக்கு லஞ்ச்க்கு கொஞ்சம் சப்பாத்தி தேச்சுக் குடுங்க…

சரி என்று , நானும் பிசைந்து வைத்திருந்த கோதுமை மாவைக், கையில் எடுத்தவுடன்.

வரமாவு போட்டு தேயுங்க…..இல்லைன்னா தேய்க்க வராது

சரி என்று தலையாட்டிவிட்டு, மாவையும் அதைத் தேய்க்கும் பலகை, கட்டையை கையில் எடுத்து அதை துடைக்க ஒரு துணியையும் கையிலெடுத்த நேரத்தில்….

பலகைய தொடச்சிட்டு தேயுங்க…….குப்பையிருக்கும்................

சரி என்று சொல்லி, துடைத்துவிட்டு, மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டத்தொடங்குய போது ……

சின்ன சின்னதா உருட்டுங்க……..அப்பறம் தேய்க்க முடியாது.

சரி என்று தலையை மட்டும் ஆட்டி விட்டு சிறிதாக உருட்ட தொடங்கியவுடன்….

என்ன பண்ணிகிட்டிருக்கிறீங்க……தள்ளுங்க……..என்றபடி என்னிடமிருந்த அனைத்தையும் தான் வாங்கி அவளே சப்பாத்தி தேய்க்கத் தொடங்கியவள் என்னைப் பார்த்து,

அரிசி ஊற வைத்திருக்கிறேன். கலைஞ்சு, குக்கர்ல போட்டு, நாலு டம்ளர் தண்ணி ஊத்தி மூடி வையுங்க என்றாள்.

அரிசிப் பாத்திரத்தை எடுக்குமுன்

பெரிய பாத்திரத்தை எடுத்து, தண்ணி நிறைய ஊத்தி கழுவுங்க….

சரி என்று பெரிய பாத்திரத்தை எடுத்து தண்ணீர் பிடித்து அரிசியை அதில் கொட்டியவுடன்………

என்ன பண்ணிகிட்டிருக்கிறீங்க……..போங்க போய் பசங்க ரெடியாயிட்டாங்களான்னு பாருங்க………

ஹாலில் தயாராக நின்று கொண்டிருந்த வாண்டுகள் என்னைப் பார்த்தவுடன் ஒருவொருக் கொருவர் பார்த்துக் கொண்டு கண் சிமிட்டி சிரித்தனர்.

என்னடா……..ரெடியா?…….இங்க நின்னு சிரிச்சிகிட்டிருக்கிறீங்க…….

ஒண்ணுமில்லப்பா என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தனர்…….

ம்ம்ம்ம்….என் பொழப்பு உங்களுக்கு சிரிப்பா இருக்கு என்று நினைத்துக் கொண்டிருந்த போது பின்னிருந்து குரல்……….

என்ன பண்ணிகிட்டிருக்கிறீங்க……டிரைவர் லீவு இன்னைக்கு……நீங்க தான் கொண்டு போய் ஸ்கூலில் விட்டிட்டு வரனும். காரை எடுத்து வெளில வையுங்க………….

கார் சாவியை கையிலெடுத்துத் திரும்புகையில்,

பார்த்து…….. ரொம்ப ரோட்டு ஓரத்தில நிறுத்தி விடாதீங்க……..
அப்பறம் கதவ திறந்து ஏற முடியாது.

சரி என்று சொல்லிவிட்டு காரை ஸ்டார்ட் செய்து காம்பவுண்டுக்கு வெளியே நிறுத்தி விட்டு மெயின் கேட்டை இழுத்து சாத்தத் தொடங்கு முன்….

மீண்டும் என்ன பண்ணிகிட்டிருக்கிறீங்க……….

கதவ நல்லா சாத்திட்டு நீங்க ரெடியாகுங்க………நானே பசங்கள விட்டுட்டு அப்படியே “ஐ ப்ரோ’ ஷேப் பண்ணிட்டு வந்தர்ரேன்….. என்று சொல்லிக் கொண்டே பறந்தாள்.

எனக்குப் புரியவில்லை……என்னை உதவிக்கு கூப்பிட்டாள்….ஆனால் எல்லா வேலைகளையும் அவளே செய்தாள்……..பின் எதற்கு என்னைக் கூப்பிட்டாள்……..

ஏன்? எதற்காக? இவள் இப்படி நடந்துகொள்கிறாள்? இவளுக்கு என்ன ஆயிற்று? வரட்டும் கேட்டு விட வேண்டியதுதான்…..என்று முடிவு செய்து வீட்டிற்குள் சென்றபோது…….. சமையலறையில் ஏதோ சத்தம்……எட்டிப் பார்த்த போது………….

சமையல் மேடைக்கு மேலிருந்த சாமி படத்திற்கு விளக்கேற்றி, பூ வைத்து ஏதோ பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்த அம்மா, அப்பாவிடம்…

குடிக்க சுடுதண்ணீர் கெட்டிலில் தண்ணீர் ஊற்றி ஸ்விட்ச் ஆன் பண்ணுங்க என்று சொல்லிவிட்டு மீண்டும் பாடலை தொடர்ந்தாள்.

அப்பா கெட்டிலில் தண்ணீர் ஊற்றத் தொடங்கியதும்,

என் செய்யறீங்க……..முக்கால் வாசி தண்ணி ஊத்துங்க போதும்….. என்று சொல்லிவிட்டு மீண்டும் ஏதோ முணுமுணுக்கத் தொடங்கினாள்

அப்பா சரி என்று சொல்லிவிட்டு தண்ணீர் பிடித்து ஊற்றத்தொடங்குமுன்………..

மூடியை நல்லா மூடி ஸ்விட்ச் போடுங்க……

அப்பா சரி என்று தலையாட்டி விட்டு மூடியை மூடத்தொடங்குமுன்…

என்ன செய்யறீங்க……தள்ளுங்க……. சுடு தண்ணி வைக்கத் தெரியல….. இதுல ஊர் ஊராப் போயி ராமாயணம் வேற….. என்றவாறு அவளே மூடியை மூடி ஸ்விட்சையும் ஆன் செய்தாள்…..

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என்னைப் பார்த்து அப்பா ஏனோ சிரித்தார். அந்த சிரிப்பு எனக்கு எதையோ அவர் சொல்ல முயல்வதை காட்டியது.

எனக்கு ஒன்று புரிந்தது. இவர்களை புரிந்து கொள்ள முயற்சிப்பதை விட, சரி என்று ஏற்றுக் கொள்வதே சரி. என்று சொல்ல வந்திருப்பாரோ?

ஏன்? எதற்காக? இவள் இப்படி நடந்துகொள்கிறாள்? இவளுக்கு என்ன ஆயிற்று? வரட்டும் கேட்டு விட வேண்டியதுதான்…. என்ற முந்தைய நினைப்பை மறக்கத் தொடங்கினேன்.

ஏன்? ஏன் இப்படி? ஏன் இந்த கொல வெறி என்று இவளைக் கேட்பதைவிட…..உங்களிடம் கேட்பதென்று முடிவு செய்து, இந்த பதிவை இட்டிருக்கின்றேன்……யாராச்சும்  சொல்லுங்களேன்……ப்ளீஸ்

Saturday, November 07, 2009

உணர்ச்சிகள்



தை எனக்குச் 
சொல்லுகிறதடா உன் முகம்…………………………….

ன்பையா?
ச்சரியத்தையா?

கிழ்ச்சியையா?
யத்தையா?
கூச்சத்தையா?
   

ன் தாய்
சொன்னாள்……………..

ன்னை முதன்முதலில்
தூக்கும் போது
இப்படித்தான் இருந்ததாம்

ன்முகமும்................


ன் தாயைக் கேட்டுப்
பார்க்க வேண்டும்..............

றந்திருப்பாளோ அந்தக் கிழவி







 

Thursday, November 05, 2009

ஆசை முகமறந்து போச்சே............இறுதிபதிவு


அவள்:

படித்தவள்.  குடும்பத்தின் செல்லப் பெண்.  பெற்றோரின் 
பாதுகாப்பில் வளர்ந்த உலகமறியாச் சிறுபெண். வீட்டை 
விட்டு தனியே வெளியே சென்றறியாதவள். 
கேட்டதெல்லாம் கிடைக்கும். 

தாய், தந்தை, சகோதரர், நெருங்கிய உறவுகள் என்ற
சிறு கூட்டில் வளர்ந்தவள்.  மிக நெருங்கிய 
நட்பு, ஓரிரண்டு கல்லூரித் தோழிகளும் பக்கத்து
தெரு பிள்ளையாரும்.

தந்தை நடத்திவந்த மருத்துவமனையை நிர்வகிக்கும்
பொறுப்பு, ஆட்கள் நியமனம், மருந்து விற்பனை 
ஆகியவற்றில் பொழுது போக்கிற்காக நுழைந்தவள்,
பின் அதுவே பணியானது. தந்தையின் பணிச்சுமை
குறைந்தது.


மனதில் பட்டதை பளிச் என்று சொல்வது அவள் இயல்பு.  
அடுத்தவர் விசயங்களில் தலையிடுவதோ யோசனை 
சொல்வதோ அவளுக்கு பிடிப்பதில்லை.   

சிறு வயதிலிருந்தே அடிக்கடி சண்டையிடும் பெற்றோர்
களின் மீது வருத்தம் இருப்பினும்வெளிக்காட்டிக் கொள்ளாதவள்.
தன் திருமண வாழ்வு நிறைவாக இருக்க வேண்டும் என்ற
சராசரி பெண்ணில் அவளும் ஒருத்தி.

“வாரணம் ஆயிரம் சூழ வலஞ் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி”

“மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமநிரை தாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி”
                                                        


இப்படித்தான் அவள் கனவு கண்டாள். 


இப்படித்தான் ஒவ்வொரு பெண்ணும் கனவு காண்பாளோ?. 
தன்னை உண்மையான அன்போடு காதலிக்கும்
ஒருவனைத்தான் ஒவ்வொரு பெண்ணும் தேடுகிறாள். 
இங்கே கற்பிதங்கள் அதிகம்.  கட்டுப்பாடுகள் அதிகம்.


பெண்ணுக்கு இங்கே காமத்தை விட பல பெருந்துயர்கள்
இருக்கின்றன. பண்நெடுங்காலமாய் சொல்லித்
தந்ததெல்லாம், தவறு என்று உறுதி செய்யப்பட்டு விட்டது.


இந்த யுகத்தில் பிறந்த பெண் அடுத்தவரின் 
தேவைகளுக்கான வடிகாலாக இருக்க முடிவதில்லை.
அவளுக்கென்று ஒரு ஆசை, விருப்பம் இருக்கின்றது. 


“தன்னை நேசிப்பவனாக, தன்னை மதிப்பவனாக, தன்னை
கொண்டாடுபவனாக, தன்னை தனக்குச் சமமாக
நடத்துபவனாக, ஒரு தோழியாக ஏற்றுக் கொண்டு விருப்பு
வெறுப்புகளை ஏற்றுக் கொள்பவனாக, ஒரு நண்பனாக,
தோழனாக,நல்ல வழிகாட்டியாக,  இருக்கும் ஒருவனே
இன்றைய பெண்ணின் கணவனாக இருக்க வேண்டும்
என்பது எல்லாப் பெண்களின்ஆசையும், தேவையுமாய்
இருக்கிறது.”

 தன் தாயுடன் மனைவியை ஒப்பிட்டுப் பேசுவது 
போன்ற மடத்தனம் இந்த உலகில் இல்லை.
“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி” 
இருந்ததெல்லாம் சரி, அன்றைய நிலை வேறு,
வாழ்க்கை முறை வேறு. 


அன்று என் தந்தையின் விருப்பம் எதுவோ அதுவே 
என் தாயின் விருப்பமாக இருந்தது.  என் தந்தைதான்
எல்லா முடிவுகளையும் எடுத்தார். பொருள் ஆதாரம்
அவர் கையில் இருந்தது ஒரு காரணம் மற்றொன்று, என் 
தாய் படித்தவளில்லை, அவளுக்கென்று ஒரு உலகம்
இல்லாமலிருந்தது.  அல்லது அவள் உலகம் வெளியே 
அவளால் சொல்லப்படாமல் இருந்தது.


அடக்கி வைக்கப் பட்ட தாய், தன் குழந்தைகள் 
பெரிதானதும், அவர்கள் துணண கொண்டு தான் 
குடும்பத்தலைவி என்ற பட்டமும் பெற முடிந்தது.
வயதான பெண்மணிகள் தங்கள் சுதந்திரத்தை பார்க்க
முடிந்ததே, குழந்தைகள் பெரியவர்கள்
ஆன பின் தான்.  இங்கே அடிப்படை பொருளாதாரம். 

ஒருவேளை என் தாயிற்கும் அந்த பொருளாதார சுதந்திரம்
இருந்திருக்குமானால், ஒருவேளை 
50 ஆண்டுகளுக்கு முன்பே என் தந்தைக்கு
விவாகரத்து கிடைத்திருக்கும்.

பெண்ணின் சமூகம் சிறியது.  அவள், பெற்றோர், 
அல்லது கணவன் சகோதரர், நெருங்கிய உறவுகள்
இப்படி முடிந்து விடுகிறது.  அதைத்தாண்டி அவள் 
எதற்கும் பெரிதும் யோசிப்பதில்லை.  
அவளுடைய வட்டம் சிறியது.

சமூக கோட்பாடுகள் எல்லாம் பெண்ணை மையமாக
வைத்துஆண்களால் உருவாக்கப்பட்டதே தவிர, 
அது எந்தப் பெண்ணையும் சரியா? தவறா? என்று
கேட்க வில்லை.


நாரணன் நம்பி கைத்தளம் பற்றிட கனாக் கண்டாள் 
என்பது உண்மைதான். ஆனால் அதற்காக தன் விருப்பு
வெறுப்புகளை மீறி அடுத்தவனை சார்ந்து, 
அவனடிமையாய், வாழ எங்கு எந்தப்
பெண்ணும் தயாராக இல்லை.

எதையும் வெளிச்சொல்லாமல் தனக்குள் புதைத்து,
தானே விடைதேடும், முயற்சியில்  தோற்றும் சில
சமயங்களில் ஜெயித்தும் கண்ணாமூச்சி ஆடும் ஆணும்,

தன்னை சமமாக மதித்து, சுக துக்கங்களை பகிர்ந்து
கொள்ள வேண்டும், முடிவுகள் எடுக்கும் போது
தனக்கும் உரிய இடம் தரவேண்டும் என்ற சராசரி
சாதாரண ஆசைகளுடைய பெண்ணும் திருமணம் என்ற 
பந்தத்தில் ஒன்றினைவதுதான் விசித்திரம்.

எங்களிருவரின் தேவைகளும், ஆசைகளும் ஒன்றாய்
தெரிந்தாலும் அடிப்படையில் வேறு வேறு…….
நாங்களிருவரும் திருமணம் செய்து கொண்டோம்……… 
எப்படி நடத்துவது வாழ்க்கையை……?

அறுபது வயதில் என் தாயும் தந்தையும் மிக அன்போடு 
ஒருவரோடு ஒருவர் இணைந்து வாழ்கிறார்கள் என்று
சொல்லுகிறார்கள். இதில் இரண்டு விசயங்கள்.  ஒன்று 
அவளுக்கு அது பழகிப்போய்விட்டது. இரண்டு 
ஒவ்வொருவருக்கும் மற்றவரின் தேவை 
இந்த வயதில் தான் மிகஅதிகம்.

பரபரப்பான இந்த உலகில் அமைதியாக,
நிதானமாக நின்று செயல்படுவது அவர்கள் மட்டுமே.

வயதான பாட்டிகள் தங்கள் கணவர்களை கை பிடித்து 
அழைத்துச் செல்வதை தெருவிலும் கோவில்களிலும்
காண முடிகிறது. அவர் சிறிது அதிகமாக மூச்சு விட்டால்
கூட சிறிதுஉட்காருங்கள், தண்ணீர் வேண்டுமா? என்று
அக்கரை காட்டுவதை பார்க்க முடியும்.


இனிவருங்காலங்களில் இது போன்ற காட்சிகளை 
பார்க்கமுடியுமா? எந்தையும் தாயும் மகிழ்ந்து 
குலாவி இருந்த நாடு என்று நம் குழந்தைகளும்,
பேரக் குழந்தைகளும் பாட வழி இருக்குமா?

எல்லா வழக்குமன்றங்களிலும் விவாகரத்து வழக்கு
குவிந்து கிடக்கின்றன. குடும்ப நல
ஆலோசகர்கள் நிரம்பி வழியத்தொடங்கியுள்ளனர்.

 

தினசரிகளைப் பார்க்கும் பொழுது கற்பழிப்பு 
ஒழிக்கப்பட்டு கள்ளக் காதல் அங்கீகரிக்கப்
பட்டுவிட்டதோ என்று தோன்றுகிறது.இதில் கூட
கள்ளக் காதல் செய்த பெண்தான் பெரும் குற்றவாளியாக
ஊடகங்களினாலும் காவல் துறையாலும்
சித்தரிக்கப் படுகிறாள். பெண்ணின் விருப்பின்
பேரில் ஆண் கருவியாகச் செயல்பட்டதாகத்தான்
வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சக மனுசியாக 
மதிக்கப்படாத பெண், இங்கே அன்பான, தோழமையைத்
தேடுகிறாள். அன்பானவனாக, தோழனாக, நல்லவனாக
காட்டிக் கொள்ளும் ஆண் சரியான சமயத்தில் அவள்
உடலையும் செல்வத்தையும் தனதாக்கிக் கொள்கிறான்.

அந்த நேரத்தில் அவளால் அந்த நட்பை, உறவை 
உதறித் தள்ளமுடிவதில்லை. 

இது யதார்த்தம்..




ஆண்/பெண் மன நிலையையும் சமூக நிலையையும்
மனதில் வைத்தே இந்தப் பதிவு.  என் இந்த புரிதல்
தவறாகக் கூட இருக்கலாம்.

"சொல்வதைச் சொல்லிவிட்டேன்
மகனே/மகளே இனி உன் சமத்து" என்பது போல்
மன நிலைகளையும் தேவைகளையும்
ஓரளவிற்கு சொல்ல முற்பட்டிருக்கிறேன்.

ஏதாவது(ஆண்) மனம் புண்பட்டிருப்பின் வருந்துகிறேன்.



என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ? என்ற 
கவலையில் எழுதப்பட்டதே இந்தத் தொடர்.
                                                    


                      விமர்சனங்களை வரவேற்கிறேன்.


Wednesday, November 04, 2009

ஆசை முகமறந்து போச்சே............தொடர்ச்சி(2)


கற்பனைகளோ, கனவுகளோ
இல்லாத நிச்சலனத்தில்-உள்ளம்

இயந்திரத்தனமான உலகில்
எப்பொழுதும் போலியான-புன்சிரிப்பு

செல்லரித்த சொந்தங்களின்
சுயநல பந்தங்களின் பிடியில்-வாழ்க்கை

கண்டதே காட்சி,
கொண்டதே கோலம் எனும்-கொள்கை

சாக்கடைச் சமுதாயத்தில்
சத்தமில்லாமல் தொலைந்தது-சந்தோசம்

வெளியெங்கும் வர்ணஜாலம்
வழி தவறிய குழந்தையாய்-நான்
 

பல்லாண்டுப் போரில்
புண்ணாகிப்போனது-உடலும், உள்ளமும்.

வசந்தங்களை வார்த்தைகளால்
மட்டுமே அறிந்தவன்

அன்பையும், பாசத்தையும்
கனவுகளில் மட்டுமே கண்டவன்

 
எத்தனை யுத்தங்கள்
எத்தனை காயங்கள், எஞ்சியது
வலியும் வேதனைகளும் தான்.

கனவுகளை நனவாக்க
வசந்தத்தை வாழ்க்கையாக்க
முறையாக வரவேண்டும் உயிரேஉன் மார்பில்
முகம் புதைத்து அழவேண்டும்.
                       
இரவோடு இணையாக
களவோடு களியாக
இன்பங்கள் இழைந்தாட நானும்-இனியேனும்
இளைப்பாற வேண்டும்.
          

தோளோடு தோள்சாய்ந்து
உடலோடு, உயிர்சேர்ந்து
உறவாடி விளையாடி நானும்-இனியேனும்
வலி நீங்க வேண்டும்.


இது நான் அவளுக்கு எழுதிய முதல் கடிதம். 


உண்மையில் ஆண் ஒரு கோழை.  பயம் அவன் உள்ளத்தில், 
ஒளிந்திருக்கும்.  காலம் காலமாக நடைமுறையிலிருக்கும் 
சமூக கோட்பாடுகளும், நம்பிக்கைகளும் அவனை ஒரு
கோழையாகவே வளர்த்து வருகிறது.

தன்னை உயர்ந்தவனாக, தைரியமானவனாக காட்டிக் கொள்ள 
படாத பாடு படவேண்டியிருக்கிறது.


சமூகம் ஆண்பிள்ளை என்ற,  ஒரு  உதவாத பட்டத்தை
கொடுத்திருப்பது மிகப் பெரிய வேடிக்கை.  சிறு குழந்தைகளாக
இருக்கும் போது கூட வீட்டில் பெண்கள் ஆண் பிள்ளைகளுக்கு
முக்கியத்துவம் கொடுப்பதும்,

“அவனுக்கு எல்லாந் தெரியும்”.  “அவனுக்கு கோவம் வரும்”  “ அவனுக்கு பிடிக்காது”  “அவன், அவனோட அப்பா மாதிரி”  “ஆம்பிளைப் பையன் அப்படித்தான் இருப்பான்”

இப்படி ஏத்திவிட்டே “அவனுக்கு” ஒரு உருவகம் கொடுத்துவிட்டார்கள். உருவகப்படுத்தப்பட்ட “அவனுக்கு”  இயல்பான, உண்மையான அவனோடு ஒத்துப் போக முடிவதில்லை.


“தி லாஸ்ட் எம்பரர்” திரைப்படத்தில் ஒரு காட்சி.
இரண்டு குழந்தைகள் வயது சுமார் 6 இருக்கும். 
ஒரு குழந்தை நாட்டின் மன்னனின் மகன். ஒருகுழந்தை அவன் நண்பன். 

நேற்றுவரை தன்னோடு விளையாடிய அரச குடும்பத்து 
வாரிசை விளையாட அழைப்பான் அவன் நண்பன்.
தந்தை இறந்ததால் நள்ளிரவில் அரசனாக முடிசூட்டப் பட்ட
அந்த ஆறுவயது   குழந்தை சொல்லும்
” அரசர்கள் விளையாடுவதில்லை” என்று.


இப்படித்தான் எல்லா பெண்களும் தன் பிள்ளைகளுக்கு முடிசூட்டி, 
பட்டம் கட்டி வளர்க்கின்றனர்.  அதனால் இல்லாத ராச்சியத்தை ஆள,
அவனுக்கு ஏவல் செய்ய, முகஸ்துதி செய்ய, ஒரு அடிமை 
தேவைப்படுகிறது.  அப்படிக் கிடைப்பவள் தான் மனைவி.   
எங்கும் வெளிக்காட்ட முடியாத அவன் இயலாமை அவனை இன்னும் மோசமாக்குகிறது.  அவனுக்கு கிடைத்த வடிகால் “மனைவி.”


இங்கே ஆணுக்கு ஒளிந்து கொள்ள ஒரு இடம் தேவைப்படுகிறது.
தன் வக்கிரங்களை வெளிக்காட்ட ஒரு இடம் தேவைப்படுகிறது.
ஊருக்காக, சமூகத்திற்காக, நட்பிற்காக, போடும் வேடத்தை 
கலைத்து இயல்பாய் இருக்க வேண்டிய அவசிமாகிறது.


தன்னை வீரனாக, தைரியமானவனாக, மற்றவர்களிடமிருந்து 
உயர்ந்தவனாக காட்டிக் கொள்ளும் முயற்சிதான், 
குடித்துவிட்டு வீரம் பேசுவதும், தன்னைவிட பலம் 
குறைந்தவர்களை அடிக்க முற்படுவதும், சாதாரண மக்களிடம் தன் அறிவுஜீவித்தனங்களை காட்ட முற்படுவதும். அதுவும்,
பார்வையில் படும்படி ஒரு பெண் தெரிந்துவிட்டால் 
இவன் வீரம் அளவிடமுடியாது.



இவனுக்கு எதையும்  சாதிக்க ஏதோ ஒரு பெண்
பெரிதும் துணை நிற்கிறாள்.   அந்தப் பெண் 
மனைவியோ, தாயோ, தோழியோ, யாரோ 
முகமறியா விலைமகளாகவோ,கூட இருக்கலாம். 

பெண்ணை வெற்றி கொள்வது ஆணுக்கு பெருமகிழ்ச்சி
கொடுக்கிறது. பெண்ணிடம் தோற்பது இழிவாகவும், வெல்வது
கவுரமாகவும் சொல்லிக் கொடுக்கப்பட்டு வளர்க்கப் படுகிறது.

விலைமாதர்களின் வாடிக்கைக் காரர்கள் கூட அவளை
வருத்தி,அவள் வலியில் இன்பம் காண்பதாக சொல்லப்படுகிறது. 
வீட்டில் தன் மனைவியிடம் அல்லது அவள் முன் செய்ய முடியாததை,
கேட்க முடியாததை,விலைமகளிடம் கேட்கிறான், செய்கிறான்.
அதன் மூலம், ஏதோ சாதித்ததாக உணர்கிறான். 

அவளையும் பெண்ணாக  மதித்து, கொஞ்சி, தேவையை 
பூர்த்தி செய்து மகிழ்வித்து மகிழும் ஆண்கள் மிகக் குறைவே.


தன்னை மற்றவர்கள் கொண்டாட வேண்டும், பாராட்ட வேண்டும்,
தனக்காக ஏதாவது சிறப்பாக செய்யவேண்டும், என்பதில் ஆண்மனம் 
அளவில்லா மகிழ்ச்சி  கொள்கிறது.   தாயும், மனைவியும் மட்டுமே, எதையும் எதிர்பார்க்காமல், (வேறு வழியின்றி) அவனை அப்படி கொண்டாடமுடியும்.

அவர்களிடமும் அதை பெறமுடியாதவன்,  ஏதோஒரு வகையில் மன பாதிப்பிற்குள்ளாகிறான்.

ஆண்கள் பொதுவாக இரண்டு வகை. 
எதிர்க்க முடியாத ஆளுமைக்கு அடிபணிந்தாலும், அதை
வெளிக்காட்ட முடியாத போது அதை வீட்டிலோ, 
அங்கும் முடியாத போது, வேறெங்கோ செல்லுமிடத்தில் தன்
ஆளுமையை வெளிக்காட்டி வடிகால் தேடுவது ஒருவிதம். 

தனக்குள்ளே அழுத்தி, அழுது, அழுது, அன்பு, குடும்பம்
என்ற போர்வையால் அதை மூடி  வலிகளை மறைத்து, மறக்க 
முற்பட்டு தனக்குள்ளே அமைதி தேடுபவன் அடுத்த ரகம். 

இதில் நான் மட்டுமல்ல நம்மில் பலரும் இரண்டாம் ரகம் தான்.




இப்படி சில எதிர்பார்ப்புகளோடு நானும், அதே போல்
சில எதிர்பார்ப்புகளோடு அவளும் மணவாழ்வில் 
இணைந்தோம்.........................




நான் அவளிடம் தேடியதும், அவள் என்னிடம் தேடியதும்-நாளை




உங்கள் கருத்துரைகள் வரவேற்கப் படுகின்றன.
தமிழ் மணத்தில் வாக்கைப் பதிவு செய்யுங்கள்..


Tuesday, November 03, 2009

ஆசை முகமறந்து போச்சே............

ஆசை முகமறந்து போச்சே-இதை 
யாரிடம் சொல்வேனடி தோழி…. 
நேசமறக்கவில்லை நெஞ்சம்-எனில்
நினைவு முகமறக்கலாமோ?.......... 

கண்ணில்தெரியுதொரு தோற்றம்-அதில் 
கண்ணனழகு முழுதில்லை 
நண்ணுமுக வடிவு காணில்-அந்த 
நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம்……… 

கண்ணன்முகமறந்து போனால்-இந்தக் 
கண்களிருந்து பயனுண்டோ?.. 
வண்ணப்படமுமில்லை கண்டாய்-இனி
வாழும் வழியென்னடி தோழி… 




தவழும் தென்றல் போலல்லாமல்,

குளிர் மிகு வாடைபோல் மிகுந்த ஈரத்துடன்,
மிகத்தெளிவாக, அதே நேரத்தில்,
காதலாகி, கசிந்து, கண்ணீர் மல்க,
தேனில் குழைத்த குரலோடு….
அவளே உருகி, தன் உணர்வை
வெளிப்படுத்துவதுபோல்
உயிரோட்டத்துடன்

அந்தப் பெண் பாடிக்கொண்டிருந்தாள்.

செம்பட்டுப்புடவை அணிந்து தலைநிறைய
அவனுக்குப் பிடித்த வாசத்துடன்,
பிடிக்காத பெயர் கொண்ட அந்த
……மல்லிகைப் பூவை நெருக்கமாகக் கட்டி,
நான் தெரிகிறேனா என்று இடைக்குப்பின்னிருந்து
எட்டிப்பார்க்கும் கூந்தலில் தொங்கவிட்டுக் கொண்டு…

பொன்னும் வைரமும் எங்கும் ஒளிவிட
மகிழ்ச்சியில் உள்ளம் பொங்கி வழிந்திட,
முகமுழுதும் பிரகாசமாய்,
சிவந்த ஈறுகள் தெரிய……………

…. சட்டென ஒட்டிக்கொள்ளும்… தொற்றுபோல்….
பளிச்சிடும் புன்னகையுடன்,

காதிற்கும் பின்னும், பிடறியிலிருந்தும்
இறங்கி வழிந்தோடிய மென் கருப்பு
மயிற்கால்கள், அவள் நிறத்தை
இன்னும் எடுப்பாக்கியது.

ஏகாந்தம் கூடுகிறது…… என் நினைவிழக்கிறேன்…….

சுரம் பிரித்து பாடுவதில் கவனமாகி, அதனால் 
ஏற்படும் அதிர்வுகளால் முகம் மேலும் சிவப்பாக,
கண்களை மூடிக்கொண்டு பாடும் பாட்டில்
தன்னை மறந்து அவள் பாடிக்கொண்டிருந்தாள்

. யாரோ……… யாரையோ நினைத்து………….யாரோ பாடுவதாக……… எதற்காகவோ பாடியது,……….

ஆனால் இப்பெண்ணால் எப்படி தானே,
தனக்காகப் பாடுவதுபோல் பாட முடிகிறது.
இந்த இடத்திற்கு, இந்தப் பாடல் பொருத்தமானதுதானா?.......

யோசிக்கத் தொடங்குமுன் நினைவிழந்தேன்………… 

குரலின் வசீகரம் என்னை மயக்குகிறது……….

தன்னிலவு அவள் முகமோ,
தாரகைகள் நகையோ
விண் நீளம் கார்குழலோ……

“ மேவும் எழிலெல்லாம் 
 மெல்லியின் வாய் கள்வெறியோ?

என்று இவளைப் பார்த்துத்தான்
எழுதியிருப்பானோ என் பாட்டன்

.இருக்காது………அவன் இவளைப் பார்த்தால்
எதுவும் எழுதியிருக்கமாட்டான்.
வாயடைத்துப் போயிருப்பான்.
எழுதுவதே மறந்து போயிருக்கும் அவனுக்கு.
நானே சொக்கிபோய் கிடக்கும் போது
அவன் என்ன செய்வான்….பாவம்………..

அவனுக்கு வார்த்தைகளே வராது….

சித்தம் தடுமாறும் என்றார்கள்.
தவறு,…..மிகத் தவறு………

எதைப் பற்றியுமான சிந்தனையும் இல்லை
என்னுள். நிச்சலமனாக ஆனால்
எதையோ தேடும் நிலையில் பரபரப்பு……

மீண்டும் நினைவிழக்கிறேன்……….

எல்லோரும் என் முகத்தைப்  பார்த்துக்
கொண்டிருக்கிறார்கள். நான் அவளழகில்
தொலைந்திருந்தேன்.

ஏதோ உணவு கொடுக்கப்பட்டது…..
ஏதேதோ பேசுகிறார்கள்
நிறைய சிரிக்கிறார்கள்.

அவளை எனக்கு பிடித்திருக்கிறதா? என்று
யாரும் என்னை கேட்கும் அவசியம்
இல்லாதிருந்திருக்க வேண்டும்.
அவர்களாகவே முடிவு செய்துவிட்டார்கள்.

எங்களிருவருக்கும்
திருமணம் செய்து வைப்பதென்று..........

அவள் முகமும், இனிமையான குரலும்
என்னைச் சுற்றி சுற்றிவர…..
எனக்கும் அங்கு நடந்த சம்பவங்களுக்கும்
எந்தத் தொடர்புமற்று……
எங்கோ மிதந்து கொண்டிருந்தேன்.

எங்கள் திருமணம் 
ஓரிரு மாதங்களுக்குள் நடந்து முடிந்தது.


மீதிப் பகுதியை நாளை தொடர்வேன்.............