Sunday, March 26, 2017

நமக்கு நாமே.- ஆப் கி பார்..மோடி சர்க்கார்நமக்கு நாமே.-ஆப் கி பார்..மோடி சர்க்கார்இணையத்தில் வெகுவாக பகடிக்குள்ளான இந்த ”தமிந்தி” வரிகளில் தான் எத்தனை கவர்ச்சி. திராவிட இயக்கங்களின் புண்ணியத்தால், இவையெல்லாம் ஏதோ வேற்று கிரகவாசிகளின் மொழியாக நமக்குத் தோன்றுவதும், இதை புரிந்து கொள்ள முடியாமலும், முயற்சிக்காமலும் அதை பகடிக்குள்ளாக்கிக் கடந்து செல்லும் நம் மரபின்பாற் பட்ட  இழப்புகள் குறித்து  மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரமிது.

இதை எழுதத் தொடங்கியதிலிருந்து பேரஞர் அண்ணா  குறித்த என் வாசிப்புகள்  நினைவில் வரத்தொடங்கியிருக்கின்றன. மாநில சுயாட்சித் தத்துவத்தின் முக்கியத்துவத்தையும் மொழி குறித்து அவர் 50 ஆண்டுகளுக்கு முன்பே பேசியவைகளும் ஆச்சரியந்தான்.  திராவிட இயக்கங்களின் சூழ்ச்சியால் இந்தி கற்க வில்லை என்று இன்றும் நம்மில் பலரும் புலம்புவதை கேட்க முடியும். ஆனால் நமக்கு இந்தி மட்டுமா பிரச்சனை? ஆங்கிலமும் கூடத்தானே.

பேரஞர் அண்ணா பாராளுமன்றத்தில் பேசும் போது அக்பர் அலிகான் என்ற உறுப்பினர் மொழிவாரி மாகாணங்களுக்கும் இந்திய அரசிற்குமான இணைப்பு மொழி a lingua franca அவசியமில்லை என்று நினைக்கிறீர்களா? என்று கேட்ட போது அவசியமில்லை என்று நான் நினைக்க வில்லை. ஆனால் அது அரசால் முட்டுக் கொடுக்கப் படாதாக, திணிக்கப் படாதாக, வெகு இயல்பானதொன்றாக மக்களால் ஏற்றுக் கொள்ளப் படவேண்டியதாகும் என்ற வரிகளில் தான் எத்தனை உண்மை.

 ஆனால் அந்த கசப்பு மருந்தை அன்றே தின்று செறிக்கச் செய்திருந்தால் இன்று இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்குமா என்ற சந்தேகம் வராமல் இல்லை.
.
இந்திய மக்களாகிய நாம், முறைப்படி தீர்மானித்து இந்தியாவை ஒரு சமத்துவ, சமய சார்பற்ற ஜனநாயக குடியரசாக நிர்மாணிக்கின்றோம்.
சமூக, பொருளாதார, மற்றும் அரசியல் நீதி காத்திட என்று தொடங்குகிறது நம் அரசியலமைப்புச் சட்டம்.
இதில் பேசப்படுகின்ற சமூக, பொருளாதார, மற்றும் அரசியல் நீதி காக்கப் படுகின்றதா? என்ற கேள்வி இன்று எழுந்தால் ஆம் காக்கப் படுகின்றது . இந்தியா முழுவதுக்குமானதாகவே பெரும்பாண்மைச்  வளர்ச்சித் திட்டங்கள்  அறிவிக்கப் படுகின்றன. ஆனால் அவை நம்மை வந்தடைந்திருக்கிறதா? என்பதே கேள்வி. கடை மடைக்கு நீர் வரத்து குறைவை இயல்புதானே என்று வேண்டுமானால் நமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொள்ளலாம். 

டிஜிட்டல் இண்டியாவில் தொடங்கி, மேக் இன் இந்தியா வரை எண்ணற்ற திட்டங்கள்,  அரசாங்கத்தால் தொடங்கப் பட்டு தமிழகம் போன்ற ஓரிரு மாநிலங்கள் தவிர்த்து ஏனைய இந்திய மாநிலங்கள் முழுவதாலும் இயல்பாய் ஏற்றுக் கொள்ளப் பட்டு வளர்ச்சியை நோக்கிச் செல்வதாகவே எனக்குத் தோன்றுகிறது. தமிழக அரசிற்கு இது குறித்த கவலை இருப்பதாகத் தோன்றவில்லை. பாவம், அவர்கள் பிரச்சனைகளே தலைக்கு மேலே இருக்கிறது. இதில் இதற்கெல்லாம் எங்கே போய் கவலைப்படுவது?

நம்மைப் பற்றி நாமாவது கவலைப்படுவோம். தட்டுங்கள் திறக்கபடும் என்பதல்ல, இங்கே திறந்தேதான் கிடக்கிறது. எட்டிப்போய் பார்க்க நாம் தாயாராக இல்லை என்பதே உண்மை. சில வலைதளங்களை தமிழிலும் காண முடிகிறது. ஆனால் பெரும்பாண்மை ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே இருக்கின்றன. 

மாட்டிற்காக ஒன்று கூடிய மாகசனங்கள் எல்லோரும் இனி மனிதனுக்காக ஒன்று கூடுவோம். நமக்கு நாமே என்ற வரிகள் வெறும் கொள்கை முழக்கங்கள் அல்ல. இனி இப்படித்தான் செல்லப் போகுது நம் வாழ்க்கை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அரசாங்கத்தின் திட்டங்களைத் தெரிந்து கொள்வோம். முடிந்தவரை தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுவோம்.  வாட்ஸ் அப்பில் எத்தனை கிறுக்குத் தகவல்களை நேரம் காலம் பார்க்காமல் ஃபார்வார்ட் செய்திருக்கிறோம். இனிமேலாவது இது போன்ற நல்ல தகவல்களை ஃபார்வார்ட் செய்வோம். இதற்கென தனியான ஒரு தகவல் பக்கம் தொடங்கினாலும் சரி. நம் ஊரில், நம் உறவுகளிடம், இந்தத் தகவல்களைச் சொல்லுவோம்.

மத்திய அரசின் எல்லாத்திட்டங்களும் இன்று டிஜிட்டலில் வந்துவிட்டன. தமிழில் தான் இன்னும் வரவில்லை. அவரவருக்கு விருப்பமான ஒரு துறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். குழந்தைகள் நலன், விளையாட்டு, கல்வி, பெண் குழந்தைகள் நலன், விவசாயம், நெசவு, தொழிற்துறை, வணிகம், இப்படி எல்லாத்துறையும் ஆண்ட்ராய்ட் போனிற்கு மாறிவிட்டின, நாம் எப்போது மாறப்போகிறோம்?.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்,
 ” சமூக, பொருளாதார, மற்றும் அரசியல் நீதி காத்திட என்று தொடங்குகிறது நம் அரசியலமைப்புச் சட்டம்” 

அரசியலமைப்புச் சட்டத்தையும் இறையாண்மையும்  காப்பாற்றவும், உண்மையான இந்தியனாக காட்டிக் கொள்ள வேண்டிய  கட்டாயப் பொறுப்பும் நமக்கிருப்பதால், அனைவரும் ஒத்துழைப்புத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

உதாரணத்திற்கு: விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு:
 

Saturday, February 25, 2017

யாம் உண்ட கலமும், உடுப்பனவும்,சூடுவனவும் உனக்காக.........


விசாரசருமர் அந்தணர் குலத்தைச் சேர்ந்தவர். இடையச்சிறுவன் பசுக்களை அடித்து துன்புறுத்துவது கண்டு தானே பசுக்களை மேய்க்கத் தொடங்குகிறார். மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லும் பசுக்களில் பால் கறந்து தன் சிவபூசைக்குப் பயன்படுத்துகிறார்.  ஊரார் இது குறித்து அவரது தந்தையிடம் முறையிடுகின்றனர்.  அவரும் மறைந்திருந்து விசாரசருமரின் செயல்பாடுகளை கவனித்து, உண்மை என்றறிகிறார். கடுங்கோபத்தில் விசாரசருமரின் பூசையைக் கலைக்க முற்படும்போது விசாரசருமர் மழுவால் தன் தந்தையின் கால்களை தறிக்கிறார். உடனே எம்பெருமான் தோன்றி எனக்காக உன் தந்தையை வெட்ட முற்பட்டதால் இன்று முதல் நானே உனக்குத் தகப்பனாகிறேன். நான் உண்டகலமும்  உடுப்பனவும் உனக்கேயாம். உமக்கு சண்டீசன் எனும் பதம் தந்தோம் என்று வாழ்த்தி சரக் கொன்றை மாலையெடுத்து சண்டீசருக்குச் சூட்டி வாழ்த்தியருளுகிறார்.

அன்றிருந்து சிவாலயச் சொத்துக்களுக்கும் பொருட்களுக்கும் அவரே காப்பாளராகிறார்.  கோயிலுக்கு வழங்கும் அனைத்துச் செல்வங்களும் சண்டிகேசர் பெயருக்கே வழங்கப் படுவது வழக்கமாயின.


இந்தப் பெரிய புராணக் காட்சியை கங்கை கொண்ட சோழபுரத்தில் அழகாய் வடிவமைத்து நம் கண்முன்னே நிறுத்தியிருக்கிறார் சிற்பி.  நீண்ட நாட்களாய் நினைவில் இருந்து மறையாத ஒரு அழகிய சிற்பம்.


வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்
-திருத் தொண்டத் தொகை.

ஈன்ற தாதை விழ எறிந்தாய்; அடுத்ததாதை இனி உனக்கு நாம்-பெரிய புராணம்.

நாம் உண்ட கலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காகச் சண்டீசன் எனும் பதம் தந்தோம்-பெரிய புராணம்.

பொன் தடமுடிக்குத் துண்ட மதிசேர் சடைக் கொன்றை மாலை வாங்கிச் சூடினார்-பெரிய புராணம்.