Thursday, September 23, 2010

ஆண்......பாவம்........

 


பொதுவுடமை தத்துவம்

கலைந்த தலை
எண்ணை வடியும் முகம்
வீச்சமாய் ஒரு நைட்டி
விதரணை யில்லாப் பேச்சு
வீட்டுக்குள் இவள்.....

முடிந்த அளவு தவிர்க்கின்றேன்
இவளின் பார்வையை


மலர்ந்த முகம்
அலை கூந்தல்
தளிர் நடை
அழகில் சோலை
கடைத் தெருவில் அவள்

தாண்டிச் சென்ற பின்னும்
தொடர்கின்றேன் திருட்டுதனமாய்............

அவர்கள் கடந்ததும்
திரும்பிப் பார்த்து........

த்தூ..இவனும் ஒரு மனிதனா?
எப்படி வெறித்துப் பார்க்கிறான்?.
சொன்னாள் என்னவள்

திரும்பிப் பார்க்கிறேன்
தாண்டிச் சென்றவளை.....
அவளும் திரும்பி ஏதோ
சொல்கிறாள் அவனிடத்தில்.....

இதைத்தான் அவளும் சொல்லியிருப்பாளோ!!


ஏனோ நானும் அவனும்
வெட்கப்படவில்லை.
வேதனைப் படவுமில்லை.
எவன் சொன்னான் -தோற்றுவிட்டது
பொதுவுடமை தத்துவமென்று.

Thursday, September 09, 2010

புலம் பெயர் மண்ணில் ஒரு தமிழனின் அஞ்சல் தலைமலேசிய தமிழ் நெறிக் கழகத் தோற்றுநர் பாவலர்.அ.பு.திருமாலனாரின் உருவப்படம் தாங்கிய அஞ்சல் தலை மலேசிய அஞ்சல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது.  புலம்பெயர்ந்த மண்ணில் நடைபெறும் இது போன்ற நிகழ்வுகள் பெருமகிழ்ச்சியைக் கொடுக்கின்றன. பெருமிதமடையச் செய்கின்றன. 

இது குறித்த பிற பதிவுகள்:

தமிழ்நெறிப் பாவலர் அ.பு.திருமாலனார்(மலேசியா)

தமிழ் நெறி ஞாயிறு பாவலர் அ. பு. திருமாலனாருக்கு அஞ்சல் தலை

 
Tuesday, September 07, 2010

பீட்டர் பாண்டியன்.............................................


மதுரைப் பகுதியில்   1812-1828 வரை ஆட்சியாளராக இருந்த ஆங்கிலேயர் ரெளஸ் பீட்டர்.  பெரிய குளம், போடி பகுதிகளில் வன விலங்குகளின் தொல்லைகளுக்கு உள்ளான மக்களைக் காப்பாற்றிய பெருமை அவரையே சாரும்.  மதுரை மீனாட்சியம்மன், அழகர் கோவில்களுக்கு பெருமதிப்பிலான தங்க நகைகளை காணிக்கையாக அளித்தவர்.  

இவரின் கொடைத்திறத்தையும், வீரத்தையும் பாராட்டி அக்காலத்தில் நிறைய நாட்டுப்புறப் பாடல்கள் இருந்திருக்கின்றன.  பாண்டிய மன்னனே திரும்ப வந்து ஆள்வதாக மக்கள் கருதி அவரை “பீட்டர் பாண்டியன்” என்றே அழைத்திருந்திருக்கின்றனர்.  “பீட்டர் பாண்டியன் அம்மானை” என்ற நூலும் அக்காலத்தில் பிறந்திருக்கின்றது.  அந்த நூல் இன்று கிடைக்கவில்லை.

அரசாங்க கருவூலத்திலிருந்து பணத்தை எடுத்து ஏழை எளிய மக்களுக்கு வாரி வழங்கிய  அவரை ஆங்கில அரசாங்கம் பதவி நீக்கம் செய்தது. அதைத் தொடர்ந்து அவர் 1828 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.  இவரின் வெண்சலவைக் கல்லறை மதுரை தெற்கு ஆவணி மூல வீதியின் மேற்குப் பகுதியில் உள்ள தேவாலயத்தில் முன் தளத்தில் உள்ளது.

பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களின் அறியப்படாத தமிழகம் ”நூலிலிருந்து........

Monday, September 06, 2010

மழுங்கிப் போன தமிழனும்...... மறந்து போன தலைவனும்.........


தண்ணீர் விட்டா வளர்த்தோம்.....சர்வேசா
                                                     கண்ணீரால் வளர்த்தோம்


நேற்றைய செய்தி தாள்கள், ஊடகங்கங்கள், இணையங்கள், எங்கு காணினும் ஆசிரியர் தின விழாச் செய்திகள், வாழ்த்துக்கள்.  டாக்டர் ராதா கிருஷ்ணன் பிறந்த நாள் விழா செய்தி தொகுப்புகள்.  பள்ளிகளில் ஆசிரியர்கள் ஆட, பாட, மாணவர்கள் வேடிக்கை பார்க்க,  மாணவர்கள் ஆசிரிய ஆசிரியைகளைப் பற்றி கவிதை மழை பொழிய சிறப்பாக முடிந்தது ”ஆசிரியர் தினம்”

  இந்த கொண்டாட்டங்கள் குறித்த எந்த வருத்தமும் எனக்கில்லை.  1947க்கு முன்னர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாத, சுதந்திரப் போராட்டத்தில் எந்த ஒரு சிறு பங்களிப்பும் செய்திராத,  ஆதிசங்கரர் தொகுத்த இந்து மத சாரத்தை ஒருங்கிணைத்து  இந்து தத்துவ ஞான மரபு குறித்த புரியாத புத்தகங்கள் எழுதினார் என்பதைத் தவிர என்ன செய்துவிட்டார்? சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்.

உலக தத்துவ ஞானிகளில் ஒருவர் என்று உருவகப்படுத்தப்பட்ட இவரின் தத்துவங்களும் தீர்க்க தரிசன வரிகளும் இன்று எங்கே போயிவிட்டன்.  சோசலிச கொள்கைகளில் நம்பிக்கை கொண்டு மத வாதத்திற்கு எதிராக இருந்த பண்டித நேரு அவர்களாலேயே நிராகரிக்கப் படமுடியாத அளவிற்கு திடிரென சர்வபள்ளி ராதா கிருஷ்ணன் குடியரசுத் தலைவராக  வளர்ந்த கதையின் பின்னனி குறித்து பலரும் பேசுவதை எழுதுவதை கேள்விப்பட்டிருக்கின்றேன்.  
இந்த விவாதங்களுக்கு நான் வரவில்லை.......

 

 வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள் நேற்று
"ஒருநாடு உரிமையோடு விளங்க வேண்டுமென்றால் முதலில் அதன் பொருளாதாரச் சுரண்டலைத் தடுக்க வேண்டும்; இரண்டாவதாகத் தாய்மொழியின் வாயிலாக அறிவை வளர்க்க வேண்டும். இந்த இரண்டும் எல்லா நாடுகளுக்கும் பொதுவான உணமை. இதனை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே நன்றாக உணர்ந்து வாழ்க்கையில் காட்டித் தொண்டு செய்தவர் வ.உ.சி"  

என்று டாக்டர் மு.வ. அவர்கள் சொன்னது போல் நாடு மொழி இரண்டிற்கும் பெருந்தொண்டாற்றிய பெருமகன்.
                                                                                                                  நன்றி-தமிழ் விக்கி

வ.உ.சி யின் பிறந்தநாளை அனைவரும் மறந்து போனதுதான் வருத்தப்பட வேண்டிய விசயம்.  தமிழக அரசோ, காங்கிரஸ் கட்சியோ யாரும் இதைப் பற்றி கவலைப் பட்டதாக தெரியவில்லை.

 அருந்தமிழுக்கு அவர் ஆற்றிய பணிக்காகக்கூட அவரை நினைத்துப் பார்க்கவில்லை தமிழக தமிழறிஞர்கள்.


சிறையில் இருந்த நாட்களிலேயே தமிழ் இலக்கிய இலக்கணங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிய வ.உ.சி. அவர்களால் தமிழன்னைக்குக் கிடைத்த அணிகலன்கள் பல.
 • வ.உ.சிதம்பரம் பிள்ளை தற்சரிதம் (சுயசரிதம்)
 • திருக்குறள் மணக்குடவர் உரைபதிப்பு
 • மனம் போல் வாழ்வு (மொழி பெயர்ப்பு தத்துவ நூல்)
 • அகமே புறம் (தத்துவம்)
 • மெய்யறம் (ஆன்மீகப்புரட்சி நூல்)
 • திருப்பொய்கையார் இன்னிலை (பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. அதன் உரைநூல்)
 • தொல்காப்பியம் இளம்பூரணர் உரைபதிப்பு
 • வலிமைக்கு மார்க்கம் (மொழிபெயர்ப்பு நூல்)
 • சாந்திக்கு மார்க்கம் (தத்துவம்)
 • சிவஞானபோத உரை (சைவ சித்தாந்த உரை நூல்)
 • மெய்யறிவு (அற நூல்)
 
வாழ்ந்த வள்ளுவனையே ஏற்காத காரணத்தால் மறக்கடிக்கப் படுகிறாரோ? இல்லை மழுங்கிப் போகத் தொடங்கிவிட்டானோ தமிழன்..........

(கடவுள் வாழ்த்தில் தொடங்கி முதல் நான்கு அதிகாரங்களை வள்ளுவர் எழுதியிருக்க வாய்ப்பில்லை.  இது ஏதோ இடைச் செருகல் என்று முதன்முதலில் சொன்னவர் வ.உ.சி.  )