Wednesday, December 18, 2013

அவளின் ஆகச் சிறந்த நாள்- திருவாதிரை
 
 

மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக்
கையாற் குடைந்து குடைந்து உன் கழல்பாடி

ஆனந்தி….அந்த அவரைக்காய எடுத்து சின்ன பாத்திரத்துக்கு மாத்திரு…..உமா இலையைக் கழுவிப் போட்டு காயெல்லாம் எடுத்து வச்சிடு..

ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல் போற் 
செய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல் 

அந்த அவியலுக்கு கொஞ்சம் தயிறு ஊத்தி வச்சிடு…..குக்கர் சத்தம் குறைஞ்சிருச்சான்னு பாத்து, ஒரு பாத்திரத்தில எடுத்து வைச்சிடு

மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்

ஏப்பா, போயி குளிச்சிட்டு வரலாம்ல, மச மசன்னு நின்னுகிட்டு…..நல்ல நாளும் அதுவுமா இப்படியா குளிக்காம வீடுபூரா சுத்திகிட்டிருக்க…

உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம் 
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.

உங்கப்பா வந்திட்டாரா? …காலைல கோயிலுக்குப் போனமா? வந்தமான்னு இல்லாம……போறவங்க வாரவங்ககிட்ட நாயம் பேசிகிட்டிருந்தா நேரம் காலந் தெரியாது இந்த மனுசனுக்கு….


மருமகள்களையும், எங்களையும் (நான், என் தம்பி), கூடவே என் அப்பாவையும் சேர்ந்து விரட்டிக் கொண்டிருக்கிறாள் என் அம்மா, பூசையறையில் இருந்தபடியே.


ஒரு திரைப்படத்தின் தொடக்கக் காட்சியில் வரும் வீடு போலவே இருந்தது என் வீடும்….


நிம்மதியா சாமி கும்பிட விடறீங்களா?   சரி.சரி. எல்லாரும் வாங்க..படைச்சு சாமி கும்பிடனும்…..குழந்தைங்க எல்லாம் பசியோட இருக்குதுங்க…..


வருடத்தின் ஆகச்சிறந்த அந்த நாளை அவள் இழக்கத் தயாராகயில்லை. தனித்தனியாக வசித்துவரும் நாங்கள் அனைவரும் ஒன்றுகூடுவது, இது போன்ற ஏதாவது ஒரு சில நாட்களில் தான். 


அவளுக்குத் தெரிந்த பாடல்களையெல்லாம் பள்ளிக்கூடச் சிறுமி மனப்பாடச் செய்யுள் ஒப்பிப்பது போல், எந்தச்  சாமியிடமோ சொல்லித் தீர்த்துக் கொண்டிருக்கிறாள்.  நாங்கள் எல்லோரும் கை கூப்பியபடி அவள் பாடுவதையே பார்த்துக் கொண்டிருப்பதில் அவளுக்குள், ஒரு பெருமிதம். 


அவள் பாட்டுப் பாடி, பூசை செய்ய, இரண்டு மகன்களும், மருமகள்களும், கணவனும் கை கட்டி, கண் மூடி நின்று கொண்டிருக்கும்போது அளவில்லா ஆனந்தத்தில் திளைத்திருக்கவேண்டும் அவள் மனம். ஒரு காலத்தில், உணவு மேசையில் உப்பு வைக்கப்படாமலிருந்ததால், எட்டி உதைத்து மொத்த உணவையும் கீழே கொட்டி, இரண்டு நாள் அழுது புரண்டு மன்னிப்பு கேட்டும், இரங்கி வராத தன் கணவன், தன் முன் அமைதியாய் தன் ஏவல்களைக் கேட்டிக் கொண்டிருப்பது அவளுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கத்தானே வேண்டும்.


 பூசையில் வைத்திருந்த மஞ்சள் கயிறுகளை வெற்றிலை பாக்கோடு வைத்து, மருமகள்களிடம் கொடுத்து, புருசங்கால்ல விழுந்து, தொட்டுக் கும்பிட்டு, நல்லபடியா நோய் நொடியில்லாம இருக்கோணும்னு வேண்டிகிட்டு, மஞ்சக் கயிறை கட்டிக்குங்க……. 


என்று கொடுத்தவள், அவர்கள் எங்கள் கால்களில் விழுந்து வணங்குவதை உறுதிப்படித்திக் கொள்ளுவிதமாக, எங்கள் அருகில் வந்து நின்று கொண்டாள்.  என் மனைவி என் காலில் விழுந்து வணங்கி, மஞ்சள் கயிறைக் கொடுத்து, தலை குனிந்து நிற்கும் காட்சி அவளுக்கு கொடுத்த சந்தோசத்தை அளவிடமுடியாது.  ஏனோ இன்று எப்பொழுதும் விட மகிழ்ச்சியாக இருப்பதாக தோன்றுகிறது.  .


அத்தை நீங்களும் மாமா காலில விழுந்து கும்பிட்டு மஞ்சகயிறு கட்டிக்குங்க என்று பெரிய மருமகள் சொன்னதும் ஏனோ அவள் அதை ரசிக்கவில்லை என்று தோன்றியது........


இத்தனை வருசத்துக்கப்புறம் என்ன விரதம், சாங்கியம்…ம்ம்ம்….என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டே, தன் கணவனிடம் மஞ்சள் கயிறு தட்டத்தை நீட்டினாள்……


எதற்காகவும் அவளின் அந்த ஆகச்சிறந்த நாளை அவள் இழக்கத் தயாராகவில்லை…….
Wednesday, November 20, 2013

மாமேதை அ.மார்க்ஸ் அவர்கள் கவனத்திற்கு…… முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்-- ஒரு பார்வை


முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத் திறப்புவிழாவிற்கு ஓரிரு நாட்கள் முன்பு, அங்கே செல்லும் வாய்ப்பு கிடைத்தது.  தலைவர் பழ. நெடுமாறன் ஐயா அவர்களைச் சந்தித்ததும், அவரோடு நினைவு முற்றத்தைச் சுற்றி வந்ததும்,  பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் என்றவுடன் அது வெறும் ஈழப்போரின் இறுதிநாட்களின் காட்சியமைப்பு என்ற எண்ணமே அனைவருக்கும் ஏற்படும்.   ஊடகங்களும் அதையே முன்னிறுத்துகின்றன.  ஆனால் அதையும் தாண்டிய செய்திகளும் தமிழக வரலாறும் அங்கே நிலைநிறுத்தப் பட்டிருக்கிறது என்ற உண்மையை ஏனோ அனைவருமே ம(றை)றந்துவிட்டிருக்கின்றனர்.
 
நினைவு முற்றம் மூன்று பகுதிகளைக் கொண்டதாக அமைந்திருக்கிறது.  உள்ளே நுழைந்தவுடன் சமீபத்திலே இடிக்கப் பட்ட சுற்றுச்சுவருக்குள் அமைந்திருக்கும், பூங்கா, முள்ளிவாய்க்கால் இறுதிப்போர் காட்சிகள், ஒருபுறம், அதன் எதிர்புறத்தில் ஈழப் போரில் இந்திய மற்றும் தமிழக அரசின் நிலைப்பாடுகளை எதிர்த்தும், எம் மக்கள் வதைக்கப்படுவதையும், கண்டித்து உயிர்தியாகம் செய்த முத்துக்குமரன் உட்பட்ட தியாகிகளின் முகவடிவம் சுதையினால் வடிக்கப் பட்டிருக்கிறது. இவை இரண்டிற்கும் இடையே, தமிழ்த்தாயின் சிலை எழுப்பபட்டிருக்கிறது. பூங்காவை அடுத்து அமைந்துள்ள மண்டபத்தில் ஈழப்போரில் பங்குபெற்று வீரமரணம் அடைந்த விடுதலைப்புலிகளின் முக்கியப் பொறுப்பாளர்களின் படங்கள் மிக அழகாகவும் உயிரோட்டத்துடனும் வரைந்து வைக்கப்பட்டிருக்கிறது.  ஈழப் போர் மட்டுமன்றி,  சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டி ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழ் வீர மரவர்கள், மருது சகோதரர்கள், வேலு நாச்சியார், ஒண்டிவீரன் செண்பகராமன்,உள்ளிட்ட  மாவீரர்களின்  வண்ணப் படங்கள் வரைந்து வைக்கபட்டிருக்கின்றன. இதில் பலரின் பெயர்கள் கூட வரும் தலைமுறைக்கு தெரியாமல் போயிருக்கும். அப்படங்களுக்குக் கீழே அவர்களைப் பற்றிய சிறு குறிப்பும் எழுதப்பட்டிருக்கின்றன.

இதனை அடுத்த கூட்ட அரங்கம் என்னை மிகவும் கவர்ந்தது. பெரும் ஆச்சரியத்தையும் அளித்தது.  கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் தமிழ் மொழிக்காக பாடுபட்ட மறைந்த, எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் அனைவரது படத்தையும் தேடித்திரிந்து கொண்டுவந்து அரங்கைச் சுற்றி சட்டமிட்டு மாட்டிவைத்தது பெரும்பணியே.  இதற்காக இந்தத் தமிழ்ச்சமுதாயம் பழ.நெடுமாறன் ஐயா அவர்களுக்கு பெரும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.
எத்தனையோ தமிழறிஞர்கள், அவர்களின் பெயர்களைக்கூட நான் கேள்விப்பட்டதில்லை, அவர்களின் படங்களையெல்லாம் ஒரே இடத்தில் பார்க்கும்படி அமைத்திருக்கிறார்.   பெரும் சிரமங்களுக்கு மத்தியில் தமிழறிஞர்களின் படங்களை பெரும் பொருட்செலவில் தேடிப்பிடித்து கொண்டுவந்து மாட்டியிருக்கிறார்.  உமறுப்புலவரின் படம் கிடைக்கவில்லை, அவரின் உறவினர்களிடம் கூட முயற்சித்துவிட்டேன். கிடைக்கவில்லை. கிடைத்தால் நன்றாக இருக்கும் என்ற வருத்தத்தை தெரிவித்தபோது ஆடிப்போய்விட்டேன்.(யாரிடமாவது இருந்தால் கொடுத்துதவுங்கள்)

கட்சி, மதம், சாதி போன்ற வேறுபாடுகளின்றி அனைவரின் படத்தையும் சேகரித்து வைத்திருக்கின்றார். வட மற்றும் தென் தமிழக எல்லைப்போராட்ட மறவர்களின் படங்களும்  இடம்பெற்றிக்கின்றன.  சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரின் படம் ஏனோ என்னை மிகவும் கவர்ந்தது. அதுவரை அவரைப் புகைப்படத்தில் கூட நான் பார்த்ததில்லை.

இயல்,இசை, நாடகம், என்னும் முத்தமிழுக்கும் தொண்டாற்றி, மறைந்து போனவர்களின் படங்களைப் பார்க்கவேண்டியாகிலும் ஒரு முறை சென்றுவாருங்கள்.இந்தப் படமும் ஏதோ ஒரு பரவசத்தை என்னுள் எழுப்பியது. 


சிறு விளக்கங்கள்:

1.   திரு.அ மார்க்ஸ் அவர்கள் நேற்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பெரியார் படம் இல்லை, என்று எழுதி,திராவிட, தமிழ்தேசிய இயக்கத் தோழர்களுக்குள் தன் வழக்கமான சிண்டு முடியும் பணியை தொடங்கிவிட்டிருக்கிறார்.  மன்னிக்கவேண்டும் திரு. மார்க்ஸ் ஐயா, தமிழ் மொழிக்குத் தொண்டாற்றியவர்களின் படங்கள் மட்டுமே அங்கே அமைக்கப் பட்டிருக்கிறது.  நீங்கள் ஒருமுறை உங்கள் கிருதாவைக் குறைத்துக் கொண்டு சென்று பார்த்துவாருங்கள்.  காலஞ்சென்ற தமிழறிஞர்களின், அல்லது மொழிக்கான தன் பங்கீட்டைச் செய்தவர்களின்  படங்கள் ஏதாவது விட்டுப்போயிருந்தால் அதையும் வைக்கச் சொல்லி கேட்டுக் கொள்ளலாம்.. சர்வதேசியம் பேசும் உங்களைப்போன்றவர்களுக்கு இதெல்லாம் புரியாது….விட்டுவிடுங்கள்

2.   இரண்டாவதாக வீர சுதந்திரம் வேண்டிப் போர் புரிந்த வீர மறவர்களின் படங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையில் காந்திபடம் இல்லை, காமராசர் படம் இல்லை என்றெல்லாம் பேசத்தொடங்கிவிடாதீர்கள்………போருக்கும் போராட்டத்திற்குமான வேறுபாடு தெரியாதவரல்ல நீங்கள்.  இங்கே இருப்பது போர் வீரர்களின் நினைவு முற்றம். 
   
   உங்களைபோன்ற மாமேதைகள், நேரில் சென்று பார்த்து, பின்னர் விமர்சிப்பதோ, அல்லது ஆலோசனைகள் சொல்வதோதான் அழகு. யாரோ ஒரு கைத்தடியின் அல்லது அல்லக்கையின் அரைகுறைப் பேச்சைக் கேட்டுக் கொண்டு எழுதுவதை தவிர்க்குமாறு அன்புடன் வேண்டுகிறேன
 
 Thursday, July 04, 2013

புண்ணாக்கு

ஒருவாரமா பண்ணையக்காரி ரவுசு தாங்கமுடியல..……பாலு நல்லால்ல, காயி நல்லால்ல…….கீரை நல்லால்ல…….எல்லாம் வெலையும் அதிகம்…ஒரு ருசியுமில்ல….ஒரே கலப்படம்………….பேசாமா நம்ம இடத்துல, வூட்டுக்குத் தேவையானதை நாமளே பயிர் செஞ்சிக்கலாம்னு சொல்லி, நாலு வெதை பொட்டணத்தையும், ஒரு கொத்தையும்  கையில கொடுத்து, அதோட விட்டாளா…….நல்லதா ரெண்டு எருமை வாங்கிவுட்டா பாலுக்கு பாலுமாச்சு, வெண்ணை வாங்கற செலவுமிச்சமுன்னா பாருங்க……….நொந்து போயிட்டேன்….


. போனவாரமே  பெருசு சொல்லிச்சு, கண்ணூ……….கெரகம் கெட்டுக் கெடக்கு……பாத்து கவனமா இருடான்னு……. என்னிக்கு நாம கேட்டிருக்கிறோம்…….புதுசா இன்னிக்கு கேக்க……..

சீக்கிரமே கோவணம், கட்டிகிட்டு, மமுட்டி புடிக்கப் போறேன்……….   தம்பி சுரேஷ் மறக்காம போட்டா புடிக்கற பொட்டியோட வந்திரு…………


ஊரெல்லாம் சுத்தி, ஒலைச்சு, கலைச்சு, வூடுவந்து சேந்து, ரவைக்கு என்னாடா கெடைக்கும்னு பார்த்தா, கோதுமைச் சோறாம் .  கேட்டா, ஒடம்புக்கு அதான் நல்லதாம்.  சக்கரை நோவு வராதாம், கொதிப்பு நோவு வராதாம். என்னத்தைச் சொல்ல……..ஏங்கண்ணூ….துளி எண்ணையாவது ஊத்தி கெளரி வைக்கலாமுல்ல….இப்புடி வரட்டியாட்டமிருக்கேன்னு கேட்டது தப்பாப் போச்சு. 

இந்த யெயற்கை வெவசாயம்,  கிராமிய வொணவு, வொணவே மருந்துன்னு சொல்லிகிட்டிருக்கறவங்களைக் கட்டிவச்சு ஒதைக்கோணும்னு தோணுது.

ஊருல விக்கிற எண்ணையெல்லாம் ஒரே கலப்படமாம். வெலையும் அதிகமாம்…..என்னத்தச் சொல்ல……….சரி இவளோட மல்லுக் கட்டிகிட்டுருக்க முடியாதுன்னு முடிவு செஞ்சி, காலைலயே நாடார் கடைக்குப் போயி, நல்ல, கடலையெண்ணை வாங்கிப்போடுவோம்னு முடிவு செஞ்சிட்டேன்.

காலம்பற ஏந்திருச்சு, நாடாரு கடைக்குப் போனா கடலையெண்ணை லிட்டர் 160/-..  ரூவாயாம்……. செரி இதெல்லாம் நமக்கு கட்டுபுடியாகாது…… நாமளே போயி பருப்பு வாங்கி, ஆட்டிகிட்டு போயிடலாம்னு, பொறப்பட்டு, நசியனூர் யாவாரியப் பாத்து, 15 கிலோ கடலைப் பருப்பை வாங்கி பிளசருல தூக்கிப் போட்டுகிட்டு, நேரா மேட்டுகடை அறவைமில்லுக்குப் போயி கூடவே கோந்திருந்து, ஆட்டச் சொல்லிப் போட்டு, ஒரு ஒரமா உக்கோந்திருந்தேன்.

 பொறப்படும்போதே வூட்டுகாரி சொன்னா, எங்கியாவது கேண மாதிரி, வேடிக்கை பாத்துகிட்டுருந்தா அறைக்கிறவன் ஏமாத்திப்போடுவான். கவனமா பக்கத்திலயே இருந்து வாங்கிகிட்டு வந்திருன்னு.  புண்ணாக்கை அவங்கிட்ட உட்டுபோட்டு வந்திடாத, கையோட வாங்கியாந்திரு.  இல்லைன்னா அவன் அதுல எண்ணையோட எடுத்து வச்சிக்கிவான்னா.

நானும் செக்கைச் சுத்தி சுத்தி வந்து கவனமா பாத்துகிட்டிருந்தேன். கடேசில பாத்தா 6கிலோ எண்ணையும் 11கிலோ புண்ணாக்கும் கெடச்சுது.  அடக் கெரகமே, இந்தப் புண்ணாக்கை வச்சிகிட்டு என்ன செய்யறது தெரியாம வூட்டுக்கு வந்து சேந்தேன்…..

கடலை கொட்டை 15 கிலோ  1125ரூவாய்
அறவைக்கு                      105ரூவாய்
பிளசருக்கு டீசல்                 500ரூவாய்
ஆகமொத்தம்                    1730ரூவாய்
எண்ணை கெடச்சது             6கிலோ
புண்ணாக்கு                      9கிலோ……

மொத்தத்தில  ஒரு லிட்டர் 288/-ருவாய்க்கு வாங்கியிருக்கேன். இந்த புண்ணாக்கை என்ன செய்யறதுன்னு தெரியல……….

எந்த கெரகம் புடிச்சவனாவது எந்த டிவியிலாச்சும், புண்ணாக்கு தின்னா இந்த வியாதி வராது, அந்த சத்து இருக்குதுன்னு சொல்லாம இருக்கோணுமேன்னு வேண்டிகிட்டுருக்கேன்.