Tuesday, August 28, 2018


திருவிருந்து

அறுபத்தைந்து ஆண்டு வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறேன். தொடக்கப் புள்ளி அரைகுறையாகத் தெரிந்தாலும், ஆறு சகோதரிகளைப் படிக்கவைத்து, திருமணம் செய்து கொடுத்து, ஒவ்வொருவரின் பிரச்சனைகளையும் தீர்த்து, நான் திருமணம் செய்து கொண்டதும் மங்கலாகத்தான்  தெரிகிறது.   நானும் என் மனைவியும் தனிமையில் இருந்த நாட்கள் மட்டும் என்னவோ என் நினைவில் பெரிதாய் இல்லை.  இடையில் இரண்டு குழந்தைகள் வேறு. இது எப்படி என்றெல்லாம் கேட்கக் கூடாது.

முப்பது வயதைத் தாண்டிய மகன், இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பன்.  நள்ளிரவில் தட்டுத் தடுமாறி, தள்ளாட்டத்தோடு வீடு திரும்பும் அவனைப் பற்றிக் கவலைப்படுவதா? 8 வயதாகியும் சரியாகப் பேச்சு வராமலும், அதீத உணர்ச்சி வேகத்தில் செயல்படும் ஹைப்பர் ஆக்டிவிட்டி நோயால் தவிக்கும் அவன் மகனைப் பற்றிக் கவலைப்படுவதா? திருமணமாகி 6 மாதத்திற்குள் சேர்ந்து வாழ விரும்பாமல் வீடு திரும்பி, வீட்டுப் பூனையாய் என் கால்களுக்கிடையே  சுற்றிவரும் மகளை நினைத்துக் கவலைப்படுவதா? அதித சர்க்கரையும், மூளையில் நீர் கோர்த்து, வெளியேறாமல் இரண்டு முறை ஆபரேஷன் செய்தும் சரியாகாமல், வலியோடும், வேதனையோடும், என்னோடு ஓடி வந்து கொண்டிருக்கும் மனைவியைப் பற்றிக் கவலைப்படுவதா?

இப்பொழுதெல்லாம் கவலைப்படுவதை நிறுத்திக் கொண்டுவிட்டேன். ஒவ்வொரு நாளும் காணும் எல்லோர் வாழ்க்கையிலும் சிக்கல்கள், பிரச்சனைகள் இருந்து கொண்டே தான் இருக்கின்றன. பக்கத்து வீட்டு மைக்கேலுக்கு மகனும் பேரனும் தன்னோடு இல்லையென்பது   பிரச்சனை, என்றால், எதிர் வீட்டு கோபாலுக்கு வேலைக்கும் போகாமல் எந்நேரமும் குடித்து விட்டு தகராறு செய்யும் மகன்  உடன் இருப்பது  பிரச்சனை.

கடந்த ஒரு வாரமாக வயிறு ஏனோ உப்பிக் கொண்டு  வலி கொடுக்கிறது. நண்பர் ஒருவரின் பணி நிறைவு விழா, முடிந்து வந்தவுடன், வேறு ஒரு நண்பரின் மகளின் கல்லூரிவரை, அவரோடு செல்லவேண்டியதாயிற்று. மூன்று நாட்களாய் தெருக்குழாயில் தண்ணீர் வரவில்லை.  தண்ணி திறந்துவிடும் சுப்பிரமணியைத் தேடிப் பிடிக்கவேண்டும், இப்படி ஏதோ ஒரு வேலை. சரி இன்றைக்கு எப்படியும்  டாக்டரைப் பார்த்திடவேண்டும் என்று போய்  ஸ்கேன், பரிசோதனைகள், எல்லாம் எடுத்துப் பார்த்தால், வயிற்றில் ஏதோ ஒரு கட்டியிருக்கிறதாம். அது கேன்சரா என்பதை கண்டுபிடிக்க, நீளமான ஊசியை உள்ள விட்டு அந்தக் கட்டியின் மேல்புறத்துச் சதையைச் சுரண்டி எங்கியோ அனுப்பி பரிசோதிக்க வேண்டும் என்று சொல்லி, அனுப்பி, எல்லாம் முடிந்து, இன்று பரிசோதனை முடிவுகளைத் தருவதாகச் சொல்லியிருக்கிறார் மருத்துவர்.  பக்கத்துத் தெருவில் இருக்கும் மழலைப் பள்ளியில் வேலை பார்க்கும் மகள் கூடவே இருந்து பார்த்துக் கொள்வது ஆறுதல்.

அவளுக்குத்தான் என்மீது எவ்வளவு பாசம். பாசமா? அல்லது தன் எதிர்காலம் குறித்த பயமா? என்று சரியாகச் சொல்ல முடியவில்லை.  ஆனாலும் அது எனக்குப் பிடித்துதான் இருக்கிறது. இன்று காலை மருத்துவ முடிவுகளை வாங்கிவருவதாகச் சொல்லி, என்னைத் தவிர்த்து, அவள் தனியே கிளம்ப, உள்ளுர ஏதோ உறுத்தத் தொடங்கியது.

மதியம் வேளையில், வாசல் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வரும் மகளின் நடையில் இருந்தது  தளர்ச்சியா?, களைப்பா? என்று தெரியவில்லை.. ஏதும் மோசமான முடிவு வந்திருக்குமோ?  எனக்கு கேன்சர் என்பது உறுதியாகிவிட்டதோ? அவள் முகத்தை வைத்து எதையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

என்னாச்சு? டாக்டர் என்ன சொன்னாரு?

சின்ன கட்டிதானாம்ப்பா, ஆப்பரேஷன் செஞ்சிடலாம்னு சொல்லறாங்க. சென்னையில இருக்கற டாக்டர் அத்தைக்கு ரிப்போர்ட் அனுப்பிக் கேட்டேன்.  அவங்க சென்னைக்கு கூட்டிட்டு வந்திரு, இங்க பெரிய டாக்டர்கள் இருக்குறாங்க. சீக்கிரமே சரியாயிடும்னு சொன்னாங்கப்பா.

பக்கத்துவீட்டு ஷீலா அம்மா, அவங்க வளையலைத் தர்றாங்கலாம். உங்களால எப்ப முடியுமோ அப்பத் திருப்பிக் கொடுங்கன்னு சொல்றாங்க. என்னோட செயினையும் சேர்த்து அடமானம் வச்சா ஒன்னரை லட்சரூபாய் கிடைக்கும்.  கடைசி வீட்டு பாய் அங்கிள் அவரோட பேங்க் டெபாஸிட்டை உடைச்சு ஒரு லட்ச ரூபாய் தர்றேன். முடியும் போது திருப்பிக் கொடுங்கன்னு சொல்லியிருக்காரு. இன்னும் ஒரு லட்ச ரூபாயாவது வேணும். நான் என் கூட வேலை செய்யறவங்ககிட்ட கேட்டிருக்கேன்பா. கிடைச்சிடும். சின்ன ஆபரேஷன் தான் சீக்கிரம் சரியாகிடும்பா என்கிறாள் மகள்.

எனக்கு ஆச்சரியமா இருக்கிறது.  இந்தப் பெண் ஓரிரு நாளில் எப்படி இவ்வளவு பெரியவளாகிவிட்டாள். இவள் மருத்துவமனைக்குச் சென்றதும், பின்னர் திரும்பி கடைசி வீட்டு பாயைச் சந்தித்தது, பக்கத்துவீட்டு ஷீலாவிடம் பேசியது, இவ்வளவும் எப்படி அடுத்தடுத்து நடந்திருக்கும் என்பதை யோசிக்கும் போது வியப்புதான்.

எனக்குக் கேன்சரா?

இல்லல்லைப்பா, ஏதோ சின்ன கட்டிதானாம். ஆபரேஷன் செஞ்சு வெளிய எடுத்திடலாம்னு டாக்டர் சொன்னாருப்பா. ஒரு மாசத்தில சரியாயிடுமாம்.

சகோதரிகள், அக்கம் பக்கத்தார், நெருங்கிய நண்பர்கள், ஒவ்வொருவராக வந்து, நீ கவலைப்படாதப்பா, நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம். ஒன்னும் ஆகாது.  பணம் பத்தி கவலைப் படாதே.  நாங்க பணம் தர்றோம் என்ற போது, வாழ்ந்த காலத்தின் பெருமிதம் வெளிப்பட்டாலும், நீங்க இந்த நிலைமையில இருக்கும் போது கேட்கக் கூடாது ஆனா என்ன செய்யறது? என் நிலைமை அப்படி. கொஞ்சம் பார்த்து அமொண்ட்டை கொஞ்சம் கொஞ்சமா செட்டில் பண்ணீங்கன்னா உதவியா இருக்கும் என்று கண்ணியத்தோடு சொல்லிவிட்டு, அப்போது தான் உள்ளே நுழையும் மகனுக்கும் ஒரு பெரிய வணக்கம் வைத்துவிட்டுப் போகும் கடன் காரர்களைப் பார்க்கும் போது, எலும்புக்கு ஆசைப்பட்டு சட்டிக்குள் தலையை விட்டு மாட்டிக்கொண்ட நாய் நினைவிற்கு வருகிறது.

வழக்கமாக, ஆட்டைத் தூக்கி மாட்டில் போட்டு, மாட்டைத் தூக்கி ஆட்டில் போடும் மனைவி ஏனோ விழி பிதுங்கி, உரலில் தலையை விட்டது போல முடங்கிக் கிடக்கிறாள்.

எல்லாம் அப்பா அம்மா பார்த்துக்குவாங்க. நாமென்ன செய்ய முடியும்?  என்ற கேள்வி, பதிலோடு மகனும் மருமகளும். குடி யிருக்கும்  வீட்டைத் தவிர சொத்து வேறு ஏதுமில்லை.  அதன் மீதான வங்கிக் கடன் போக வெளிக் கடன்காரர்களுக்கு 50பைசா தீர்க்குமளவுக்குத்தான் அதன் மதிப்பு. 

பதினாறாயிரம் ஓய்வூதியம், உடனிருக்கும் மாமனார் அவர் ஒய்வூதியத்திலிருந்து தரும் ஆறாயிரம், மகள் தன் சம்பளத்தில் இருந்து தரும் ஐந்தாயிரம், இதில் வீட்டுக் கடன் பனிரெண்டாயிரம் போக மீதமுள்ள பதினைந்தாயிரத்தில் வட்டியாக எட்டாயிரம். மீதி ஏழாயிரத்தில் மாதமுழுதும் தாட்டியாக வேண்டும். துண்டு விழும் தொகையை அவ்வப்போது சிறு கடனாகத் துவங்கி, ஓரிரு ஆண்டில் அதுவும் ஒரு பெருங்கடனாக மாறி, பின் அதற்கும் வட்டி… இப்படியாகச் செல்லும் நிலையில் எனக்குக் கேன்சரா?

மகனின் வருமானம் முழுவதும் அவன், அவன் மகன் மருத்துவ, படிப்புச் செலவுகளுக்கே சரியாகி விடுகிறது. இந்த நிலையில், எனக்கு வேறு இப்படியாக ஒரு வியாதி.

சென்னைக்கு வந்து, மருத்துவமனையில் சேர்ந்து, பரிசோதனைகளும் முடிந்து, உடல் திண்ணும் நோயும் உறுதிசெய்யப் பட்டுவிட்டது. அறுவைச் சிகிச்சை செய்யவேண்டியதான்.

உடலுக்குள் எப்படியோ புகுந்து கொண்ட அந்தக் கிருமி, உடலின் ஒவ்வொரு பாகமாகத் தின்று, தின்று, பெருக்கத் தொடங்கிவிட்டது. அது பெருக்கப் பெருக்க, உடலின் ஏதோ ஒரு பாகம் தன்னை இழக்கத் தொடங்குகிறதாம்.

சமூகமும் அப்படித்தானே. சமூக அங்கீகாரம், தற்பெருமை, பேராசை, குடி, சூது இப்படி ஏதோ ஒன்று இந்தச் சமூகத்திற்குள் புகுந்து அதன் ஒவ்வொரு பாகமாகத் தின்று தின்று தன்னைப் பெருக்கிக் கொள்கிறது. அது பெருக்கப் பெருக்க, சமூகக்கூறுகளான அன்பும், அறனும், நட்பும், உறவும், தன் பாகங்களையெல்லாம் ஒன்றொன்றாக இழக்கத் தொடங்குகின்றன.

சாவின் மீது ஏன் இவ்வளவு பயம்.  எனக்குப் பிறகு என் குடும்பம் என்ன ஆகும்? என்பது பற்றிய கவலையா? நான் உயிரோடு இருக்கும் வரை இவர்களையெல்லாம் காப்பாற்றிவிட்டேன். இனி என்ன ஆகும்? கணவனோடு வாழாமல் தனியாய் என் நிழலில் இருக்கும் மகள், பொறுப்பற்ற மகன், நோயாளி மனைவி, இவையெல்லாம் தானா என்னை பயமுறுத்துகின்றன.

ஒரு ஓய்வுபெற்ற அரசு ஊழியன். சிறுவயதில் தந்தையை இழந்து, கருணை அடிப்படையில், கடைநிலை ஊழியனாக வேலை பெற்று ஓரளவு நல்ல ஊதியத்தில் ஓய்வு பெற்றவன். ஐந்து சகோதரிகளையும், இரண்டு குழந்தைகளையும் படிக்க வைத்து, திருமணம் செய்து கொடுத்து,  நட்போடும் உறவோடும் வளைய வருபவன். ஓரளவு கடன் இருந்தாலும் சமூகத்தால் மதிக்கப்படுபவன். அங்கீகாரம் பெற்றவன். மரியாதைக் குரியவன். இனி என்னவாகும் இதெல்லாம்? 

எனக்கான பயம் என்பது, புதிதாகச் செல்லப்போகும் இடத்தின் அசவுகரியங்கள் குறித்ததா? உறவுகளை, நட்புகளை, இனிமையை விட்டுச் செல்கிறோம். இனி சந்திக்க முடியாது என்பதான பயமா? அல்லது கட்டிக் காத்த பெருமைகளை சந்ததியினர் தொலைத்து விடுவார்களோ என்ற வறட்டு கவுரவம் சார்ந்த பயமா? யோசிக்க, யோசிக்க முடிவில்லாமல் போகிறது.

குப்தப் பேரரசுக்குப் பிறகு மிகப் பெரிய பேரரசாக விளங்கிய பாமினி விஜய நகரப் பேரரசின் வாரிசுகள், இன்று எங்காவது பிச்சை எடுத்துக் கொண்டோ, குப்பை வழித்துக் கொண்டோ, இருக்கிறார்களோ என்னவோ? தெரியாது. மாவீரன் அலெக்சாண்டரின் பரம்பரையும், அசோகன் பரம்பரையும் என்ன செய்து கொண்டிருக்கின்றனவோ?

20 ஆண்டுகளுக்கு முன்பு, இருந்த பெருங்குடும்பங்கள் இன்று இருக்குமிடம் தெரியாமல் போய்விட்டன. அதே 20 ஆண்டுகளுக்கு முன்பாக விளிம்பு நிலையில் இருந்தவர்கள் இன்று வசதியானவர்களாக, சமூக அங்கீகாரத்துடன் வாழ்கிறார்கள்.

காலம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுக் கொண்டே தான் இருக்கிறது. கலைக்கப்படும் சீட்டுக் கட்டில் முதல் சீட்டு கடைசியாகவும், கடைசி சீட்டு முதலில் வருவதும் இயல்பானதுதானே.

5 லட்சரூபாய் பணத்துடன்,  விரைவாக வரச் சொல்லியிருக்கிறார்கள் மருத்துவர்கள். வீடு வந்து சேர்ந்தாகி விட்டது. மனைவியின் வெறித்த பார்வை ஏனோ கவலையைத் தருகிறது.  மகள் என் கண்களைச் சந்திப்பதை தவிர்ப்பது தெரிகிறது. பள்ளி நேரம் முடிந்தும், எங்கெங்கோ அலைந்து திரிந்து களைப்போடு வீடு திரும்புகிறாள்.  மகனோ நள்ளிரவில் வந்து, உறங்கி, விடியும் முன், வெளியேறி விடுகின்றான்.

உறவினரோ, நண்பர்களோ வரும்போதும் மட்டும், நாங்கள்  எல்லோரும், ஒன்றாய்ச் சேர்ந்து எதிர்கொண்டு அவர்களைச் சமாளிக்கின்றோம். அவர்களின் ஆறுதல் வார்த்தைகளையெல்லாம் ஒன்று குவித்து மூட்டைகளாகாகக் கட்டிக் கொண்டு, அவர்கள் சென்றவுடன், விசிரிய சோழிகளாய்……..மீண்டும் ஆளுக்கொரு மூலையில்…….

எப்போதும் கும்பலாய், விருந்தும் கேலிக்கையையுமாய் இருந்த வீடு இவ்வளவு அமைதியாய் இருப்பது என்னவோ செய்கிறது.  வாசலில் அமர்ந்து தனியாய்க் கத்திக் கொண்டிருக்கும் காக்கை, வருவிருந்துக்கான முன்னறிவிப்போ? இந்த அமைதியை  விடப் பெரிய நரகம் வேறென்ன இருந்துவிடப்போகிறது.

இந்த அறுவை சிகிச்சை என் இறப்பை இன்னும் ஓரிரு ஆண்டுகள் தள்ளிப் போடலாம்.  இதற்காக என் குடும்பம் ஏற்றுக் கொள்ளப் போகும் கூடுதல் கடனுக்காக அந்த ஓரிரு ஆண்டுகளும் கடுமையான மன அழுத்தங்களுக்கு அது உள்ளாக வேண்டியிருக்கும். அது ஏற்படுத்தும் தழும்புகள் மறைய மேலும் சில ஆண்டுகளாகும்.

நாளை சனிக் கிழமை, மறுநாள் ஞாயிறு. யாருக்கும் எந்த தொல்லையும் இருக்காது.  நண்பர்கள், உறவுகள், மன்னிப்புக் கேட்க வேண்டியவர்கள், நன்றி சொல்ல வேண்டியவர்கள், கவனித்தவர்கள், நான் கவனிக்க மறந்தவர்கள், கனிந்தவர்கள், கனிய வைத்தவர்கள், அனைவரையும் வரச் சொல்லி ஒரு விருந்து கொடுக்க வேண்டும்.

யார் யாருக்கு என்னென்ன பிடிக்கும்?  எப்படிக் கேட்பது?