Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Wednesday, March 28, 2012

கீதை எனும் புரட்டு.......







2002ஆம் ஆண்டு வெளியான தமிழரும் கீதையும்ஓர் ஆய்வு எனும் நூல் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் எழுதியதைப் படித்தேன்.இதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பியே இந்தப் பதிவு. தமிழ்க் குலம் பதிப்பாலயம், 33, நரசிம்ம புரம், மயிலை, சென்னை பதிப்பகத்தில் வெளியாகியிருக்கிறது இந்த புத்தகம்.

இந்துக்களின் புனித நூலாக உருவகப் படுத்தப்பட்டு, பொய்யான பிம்பத்தை கட்டமைக்கும் பணியில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கும் இந்து மதவாதிகள் முன் அவர் வைக்கின்ற கேள்விகள்  நியாயமானதா? இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழ் மொழியில் சங்க காலத்திலிருந்து பதிமூன்றாம் நூற்றாண்டுவரைதோன்றிய இலக்கியங்களில் கீதை பற்றிய குறிப்புகளோ, கீதையின் தாக்கமோஇடம்பெறவில்லை என்பது வரலாற்றுப் பூர்வமான உண்மை. இந்தஉண்மையை இலக்கிய ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டுவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்” 

என்று தொடங்கும் ஆசிரியர், தன் கருத்தை உறுதிப் படுத்த தொடர்ந்து பல்வேறு ஆதாரங்களை தருகிறார்.

மகாபாரதப் போர் கி.மு. 3201 முதல் கி.மு.900 வரையுள்ள பல காலகட்டத்தில் நடந்திருக்கலாம் என பல அறிஞர்கள் கூறுகின்றனர்.

மொகஞ்சதாரோவில் கிடைத்த தடயங்களிலிருந்து ஆரியர்கள் முதன் முதலாக பாரதத்தில் கி.மு.2500ல் குடியேறியிருக்க வேண்டுமெனத் தெரிகிறது. புகழ்பெற்ற தஸ்யூக்களை அடக்கி பஞ்சநதத்தை வென்று, கி.மு1500ல் யமுனைக் கரையையடைந்த ஆரியர்கள், கங்கைச் சமவெளியைக் கைப்பற்ற மேலும் பல ஆண்டுகள் ஆயின.  இந்தியா வந்தடைந்த ஆரியர்கள், யமுனை நதிக்கரையை அடைவதற்கிடையில் பல கட்டங்களில் வேதங்கள் எழுதப் பட்டன. அவற்றில் எதிலும் மகாபாரதப் போர் குறித்து எழுதப்படவில்லை.

கி.மு 1500க்கும் 1200க்கும் இடைப்பட்ட காலத்தில் ரிக் வேதம் எழுதப் பட்டிருக்க வேண்டுமென்று செர்மானிய அறிஞர் மாக்ஸ் முல்லர் கருதிகிறார். ஏனைய வேதங்கள் கி.மு.1200க்கும் கி.மு.800க்கும் இடையில் எழுதப்பட்டதாக கருதப் படுகிறது. கி.மு.800முதல் 600வரை பிராமணங்கள் எழுதப்பட்டன. அதற்குப் பின்னரே உபநிடதங்கள் உருவாகின.  இவற்றில் எதிலுமே மகாபாரதப் போர் பற்றிய குறிப்புகள் இல்லை.

இந்தியத் தொல்பொருள் ஆய்வாளர், அறிஞர் முனைவர். சி.சி. சர்க்கார் ,மகாபாரதப் போர் உண்மையான வரலாற்று நிகழ்ச்சி அல்ல” என்று கூறுகிறார். அதற்கு அவர் கீழ் கண்ட காரணங்களை முன் வைக்கிறார்.

1.   வேத சாகித்தியத்தில் எங்குமே பாரதப் போர் பற்றிக் கூறப்படவில்லை.
2.   பவுராணிகர்களுக்குக் கூட மகாபாரதப் போர் எப்போது நடந்தது என்று தெரியவில்லை.

3.   கி.மு.4 ஆம் நூற்றாண்டிற்கு முன்னருள்ள எந்தவோர் இலக்கியத்திலும் மகாபாரதப் போர் பற்றிக் குறிப்பிடப் படவில்லை.

4.   மகாபாரதப் போர் நடந்த குருசேத்திரம் ஒர் போர்க்களமாக வேதங்களில் எங்கும் கூறப்படவில்லை.

மொகஞ்சதாரோ அரப்பாவில் வாழ்ந்த மக்கள் இரும்பை அறிந்திருக்கவில்லை.  கி.மு 3000லோ கி.மு.4000த்திலோ பாதப்போர் நடந்ததாக எடுத்துக் கொண்டால், அவர்கள் இரும்பாலான அயுதங்களை பயன்படுத்தவில்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டிவருமென்று டாக்டர் சங்காலியா சுட்டிக் காட்டுகிறார். கி.மு 6ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் இரும்பாலான ஆயுதங்கள் இந்தியாவில் பயன்படுத்தப் படவில்லையென்றும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

குருசேத்திரத்தில் நடந்த அகழ்வாராய்ச்சிகளிலும் இந்த மகாயுத்தத்தோடு சம்மந்தப்பட்ட எந்தவொன்றும் கிடைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது என்று குறிப்பிடுகின்றார்.

டாக்டர் டி.டி.கோசம்பி எனும் மார்க்சிய அறிஞர் கீதை எழுதப்பட்ட காலம் கி.பி.6ஆம் நூற்றாண்டு என்று நிர்ணயிக்கிறார்.

கீதைக்கு எழுதப்பட்ட விளக்கவுரைகளில் மிகவும் பழமையானது ஆதிசங்கரரின் விளக்கவுரைதான். என கருதப்படுகிறது.  கி.பி.788 முதல் கி.பி  820 வரையில் உள்ள காலத்தில் தான் சங்கரரின் வியாக்கியானம் எழுதப் பட்டிருக்க வேண்டுமென்று கருதப் படுகிறது.

புத்தமதம் வலிமை கொண்டதாக இருந்த போதிலும் மகத ஆட்சிகாலத்தின் இறுதியில் பழைய கட்டுத்திட்டங்கள் தகர்க்கப் பட்டன. அந்த காலத்தில் சமுதாய பரிணாம வளர்ச்சிக் கட்டத்தைக் கருத்தில்கொண்டு பார்க்கும்போது பழையவற்றைப் புதுப்பித்துப் புதிய மதம் உருவாக வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அந்த புதிய மதத்திற்கு வழிகாட்டும் ஒரு வேதம் தேவைப்பட்டது அது தான் கீதையாக உருவகப் படுத்தப் பட்டது.

கி.பி 300முதல் 500 வரையான குப்தர் காலத்தில்தான் ஸ்மிருதி, புராணங்கள், மகாபாரதம், கீதை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த புதிய மதம் பின்னப்பட்டதாக அறிஞர் எஸ்.டி.சர்தேசாய் கருதிகிறார்.

இவ்வாறாக நூல் முழுவதும் அறிஞர்களின் கருத்துக்களை பதிவு செய்துள்ள ஆசிரியர் மேலும் கூறுவதாவது’

மகாபாரதம் ஒரு தொகுப்பு நூல். பல பர்வங்களாகவும், உபபர்வங்களாகவும் அத்தியாயங்களாகவும், அது பிரிக்கப் பட்டுள்ளது.  மகாபாரதத்தில் உள்ள ஆறாவது பர்வம், பீஷ்ம பர்வம். பல உப பர்வங்களாக பிரிக்கப் பட்ட பீஷ்ம பர்வத்தில் மூன்றாவது உப பர்வமே கீதா பர்வம். பீஷ்ம பர்வத்தில் 13 முதல் 42 வரையுள்ள அத்தியாயங்களில் 25 முதல் 42 வரையுள்ள 18 அத்தியமே பகவத்கீதையாகும்.

கி.மு.முதலாம் நூற்றாண்டில் வட இந்தியாவில் வடிவம் பெற்ற வைணவ மதத்தைப் பரப்புவதில் ஈடுபட்டவர்கள் மதப் பிரச்சாரத்திறு எழுதிய நூலே மகாபாரதம். அதற்கும் வரலாற்றுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஜோசப் இடமருகு கருதுகிறார். மேலும் இதுபற்றி அவர் பின்வருமாறு எழுதியிருக்கிறார்.

கிருஷ்ணன், கி.மு.4ஆம் நூற்றாண்டு முதல்தான் வழிபாட்டுக் கடவுளானார் என்பதற்கு சான்றுகள் உள்ளன.  அக்காலத்தில் வாழ்ந்த பாணிணி என்ற இலக்கண அறிஞர் எழுதிய “அஷ்டாத்யாயி” என்ற நூலில் கூறப்பட்ட வஸுதேவ, அர்ஜுனா என்ற பெயர்களிலிருந்துதான், வாஸுதேவர், அர்ச்சுனன் போன்ற பெயர்கள் தோன்றியதாக கூறப்பட்டுள்ளது(3:98). இதிலிருந்து கி.மு. 4ஆம் நூற்றாண்டில் கிருஷ்ணனைப் போன்றே அர்ச்சுனனும் கடவுளாக கருதப் பட்டிருக்கின்றார் என்பது தெளிவாகிறது.

சந்திர குப்த மவுரியரின் அரசவையில் கிரேக்கத் தூதரான மெகஸ்தனிஸ் குறிப்புகளிலிருந்து கி.மு324-300) மதுராவில் ஸவுரசேனர்கள் கிருஷ்ணனை அக்காலத்தில் வழிபட்டு வந்ததாக தெரிகின்றது. ஆனால் வட இந்தியாவின் மற்ற இடங்களில் கிருஷ்ணன் வழிபாடு பரவியிருக்கவில்லை. மதுராவில் ஒரு கோத்திர வர்க்கத்தாரின் தேவன் என்ற நிலை மட்டுமே அன்று கிருஷ்ணனுக்கு இருந்தது. அவ்வாறு இருந்த கிருஷ்ணன் சில நூற்றாண்டுகளில் சர்வ வல்லமை படைத்த கடவுளாக மாறியது எப்படி?

கி.மு 300க்கு முன் தோன்றிய யாதவர்களின் கோத்திர கடவுளான கிருஷ்ணன் வேறு, அவதாரமாக சொல்லப் படுகின்ற கீதையை உபதேசித்தவனாக சொல்லப் படுகின்ற கிருஷ்ணன் வேறு, கோகுலக் கிருஷ்ணன் வேறு. மூன்று கதைகளையும் ஒன்று சேர்த்துத்தான் கிருஷ்ணன் கதை உருவாக்கியிருக்கப் பட்டிருக்க வேண்டும் என்று தானியேல் எச்.எச் இஙகல்ஸ் கூறுகிறார்.

கோர மகரிஷியின் சீடரும் தேவகியின் மைந்தனுமான கிருஷ்ணன் என்ற சன்னியாதி பற்றி சந்தோக்ய உபநிஷத்தில் கூறப்படுகின்றன.  இதில் கூறப்பட்டிருக்கின்ற பல கருத்துக்கள் கீதையிலும் படிந்திருக்கின்றன. தவம், தானம், அகிம்சை, உண்மை பேசுதல் ஆகியவையே இரண்டிலும் உபதேசிக்கப் படுகின்றன.  அதனால், அங்கிரஸின் சீடனான ஒரு கிருஷ்ணனே கீதோபதேசத்தின் மூலத்திற்கு வடிவளித்தவர் என்று டாக்டர் சர்க்கார் கருதுகின்றார்.

இப்படி ஆதாரங்களை அடுக்கிக் கொண்டே போகும் ஆசிரியர் இந்த வரிகள் ஏனோ எனக்கு மிகப் பிடித்தன.

எத்தகைய சூழ்நிலையில் என்ன தேவைக்காக கீதை தோற்றுவிக்கப் பட்டதோ, அத்தகைய தேவைகளோ சூழ்நிலையோ தமிழகத்தில் இல்லாத நிலையில் அதன் தாக்கம் இங்கு படியவில்லை”

பாரதக் கதைகளிள் குறிப்பிடப்பட்டுள்ள பல நிகழ்ச்சிகள் தமிழ் இலக்கியத்தில் ஏராளமாக இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் கீதையைப் பற்றி எந்த இடத்திலும் குறிப்பிடப்படாதது சிந்தனைக்குரிய ஒன்றாகும். இது குறித்து இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பாடல்களை முறையாக தொகுத்து வழங்கியிருக்கின்றார் ஆசிரியர்.

அன்று அமரில் சொற்ற அறம் உரை வீழ் தீக்கழுது என்ற “இன்னிலை” பதினென் கீழ்கணக்கு நூலில் கூட கீதை என்ற சொல் கூறப்படவில்லை.

பாரதப் போரின் கால அளவு, போரில் பங்கேற்ற இருதரப்பினருக்கும் சேரன் சோறளித்த நிகழ்சிகளைக் குறிப்பிடும் சிலம்பு, கீதையை பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை.

பாரதக் கதையின் பல்வேறு நிகழ்சிகளைப் பற்றிப் பாடியுள்ள ஆழ்வார்களின் பாசுரங்களில் கூட, கீதையைப் பற்றிய விளக்கமான குறிப்புகள் இல்லை என்பது வியப்புக்குரிய உண்மையாகும்.

பாரதப் போரில் படை எடுத்தல், சங்கு ஊதுதல், சூரியனைச் சக்கரத்தால் மறைத்து சயத்ரதனைக் கொல்ல உதவுதல், உத்தரையின் கருவைக் காத்தல், பாஞ்சாலியின் கூந்தல் முடிக்க உதவுதல், பாண்டவர்களுக்கு அருளுதல், போன்ற பல நிகழ்ச்சிகளைப் பாடியுள்ள ஆழ்வார்கள் கீதையைப் பாடாமல் விட்டது கேள்விக்குரிய ஒன்று.

மாயன் அன்று ஓதிய வாக்கதனை- திருமழிசை நாண்,71, பார்த்தனுக்கு அன்று அருளி, பாலப் பிராய்த்தே பார்த்தருக்கு அருள் செய்த என்ற வரிகளுக்கு பிற்கால உரையாசிரியர்கள் பகவத் கீதையை அருளியதாக வலிந்து விளக்கந்தருகிறார்கள்.

திருவாய்மொழியினை வைணவர்களுக்கு தெரிவிக்க எழுந்த நூல் “ஆச்சார்ய ஹிருதயம்” கி.பி.13 நூற்றாண்டில் அழகிய மணவாள பெருமாள் நாயனாரால் எழுதப்பட்டது. இவர் தென்கலைப் பிரிவைச் சேர்ந்தவர்.

தமிழ் நூல்களில் தமிழ் மொழி-தமிழ் இனம்-தமிழ்நாடு என்னும் நூலினை எழுதிய முனைவர் ப.கிருஷ்ணன், “ஆச்சாரிய இருதயம்” எழுந்த நோக்கம் குறித்துப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

தென்மொழியை வட மொழிக்குச் சமமாகவும் திருவாய் மொழியைக் கண்ணன் ஓதிய பகத்தீதையைவிட உயர்ந்ததாகவும் நான்காம் வர்ணத்தில் பிறந்த நம்மாழ்வாரை முதல் வர்ணத்துக்குரிய ஆச்சாரியராகவும் காட விழைவது இவர்கள் சார்ந்த தென்கலை பிரிவையொட்டிய சிந்தனையாகவே இருந்திருக்கிறது”

ஆழ்வார்கள் பாசுரங்கள் பக்திமயமான பாசுரங்கள். எனவே கீதையைப் பற்றி விரிவாக கூறப்படாமல் இருக்கலாம் என்று கூறினாலும் கூட, கடைச்சங்க காலத்தில் வாழ்ந்த பெருந்தேவனார் முதல் பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த வில்லிப்புத்தூரார் வரை பாரதம் பாடிய பலரில் எவரும் கீதையைச் சிறப்பித்துச் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தகுந்த உண்மையாகும்.

வில்லிப்புத்தூராரின் பாரதத்தில் வீட்டுமப் பருவத்தில் முதற்போர்ச் சருக்கம் எனும் பாகத்தில் கண்ணன் விசயனது மயக்கத்தைத் தெளிவித்தல் என்னும் தலைப்பில் 8 பாடல்கள் உள்ளன. வியாசரின் பாரதத்தில் 18 சருக்கங்களில் கூறப்பட்டுள்ள பகவத் கீதையின் சாரம் எதுவும் இந்த 8 பாடல்களில் எந்த இடத்திலும் காணப்படவில்லை.

மதுரைக் காஞ்சியில் வரும்,

தொல்லாணை நல்லாசிரியர்
புணர்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின்
நிலந்தரு திருவின் நெடியோன் போல 

என்ற பாடலுக்கு உரையாசிரியர் நச்சினார்க்கினியர் முதன்முதலாக கீதை வரியைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.  நிலந்தரு திருவின் நெடியோன் போல என்பது கீதையருளிய கண்ணனைக் குறிப்பிடுகின்றார்.  ஆனால் தருமபுரம் மடம் சார்ந்த அனைத்துல சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள சங்க இலக்கியங்களில் சமய நோக்கு என்ற நூலில், மதுரைக் காஞ்சி வரிகளுக்கு வலிந்து திருமால் எனப் பொருள் கொண்டதோடு, மட்டுமல்ல கீதையை அருளிச் செய்ததாகக் குறிப்பது கொஞ்சமும் பொருத்தமில்லாதது. என முனைவர் கு. சுந்தரமூர்த்தி தெளிவுபடுத்தியிருக்கின்றார்.

நிலந்தருவின் நெடியோன் என்றது தொல்லாணை நல்லாசிரியர்களாகிய அகத்தியனார், தொல்காப்பியனார் போன்ற அருள் நலஞ்சான்ற அறிஞர் பெருமக்களோடு நெடிதிருந்த பழகிய பாண்டியன் மாகீர்த்தியைக் குறிப்பதன்றி திருமாலைக் குறிப்பதன்று என்று குறிப்பிடுகின்றார்.

இறுதியாக,
கீதையின் தாக்கம் பக்தி இலக்கியங்களில் மட்டுமல்ல, பிற இலக்கியங்களிலும் இல்லை.  வைணவ காவியமான கம்ப ராமாயணத்தில் கூட கீதையைப் பற்றிய குறிப்புகள் இல்லை.

சங்க இலக்கியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், வில்லிப் புத்தூரார் பாரதம், உட்படத் தமிழில் எழுதப் பட்ட பல பாரதங்களிலிலும் கீதையின் குறிப்போ தாக்கமோ இல்லை. ஆனால் இவை அனைத்திலும் குறளின் தாக்கம் காணப்படுகிறது. தமிழர் பண்பாட்டிற்கு எதிரிடையான கருத்துக்கள் கொண்டதும் வேதமரபின் வாரிசுமான கீதையின் தாக்கம் தமிழிலக்கியத்தில் படியாதது வியப்பிற்குரிய ஒன்றல்ல…
என்று முடிகிறது இந்த நூல்…

படிக்கப் படிக்க சுவராசியம் குன்றாமல், கடந்த காலத்தில் நம்மீது திணிக்கப்பட்டிருந்த நம்பிக்கைகளையெல்லாம் சிறிது சிறிதாக கட்டுடைத்து ஒரு மிகப்பெரிய புரட்டை வெளிக் கொண்டுவந்திருக்கின்றார் ஆசிரியர்,

அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.

.

Tuesday, February 07, 2012

அமுதசுரபி






கடந்தவாரத்தில் ஒரு நாள் காலை, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திரு பாலகன் அய்யா அவர்களிடமிருந்து ஒரு அலைபேசி அழைப்பு. திருப்பூர் வருவதாகவும்  சந்திக்க வருமாறும் அழைத்தார்.  நானும், நமது ஈரோடு வலைப்பதிவர்கள் குழுமத் தலைவர் திரு.தாமோதர் சந்துரு, குழுமத்தின் புரவலர், திரு.டிவிஎஸ். விஸ்வம் ஆகியோரும் திருப்பூர் சென்றோம்.  வைர வணிகர், திரு சிபி.பரசுராமன் அவர்களும் எங்களோடு இணைய, கே.ஆர்.ஜி. தங்கும் விடுதியில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரை சந்தித்துப் பேசிக். கொண்டிருந்தோம். 

அங்கே வந்த, திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. கே.பி.கே. செல்வராஜ் எங்களையும், அன்று நடக்கவிருந்த மு.வ. நூற்றாண்டு விழா நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றார். விழா துவங்கும்முன்,  சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த “அமுதசுரபி” ஆசிரியர் திரு. திருப்பூர் கிருட்டிணன் அவர்களோடு பேசிக் கொண்டிருந்தோம்.  மடைதிறந்த வெள்ளமென அவர் பேசிக் கொண்டிருக்க உடனிருந்த அனைவரும் மெய்மறந்து அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தோம்.

மு.வ வில் தொடங்கி, சின்ன குத்தூசி வரை பலரும் அவர் பேச்சினுடே வந்து சென்றார்கள். கடைசியில் அமுத சுரபி பத்திரிக்கையின் சனவரி 2012 மாத இதழ் ஒன்றை என்னிடம் கொடுத்து விட்டு, விழா அரங்கிற்குள் சென்று விட்டார். நானும் அவர் கொடுத்த இதழை வாங்கி என் மடிக் கணிணி பையிலே வைத்தேன். பின் மறந்து போனேன்.

இன்று காலை பையை எடுத்த போது அதிலிருந்த அமுத சுரபி வெளியே வந்து விழுந்தது. அடடா..மறந்து போனோமே என்று நினைத்து, அதைக் கையோடு படிக்கத் துவங்கினேன்.

உண்மையிலேயே பெயருக்கேற்ற இதழ் தான்.  அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரமாக, அமுதசுரபியாகத்தான் இருந்தது. இன்னொன்றையும் சொல்ல வேண்டும். கடந்த 64 ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் இந்த இதழ்களில்  சிலவற்றை பல ஆண்டுகளுக்கு முன் படித்திருக்கிறேன். பிறகு ஏனோ படிப்பது நின்று போய்விட்டது. 

ஓரிரு வாரங்களுக்கு முன்பு  சேலம். கவிஞர். தமிழ்நாடன் அவர்கள் வீட்டில், பல ஆண்டுகளுக்கு முந்தய அமுதசுரபி இதழ்களை அவர் சேர்த்து வைத்திருந்தது நினைவிற்கு வருகிறது.  தமிழில் வெளிவரும் மாத இதழ்களில் சேர்த்து வைத்து, மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றும் வண்ணம் அந்த இதழ் இன்றும் இருப்பது மகிழ்சிக்குரியது. இது போன்ற இதழ்கள் தமிழுக்கும், தமிழருக்கும் அவசியமான ஒன்றாகத் தோன்றுகிறது.

திருப்பூர்.கிருட்டிணன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்து கொண்டிருக்கும் இந்த இதழ், உண்மையிலேயே ஒரு தரமான இலக்கிய இதழ் தான்..

அதில் நான் படித்தவற்றை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.

வழுவழுப்பான முன் அட்டைகளைத் தாண்டியதும் “தமிழறிஞர்கள் கவனத்திற்கு” என்று குறிப்பிடப்பட்டிருந்த ஒரு விளம்பரம் கண்ணில் பட்டது. சரி இது அறிஞர்களுக்குத்தானே, நமக்கல்லவே, என்று அடுத்த பக்கம் திருப்பும் முன் சரி…என்னதான் எழுதியிருக்கிறது என்று பார்ப்போமே என்று படித்தேன். 

திரு. ஐய்ராவதம் மகாதேவன், B-1 நறுமுகை அடுக்ககம், பிருந்தாவன் நகர் விரிவு, ஆதம்பாக்கம், சென்னை-88 

என்ற முகவரியிட்ட விளம்பரம் தொல் பொருள் அதிகாரம் பக்:686.ல் குறிப்பிடப் பட்டிருக்கும்”இருடீர் மணிவிளக்கத் தேழிலார் கோவே………” எனத் தொடங்கும் அவ்வையின் பாடல் “ஏழில் கோவை” என்ற நூலில் இருப்பதாக இரா. இராவகவையங்கார் அவர்கள் குறிப்பிடுவதாகவும் அந்தப் புத்தகம் பற்றிய தகவல் இருந்தால் மேலே குறிப்பிடப்பட்ட முகவரியைத் தொடர்பு கொள்ளவும் . 

ஆகா….பரவாயில்லையே….இது போன்ற விளம்பரங்கள் கூட வருகிறதா? என்று ஆச்சரியமாக இருந்தது. யாருகிட்டயாவது இருந்தாக் கொஞ்சம் கொடுத்துதவுங்கய்யா….

ஆசிரியர் உரையில், சென்னை புத்தகத் திருவிழா குறித்த ஒரு விமர்சனம்   எழுதப் பட்டிருந்தது. அதைவிட சுவராசியமானது அதன் கீழே கொடுக்கப் பட்டிருந்த ஒரு துண்டுப் பட்டி…….

    “அமுத சுரபி- இதழ் அல்ல, இயக்கம்………என்ற வரிகள்

மிகவும் ரசித்தேன்…….

இசையும் நவீன இலக்கியமும்” என்ற தலைப்பில் ஆசிரியர் திரு. திருப்பூர் கிருட்டிணன் அவர்களின் கட்டுரை சிறப்பாக இருந்தது. சங்கீத யோகம் என்ற கே.ரங்க ராசனின் கட்டுரையும் இசை விழா சிறப்புப் பகுதியாக வந்திருக்கிறது. இசைக்கு மொழி அவசியமா? என்ற திரு வ.வே.சு அவர்களின் கட்டுரையும் இதில் ஒன்று  இசை ரசிகர்களுக்கு ஒரு விருந்துதான்.

ஸ்ரீமான்.ஸ்ரீமதி என்ற வார்த்தைகளை முடக்கி, திருவாளர், திருமதி என்ற வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றியவரும், ”அச்சுக்கலை”, ”அச்சும் பதிப்பும்” போன்ற நூல்களை எழுதியவருமான தமிழறிஞர்.மா.சு.சம்பந்தன் காணாமல் போய்விட்டார். எங்கே சென்றார் என்ற எந்த தகவலும் இல்லை என்ற விவரம், மற்றும் அவர் பற்றிய குறிப்புகளோடு ஆதிரை என்பவர் எழுதிய “தமிழறிஞர் மா.சு. சம்பந்தன் எங்கே? என்ற கட்டுரை என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒரு முதுபெறும் தமிழறிஞரைப் பற்றி தெரிந்து கொள்ளவும் உதவியது.

ஓவியர் மணியம் செல்வம், அவர் தந்தையார், ஓவியர் திரு. மணியம், ஓவியர் சந்திரா ஆகியோரின் கல்கி அனுபவங்கள் குறித்துப் பேசியவை பதிவாக்கப் பட்டிருந்தது. ஓவியர் மணியம் மற்றும் ஓவியர் சந்திரா ஆகியோரின் பல்வேறு ஓவியங்களும் அச்சிடப்பட்டிருக்கின்றன. பத்திரப் படுத்த வேண்டிய ஒன்று.

அந்தக் கால மருத்துவர்கள்: என்ற தலைப்பில் மருத்துவர். ஆசந்தா லட்சுமிபதி குறித்து திருமதி.சுதா சேசய்யன் எழுதிய கட்டுரை அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று. இதழ் ஒன்றை வாங்கிப் படித்துப் பாருங்கள்.

 என் சிறுவயதில், மிகவும் பிரபலமானவரும், கோவில்களில் தொடர் சொற்பொழிவாளராகவும் விளங்கிய புலவர். திரு. கீரன் அவர்களின் துணைவியார், திருமதி. செல்லப்பாப்பா கீரன் அவர்கள், நான் சந்தித்த நல்லவர்கள் என்ற பகுதியில், கீ.வா.ஜா வுடனான நட்பு குறித்து எழுதியிருக்கிறார். அருமை….

லா.ச.ரா என்கிற ரசிகரும், லா.ச.ராவின் ரசிகரும் என்ற திரு.லா.ரா.சப்தரிசி அவர்களின் பகிர்வு….. அட……அட….

இலங்கையில் கண்ணகி என்ற திரு.மு.சீனிவாசன் அவர்களின் கட்டுரை மிக அருமை. பல்வேறு புதிய தகவல்கள். ஈழ மண்ணின் இலக்கியவாதிகளைப் பற்றிய அலசலோடு, ஒரு வரலாற்று ஆய்வறிக்கையாகவும் அமைந்திருக்கிறது.  இதைப் படித்த பின் இதைத் தாண்டிச் செல்ல முடியவில்லை.

இதுவரை பாதிப் புத்தகம் தான் படித்திருக்கின்றேன். படித்தவற்றை அசை போடத் துவங்கிவிட்டது என் மனம். தமிழின் ஒரு மிகச் சிறந்த இதழை இத்தனை நாட்கள் வாசிக்காமல் போனதற்காக வருத்தப் படுகின்றேன். இனி தொடர்ந்து படிக்க முடிவு செய்து, ஆயுள் சந்தா அனுப்ப முடிவு செய்துவிட்டேன்.……..

உண்மையில்……அமுதசுரபி-ஒரு இதழ் அல்ல……இயக்கந்தான்…

நம் வீட்டு வரவேற்பறைவரை வந்து, தான் வாரிச்சுருட்டிய குப்பைகளையெல்லாம் கொட்டிவிட்டுச் செல்லும் வணிக ரீதியான தொல்லைக் காட்சிகளோடு வாழ்கிறோம்.  வார, மாத இதழ்கள் மார்தட்டி
படங்களோடு, மட்டமான ரசனைகளை ஊக்குவித்து கல்லா கட்டும் காலச் சூழலில் மொழி-,  கலை, இலக்கியம், கலாச்சாரம் ஆகியவற்றை இழக்காமல் இருக்க இல்லந்தோறும் இருக்க வேண்டிய இதழ் தான்.

சந்தா விவரம்:
உள்நாடு:
ஆண்டு சந்தா: ரூ.300/-..
5 ஆண்டு சந்தா:ரூ.1500/-
ஆயுள் சந்தா: ரூ 5000/-
வெளிநாடு ஆண்டு சந்தா: ரூ2500/-
தொடர்புக்கு:
திரு குமரேசன்
அலைபேசி எண்:98403 62648
தொலைபேசி: 044-26152869,26152556,43538245.

Friday, February 04, 2011

எழவு........எத்தனை பெரியார் வந்தாலும் உங்களைத் திருத்த முடியாதுடா...



போன வாரத்தில ஒருநா, எங்கூரு பெரிய மனுசர் ஒருத்தரு வூட்டுக்கு, போயிருந்தனுங்க. முன் அறையில, நம்மூரு கெவருமெண்டு பஸ்ஸில இருக்கறமாதர ஒரு தாடி வச்ச சாமியாரு, கைல ஏடெல்லாம் வச்சிகிட்டு நிப்பாருங்கல்ல, அதுல கூட “பொறப்பொக்கும் எல்லாவுசுருக்கும்னுஎழுதியிருக்குமுங்கல்ல, அந்த போட்டா மாட்டியிருந்துச்சுங்க.  நான் பார்க்கப் போன பெரிய மனுசரும், அந்த கரைவேட்டி கச்சைக்காரர் தானுங்க.

அவரும், நம்மளை மதிப்பா கூட்டிகிட்டுப் போயி சோத்து மேசையில உக்காரவச்சு, பொங்கலு, பனியாரம், வடை எல்லாம் போட்டு, சாப்பிடச் சொன்னாரு. ஆனா பாருங்க, அவரு ஒரு கிண்ணத்தில கொஞ்சூண்டு கஞ்சியூத்தி, அதை கரண்டியில மொண்டு குடிச்சிகிட்டே சொன்னாரு.. சக்கரை எச்சாப் போச்சுங்க..அதுனால காலைல கோதுமைக் கஞ்சிதானுங்க. எனக்கு ஆகாரம்னார்..

அடக் கொடுமையே...எல்லாப் பலகாரத்தையும் செஞ்சி அடுத்தவனுக்குப் போட்டுப் போட்டு, இவர மோட்டுவளையப் பார்க்க வச்சிட்டானேன்னு வெசனப் பட்டாலும்,  சரி, நமக்கு கெடச்சதுல கவனமா இருப்பமுன்னு இருந்தனுங்க..

பொறவு, பேசிகிட்டே முன்னுக்க வந்து உக்காந்தோம்.  அப்ப, அவரோட மேனசரு வந்து, வேலை வேணும்னு யாரோ வந்திருக்கறதா சொன்னாரு.  நாங்க உக்காந்திருந்த அந்த அறையில, நேர்முகத் தேர்வு நடந்தது. வேலை கேட்டு வந்தவரப் பார்த்தா, ராசா கணக்கா இருந்தாருங்க. (நம்ம லச்சத்து எழுபத்தஞ்சாயிரம் கோடி ராசா இல்லீங்க, நெசமாலுமே ராசாவாட்டம் இருந்தாரு).

நம்ம தொழிலதிபரும், அவரு அறிவுக்கெட்டுன அளவு கேள்வி கேட்டாரு. இதுல இன்னொரு விசியத்தையும் சொல்லோனும்.  நம்மாளு ரொம்ப நாளா இ.கை.பெ.(அதானுங்க கை நாட்டு).  இப்ப கொஞ்ச வருசமாத்தான் எழுதிப் பழகி, காசோலைல கையெழுத்துப் போடற அளவு வளந்திருக்காரு..  அதுலையும், அவரோட பேரில் இருக்கிற  கடேசி எழுத்துல வார கொம்பு, காசோலைக்கு வெளில, மேசைல தான் இருக்கும். 

இவுரே, இத்தனை கேள்வி கேட்டதும் எனக்கு வந்தவரை நெனச்சு ரொம்ப வெசனமாப் போச்சு. வந்தவரும் எல்லாத்துக்கும் பவுசா பதில் சொல்லிகிட்டே இருந்தாரு. 

கடேசியா ஒரு கேள்வி கேட்டாரு பாருங்க...நீங்க என்ன சாதின்னு?

வேலை கேட்டு வந்தவரு தட்டுத் தடுமாறி, பதில் சொல்லத் தயங்கிக் கிட்டே ஏதோ ஒரு சாதிப் பெயரைச் சொன்னாரு.  
 சரி...நான் வேலை காலி இருந்தால் உன்னைய கூப்பிடறேன். இப்போ ஏதும் காலி இல்லை,. 
என்று சொல்லி வந்தவரை அனுப்பிப் போட்டு எங்கிட்ட சொன்னாரு
..
.இந்தப்...........பயலுகளெல்லாம் நமக்கு ஒத்து வரமாட்டானுங்க.........பொழங்கற சாதியா இருந்தாத்தான் பரவாயில்லீங்க”.  ன்னாரு...


அடங்கொன்னியா, பொழங்கக்கூடாத எனம்னு எவண்டா சொன்னான்? அவனும் மனுசந்தானேடா. மாட்டைப் புடிச்சாந்து நடுவூட்ல வச்சி  கெரகப் பிரவேசம் செய்யறீங்க.  நாயைக் குளிப்பாட்டி நடுவூட்ல வச்சி கொஞ்சறீங்க. இப்பத்தாண்டா புரியுது நீயேன் மோட்டுவளையப் பார்த்துகிட்டு சோறு குடிக்கறேன்னு நினைச்சுகிட்டனுங்க..

..இந்தக் கெரகம் புடிச்சவனூட்லயா சோறு தின்னோம்னு ஆயிப்போச்சுங்க...எழவு எத்தனை பெரியார் வந்தாலும் உங்களைத் திருத்த முடியாதுடான்னு நினைச்சுகிட்டு ஓடிவந்து போட்டனுங்க.






Tuesday, September 07, 2010

பீட்டர் பாண்டியன்.............................................


மதுரைப் பகுதியில்   1812-1828 வரை ஆட்சியாளராக இருந்த ஆங்கிலேயர் ரெளஸ் பீட்டர்.  பெரிய குளம், போடி பகுதிகளில் வன விலங்குகளின் தொல்லைகளுக்கு உள்ளான மக்களைக் காப்பாற்றிய பெருமை அவரையே சாரும்.  மதுரை மீனாட்சியம்மன், அழகர் கோவில்களுக்கு பெருமதிப்பிலான தங்க நகைகளை காணிக்கையாக அளித்தவர்.  

இவரின் கொடைத்திறத்தையும், வீரத்தையும் பாராட்டி அக்காலத்தில் நிறைய நாட்டுப்புறப் பாடல்கள் இருந்திருக்கின்றன.  பாண்டிய மன்னனே திரும்ப வந்து ஆள்வதாக மக்கள் கருதி அவரை “பீட்டர் பாண்டியன்” என்றே அழைத்திருந்திருக்கின்றனர்.  “பீட்டர் பாண்டியன் அம்மானை” என்ற நூலும் அக்காலத்தில் பிறந்திருக்கின்றது.  அந்த நூல் இன்று கிடைக்கவில்லை.

அரசாங்க கருவூலத்திலிருந்து பணத்தை எடுத்து ஏழை எளிய மக்களுக்கு வாரி வழங்கிய  அவரை ஆங்கில அரசாங்கம் பதவி நீக்கம் செய்தது. அதைத் தொடர்ந்து அவர் 1828 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.  இவரின் வெண்சலவைக் கல்லறை மதுரை தெற்கு ஆவணி மூல வீதியின் மேற்குப் பகுதியில் உள்ள தேவாலயத்தில் முன் தளத்தில் உள்ளது.

பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களின் அறியப்படாத தமிழகம் ”நூலிலிருந்து........

Monday, February 15, 2010

கண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை - அமைதியாய் ஒரு புரட்சி




என் 9 வயது குழந்தைக்கு இடது கண்ணில் பார்வை குறைபாடு இருப்பது சமீபத்தில் தான் தெரிய வந்தது. வலது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு மற்றொரு கண்ணால் 10 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்கவைத்துப் பார்த்தபோது அவனால் படிக்கமுடியவில்லை. ஆனால் அதே  இடது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு வலது கண்ணால் 20 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்க முடிகிறது.


இரண்டு கண்களாலும் பார்க்கும் போது  இந்த குறைபாடு தெரியவதில்லை.   ஆனால் பள்ளியிலே கரும்பலகையில் எழுதும் வரிகளைப் படிக்கும்போது சிரமப் படுகின்றனர்.  ஆனால் அதை அவர்கள் சொல்வதில்லை.  எல்லோருக்கும் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துவிடுகின்றனர். 


ஈரோட்டில் உள்ள மிகப் பெரிய கண் மருத்துவமணையில் பரிசோதித்த போது, நிரந்தரமாக கண்ணாடி அணியவேண்டும் என்று சொல்லிவிட்டனர்.  கண்ணாடியும் வாங்கி கொடுத்துவிட்டேன்.


அடுத்த சில நாட்களில்,   என்னுடைய பள்ளித் தோழர்.ஒருவரை சந்தித்தேன்.....பள்ளி நாட்களிலேயே பெரிய சோடாபுட்டிக் கண்ணாடி அணிந்திருந்தார். -6 என்ற அளவில் கண் பார்வைக் குறை அவருக்கு இருந்தது.  ஆனால் நான் சந்தித்த அன்று கண் கண்ணாடி அணியாமல், பைக் ஓட்டிவந்ததை பார்த்தவுடன் மிகவும் ஆச்சரியமடைந்தேன்.


என்னப்பா, கண்ணாடி போடாத உன்னை அடையாளமே தெரியவில்லை.......கண்களுக்கான அறுவைசிகிச்சை செய்து கொண்டாயா? அல்லது காண்டாக்ட் லென்ஸ்ஸா? என்று கேட்டேன். 

பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் கண்பார்வை குறைபாடுகளை நீக்க பயிற்சி அளிக்கின்றனர்.  அதில் போய் பயிற்சி பெற்று வந்தேன். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக கண்ணாடி அணிவதில்லை என்றதை கேட்டதும் ஆச்சரியப்பட்டுப் போனேன்.



அவரிடம் மேலும் தகவல்களை வாங்கிக் கொண்டு இளவலை அழைத்துக் கொண்டு பாண்டிச்சேரி  வந்து சேர்ந்தேன். 

பாண்டிச்சேரி, கடற்கரை சாலையின்,  வடக்கு மூலையில், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் இந்த பள்ளி அமைந்திருக்கிறது.




திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் அந்த பள்ளிக்குச் சென்றேன்.  அப்பள்ளிக்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் விடுமுறை. ஞாயிற்றுக் கிழமை வேலை செய்கிறார்கள்.  எனவே மறுநாள் காலை 8 மணிக்கு வரச்சொன்னார்கள்.
இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற  எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை, நாம் விருப்பப்பட்டு கொடுக்கும் நன்கொடையை மட்டும் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவிக்கப் பட்டது.


விடுமுறை தினமாக இருந்த போதும், அங்கிருந்த ஒரு உதவியாளர், எங்கே தங்கியிருக்கிறீர்கள்? என்று கேட்டார். இனிதான், ஏதாவது ஹோட்டலில் அறை எடுக்க வேண்டும் என்றேன்.  அவசியமில்லை, ஆசிரமத்தின் விடுதியில் தங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி ஆசிரம விடுதியின் தொலைபேசி எண்ணை கொடுத்தார்.


அழகான தனியறை.  குளியலறை இணைந்த, இரண்டு படுக்கைகள், கொண்ட அந்த அறைக்கு வாடகை நாள் ஒன்றுக்கு ரூ.70/- மட்டுமே. 


செவ்வாய்கிழமை காலை 8 மணிக்கு அங்கு சென்றேன். ஆரம்ப கட்ட பெயர் பதிவு, பரிசோதனை ஆகியவற்றை முடித்து, பயிற்சி தொடங்கப் பட்டது.  சுமார் 2 மணி நேரம் பயிற்சி அளித்தனர்.


கிட்டப் பார்வை, தூரப்பார்வை, போன்ற அனைத்து கண் குறைபாடுகளுக்கும் பயிற்சி அளிக்கின்றனர்.  நான் சென்ற போது ஹைதராபாத்திலிருந்து ஒரு தம்பதியினர் தங்கள் இரண்டு பெண்குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர்.  8, 4 வயதுடைய அந்த இரண்டு குழந்தைகளும் கண்ணாடி அணிந்திருந்தனர்.  அக் குழந்தைகளின் தந்தையும் கண்ணாடி அணிந்திருந்தார். 


அவரின் நண்பரின் ஆலோசனையின் பேரில் குழந்தைகளை அழைத்துவந்திருப்பதாக சொன்னார்.   நேரம் ஆக ஆக, பல குழந்தைகள், நடுத்தரவயதினர், வயதானவர்கள் என்று சுமார் 30 அல்லது 40 பேர்கள் பயிற்ச்சிக்கு வந்திருந்ததை பார்க்க முடிந்தது. இதில் பல வெளிநாட்டவர்களும் அடக்கம்.


செய்வாய் முதல் ஞாயிறுவரை 6 நாட்கள் இப்பயிற்சியை நடத்துகின்றனர்.  காலை 8 மணிமுதல் 10 மணிவரை, மாலை 3 மணிமுதல் 5 மணிவரை.   நாள் ஒன்றுக்கு 4 மணிநேரம் பயிற்சி கொடுக்கின்றனர்.  முறையான கண் சிமிட்டுதல், தூரத்தில் இருப்பதை படிப்பது, இருட்டு அறையில் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் சிறு எழுத்துக்களை படிப்பது போன்ற பல பயிற்சிகள்.....


ஆச்சரியப் படும் விதமாக, பயிற்சி முடிந்த ஆறாவது நாள் அங்கேயே கண் பரிசோதனை செய்து பார்த்ததில் பார்வையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது.  தொடர்ந்து ஆறுமாதம் பயிற்சியை தொடருங்கள் பின் கண் பரிசோதனை செய்து பாருங்கள்.....கண்ணாடி அணிய வேண்டிய அவசியமே வராது என்று பயிற்சியாளர் சொன்னார்.

கடந்த 40 ஆண்டுகளாக இந்த பள்ளி நடப்பதாகவும், இதுவரை ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்றிருப்பதாகவும் அறிந்து கொண்டேன்.  முன்கூட்டியே பதிவு செய்து கொண்டு செல்வது நல்லது.  மார்ச் முதல் வாரம் முதல் ஜூன் முதல்வாரம் வரையிலான பள்ளிக்கூட விடுமுறை நாட்களில், அதிகமான கூட்டம் வருவதால் அந்த காலகட்டத்தில் செல்ல விரும்புபவர்கள் முன் கூட்டியே பதிவு செய்தால் தான் இடம் கிடைக்கும்.


பயிற்சிகள் முடிந்து வெளியே செல்லும் வாயிலின் மேல்புறத்தில் இருந்த "மதர் மிரா" வின் இந்த வாசகம் பல அர்த்தங்களை எனக்குச் சொன்னது...............
பயிற்சி குறித்த மேலும் விவரங்கள்
SCHOOL FOR PERFECT SIGHT
PONDICHERRY

PHONE: 0413-2233659
EMAIL:  auroeyesight@yahoo.com
               auroeyesight@vsnl.net

Thursday, August 06, 2009

எத்தனை பெரியார் வந்தாலும் இவனுங்களைத் திருத்த முடியாது

பார்ப்பணீயம், ஆதிக்க சமுதாயம், மனு தர்மம், வர்ணாசிரமம், சூத்திரன், சண்டாளன்,ஆரிய மயமாக்கல் என்றெல்லாம் பலரும் பல்வேறு காரணங்களுக்காக பேசி வருகின்றனர். இலக்கிய உலகிலும் இது பல்கி பெருகி வருவதை காணமுடிகிறது. நவீன இலக்கியத்தின் வரைகளாக தலித்தியம், பெண்ணியம், இன்னும் இது போல பல இசங்கள்,இயங்கள் கூட பெரியார் தயவில் ஓடிக்கொண்டிருக்கின்றனர்.
சமீப காலங்களில், பெரியாரை வம்பிற்க்கும் வழித்துணைக்கும் இழுக்காத ஆட்களே இல்லை. கட்சிகளே இல்லை, கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய இந்த “பெரியார் மயமாக்கல்” எதற்காக? என்பது தான் புரியாத புதிர். பலரும் பெரியாரைப்பற்றியும், அவரின் சமூக விழிப்புணர்வு கருத்துக்களைப் பற்றியும் பரவலாக மேடைகளில் பேசுவதை காணமுடிகிறது. திராவிடர்கழக நண்பர்கள் மத்தியில் மட்டுமே பேசப்பட்டு வந்த பெரியாரி(சம்?) இன்று பேசப்படாத மேடைகளே இல்லை, எழுதப்படாத வலைத்தளங்களும் இல்லை,பேசாத இலக்கிய வாதிகளும் இல்லை. மேல் தட்டு சீமாண்கள்(திறனாளர். சீமான் அல்ல) கூட தங்களை சமூக நீதி காப்பாளர்களாக காட்டிக் கொள்ள பெரியாரை துணை கொள்கின்றனர்.
பல தலித் இலக்கிய வாதிகளின் பேச்சு மற்றும் எழுத்துக்களை கவனிக்கும் போது, அவர்கள் இன்னும் பார்ப்பண ஆதிக்க சமுதாயம், சூத்திரன் என்ற வார்தைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். இவர்கள் எந்த பார்ப்பணனிடம் அடிமையாக இருந்தனர் என்று தெரியவில்லை. உயர்ஜாதி இந்துக்களாக தங்களை சித்தரித்து கொள்கிற அல்லது சொல்லித் திரிந்துகொண்டிருக்கிற மதவாதிகளுக்கு எதிரான போராட்டங்களை இவர்கள் முன்னெடுத்துச் செல்வதில்லை.   பிறப்பால் உயர்ந்தவன் என்பதை பார்ப்பணன் சத்திரியனிடமும்,   பார்ப்பணன், சத்திரியன், இருவரும் சேர்ந்து வைசியனிடமும்.   இம்மூவரும் சேர்ந்து சூத்திரனிடமும்  நிலைநிறுத்த முற்படுகின்றனர் என்ற உண்மையை இவர்களால் ஏன் சொல்லமுடியவில்லை? எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் பார்ப்பண வட்டம், தனக்குச் சமமாக இல்லையென்றாலும், சாதகமாக இருக்கின்ற படியால் மற்ற இருவரையும் கூட்டு சேர்ந்து, தன் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வது இங்கே இயல்பாகிவிட்டது. 


பிற்படுத்த பட்டோரின் பாதுகாவலர்களும், தாழ்த்தப்பட்டோரின் நல்வாழ்விற்காக போராடுவதாக கூறிக்கொள்ளும் சமூக நீதி காவலர்கள், யாரை? எதற்காக? எதிர்த்து போராடுகிறோம் என்பது தெரியாமலே போராடுகிறார்களா? அல்லது (மிக) தெரிந்து, நம்மை முட்டாளாக்கி, அவர்களும் பின்னாளில் முட்டாளாகப் போகிறார்களா? என்று தெரியவில்லை.  
ஒரேடியா போரடிக்க கூடாதில்ல…… அதான் ஒரு சின்ன பிளாஷ்பேக் 

மாமல்லன் மகேந்திர பல்லவன் தளபதி பரஞ்சோதி என்பவர் 7ஆம் நூற்றாண்டில், வாதாபியை வென்று, அங்கிருந்த கோட்டை வாயிலில் இருந்த தும்பிக்கையுடன் இருந்த சாமி சிலையை வெற்றிச் சின்னமாக தன் அரசனுக்கு கொடுக்க எடுத்துவந்தது தான், முதன்முதலில் விநாயகர் தமிழ்நாட்டுக்கு வந்த கதை. இதற்கு முன் விநாயகர் வழிபாடு தமிழகத்தில் இல்லை.
ஆற்றங்கரை, ஊரின் நடுவில் இருக்கும் நிழல் தரு ஆல, அரச,வேம்பு மரத்தடிகளில், வீரர்களின், குடும்பத்தலைவர்களின் நடுகல் மட்டுமே இருந்திருக்க வேண்டும். பின்னாளில் மன்னர்களின் நாடுபிடி சண்டையில், பிடிக்கப்பட்ட நாட்டில் தன் மதம், கலாச்சாரத்தை திணிக்கத் தொடங்கினர். சமணத்தை பின்பற்றிய மன்னர்கள் சமண துறவிகள் சிலைகளை நிறுத்தி இருந்தனர். இதற்கு பிறகு வந்த இந்து சமயவாதிகள் சமண சமயத்தை ஒழிக்க முற்பாட்டு, பல இடங்களில் இருந்த சமண மத சின்னங்கள் இந்தப் புள்ளையாரை பதிலியாக்கினர். இதன் பின் தான் ஆத்தங்கரை, அரசமரத்தடிகளில் பிள்ளையார் வழிபாடு துவங்கியது. 


மறுபடியும் விசயத்திற்கு வருவோம்:
ஆதிமனிதன் தான், தன் சுற்றம் என்ற அளவில் வாழும்போது, அவர்களில் வயதில் மூத்தவன் குடும்பத்தலைவனானான். கூட்டம் பெருகிய போது வலிமையானவனும், திறமையானவனும், ஏமாற்றத் தெரிந்தவனும், இனத் தலைவன் ஆனான். பல இனங்களை ஒன்று திரட்டி தனக்கு அடிமையாக்கியவன் சிற்றரசனாகமும், பல சிற்றரசர்களை, ராஜ தந்திரத்தாலும் (வஞ்சகத்தாலும் )அடிமைப்படுத்தியவன் மன்னனானான். பல மன்னர்களை வென்றவன் பேரரசானான். இப்படி போர்களின் மூலம் சண்டையிட்டு, மக்களை அடிமைகளாக்கி, பின் அவர்கள் வாழ்வாதரம் தேடும் போது, அவர்களை காப்பவனாக தன்னைக் காட்டிக் கொண்டு அவர்கள் மீது அதிகாரம் செலுத்துவது காலம் காலமாக நடந்து வரும் நிகழ்வுகள்.
தன் அதிகாரத்தை மேம்படுத்தி, சக மனிதனிடமிருந்து தான் கல்வியில், பட்டறிவில், பணத்தில், பகட்டில், பிறப்பில், வலிமையில், வாதத்தில், கலையில், உயர்வானவன் என்பதை காட்டிக் கொள்வதில் பேராணந்தம் அடைகின்ற ஒரு பழக்கம் நம் அனைவரில் காணமுடிகிறது.
பள்ளிக்குழந்தைகளின் மதிப்பெண் பட்டியல்களும், அதற்காக பெற்றோர்கள் எழுதும் தேர்வுகளும்(?), அதற்கு சாட்சி. தனி மனித வளர்ச்சியையோ, மற்றவர்களிடமிருந்து தான் உயர்வாக இருக்கவேண்டும் என்பதில் அவர்கள் காட்டும் ஆர்வத்தையோ, அதற்காக எடுக்கும் முயற்சிகளையோ நான் குறை வில்லை. மாறாக தனி இவை மற்றவரின் அடிப்படை சுதந்திரத்தையும், காலாச்சாரத்தையும், இயல்புகளையும் பாதிக்கின்றன் என்பதில் தான்
பிரச்சனை.

மேற்கண்ட கட்டுரைக்கும், பின் வரும் என் சுய சரிதையின் ஏதோ ஒரு பக்கத்திற்கும் தொடர்பு இருப்பதாக யாரும் எண்ணக் கூடாது
சிறு குழந்தைகளாக இருந்த போது நம்மால் தொட்டு தடவி, சிறு குடத்தில் நீரிரைத்து குளிப்பாட்டி, தெருவோர காட்டு மலர்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டவனும், நண்பர்களோடு நண்பனாய் பள்ளிவிடுமுறை நாட்களில் நம்மோடு இருந்தவனும் , பிறந்தநாளின் முதல் வாழ்த்துச் சொன்னவனும், தேர்வுக்காலங்களில் நம்பிக்கை விதை ஊன்றியவனும், பட்டணத்து பணக்கார வீட்டுக் குழந்தைகளின் கரடி பொம்மையை போல, நமக்கு உற்றதுணையாய் இருந்தவனும், வேளை வெட்டி இல்லாதோருக்கு போக்கிடமாய் இருந்தவனும், வேலை செய்து கலைத்து வரும் தொழிலாளத் தோழர்களின் மதிய உணவு மேசை வழங்கியவனும், வயது முதிர்ந்த நம் பெரிசுகள் அமர்ந்து ஆட்டோகிராப் எழுத இடம் கொடுத்தவனும், காக்கை, குருவி, போன்ற பறவைகள் எச்சமிட்டாலும், எட்டி நில் என்று சொல்லாமல், எல்லொருக்கும் எல்லாமாய், இருந்த நமது தெரு பிள்ளையாரை காணவில்லை. 

சக மனிதனை விட தான் உயர்ந்தவன், சிறந்தவன், பக்திமான், தருமவான், கோடி புண்ணியம் எனக்கும் என் குடும்பத்திற்கும் வேண்டும். நான் மட்டும் நல்லா இருக்கனும், என்ற நல்ல எண்ணத்தில் ஓரிரு நடிப்பு சுதேசிகள் ஒன்று சேர்ந்து, எங்கள் தெருப் பிள்ளையாருக்கு கோவில் கட்டி, (சொந்த காசிலல்ல, ஊரூ பூரா உண்டி தூக்கிதான்)தங்கத்திலே கவசம் செய்து, இரும்புக் கதவு கொண்டு பூட்டி, அதன் சாவியை, நமக்கு புரியாத மொழியில் நம்மையும் நம் புள்ளையாரையும் திட்டும், அயோக்கியன் கையில் கொடுத்து விட்டு

இவனும் வெளியே நிற்கிறான்….. நானும் வெளியே 
நிற்கிறேன்…….புள்ளையாரு மட்டும் உள்ளையா இருக்கப் போறாரு….

பின்குறிப்பு: அன்புச் சகோதரர் மாதவராஜ் அவர்களின் தீராத பக்கங்களில் வந்த பெரியார் இன்று இருந்திருந்தால்…… கட்டுரையை நான் படிக்கவில்லை என்று உறுதிகூறுகிறேன்.(mathavaraj.blogspot.com)