Tuesday, February 07, 2012

அமுதசுரபி


கடந்தவாரத்தில் ஒரு நாள் காலை, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திரு பாலகன் அய்யா அவர்களிடமிருந்து ஒரு அலைபேசி அழைப்பு. திருப்பூர் வருவதாகவும்  சந்திக்க வருமாறும் அழைத்தார்.  நானும், நமது ஈரோடு வலைப்பதிவர்கள் குழுமத் தலைவர் திரு.தாமோதர் சந்துரு, குழுமத்தின் புரவலர், திரு.டிவிஎஸ். விஸ்வம் ஆகியோரும் திருப்பூர் சென்றோம்.  வைர வணிகர், திரு சிபி.பரசுராமன் அவர்களும் எங்களோடு இணைய, கே.ஆர்.ஜி. தங்கும் விடுதியில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரை சந்தித்துப் பேசிக். கொண்டிருந்தோம். 

அங்கே வந்த, திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. கே.பி.கே. செல்வராஜ் எங்களையும், அன்று நடக்கவிருந்த மு.வ. நூற்றாண்டு விழா நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றார். விழா துவங்கும்முன்,  சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த “அமுதசுரபி” ஆசிரியர் திரு. திருப்பூர் கிருட்டிணன் அவர்களோடு பேசிக் கொண்டிருந்தோம்.  மடைதிறந்த வெள்ளமென அவர் பேசிக் கொண்டிருக்க உடனிருந்த அனைவரும் மெய்மறந்து அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தோம்.

மு.வ வில் தொடங்கி, சின்ன குத்தூசி வரை பலரும் அவர் பேச்சினுடே வந்து சென்றார்கள். கடைசியில் அமுத சுரபி பத்திரிக்கையின் சனவரி 2012 மாத இதழ் ஒன்றை என்னிடம் கொடுத்து விட்டு, விழா அரங்கிற்குள் சென்று விட்டார். நானும் அவர் கொடுத்த இதழை வாங்கி என் மடிக் கணிணி பையிலே வைத்தேன். பின் மறந்து போனேன்.

இன்று காலை பையை எடுத்த போது அதிலிருந்த அமுத சுரபி வெளியே வந்து விழுந்தது. அடடா..மறந்து போனோமே என்று நினைத்து, அதைக் கையோடு படிக்கத் துவங்கினேன்.

உண்மையிலேயே பெயருக்கேற்ற இதழ் தான்.  அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரமாக, அமுதசுரபியாகத்தான் இருந்தது. இன்னொன்றையும் சொல்ல வேண்டும். கடந்த 64 ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் இந்த இதழ்களில்  சிலவற்றை பல ஆண்டுகளுக்கு முன் படித்திருக்கிறேன். பிறகு ஏனோ படிப்பது நின்று போய்விட்டது. 

ஓரிரு வாரங்களுக்கு முன்பு  சேலம். கவிஞர். தமிழ்நாடன் அவர்கள் வீட்டில், பல ஆண்டுகளுக்கு முந்தய அமுதசுரபி இதழ்களை அவர் சேர்த்து வைத்திருந்தது நினைவிற்கு வருகிறது.  தமிழில் வெளிவரும் மாத இதழ்களில் சேர்த்து வைத்து, மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றும் வண்ணம் அந்த இதழ் இன்றும் இருப்பது மகிழ்சிக்குரியது. இது போன்ற இதழ்கள் தமிழுக்கும், தமிழருக்கும் அவசியமான ஒன்றாகத் தோன்றுகிறது.

திருப்பூர்.கிருட்டிணன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்து கொண்டிருக்கும் இந்த இதழ், உண்மையிலேயே ஒரு தரமான இலக்கிய இதழ் தான்..

அதில் நான் படித்தவற்றை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.

வழுவழுப்பான முன் அட்டைகளைத் தாண்டியதும் “தமிழறிஞர்கள் கவனத்திற்கு” என்று குறிப்பிடப்பட்டிருந்த ஒரு விளம்பரம் கண்ணில் பட்டது. சரி இது அறிஞர்களுக்குத்தானே, நமக்கல்லவே, என்று அடுத்த பக்கம் திருப்பும் முன் சரி…என்னதான் எழுதியிருக்கிறது என்று பார்ப்போமே என்று படித்தேன். 

திரு. ஐய்ராவதம் மகாதேவன், B-1 நறுமுகை அடுக்ககம், பிருந்தாவன் நகர் விரிவு, ஆதம்பாக்கம், சென்னை-88 

என்ற முகவரியிட்ட விளம்பரம் தொல் பொருள் அதிகாரம் பக்:686.ல் குறிப்பிடப் பட்டிருக்கும்”இருடீர் மணிவிளக்கத் தேழிலார் கோவே………” எனத் தொடங்கும் அவ்வையின் பாடல் “ஏழில் கோவை” என்ற நூலில் இருப்பதாக இரா. இராவகவையங்கார் அவர்கள் குறிப்பிடுவதாகவும் அந்தப் புத்தகம் பற்றிய தகவல் இருந்தால் மேலே குறிப்பிடப்பட்ட முகவரியைத் தொடர்பு கொள்ளவும் . 

ஆகா….பரவாயில்லையே….இது போன்ற விளம்பரங்கள் கூட வருகிறதா? என்று ஆச்சரியமாக இருந்தது. யாருகிட்டயாவது இருந்தாக் கொஞ்சம் கொடுத்துதவுங்கய்யா….

ஆசிரியர் உரையில், சென்னை புத்தகத் திருவிழா குறித்த ஒரு விமர்சனம்   எழுதப் பட்டிருந்தது. அதைவிட சுவராசியமானது அதன் கீழே கொடுக்கப் பட்டிருந்த ஒரு துண்டுப் பட்டி…….

    “அமுத சுரபி- இதழ் அல்ல, இயக்கம்………என்ற வரிகள்

மிகவும் ரசித்தேன்…….

இசையும் நவீன இலக்கியமும்” என்ற தலைப்பில் ஆசிரியர் திரு. திருப்பூர் கிருட்டிணன் அவர்களின் கட்டுரை சிறப்பாக இருந்தது. சங்கீத யோகம் என்ற கே.ரங்க ராசனின் கட்டுரையும் இசை விழா சிறப்புப் பகுதியாக வந்திருக்கிறது. இசைக்கு மொழி அவசியமா? என்ற திரு வ.வே.சு அவர்களின் கட்டுரையும் இதில் ஒன்று  இசை ரசிகர்களுக்கு ஒரு விருந்துதான்.

ஸ்ரீமான்.ஸ்ரீமதி என்ற வார்த்தைகளை முடக்கி, திருவாளர், திருமதி என்ற வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றியவரும், ”அச்சுக்கலை”, ”அச்சும் பதிப்பும்” போன்ற நூல்களை எழுதியவருமான தமிழறிஞர்.மா.சு.சம்பந்தன் காணாமல் போய்விட்டார். எங்கே சென்றார் என்ற எந்த தகவலும் இல்லை என்ற விவரம், மற்றும் அவர் பற்றிய குறிப்புகளோடு ஆதிரை என்பவர் எழுதிய “தமிழறிஞர் மா.சு. சம்பந்தன் எங்கே? என்ற கட்டுரை என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒரு முதுபெறும் தமிழறிஞரைப் பற்றி தெரிந்து கொள்ளவும் உதவியது.

ஓவியர் மணியம் செல்வம், அவர் தந்தையார், ஓவியர் திரு. மணியம், ஓவியர் சந்திரா ஆகியோரின் கல்கி அனுபவங்கள் குறித்துப் பேசியவை பதிவாக்கப் பட்டிருந்தது. ஓவியர் மணியம் மற்றும் ஓவியர் சந்திரா ஆகியோரின் பல்வேறு ஓவியங்களும் அச்சிடப்பட்டிருக்கின்றன. பத்திரப் படுத்த வேண்டிய ஒன்று.

அந்தக் கால மருத்துவர்கள்: என்ற தலைப்பில் மருத்துவர். ஆசந்தா லட்சுமிபதி குறித்து திருமதி.சுதா சேசய்யன் எழுதிய கட்டுரை அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று. இதழ் ஒன்றை வாங்கிப் படித்துப் பாருங்கள்.

 என் சிறுவயதில், மிகவும் பிரபலமானவரும், கோவில்களில் தொடர் சொற்பொழிவாளராகவும் விளங்கிய புலவர். திரு. கீரன் அவர்களின் துணைவியார், திருமதி. செல்லப்பாப்பா கீரன் அவர்கள், நான் சந்தித்த நல்லவர்கள் என்ற பகுதியில், கீ.வா.ஜா வுடனான நட்பு குறித்து எழுதியிருக்கிறார். அருமை….

லா.ச.ரா என்கிற ரசிகரும், லா.ச.ராவின் ரசிகரும் என்ற திரு.லா.ரா.சப்தரிசி அவர்களின் பகிர்வு….. அட……அட….

இலங்கையில் கண்ணகி என்ற திரு.மு.சீனிவாசன் அவர்களின் கட்டுரை மிக அருமை. பல்வேறு புதிய தகவல்கள். ஈழ மண்ணின் இலக்கியவாதிகளைப் பற்றிய அலசலோடு, ஒரு வரலாற்று ஆய்வறிக்கையாகவும் அமைந்திருக்கிறது.  இதைப் படித்த பின் இதைத் தாண்டிச் செல்ல முடியவில்லை.

இதுவரை பாதிப் புத்தகம் தான் படித்திருக்கின்றேன். படித்தவற்றை அசை போடத் துவங்கிவிட்டது என் மனம். தமிழின் ஒரு மிகச் சிறந்த இதழை இத்தனை நாட்கள் வாசிக்காமல் போனதற்காக வருத்தப் படுகின்றேன். இனி தொடர்ந்து படிக்க முடிவு செய்து, ஆயுள் சந்தா அனுப்ப முடிவு செய்துவிட்டேன்.……..

உண்மையில்……அமுதசுரபி-ஒரு இதழ் அல்ல……இயக்கந்தான்…

நம் வீட்டு வரவேற்பறைவரை வந்து, தான் வாரிச்சுருட்டிய குப்பைகளையெல்லாம் கொட்டிவிட்டுச் செல்லும் வணிக ரீதியான தொல்லைக் காட்சிகளோடு வாழ்கிறோம்.  வார, மாத இதழ்கள் மார்தட்டி
படங்களோடு, மட்டமான ரசனைகளை ஊக்குவித்து கல்லா கட்டும் காலச் சூழலில் மொழி-,  கலை, இலக்கியம், கலாச்சாரம் ஆகியவற்றை இழக்காமல் இருக்க இல்லந்தோறும் இருக்க வேண்டிய இதழ் தான்.

சந்தா விவரம்:
உள்நாடு:
ஆண்டு சந்தா: ரூ.300/-..
5 ஆண்டு சந்தா:ரூ.1500/-
ஆயுள் சந்தா: ரூ 5000/-
வெளிநாடு ஆண்டு சந்தா: ரூ2500/-
தொடர்புக்கு:
திரு குமரேசன்
அலைபேசி எண்:98403 62648
தொலைபேசி: 044-26152869,26152556,43538245.