Thursday, December 29, 2011

நெஞ்சு பொறுக்குதில்லையே...........


 இப்படித்தான் பாருங்க, ஒருநா மாலையில, அலுவலகத்திலிருந்து வூட்டுக்குப் போயிச் சேந்த நேரம், முன்னாடி பட்டாசலையில கோந்திருந்த எளைய மவன் உள்ளுக்க நொழையும்போதே, ஒரே சத்தம். தென்ன சாமி சத்தம்னு? கேட்டா, அவுங்காத்தா, அவங்கேட்ட ஏதோ ஒன்னை வாங்கித் தரலையாம். சரி கண்ணு நா வாங்கித்தாரேன்னு சமாதானப் படுத்திப் போட்டு, பண்ணையக்காரிகிட்டப் போயி, ஏங்கண்ணு, கொழந்தை கேட்டா வாங்கித் தாராணுமல்ல, அவங்கோட என்ன ரவுசு உனக்குன்னு? கேட்டேன்.  கண்ணாமுழி ரெண்டும் வெளியவர மாதர ஒரு மொறை மொறைச்சுப் போட்டு, உள்ளுக்கப் போயிட்டா. 
                                                                    
என்னாடா இது வம்பாப் போச்சு,ஒன்னைச் சமாளிக்கப் போயி, இப்ப ரெண்டைச் சமாளிக்க வேணுமாட்டருக்கேன்னு மலைச்சுப் போயிட்டனுங்க.  சரி என்ன பண்டறது, ரவைக்குச் சோறு வெணுமில்ல, அப்புடியே பின்னாடியே போயி, சமாதானப் படுத்திக் கேட்டா, விளையாட்டுப் பொருள் ஏதோ புதுசா வந்திருக்குதாமா, ஐஞ்சாயன்ரன்ருவா வெலையாம். அவங்கோடப் பள்ளியோடத்தில படிக்கிற எல்லாருகிட்டயும் அது இருக்காம், அதனால அதை வாங்கியே கொடுத்தாகனும்னு அடம்புடிக்கிறான்னு சொன்னா. சரி கண்ணு! ஏதோ கொழந்தை ஆசைப்படறான் வாங்கிக் கொடுத்துப் போடுன்னு நாஞ்சொல்ல, ஆமா, இப்புடியே செல்லங் குடுத்துக்  கெடுத்துப் போடுங்கன்னு என்னையுந் திட்டிப் போட்டுப் போயிட்டா.

நல்ல சோத்துக்கு வழியில்லாத காலத்தில, பள்ளியோடத்துக்கு பசியோட போவானேன்னு எங்கம்மா,  நாலணாவுக்கு குச்சிக் கிழங்க(மரவள்ளிக் கிழங்கு) வாங்கி, இட்டிலி குண்டாவுல  வேவவச்சு, ஆவி பரக்க திங்கக் கொடுத்து பள்ளியோடத்துக்கு அனுப்பிச்சது நாபககத்துக்கு வந்தது. ”கொடிது, கொடிது இளமையில் வருமை”ன்னு எங்க பாட்டியாயா எந்த காலத்திலயோ சொன்னது நெனவுக்கு வந்திச்சு. வெளையாட்டா எல்லாத்தையும் கடந்து வந்தாச்சு. நம்ம குழந்தைகள், அந்த சிரமத்தப் படக்கூடாதுங்கறதுல கவனமா இருக்க வேண்டியிருக்குன்னு நினைச்சுகிட்டுத் தூங்கப் போயிட்டனுங்க.

ஊருக்கு வெளியே  சிறு நூல் நெசவு தொழிற்சாலை நடத்திவார நானு, வெடியறதுக்கு முன்னாடியே அங்கபோறது வழக்கம். நம்மள மாதர சிறு தொழிற்சாலைங்க இருக்கற இடமது. மில்லு வாசக் கதவுக் கிட்ட, ஒரு ஓரத்தில்  ஒரு துணிமூட்டை சாத்தி வச்சிருந்த மாதர இருந்தது. இந்த நைட் வாச்சுமேன் குளுருக்கு இப்புடி போத்திகிட்டு கோந்திருக்கானோன்னு பார்த்தா, ஒரு 10,12 வயசுப் பையன். ஒறையற பனியில  இங்கெங்கடா வந்தாயிவன்னு ஒரே ரோசனை.  யாரப்பா நீ?ன்னு கேட்க, அவன் வாயிலருந்து ஒரு வார்த்தையும் வரலை. கண்ணுல முட்டிகிட்டிருந்த தண்ணி கொட்ட ஆரம்பிச்சுது. வாச்சுமேனைத் தேடுனா, அவன் மில்லுக்குப் பின்னால இருக்கற பாய்லர்கிட்டப் போய், அந்தச் சூட்டோட கதகதப்புல தூங்கிட்டிருந்தான். எழுப்பி டீ வாங்கியாறச் சொல்லி அந்தப் பையனுக்கு கொடுத்துபோட்டு விசாரிச்சா, எந்த மவராசனோ வேலைக்கு சேத்திகறன்னு அந்தப் பையன வரச்சொல்லிபோட்டு, இவங்கதவப் பூட்டிட்டு போயிட்டான். உத்தரப் பிரதேசத்தில இருக்கற கோண்டா மாவட்டத்தில இருந்து தெனக் கூலி 50ரூவாயிக்கு ஆசைப்பட்டு அந்தப் பையன் ரயிலைப்புடிச்சு இங்க இரவு 11 மணிக்கு வந்து சேர்ந்திருக்கிறான். எங்கெங்கயோ சுத்தி வழி கண்டுபுடிச்சு விடியக்காலைல இங்க வந்து சேர்ந்தது தெரியவந்துச்சு. 

விரைவில் இந்தியத் தாய்த் திருநாடு வல்லரசாகும் என்று மேடைக்கு மேடை பேசித்திரியும், அரசியல்வாதிகளை நினைத்தால் கோபமும் வெறுப்பும் கொப்பளிக்கிறது. ஒரு வேளைச் சோற்றுக்கு வழியில்லாம், தினக்கூலி ஐம்பதைத் தேடி ஈராயிரம் மைல் கடந்து வந்து, மொழி தெரியா ஊரில், கடுங்குளிரில் எதிர்கால இந்தியா சுருண்டு படுத்திருக்க, வெட்கப் படவேண்டியவர்களெல்லாம் வீராப்புப் பேசித் திரிவதை என்னவென்று சொல்வது. விடுதலை பெற்று, மக்களாட்சி மலர்ந்ததாக மார்தட்டத் தொடங்கிய இந்த 65 ஆண்டுகளில் இன்னும் குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி ஏட்டளவிளேயே இருப்பது வேதனைக்குரிய ஒன்று. வருமான வரியோடு புதிதாய் கொண்டுவந்த கல்வி வளச்சிக்கான சிறப்பு  வரி (educational cess)என்ற பெயரில் கடந்த பல ஆண்டுகளாக திரட்டப் பட்ட தொகை யாருடை வளர்ச்சிக்கு சென்று சேர்ந்தது என்று தெரியவில்லை.  குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்புச் சட்டம் செயல்படும் விதமும் பாராட்டுக்குரிய ஒன்று. தொழிற்கூடங்களில் குழந்தைத் தொழிலாளிகள் இல்லை என்ற பலகையை எல்லா நிறுவனங்களும் பொருத்தி வைத்திருக்கின்றனவா என்று பார்ப்பதோடு அதன் பணி முடிவடைந்து விடுகிறது.


மேட்டுப் பாளையத்தில இருந்து ஊட்டிக்கு போற வழியில இருக்கற ஒரு உண்டு உறைவிடப் பள்ளியோடத்தில கொண்டுபோயி குழந்தைகளைச் சேர்க்கோணும்னு பண்ணையக்காரி ஒரே ரவுசு. சரின்னுபோட்டு, விண்ணப்பம் வாங்கப்போனா, அந்தப் பள்ளிக்கோட வாசலில 100,200 கார் வருசையா நின்னுகிட்டிருந்தது. நாலாங்கிளாஸ் படிக்கிற ஒரு கொழந்தைக்கு, விண்ணப்பப் படிவம் ஆயரத்து இருநூறு ரூவா. வருசக்கட்டணம் ஒன்னரை லட்சன்ருவா. எங்கபோயி முடியுமோ இதுன்னு வெசனமாப் போச்சு.   போனவருசத் தலைவரு சமச்சீர் கல்வி கொண்டாந்துட்டதுல நட்டப் பட்டதென்னவோ நாமதான். புதுசு புதுசாப் படிப்பு. சி பி எஸ் சிங்கறாங்க, ஐ சி எஸ் சி ங்கறாங்க, ஒன்னும் வெளங்கள. பஞ்சாயத்துபோர்டு பள்ளியோடத்துல படிச்சு, சீமையில(அமெரிக்காவில்) வேலைபார்த்துகிட்டிருக்கற நம்ம மாப்பு நாபகத்துக்கு வந்தாரு. என்னத்தச் சொல்லறது எல்லாம் காசப்புடிச்ச சனியன் செய்யற வேலை.


இந்திய அரசியலமைப்புச் சட்ட நிர்ணய சபை மாநில அரசுகளின் அதிகாரங்கள், மத்திய அரசுகளின் அதிகாரங்கள் என்று பிரித்து வகைப்படுத்தியபோது, பள்ளிக் கல்வியை மாநிலங்களின் அதிகாரங்களுட்படுத்தியது சரிதான என்ற கேள்வி எழுத் தொடங்கியுள்ள நேரத்தில். ஒரே மாநிலத்தில், ஒரே வகுப்பில் படிக்கும் இரு மாணவர்களின் கல்வித்தரம் வேறுவேறாக அமைந்திருப்பது கேலிக்குறியது. இந்த லட்சணத்தில் ” ஒரே இந்தியா” என்று உணர்ச்சி பொங்கும் கூக்குரல்கள் நாடெங்கும். உண்ணும் உணவில், உடுத்தும் உடையில், வாழ்க்கை முறையில் ஏற்றதாழ்வுகள் இருப்பதைக் கூடச் சகித்துக் கொள்ளலாம், ஆனால் வருங்கால இந்தியா எனச் சித்தரிக்கப் படுகின்ற, குழந்தைகளுக்கு அடிப்படை அறிவு கொடுப்பதில் கூட ஏற்றதாழ்வு இருப்பதை சகித்துக் கொள்ள முடியவில்லை.  “வலுத்தவன் வாழ்வான்” என்ற காட்டுமிராண்டித்தனங்கள் தொடர்வது, வளர்ந்த நாகரீகச் சமுதாயத்தின் வெட்கக் கேடுகள். மிகுந்த பொருட்செலவில் நல்ல பள்ளிகளில், நல்ல பாடத்திட்டங்களில் பயிலும் குழந்தைகளோடு போட்டியிட முடியாமற்போகும், பொருளாதரத்தில் பின் தங்கிய பெரும்பாண்மைச் சமுதாயத்தின் இளந்தளிர்கள், எதிர்காலத்தில் கள்ளியாய், முட்செடியாய் மாறிப்போகும் சூழ்நிலை கண்முன்னே தெரிகிறது. அடுத்த தலைமுறைக்கான சமூக விரோதிகளை உருவாக்கும் பணியை அரசாங்கங்கள் தொடங்கிவிட்டதாகவே தோன்றுகிறது.  சமூக ஏற்ற தாழ்வுகள் இவர்களுக்கு அவசியமான ஒன்று. இல்லையென்றால் நலத்திட்டங்கள் என்ற பெயரில் எப்படிக் கொள்ளையடிப்பது?.


எதையோ பேசப்போக, எங்கெங்கயோ போயிடுச்சு நெனப்பு. சரி, விசியத்துக்கு வருவோம். மறுக்கா, ஒரு நா, அந்தப் பையனை தெருவில பார்த்தேன். என்னப்பா? எப்படி இருக்க, என்ன செஞ்சுகிட்டிருக்கன்னு கேட்டேன். பிளாஸ்டர் ஆப் பாரிஸ்னு  ஒரு மாவுப் பொருளு, அதைக் கொழைச்சு, அச்சுல அழுத்தி எடுத்து, வூட்டுள்ளார இருக்கற வரவேற்பரையில சீலிங்ல ஒட்டிகிட்டா அழகா இருக்குமாம். அதைச் செய்யற வேலையாம் அவனுக்கு. நாளொன்னுக்கு சோத்துக்குப் போக 30ரூவா குடுக்கறாங்களாம். இந்தூருல வேலை முடிஞ்சி போச்சு, நாளைக்கு திருப்பூருக்கு போகோணும். அங்கொருத்தரு பெரியவூடு கட்டிகிட்டிருக்காராம், அங்கயே போயித் தங்கி, வேலை செஞ்சி கொடுக்கோணும்முன்னு சொல்லிப் போட்டு அவஞ் சொன்னான், அண்ணா, இந்த மாசம் எங்கம்மா அப்பாவுக்கு, 800ரூவா அனுப்பப் போறேன். அங்க தம்பி தங்கசியோட சோத்துக்குக்கூட நெம்ப சிரமப்பட்டுகிட்டிருக்காங்க. இங்க இருக்கற தபாலாபீஸ்ல குடுத்தா, எங்கூருல இருக்கற அப்பா அம்மாகிட்ட கொண்டுபோயிக் குடுத்துருவாங்களாமா? நெசமாவுமே குடுத்துருவாங்களா?ன்னு கேட்டான்.  என்ன பதில் சொல்றதுன்னே தெரியலை எனக்கு. ஆமான்னு தலையாட்டிட்டு, அவனை பக்கத்துல இழுத்து, என்னோட சேர்த்து இருக்கிக் கிட்டேன்.


அரண்மனை போன்ற வீடுகளும், அலுவலகங்களும் பொழிவோடும், நம்மை அசரவைக்கும் அழகோடும் அமைந்திருந்தாலும், அவற்றை எந்தப் பிஞ்சுக் கரங்கள், ஒரு வேளை உணவுக்கான கனவில் உருவாக்கிக் கொடுத்திருக்கும்  என்று நினக்கும் போது, எல்லாம் மறந்து போய் அருவெறுப்பான எண்ணங்களே எங்கும் தோரணமிட்டுத் தெரிகின்றன.  பழங்கதைளும் புராணங்களும் கட்டமைத்தச் சமூகமும் அதன் விழுமியங்களும் தொடர்வதில், ஒரு நண்மை இருப்பதாகவே தோன்றுகிறது. பத்து வயது கிராமத்துச் சிறுவன் தன் உழைப்பின் மூலம் ஈட்டிய பொருளில், தன் குடும்பத்திற்கு ஒரு சிறுதொகையை, அனுப்பி வைப்பது என்பதே அவற்றின் வெற்றி.  தாய் தந்தையரை தோளிலே சுமந்து சென்று காப்பாற்றிய சிரவணின் கதை, போன்றவற்றைச் சொல்லிச் சொல்லி, சமூகம் தன் கட்டுமானத்தை விடாப்பிடியோடு வலுப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது. இந்தியப் பாரம்பரியம், கலாச்சாரம் என்ற கற்பனைகளைக் கட்டமைத்து, ஏய்த்துப் பிழைப்பதும், தர்மம், நியாயம் என்ற பெயர்களைச் சொல்லி அடுத்தவர் உழைப்பைத் திருடித் திண்பதிலே வெற்றி காண்பதை காணும்போதெல்லாம்,  நெஞ்சு பொறுக்குதில்லையே...............

பத்து வயதுச் சிறுவனுக்கு அடிப்படையான உணவும், உறைவிடமும், கல்வியும் கொடுக்க முடியாமல், போன ஒரு மனிதன், தன்னால் பிறந்தான், தனக்குப் பிறந்தான் என்று பெருமைப்பேசித் திரிவதும், அவனின் உழைப்பில் கிட்டும் சிறு தொகையை ஏற்றுச் செலவழிப்பதும் எந்தச் சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதாகிறது.  இப்படி எத்தனையோ மனிதர்களை விளிம்பு நிலைக்குத் தள்ளி, பச்சிளங் குழந்தைகளைத் தொழிலாளிகளாக்கி, “முப்பதுகோடி சனங்களின் சங்கம், முழுமைக்கும் பொதுவுடமை” என்று பேசித் திரிவதினாலோ, வல்லரசாகி, உலக நாடுகளின் நன்மதிப்பை பெற்றுவிடுவதினாலோ நாம் வளர்ந்த சமூகமாகி விடமாட்டோம்.

பிஞ்சுக்கரங்கள் தொழிற்சாலைகளில் கடுமையாகப் பாடுபடுவதும், புத்தங்கங்கள் ஏந்த வேண்டிய கைகளில், திருப்புளியும், மசியும் படர்ந்திருப்பது வேதனையளிக்கிறது. அந்த மசியும்,கரியும், இந்த தேசத்தின் மீது பூசப்பட்டதாகவே உணர்கிறேன்.

நெஞ்சு பொறுக்குதில்லையே.......


Wednesday, December 14, 2011

நோம்பிக்கு வந்திருங்க......சங்கமம் 2011.

வருசமொருக்கா நடக்கற, எங்கூரு நோம்பிக்கு பூச்சாட்டியாச்சுங்க. மார்கழி மாச,மொத நாயத்தக் கிழமை, 18-11-2011 காலைல, ஈரோட்ல, ரோட்டரி சங்க சி.டி. அரங்கத்தில காலம்பற 10 மணிக்கு கூட்டமுங்க. மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர், ஸ்டாலின் குணசேகரன் ஐயா வாரமுன்னு சொல்லியிருக்கறாருங்க. பொஸ்தக திருவிழாவுலதான் கேட்டனுங்க அவரு பேச்ச, பேச்சுன்னு பேச்சு, அப்புடியொரு பேச்சுங்க. மானம் மெரண்டு மேலருந்து கொட்டற மாதர. பொறவு, ரெண்டு மணிக்கு ”பந்தக் கெடா” விருந்துங்க,சைவ விருந்தும் ஏற்பாடு செஞ்சிருக்குதுங்க. பொழுதோட அவுங்கவுங்க வூட்டுக்கு அவரக்காச் சோத்துக்கு போயிடலாமுன்னு, எங்க பிரசிடண்ட் ஐயா சொல்லிப் போட்டாருங்க.


பெரசிடண்ட் ஐயா,வார ஒரம்பறைக்கு, என்ன என்ன சமைக்கனும், எவ்ளோ சமைக்கனும்னு, திட்டமா வேலை செய்திகிட்டிருகாருங்க. இந்த வருசமும் ”பந்தக் கெடா” போடனும்னு முடிவு செஞ்சு, பண்டாரத்தை வரச்சொல்லி, எல்லாம் ஏற்பாடும் அவரே செய்யறேன்னு சொல்லிப்போட்டாருங்க. கலியாண ஏற்பாடாட்டம் நடந்துகிட்டிருக்குதுங்க.

பெரிய பண்ணை  கதிரு  ஐயா வேற அதச் செய்யோனும், இதச் செய்யோனும்னு, அப்படிச்செய்யோனும், இப்படிச் செய்யோனும்னு, பெரும்பாடு பட்டுகிட்டுறாருங்க. எதைச் செஞ்சாலும், நிறைவாச் செய்யோனும், நெனப்புல நிக்கற மாதரச் செய்யோனும்ங்கறது பெரிய பண்ணையோட  வழக்கம்பாருங்க. என்ன நாஞ் சொல்லறது.

இந்த மணியக்காரங் கார்த்தி வேற கந்தாயத்துக்கு, நோட்டத் தூக்கிட்டே திரியறானுங்க. இந்த தூங்கற மணியக்காரன எழுப்பினா பழைய கந்தாயங் கேப்பான்னு சொன்னது சரியாத்தன் போச்சு. செரி அவருதான் என்னத்த செய்வாரு, இம்புட்டுச் பணத்தையும் வசூல் பண்டி, செலவையும் சரியா செஞ்சு, ஊரு  மருவாதையா காப்பாத்தோனும்மில்லீங்க.வட்டிக் வாங்கிப் போட்டாவது சங்கமத்தை நடத்தியே தீருவேன் ன்னு கங்கணங் கட்டிக்கிட்டு வேலை செஞ்சிகிட்டுருக்காருங்க. 

 புதுசா பொண்ணுப் பாத்து, பரிசம் போட்டு, அம்பா, நாலு வார்த்தை பேசலாம்னு கெடந்த,  பகலுப் பூரா கம்பேனி காரங்க உசுர வாங்குறாங்க, ரவைக்கு, இவனுங்க தொல்லை, போதாக் கொறைக்கு, புதுப் பண்ணையக்காரி வேற, எங்கூட பேசமாட்டீங்கறீங்க, இப்பயே அக்கறை இல்லாம போச்சுங்கறா,ன்னு மொணகிக் கிட்டே அருமைகாரர் பாலாசி, வாரன்னு சொன்னவங்களுக்கு காயிதம் போடறது, வாரவங்களுக்கு தங்க, உங்க, தேவையானதைச் செய்யறது, எப்புடியெல்லாம் கூட்ட நடக்கோணும், என்னென்ன தேவையைன்னு பார்த்துப் பார்த்து செஞ்சிகிட்டிருக்காரு.....

எங்க பெரிய மாப்பிளை, ஜாபர், ஒரம்பறையெல்லாம் சரியான நேரத்துக்கு வாராங்களான்னு உறுதிப் படுத்திகோணும், வந்த ஒரம்பரைய கூட்டியாந்து, தங்க வச்சு, ஊரச் சுத்திக் காமிச்சு, பொறவைக்கு, ஊருக்கு அனுப்பி வைக்கற வரை, ஒத்தையாளா செஞ்சிகிட்டுருக்காருங்க.

எங்க முப்பாட்டன் முண்டாசு, பேருல பாதி வச்சிகிட்டு, அமெரிகாவுல கோந்துகிட்டிருக்க எங்க மாப்ளை வேற, அணுசக்கா வை(அனுஷ்கா) கூப்பிடலாம் மாம்ஸ், ந்னு தொல்லை பண்டிகிட்டிருந்தாரு. எலக்கிய நோம்பிக்கெல்லாம் இதெல்லம் கூடாது மாப்ளே ந்னு சொல்லி சமாளிச்சி வச்சிருக்கிறோம்.  ”எலவட்ட நோம்பி” கொண்டாடும்போது கூப்பிட்டுக்கலாம்னு சொல்லி சமாளிச்சி வச்சிருக்கரனுங்க.  போன வாரம்பூரா, தெனம் ரவைக்குப் போனைப் போட்டு, எனக்கு தேதாவது வேலை கொடுக்கோனும்னு மிரட்டறாரு. 


ஊரு சனமெல்லாம், வருசத்துகொருக்கா ஒருத்தரையொருத்தரு பார்க்கோனும்னு ஆசையாக் கெடக்குறமுங்க...ஆடு மாடுக்கு தண்ணி காட்ற வேலைக்கு ரெண்டு நாளைக்கு ஏற்பாடு செய்துபோட்டு நேரங்காலத்தோட, குடும்பத்தோட, நோம்பிக்கு வந்திருங்க.

                                    இலக்குவன் போலத் தம்பி
                                           இலங்கையன் தம்பி மற்றும்
                                   கலக்கமில் குகனைப் போன்று
                                           கைதரும் தோழர் வாய்த்தால்
                                  மலைக்கனம் தன்னைக் கூட
                                          மடியினில் தூக்கிச் செல்வோம்;
                                 இலக்கணம் போன்ற வாழ்வை
                                           எய்தியே உயர்ந்து வாழ்வோம்.

                                                                                      -கவியரசு கண்ணதாசன்


இந்த வரிகளைப் படித்ததும், இந்த சங்கமத்திற்கான ஏற்பாடுகளும், அதைத் தொடர்ந்து, குழும நண்பர்களின் இடையறாத பணிகளும் கண் முன்னே வந்து செல்கிறது. ஆண்டுக்கொருமுறை, இணைய உறவுகளைச்  சந்திக்க வேண்டும், இணைய உறவுகள், இணைந்த உறவுகளாக  நிலைத்திருக்க வேண்டும் என்ற ஆவலில், இந்தச் சங்கமத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது ஈரோடு தமிழ் வலைப் பதிவர்கள் குழுமம். வாருங்கள் உறவுகளே...ஈரோட்டில் சங்கமிப்போம்.....

அன்புடன்
ஆரூரன்

Tuesday, December 13, 2011

அவள் சமூகம் முன்னேறி விட்டது...........


கருவிழி சிவப்ப, வானக்                                                                                                      
  கார்குழல் விரிந்து நீள,
இருபுற நெற்றி வேர்வை
  இன்ப துன்பங்கள் பேச,
மருவறு இதழிரண்டும்
  மயக்கத்தில் காய்ந்து நிற்க
திருமகள் வாழுகின்றாள்
  சிலைநட மாடல் போலே.

இருபதும் பத்தும் தாண்டி
  இள மகள் பருவம் சென்றும்
ஒரு தனித் துணைவன் இல்லை
  உறக்கமும் உணவும் இல்லை
கருவுயிர்க் கின்றார் மற்றோர்,
  கன்னியாய் இவள் நிற்கின்றாள்.
தெருவிளக் கெரிவ தேபோல்
  சேவைக்கே பிறந்த பாவை.


கல்வியும் இல்லாள், காதல்
  கலவியும் இல்லா ளாக
வல்விதி தனையே எண்ணி
  வடித்த கண்ணீரோ பொன்னி
சொல்வது யார்மேற் குற்றம்?
  தோகையின் அழகைப் பார்த்தும்
இல்லறம் தருவா ரில்லை
  எந் தமிழ் நாட்டின் கண்ணே.

பவுர்ணமி வருதல் கண்டாள்
  பகல் கண்டாள், இரவும் கண்டாள்
அவளுக்கு பருவம் வந்து
  ஆயின பதினேழு ஆண்டு;
கவலைக்கும் வயது அஃதே!
  கலைமகள் சொன்னா ளில்லை
நவமணி முகத்தைப் பார்த்தும்
  நல்லவர் வந்தாரில்லை!

கழுவினாள் உடம்பை நித்தம்,
  கவலையுடன் பொட்டும் வைத்தாள்
தழுவுவான் இல்லை என்றால்
  தண்ணீரில் இன்பம் ஏது
அழுவதும் தனியே பாவி
  அமைவதும் தனியே யானாள்
தொழுவதில் குறைச்சலில்லை
  தொடர்ந்தவள் கோவில் சென்றாள்.

என்ன இக்கொடுமை, பெண்மை
  ஏனிந்தப் பிறப்பை ஏற்றாள்?
முன்னேறிவிட்ட தாமே
  மோகனப் பெண்ச மூகம்!
பின் தங்கும் இனங்கள் மட்டும்
  பிள்ளைகள் பெறலாம்;நாட்டில்
முன்னேறும் சமூகம் என்றால்
  முப்பதில் அழத்தான் வேண்டும்!

இந்தியா உரிமை நாடாம்
  எல்லோர்க்கும் உரிமை உண்டாம்
மந்திரி எவர் வந் தாலும்
  மயங்குவார் ஓட்டுக் காக;
செந்தணல் கொதிக்கும் மண்ணில்
  திருமகள் பிறக்க லாமா?
வந்ததைத் பெறத்தான் வேண்டும்
  வாழிய தலைவர் கூட்டம்.

                                       -  கவியரசு கண்ணதாசன்

Sunday, December 04, 2011

பாவாடை.......

போன மாசத்தில ஒரு நா பாருங்க, எங்கூட்டு தொரசாணியம்மா, கெனாவுல எந்தச் சாமியோ வந்து கோயலுக்கு வான்னு சொல்லி கூப்பிடுச்சுங்களாம். வந்துது வம்பு,நாயத்துக் கிழமையன்னைக்கு கோழி யோப்பிட எழுப்பி, பிளசருல ஏத்தி, கோயக் கோயலாச் சுத்த வச்சிபுட்டா. 

போனயெடத்தில, ஒரு கோய வாசல்ல கோந்திருந்தப்ப, ஐயமாரு ரெண்டு பேரு வந்து பெருமாளுக்கு பாவாடை சாத்தப் போறாங்க, வெரவா உள்ளுக்கு போங்கன்னு சொன்னாங்க.  கூடக் கோந்திருந்த என் சின்ன மவன்  ஏம்பா ! ஆம்பிள்ளைச் சாமிக்கு பாவாடை கட்டறாங்க.. வேட்டி தானே கட்டோணும்னான். நம்ம வாய்தான் சும்மாவே இருக்கறதில்லைல, என்றாகண்ணு செய்யறது, வெள்ளாயிக்குப் போட்ட வேட்டி வந்து சேருலையையோ என்னவோ? அப்பிடின்னேன்.பண்ணையக்காரி மொறைச்ச மொறையில, கோய வெளக்கெல்லாம் எண்ணையில்லாம, பத்த வக்காமயே ’குப்’னு பத்திப் போச்சுங்க.




ரெண்டு நாளைக்கு முன்னால நம்ம நண்பர் நடத்திற பொஸ்தக கடைக்குப் போயி பேசிகிட்டிருந்தனுங்க.  அப்ப ரொம்ப நாளா விக்காம, அழுக்கு புடிச்ச பொஸ்தவங்களை ஒரு ஓரத்தில கொட்டி வச்சு, 50% தள்ளுபடின்னு எழுதியிருந்துதுங்க. தொரத்த முடியாததை, விக்க முடியாதத படியை விட்டு வெளிய தள்ளறதால அதுக்குப் பேர் ”தள்ளுபடி”ன்னு வந்திச்சோ! ந்னு தோனுச்சு.  ”தங்கம் வாங்குனாலும், தவுடு வாங்குனாலும், தள்ளுபடியில்லாம வாங்கிடாதடா! கொசுறு இல்லாம வாங்கின காயும், மசிறு இல்லாம வாங்கின நாயும் வீண்” அப்பிடின்னு சொல்லுவாருங்க ஒரு பெருசு. சரி, என்னதான் இருக்குமுன்னு அதெயெல்லாம் பொரட்ட ஆரம்பிச்சனுங்க....


ஏகப்பட்ட புத்தகங்கள். எல்லாம் மொழி, இனம், சமூகம், சமயம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள்.  பல்வேறு தொகுப்புகள்.ஆராய்ச்சி மாணவர்களுக்குப் பயன் படும் எண்ணற்ற புத்தகங்கள்.  ”கடைதிறந்தேன். கொள்வாரில்லை” என்ற வடலூர் வள்ளல் வாக்கு எனக்குள் தோன்றி மறைந்தது. தள்ளுபடியிலும் விற்க முடியாமல் போனால், ஏதாவது நூலகத்திற்கு நன்கொடையாக கொடுத்து விட்டு, காலியாக இருக்குமிடத்தில் ஏதாவது சமையல், பரிகாரபூசை, சோதிடம் அழகுக் குறிப்புகள் என்று ஏதாவது கொஞ்சத்தை வாங்கி வைத்து நட்டத்தை ஈடு கட்ட வேண்டும் என்று நண்பர் சொன்னபோது உடலெங்கும் கோபமும், ஆத்திரமும்  பொங்கி வழிந்தன.  அதிலிருந்த சில புத்தகங்களை முழு விலை கொடுத்து வாங்கினேன். அதிலிருந்து நான் அவ்வப்போது படிக்கும் புத்தகங்களில் இருந்து சில மறந்து போன, மறைந்து போன பழந்தமிழர் பண்பாடு, நாகரிகம், மொழி,சொல், இலக்கியங்களில் இருந்து எனக்குப் பிடித்த, நான் ரசித்த வற்றை எழுத முயற்சிக்கின்றேன். படிப்பதில் இருக்கும் சுகம் எழுதுவதில் இல்லை என்று வரிகளை முன்னிறுத்தி என் சோம்பல் தனத்தை நியாப்படுத்தி வந்திருக்கின்றேன். ஏனோ இந்த முறை எழுத வேண்டும் என்று தோன்றுவதால்..எழுதத் தொடங்குகிறேன்.......எத்தனை நாளைக்கோ?????????

சரி, நாயத்துக்கு வருவோம். வழக்கம்போல விடியக்கால 4 மணிக்கு எந்திருச்சு கோந்துகிட்டு,  கொண்டாந்த பொஸ்தொகத்துல ஒன்னை எடுத்து வச்சு பொரட்ட ஆரம்பிச்சேன். அதுல கெடச்சது இந்த ”பாவாடை சாற்றுதல்” விளக்கம்.

”யாழ் வல்லோனாகிய நாரத முனிக்குச் சிவபெருமான் உரைத்த ஸ்ரீ ரங்க மகத்துவம் என்னும் புத்தகம் என் பார்வையில் பட்டது.  அது 1878 ஆம் ஆண்டில் அச்சிடப்பட்ட குஜிலிக் கடைப் பதிப்பு. அதை புரட்டினேன். அதில் ரங்கநாதருக்கு என்னென்ன உணவு வகைகளைப் படைத்தார்கள் என்று கூறும் பகுதி கண்ணில் பட்டது.  ”......பொங்கல், சர்க்கரைப் பொங்கல், அக்கார அடிசில்,புளியவரை,எள்ளவரை,மிளகவரை,கடுகவரை,தருவி சாதம் என்று சொல்லப்படுகின்ற முப்பத்திரண்டு பொங்கலும், தோசை, வடை, அப்பம்,எள்ளுருண்டை,அதிரசம்,மனோகரம்,சுகியம்,தேன் குழல், கோதுமை ரொட்டி,யானையடி அப்பம்,முதலான கச்சாய வகைகளும்....துய்ய நெய்,புத்துருக்கு நெய், கற்கண்டு,சீனி,சருக்கரை முதலானதுகளும் சொரிந்து கம கமவென்று பரிமளிக்கும்படியான “திருப்பாவடை”யும் செய்து....”

பேச்சு வழக்கில் “திருப்பாவாடை” என்று சொல்லப்படுகிறது.கல்வெட்டு சாசனங்களிலும் திருப்பாவாடை என்று எழுதப்பட்டதை கண்டிருக்கின்றேன்.ஒரு சாசனத்தில் மட்டும் “திருப்பாவடை” என்று எழுதியிருந்ததையும் கண்டேன்.திருப்பாவாடை சரியா? திருப்பாவடை சரியா என்ற ஐயமும் எனக்கு வந்தது. திருப்பாவடை என்ற சொல்லே சரியானது என்றும் உணர்ந்தேன். ஆனால் பாவடை என்ற பெயர் எப்படி வந்தது என்ற ஆராய்ச்சியில் புகுந்தேன். 

திருப்பாவடை என்பது ஒரு இனிப்பு பண்டம்.அது சர்க்கரைப் பொங்கல் அல்ல,அதைவிட விசேஷமானது.  இது செய்வதற்கு,”பதின்கலம் போனகப் பழய அரிசியும்,இருகலம் மணிப்பருப்பும்,நாலு நிறை சர்க்கரையும்,நூறு தேங்காயும், பத்து பலாப்பழமும் வேண்டியிருந்ததை சிதம்பரக் கோயில் சாசனத்தில் கண்டேன். எனவே, பாவு+அடை=பாவடை.ஓகோ, பாகடையாயிருக்குமோ? பாகு+அடை=பாகடை. சரிதான் பாகடை, என்பது பாவடை என்று திரிந்திருக்கவேண்டும்.பிறகு பாவடை என்பது பாவாடையாயிருக்கும் என்று எனக்குள் முடிவு செய்தேன்.

வெல்லம், சர்க்கரை,கற்கண்டு இவற்றை நெய்யுடன் கலந்து சேர்த்து பாகு காய்ச்சினால் மிக இனிமையாகவும், கமகமவென்று பரிமளிக்கவும் செய்யும்......புத்துருக்கு நெய்யுடன் கற்கண்டுபொடியைக் கலந்து பாகு காய்ச்சி, துய்ய நெய்யுடன் சர்க்கரை கலந்து பாகு காய்ச்சி வைத்துக் கொண்டு, பழைய அரிசியுடன்,மணிப்பருப்பையும் சர்க்கரையும் கலந்து, பலாப்பழத்தை துண்டு துண்டாக நறுக்கிப் போட்டு சர்க்கரைப் பொங்கல் செய்து, முந்திரிப் பருப்பும், திராஷையும் இட்டு நெய் விட்டு கிளறி, இதனுடன் முன்பு காய்ச்சி வைத்த கற்கண்டு பாகையும், சர்க்கரைப் பாகையும் கலந்து கிளறி பாகடை செய்தால் அதற்குப் பாகடை என்று பெயர் சூட்டாமல் வேறு என்ன பெயர் சூட்டுவது????

                        மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் கட்டுரைகள் தொகுதி-2

இதப் படிச்சவொடனே எனக்குள்ளார இருந்த நள மகாராசா ’படக்’னு முழிச்சிகிட்டாரு. சரி நாம இத செஞ்சு பாத்திர வேண்டியதுதான்னு முடிவு கட்டி, சமயக்கட்டுக்குள்ள நுழைஞ்சிட்டேன். டீவி பொட்டில சோறாக்கறத சொல்லித்தாரங்கல்லோ அதாட்டம், எல்லாத்தையும் எடுத்து முன்னாடி வச்சிகிட்டு, பார்த்தா பலாப்பலத்தை காணோம்.  இத எங்கடா போயி வாங்கறதுன்னு ஒரே ரோசனை. அந்த நேரத்தில் பொசுக்குன்னு உள்ளாரவந்த எங்கூட்டம்மிணி, தென்ன பண்டறீங்க...இன்னேரத்தில் எந்திரிச்சு கோந்துகிட்டுன்னா?  இல்லகண்ணு, பொஸ்தகத்துல ஒரு சமயலப் பத்தி படிச்சேன்...அத செஞ்சுபார்க்கலாம்னு வந்தேன். அதச் செய்யறதுக்கு பலாப் பலம் வேணும். அப்படின்னேன். அடக் கூறு கெட்ட மனுசா, விடியகால 5மணிக்கு எந்தூருல பலாப்பழம் விக்குதுன்னு கேட்டு போட்டு, இதெயெல்லாம் தூக்கி ஓரப் போட்டுட்டு, போயி பாலு கரக்கற வழியைப்பாரு, சொசைட்டிக்கு பாலூத்த போகோனும்னு.சொல்லிபுட்டு போயிட்டாளுங்க...


இதாராவது படிச்ச போட்டு, செஞ்சுபாருங்க. நல்லாருந்தா, பொட்டனங்கட்டி கொஞ்ச எங்கூருக்கு அனுப்பியூடுங்க.....நல்லா வரலையா, சரி விடுங்க. வேற பொஸ்தகத்தில ஏதாவது எழுதியிருக்கானு பார்த்து போட்டு, முயற்சிக்கலாமுங்க.....











Friday, February 04, 2011

எழவு........எத்தனை பெரியார் வந்தாலும் உங்களைத் திருத்த முடியாதுடா...



போன வாரத்தில ஒருநா, எங்கூரு பெரிய மனுசர் ஒருத்தரு வூட்டுக்கு, போயிருந்தனுங்க. முன் அறையில, நம்மூரு கெவருமெண்டு பஸ்ஸில இருக்கறமாதர ஒரு தாடி வச்ச சாமியாரு, கைல ஏடெல்லாம் வச்சிகிட்டு நிப்பாருங்கல்ல, அதுல கூட “பொறப்பொக்கும் எல்லாவுசுருக்கும்னுஎழுதியிருக்குமுங்கல்ல, அந்த போட்டா மாட்டியிருந்துச்சுங்க.  நான் பார்க்கப் போன பெரிய மனுசரும், அந்த கரைவேட்டி கச்சைக்காரர் தானுங்க.

அவரும், நம்மளை மதிப்பா கூட்டிகிட்டுப் போயி சோத்து மேசையில உக்காரவச்சு, பொங்கலு, பனியாரம், வடை எல்லாம் போட்டு, சாப்பிடச் சொன்னாரு. ஆனா பாருங்க, அவரு ஒரு கிண்ணத்தில கொஞ்சூண்டு கஞ்சியூத்தி, அதை கரண்டியில மொண்டு குடிச்சிகிட்டே சொன்னாரு.. சக்கரை எச்சாப் போச்சுங்க..அதுனால காலைல கோதுமைக் கஞ்சிதானுங்க. எனக்கு ஆகாரம்னார்..

அடக் கொடுமையே...எல்லாப் பலகாரத்தையும் செஞ்சி அடுத்தவனுக்குப் போட்டுப் போட்டு, இவர மோட்டுவளையப் பார்க்க வச்சிட்டானேன்னு வெசனப் பட்டாலும்,  சரி, நமக்கு கெடச்சதுல கவனமா இருப்பமுன்னு இருந்தனுங்க..

பொறவு, பேசிகிட்டே முன்னுக்க வந்து உக்காந்தோம்.  அப்ப, அவரோட மேனசரு வந்து, வேலை வேணும்னு யாரோ வந்திருக்கறதா சொன்னாரு.  நாங்க உக்காந்திருந்த அந்த அறையில, நேர்முகத் தேர்வு நடந்தது. வேலை கேட்டு வந்தவரப் பார்த்தா, ராசா கணக்கா இருந்தாருங்க. (நம்ம லச்சத்து எழுபத்தஞ்சாயிரம் கோடி ராசா இல்லீங்க, நெசமாலுமே ராசாவாட்டம் இருந்தாரு).

நம்ம தொழிலதிபரும், அவரு அறிவுக்கெட்டுன அளவு கேள்வி கேட்டாரு. இதுல இன்னொரு விசியத்தையும் சொல்லோனும்.  நம்மாளு ரொம்ப நாளா இ.கை.பெ.(அதானுங்க கை நாட்டு).  இப்ப கொஞ்ச வருசமாத்தான் எழுதிப் பழகி, காசோலைல கையெழுத்துப் போடற அளவு வளந்திருக்காரு..  அதுலையும், அவரோட பேரில் இருக்கிற  கடேசி எழுத்துல வார கொம்பு, காசோலைக்கு வெளில, மேசைல தான் இருக்கும். 

இவுரே, இத்தனை கேள்வி கேட்டதும் எனக்கு வந்தவரை நெனச்சு ரொம்ப வெசனமாப் போச்சு. வந்தவரும் எல்லாத்துக்கும் பவுசா பதில் சொல்லிகிட்டே இருந்தாரு. 

கடேசியா ஒரு கேள்வி கேட்டாரு பாருங்க...நீங்க என்ன சாதின்னு?

வேலை கேட்டு வந்தவரு தட்டுத் தடுமாறி, பதில் சொல்லத் தயங்கிக் கிட்டே ஏதோ ஒரு சாதிப் பெயரைச் சொன்னாரு.  
 சரி...நான் வேலை காலி இருந்தால் உன்னைய கூப்பிடறேன். இப்போ ஏதும் காலி இல்லை,. 
என்று சொல்லி வந்தவரை அனுப்பிப் போட்டு எங்கிட்ட சொன்னாரு
..
.இந்தப்...........பயலுகளெல்லாம் நமக்கு ஒத்து வரமாட்டானுங்க.........பொழங்கற சாதியா இருந்தாத்தான் பரவாயில்லீங்க”.  ன்னாரு...


அடங்கொன்னியா, பொழங்கக்கூடாத எனம்னு எவண்டா சொன்னான்? அவனும் மனுசந்தானேடா. மாட்டைப் புடிச்சாந்து நடுவூட்ல வச்சி  கெரகப் பிரவேசம் செய்யறீங்க.  நாயைக் குளிப்பாட்டி நடுவூட்ல வச்சி கொஞ்சறீங்க. இப்பத்தாண்டா புரியுது நீயேன் மோட்டுவளையப் பார்த்துகிட்டு சோறு குடிக்கறேன்னு நினைச்சுகிட்டனுங்க..

..இந்தக் கெரகம் புடிச்சவனூட்லயா சோறு தின்னோம்னு ஆயிப்போச்சுங்க...எழவு எத்தனை பெரியார் வந்தாலும் உங்களைத் திருத்த முடியாதுடான்னு நினைச்சுகிட்டு ஓடிவந்து போட்டனுங்க.






Wednesday, January 26, 2011

குற்றமென்ன செய்தேன் கொற்றவளே…..குற்றமென்ன செய்தேன்?..








நான் யாருக்கு என்ன தீங்கிழைத்தேன். என்னால் பாதிக்கப்பட்டவர்கள் யார்?  மத்தியின் முன் மாநிலமாக அல்ல, வெளியே திராவிடம் பேசி, உள்ளே தேசியம் காக்கும் லட்சக் கணக்கான திருடர்கள் முன்னனி கட்சியின் பிரஜைகளில் ஒருவனாக கேட்கின்றேன்.  எதிர்த்து வாக்களித்தேனா? நீங்கள் வரும்போது வரவேற்பு ந்டாத்தி பாதபூசை செய்யாமல் இருந்தேனா? கொள்ளையடித்ததில் பங்கு கொடுக்காமலிருந்தேனா? என்ன குற்றம் செய்தேன் கொற்றவனே..என்ன குற்றம் செய்தேன்? ...................

 கூற மாட்டீர்களா? நீங்கள் கூற வேண்டாம்......................

இதோ அறங்கூறும் அமைச்சர் செகத் ரட்சகன் இருக்கின்றார், மறவர் குடிப்பிறந்த மாணிக்கம் கோழைமணி இருக்கின்றார், டை” மண்டும் கூட இருக்கின்றார்.  கொள்ளையடித்துக் கொள்ளையடித்து, கோமான்களாகிய மக்கள் பிரதிநிதிகள் இருக்கின்றார்கள்.  கோமணம் உருவப்பட்டதுகூடத் தெரியாமல், வேடிக்கை பார்க்கும் தன்மானத் தமிழர் கூட்டம் இருக்கின்றது..அவர்கள் கூறட்டும்.....என்ன குற்றம் செய்தேன்??

 நான் எழுதாத இலக்கியமா? இத்தனை ஆண்டுகாலமாக,தமிழ் திரைப்படத்துறைக்கு நான் செய்தது கொஞ்சமா? நஞ்சமா?  சுத்தியின் சத்தம்” என்ற அந்த ஒரு காவியத்திற்கே குறைந்தது 10 ஆஸ்கார் விருதுகள் வழங்கப் பட்டிருக்க வேண்டும்....பார்ப்பண சூழ்ச்சியின் விளைவாக எனக்கு அது கிடைக்காமல் போனதை உலகம் அறியும்.

 வாழும் வள்ளுவர்ன்று என் மக்களால் கொண்டாடப்படுவதை அறிந்தும், மாநிலத்தின் நலனை கருத்தில் கொள்ளாமல், ஏதேச்சதிகாரத்தோடு நடந்து கொள்ளுவதாகவே நான் கருதுகின்றேன்.  இந்த மாற்றாந்தாய்ப் போக்கை மத்திய அரசாங்கம் கைவிட வேண்டும்... அறிஞர்அண்ணா அன்றே சொன்னார்....
 தம்பி...கக்கக்க....காகக்க்க......காக்கா கக்கா கா.
 
ஆடையிழந்து, அம்மணமாய்த் திரிந்த தமிழன்னைக்கு, லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் செலவு செய்து, செம்மொழியாடை கட்டியவன் நான் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது....
ஈழத்தில் போர்நிறுத்தம் இல்லையென்றால், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் என்று சொல்லி காலையுணவுக்குப் பின் தொடங்கி மதிய உணவுக்குள் போராட்டத்தை கை விட்ட கதை உலகறியும். பாலுக்கும் காவலாய், பூனைக்கும் தோழனாய் நடித்து என் ராஜ விசுவாசத்தை அவ்வப்போது வெளிக்காட்டிக் கொண்டுதான் இருக்கின்றேன். 

சமீபத்தில் கூட உங்கள் ஆட்சிக்கு ஆபத்து வந்தபோது உடுக்கை இழந்தவன் கை போலே....அங்கே வந்து தம்பி ராசாவைப் பலி கொடுத்து உங்க அரசினை காப்பாற்றினோம் என்பதை நினைவூட்டக் கடமைப் பட்டிருக்கின்றேன்.
 
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்...ஆனால், தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும் சொல்லித்தந்த பாடம் நினைவில் இருப்பதால் இத்தோடு விட்டு விடுவோம்...

 அடுத்த குடி அரசு தினத்திற்கு நான் இருப்பேனோ இல்லையோ தெரியாது...உங்களின் அடிவருடியாக, அடிமையாக இத்தனை நாள் காலத்தை ஓட்டிவிட்ட எனக்கு..பதவிகளின் மீது பெரிய ஆசை கிடையாது.  காலம் முழுவதும் மக்களின் கண்ணீரைத் துடிக்கும் கைக் குட்டையாகவே வாழ விரும்புகின்றேன்.  ஆனாலும், கட்சி கண்மணிகள் நேற்றிரவு இருந்தே, கொதித்துப் போயிருப்பதாலும், ஆரியர்களின் சூழ்ச்சி என்று தமிழினம் பொங்கியெழாமல் இருக்கவேண்டுமே என்ற கவலையினாலும்  இதை எழுதுகிறேன்.....

கமல பூட்டன், கமல விபூட்டன் இல்லையென்றாலும் பரவாயில்லை.....குறைந்த பட்சம் கமலத்திரு (பத்ம பூஷன், பத்ம விபூஷன், பத்மஸ்ரீ......நாங்க கிரந்தம் பயன்படுத்தம் மாட்டமில்ல..அதான் தமிழ படுத்தி எடுத்து விட்டோம்) பட்டமாவது அளித்திருப்பீர்கள் என்று எதிர்பார்த்திருந்தோம்... ஆனால் மீண்டும் பெரிய அண்ணன் தோரணையில் நடந்து கொண்டீர்கள்.  சரி அண்ணா சொன்னது போல.......தம்பி...மறப்போம்....மன்னிப்போம்....

இனியாவது உடனடியாக, அடுத்த மாத இறுதியில் ஒரு நல்ல நாளில் மீண்டும் குடி அரசு தின விழா நடத்தி, எனக்கு ஏதாவது ஒரு பட்டம் கொடுத்து, பெருமையடைந்து கொள்வதோடு மட்டுமன்றி,  இந்நிகழ்வு வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் எதிர்கால சந்ததிகளுக்கு நேரு குடும்பத்தின் பெருமைகளை பறைசாற்ற ஒரு வாய்ப்பாக அமைவது நிச்சயம்..


Wednesday, January 19, 2011

தமிழ் மணத்தை ஏன் குறை சொல்ல வேண்டும்?



தமிழ் மணம் விருது-2010ல் இறுதிக்கட்டத் தேர்வில் பதிவர்களை நடுவர்களாக நியமித்தது குறித்து வரும் விமர்சனங்கள் ஏற்புடையதாகத் தெரியவில்லை. தாங்கள் எப்படி பணியாற்றினோம் என்பது குறித்து நடுவர்களாக இருந்த பதிவர்கள் (கோவி, ஜோதிஜி) மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர். குறிப்பிட்ட பிரிவுகளில் போட்டியிடாத பதிவர்களிடம் வேறு இரண்டு பிரிவுகளில் தேர்வான இடுகைகளை அளித்து மதிப்பெண் பெற்று, அதே போல் இன்னொரு பதிவரிடமும் மதிப்பெண் பெற்று, அவைகளைத் துணைக்கு வைத்து தேர்வுக் குழு தேர்வு செய்ததாகவே என் புரிதல் உள்ளது.
  
அடுத்து, பதிவர்களின் இடுகைகளுக்கு வேறு எழுத்தாளர்களையோ, வலைப்பதிவு தொடர்பு அல்லாதவர்களையோ நடுவர்களாக நியமித்திருந்தாலும் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் எழத்தான் செய்யும். வலைப் பதிவு எழுத்திற்கும், மற்ற எழுத்தாளர்களின் எழுத்திற்கும் நிரம்ப வித்தியாசங்கள் இருக்கும் பட்சத்தில், வலைப் பதிவு எழுத்துக்களை ஆய்வு செய்ய, எடை போட வலைப்பதிவு எழுத்து மனோபாவம் கொண்ட பதிவர்களே சரியான தீர்வாக இருப்பார்கள்.

நடுவர்களாக இருந்த பதிவர்களின் மேல் இருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பையொட்டியே,இந்த விமர்சனங்கள் வந்திருப்பதையும் காண முடிகிறது.வலைப்பூ என்றால் என்னவென்றே தெரியாத ஆளை நடுவராக நியமித்து, அவர் யாரென்று தெரிய வந்தால் அவரின் சாதியோ, இனமோ, அரசியல் பார்வையோ அல்லது அவர் கொண்டிருக்கும் கொள்கையோ, யாரோ ஒரு பதிவருக்கு பிடிக்காததாகப் போனால், அங்கேயும் இதே குரல் கூடவோ, குறையவோ ஒலிக்கத்தானே செய்யும்.

குறையோ, விமர்சனமோ வைக்கும் முன்பாக, எதனடிப்படையில் வைக்கிறோம் என்பது முக்கியம். இறுதிக்கட்டத் தேர்வில் இருந்த நடுவர்கள் மேல் கொண்டிருக்கும் பார்வையின் விளைவே, இந்த விமர்சனங்களுக்கு அடிப்படையாக இருப்பதாகவே நம்புகிறேன்.

உண்மையை சொல்லவேண்டுமெனில் பல காரணங்களை முன்னிருத்தி சில பதிவர்கள் மேல் எனக்கும் மாறுபட்ட கருத்து இருந்தாலும், அவர்கள் இடுகை அழுத்தமான, ஆழமான பார்வையோடு, ஏற்றுக் கொள்ளும் வகையில், மனதிற்கு திருப்தியாக இருக்கும் போது அதற்கு வாக்களித்தும் இருக்கிறேன். 
  
இது வரை தமிழ்மணம் குறிப்பிட்ட ஒரு சார்பு நிலை எடுத்ததாக வலையுலகத்திற்கு வந்த மூன்று ஆண்டுகளில் ஒருபோதும் நான் உணர்ந்ததில்லை. மேலும் இதுவரை எதுகுறித்தாவது கேட்கும் போது தமிழ்மண நிர்வாகிகள் விளக்கமாக, வெளிப்படையாகவே பதிலும்  அளித்துவருகின்றனர். பதிவர்களை ஊக்குவிக்கும் எண்ணத்தோடு மூன்றாவது ஆண்டாக போட்டியை நடத்தி வரும் தமிழ் மணம், நடுவர்களை நியமித்ததை ஆதரிப்பது நமது கடமை. இந்தப் போட்டியின் வெற்றியே மற்ற திரட்டிகளையும் இது போல் நடத்த ஊக்குவிக்கும், அதன் பொருட்டு இன்னும் பதிவர்களுக்கும் சில ஊக்கம் கிடைக்கும் என்பதையும் மறவாமல் இருப்பது அவசியம்.


பொதுவாகவே, ஒரு போட்டியை நடத்தும் அமைப்பிற்கு வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கும்  அதிகாரம் இருக்கின்றது என்ற அடிப்படையை உணராமல் பேசுவதும் எழுதுவதும் முட்டாள்தனமானது.

எந்த ஒரு அமைப்பின் மீதி நமக்கு நம்பிக்கையில்லையோ , அந்த அமைப்பின் சட்ட திட்டங்களை ஏற்றுக்கொண்டு இணைந்து செயல்படுவதாக கூறிக் கொண்டு, ஓட்டுப் பட்டிகளை  இணைத்துக் கொள்வதும் மறுபுறம், அந்த அமைப்பை விமர்சிப்பதுமான  இரட்டை முகம் நமக்கு வேண்டாமே.

ச்சீச்சீ இந்த பழம் புளிக்கும் என்னும் விதமான செயல்பாடுகள் சில குள்ள நரிகளுக்கு வேண்டுமானால் ஏற்புடையதாக இருக்கலாம்.
பதிவுலக நண்பர்களே, நமக்கு இது தேவையில்லை.