Wednesday, January 26, 2011

குற்றமென்ன செய்தேன் கொற்றவளே…..குற்றமென்ன செய்தேன்?..








நான் யாருக்கு என்ன தீங்கிழைத்தேன். என்னால் பாதிக்கப்பட்டவர்கள் யார்?  மத்தியின் முன் மாநிலமாக அல்ல, வெளியே திராவிடம் பேசி, உள்ளே தேசியம் காக்கும் லட்சக் கணக்கான திருடர்கள் முன்னனி கட்சியின் பிரஜைகளில் ஒருவனாக கேட்கின்றேன்.  எதிர்த்து வாக்களித்தேனா? நீங்கள் வரும்போது வரவேற்பு ந்டாத்தி பாதபூசை செய்யாமல் இருந்தேனா? கொள்ளையடித்ததில் பங்கு கொடுக்காமலிருந்தேனா? என்ன குற்றம் செய்தேன் கொற்றவனே..என்ன குற்றம் செய்தேன்? ...................

 கூற மாட்டீர்களா? நீங்கள் கூற வேண்டாம்......................

இதோ அறங்கூறும் அமைச்சர் செகத் ரட்சகன் இருக்கின்றார், மறவர் குடிப்பிறந்த மாணிக்கம் கோழைமணி இருக்கின்றார், டை” மண்டும் கூட இருக்கின்றார்.  கொள்ளையடித்துக் கொள்ளையடித்து, கோமான்களாகிய மக்கள் பிரதிநிதிகள் இருக்கின்றார்கள்.  கோமணம் உருவப்பட்டதுகூடத் தெரியாமல், வேடிக்கை பார்க்கும் தன்மானத் தமிழர் கூட்டம் இருக்கின்றது..அவர்கள் கூறட்டும்.....என்ன குற்றம் செய்தேன்??

 நான் எழுதாத இலக்கியமா? இத்தனை ஆண்டுகாலமாக,தமிழ் திரைப்படத்துறைக்கு நான் செய்தது கொஞ்சமா? நஞ்சமா?  சுத்தியின் சத்தம்” என்ற அந்த ஒரு காவியத்திற்கே குறைந்தது 10 ஆஸ்கார் விருதுகள் வழங்கப் பட்டிருக்க வேண்டும்....பார்ப்பண சூழ்ச்சியின் விளைவாக எனக்கு அது கிடைக்காமல் போனதை உலகம் அறியும்.

 வாழும் வள்ளுவர்ன்று என் மக்களால் கொண்டாடப்படுவதை அறிந்தும், மாநிலத்தின் நலனை கருத்தில் கொள்ளாமல், ஏதேச்சதிகாரத்தோடு நடந்து கொள்ளுவதாகவே நான் கருதுகின்றேன்.  இந்த மாற்றாந்தாய்ப் போக்கை மத்திய அரசாங்கம் கைவிட வேண்டும்... அறிஞர்அண்ணா அன்றே சொன்னார்....
 தம்பி...கக்கக்க....காகக்க்க......காக்கா கக்கா கா.
 
ஆடையிழந்து, அம்மணமாய்த் திரிந்த தமிழன்னைக்கு, லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் செலவு செய்து, செம்மொழியாடை கட்டியவன் நான் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது....
ஈழத்தில் போர்நிறுத்தம் இல்லையென்றால், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் என்று சொல்லி காலையுணவுக்குப் பின் தொடங்கி மதிய உணவுக்குள் போராட்டத்தை கை விட்ட கதை உலகறியும். பாலுக்கும் காவலாய், பூனைக்கும் தோழனாய் நடித்து என் ராஜ விசுவாசத்தை அவ்வப்போது வெளிக்காட்டிக் கொண்டுதான் இருக்கின்றேன். 

சமீபத்தில் கூட உங்கள் ஆட்சிக்கு ஆபத்து வந்தபோது உடுக்கை இழந்தவன் கை போலே....அங்கே வந்து தம்பி ராசாவைப் பலி கொடுத்து உங்க அரசினை காப்பாற்றினோம் என்பதை நினைவூட்டக் கடமைப் பட்டிருக்கின்றேன்.
 
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்...ஆனால், தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும் சொல்லித்தந்த பாடம் நினைவில் இருப்பதால் இத்தோடு விட்டு விடுவோம்...

 அடுத்த குடி அரசு தினத்திற்கு நான் இருப்பேனோ இல்லையோ தெரியாது...உங்களின் அடிவருடியாக, அடிமையாக இத்தனை நாள் காலத்தை ஓட்டிவிட்ட எனக்கு..பதவிகளின் மீது பெரிய ஆசை கிடையாது.  காலம் முழுவதும் மக்களின் கண்ணீரைத் துடிக்கும் கைக் குட்டையாகவே வாழ விரும்புகின்றேன்.  ஆனாலும், கட்சி கண்மணிகள் நேற்றிரவு இருந்தே, கொதித்துப் போயிருப்பதாலும், ஆரியர்களின் சூழ்ச்சி என்று தமிழினம் பொங்கியெழாமல் இருக்கவேண்டுமே என்ற கவலையினாலும்  இதை எழுதுகிறேன்.....

கமல பூட்டன், கமல விபூட்டன் இல்லையென்றாலும் பரவாயில்லை.....குறைந்த பட்சம் கமலத்திரு (பத்ம பூஷன், பத்ம விபூஷன், பத்மஸ்ரீ......நாங்க கிரந்தம் பயன்படுத்தம் மாட்டமில்ல..அதான் தமிழ படுத்தி எடுத்து விட்டோம்) பட்டமாவது அளித்திருப்பீர்கள் என்று எதிர்பார்த்திருந்தோம்... ஆனால் மீண்டும் பெரிய அண்ணன் தோரணையில் நடந்து கொண்டீர்கள்.  சரி அண்ணா சொன்னது போல.......தம்பி...மறப்போம்....மன்னிப்போம்....

இனியாவது உடனடியாக, அடுத்த மாத இறுதியில் ஒரு நல்ல நாளில் மீண்டும் குடி அரசு தின விழா நடத்தி, எனக்கு ஏதாவது ஒரு பட்டம் கொடுத்து, பெருமையடைந்து கொள்வதோடு மட்டுமன்றி,  இந்நிகழ்வு வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் எதிர்கால சந்ததிகளுக்கு நேரு குடும்பத்தின் பெருமைகளை பறைசாற்ற ஒரு வாய்ப்பாக அமைவது நிச்சயம்..


8 comments :

Unknown said...

கவலைப் படாதீங்க. பாரத ரத்னா கண்டிப்பா உங்களுக்கு தான்.

vasu balaji said...

கமல பூட்டன் கலீஞ்சர் நல்லாதாங்கீது:)

தங்கராசு நாகேந்திரன் said...

//ஈழத்தில் போர்நிறுத்தம் இல்லையென்றால், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் என்று சொல்லி காலையுணவுக்குப் பின் தொடங்கி மதிய உணவுக்குள் போராட்டத்தை கை விட்ட கதை உலகறியும்.// சரியான சாடல்

பவள சங்கரி said...

அட இந்த அவதாரம் எப்போதிருந்து..........? நல்லாத்தான் இருக்கு.......

க.பாலாசி said...

//எனக்கு ஏதாவது ஒரு பட்டம் கொடுத்து, பெருமையடைந்து கொள்வதோடு மட்டுமன்றி//

கூடவே ஒரு பாராட்டுவிழாவும் எடுத்தால் இந்த தமிழ்தேசம் பெருமைப்படும்...

VELU.G said...

உங்களை நானும் வழிமொழிகிறேன்

அண்ணா நாமம் வாழ்க அனைவருக்கும் நாமம் வாழ்க

r.v.saravanan said...

நல்லாத்தான் இருக்கு

Anonymous said...

//கமலபூட்டன்//

ஹா..ஹா...