Friday, October 05, 2018

காமம் ஒழிவதாயினும்…..

விழித்தெழும் போதே, உள்ளூர பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நிதானமாய், கால் பாதங்கள், கால் விளிம்புகளில் தேங்கியிருந்த இறந்த தோல் செதில்களை தேய்த்துச் சுரண்டி, தடவிப் பார்க்கிறேன். ஓரளவு வழவழப்பாகத்தான் இருக்கிறது. பின் கழுத்து, காது மடல், கை விரல்கள், இவற்றையெல்லாம் தேய்த்துத் தேய்த்து சலித்து, திருப்தியடையாமல் மீண்டும் மீண்டும் தேய்க்க, அவை சிவந்து வலியைக் கொடுக்கத் துவங்க, மெல்லக் குளித்துக் கரையேறுகின்றேன்.

ஓரளவு ஈரம் உடலில் இருக்கும் நிலையில், , மெல்லுடை வடிகட்டி அனுப்பும் இளங்காற்று, மயிர்க்கால்களின் அடிப்புறத்தை, அலைத்தும், கலைத்தும் ஆடும் ஆட்டம் அதீத உணர்வெழுச்சியைத் தருகின்றன. என்னை மறந்து அவற்றின் அந்த ஆனந்தக் கூடலில் திளைக்கின்றேன்.

கற்றை முடிக்கு நறுமணம் தடவி, , காதோரத்து முடிகளை இணைத்து, இறுக்கிப் பின்னி சூரிய சந்திர பிறைகளைச் சூட்டி, பொன்மணிக் குஞ்சங்களைப் பிணைத்துத் திரும்பி அந்த ஆடியில் என்னை நானே பார்த்து ரசித்துக் கொள்கிறேன்.

பரியகம், வால்வளை, பவழப் பல்வளை, வணங்குறு மோதிரம், கிளர்மணி மோதிரம், குறங்கு செறி திரள் என்றிவை, எத்தனை அணிகலன்கள். பெரும் நேரத்தைச் செலவழித்து, முகத்தில் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாய் கவனமாக என்னை நான் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றேன்.

காது மடலுக்குப் பின்னால், பின் கழுத்துச் சேருமிடம் அவர், காதல் புதைந்திருப்பது நினைவிற்கு வருகிறது, இதுவரை அவர் செய்யாததுதான், ஆனால் ஒரு வேளை இன்று அருகே வந்து, இடை நெருக்கி நெருங்குகையில், அவர் முகம் முயங்கும் இடமெங்கும் கூடுதல் கவனம். உடை மறைக்கா இடமெங்கும் பெருங்கவனம். அவர் பார்வை வீச்சிற்காகத்தானே இத்தனையும்.

பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதற் சிறந்து நின் சேவடியே சிந்திக்கப் பெற்றேன் இது ஒன்றும் கடவுளைப் பார்த்து, ஒரு பக்தன் பாடிய வரிகளாக இருக்க முடியாது. இரு காதலர்களுக்கிடையிளான மொழிகளாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

ஆடல் மகளீரின் சதங்கைகளும், ஆபரணங்களோடு பட்டுடை உரசும் ஒலியும் அருகே கேட்கின்றன. மாமன்னர் வந்து கொண்டிருக்கிறார். நிதானமாக நடந்து வந்து என் அருகில் நிற்கிறார்.

ஒரு நிமிடம், அவர் என்னை உற்று நோக்கியது போல இருக்கிறது. எனக்குள் ஏதோ ஒரு கூச்சம். என்ன இவர் இப்படி உற்றுப் பார்க்கிறார். ஒரு நொடிதான். ஆனாலும் அந்த ஒரு நொடிக்காத்தானே இவ்வளவு நேரம் காத்திருந்தேன். அந்த ஒரு நொடிக்குத் தானே இவ்வளவு மெனக்கெடலும். அந்த ஒரு நொடிகூட அவர் என்னைக் கவனித்தாரா என்று தெரியாது, ஆனால் நான் நம்புகிறேன், அவர் என்னை கவனித்துவிட்டுத்தான் கடந்திருப்பார் இது காலங்காலமாய் நடந்து வருவதுதானே.

மெல்ல விலகிக் கடந்து மாமன்னர் உள்ளே செல்லத் துவங்க, என்னைப் போலவே அலங்கரித்த மகளீர் கூட்டமாய், கைகளில் வழிபாட்டுப் பொருட்களோடு மலர்களின் மணத்தோடு வியர்வை கலந்த ஒரு கலவையான ஒரு மணம். அமைதியாய்க் கடந்து செல்கின்றனர்,

அவனை தினந்தோறும் பார்க்கிறேன். எனக்கு எதிரே சற்று தள்ளி அமர்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறான். அப்படி என்ன என்னிடம் தேடுகிறான் என்று தெரியவில்லை. ஆனால் இவன் இப்படி எனக்கு எதிரே அமர்ந்து என்னை வேடிக்கை பார்ப்பது எனக்குக் வியப்பாக இருக்கிறது.

ஒருநாள், அருகே வந்து என்னை உற்றுப் பார்த்து, தனக்குள்ளே ஏதோ சொல்லிக் கொண்டவன், என் தலைமீது கைகளை வைத்துத் தடவிக் கொடுத்தான். எனக்குப் பெரும் வியப்பு. இத்தனை ஆண்டுகளாக எவ்வளோ பேர்கள் என்னைக் கடந்திருக்கிறார்கள். எத்தனை எத்தனை மன்னர்கள், எத்தனை எத்தனை, ஆடல் மகளீர், எத்தனை எத்தனை விதமான பார்வைகள், எத்தனை விதமான முக பாவங்கள். துவக்கத்தில் என் அருகே நின்று உற்றுப் பார்க்கும் போது காது மடல்கள் சூடாவதை உணர்ந்திருக்கின்றேன். நான் பார்க்காமல் இங்கே எதுவும் நடப்பதில்லை. எல்லாவற்றிர்க்கும் சாட்சியாய் நிற்கின்றேன். ஆனால் எதுவும் எனக்காகவோ? என்னாலோ? என்னைக் கேட்டோ நடப்பதில்லை. இப்பொழுதெல்லாம் அப்படியில்லை. ஆனால் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இவன் என்னை உற்றுப் பார்ப்பது எனக்குள் ஏதோ கூச்சமாக இருக்கிறது.

நின்று கொண்டே இருக்கின்றாயே உன் கால்கள் வலிப்பதில்லையா? எவ்வளவு காலமாய் இப்படி நின்று கொண்டிருக்கின்றாய்? இந்த விளக்கின் ஒளியில் உன் முகம் பிரகாசமாகியிருக்கிறது. என்ன ஒரு அழகு உன் முகத்தில்? ஆனால் இந்த அகல்விளக்கின் சூட்டை எப்படித் தாங்கிக் கொண்டிருக்கின்றாய்? மாமன்னர் சென்று விட்டார். கொஞ்ச நேரம் தான் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டால் என்ன? என்று அவன் கேட்டு விட்டுச் சென்றுவிட்டான்.

அன்றிலிருந்து தான், நான் மாமன்னருக்காக காத்திருப்பதைத் தவிர்த்து, அவனுக்காகக் காத்திருக்கத் தொடங்கியிருக்கின்றேன்………