Showing posts with label வட்டார வழக்கு. Show all posts
Showing posts with label வட்டார வழக்கு. Show all posts

Tuesday, January 24, 2012

வட்டார வழக்கு.........

நேற்று மாலை மின் தமிழ் குழுமத்தின். திரு கண்ணன் அவர்களோடு அலைபேசியில் பேசினேன். கடந்த வாரம் தமிழ் மரபு அறக்கட்டளையைச் சார்ந்த திரு. நா. கண்ணன் அவர்களும், திருமதி சுபா அவர்களும் ஈரோடு வந்திருந்தனர்.  மின் தமிழ் குழுமத்தின்உறுப்பினர் திருமதி. பவள சங்கரி அவர்களின் பேரன்பினால் இவர்கள் இருவரையும் சந்திக்கும் வாய்ப்பு பெற்றேன். அவர்களோடு சேலம் கவிஞர். தமிழ்நாடன் அவர்களைச் சந்தித்து பேசி வந்தோம். பல அறிய தகவல்களோடும், புத்தகங்களோடும் ஊர் திரும்பினோம்.. 


ஈரோட்டிலிருந்து சேலம் செல்லும் வழியில் பல்வேறு செய்திகளை அனைவரும் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது.  செல்லும் வழியெங்கும் கொங்கு வட்டார வழக்கில் நான் பேசுவது குறித்து விமர்சனங்களும், பாராட்டுகளும் கிடைக்கப் பெற்றேன்.

கிராமியச் சுழலில் வளராமல், நாகரீகமென நம்பப் படுகின்ற நகரச் சூழலில் வளர்ந்தவன் நான். வட்டார வழக்கில்  மக்கள் பேசுவதை கேட்கும்பொழுது மகிழ்சி அடைந்ததை வார்த்தைகளில் எழுதிட முடியாது.  ஆனால் நான் கல்லூரியில் முதுகலை பட்டம் முடித்து ஈரோட்டிற்கு வந்த சேர்ந்த பொழுது, ஒன்றை தெளிவாக உணர முடிந்தது.  நாகரீகம்,  படித்தவன் என்ற போர்வைக்குள் தம்மை நுழைத்துக் கொள்:வதற்காக,  மக்கள்  வட்டார வழக்கை விடுத்து, நாகரீகத் தமிழுக்கு மாறிப்போனதை காண முடிந்தது.
 
திருமணவீட்டிலிருந்து, சிறு தெருமுனை கடை வரை, எங்காவது உணவு வேளையில், ”சோறு கொடுங்க” ”சோறு இருக்கிறதா?” என்று நான் கேட்ட போது அவர்கள் என்னை நம்ப முடியாமல் பார்த்தனர். உணவு வேளைகளில் அனைவரும் ”ரைஸ் போடுங்க, ரைஸ்எடுத்துகிட்டு வா” ”மீல்ஸ் எடுத்துகிட்டு வாங்க” அப்படி பேசுவதை கேட்ட போது எனக்குள்ளே ஏதோ வலி வந்தது உண்மை.  சோற்றுக்கும் அரிசிக்கும்முள்ள வேறுபாடு தெரியாதவர்கள் இல்லை இந்த மனிதர்கள். நாகரீகம் என்ற பெயரில் இவர்களின் பேச்சும் நடவடிக்கையும் என்னை வேதனைப் படுத்தியது உண்மை.

வட்டார வழக்கில் பேசுபவன், படிக்காதவன், நாகரீகச் சமுதாயத்தைச் சாராத அறிவிலி என்ற எண்ணம்  மக்களிடையே வேரூன்றத் தொடங்கியது.  என் தோட்டத்தில் வேலை செய்பவரிடமும், எனக்கு கீழே வேலை செய்பவரிடமும்,நான் பழகும் நண்பர்களிடமும், நான் பேசும் மொழியால் கடைபிடிக்கும் நாகரீக நடவடிக்கைகளினாலும், என்னை உயர்ந்தவன் என்று காட்டிக் கொள்ள வேண்டிய விருப்பமும் அவசியமும் எனக்கு இல்லை. எனவே எல்லோரிடமும் என் வட்டார வழக்கில் பேசத் தொடங்கினேன். சக மனிதனாக மதிக்கும், என்  உடன்பணியாற்றுபவர்களோடு சுற்றத்தோடும் நட்போடும் என் வட்டார வழக்கில் பேசுவதன் மூலம் நெருக்கமாய்  இருப்பதாய் உணர்ந்தேன். அதை இன்று வரை தொடர்கின்றேன்.

 என் வட்டார வழக்கில் நான் பேசுவது எனக்கு இயல்பானது அல்ல. ஆனாலும், விடாப் பிடியாக என் வட்டார வழக்கில் இயன்ற அளவு பேச முயற்சிக்கின்றேன். என் பாட்டனும் முப்பாட்டனும், பேசிய இந்த வழக்கு மொழி என் மக்களோடு என்னைநெருக்கமாக்கியிருக்கிறது.  சிறு உணவு விடுதி அல்லது தேநீக் கடையில் சென்று “ ஏனுங் ரெண்டு டீ போடுங்” ” கிழக்க மழையுங்களா?” ”தெக்க போறனுங்க, மறுக்கா நாளைக்கு தான் வருவனுங்” இப்படி வட்டார வழக்கில் நான் பேசுவதால் நான் நாகரீகமனிதனாக, படித்தவனாக ஏற்கப்படாமல், இந்த மேட்டிமைச் சமூகத்தால் நிராகரிக்கப் படலாம். அது குறித்த கவலை எனக்கு இல்லை.

என் அன்பின் நண்பர் பழமைபேசிmaniyinpakkam.blogspot.com,pazamaipesi.com அமெரிக்க மண்ணிலே கணிப்பொறி வல்லுனராக பணியாற்றும் இந்த வேளையிலும், அவர் யாரிடம் பேசும் போது ஆங்கில கலவாத தனித் தமிழிலும், வட்டார வழக்கிலும் பேசுவது எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது/. இன்றைய என்னுடைய வட்டார வழக்கு மீதான காதலுக்கு அவரின் நட்பே ஊக்கமாக அமைந்தது.

வேற்று மாநிலத்தில் அல்லது வேற்று நாட்டில், நம் மொழி பேசுபவரோடு ஏற்படும் சந்திப்பு எந்த அளவு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் நமக்கு கொடுக்குமோ, அதே அளவு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தருகிறது எனது வட்டார வழக்கில் என் மக்களோடு நான் பேசுவது. 

பேராசிரியர் கண்ணன் இன்று மாலை என்னோடு அலைபேசியில் பேசும் போது சொன்னார், உங்களால் நானும் கடந்த ஒரு வாரமாக பாண்டித் தமிழில் பேசுகிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். எனக்கும் மகிழ்ச்சிதான்.  என் மொழியால் நான் எங்கிருந்துவருபவன், எப்படிப் பட்டவன்,என்பதை இனங்கான ஏதுவாக அமைந்திருக்கும் வட்டார வழக்கு தவிர்த்து ”ஷ,”வையும்” ஜ “வையும் இன்னும் இருக்கும் அத்தனை கிரந்த எழுத்துக்களையும்,வம்படிக்கு இணைத்துக் கொண்டு எனக்கு பழக்கமில்லாத ஒரு புதிய பேச்சு வழக்கு மொழியை பின்பற்றி என் மேட்டிமைத் தண்மையை காட்டிக் கொள்ள எனக்கு விருப்பமில்லை.

வட்டார வழக்கு, மொழியின் திண்மையினை சீர் குலைக்கும். சாதீயத்தை கட்டமைக்க முனைகிறது, மொழியின் பெருமையை கெடுக்கும் என்று பேசும் பேரறிஞர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். வட்டார வழக்கு என்பது வித்தியாசமான ஒரு வேற்று மொழியில்ல. இன்று நீங்கள் பேசும் நாகரீகத்தமிழின்  பல வேர்ச்சொல்களைத்தான் நாங்கள் இன்றும் பயன்படுத்துகிறோம்.  எங்கள் வட்டார வழக்கின் சிறப்பே இன்னும் நாங்கள் வேர்ச்சொற்க:ளோடும் மரபுப் பெயர்களோடும் புழங்கிக் கொண்டிருப்பதுதான். . ஒலிக் குறிப்புகளில் ஓரிரு மாத்திரைகள் கூடக் குறைய வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் இவையும் இயல்பானவையே.

சொந்தங்களையும், நட்புகளையும், உறவுகளையும் பிரிந்து,பொருள் ஆதாரம் தேடும் சூழலில், நமக்குள்ளே நாம் தொலைந்தே வெகுகாலமாகிவிட்டது.ஆனாலும்  இன்று இணையப் பெருவழியில் வட்டார வழக்கு பெருமைக்குரிய விசியமாக மாறிப்போனதில் எனக்கு மகிழ்ச்சியே.  பல நேரங்களில் வட்டார வழக்கில் நாம் பலரும் பேசத் தொடங்கியுள்ளதை காணமுடிகிறது.

வட்டார வழக்கில் எழுதப் படும் கதை மற்றும் கட்டுரைகள் பெரும் வரவேற்பை பெருகின்றன.  நட்சத்திர எழுத்தாளர்கள் கூட அவரவர் வட்டார வழக்கில் எழுதிக் குவிக்கின்றனர். திரைப்பட வசனங்களில் கூட வட்டார வழக்கே முன்னிறுத்தப் படுகிறது.

வாழ்க தமிழ்ச் சமூகம்


வட்டார வழக்கில் எழுதப்பட்ட ஒரு கவிதை......



என்னெய அடீங்கொ
கொல்லுங்கொ
காவலுக்கு ஆள் போடுங்கொ
நீங்கொ பாத்து வெச்சிருக்கிறெ
மாப்புள்ளைக்கெ என்னெக் கெட்டி வெய்யுங்கொ
கட்டிக்கெறென்
அவனுக்கு புள்ளெ பெத்துத் தரச்சொல்லுங்கொ
பெத்துக்கெறென்
ஆனா
என்னிக்காவது ஒரு நா
எங்கெய்யாவது ஒரு வாட்டி
அவரு வந்து ‘வா போயர்லாம்’னு
கூப்புட்டுப்போட்டார்னு வெய்ங்கொ
என்றெ அப்பன் மேல சத்தியமாச் சொல்றென்
போட்டெதும் போட்டபெடி கெடக்கெ
அப்பிடியெ அவருகூடப்போயிர்ருவென்…. ஆமா….

                                               -கவிஞர் மகுடேசுவரன்.
                                           http://kavimagudeswaran.blogspot.com/


திரு. பெருமாள் முருகன் அவர்களின் சிறுகதை:

மாப்புக் கொடுக்கோணுஞ்சாமி..........


http://www.perumalmurugan.com/2011/11/blog-post.html