Wednesday, December 30, 2009

வெண்ணைய் வெட்டி வினவுக்கு……......

அதிமேதாவி, ஆல் இன் ஆல் அழகு ராசா வணக்கம்

// உலகில் நேர்மறையாக எழுதவேண்டிய விசயங்கள் மலையளவு இருக்கும் போது தொடர்ந்து பிரச்சினைகளையும், தகராறுகளையும் அலசி ஆய்வதிலிருந்து என்று விடுதலை கிடைக்குமோ தெரியவில்லை. ஆனால் ஊர் உலகமென்றால் பிரச்சினைகளும் இருக்கும்தானே?//

ஊர் உலகமென்றால் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும் என்ற முடிவுக்கு வந்த  பின் என்னாத்துக்கு முன்னாடி பெரிய பில்டப்பு?  நாங்களும் ரவுடி தாண்டி(அதான் அரசியல்வாதி தான்னு) சொல்லிக்கவா? மலையளவு விசயங்கள் எழுத இருக்கும் போது நாம ஏன் இந்த மயிரு புடுங்கற  விசயத்துக்கு வந்தோம்………


//இரவு நடந்த மதுவறைக் கொண்டாட்டங்களில் பேசப்பட்ட வரலாற்றுப் புகழ் விவகாரங்கள் காதுகளுக்கு வரவில்லை என்பதைத் தாண்டி எதையும் நொள்ளை சொல்வதே வினவின் குணம் என்பதால் விட்டுவிட்டு மேலே செல்வோம்.//

பக்கத்தூட்ல என்ன நடக்குதுன்னு, ஒட்டுக் கேக்கிறத நிறுத்தினாவே, போதும் எல்லாப் பிரச்சனையும் தன்னாலே ஓய்ந்துவிடும்.  அதுசரிஅத நிறுத்திப்போட்டா பொழப்புக்கு எங்க போறது.?????????? அவன் கழுவியிருக்கானா? இவன் கழுவியிருக்கானான்னு பாக்கறது தான் பொழப்பே, அப்புறம் அதுல குணத்த பத்தி என்ன சுய விமர்சனம்.


//யாரையோ திருப்திப்படுத்தவோ, முன்னெச்சரிக்கைக்காகவோ, ஜாக்ரதையாக எழுதி பதிந்து கொண்டார். இதன் பின்னணி என்ன?//

ஒரு தேசிய இனம் அடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்து, சுய நிர்ணய உரிமைக்காக, ஏகாதிபத்தியங்களுக்கெதிராக போர் தொடுத்த வேளையில் சர்வ தேசியம், வர்க்கப் போராட்டம் என்று மட்டுமே   பேசச் சொல்லிக் கொடுக்கப் பட்டிருந்தாலும்,  யாரையோ ஏமாற்ற, அல்லது திருப்தி படுத்த , முன்னெச்சரிக்கையாக  தமிழ்தேசியம் ஏகாதிபத்தியங்களுக்கு துணைபோகும் என்று நீங்களே பேசும் போது, அவர் எம்மாத்திரம்.

//அதிலும் நற்குடிபெண்களென்றால் பர்தா இல்லாமல் வாழமாட்டார்கள் என்ற ரேஞ்சில் தனது அடிமைத்தனத்தை சிலாகித்திருந்தார். இப்பத்தான் பதிவுலகம் வந்திருக்கும் அந்த பேதைப்பெண்ணுக்கு உலகம், அடிமைப்பெண்கள், சுதந்திரப் பெண்கள், மத பிற்போக்குத்தனங்கள் எல்லாம் புரிவதற்கு பதிவுலகமென்ன முற்போக்கு சிங்கமாகவா உள்ளது?//

ஏகாதிபத்தியத்தியத்தின்,  கொடுமையான விளைவுகளே, சமூக  சீர்கேடுகள்.   சாதி, மதம், இனம், போன்ற அடையாளங்களை முன்னிறுத்தி, வர்க்க அடையாளங்களை அழிக்கப் பார்க்கின்றன என்று பேசிய நாம், இன்று, சமூக சீர்கேடுகளை நீக்கப் பாடுபடுவதன் ரகசியமென்ன?  மாடு போடும் சாணிகளை பொறுக்கி விட்டால், இனி குப்பையாகாது என்ற நம்பும் முற்போக்கு சர்வதேசிய சிங்கமளவிற்கு, பதிவுலகத்திற்கு பத்தாதுதான்.


//இவ்வளவிற்கும் இவர் பர்தாவை எதிர்க்கவில்லையாம். அவரவர் மதம் சார்ந்த நம்பிக்கைகளை அவரவர் பின்பற்றுவது சரியாம். ஆனால் அதற்காக மற்ற மதத்தவர்களை நொட்டம் சொல்வது சரியல்ல என்பதே பிரியாவின் வாதம்.//

 பஸ் ஸ்டேண்டு கக்கூஸ்ல பக்கத்து அறையில இருந்தவன் உளரலை அரைகுறையா கேட்டுகிட்டு,  ஏதோ தானே பக்கத்துல இருந்து பார்த்து, படிச்சு,  மாதிரி எழுதுவதுதான் சகிக்கவில்லை.   சம்மந்தப்பட்ட பதிவின் பின்னூட்டங்கள், நீங்கள் வைரஸ்ல இருந்து திரும்பி வருவதற்குள் எடுக்கப்பட்டு விட்டன.   அப்புறம் எங்கிருந்து இதெல்லாம் படிச்சீங்க.இழவு திருந்த மாட்டீங்களே……..

வடிவேலு சொல்லுற மாதிரி, எத்தனை அடிச்சாலும் வலிக்காத மாதிரி நடிக்கிறீங்களே ……அது எப்புடிங்க……?


//பெண்ணை மதங்கள் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் அநீதி குறித்து கிஞ்சித்தும் கவலை கிடையாது. அது இருந்தால் இந்து மதம் பெண்ணை வதைத்திருக்கும், வதைத்துவரும் கொடூரங்கள் குற்ற உணர்வை கொள்ள வைத்திருக்கும். இந்த விசயங்களை அந்தப் பதிவர்களின் பின்னூட்டங்களில் தனியாக நின்று வாதிட்ட  சுகுணாதிவாகரின் பின்னூட்டத்தை பலரும் சீண்டவில்லை என்பது மட்டுமல்லாமல் அநாமதேயங்களாகவும் வந்து கிண்டலடித்தார்கள்.//

அடக்கருமமே…………சம்மந்த பட்ட பதிவர், சுகுணாதிவாகர் வேற, சுகுணா ..திவாகர் வேறன்னு எழுதறாங்க……நீங்க ஏன் புதுசா வந்து எங்கப்பன் குதுருக்குள்ளேன்னு……..

//நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்னர் கூட பார்ப்பனப் பெண்கள் விதவையானால் அவளது முடியை ஒண்ணொண்ணாக பிடுங்கி மொட்டையடித்த நாடும் இதுதானே? இந்தக் கதையெல்லாம் தனக்கு தெரிந்த நல்ல பார்ப்பனர்களை வைத்து ஜெயேந்திரப் பார்ப்பனர்களை மறைக்கும் பழமைபேசி பஞ்சாங்கங்களுக்கு தெரியுமா?//

நாலு நல்ல கம்யூனிஸ்டுகள வச்சிகிட்டு(அவுங்களும் நல்ல கம்யூனிஸ்டான்னு மற்ற மார்க்ஸிய தோழர்களைத்தான் கேக்கனும்) நீங்களே 30 வருசமா பொழப்ப ஓட்டும் போது, மத்தவங்கள பேசற யோக்கிதை  எங்கிருந்து வந்தது.

 ஜெயேந்திர பார்ப்பானை நாங்க மறைக்கிறோம், நீங்க என்ன பண்ணிங்க,,,,,?  10க்கு 10 மேடையில் மைக் புடிச்சு நாலு கூட்டம் போட்டிருப்பீங்களா?   அதுக்கப்பறம்???????  

 எங்கடா எழவு வுழும்,  திங்கறதுக்கு பொணம் கிடைக்குன்னு அலையற உங்களுக்கு, பொண்ணு செத்தா என்ன? மாப்பிள்ளை செத்தா என்ன? பொணம் கிடைச்சா சரி………

அப்பவே பல நண்பர்கள் போன் பண்ணி சொன்னாங்க……” அது ஒரு காமெடி பீஸுங்க”   அதுக்கு ஏன் இவ்வளவு விளக்கம்னு.

தமிளு, திராவிடன்னு பேசியே ஒருத்தன் நாற்பது ஐம்பது வருசமா தாலியறுத்தான், அவனையே பொறுத்துகிட்டோம்…….  பெண்ணீயம், பார்ப்பணீயம், சாமீயம், சர்வ ரோக நிவாரணம்அதான், சர்வதேசியன்னு, நீங்க பேசறதையும் பொறுத்துகிட்டு இருக்கோம்..ஏன்யா இப்படி பேசிறீங்கன்னு என்னைக்காவது கேட்டிருப்பமா? 

கடைசியா ஒன்னு சொல்லறன் இப்பவாவது திருந்துங்க……..அரிப்பெடுத்தா சொறிய, நாங்களா கிடைச்சோம்.     எத்தனை பேர் மப்புக்குத்தான்  நாங்க ஊறுகாயா இருக்கிறது? அதொட மட்டுமில்லாமல், எந்த சாமியாவது காப்பாத்தாதான்னு, ஏங்கிப்போய், வாங்கும் சம்பளத்தில் உங்களுக்கும் மாமூல் கட்டிவிட்டு (சந்தா-ங்கற பேர்ல வாங்கரீங்களே) உங்க அதிமேதாவிதனங்கள கேக்க ஊருக்கு பத்து அப்பாவிகள் இருக்கிறார்களில்லையா?அவர்களையெல்லாம் போய் முதல்ல காப்பாத்துங்கய்யா……


எங்க பிரச்சனையை நாங்க பார்த்துக்கிறோம்.நீங்க போய் உங்க ஒலக பிரச்சனைகளைப் பாருங்க சர்வதேசிய பிரச்சனைகள் நிறைய காத்துகிட்டிருக்கு உங்களுக்காக..

அதெல்லாம் விட்டுபோட்டு, எதுக்கு இந்த வெண்ணை வெட்டி வேலை., பொரட்சி, கிரட்சி  பண்ணி எல்லாதையும் காப்பாத்தர வேலைய பாருங்க…….


எங்களைய வுட்டுருங்கய்யா………..


Monday, December 28, 2009

ஞானும் எண்ட .................ஹீரோ .பிரபாகரனும்

ஒந்நு இல்லேட்டாஎண்ட நண்பன் பிரபாகரனைப் எனிக்கு ரொம்ம பிடிக்குன்னு..ஆயால்  ஒரு பிடிக்கிட்டாப் புள்ளி..கொறச்ச காலத்தில் ஆயாளோட வல்லியம் சினேகம் உண்டாயிட்டு.


தேனுங்ணா,.. தென்னடா,..இவன் திடீர்னு இப்படி ஆயிட்டான்னு பாக்கிறீங்களா? அது ஒன்னுமில்லைங்கணா,   இந்த தலைப்ப படிச்சிபோட்டு,  ஏதாவது  ஒரு நாதாரி , இவனுக்கும்  ???அவருக்கும் ஏதோ தொடர்பிருக்குன்னு சொல்லும், அவ்வளவு தான்,  நம்மூரு ஸ்காட்லாந்து (யா)வார்டு, வந்து, நம்மள அள்ளிகிட்டுப் போய், ஏதோ காஷ்மீர் தீவிரவாதிய புடிச்சிட்டதா,  பேட்டி குடுப்பாங்கதேவையாங்ணா இதெல்லாம்! நான் புள்ளகுட்டிக் காரனுங்ணா.

அதுமாத்தரம் இல்லீங்ணா, எங்க தலைவர் அதாங்ணா.நம்ம வானம்பாடிகள் வேற..இந்த மாதர எழுதி, என்னோட ‘எக்கோ’ அதாங்ணா, நம்ம வாத்தியார் சொல்லிதாந்தாரல்லோ ‘கிருதா’(ego) அத கிளப்பியூட்டுட்டாருங்ணா.


அதுமட்டுமில்லாம, நம்ம சேரநன் நாட்டை அவ்வளவு சீக்கிரம் மறக்கமுடியுமுங்ளா, என்னா வளம,,,என்னா பசுமை,.ம்ஹும்,,,என்னத்தச் சொல்ல……அது ஒரு காலமுங்ணா…….


பழைய நெனப்புடா..பேராண்டி……ன்னு எங்கனயோ பாடறது உங்குளுக்கும் கேக்குதுங்களாங்ணா


அத்தோட போச்சுங்களா,அந்தூருக்காரங்கதான் எலக்கியந் தெரிஞ்சவிங்கன்னு வேற நம்மூரு  பெரிய பெரிய எழுத்தாணிகள்லாம் சொல்லிகிட்டிருக்காங்கஅதான் இந்த புது மொயற்சின்னு வச்சுக்கங்களேன்.


சரி விசியத்துக்கு வருவோம்,பிரபாகரன்:-

நான் பள்ளிக்கூடம் படிக்கிற காலத்தில, அப்ப நமக்கு வயசு,15 இருக்குமுங்க.    எங்க தெருவுக்குப் பக்கத்துத் தெருவில் ஒரு பிரபாகரன் இருந்தாருங்க.  அவருக்கும் நம்ம  வயசுதான் இருக்குமுங்க. கிருத்துவ குடும்பத்தைச் சார்ந்த அவர் ஒவ்வொரு ஞாயித்துக் கெழமையும்  காலைல 7 மணிக்கு, வெள்ளைச் சட்டை, வெள்ளைப் பேண்ட், கையில் வேத பொஸ்தகத்தோட , சர்ச்க்கு எங்கள் தெரு வழியாக நடந்து போவாருங்க.  அவரு  அம்மாவும் தங்கச்சியும் கூடபோவாங்க.

அளவா, தச்ச வெள்ளைப் பேண்ட், முழுக்கை வெள்ளைச் சட்டை, கருப்பு பூட்டு, கருப்பு பெல்ட், எண்ணை தொட்டு படிய வாரின தலை, நேரான பார்வை, இதெல்லாம் நம்மள ரொம்ப டிஸ்டப் பண்டிபோடுச்சுங்ணா.

நாம எப்பவும் போல லுங்கிய கட்டிகிட்டு, ரோட்ல போற வாரவுங்கள கலாய்ச்சிகிட்டு, அக்கம் பக்கத்திலிருக்கும் பொடிசுங்கள கூட்டி வச்சு அலப்பற பண்ணிகிட்டிருப்பம்.  போற வாரவங்கள்ளாம், நம்ம ஒரு நிமிசம் நின்னு, நம்மள ஒரு மாதர பாத்து மனசுக்குள்ள திட்டி போட்டு போனாத்தானுங்க நமக்கு காலைச் சோறு இறங்கும்.


ரோட்ல போற எல்லாரும் நம்ம நல்ல முறையில (இப்புடிவெற நெனப்பா?) கவுனிச்சிட்டு போகும் போது, அவரு மட்டும், நாம ரோட்டில இருக்கிறோங்க நினைப்பே இல்லாத மாதர போவாருங்க.  ஒரு நா கூட அவரு நம்மள நிமுந்து கண்ணால பாத்ததில்லீங்கணா.  ஒரு கைல பொஸ்தகம், ஒரு கைல தங்கச்சி கையப் புடிச்சிகிட்டு, இந்தல்ல அந்தல்ல பாக்காம, ஒரே நேர் கோட்ல, நடந்து போவாரு,  அப்பறம் 10 மணிக்கு திரும்பி வாருவாரு.


என்றா இது,,,,,ஒரு பெரிய மனுச, (நாந்தான்நாந்தான்.)ரோட்டில நிக்கறம், கொஞ்சங்கூட சட்டபண்டாம போறானேன்னு வெசனமாச்சுங்ணா.  இத இப்டியே வுடக் கூடாதுன்னு ஒரு நா, அவரு வரும் போது  சைக்கிள எடுத்துகிட்டுப் போய், அவுருக்கு நேர,  அவரு பேண்ட்ல முட்டறா மாதர போயி நிறுத்தி, அப்புடியே அவுரு மூஞ்சியப் பார்த்தனுங்ணா.   ஒரு மாத்தமும் இல்லைங்ணா,  நிமுந்து பார்த்தாரு, லேசா விலகி, அவுருபாட்டுக்கும் நடக்க ஆரம்பிச்சிட்டாருங்ணா.

மொகத்துல ஒரு பதட்டமில்ல, பயமில்ல,  அப்புடியோரு ஆள நான் பாத்ததே இல்லீங்க.  அளவுக்கு மீறின முதிர்ச்சி………

ரசினிகாந்த் சினிமா பார்த்தாலே, ஒரு வாரத்துக்கு தலைய கலைச்சி வுட்டுகிட்டு, சட்டைல மேல ரெண்டு பட்டனை கழட்டிவுட்டுகிட்டு கீழ் ரெண்டு பட்டன கழட்டி வுட்டு அதுல ஒரு முடிச்சு போட்டுகிட்டு திரியறவங்க நாம……ஆனாப் பாருங்க, அதுக்கு பொறகு, அவுரு நமக்கு ஹீரோ ஆயிட்டாருங்ணா.  அவுரு மாதர பேண்ட் போடறது, ஷூ போடறது, யாராவது ஏதாவது கேட்டா, நிதானமா திரும்பி, தலைய மட்டும் லேசா ஆட்டி என்னான்னு கேக்கறது. அப்புடி, இப்புடின்னு ரொம்ப..


முடியலைன்னாலும் தம் கட்டிகிட்டு, பயப்படாத மாதர நடிச்சு ,  ஒரு தோசைய முக்காமணி நேரம் மெதுவா பிச்சி சாப்புட்டு,  யாருகிட்டயும் எதுவும் பேசாம, அளவா சிரிச்சு, ஒடம்பு, மனசு அத்தனையிலும் நிதானத்த கொண்டு வந்து, அப்புடியே மொத்தமா மாறின நாளாவது நாள்.


ராத்திரி ஒரு மணி இருக்கும், வூட்ல யாரோ பெல் அடிச்சாங்க. என்னடான்னு போயி பார்த்தா,  எதிர்த்த வூட்டுக்காரரு, சிவில் எஞ்சினியரு, ஆளு பார்த்தா மிலிட்டரிக்காராட்டமிருப்பாரு. நம்மோட குருவுல அவுரும் ஒருத்தரு. பெரிய மூளைக்காரரு. 


எவனோ ஒரு திருடன் ஓடறான், வாப்பா போயி புடிப்போன்னாரு, உடனே எந்திருச்சு லுங்கிய மடிச்சி கட்டிகிட்டு, கைல நம்ம சைஸுக்கு ஒரு தப்பக் குச்சிய தூக்கிகிட்டு, சந்து பொந்தெல்லாம் தேடுனா, ஒரு குறுக்கு சந்தில லைட் கம்பத்துகிட்ட யாரோ உக்காந்திருந்த  மாதர இருந்தது. 


மெதுவா கிட்டப் போய் எட்டி தல மசற புடிச்சு, தப்ப குச்சில பட்டையா அடிக்க,  அவன் அய்யோ, அம்மா, கத்த, மொத்த சனமும் ரோட்டுக்கு வந்திருச்சுங்க.


அப்பறம் அவனை புடிச்சு பெருசுங்கெல்லாம் விசாரிச்சா, அவன் எதோ நாயி தொரத்துச்சுன்னு ஓடி இருக்கான், இவரு திருடன்னு நினைச்சு என்னை எழுப்ப………பாவம் ஒரு அப்பாவிய போட்டு அடிச்சு, அவன் வாயி மூக்கெல்லாம் ரத்தம்……எல்லாம் முடிஞ்சு பார்த்தா, வெவகாரம் நடந்த எடம் நம்ம ஹீரோ வூட்டு வாசலு. அட இப்பவாவது மனுச நம்மள நிமிந்து பார்த்து ஒரு சிரிப்பு சிரிப்பாரான்னு பார்த்தா..ம்ஹூம்.  அதே பார்வை, அதே நிதானம்.


ஆனாப் பாருங்க……அவுரு தங்கச்சி சொன்னனில்ல அது மட்டும்
லேசா தலைய சாச்சு, ஒரு சிரிப்பு..அப்பத்தான் புரிஞ்சுதுங்க அட நாம ஹீரோ வாயிட்டம்னு…….


அதுக்கப்பறம், ஞாயித்துகிழமையானா, ரோடெல்லாம் ஒரே அலப்பறை தான்.  என் ஹீரோ என்ன பார்க்கிறாரோ இல்லையோ, என் ஹீரோயின் என்னப் ஓரக்கண்ணால் பார்த்து விட்டு  ஒரு சிரிப்பாங்க……..நானும் ஹீரோ ஆயிட்டேன்……….

Thursday, December 24, 2009

பிறந்த நாள் காணும் அன்பு நண்பனுக்குஇன்று பிறந்த நாள் காணும் அன்பு நண்பனுக்கு.....
                                               
                                                         நல்வாழ்த்துக்கள்
                                            என்றென்றும் அன்புடன்
                                                                            ஆரூரன்.


வாழ்த்துச் சொல்ல:
                                        வாழ்க்கை வாழ்வதற்கே

Tuesday, December 22, 2009

ஈரோடு வலைப் பதிவர்கள் ---சந்திப்புஇங்கிவனை யான் பெறவே என்ன… தவம் செய்துவிட்டேன்

தொலை பேசியையே “தொல்லை பேசி” என்று நினைப்பவன் நான். அலைபேசியை என்னவென்று சொல்வேன். நான் நடத்திவரும் சந்தை முகவாண்மை நிறுவனத்தில், வாடிக்கையாளர்கள் யாருக்கும் என் அலைபேசி என்னை கொடுக்க மாட்டார்கள்.

தவிர்க்க இயலாத சூழ்நிலைகளில் உடன் பணிபுரியும் நண்பர்களின் அலைபேசியில் பேசுவேன். என்னை அழைப்பவர்கள் மிகக் குறைவு. நாள் ஒன்றிற்கு அதிகப் படியாக என் கிளை மேளாலர்கள், அல்லது நாங்கள் பணியாற்றும் வங்கிகளின் உயர் அதிகாரிகளிடமிருந்து 5 அல்லது 6 அழைப்புகள் எனக்கு வரும்.. .......

என்னிடம் அதிகமாகப் அலைபேசியில் பேசும் தங்கமணியின் அழைப்பைத் தவிர்க்க முடிவதில்லை.(ஒரு நாளைக்கு எத்தனை முறை என்று கேட்கக் கூடாது……..….)

ஆனால் ஒரு மனிதர் கடந்த ஒருவார காலமாக நாள் ஒன்றுக்கு சுமார் 15 மணி நேரம், அலைபேசியில் பேசிக் கொண்டே இருப்பதைக் கண்டவுடன் ஒருபுறம் ஆச்சரியமாகவும், மறுபுறம் வருத்தமாகவும் இருந்தது.

அலைபேசியில் பேசிக் கொண்டே, பணியாளர்களுக்கு உத்தரவிடுவது, தேநீர் அருந்துவது, பங்கு சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கேற்ப வாங்க, அல்லது விற்க என்ற கட்டளைகளை பிறப்பிப்பது, மதிய உணவுண்பது, இடையிடையில், பதிவெழுதுவது, குறுந் தகவல்களை அனுப்புவது, இப்படி தொடர்ந்து பேசிக் கொண்டே பணிபுரியும் ஒருவரை நான் கண்டது இதுவே முதல்முறை.

காதிற்கென்று ஒரு வாய் இருந்தால் அது கதறி அழுதுவிடும். எப்படித்தான் இவரை வீட்டில் வைத்து சமாளிக்கிறார்களோ? தெரியவில்லை


அடையாள அட்டை அச்சிடுவதிலிருந்து, பதிவர்கள் பெயர் பதிவு அட்டவனை தயாரிப்பது, பேனர் அச்சிடுவது, உணவிற்கு விலை நிர்ணயம் செய்தது, குறித்த நேரத்தில் அது வந்து சேர்ந்ததை உறுதி செய்தது, பதிவர்களை தொடர்புகொண்டு அவர்களின் வருகையை உறுதி செய்தது, மேடை நிகழ்வுகளை உறுதி செய்து, கூட்ட நிகழ்வுகளை அச்சிட்டு மேடையிலிருந்த அனைவருக்கும் வழங்கியது, கலந்துரையாடலை இனிதே நடாத்தியது, விருந்தினர்களை வரவேற்றது, இரவு உணவிற்குப் பின் அவரவர் ஊர் போய் சேர ஏற்பாடுகள் செய்தது,,,,இப்படி எல்லாவற்றையும் தானே முன்னின்று கவனித்து செய்துவிட்டு,

“இது உங்கள் வெற்றி, நீங்கள் செய்து காட்டியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்” என்று எங்களிடம் சொன்ன போது உடல் கூசியது………..


எல்லாப் பணிகளையும் செவ்வனே செய்து, ஆனால் அதன் வெற்றியை எல்லோருக்கும் பகிர்ந்தளித்துவிட்டு , குறைகள் இருந்தால் அது என்னுடைய கவனக் குறைவே, என்று இருகரம் கூப்பி உடல் வளைந்து, “வருந்துகிறேன், என்றவனின் மாண்பை என்னவென்று சொல்வேன்.


அவர் இட்ட சில பணிகளை நாங்கள் செய்தோம், சரியாகச் செய்தோமா? என்றால் தெரியாது…….ஆனால் எங்களுக்குத் தெரிந்த அளவில் செய்தோம்.


“முன்னோக்கிச் செல்” என்று கட்டளையிட்டுவிட்டு பின்னிருந்து வேடிக்கை பார்க்கும் தலைமைகளையெல்லாம் பார்த்திருக்கிறேன். அவர்களோடு பணியாற்றியும் இருக்கின்றேன். ஆனல் “நட என்னோடு, வெற்றி பெற்றால் அது உன்னால், தோல்வியா? விட்டுவிடு அதை நான் பார்த்துக் கொள்கின்றேன்” என்று அரவணைத்து அழைத்துச் செல்லும் தலைவனை இன்று கண்டேன்.

"இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்"

ஈரோடு பதிவர் சந்திப்பின் முழு வெற்றிக்கு உறுதுணையாய் இருந்த கார்த்தி, வால்ப்பையன், நந்து, ஜாபர், பரணி, பாலாசி, வசந்த்,பைஜு, ராஜா, கோடிஸ், என்னும் பெயர் நினைவில் இல்லா நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்

சந்திப்பில் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பாக்கிய அனைத்து பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும், நண்பர்களுக்கும், நிகழ்ச்சிக்கு உலகின் பல்வேறு இடங்களிலிருந்தும் வாழ்த்துத் தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எங்கள் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழ் மணம் திரட்டிக்கும். சங்கமம் லைவ் குழுமங்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.

அன்புடன்
ஆரூரன்.

Tuesday, December 15, 2009

சேரவாரும் செகத்தீரே……............


இன்று காலை 7.30 மணிக்கு நண்பர் கதிரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு.  மிக சுவராசியமான தகவலை என்னிடம் சொன்னார்.

கதிர் என்னிடம், ஏங்க, உங்களுக்கு சண்முகராஜன் தெரியுமா? 

இல்லைங்களே,   யாரது. ?

ஆப்பிரிக்காவிலிருந்து அழைத்திருந்தார்.  விழாவிற்கு வாழ்த்துச் சொன்னார் என்றும் தெரிவித்தார்.

பவானி பகுதியைச் சார்ந்தவர், ஆப்பிரிக்க நாடான “தோஹா”(பெயர் தவறாக இருப்பின் மன்னிக்கவும்.)  வணிகம் செய்து வரும் இவர், இன்று காலை கதிரை அலைபேசியில் அழைத்து, விழாவிற்கு வாழ்த்துத் தெரிவித்ததொடல்லாமல்,  சந்திப்பின் செலவினங்களுக்காக ரூபாய் 1000/- நாண்பர் ஒருவர் மூலம் கொடுத்தனுப்புவதாகவும் தெரிவித்தார். 

விழா நிகழ்வுகள் முழுவதையும், தன் நண்பர் மூலம் இலவசமாக வீடியொ எடுத்துத் தருவதாகவும், உறுதியளித்ததொடல்லாமல், அவருடைய நண்பர் பவானி ஸ்டார் வீடியோ உரிமையாளரிடம் அழைத்து நிகழ்ச்சியை ஒளிப் பதிவு செய்து தருமாறும் கூறியிருந்தார்.  அவரும். கதிரை தொடர்பு கொண்டு தன் வருகையை உறுதி செய்திருக்கிறார்.


தமிழ்மணத்தின் சார்பில் கோவை காசி அவர்களும், கல்வெட்டறிஞர் திரு, இராசு அவர்களும்  விழாவில் கலந்து கொள்வதாக இன்று தொலைபேசியில் உறுதியளித்தார்கள்.
 

க.சீ. சிவக்குமார் கலந்து கொள்வதாக உறுதியளித்தாக தமிழ் மணம் கனேசன் ஐயா, தெரிவித்திருந்தார்.  க.சீ. சிவக்குமார் அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகின்றோம்.

 அமெரிக்க மண்ணிலிருந்து விடுமைறைக்கு வந்திருக்கும் அருமை நண்பர் “பழமை பேசி” அலைபேசியில் தொடர்பு கொண்டு விழா ஏற்பாடுகள் குறித்த விவாதித்து, நல்ல பயனுள்ள கருத்துக்களையும் சொல்லியது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.

துபாயிலிருந்து நண்பர் நாகா, செந்தில் வேலன், அசாமில் எல்லைப் பாதுகாப்பு படையில் பணிபுரியும் நண்பர் தேவராஜ் விட்டலன் ஆகியோர் அலைபேசியில் வருகையை உறுதி செய்துள்ளனர்.

பல்வேறு பகுதிகளிலிருந்தும் நண்பர்களின் வாழ்த்தும், நிதி ஆதரவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

 வாசகர்களாக தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டு,  நிகழ்ச்சிச் செலவுகளில் பங்குதாரராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சண்டை போட்டு வரும் அருமை நண்பர்கள் ராஜா சேதுபதி, மற்றும் ஜாபர் ஆகியோரின் அன்பிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. 
 

நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த வேண்டுமே என்ற கவலையும் கூடிக் கொண்டே போகிறது……

 நாட்கள் ஆக ஆக , சூழ் கொண்ட தாயாய், உள்ளம்.  பெற்றெடுத்துப் பேர் சூட்டி, உச்சி முகர்ந்தால் தான் தீரும் இந்த  வலி.
 


தண்டிகை தாங்கியும், காளாஞ்சி ஏந்தியும், தமிழ்செய் கம்பன்
அண்டையில் பாதச்சம் மாளியும் தூக்கி அடிமையும் பட்டு
வெண்டுவ கோத்திரன் தீத்தான் செவ்வந்தி விளங்கு கங்கை
மண்டலம் கீர்த்திதனைப்படைத்தான் கொங்கு மண்டலமே.
 

சிவனே பரம்பிறிது இல்லை எனாதததல் சிரம் துணிக்க
உவந்தனன் சோழன் எனமறு வேடமாய்  ஓடிவந்து
கவன்றிடு ராமா நுசன் தனைத் தேற்றியும் காத்தளித்த
மவனகை கொங்குப் பிராட்டியரும் கொங்கு மண்டலமே

                                                  -கொங்கு சதகம்.
 

கவி கம்பனுக்கும், காவி ராமானுசனுக்கும் தங்குமிடமளித்து தகைசார்ந்த வாழ்வளித்த கொங்கு மண்டலத்தில் கூடுவோம் வாரீர்……
 

காவிரிதன் கரைதனையே களமாக்கி
பொங்கு தமிழ் வளர்க்கப் புறப்பட்டோம்.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்றுறுதி கொண்டோம்.
கொங்கு தமிழ் காவலனாய், மொழிகாக்கப் புறப்பட்டோம்
 

சேரவாரும் செகத்தீரே………….

 அனைவருக்கும் வாழ்த்துகள்.


கலந்து கொள்ளும் நண்பர்கள் விவரங்களுக்கு

ஈரோடு கதிர்

 பின் குறிப்பு:
பதிவுலக நண்பர்கள், தங்களின் புத்தக படைப்புகளை கொண்டுவந்தால், விழா அரங்கில் காட்சிக்கு வைக்கவும், விற்பனை செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

Saturday, December 12, 2009

ஈரோட்டில் சி.எஸ். பர்தி சிலை திறப்பு விழா

என்ன மக்களே குழப்பமா இருக்கா? எனக்கும் அப்படித்தான் இருந்துதுங்க. பாருங்க, நேத்தைக்கு, நம்ம கருங்கப்பாளையம், பாரதி நினைவு நூலகத்தில பாரதியார் சிலை திறப்பு விழான்னு ஊரெல்லாம் தட்டிகட்டி இருந்தாங்க……

சரி நாமும் தான் போயி பார்ப்போமேன்னு,போனா ஒரே கூட்டமுங்க………..

என்னோடு சேர்த்து 8 பேர். அதுல ரெண்டு பேர் அந்த நூலக அலுவலர்கள். இரண்டு மூன்று கரை வேட்டிகள் வரவேற்க, முன்னாள் அமைச்சர் வந்து பாரதியார் சிலையத் திறந்து வச்சாருங்க. எல்லாரும் கை தட்டினாங்க……..சிலைய தொறந்து வச்சிட்டு அவுரு, அருங்காட்சியகத்த தொறக்கப் போனாருங்க………

அப்பால, போயி,நம்ம முண்டாசு கவிக்கு ஒரு வணக்கஞ் சொல்லாமேன்னு உள்ளாற போனனுங்னா. உள்ள நுழைஞ்சதும், பக்கத்து தெரு மார்வாடி யாவாரியாட்டம் ஒரு பொம்மையிருந்துதுங்க…..சரி ஏதோ டொனேசன் குடுத்த ஆளாட்டமிருக்கு…… வாசல்ல செருப்பு கழட்டிவுடற எடத்துல ஓரமாத்தானே இருக்கு…….இருந்துட்டு போகுட்டுன்னுட்டு நினைச்சுகிட்டு

பக்கத்துல இருந்த ஒருத்தர் கிட்ட…… ஏனுங்னா, பாரதியார் சில திறந்தாச்சுங்களான்னு? கேட்டேன்.

அவரு என்ன மேலயும், கீழயும் பார்த்திட்டு,

பார்த்தாத் தெரியலை, இதுதான்னு, அந்த யாவாரி பொம்மய காமிச்சாருங்ணா. அப்பிடியே ஆடிப் போயிட்டனுங்ணா. பொம்மைக்கு கீழ பேரு கூட இல்லங்ணா……… நீங்களே சொல்லுங்ணா…….இது பாரதியார் சிலைங்களாங்ணா?  நம்மளயவே யேமாத்தப் பாக்குறானுங்ணா.
பக்கத்துத் தெரு மார்வாடி யாவாரி சிந்திரகாந்த் சுரேஷ்சந்த் பார்தி சிலைதானுங்ணா இது.?  பத்து இருவது வருசங் கழிச்சி வாரவனுங்க சி.எஸ். பார்தி செல இதுன்னு சொன்னாலும் சொல்லீருவானுங்ணா. சாக்கிரதயா இருக்கோணுமில்லீங்ணா.

பிட் 1:

என்ன நடக்கத்திங்க….

நேற்று ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் நடைபெற்ற “பாரதி விழா” கூட்டத்தில் கோவை பாரதீய வித்யா பவன் தலைவர், திரு பி.கே.கிருஷ்ண ராஜ வானவராயர், கவிஞர்.பெ.தூரன் படத்தை திறப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் திரு சுடலைக் கண்ணன் பாரதி விருது வழங்குவதாகவும்…..(யாருக்கு?) பேர் எதுவும் போடப் படவில்லை.) நெல்லைக் கண்ணன் “பாரதி என்னும் மாமனிதன்” என்ற தலைப்பில் பேசப் போவதாகவும் விளம்பரத் தட்டிகள் இருந்தன. தவிர்க்க இயலாத காரணங்களால் என்னால் அந்த நிகழ்ச்சிக்கு போக முடியவில்லை.

இன்று காலை தினசரிகளில் இது பற்றிய எந்த செய்தியும் இல்லை. சாவுப் பத்திரிக்கையில் வராது போனாலும், தினமும் தந்தியடிக்கும் தமிழர் தந்தையின் பத்திரிக்கை கூட இதைப் பற்றி ஒரு வார்த்தை கூட எழுதாதன் மர்மம் என்ன?

பிட் 2:

அரசாங்க நூலகத்தில் சி.எஸ்.பார்தி சிலை திறக்க அனுமதி பெறப்பட்டதா? அப்படியென்றால், அதைத் அரசாங்கத்தின் எந்த பதவியிலும் இல்லாத ஒரு முன்னாள் அமைச்சர் எந்த அடிப்படையில் திறந்து வைத்தார்? வாசலில் செருப்பு கழட்டிவிடுமிடத்தில் இவ்வளவு அவசரவசரமாக ஒரு சிலை இல்லைன்னு இப்ப யாரு கேட்டா?பிட் 3:
மக்கள் சிந்தனைப் பேரவையின் விழா பற்றிய இருட்டடிப்புக்கும், அவசர கோலத்தில் உள்ளூர் அமைப்பு ஒன்றின் பெயரால் நடத்தப் பட்ட பார்தி சிலை திறப்புவிழாவிற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?


Friday, December 11, 2009

நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா............


                            பாரதி பிறந்த நாள்மனதிலுறுதி வேண்டும்,
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமு மின்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் லுறுதி வேண்டும்
பெண்விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானக மிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்.பாரதியின் குடும்பம்

 


தமிழரின் உயிர் நிகர் தமிழ் நிலை தாழ்ந்ததால்
இமைதிற வாமல் இருந்த நிலையில்
தமிழகம், தமிழுக்கு தகும் உயர் வளிக்கும்
தலைவனை எண்ணித் தவங்கிடக் கையில்
இலகு பாரதிப் புலவன் தோன்றினான்.
பைந்தமிழ்த் தேர்ப்பாகன், அவனொரு
செந்தமிழ்த் தேனி, சிந்துக்குத் தந்தை
குவிக்கும் கவிதைக் குயில், இந்த நாட்டினை
கவிழ்க்கும் பகையை கவிழ்க்கும் கவிமுரசு
நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா
காடுகமழும் கற்பூரச் சொற்கோ
கற்பனை ஊற்றாம் கவிதையின் புதையல்
திறம்பாட வந்த மறவன், புதிய
அறம்பாட வந்த அறிஞன், நாட்டிற்
படறும் சாதிப் படைக்கு மருந்து
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்
அயலார் நெருப்புக் கணையா விளக்கவன்
என்னென்று சொல்வேன், என்னென்று சொல்வேன்
தமிழால், பாரதி தகுதி பெற்றதும்
தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும்
எவ்வாறென்பதை எடுத்துரைக்கின்றேன்

                                                   பாவேந்தன் பாரதி தாசன்.

பாட்டுக்கொரு புலவன்  - பாரதி
அவன் பிறந்த நாளை நினைவு கூர்வோம்

.

Monday, December 07, 2009

வாருங்கள்................வளர்வோம்
உருகிட உணர்வா இல்லை
ஓதிட தமிழா இல்லை.
பருகிட நீரா இல்லை
பார்த்திட கண்ணா இல்லை
பெருகிட வளமா இல்லை
பேணிட பணமா இல்லை
வருகிற சொல்லா இல்லை
வளர்ந்திட மனந்தான் இல்லை

படித்திட நூலா இல்லை
பகர்ந்திட பொருளா இல்லை
நடித்திடக் கலையா இல்லை
நாடகத் தமிழா இல்லை
துடித்திட ஆளா இல்லை
சுவைத்திடச் சுவையா இல்லை
வடித்திடக் கவியா இல்லை
வளர்ந்திட மனந்தான் இல்லை
                                                           நன்றி:
                                                 கவிஞர்.இரா.துரைசாமி
                                                        ( பழத்தோட்டம்) 


 வளரும் மனத்தோடு.....வாருங்கள் ஈரோட்டுக்கு

20/12/2009 ஞாயிறு மாலை 4 மணியளவில்
தொடர்புக்கு:

பாலாசி:90037-05598

Saturday, December 05, 2009

ஈரோட்டுக்கு வாங்கண்ணே.......வலைப்பதிவர் சந்திப்பு


ஊரு கூடி தேர் இழுக்க ஆசைதான்
உருப்படியா ஏதும் செய்ய ஆசைதான்.அக்கத்தூரு பக்கத்தூரு அத்தனைக்கும் சொல்லிவிட்டு
ஆசப்பட்டு அனைவரையும், அன்பொழுக அழைச்சிகிட்டு
சீக்கிரமே ஊரு வந்துடு –செல்லக்கண்ணு
சீமைக்கார மாமன் வரார் செல்லக்கண்ணு.பட்டணத்து பதிவரெல்லாம் பவிசாக வருவாங்க
பக்கத்தூரு பதிவர்களும் பள பளன்னு வருவாங்க
ஏழெட்டு ஊர் பதிவரெல்லாம்-செல்லக்கண்ணு
எறங்கி இங்கே வாராங்கடி செல்லக்கண்ணுகதிரு கூட சேர்ந்துகிட்டு, அகல்விளக்கும்
பாலாசியும், வாலுகூட நானுந்தான்
பதிவர்கள அழைக்கப்போறோம்-செல்லக்கண்ணு
பகிர்ந்துகொள்ள விசயமிருக்கு செல்லக்கண்ணு


மாசம், இந்த திசம்பர்தான், தேதி வரும் இருபது
இனிமையான மாலையில், இனிப்புடனே தொடங்கித்தான்
இரவு வரைக்கும் தொடருமடி- செல்லக்கண்ணு
ஈரோட்டில் நடக்க போகுது செல்லக்கண்ணு ஊரு கூடி தேர் இழுக்கும் முயற்சிதான்
உருப்படியா ஏதும் செய்ய விருப்பந்தான்
வலைப்பதிவர் எல்லாருமே- செல்லக்கண்ணு
பதிவு செஞ்சு கலந்துக்குங்க செல்லக்கண்ணு


Thursday, December 03, 2009

வனம்………..

கடந்த ஒரு மாதமாக கடுமையான வேலை. திருவாசகத்தை எளிய நடையில் பதம் பிரித்து, உரையுடன் வெளிக்கொண்டு வர திட்டமிட்டிருந்தார் எனது தந்தையார். அவரது பணியில் அவருக்கு துணையாக செயல்பட வேண்டிய சூழ்நிலை.

திருவாசகத்தை ஓதுவார்களை வைத்து பாட வைத்து, அதன் பின்னனியில் மாணிக்கவாசகர் சென்று வந்த கோவில்களையும் இணைத்து ஒரு டி.வி.டியும், பாடல்கள் மட்டுமான ஒரு எம்பி3 யும் சேர்த்து வெளியிடுவது என்று முடிவு செய்திருந்தோம். பணிகள் கிட்டதட்ட முடிவடைந்து விட்டது. நாளை மறுதினம் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பன்னிரு திருமுறை வளர்ச்சி மையத்தில் நாளை மறுநாள் வெளியிடப் பட உள்ளது.

இந்த பணிகளின் காரணமாக வலைப்பக்கத்திற்கே வரமுடியாத சூழ்நிலை. பணிகள் நிறைவடைந்த நிலையில் அப்பாவை கோலாலம்பூர் வழியனுப்பிவிட்டு அதே வேகத்தில், இரண்டு நண்பர்களோடு வனத்திற்குள் புகுந்தேன்.

மூன்று நாட்கள், ஆசனூர், பண்டிப்பூர், முதுமலை, சுல்தான் பத்தேரி, வயநாடு, என சுற்றிவிட்டு இன்று காலை வீடு வந்தேன். ஒவ்வொருமுறையும் வனம் எனக்குப் புத்தம் புதிதாய் தெரிகிறது. நிறைய கற்றுக் கொடுக்கிறது….. 

 

 

 
 நேற்று அதிகாலை 5மணிக்கு முதுமலை காட்டுப் பாதை திறப்பதற்காக காத்துக் கொண்டிருந்தோம். அப்போது நான்கு பைக்குகளில் 8 இளைஞர்களும், மூன்று (காதலர்களா அல்லது நண்பர்களா என்று தெரியவில்லை,) பைக்குளில் இளஞ்ஜோடிகளும் எங்களோடு காத்துக் கொண்டிருந்தனர். பாதை 6மணிக்கு திறந்தவுடன், உற்சாகமாக எங்களைப் பார்த்து கையசைத்துவிட்டு, ஆரவாரத்துடன் புறப்பட்டு வனத்திற்குள் நுழைந்தனர். நாங்கள் மெதுவாக பின் தொடர்ந்தோம், சில நிமிடங்களில் எங்கள் கண்களிலிருந்து மறைந்தனர்.

சிறு வண்டுகளின், பெயர் தெரியாத பறவைகளின் ஒலி, தவிர வேறேதும் இல்லை. வனம் அவர்களை விழுங்கிவிட்டதோ என்று எண்ணிக் கொண்டிருந்தேன். சூரியக் கதிர்கள் மெல்ல நுழையத் தொடங்கின.

மெல்ல ஊர்ந்த படி சென்று கொண்டிருந்தோம். திடீரென்று ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்கத்தொடங்கியது. செல்லச் செல்ல அந்த குரல் தெளிவாக கேட்கத்தொடங்கியது. ஒரு திருப்பத்தில் அவர்களைக் கண்டோம். அரைமணிக்கு முன்பாக மகிழ்சியில் சென்ற அந்த குழுவில் இரண்டு இளைஞர்கள், பிணமாக……..

மற்றவர்கள் அந்த இறந்த உடல்களைச் சுற்றி, நின்று கதறி அழுது கொண்டிருந்தனர். அவர்களுள் ஒரு பெண் பெருங்குரலெடுத்து கதறி அழுதாள். அங்கும் மிங்கும் ஓடினாள், இறந்து கிடந்த அந்த உடல்களை தன்னோடு வந்தவர்களுக்கு காட்டி காட்டி ஏதோ சொல்லி அழுதாள். அவள் பேசிய மொழி எனக்கு புரியவில்லை, அனேகமாக கூர்க் பகுதியைச் சார்ந்தவளாக இருக்கவேண்டும்.

சாலை வளைவில் திரும்பாமல், அவர்கள் நேராகச் சென்று,மரத்தில் மோதி, அந்த இடத்திலேயே இறந்து விட்டிருந்தனர். மற்றவர்கள் அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தனர். அதிகாலை அமைதிக்கு நடுவே அவளின் ஓலம் என்னை ஏதோ செய்தது.

என் வாழ்வில் மிக அருகில், பார்த்த, சில நிமிடங்களுக்கு முன் நடந்த மரணம். வன விலங்குகள் ஒலிகளைக் கேட்டு மிரண்டு அருகே வரலாம், எனவே அமைதியாக இருக்கச் சொல்லுங்கள் என்று அந்தப் பெண்ணின் நண்பரிடம் ஆங்கிலத்தில் சொன்னேன். அவரும் அந்தப் பெண்ணை அமைதிப் படுத்த முயன்றார்.

அந்தப் பெண்ணின் அழுகை இன்னும் என் நினைவுகளை விட்டு விலக மறுக்கிறது. நகரத்தின் நாகரீக மங்கை, தன் நிலை மறந்து, உடலெங்கும் சேறும், சகதியும், ரத்தமுமாக அழுது புரண்டது ஏனோ என்னை வதைத்தது. சில நிமிடங்களுக்கு முன் தன்னோடு சிரித்துப் பேசி, ரசித்தவன் நொடிகளுக்குள் பிணமென்றால்……….? அவளின் மனநிலை எப்படி இருந்திருக்கும். …………

என் கண்களில் நீர் வழிகிறது….அந்த முகந்தெரியாத பெண்ணையும், அவள் இழப்பையும் என்னும் போது…........

Saturday, November 14, 2009

கதம்பம்.................

இன்று காலைப் பத்திரிக்கைகளில் வந்த செய்திகளும், அதைத் தொடர்ந்து என் நினைவிற்கு வந்தவைகளையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.......


செய்தி:
முல்லைப் பெரியார் வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு திகைப்பும், வியப்பும் ஏற்படுத்துகிறது. 

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த இயலாத வகையில் புதிதாக ஒரு சட்டத் திருத்தத்தை நிறைவேற்றிட கேரள முதல்வர் போன்று எனக்கு துணிவில்லை.


1998ல் இருந்து நடைபெரும் வழக்கில் 11 ஆண்டுகளுக்குப் பிறகும் தீர்ப்பை எதிர் நோக்கும் நேரத்தில் மீண்டும் ஒரு விசாரணை, ஐந்து நீதிபதிகள் தலைமையில் குழு, என்ற முடிவு-இன்னும் எத்தனை ஆண்டுகளோ என்று வருத்தப் படாமல் இருக்க முடியவில்லை. தாமதிக்கப் பட்ட நீதி- மறுக்கப்பட்ட நீதி என்ற ஆங்கில பழமொழி பலித்துவிடாமல் இருக்க- யாரிடம் போய் முறையிடுவதென்றே தெரியவில்லை.


நினைவிற்கு வந்தது:
விடங்கொண்ட மீனைப் போலும்
வெந்தழல் மெழுகைப் போலும்
படங்கொண்ட பந்தழல்வாய் பற்றிய தேரை போலும்
இடங்கொண்ட ராமபாணம் செருக்களத்து உற்ற போலும்
கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் ஈழ வேந்தன்.

                                                        -கம்பன்
                                                                        
சராசரி இழிச்ச வாயன்(இந்தியன்):
உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவிற்கு,தமிழக அரசின் வழக்கறிஞர் முதலில் ஆட்சேபம் தெரிவித்தவர், பின் எழுத்துப் பூர்வமாக ஏற்பதாக எழுதிக் கொடுதிருப்பதாக முல்லைப் பெரியார்  அணை உரிமை மீட்புக் குழுவின் தலைவர், பழ.நெடுமாறன் குற்றஞ்சாட்டியுள்ளாரே …………….

                   *********************************

 
செய்தி:
இடைத் தேர்தலில் அனைத்து கட்சிகளும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில்லை என முடிவெடுத்தால்  தேர்தலில் போட்டியிடுவோம்-மருத்துவர் ராமதாஸ்.

 படித்ததும் நினைவிற்கு வந்தது

ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்றார்கள்
எதிர்க்கட்சி என்று ஏதுமில்லை
ஆளுங்கட்சி, ஆளவிரும்புகிற கட்சி
என இரண்டு கட்சிகள் தான்

                                                       -தமிழன்பன்

சராசரி இழிச்சவாயன்:
இன்னா.....டாக்டரு…….இன்னாதிது? கெலிச்சுப் போய் நீங்க வாங்குவீங்க..எங்களுக்காண்டி வேற கேமா? (game)

லாபத்திலயா பங்கு கேக்கறோம்…….எதோ புரோக்கரேஜ் மாதிரி ஒரு சின்ன டிப்ஸ் வாங்கிக்கறம்..அது பொறுக்கலையா? உங்களுக்கு.

                   **************************************


செய்தி:

தேசிய ஒருமைப் பாட்டு வாரவிழா- ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரம் நடைபெறும். மாவட்ட ஆட்சியர் சுடலைக் கண்ணன் தகவல்

19/11/2009- தேசிய உறுதிமொழி தின விழா
20/11/2009-பிற்பட்டோர் &சிறுபாண்மையினர் நல தினம்
21/11/2009 மொழி ஒற்றுமை தினம்
22/11/2009-நலிவுற்ற பிரிவினர் தினம்
23/11/2009-கலாச்சார ஒற்றுமைதினம்
24/11/2009-மகளீர் தினம்
25/11/2009-பாதுகாப்பு தினம்

நினைவிற்கு வந்தது:
வெளுத்ததெல்லாம் பாலுமல்ல இந்தியாவே- வெளி
வேசமெல்லாம் உண்மையல்ல இந்தியாவே.

பழுத்த சூதர் தலைவரைப்போல் இந்தியாவே-இங்கு
பழகக் கண்டோம் விழித்துக் கொள்வாய் இந்தியாவே

உதட்டிலே தேன் உள்ளத்திலே நஞ்சு இந்தியாவே-கொண்ட
உத்தமர்கள் மெத்த உண்டு இந்தியாவே

சிலந்திவலை ஈயைக் கொல்லும் இந்தியாவே- தனிச்
செல்வர் கட்சி பொதுமை கொல்லும் இந்தியாவே

மலம் விரும்பும் ஜந்து போல்வார் இந்தியாவே- பண
மகிமை பேசிக் கொள்கை விற்பார் இந்தியாவே.

பணத்தின் ஜாலம் பசப்பு வார்த்தை இந்தியாவே- கொள்கை
பறித்திட நீ பார்த்திடாதே இந்தியாவே

அனைத்தும் தியாகம் செய்தும் இந்நாள் இந்தியாவே- வெற்றி
அடைய லெனின் கொடியின் கீழ் நில் இந்தியாவே

                                                -ஜீவா கவிதைகள்

சராசரி இழிச்ச வாயன்:
தேசியன்ன இன்னாதுபா..ஒரே மெரசளாக் கீது…?

பின்னாடிக்கறவனையும், நலிஞ்சவனையும், நம்ம மினியம்மாளையும் முன்னாடி இட்டாறதுதான் தேசியம் மாமு……..


                                    ******************************************

செய்தி:
இந்தியாவில் குடும்ப அமைப்புகள் சீரழிவதற்குக் காரணம் ஒழுக்கக் கேடான ஆண் பெண் உறவுகளே……….தன்னார்வ தொண்டு நிறுவனம் அறிக்கை

படித்ததும் நினைவிற்கு வந்தது
அப்பனுக்கு அறுபதினாயிரம் மனைவிகள்
ஒரு சந்தேகமும் இல்லை
மகனுக்கு ஒரு மனைவி
ஆயிரம் சந்தேகங்கள்
                                                        -கபிலன்

சராசரி இழிச்சவாயன்:

நோ……..கமெண்ட்ஸ்………..

                                          ************************************************** 

செய்தி:
செல்போனில் வேகமாக பரவும் ஆபாச காட்சிகள்
மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக ஆசிரியருக்கு தர்ம அடி
பெருந்துறை பெண் மர்ம சாவுகள்ளக்காதலனிடம் விசாரணை


படித்ததும் நினைவிற்கு வந்தது:
நமது காலத்தில் காதல் பண்டைக் காலத்து மக்களின் காதலைப் போல் முற்றும் பாலுறவு வேட்கையிலிருந்து பிறந்ததல்ல. முதலாவதாக, இது பரஸ்பார காதலாக இருக்கிறது. இந்த அம்சத்தில் ஆணுக்குச் சமமாக பெண் இருக்கிறாள்.  இரண்டாவதாக இருதரப்பினரும் அன்புடையவர் அருகில் இல்லாத, அதாவது பிரிவைப் பெரிய துன்பமாக கருதுகின்றனர். அதனால் அவர்கள் காதல் தீவிரமும்,நிரந்தரமும் பெற்று விளங்குகிறது.

அவர்கள் ஒருவரையொருவர் அடைய உயிரைப் பணயம் வைப்பதற்கு கூட முன்வருகின்றனர்.

பிரடரிக் எங்கல்ஸ்
குடும்பம், தனிச் சொத்து,அரசு ஆகியவற்றின் தோற்றம்சராசரி இழிச்சவாயன்:

தோழர்சொன்னா கரீட்டாத்தான் இருக்கும்பா…….. அவுரு அவுங்க நாட்டப் பத்தித்தான் சொல்லிருப்பாரு………நாங்க சோசலிஸத்தை வுட்டு நாளாச்சுல்ல……..இப்பல்லாம் நாங்க முதலாளில்ல……

Tuesday, November 10, 2009

யாராச்சும் சொல்லுங்களேன்..........ப்ளீஸ்

இன்று அதிகாலையில் விழித்து விட்டேன். வீட்டின் முன் அறையில் இருக்கும் கணிணியை உயிர்ப்பித்து படித்துக் கொண்டிருந்தேன். நேரம் போனதை அறியவில்லை.

வெளியே ஏதோ சத்தம் கேட்டது………..

என் இரண்டாவது வாண்டு உள்ளே நுழைந்தான்……….

நான்: என்னடா……..பண்ணையக்காரி சத்தம் கேக்குது….என்ன குறும்பு செஞ்ச……………?

அவன்: ஹூம்……….உங்களத்தான் திட்டிகிட்டிருக்கறாங்க……… ஏம்பா? எத்தன தடவ சொன்னாலும் புரியாதா உங்களுக்கு? குட்பாயா நடந்துக்க….மாட்டீங்கறீங்க…………..
இருங்க…இருங்க…..உங்கம்மாகிட்டயே சொல்லறன்………….

நான் : ஏய்….உத வாங்கப் போற…….

அவன்: ம்ம்ம்ம்…..ஏங்கிட்டத்தான் உங்க வீரமெல்லாம்……(இது எப்படி இவனுக்குத் தெரியும்) போங்க……. போங்க..…. மேடம் கூப்படறாங்க…

சமயலறைக்குள் நுழையும் போதே அர்ச்சனை காதில் கேட்கத் தொடங்கியது.

ஒரு பொறுப்பும் இல்ல….இங்க நான் ஒருத்தி காலைல இருந்து தனியா அல்லாடறன்……வேலைக்காரி லீவு………..கூடமாட ஒத்தாச பண்ணாம காலங்கார்த்தால கம்ப்யூட்டர் முன்னால போய் உக்காந்திட்டா…….. என்னதான் செய்யறது……….. ?

இல்லம்மா…….வந்திட்டன்ல…..என்ன செய்யனும்……. .சொல்லு என்று சொல்லி முடிக்குமுன்……

இந்த கத்திரிக்காயை சின்ன சின்னதா வெட்டிக்கொடுங்க…….

நான் சரி என்று ஒரு பாத்திரத்தை கையிலெடுக்க……

பெரிய பாத்திரத்தை எடுத்து காயை நல்லா கழுவீட்டு வெட்டுங்க……

தண்ணீர் பிடித்து, “அஞ்சலி கட்டரை எடுத்து டேபிளின் மேல் வைத்து வெட்டத் தொடங்குமுன்…..

ரொம்ப பெரிசு பெருசா வெட்டாதீங்க……. பொடியா வெட்டுங்க

சரி..........

காம்பை வெட்டிட்டு அப்பறம் வெட்டுங்க……

சரி என்று காம்புகளை வெட்டிவிட்டு காய்களை கழுவிக் கொண்டிருந்த போது……….

என்ன பண்ணிகிட்டிருக்கிறீங்க ……?, எல்லாவற்றையும் தன் பக்கம் எடுத்து வைத்து அவளே வெட்டத் தொடங்கியவள்……

மச மசன்னு நின்னுகிட்டிருக்காதீங்க……. பசங்களுக்கு லஞ்ச்க்கு கொஞ்சம் சப்பாத்தி தேச்சுக் குடுங்க…

சரி என்று , நானும் பிசைந்து வைத்திருந்த கோதுமை மாவைக், கையில் எடுத்தவுடன்.

வரமாவு போட்டு தேயுங்க…..இல்லைன்னா தேய்க்க வராது

சரி என்று தலையாட்டிவிட்டு, மாவையும் அதைத் தேய்க்கும் பலகை, கட்டையை கையில் எடுத்து அதை துடைக்க ஒரு துணியையும் கையிலெடுத்த நேரத்தில்….

பலகைய தொடச்சிட்டு தேயுங்க…….குப்பையிருக்கும்................

சரி என்று சொல்லி, துடைத்துவிட்டு, மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டத்தொடங்குய போது ……

சின்ன சின்னதா உருட்டுங்க……..அப்பறம் தேய்க்க முடியாது.

சரி என்று தலையை மட்டும் ஆட்டி விட்டு சிறிதாக உருட்ட தொடங்கியவுடன்….

என்ன பண்ணிகிட்டிருக்கிறீங்க……தள்ளுங்க……..என்றபடி என்னிடமிருந்த அனைத்தையும் தான் வாங்கி அவளே சப்பாத்தி தேய்க்கத் தொடங்கியவள் என்னைப் பார்த்து,

அரிசி ஊற வைத்திருக்கிறேன். கலைஞ்சு, குக்கர்ல போட்டு, நாலு டம்ளர் தண்ணி ஊத்தி மூடி வையுங்க என்றாள்.

அரிசிப் பாத்திரத்தை எடுக்குமுன்

பெரிய பாத்திரத்தை எடுத்து, தண்ணி நிறைய ஊத்தி கழுவுங்க….

சரி என்று பெரிய பாத்திரத்தை எடுத்து தண்ணீர் பிடித்து அரிசியை அதில் கொட்டியவுடன்………

என்ன பண்ணிகிட்டிருக்கிறீங்க……..போங்க போய் பசங்க ரெடியாயிட்டாங்களான்னு பாருங்க………

ஹாலில் தயாராக நின்று கொண்டிருந்த வாண்டுகள் என்னைப் பார்த்தவுடன் ஒருவொருக் கொருவர் பார்த்துக் கொண்டு கண் சிமிட்டி சிரித்தனர்.

என்னடா……..ரெடியா?…….இங்க நின்னு சிரிச்சிகிட்டிருக்கிறீங்க…….

ஒண்ணுமில்லப்பா என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தனர்…….

ம்ம்ம்ம்….என் பொழப்பு உங்களுக்கு சிரிப்பா இருக்கு என்று நினைத்துக் கொண்டிருந்த போது பின்னிருந்து குரல்……….

என்ன பண்ணிகிட்டிருக்கிறீங்க……டிரைவர் லீவு இன்னைக்கு……நீங்க தான் கொண்டு போய் ஸ்கூலில் விட்டிட்டு வரனும். காரை எடுத்து வெளில வையுங்க………….

கார் சாவியை கையிலெடுத்துத் திரும்புகையில்,

பார்த்து…….. ரொம்ப ரோட்டு ஓரத்தில நிறுத்தி விடாதீங்க……..
அப்பறம் கதவ திறந்து ஏற முடியாது.

சரி என்று சொல்லிவிட்டு காரை ஸ்டார்ட் செய்து காம்பவுண்டுக்கு வெளியே நிறுத்தி விட்டு மெயின் கேட்டை இழுத்து சாத்தத் தொடங்கு முன்….

மீண்டும் என்ன பண்ணிகிட்டிருக்கிறீங்க……….

கதவ நல்லா சாத்திட்டு நீங்க ரெடியாகுங்க………நானே பசங்கள விட்டுட்டு அப்படியே “ஐ ப்ரோ’ ஷேப் பண்ணிட்டு வந்தர்ரேன்….. என்று சொல்லிக் கொண்டே பறந்தாள்.

எனக்குப் புரியவில்லை……என்னை உதவிக்கு கூப்பிட்டாள்….ஆனால் எல்லா வேலைகளையும் அவளே செய்தாள்……..பின் எதற்கு என்னைக் கூப்பிட்டாள்……..

ஏன்? எதற்காக? இவள் இப்படி நடந்துகொள்கிறாள்? இவளுக்கு என்ன ஆயிற்று? வரட்டும் கேட்டு விட வேண்டியதுதான்…..என்று முடிவு செய்து வீட்டிற்குள் சென்றபோது…….. சமையலறையில் ஏதோ சத்தம்……எட்டிப் பார்த்த போது………….

சமையல் மேடைக்கு மேலிருந்த சாமி படத்திற்கு விளக்கேற்றி, பூ வைத்து ஏதோ பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்த அம்மா, அப்பாவிடம்…

குடிக்க சுடுதண்ணீர் கெட்டிலில் தண்ணீர் ஊற்றி ஸ்விட்ச் ஆன் பண்ணுங்க என்று சொல்லிவிட்டு மீண்டும் பாடலை தொடர்ந்தாள்.

அப்பா கெட்டிலில் தண்ணீர் ஊற்றத் தொடங்கியதும்,

என் செய்யறீங்க……..முக்கால் வாசி தண்ணி ஊத்துங்க போதும்….. என்று சொல்லிவிட்டு மீண்டும் ஏதோ முணுமுணுக்கத் தொடங்கினாள்

அப்பா சரி என்று சொல்லிவிட்டு தண்ணீர் பிடித்து ஊற்றத்தொடங்குமுன்………..

மூடியை நல்லா மூடி ஸ்விட்ச் போடுங்க……

அப்பா சரி என்று தலையாட்டி விட்டு மூடியை மூடத்தொடங்குமுன்…

என்ன செய்யறீங்க……தள்ளுங்க……. சுடு தண்ணி வைக்கத் தெரியல….. இதுல ஊர் ஊராப் போயி ராமாயணம் வேற….. என்றவாறு அவளே மூடியை மூடி ஸ்விட்சையும் ஆன் செய்தாள்…..

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என்னைப் பார்த்து அப்பா ஏனோ சிரித்தார். அந்த சிரிப்பு எனக்கு எதையோ அவர் சொல்ல முயல்வதை காட்டியது.

எனக்கு ஒன்று புரிந்தது. இவர்களை புரிந்து கொள்ள முயற்சிப்பதை விட, சரி என்று ஏற்றுக் கொள்வதே சரி. என்று சொல்ல வந்திருப்பாரோ?

ஏன்? எதற்காக? இவள் இப்படி நடந்துகொள்கிறாள்? இவளுக்கு என்ன ஆயிற்று? வரட்டும் கேட்டு விட வேண்டியதுதான்…. என்ற முந்தைய நினைப்பை மறக்கத் தொடங்கினேன்.

ஏன்? ஏன் இப்படி? ஏன் இந்த கொல வெறி என்று இவளைக் கேட்பதைவிட…..உங்களிடம் கேட்பதென்று முடிவு செய்து, இந்த பதிவை இட்டிருக்கின்றேன்……யாராச்சும்  சொல்லுங்களேன்……ப்ளீஸ்