Saturday, February 20, 2010

அவளுக்கான தாஜ்மகால்..

1989 ம் ஆண்டு, அப்போது,  கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்பில் இறுதியாண்டு மாணவன் அவன்.  கல்லூரி தமிழ்ப் பேரவையினுடைய தலைவன்.  கல்லூரி நிர்வாகத்தின் செல்லப் பிள்ளை, முதல்வரும், ஆசிரியர்களும் நெருக்கமானவர்கள்.(வேறு வழி????????)

கல்லூரி நிர்வாகம், எதிர்கட்சியைச் சேர்ந்ததாக இருப்பினும், அவன் ஆளும் கட்சியைச் சேர்ந்தவன்.  ஆளும் கட்சியின் அனைத்துத் தரப்போடும் நெருங்கிய நட்புடையவன்.  கல்லூரிப் பேரவையின் தலைவனாக தேர்ந்தெடுக்கப்பட்ட உடன், அன்றைய முதல்வரைச் சந்தித்து ஆசி பெற்றவன்.  பல அமைச்சர்களை அந்த கல்லூரிக்கு அழைத்துவந்து பல விழாக்கள் நடத்தியவன்.

அந்த திராவிட தலைவனின் பேச்சில் மயங்கியவன், மொழியும், இனமும்  இரண்டு கண்கள் என்று கூறிக்கொண்டு திரிந்தவன்.  தான் சார்ந்த அந்த கட்சியின் நலனுக்காக  எதையும் இழக்கும் துணிவு உடையவன்.  மேடைப்
பேச்சுக்கள் அவனின் மிகப் பெரிய பலம்.

அடிதடி சண்டைகள், காவல் நிலையம், அரசியல்வாதிகளிடம் தஞ்சம், கட்டைப் பஞ்சாயத்து இதெல்லாம் தினசரி நிகழ்ச்சி நிரலில் இருந்தது.  இளம் வயதுக்கே உரித்தான துடிப்பு, வேகம், இன்னும் எல்லாம்.........

அரசியல்வாதி அப்பா, சமையற்கட்டை தாண்டாத தாய், அவன் காலை எழுந்தவுடன் வெளியே சென்றால், நள்ளிரவில் வீடு திரும்புவது வாடிக்கை. எங்கு செல்கிறான், என்ன செய்கின்றான் என்று வீட்டில் யாருக்கும் தெரியாது, தெரிந்து கொள்வதிலும் யாருக்கும் அக்கரை இருந்ததில்லை.

இப்படித்தான் அவனை நான் அறிமுகப்படுத்த முடியும்.


1990ம் ஆண்டு சனவரி 26ம் நாள் புது தில்லியில் நடைபெற இருந்த குடியரசு தின விழாவில், கலந்து கொள்ள, பல்கலைக் கழகத்தின் சார்பில் அனுப்பப்பட்ட சாரணர் குழுவில், கல்லூரி முதல்வர் அவன்பால் கொண்ட பேரன்பினால், அவன் பெயரும் இணைக்கப்பட்டது. அதுவரை அவனுக்கு சாரணர் இயக்கம் பற்றி ஏதும் தெரியாது என்பது தான் உண்மை.

அந்த ஆண்டின் நவம்பர் மாதத்தின் இறுதி நாட்கள்......சென்னையில், தமிழகம் முழுவதிலிருந்தும் வந்து பல்வேறு கல்லூரிகளின் மாணவ மாணவியர்களின் குழுக்களோடு இணைந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்சில் புதுதில்லி நோக்கிய அவன் பயணம் தொடங்கியது.

புதுதில்லியில் இறங்கி,  பின், சுமார் ஒரு மாத காலம், தங்கி ஊர் சுற்றி, மகிழ்ந்த நாட்கள்  விரைவாகவே முடிந்துவிட்டது. எல்லோரும் அவரவர் வீடு திரும்பினர்.  புதிய நண்பர்களோடு சில மாதங்கள் கடிதத் தொடர்பு இருந்தது....பின்னாளில் அதுவும் குறைந்து, நின்று போனது,

அந்தக் குழுவில் இருந்த ஒரு பெண் மட்டும் ஏனோ அவனை மிகவும் பாதித்தாள். அவளோடு பேசிக் கொண்டிருப்பதை அவன் மனம் மிகவும் விரும்பியது. எதிலுமே விருப்பமின்றி திரிந்து கொண்டிருந்த அவன் மீது அவள் காட்டிய அக்கறை அவனை அவளிடம் மிக நெருங்க வைத்தது,  அவளை பார்க்காமல், அவளிடம் பேசாமல் அவனால் இருக்கமுடியாது என்ற நிலைமைக்கு அவன் வந்துவிட்டான்.

வண்ணச் சீரடி மண் மகள் அறிந்திலல் என்பது அவளுக்கே பொருத்தமான வரிகள். இரண்டு சகோதரிகள், தாய், தந்தை பாட்டி என்ற அளவில் அவள் குடும்பம். கேட்டதெல்லாம், கேட்ட உடனே கிடைக்குமளவிற்கு செல்வச் செழிப்பில் வாழ்பவள்.  பகவத் கீதை முழுவதையும் அழகாய் சொல்லக் கூடியவள். பாட்டும், பரதமும் அவள் அசைவிற்கு காத்துக்கிடக்கும்.


அதே கல்லூரியில் இளங்கலை முடித்து, முதுகலை பட்டப் படிப்பில் சேர்ந்து, படிக்கத் தொடங்கியவனின் நடவடிக்கைகள் அனைவரின் புருவத்தையும் உயர்த்தியது.  நடை, உடை, பழகும் விதம் எல்லாவற்றிலும் மிகப் பெரிய மாற்றம்.  அடிதடியில் முன்னிற்பவன் அமைதியாய்...... ஆவேசப் பேச்சுக்கள் குறைந்து அன்பானவனாய்....ஏனோ தானோ என்று படித்தவன் பல்கலைக் கழகத்தின் முதல் மாணவனாய்.........


ஏதோ ஒரு புத்தாண்டின் முன் இரவில், தெருவில் சென்ற ஒருவன், அவனும் அவன் நண்பர்களும் அமர்ந்திருக்கும் போது சத்தமாக விசில் அடித்தான் என்பதற்காக, அவனையும், அவன் நண்பர்கள் எட்டுபேரையும் அடித்துத் துவைத்து மருத்துவமணையில் சேர்த்தவன்,  ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து போகும் ஆக்ராவின் அந்த பளிங்கு மாளிகையின் முன் புற்தரையில் படுத்துக் கொண்டு கண்ணீர் விட்டு கதறுகிறான்.  பல கோடிகளை  விழுங்கி, பல்லாயிரம் மனிதர்களின் உழைப்பைத் தின்று பிரமாண்டமாய் எழுந்து நிற்கும் அந்த கட்டிடத்தைவிட  இத்தனையும் ஒரு பெண்ணுக்காய், அவள் நினைவாய், அவள் மீதான காதலால்  செய்து முடித்தானே, அந்த அன்பு அவன் முன்னால் விசுவரூபமெடுத்து நின்றது.

வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவனுக்கு வசந்த தினம்.  ஆம் அன்றுதான் அவளை, அவள் படித்த பல்கலைக் கழக உணவு விடுதியில் சந்திப்பான்.  ஒன்றாய் மதிய உணவு, ஒருவார நிகழ்வுகள் பற்றிய பரிமாற்றங்கள்...... எதிர் இருக்கையில் அமர்ந்து அவள் பேசுவதை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பது அவனுக்கு பிடித்தமான ஒன்று.

இப்படிச் சென்று கொண்டிருந்த வேளையில் அவளுக்கு திருமணம் உறுதி செய்யப்பட்டது,  அவள் திருமணம் குறித்த தகவலை அவள் தொலைபேசியில் சொன்னபோது உடனடியாக வாழ்த்துச் சொன்னாலும் அவனுள் ஏதோ கனத்தது.  திருமணத்தன்று வாழ்த்துத் தந்தியை அனுப்பிவிட்டு உடல் சோர்ந்து போகுமளவு தெருத்தெருவாய் நடந்து திரிந்தான்.  அதன் பிறகு அவள் நல்ல முறையில் வாழ வேண்டும் என்பதற்காக தினமும் பிரார்த்திக்கத் தொடங்கினான்.

அவளின் நலங்கருதி, அவளை அதற்குப் பிறகு சந்திக்க முயற்சிக்க வில்லை.  அவளோடு இருந்த காலங்களின் பசுமையை நினைவுகூர்ந்து கொண்டே காலந்தள்ள பழகிவிட்டிருந்தான்.......

அவனுக்கும் அவளுக்கும் காதலா?  தெரியாது.......

நட்பா??????தெரியாது............

அதையும் தாண்டியதா????தெரியாது...........

ஆனால் அவள் இருப்பு அவனை மகிழ்ச்சியில் வைத்திருந்தது. அவள் பேச்சு அவனை  அமைதியாக்கியது,,,,,, மனிதனாக்கியது........


எங்கோ, எப்படியோ, போயிக்கொண்டிருந்த அவன் வாழ்வில் ஒரு நெறிமுறையை ஏற்படுத்திக் கொடுத்தவள்.  அவள்...... அவனைப் பொருத்தவரையில் அவள் ஒரு தேவதை..........முற்றிபோன மனநோயைக் குணப்படுத்தி இயல்புக்கு அவனைக் கொண்டு வந்தவள்.........

அவள் நினைவாக இன்றும் அவள் பிறந்த பிப்ரவரி மாத கடைசி நாளில் அவளுக்காய் விரதமிருக்கிறான்.  அவளின் நினைவாக கடந்த இருபது வருடங்களாக அவனுக்குப் பிடித்த இனிப்புச் சுவை மறுத்து வாழ்ந்து வருகிறான். இப்படி அவள் நினைவாக, அவளுக்காக கட்டிய தாஜ்மகாலில் அவன் இன்றும் வாழ்ந்து  வருகிறான்,,,,,,,


Monday, February 15, 2010

கண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை - அமைதியாய் ஒரு புரட்சி
என் 9 வயது குழந்தைக்கு இடது கண்ணில் பார்வை குறைபாடு இருப்பது சமீபத்தில் தான் தெரிய வந்தது. வலது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு மற்றொரு கண்ணால் 10 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்கவைத்துப் பார்த்தபோது அவனால் படிக்கமுடியவில்லை. ஆனால் அதே  இடது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு வலது கண்ணால் 20 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்க முடிகிறது.


இரண்டு கண்களாலும் பார்க்கும் போது  இந்த குறைபாடு தெரியவதில்லை.   ஆனால் பள்ளியிலே கரும்பலகையில் எழுதும் வரிகளைப் படிக்கும்போது சிரமப் படுகின்றனர்.  ஆனால் அதை அவர்கள் சொல்வதில்லை.  எல்லோருக்கும் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துவிடுகின்றனர். 


ஈரோட்டில் உள்ள மிகப் பெரிய கண் மருத்துவமணையில் பரிசோதித்த போது, நிரந்தரமாக கண்ணாடி அணியவேண்டும் என்று சொல்லிவிட்டனர்.  கண்ணாடியும் வாங்கி கொடுத்துவிட்டேன்.


அடுத்த சில நாட்களில்,   என்னுடைய பள்ளித் தோழர்.ஒருவரை சந்தித்தேன்.....பள்ளி நாட்களிலேயே பெரிய சோடாபுட்டிக் கண்ணாடி அணிந்திருந்தார். -6 என்ற அளவில் கண் பார்வைக் குறை அவருக்கு இருந்தது.  ஆனால் நான் சந்தித்த அன்று கண் கண்ணாடி அணியாமல், பைக் ஓட்டிவந்ததை பார்த்தவுடன் மிகவும் ஆச்சரியமடைந்தேன்.


என்னப்பா, கண்ணாடி போடாத உன்னை அடையாளமே தெரியவில்லை.......கண்களுக்கான அறுவைசிகிச்சை செய்து கொண்டாயா? அல்லது காண்டாக்ட் லென்ஸ்ஸா? என்று கேட்டேன். 

பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் கண்பார்வை குறைபாடுகளை நீக்க பயிற்சி அளிக்கின்றனர்.  அதில் போய் பயிற்சி பெற்று வந்தேன். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக கண்ணாடி அணிவதில்லை என்றதை கேட்டதும் ஆச்சரியப்பட்டுப் போனேன்.அவரிடம் மேலும் தகவல்களை வாங்கிக் கொண்டு இளவலை அழைத்துக் கொண்டு பாண்டிச்சேரி  வந்து சேர்ந்தேன். 

பாண்டிச்சேரி, கடற்கரை சாலையின்,  வடக்கு மூலையில், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் இந்த பள்ளி அமைந்திருக்கிறது.
திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் அந்த பள்ளிக்குச் சென்றேன்.  அப்பள்ளிக்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் விடுமுறை. ஞாயிற்றுக் கிழமை வேலை செய்கிறார்கள்.  எனவே மறுநாள் காலை 8 மணிக்கு வரச்சொன்னார்கள்.
இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற  எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை, நாம் விருப்பப்பட்டு கொடுக்கும் நன்கொடையை மட்டும் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவிக்கப் பட்டது.


விடுமுறை தினமாக இருந்த போதும், அங்கிருந்த ஒரு உதவியாளர், எங்கே தங்கியிருக்கிறீர்கள்? என்று கேட்டார். இனிதான், ஏதாவது ஹோட்டலில் அறை எடுக்க வேண்டும் என்றேன்.  அவசியமில்லை, ஆசிரமத்தின் விடுதியில் தங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி ஆசிரம விடுதியின் தொலைபேசி எண்ணை கொடுத்தார்.


அழகான தனியறை.  குளியலறை இணைந்த, இரண்டு படுக்கைகள், கொண்ட அந்த அறைக்கு வாடகை நாள் ஒன்றுக்கு ரூ.70/- மட்டுமே. 


செவ்வாய்கிழமை காலை 8 மணிக்கு அங்கு சென்றேன். ஆரம்ப கட்ட பெயர் பதிவு, பரிசோதனை ஆகியவற்றை முடித்து, பயிற்சி தொடங்கப் பட்டது.  சுமார் 2 மணி நேரம் பயிற்சி அளித்தனர்.


கிட்டப் பார்வை, தூரப்பார்வை, போன்ற அனைத்து கண் குறைபாடுகளுக்கும் பயிற்சி அளிக்கின்றனர்.  நான் சென்ற போது ஹைதராபாத்திலிருந்து ஒரு தம்பதியினர் தங்கள் இரண்டு பெண்குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர்.  8, 4 வயதுடைய அந்த இரண்டு குழந்தைகளும் கண்ணாடி அணிந்திருந்தனர்.  அக் குழந்தைகளின் தந்தையும் கண்ணாடி அணிந்திருந்தார். 


அவரின் நண்பரின் ஆலோசனையின் பேரில் குழந்தைகளை அழைத்துவந்திருப்பதாக சொன்னார்.   நேரம் ஆக ஆக, பல குழந்தைகள், நடுத்தரவயதினர், வயதானவர்கள் என்று சுமார் 30 அல்லது 40 பேர்கள் பயிற்ச்சிக்கு வந்திருந்ததை பார்க்க முடிந்தது. இதில் பல வெளிநாட்டவர்களும் அடக்கம்.


செய்வாய் முதல் ஞாயிறுவரை 6 நாட்கள் இப்பயிற்சியை நடத்துகின்றனர்.  காலை 8 மணிமுதல் 10 மணிவரை, மாலை 3 மணிமுதல் 5 மணிவரை.   நாள் ஒன்றுக்கு 4 மணிநேரம் பயிற்சி கொடுக்கின்றனர்.  முறையான கண் சிமிட்டுதல், தூரத்தில் இருப்பதை படிப்பது, இருட்டு அறையில் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் சிறு எழுத்துக்களை படிப்பது போன்ற பல பயிற்சிகள்.....


ஆச்சரியப் படும் விதமாக, பயிற்சி முடிந்த ஆறாவது நாள் அங்கேயே கண் பரிசோதனை செய்து பார்த்ததில் பார்வையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது.  தொடர்ந்து ஆறுமாதம் பயிற்சியை தொடருங்கள் பின் கண் பரிசோதனை செய்து பாருங்கள்.....கண்ணாடி அணிய வேண்டிய அவசியமே வராது என்று பயிற்சியாளர் சொன்னார்.

கடந்த 40 ஆண்டுகளாக இந்த பள்ளி நடப்பதாகவும், இதுவரை ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்றிருப்பதாகவும் அறிந்து கொண்டேன்.  முன்கூட்டியே பதிவு செய்து கொண்டு செல்வது நல்லது.  மார்ச் முதல் வாரம் முதல் ஜூன் முதல்வாரம் வரையிலான பள்ளிக்கூட விடுமுறை நாட்களில், அதிகமான கூட்டம் வருவதால் அந்த காலகட்டத்தில் செல்ல விரும்புபவர்கள் முன் கூட்டியே பதிவு செய்தால் தான் இடம் கிடைக்கும்.


பயிற்சிகள் முடிந்து வெளியே செல்லும் வாயிலின் மேல்புறத்தில் இருந்த "மதர் மிரா" வின் இந்த வாசகம் பல அர்த்தங்களை எனக்குச் சொன்னது...............
பயிற்சி குறித்த மேலும் விவரங்கள்
SCHOOL FOR PERFECT SIGHT
PONDICHERRY

PHONE: 0413-2233659
EMAIL:  auroeyesight@yahoo.com
               auroeyesight@vsnl.net