Thursday, April 26, 2012

நளவெண்பா -2




தமயந்தியை மணக்கச் சுயம்வரத்திற்கு செல்லும் நளனை  வருணன், இயமன், அக்கினியோடு வரும் இந்திரன் பார்த்து, நாங்கள் ஏவும் வேலைக்கு இசைவு தெரிவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றனர். நளனும் என்னவென்று கேட்காமல் இசைகின்றான்.

தமயந்தி எங்களில் ஒருவருக்கு மணஞ்சூட்டுமாறு அவளிடம் தூது போக வேண்டுகின்றனர். 

காதலிக்கிறான் என்று தெரிந்தும், காதலிப்பவனையே தூதாக அனுப்ப முடிவு செய்த இந்திரனின் திறமையையும்,  என்னை மணக்க தூது செல் என்றுசொல்லாமல், எங்களில் ஒருவருக்கு என்று கூறும் தேவர்களின் பொதுவுடமைக் கோட்பாட்டையும் பாராட்டித்தான் ஆகவேண்டும்.

செங்கண் மதயானைத் தேர்வேந்தே தேமாலை
எங்களிலே சூட்ட இயல்வீமன் - மங்கைபால்
தூதாக
என்றானத் தோகையைத்தன் ஆகத்தால்
கோதாக வென்றான்அக் கோ.

தேவர்கள் இட்ட பணியைத் தலைமேல் சுமந்து செல்லும் நளனுடைய மனம்  தேவர்கள் பாலும், தன் காதலியின் பாலும் துணி நெசவில் பாவிற்கு இடையே சென்று சென்று வரும் ஊடை நூல் தாங்கும் மூங்கில் குழல் போல் மாறி மாறி சென்று வந்தது.   அட….அட…..என்ன கற்பனை.

தேவர் பணி தலைமேற் செல்லுந் திரிந்தொருநான்
மேவும் இளங் கன்னிபால் மீண்டேகும்- பாவிற்
குழல்போல் நின்று உழலுங் கொள்கைத்தே பூவின்
நிழல் போலுந் தண்குடையான் நெஞ்சு.


வேறு வழியின்றி கொடுத்த வாக்கை காப்பாற்ற, நளன் தமயந்தியை நோக்கிச் செல்கின்றான். காவலர் அறியாமற் செல்லும் பொருட்டு, நளன் தம் உருத்தெரியாமல் எங்கே வேண்டுமானாலும் செல்லும் வகையில், ‘மாலிகாஞ்சனம்” என்னும் மந்திரத்தை உபதேசித்து அனுப்புகிறான் இந்திரன்.

நளனும் தமயந்தியும் சந்திக்கின்றனர்.

நீண்ட கூந்தலை உடைய தமயந்தி தன் காதல் வேட்கையை, விருப்பத்தை தனக்குள்ளே அடக்கி வீட்டுள் தாளிட்டு, வைப்பதுபோல வைத்திருந்தாள்.
பெரிய தாமரை மலர்களை நீலோற்ப மலர் சென்று தீண்டுவது போல், இருவரது கண்களும் ஒன்றோடொன்று பொருந்திய மாத்திரையில் நாணம் ஒழிந்து நின்றாள்.

நீண்ட கமலத்தை நீலக் கடைசென்று
தீண்டும் அளவிற் திறந்ததே- பூண்டதோர்
அற்பின் தாழ் கூந்தலாள் வேட்கை அகத்தடக்கிக்
கற்பின்றாழ் வீழ்ந்த கதவு.
 
நளனின் வலிமையான, அழகான பரந்த நெஞ்சையும், தோள்களையும் தன் கண்களால் பரிசிக்கிறாள் தமயந்தி.  நெஞ்சு தடவும் நெடுங்கண்கள், விஞ்சவே நீண்டதோ?  பெரிய செந்தாமரை மலரில் உள்ள திருமகள் தனக்கு இடமாகக் கொண்டிருக்கும் கடல் போன்ற,  நளனின் அழகாகிய கடலை நீந்திக் கரையேறுவது எப்படி என்று ஆச்சரியப்பட்டதாக எழுதுகிறார் கவிஞர்.

உய்ஞ்சு கரை ஏற ஒட்டுங்கொலோ ஒண் தொடியாள்
நெஞ்சு தடவு நெடுங்கண்கள்- விஞ்சவே
நீண்டதோ வங்ஙனே, யிங்ஙனே நீண் மலராள்
ஆண்டதோள் மன்னன் அழகு.

மிகுந்த அழகுடையவனாக விளங்குகின்ற நளனின் மீது மோகங்கொண்ட தமயந்தி, அவனை இறுகத் தழுவ நினைக்கின்றாள் ஆனால் நாணம் வந்து தடுத்துவிடுகிறது. தான் கொண்ட பெரிய  யானை போன்ற ஆசையை, நாணம் என்ற சிறிய கட்டுந்தறி உள் புகுந்து தடுத்துவிட்டது என்பதாகப் பொருள். எழுந்த காமத்திற்கு “ எடுத்த பேரண்பு” என்றே சொல்லுகிறார். 

மன்னாகத்துள் அழுந்தி வார் அணிந்த மென் முலையும்
பொன் நாணும் புக்கொளிப்பப் புல்லுவான்  என்றுன்னா
எடுத்த பேரண்பிடையே புகுந்து
தடுத்ததே நாணந் தறி.

ஸ்ஸ்ப்ப்பா…………………முடியல…….

பாலாப் பழத்தை பிச்சி சொளையெடுக்கறமாதர இருக்கு, பழத்து மேல இருக்கிற ஆசை படிக்கறது மாதிரியும், எழுதறது அதிலிருக்கற பிசின் மாதிரியும் இருக்குது……...

இப்போதைக்கு முடியாது போல இருக்குது இந்த  நளவெண்பா….. …….வருசம் புடிக்குமாட்டமிருக்குது படிச்சி, முடிக்க.

நன்றி:
நளவெண்பா மூலமும் உரையும்:
வீ. ஆறுமுகஞ்சேர்வை, தலைமைத்தமிழாசிரியர், மதுரை அமெரிக்கன் கல்லூரி
ஆ. கார்மேகக் கோனார், தலைமைத் தமிழாசிரியர், மதுரை சொளராஸ்டிரா ஹைஸ்கூல்,
பு. சிதம்பர புன்னைவன நாத முதலியார் ஆகியோர் இணைந்து விருத்தியுரை எழுதியது.



Thursday, April 12, 2012

நளவெண்பா










சிறு வயதில், கோவில் விழாக்களில், நளன் தமயந்தி கதை என்னும் கூத்து நடத்தப் படும்போது பார்த்திருக்கின்றேன். அப்பொழுதெல்லாம் அது எனக்குப் புரியவும் இல்லை.  நள வெண்பா, இராமயணம், பாரதம், பகவத்கீதை போன்றவற்றை வீட்டில் வைத்திருக்கக் கூடாது. படிக்கவும் கூடாது என்ற நம்பிக்கை கொங்கு மண்டலத்தில் ஒரு சாராரிடம் உண்டு.  ,

நளவெண்பாவில் நிறைந்திருக்கும் கவிதையுணர்ச்சி, மொழி ஆளுமை, காட்சிப் படுத்துதல், போன்ற பலவும் நம்மை வியப்பில் ஆழ்த்தியது உண்மை. 

மொத்த நளவெண்பாவுக்கு உரை எழுதும் அளவிற்கு நான் தமிழ் படித்த புலவனும் இல்லை, அதற்குண்டான பொறுமையும் எனக்கு இல்லை.  எனவே நான் ரசித்த சிலபல பாடல்களை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.

புகழேந்திப் புலவர்:

தொண்டை நாட்டிலே பிறந்து, பாண்டியன் வரகுணன் அவையிலே இருந்தவர், சோழன் குலோத்துங்கன், பாண்டியன் வரகுணன் மகளை மணந்த போது இவரும் குலோத்துங்கன் அரசவைக்கு வந்து ஒட்டக் கூத்தருடன் பல இலக்கிய மோதல்களை நடத்தியவர்.

ஒட்டக் கூத்தரோடு மன வேறுபாடு கொண்டிருந்த காலத்தில் மள்ளுவ நாட்டைச் சார்ந்த குறுநில மன்னன் சந்திரன் சுவர்க்கியின் ஆதரவோடு வாழ்ந்து வந்தார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க நள வெண்பா இயற்றியதாக கூறப் படுகிறது.

விநாயகர், நம்மாழ்வார், திருமால், சிவபெருமான், முருகன் ஆகியோர் பெயரில் கடவுள் வணக்கம், எழுதி பின் அவையடக்கம் நூலாசிரியர்  பற்றிய குறிப்போடு தொடங்குகிறது.

சுயம்வர காண்டம்
கலி தொடர் காண்டம்
கலி நீங்கு காண்டம்
என்ற மூன்று காண்டங்களை உள்ளடக்கி எழுதப் பட்டிருக்கிறது

கதைச் சுருக்கம்:

மகாபாரதக் கதையோடு பின்னப் பட்ட ஒரு கதையாகவே நளவெண்பா தொடர்கிறது.  வனத்திலே தங்கியிருக்கும் தருமனைக் காணவருகிறார் வேத வியாசர். நாடாண்ட தான் இப்படி வனம் புகுந்தது குறித்து வருத்தப் படுகிறார் தருமர்.  இது போன்று நாடிழந்து வனமேகி வாழும் நிலை ஏன் ஏற்பட்டது?, இது போன்ற துயர் வேறு யாருக்கும் வந்திருக்கிறதா இவ்வுலகத்திலே என்று தருமர் கேட்க, நளனின் கதையைச் சொல்லத் தொடங்குகிறார் வேத வியாசர்.

நிடத நாட்டுச் சிறப்பைச் சொல்லி, மாவிந்த நகர்ச் சிறப்பைச் சொல்லித் தொடங்குகிறார். அதன் மன்னன் நளன்.

நளன் சிறப்பு:

ஓடாத தானை நளனென்றுளன் ஒருவன்
பீடாரும் செல்வப் பெடை வண்டோ- டூடா
முருகுடைய மாதர் முலை நனைக்கும் தண் தார்
அருகுடையான் வெண்குடையான் ஆங்கு.

நளன் செங்கோல்:

சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை அறம்கிடைப்பத்
தாதவிழ்பூ ந்தாரான் தனிக் காத்தான்- மாதர்
அருகூட்டும் பைங்கிளியும் ஆடற் பருந்தும்
ஒருகூட்டில் வாழ உலகு.


வேனிற்காலம் தொடங்கும் நாளில்,நளன் ஒருநாள் பூஞ்சோலைக்கு உலாவப் போகிறான், அங்கே ஒரு அன்னப் பறவையை காண்கிறான். அதைப் பிடித்து வரும்படிக்கு கூறுகிறான். அந்தப்புற சேடிப் பெண்களும் அதைப் பிடித்து வருகின்றனர். அன்னப் பறவையின் அழகைக் கண்டு வியந்து அதனோடு பேசுகிறான். அன்னப்பறவையும் பயம் நீங்கி நளனோடு அளவளாவுகிறது.

இவ்வாறு தொடரும்போது, தமயந்தியைப் பற்றி அன்னப் பறவை கூறுகிறது. விதர்ப்ப நாட்டின் மன்னன் மகள் தமயந்தி அவள்தான் உனக்குப் பொருத்தமானவள் என்று கூறி தமயந்தியின் அழகைச் சொல்லுகிறது அன்னம்.  ரசனையான வரிகள்:


ஆளுமே பெண்மை அரசு:

நாற் குணமும் நாற்படையாம், ஐம்புலனும் நல் அமைச்சர்
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசாம், வேற்படையும்
வாளுமே கண்ணாம் வதனமதிக் குடைக்கீழ்
ஆளுமே பெண்மை அரசு.


புலம்பும் நூபுரங்கள் : (நூபுரம்-காற்சிலம்பு)

மேட்டிளங் கொங்கை முடியச் சுமந்தேற
மாட்டது இடை என்று வாய்விட்டு-நாட்டேன்
அலம்புவார் கோதை அடியணையில் வீழ்ந்து
புலம்புமாம் நூபுரங்கள் பூண்டு

நுடங்கும் இடை:

என்றும் நுடங்கும் இடையென்ப ஏழுலகம்
நின்ற கவிகை நிழல் வேந்தே- ஒன்றி
அறுகால் சிறுபறவை அஞ்சிறகால் வீசும்
சிறுகாற்றுக்கு ஆற்றாது தேய்ந்து.

மலர்வாளி தீட்டும் இடை:

செந்தேன் மொழியாள் செறியளகப் பந்தியின் கீழ்
இந்து முறியென்று இயம்புவர்-வந்தென்றும்
பூவாளி வேந்தன் பொருவெஞ் சிலைசார்த்தி
ஏவாளி தீட்டும் இடம்

அன்னம் விடுதூது:
தமயந்தியின் அழகைக் கேட்டு வியந்த நளன் அன்னத்தை தூதாக அனுப்புகிறான்.

வீமன் திருமடந்தை மென்முலையை உன்னுடைய
வாம நெடும்புயத்தே வைகுவைப்பேன் என்று உறுதிகூறிப் பறக்கிறது அன்னம்.

விரகதாபத்தில் நளன்:

இவ்வளவிற் செல்லுங்கொல், இவ்வளவிற்காணுங்கொல்
இவ்வளவிற் காதல் இயம்புங்கொல் – இவ்வளவில்
மீளுங்கொல் என்றுரையா விம்மினான் மும்மதம் நின்
நின்றாளுங் கொல் அரசு.

சேவல் குயிற்பேடைக்குப் பேசும் சிறுகுரல் கேட்டு
ஆவி உருகி அழிந்திட்டான் – பூவின்
இடையன்னம் செங்கால் இளவன்னம் சொன்ன
நடையன்னம் தன்பால் நயந்து.


காமவிடாய் ஆறேனோ?

கொங்கை இளநீரால், குளிர்ந்த இளஞ் சொற்கரும்பால்
பொங்கு சுழி என்னும் பூந்தடத்தில் – மங்கை நறும்
கொய்தாம வாசக் குழல்நிழற்கீழ் ஆறேனோ
வெய்தாமக் காமவிடாய்

தூதாகச் சென்ற அன்னம் நளனின் அருமை பெருமைகளையெல்லாம் சொல்ல, தமயந்தியும் காதல் வசப் படுகின்றாள்.

மன்னன் மனத்தெழுந்த மையல் நோய் அத்தனையும்
அன்னம் உரைக்க, அகமுருகி – முன்னம்
முயங்கினாள் போல் தன் முலை முகத்தைப் பாரா
மயங்கினாள் என்செய்வாள் மற்று

காதல் வசப்பட்ட தன் நிலையை நளனுக்கு தெரிவித்து வருமாறு அன்னத்தை வேண்டுகிறாள் தமயந்தி.

மன்னன் புயம் நின் வனமுலைக்கு கச்சாகும்
என்ன முயங்குவிப்பேன் 

என்று அன்னம் உறுதிகூறி நளனைக் காணப் புறப்பட்டது.

தமயந்தியின் நிலை மாற்றத்தை உணர்ந்து தோழிகள் அவள் தாயிடம் கூற, அவளும் வீமராசனிடம் மகளுக்கு மணம் முடிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்த, அரசனும், சுயம்வரத்திற்காக முரசு அறிவிக்கிறார். பல நாட்டு மன்னர்களும், திரண்டு வருகின்றனர் சுயம்வரத்திற்காக.

நளனைக் காண  அன்னம்  வருதல்:

வழிமேல் விழிவைத்து வாள்நுதலால் நாம
மொழிமேல் செவிவைத்து மோகச் – சுழிமேல்தன்
நெஞ்சாட வைத்தயர்வான் கண்டான் நெடுவானில்
மஞ்சோட அன்னம் வர.

தமயந்தியின் காதல் குறித்துக் கேட்ட நளன்

கேட்ட செவிவழியே கேளாத உணர்வோட
ஓட்டை மனத்தோடு உயிர்தாங்கி – மீட்டும்
குழியிற் படுகரிபோல் கோமான் கிடந்தான்
தழலிற் படுதளிர் போற் சாய்ந்து.

வீமராசனின் தூதுவர் நளனிடம் வந்து சுயம்வரம் குறித்துக் கூறி அழைக்கின்றனர். நளனும் தேர் பூட்டிப் புறப்படுகின்றான்.

இந்த நேரத்திலே இந்திரனைக் காண வானுலகம் செல்லுகிறார் நாரதமுனி. அங்கே சென்றவர் தமந்தியின் சிறப்பையும், அவளின் சுயம்வரம் பற்றியும் கூறுகிறார்.

அழகு சுமந்திளைத்த ஆகத்தால் வண்டு
பழகு கருங்கூந்தற் பாவை – மழ களிற்று
வீமன் குலத்துக்கோர் மெய்த்தீபம் மற்றவளே
காமன் திருவுக்கோர் காப்பு.

தமயந்தியின் அழகில் மயங்கி, இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் சுயம்வரத்தில் கலந்து கொண்டு தமயந்தியை மணக்க விரும்பி வருகின்றனர்.

மீதியை மீண்டும் தொடர்வேன்……


http://tamilkirukkan.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D/

Wednesday, March 28, 2012

கீதை எனும் புரட்டு.......







2002ஆம் ஆண்டு வெளியான தமிழரும் கீதையும்ஓர் ஆய்வு எனும் நூல் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் எழுதியதைப் படித்தேன்.இதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பியே இந்தப் பதிவு. தமிழ்க் குலம் பதிப்பாலயம், 33, நரசிம்ம புரம், மயிலை, சென்னை பதிப்பகத்தில் வெளியாகியிருக்கிறது இந்த புத்தகம்.

இந்துக்களின் புனித நூலாக உருவகப் படுத்தப்பட்டு, பொய்யான பிம்பத்தை கட்டமைக்கும் பணியில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கும் இந்து மதவாதிகள் முன் அவர் வைக்கின்ற கேள்விகள்  நியாயமானதா? இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழ் மொழியில் சங்க காலத்திலிருந்து பதிமூன்றாம் நூற்றாண்டுவரைதோன்றிய இலக்கியங்களில் கீதை பற்றிய குறிப்புகளோ, கீதையின் தாக்கமோஇடம்பெறவில்லை என்பது வரலாற்றுப் பூர்வமான உண்மை. இந்தஉண்மையை இலக்கிய ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டுவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்” 

என்று தொடங்கும் ஆசிரியர், தன் கருத்தை உறுதிப் படுத்த தொடர்ந்து பல்வேறு ஆதாரங்களை தருகிறார்.

மகாபாரதப் போர் கி.மு. 3201 முதல் கி.மு.900 வரையுள்ள பல காலகட்டத்தில் நடந்திருக்கலாம் என பல அறிஞர்கள் கூறுகின்றனர்.

மொகஞ்சதாரோவில் கிடைத்த தடயங்களிலிருந்து ஆரியர்கள் முதன் முதலாக பாரதத்தில் கி.மு.2500ல் குடியேறியிருக்க வேண்டுமெனத் தெரிகிறது. புகழ்பெற்ற தஸ்யூக்களை அடக்கி பஞ்சநதத்தை வென்று, கி.மு1500ல் யமுனைக் கரையையடைந்த ஆரியர்கள், கங்கைச் சமவெளியைக் கைப்பற்ற மேலும் பல ஆண்டுகள் ஆயின.  இந்தியா வந்தடைந்த ஆரியர்கள், யமுனை நதிக்கரையை அடைவதற்கிடையில் பல கட்டங்களில் வேதங்கள் எழுதப் பட்டன. அவற்றில் எதிலும் மகாபாரதப் போர் குறித்து எழுதப்படவில்லை.

கி.மு 1500க்கும் 1200க்கும் இடைப்பட்ட காலத்தில் ரிக் வேதம் எழுதப் பட்டிருக்க வேண்டுமென்று செர்மானிய அறிஞர் மாக்ஸ் முல்லர் கருதிகிறார். ஏனைய வேதங்கள் கி.மு.1200க்கும் கி.மு.800க்கும் இடையில் எழுதப்பட்டதாக கருதப் படுகிறது. கி.மு.800முதல் 600வரை பிராமணங்கள் எழுதப்பட்டன. அதற்குப் பின்னரே உபநிடதங்கள் உருவாகின.  இவற்றில் எதிலுமே மகாபாரதப் போர் பற்றிய குறிப்புகள் இல்லை.

இந்தியத் தொல்பொருள் ஆய்வாளர், அறிஞர் முனைவர். சி.சி. சர்க்கார் ,மகாபாரதப் போர் உண்மையான வரலாற்று நிகழ்ச்சி அல்ல” என்று கூறுகிறார். அதற்கு அவர் கீழ் கண்ட காரணங்களை முன் வைக்கிறார்.

1.   வேத சாகித்தியத்தில் எங்குமே பாரதப் போர் பற்றிக் கூறப்படவில்லை.
2.   பவுராணிகர்களுக்குக் கூட மகாபாரதப் போர் எப்போது நடந்தது என்று தெரியவில்லை.

3.   கி.மு.4 ஆம் நூற்றாண்டிற்கு முன்னருள்ள எந்தவோர் இலக்கியத்திலும் மகாபாரதப் போர் பற்றிக் குறிப்பிடப் படவில்லை.

4.   மகாபாரதப் போர் நடந்த குருசேத்திரம் ஒர் போர்க்களமாக வேதங்களில் எங்கும் கூறப்படவில்லை.

மொகஞ்சதாரோ அரப்பாவில் வாழ்ந்த மக்கள் இரும்பை அறிந்திருக்கவில்லை.  கி.மு 3000லோ கி.மு.4000த்திலோ பாதப்போர் நடந்ததாக எடுத்துக் கொண்டால், அவர்கள் இரும்பாலான அயுதங்களை பயன்படுத்தவில்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டிவருமென்று டாக்டர் சங்காலியா சுட்டிக் காட்டுகிறார். கி.மு 6ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் இரும்பாலான ஆயுதங்கள் இந்தியாவில் பயன்படுத்தப் படவில்லையென்றும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

குருசேத்திரத்தில் நடந்த அகழ்வாராய்ச்சிகளிலும் இந்த மகாயுத்தத்தோடு சம்மந்தப்பட்ட எந்தவொன்றும் கிடைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது என்று குறிப்பிடுகின்றார்.

டாக்டர் டி.டி.கோசம்பி எனும் மார்க்சிய அறிஞர் கீதை எழுதப்பட்ட காலம் கி.பி.6ஆம் நூற்றாண்டு என்று நிர்ணயிக்கிறார்.

கீதைக்கு எழுதப்பட்ட விளக்கவுரைகளில் மிகவும் பழமையானது ஆதிசங்கரரின் விளக்கவுரைதான். என கருதப்படுகிறது.  கி.பி.788 முதல் கி.பி  820 வரையில் உள்ள காலத்தில் தான் சங்கரரின் வியாக்கியானம் எழுதப் பட்டிருக்க வேண்டுமென்று கருதப் படுகிறது.

புத்தமதம் வலிமை கொண்டதாக இருந்த போதிலும் மகத ஆட்சிகாலத்தின் இறுதியில் பழைய கட்டுத்திட்டங்கள் தகர்க்கப் பட்டன. அந்த காலத்தில் சமுதாய பரிணாம வளர்ச்சிக் கட்டத்தைக் கருத்தில்கொண்டு பார்க்கும்போது பழையவற்றைப் புதுப்பித்துப் புதிய மதம் உருவாக வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அந்த புதிய மதத்திற்கு வழிகாட்டும் ஒரு வேதம் தேவைப்பட்டது அது தான் கீதையாக உருவகப் படுத்தப் பட்டது.

கி.பி 300முதல் 500 வரையான குப்தர் காலத்தில்தான் ஸ்மிருதி, புராணங்கள், மகாபாரதம், கீதை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த புதிய மதம் பின்னப்பட்டதாக அறிஞர் எஸ்.டி.சர்தேசாய் கருதிகிறார்.

இவ்வாறாக நூல் முழுவதும் அறிஞர்களின் கருத்துக்களை பதிவு செய்துள்ள ஆசிரியர் மேலும் கூறுவதாவது’

மகாபாரதம் ஒரு தொகுப்பு நூல். பல பர்வங்களாகவும், உபபர்வங்களாகவும் அத்தியாயங்களாகவும், அது பிரிக்கப் பட்டுள்ளது.  மகாபாரதத்தில் உள்ள ஆறாவது பர்வம், பீஷ்ம பர்வம். பல உப பர்வங்களாக பிரிக்கப் பட்ட பீஷ்ம பர்வத்தில் மூன்றாவது உப பர்வமே கீதா பர்வம். பீஷ்ம பர்வத்தில் 13 முதல் 42 வரையுள்ள அத்தியாயங்களில் 25 முதல் 42 வரையுள்ள 18 அத்தியமே பகவத்கீதையாகும்.

கி.மு.முதலாம் நூற்றாண்டில் வட இந்தியாவில் வடிவம் பெற்ற வைணவ மதத்தைப் பரப்புவதில் ஈடுபட்டவர்கள் மதப் பிரச்சாரத்திறு எழுதிய நூலே மகாபாரதம். அதற்கும் வரலாற்றுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஜோசப் இடமருகு கருதுகிறார். மேலும் இதுபற்றி அவர் பின்வருமாறு எழுதியிருக்கிறார்.

கிருஷ்ணன், கி.மு.4ஆம் நூற்றாண்டு முதல்தான் வழிபாட்டுக் கடவுளானார் என்பதற்கு சான்றுகள் உள்ளன.  அக்காலத்தில் வாழ்ந்த பாணிணி என்ற இலக்கண அறிஞர் எழுதிய “அஷ்டாத்யாயி” என்ற நூலில் கூறப்பட்ட வஸுதேவ, அர்ஜுனா என்ற பெயர்களிலிருந்துதான், வாஸுதேவர், அர்ச்சுனன் போன்ற பெயர்கள் தோன்றியதாக கூறப்பட்டுள்ளது(3:98). இதிலிருந்து கி.மு. 4ஆம் நூற்றாண்டில் கிருஷ்ணனைப் போன்றே அர்ச்சுனனும் கடவுளாக கருதப் பட்டிருக்கின்றார் என்பது தெளிவாகிறது.

சந்திர குப்த மவுரியரின் அரசவையில் கிரேக்கத் தூதரான மெகஸ்தனிஸ் குறிப்புகளிலிருந்து கி.மு324-300) மதுராவில் ஸவுரசேனர்கள் கிருஷ்ணனை அக்காலத்தில் வழிபட்டு வந்ததாக தெரிகின்றது. ஆனால் வட இந்தியாவின் மற்ற இடங்களில் கிருஷ்ணன் வழிபாடு பரவியிருக்கவில்லை. மதுராவில் ஒரு கோத்திர வர்க்கத்தாரின் தேவன் என்ற நிலை மட்டுமே அன்று கிருஷ்ணனுக்கு இருந்தது. அவ்வாறு இருந்த கிருஷ்ணன் சில நூற்றாண்டுகளில் சர்வ வல்லமை படைத்த கடவுளாக மாறியது எப்படி?

கி.மு 300க்கு முன் தோன்றிய யாதவர்களின் கோத்திர கடவுளான கிருஷ்ணன் வேறு, அவதாரமாக சொல்லப் படுகின்ற கீதையை உபதேசித்தவனாக சொல்லப் படுகின்ற கிருஷ்ணன் வேறு, கோகுலக் கிருஷ்ணன் வேறு. மூன்று கதைகளையும் ஒன்று சேர்த்துத்தான் கிருஷ்ணன் கதை உருவாக்கியிருக்கப் பட்டிருக்க வேண்டும் என்று தானியேல் எச்.எச் இஙகல்ஸ் கூறுகிறார்.

கோர மகரிஷியின் சீடரும் தேவகியின் மைந்தனுமான கிருஷ்ணன் என்ற சன்னியாதி பற்றி சந்தோக்ய உபநிஷத்தில் கூறப்படுகின்றன.  இதில் கூறப்பட்டிருக்கின்ற பல கருத்துக்கள் கீதையிலும் படிந்திருக்கின்றன. தவம், தானம், அகிம்சை, உண்மை பேசுதல் ஆகியவையே இரண்டிலும் உபதேசிக்கப் படுகின்றன.  அதனால், அங்கிரஸின் சீடனான ஒரு கிருஷ்ணனே கீதோபதேசத்தின் மூலத்திற்கு வடிவளித்தவர் என்று டாக்டர் சர்க்கார் கருதுகின்றார்.

இப்படி ஆதாரங்களை அடுக்கிக் கொண்டே போகும் ஆசிரியர் இந்த வரிகள் ஏனோ எனக்கு மிகப் பிடித்தன.

எத்தகைய சூழ்நிலையில் என்ன தேவைக்காக கீதை தோற்றுவிக்கப் பட்டதோ, அத்தகைய தேவைகளோ சூழ்நிலையோ தமிழகத்தில் இல்லாத நிலையில் அதன் தாக்கம் இங்கு படியவில்லை”

பாரதக் கதைகளிள் குறிப்பிடப்பட்டுள்ள பல நிகழ்ச்சிகள் தமிழ் இலக்கியத்தில் ஏராளமாக இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் கீதையைப் பற்றி எந்த இடத்திலும் குறிப்பிடப்படாதது சிந்தனைக்குரிய ஒன்றாகும். இது குறித்து இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பாடல்களை முறையாக தொகுத்து வழங்கியிருக்கின்றார் ஆசிரியர்.

அன்று அமரில் சொற்ற அறம் உரை வீழ் தீக்கழுது என்ற “இன்னிலை” பதினென் கீழ்கணக்கு நூலில் கூட கீதை என்ற சொல் கூறப்படவில்லை.

பாரதப் போரின் கால அளவு, போரில் பங்கேற்ற இருதரப்பினருக்கும் சேரன் சோறளித்த நிகழ்சிகளைக் குறிப்பிடும் சிலம்பு, கீதையை பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை.

பாரதக் கதையின் பல்வேறு நிகழ்சிகளைப் பற்றிப் பாடியுள்ள ஆழ்வார்களின் பாசுரங்களில் கூட, கீதையைப் பற்றிய விளக்கமான குறிப்புகள் இல்லை என்பது வியப்புக்குரிய உண்மையாகும்.

பாரதப் போரில் படை எடுத்தல், சங்கு ஊதுதல், சூரியனைச் சக்கரத்தால் மறைத்து சயத்ரதனைக் கொல்ல உதவுதல், உத்தரையின் கருவைக் காத்தல், பாஞ்சாலியின் கூந்தல் முடிக்க உதவுதல், பாண்டவர்களுக்கு அருளுதல், போன்ற பல நிகழ்ச்சிகளைப் பாடியுள்ள ஆழ்வார்கள் கீதையைப் பாடாமல் விட்டது கேள்விக்குரிய ஒன்று.

மாயன் அன்று ஓதிய வாக்கதனை- திருமழிசை நாண்,71, பார்த்தனுக்கு அன்று அருளி, பாலப் பிராய்த்தே பார்த்தருக்கு அருள் செய்த என்ற வரிகளுக்கு பிற்கால உரையாசிரியர்கள் பகவத் கீதையை அருளியதாக வலிந்து விளக்கந்தருகிறார்கள்.

திருவாய்மொழியினை வைணவர்களுக்கு தெரிவிக்க எழுந்த நூல் “ஆச்சார்ய ஹிருதயம்” கி.பி.13 நூற்றாண்டில் அழகிய மணவாள பெருமாள் நாயனாரால் எழுதப்பட்டது. இவர் தென்கலைப் பிரிவைச் சேர்ந்தவர்.

தமிழ் நூல்களில் தமிழ் மொழி-தமிழ் இனம்-தமிழ்நாடு என்னும் நூலினை எழுதிய முனைவர் ப.கிருஷ்ணன், “ஆச்சாரிய இருதயம்” எழுந்த நோக்கம் குறித்துப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

தென்மொழியை வட மொழிக்குச் சமமாகவும் திருவாய் மொழியைக் கண்ணன் ஓதிய பகத்தீதையைவிட உயர்ந்ததாகவும் நான்காம் வர்ணத்தில் பிறந்த நம்மாழ்வாரை முதல் வர்ணத்துக்குரிய ஆச்சாரியராகவும் காட விழைவது இவர்கள் சார்ந்த தென்கலை பிரிவையொட்டிய சிந்தனையாகவே இருந்திருக்கிறது”

ஆழ்வார்கள் பாசுரங்கள் பக்திமயமான பாசுரங்கள். எனவே கீதையைப் பற்றி விரிவாக கூறப்படாமல் இருக்கலாம் என்று கூறினாலும் கூட, கடைச்சங்க காலத்தில் வாழ்ந்த பெருந்தேவனார் முதல் பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த வில்லிப்புத்தூரார் வரை பாரதம் பாடிய பலரில் எவரும் கீதையைச் சிறப்பித்துச் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தகுந்த உண்மையாகும்.

வில்லிப்புத்தூராரின் பாரதத்தில் வீட்டுமப் பருவத்தில் முதற்போர்ச் சருக்கம் எனும் பாகத்தில் கண்ணன் விசயனது மயக்கத்தைத் தெளிவித்தல் என்னும் தலைப்பில் 8 பாடல்கள் உள்ளன. வியாசரின் பாரதத்தில் 18 சருக்கங்களில் கூறப்பட்டுள்ள பகவத் கீதையின் சாரம் எதுவும் இந்த 8 பாடல்களில் எந்த இடத்திலும் காணப்படவில்லை.

மதுரைக் காஞ்சியில் வரும்,

தொல்லாணை நல்லாசிரியர்
புணர்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின்
நிலந்தரு திருவின் நெடியோன் போல 

என்ற பாடலுக்கு உரையாசிரியர் நச்சினார்க்கினியர் முதன்முதலாக கீதை வரியைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.  நிலந்தரு திருவின் நெடியோன் போல என்பது கீதையருளிய கண்ணனைக் குறிப்பிடுகின்றார்.  ஆனால் தருமபுரம் மடம் சார்ந்த அனைத்துல சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள சங்க இலக்கியங்களில் சமய நோக்கு என்ற நூலில், மதுரைக் காஞ்சி வரிகளுக்கு வலிந்து திருமால் எனப் பொருள் கொண்டதோடு, மட்டுமல்ல கீதையை அருளிச் செய்ததாகக் குறிப்பது கொஞ்சமும் பொருத்தமில்லாதது. என முனைவர் கு. சுந்தரமூர்த்தி தெளிவுபடுத்தியிருக்கின்றார்.

நிலந்தருவின் நெடியோன் என்றது தொல்லாணை நல்லாசிரியர்களாகிய அகத்தியனார், தொல்காப்பியனார் போன்ற அருள் நலஞ்சான்ற அறிஞர் பெருமக்களோடு நெடிதிருந்த பழகிய பாண்டியன் மாகீர்த்தியைக் குறிப்பதன்றி திருமாலைக் குறிப்பதன்று என்று குறிப்பிடுகின்றார்.

இறுதியாக,
கீதையின் தாக்கம் பக்தி இலக்கியங்களில் மட்டுமல்ல, பிற இலக்கியங்களிலும் இல்லை.  வைணவ காவியமான கம்ப ராமாயணத்தில் கூட கீதையைப் பற்றிய குறிப்புகள் இல்லை.

சங்க இலக்கியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், வில்லிப் புத்தூரார் பாரதம், உட்படத் தமிழில் எழுதப் பட்ட பல பாரதங்களிலிலும் கீதையின் குறிப்போ தாக்கமோ இல்லை. ஆனால் இவை அனைத்திலும் குறளின் தாக்கம் காணப்படுகிறது. தமிழர் பண்பாட்டிற்கு எதிரிடையான கருத்துக்கள் கொண்டதும் வேதமரபின் வாரிசுமான கீதையின் தாக்கம் தமிழிலக்கியத்தில் படியாதது வியப்பிற்குரிய ஒன்றல்ல…
என்று முடிகிறது இந்த நூல்…

படிக்கப் படிக்க சுவராசியம் குன்றாமல், கடந்த காலத்தில் நம்மீது திணிக்கப்பட்டிருந்த நம்பிக்கைகளையெல்லாம் சிறிது சிறிதாக கட்டுடைத்து ஒரு மிகப்பெரிய புரட்டை வெளிக் கொண்டுவந்திருக்கின்றார் ஆசிரியர்,

அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.

.