Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Monday, February 15, 2010

கண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை - அமைதியாய் ஒரு புரட்சி




என் 9 வயது குழந்தைக்கு இடது கண்ணில் பார்வை குறைபாடு இருப்பது சமீபத்தில் தான் தெரிய வந்தது. வலது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு மற்றொரு கண்ணால் 10 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்கவைத்துப் பார்த்தபோது அவனால் படிக்கமுடியவில்லை. ஆனால் அதே  இடது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு வலது கண்ணால் 20 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்க முடிகிறது.


இரண்டு கண்களாலும் பார்க்கும் போது  இந்த குறைபாடு தெரியவதில்லை.   ஆனால் பள்ளியிலே கரும்பலகையில் எழுதும் வரிகளைப் படிக்கும்போது சிரமப் படுகின்றனர்.  ஆனால் அதை அவர்கள் சொல்வதில்லை.  எல்லோருக்கும் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துவிடுகின்றனர். 


ஈரோட்டில் உள்ள மிகப் பெரிய கண் மருத்துவமணையில் பரிசோதித்த போது, நிரந்தரமாக கண்ணாடி அணியவேண்டும் என்று சொல்லிவிட்டனர்.  கண்ணாடியும் வாங்கி கொடுத்துவிட்டேன்.


அடுத்த சில நாட்களில்,   என்னுடைய பள்ளித் தோழர்.ஒருவரை சந்தித்தேன்.....பள்ளி நாட்களிலேயே பெரிய சோடாபுட்டிக் கண்ணாடி அணிந்திருந்தார். -6 என்ற அளவில் கண் பார்வைக் குறை அவருக்கு இருந்தது.  ஆனால் நான் சந்தித்த அன்று கண் கண்ணாடி அணியாமல், பைக் ஓட்டிவந்ததை பார்த்தவுடன் மிகவும் ஆச்சரியமடைந்தேன்.


என்னப்பா, கண்ணாடி போடாத உன்னை அடையாளமே தெரியவில்லை.......கண்களுக்கான அறுவைசிகிச்சை செய்து கொண்டாயா? அல்லது காண்டாக்ட் லென்ஸ்ஸா? என்று கேட்டேன். 

பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் கண்பார்வை குறைபாடுகளை நீக்க பயிற்சி அளிக்கின்றனர்.  அதில் போய் பயிற்சி பெற்று வந்தேன். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக கண்ணாடி அணிவதில்லை என்றதை கேட்டதும் ஆச்சரியப்பட்டுப் போனேன்.



அவரிடம் மேலும் தகவல்களை வாங்கிக் கொண்டு இளவலை அழைத்துக் கொண்டு பாண்டிச்சேரி  வந்து சேர்ந்தேன். 

பாண்டிச்சேரி, கடற்கரை சாலையின்,  வடக்கு மூலையில், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் இந்த பள்ளி அமைந்திருக்கிறது.




திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் அந்த பள்ளிக்குச் சென்றேன்.  அப்பள்ளிக்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் விடுமுறை. ஞாயிற்றுக் கிழமை வேலை செய்கிறார்கள்.  எனவே மறுநாள் காலை 8 மணிக்கு வரச்சொன்னார்கள்.
இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற  எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை, நாம் விருப்பப்பட்டு கொடுக்கும் நன்கொடையை மட்டும் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவிக்கப் பட்டது.


விடுமுறை தினமாக இருந்த போதும், அங்கிருந்த ஒரு உதவியாளர், எங்கே தங்கியிருக்கிறீர்கள்? என்று கேட்டார். இனிதான், ஏதாவது ஹோட்டலில் அறை எடுக்க வேண்டும் என்றேன்.  அவசியமில்லை, ஆசிரமத்தின் விடுதியில் தங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி ஆசிரம விடுதியின் தொலைபேசி எண்ணை கொடுத்தார்.


அழகான தனியறை.  குளியலறை இணைந்த, இரண்டு படுக்கைகள், கொண்ட அந்த அறைக்கு வாடகை நாள் ஒன்றுக்கு ரூ.70/- மட்டுமே. 


செவ்வாய்கிழமை காலை 8 மணிக்கு அங்கு சென்றேன். ஆரம்ப கட்ட பெயர் பதிவு, பரிசோதனை ஆகியவற்றை முடித்து, பயிற்சி தொடங்கப் பட்டது.  சுமார் 2 மணி நேரம் பயிற்சி அளித்தனர்.


கிட்டப் பார்வை, தூரப்பார்வை, போன்ற அனைத்து கண் குறைபாடுகளுக்கும் பயிற்சி அளிக்கின்றனர்.  நான் சென்ற போது ஹைதராபாத்திலிருந்து ஒரு தம்பதியினர் தங்கள் இரண்டு பெண்குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர்.  8, 4 வயதுடைய அந்த இரண்டு குழந்தைகளும் கண்ணாடி அணிந்திருந்தனர்.  அக் குழந்தைகளின் தந்தையும் கண்ணாடி அணிந்திருந்தார். 


அவரின் நண்பரின் ஆலோசனையின் பேரில் குழந்தைகளை அழைத்துவந்திருப்பதாக சொன்னார்.   நேரம் ஆக ஆக, பல குழந்தைகள், நடுத்தரவயதினர், வயதானவர்கள் என்று சுமார் 30 அல்லது 40 பேர்கள் பயிற்ச்சிக்கு வந்திருந்ததை பார்க்க முடிந்தது. இதில் பல வெளிநாட்டவர்களும் அடக்கம்.


செய்வாய் முதல் ஞாயிறுவரை 6 நாட்கள் இப்பயிற்சியை நடத்துகின்றனர்.  காலை 8 மணிமுதல் 10 மணிவரை, மாலை 3 மணிமுதல் 5 மணிவரை.   நாள் ஒன்றுக்கு 4 மணிநேரம் பயிற்சி கொடுக்கின்றனர்.  முறையான கண் சிமிட்டுதல், தூரத்தில் இருப்பதை படிப்பது, இருட்டு அறையில் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் சிறு எழுத்துக்களை படிப்பது போன்ற பல பயிற்சிகள்.....


ஆச்சரியப் படும் விதமாக, பயிற்சி முடிந்த ஆறாவது நாள் அங்கேயே கண் பரிசோதனை செய்து பார்த்ததில் பார்வையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது.  தொடர்ந்து ஆறுமாதம் பயிற்சியை தொடருங்கள் பின் கண் பரிசோதனை செய்து பாருங்கள்.....கண்ணாடி அணிய வேண்டிய அவசியமே வராது என்று பயிற்சியாளர் சொன்னார்.

கடந்த 40 ஆண்டுகளாக இந்த பள்ளி நடப்பதாகவும், இதுவரை ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்றிருப்பதாகவும் அறிந்து கொண்டேன்.  முன்கூட்டியே பதிவு செய்து கொண்டு செல்வது நல்லது.  மார்ச் முதல் வாரம் முதல் ஜூன் முதல்வாரம் வரையிலான பள்ளிக்கூட விடுமுறை நாட்களில், அதிகமான கூட்டம் வருவதால் அந்த காலகட்டத்தில் செல்ல விரும்புபவர்கள் முன் கூட்டியே பதிவு செய்தால் தான் இடம் கிடைக்கும்.


பயிற்சிகள் முடிந்து வெளியே செல்லும் வாயிலின் மேல்புறத்தில் இருந்த "மதர் மிரா" வின் இந்த வாசகம் பல அர்த்தங்களை எனக்குச் சொன்னது...............
பயிற்சி குறித்த மேலும் விவரங்கள்
SCHOOL FOR PERFECT SIGHT
PONDICHERRY

PHONE: 0413-2233659
EMAIL:  auroeyesight@yahoo.com
               auroeyesight@vsnl.net

Thursday, January 21, 2010

நூறா யிரத்தில் ஒருவன்.........


சமீபத்தில், என் நண்பர் ஒருவரை நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்திக்கச் சென்றேன்.  அந்த ஊரின் மிகப் பெரிய வியாபார நிறுவனத்தின் உரிமையாளரான அவர், பலமுறை என்னை அவர் வீட்டுக்கு அழைத்தும் செல்ல முடியவில்லை.   இந்த முறை கண்டிப்பாக நீங்கள் வரும்போது எங்கள் வீட்டிற்கு வந்து விட்டுத்தான் செல்ல வேண்டும் என்று அன்பு கட்டளையிட்டிருந்தார்.

அதேபோல், நகர எல்லையை கார் தொட்டதும் அவரை அழைத்த போது, அவரின் அலுவலகத்திற்கு வழி சொல்லி அங்கேயே வரச் சொன்னார்.  மிகப் பெரிய அலுவலகம், வருடத்திற்கு பல கோடி ரூபாய்களுக்கு விற்பனை செய்து வரும் நிறுவனம் அது.  அவர் தந்தையாரால் தொடங்கப் பட்ட அந்த நிறுவனம், அவருக்கு உடல் நலமிண்மையால் மகனிடம் வியாபாரத்தை ஒப்படைத்து விட்டதாகவும், வீட்டிலேயே ஓய்வில் இருப்பதாகவும் அறிந்தேன். நண்பரோடு, பலவற்றையும் பேசிக் கொண்டிருந்து விட்டு, மதிய உணவிற்கு அவர் வீட்டிற்குச் சென்றேன்.

பளிங்கு மாளிகைகள், வில்லாக்கள், வெளிநாட்டுக் கார்கள் இப்படி எல்லாவற்றிலும் செல்வத்தை வெளிக்காட்டிக் கொண்டிருந்த அந்த குடியிருப்பு பகுதியில் இருந்த அவரின் புதிய வீட்டிற்கு சென்றோம். கடந்த ஆண்டுதான் அவர் தந்தையின் மேற்பார்வையில் கட்டி முடிக்கப் பட்டதாகவும்,  பல லட்ச ரூபாய் செலவானது என்றும் நண்பர் சொன்னார்.

வரவேற்பறையில் அமர்ந்திருந்த எனக்கு நண்பரின் மனைவி பழரசம் கொடுத்தார்கள். அவரின் தாயார் வந்து நலம் விசாரித்து விட்டு, பேசிக் கொண்டிருங்கள் என்று கூறிவிட்டு உள்ளே சென்றார். நண்பரும் வாருங்கள் அப்பாவை சந்தித்துவிட்டு வருவோம், என்று கூறி அருகிருந்த பெரிய அறைக்கு அழைத்துச் சென்றார்,

விசாலமான அறை, சென்னையில் பல வீடுகளே அந்த அறை அளவுதான் இருக்குமென்று நினைக்கின்றேன். குளிரூட்டப்பட்ட அந்த அறையின் சுவற்றில் ஒரு மிகப் பெரிய தொலைக் காட்சிப் பெட்டி  மாட்டப்பட்டு, அதில் பங்கு வணிகம் குறித்த தகவல்கள் ஓடிக் கொண்டிருந்தது. அறையின் நடுவில் உயரமான ஒரு கட்டில், அதில் படுத்துக் கொண்டு, மார்புவரை ஒரு போர்வையால் உடலை போர்த்திக் கொண்டு, தொலைபேசி ஒன்றை மார்பின் மீது வைத்துக் கொண்டு  பங்குகள் வாங்கவும், விற்கவும் சொல்லிக் கொண்டிருந்தார்.

என்னைப் பார்த்ததும், லேசாக சிரித்து தலையசைத்து விட்டு தன் பேச்சை தொடர்ந்து கொண்டிருந்தார்.  சில நிமிடங்களுக்குப் பிறகு, என்னைப் பார்த்து, "சொல்லுங்க...எப்படி இருக்கிறீங்க?" என்று மிகவும் உற்சாகமான குரலில் பேசத் தொடங்கியவர், தான் சிறுவயதில்,  ஈரோட்டில், சிறு தலைச் சுமை வியாபாரியாக தொழில் தொடங்கியதிலிருந்து தொடங்கி, பல நிகழ்வுகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.   இடையிடையே, பல தொலைபேசி அழைப்புகள்.  பங்கு வர்த்தக ஆணைகள் என்று தொடர்ந்து கொண்டிருந்தது.

அப்போது, யாரோ வந்திருப்பதாக உதவியாளர் ஒருவர் வந்து சொன்னதும், அவரையும் உள்ளே வரச் சொன்னார். வந்தவர்  இடம் வாங்க, விற்க உதவும் ஒரு இடைத்தரகர் என்பதை அவர்கள் பேச்சிலிருந்து தெரிந்து கொண்டேன். வந்தவர், அந்த நகரின் மையப்  பகுதியிலிருந்த ஒரு கட்டிடம், விலைக்கு வந்திருப்பதாகவும், விலை சுமார் 3 கோடி என்றும் சொன்னார்.   நண்பரின் தந்தையார், வேறு ஒரு கட்டிடத்தின் பெயரைக் குறிப்பிட்டு அதற்கு அருகிலிருக்கும் கட்டிடம் தானே நீங்கள் சொல்வது,  அது ரோடு குத்தாக இருக்குமே என்றார்.  வந்தவர் இல்லை என்று சாதித்தார்.  பிறகு விற்பவரிடமே தொலைபேசியில் பேச முடிவு செய்யப் பட்டு விசாரித்ததில் விற்பவர் ஆமாம், கட்டிடத்தின்  வட பகுதி ரோடு குத்தாக வரும் என்றார்.

வந்தவர் விடைபெற்றுச் சென்றவுடன், அவர், சற்றே தொலைவில் சுவற்றில் சாய்ந்து கொண்டிருந்த அவரின் துணைவியாரை,  அதாவது நம் நண்பரின் அம்மாவிடம் ஏதோ சொன்னார்.  உடனே நண்பரும் அவர் தாயாரும் சேர்ந்து, அவரை இடதுபுறமக திருப்பி படுக்க வைத்தனர்.   கட்டில் கீழ் சக்கரங்கள் பொருத்தப் பட்டிருந்ததால், கட்டிலும் அரைவட்டமாக சுற்றப் பட்டு தொலைக் காட்சி பெட்டியை பார்க்கும் வண்ணம் நிறுத்தப் பட்டது.

அதன் பிறகு தொடர்ந்து அவர் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து, நீங்கள் சாப்பிட்டு வாருங்கள் என்று சொல்லிவிட்டு, மீண்டும் தொலைபேசியில் யாருடனோ பேச ஆரம்பித்தார்.  வெளியே வந்து மதிய உணவிற்கு பிறகு, அவரிடம், நண்பரிடமும் விடைபெற்று வீட்டுக்கு வெளியே வந்தேன். என் கார், நண்பரின் அலுவலத்தில் நிறுத்தி விட்டு வந்திருந்தேன். நண்பருக்கு வீட்டில் ஏதோ வேலை இருப்பதாகவும், தன் காரில் போய் அலுவலத்தில் இறங்கி கொள்ளுங்கள் என்று கூறி அவரின் உறவினர் ஒருவருடன் என்னை அனுப்பி வைத்தார்.

செல்லும் வழியில் நண்பரின் உறவினர் சொன்ன தகவல்கள் என்னை, ஆச்சரியத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றுவிட்டது.  சுமார்,  10 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நாள் அதிகாலை, நண்பரின் தந்தையாருக்கு .  மார்புக்கு கீழே எந்த உறுப்பும் செயல்பட வில்லையாம். எத்தனையோ மருத்துவர்கள், மருத்துவமனைகள்..பலன் ஒன்றுமில்லை.

அவரும் அமைதியாக அதை ஏற்றுக் கொண்டு, படுத்த படுக்கையிலிருந்தபடி உலக விசயங்களையெல்லாம் பேசுகிறார்.  ரியல் எஸ்டேட், பங்கு வர்த்தகம், இப்படி பல தொழில்களை படுக்கையிலிருந்த படியே செய்து வருடத்திற்கு பல கோடிகள் சம்பாதித்து வருகிறார்.  என்று சொன்னார். படுக்கைப் புண் வராமல் இருக்க ஒவ்வொரு அரை மணிக்கொருமுறையும் அவரை இடதுபுறமாக அல்லது வலதுபுறமாக திருப்பி படுக்க வைக்கிறார்கள்.

நண்பரோடு பேசிக் கொண்டிருந்த போது தன் தந்தையின் மேற்ப் பார்வையில் புதிய வீடு கட்டியதாக சொன்னது நினைவிற்கு வந்தது. அது குறித்து கேட்டபோது, உண்மைதான். தினமும் காலை, உதவியாளர், துணைவியாருடன், கட்டிடப் பணி நடக்கும் இடத்திற்கு ஒரு வேனில் வருவார். ஸ்டெர்ட்சரில் படுத்துக் கொண்டே கட்டிட வேளைகளை பார்வையிடுவார்.  சிமெண்ட், மணல், இரும்பு போன்ற அனைத்திற்கும் படுக்கையிலிருந்தபடியே பலரிடமும் விலைபேசி வாங்கிவிடுவார்.  கட்டிடத்தில் சிறு குறைபாடு இருந்தாலும் கண்டுபிடித்துவிடுவார்.  மொட்டைமாடிக்கு மட்டும் தான் அவரால் செல்ல முடியவில்லை. என்பதை சொன்னவர், மேலும், சொன்னது என்னை வியப்பில் ஆழ்த்தியது.

வீடு கட்டி முடித்தபின், பழைய வீட்டிலிருந்த பொருட்களை புதிய வீட்டிற்கு மாற்றும் போது, பழைய வீட்டின் போர்டிக்கோவில் ஸ்டெர்ச்சரில் படுத்துக் கொண்டு, வெளியே செல்லும் பொருட்களை பட்டியலிட்டுக் கொண்டாராம்,  அந்த லாரி கிளம்பிச் சொல்லும் போது தானும் வேனில் கிளம்பி, புதிய வீட்டின் வாயிலில் உள்ள போர்டிக்கோவில் படுத்துக் கொண்டு உள்ளே வருவது சரியாக இருக்கிறதா  என்பதை உறுதி செய்து கொண்டாராம்.

என் வாழ்வில் அத்தனை உற்சாகமான ஒரு ஊனமான மனிதனைக் கண்டதில்லை.  என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்லுவார்,  " சுயமா எப்ப நம்ம காரியத்த நம்மால செய்யமுடியலையோ, அதுக்கப்பறம் உசிரோட இருக்கக் கூடாது" ஆனால் இவர் 15 ஆண்டுகளாக இப்படியே வாழ்கிறார், எந்த கவலையும், வருத்தமும் வெளியில் தெரியவில்லை. உற்சாகமாக செயல்படுகிறார்.

வாழ்க்கைப் போராட்டத்தில் அடிக்கடி சோர்வாகிப் போய்விடுகின்ற இந்த மனிதர்கள் மத்தியில் இவர் தனித்து தெரிகின்றார். நான் ஒவ்வொருமுறை சிறு தோல்விகளால் சலிப்பும் மன வேதனையும் அடையும் போதும் அவரை நினைத்துக் கொள்வேன்.  எனக்குள் மீண்டும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.

பல ஆண்டுகளுக்கு முன்னால் கண்ட ஒரு கட்டிடம் அல்லது இடத்தின் அமைப்பை இன்றும் சரியாக கணக்கிடும் மனிதரை பார்க்க ஆச்சரியமாக இருந்தது.  நடமாட முடியாத சூழலிலும், சுமார் நூறுக்கும் அதிகமான தொலைபேசி எண்களை நினைவில் வைத்துக் கொண்டு, எதையும் பார்க்காமல், தொலைபேசி மூலமே அனைத்தியும் நடத்திவரும் அந்த அற்புத மனிதர் நமக்கெல்லாம் ஒரு எடுத்துக் காட்டு.

சிறு தொய்வுக்களுக்கெல்லாம், உயிர் மாய்த்துக் கொள்ளும், அல்லது சோர்ந்து விழுந்துவிடும் மனிதர்கள் மத்தியில் இவர் ஒரு மாமனிதர்.  இப்படிப்பட்ட மனிதர்கள் நூறாயிரத்தில் ஒருவர் தான் இருப்பார்கள் என்று நம்புகின்றேன்.

Thursday, October 08, 2009

பிறந்தநாள் வாழ்த்துக்கள்





அன்பு நண்பர்  "சிகரம் கதிருக்கு" பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


 வாழ்த்துக்களை ........................
லேட்டா சொன்னாலும் லேட்டஸ்ட்டா சொல்லுங்க மக்களே

Friday, September 25, 2009

அப்படியே தந்துவிடு..........

அன்பிற்கினிய நண்பர் பா.ரா.
 http://karuvelanizhal.blogspot.com
ஒரு தேவதையை எனக்கு அனுப்பியிருக்கிறார்.






"வரம் கொடுக்கும் தேவதைகள்
வந்த போது தூங்கினேன்
வந்த போது தூங்கிவிட்டு
வாழ்க்கையெல்லாம் ஏங்கினேன்".

 என்ற கவிஞர் மு.மேத்தாவின் வரிகள் நினைவிற்கு வருகின்றன.

 வரமாட்டாள், வந்தாலும் ஏதும் தரமாட்டாள், நம்பாதே, என்று சமீபத்தில் தான் ஒரு தோழிக்கு பின்னூட்டம் எழுதினேன்.  ஆனால் இவ்வளவு விரைவாக என்னிடமும் வருவாள் என்று எண்ணியிருக்கவில்லை.




பார்த்தாயா?......தேவதையே.......

எத்தனை ஆசைகள் இந்த மனிதர்களுக்கு?
வலைப்பூ நண்பர்கள் ஒவ்வொருவரும் இதுவரை கேட்டதை பார்க்கும் போது மிகுந்த சந்தோசமாக இருக்கிறது.


இழந்த நிமிடங்களை, இழந்தநாட்களை, இழந்த மனிதர்களை, இழந்த நட்புகளை, என்னும் எத்தனையெத்தனையோ....இழந்தவைகளை எல்லாம் கேட்டவர்கள் ஒருபுறமென்றால்............

இதுவரை காணாததை, கிடைக்காததை, ஏன் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாதவைகளைக் கூட,  கேட்டவர்கள்...............  மறுபுறம்.


ங்கிருந்தோ  வரும் இந்த பாடல் வரிகளில் மூழ்குகின்றேன்.

புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்

சொந்த ஆகாயம் வேண்டும்
ஜோடி நிலவொன்று வேண்டும்
நெற்றி வேர்க்கின்ற போது
அந்த நிலவில் மழை பெய்ய வேண்டும்

வண்ண விண்மீன்கள் வேண்டும்
மலர்கள் வாய் பேச வேண்டும்
வண்டு உட்காரும் பூ மேலே  நான்
வந்து உட்காரும் வரம் வேண்டும்

கடவுளே கொஞ்சம் வழி விடு
உன் அருகிலே ஓர் இடம் கொடு
புன்னகை எங்கள் தாய்மொழி
என்ற வரம் கொடு பூமியில் சில மாறுதல் தனை வர விடு (புத்தம் புது)

யுத்தம் இல்லாத பூமி
ஒரு சத்தம் இல்லாமல் வேண்டும்
மரணம் காணாத மனித இனம்
இந்த மண்ணில் நிலை கொள்ளும் வரம் வேண்டும்
பஞ்சம் பசி போக்க வேண்டும்
பாலைவனம் பூக்க வேண்டும்

சாந்தி சாந்தி என்ற சங்கீதம்
சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்
போனவை அட போகட்டும்
வந்தவை இனி வாழட்டும்

தேசத்தின் எல்லை கோடுகள்
அவை தீரட்டும்
தெய்வங்கள் இந்த மண்ணிலே
வந்து வாழட்டும்


இப்படிக் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.  என்னதான்  செய்வாய் நீ.....


பொன்னொத்த நிலவே நீ-நின்

கள்ளொத்த கனிவாயால்

வரமொன்று தர விழைந்தால்...

விரைந்திங்கே வந்துவிடு.


.
பாசம்நிறை நண்பரெல்லாம்
வாசமிகு வலைப்பூவில்
வரிசையாய் கேட்டுவிட்டார்....


அவர்- ஆசைப்பட்ட அத்தனையும்
அப்படியே தந்துவிடு......அப்படியே தந்துவிடு.


.






















Saturday, September 19, 2009

பெரியார்-அண்ணா...நினைவுப் படங்கள்


திராவிடப் பாரம்பரியத்தின் தோற்றிடம்
ஈரோடு தந்தை பெரியார் இல்லம்.


பகுத்தறிவுப் பகலவன் தோன்றிய இடம்


 தந்தை பெரியாரின் அறை



அடையாளச் சின்னம்





பிரியம் சமைத்த கூடு


"எதையும் தாங்கும் இதயத்தின்" பணி தொடங்கிய இடம்

Wednesday, September 16, 2009

நம் குழந்தை இழந்ததினி மீளா


பத்தடிக்கு பத்தடியில்
பட்டுமெத்தை நாமளித்து
பாலும் தேனும் கொடுத்தாலும்-தோழா
நம் குழந்தை,  இழந்ததினி மீளா

கருக்கலிலே முழுச்சதுமே
கம்மாக்கரை தேட  வச்சா அம்மாயி
விளக்கெண்ணை வைத்தியந்தான் அப்போது-இந்த
விவரஞ்சொல்ல ஆ ளேது  இப்போது.

தண்ணிக்குள்ள மூச்சடக்கி
தவளையாட்டம் ஆடிபுட்டு
கஞ்சி குடிச்சு, நடந்ததொரு காலம்-இப்ப
காரு வண்டி, கார்ன் பிளக்ஸ், நாம எங்க போறம்?

சுட்டுத்தின்ன பனம்பழமும்,
சோளச்சோறும்,கம்மங்கூலும்
காட்சிப் பொரு  ளாகத்தானே ஆச்சு-சொம்புத்
தண்ணி வெல கேக்க சாவு விழுந்தாச்சு.

ஊரெங்கும் ஓடியாடி,
காடுமேடு யாவும் சுத்தி
ஊரடங்க நாமுறங்கப் போனோம்-இப்ப
வூட்ட தாண்டி போக யெடங் காணோம்.

ஆத்தா போட்ட சோத்தில
அப்புச்சி சொன்ன கதையில
படுத்ததுமே உறங்கிப்போனோம் திண்ணையில-அடுத்த
தலைமுறையே உருளுதிங்க  தண்ணியில.

சோளக்காடு,ஆலமரம், கேணி
கரும்புக்காடு, கடல காடு, ஏரி
அத்தனையும் ஆக்கிப்புட்டான் ப்ளாட்டா-இப்ப
அடுக்குமாடி திட்டம் வேற,     லேட்டா..


Thursday, September 10, 2009

BECAUSE I AM A GIRL........



ஏனெனில்………நான் ஒரு பெண்.



சமீபத்திலே நடந்த உலக நாடுகளின் ஆட்சியர்கள் மாநாடு குறித்த பதிவு ஒன்றை படிக்க முடிந்தது.   இன்றைய உலகை உலுக்கி வரும் பல்வேறு பிரச்சனைகளையும், அவற்றை தீர்க்கும் வழிமுறைகளையும் பல தலைவர்களும் பேசியதாகவும், அதன் முடிவில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் அந்தச் செய்தி மடல் சொன்னது.


வருமையும், ஏழ்மையும், பட்டினிச்சாவும், சுற்றுச்சூழல் மாசுபடுதலையும், பெண்களுக்கெதிரான கொடுமைகளையும், உடனடியாக ஒழிக்கப்படவேண்டும். என்பது தான் அந்த செய்தி மடலின் துவக்க வரிகள்.


தினம் தினம் வரும் பல்வேறு பத்திரிக்கைச் செய்தியைப் போன்ற ஒரு  சாதாரண செய்திதான் என்றாலும்,  உலகளாவிய பிரச்சனைகளில் ஒன்றாக இந்த பெண்களுக்கெதிரான வன்முறைகள் இடம்பெற்றது கொஞ்சம் வியப்பையும், வலியையும் கொடுத்தது, உண்மை.


பாலினம், மற்றும் வயது என்ற இரு காரணிகளால் பெண் தனிமைப்படுத்தப்படுகிறாள். வளர்ந்த சமூகத்திலும், மேல்தட்டு வர்க்கங்களில் கூட இந்த வித்தியாசத்தை பார்க்கமுடிகிறது.  பொதுவாக,  பெற்றோர், பெண் குழந்தைகளின் மீது அதிகம் பாசம் காட்டுவது நமக்கு  வெளிப்படையாக தெரிந்தாலும்,  ஆண் குழந்தைகளோடு, ஒப்பீடு செய்யப்படும் போது,   அவள் தோற்றுத்தான் போகிறாள்.


ஒரு பெண் தன் குடும்பத்தாரால் சீராட்டப்பட்டாலும், பாராட்டப்பட்டாலும்,  ஏன் இன்னும், சில வீடுகளில் செல்வத்தின் சின்னமாக  பூசிக்க பட்டாலும்,  அந்த குடும்பத்தின் ஆண் குழந்தைகளோடு  ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது இவள் இரண்டாம் பட்சம் தான். இவளுக்கு கிடைப்பதெல்லாம்   எஞ்சியிருக்கும்  மீத எச்சம் தான்.


பெண் என்பவள், ஒரு தெய்வம், எதையும் தாங்குபவள், விட்டுக் கொடுப்பவள், சமூகநீதி காப்பவள், குடும்பத்தின் அச்சாணி, ஆணிவேர் இப்படி எதாவதொரு பொய்யைச் சொல்லி அவளை தொடர்ந்து அடக்கிவைத்துக் கொண்டுதானிருக்கிறது இந்த சமூகம்.
  

சமீபத்தில் வெளிவந்த “ பெண்குழந்தைகளின்நிலையும், வளர்ந்த இந்தியசமுதாயமும்” என்ற கட்டுரை தந்த சில  தகவல்கள்.


1.பலநேரங்களில் பெண் குழந்தைகளுக்கு போதிய அளவு உணவு அளிக்கப்படுவதில்லை. அவளின் உணவுத்தேவைகள்  கூட இரண்டாம் பட்சமாகத்தான் கவனிக்கப்படுகின்றன.

2. கல்வி கூட பல நேரங்களில், பெரும் போராட்டங்களுக்குப் பிறகுதான் சாத்தியமாகின்றது.  உயர்கல்வியைப் பொருத்தவரை ஆண் குழந்தைகளின் தேவை தீர்க்கப்பட்ட பிறகுதான் இங்கு பெண் கல்வி பற்றி யோசிக்கப்படுகிறது.

3.மதத்தின் பெயராலும், சமூக, மற்றும் குடும்ப நலன் எனும் பெயராலும்,  ஏற்படுத்தப்பட்டுள்ள சட்டதிட்டங்களும் பெண்ணைகளை ஒடுக்கும் நோக்கத்திலேயே கட்டமைக்கப்பட்டுள்ளன.

4.வன்முறையால் பதிக்கப்படுவதில், பெண்ணினம் உலகளாவிய அளவில் முதலிடம் பெற்றிருக்கிறது.  பெண் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறைகள் அளவிட முடியா.
தன் வாழ்நாளில், நெருங்கிய உறவுகளால், வீடுகளில், பணியிடங்களில்,பள்ளிகளில், ஏன் பஸ்களில் கூட இவர்கள் நிம்மதியாக இருக்கமுடிவதில்லல.


ஒவ்வொரு ஆண்டும்,  பெண்களின்  பிரச்சனைகள் உலகத்தலைவர்களால் சுட்டிக்காட்டப்பட்டு, அதற்கெதிரான விழிப்புணர்வும், தீர்வு குறித்தும் பேசப்படுகின்றன. உடனடியாக தீர்க்கப்படவேண்டிய ஒரு பிரச்சனை குறித்து இந்த ஆய்வறிக்கை பேசுகிறது. அதன்படி   “IN THE SHADOW OF WAR” (http://plancanada.ca/downloads/biaag/BecauseIamaGirl2008Report.pdf)  இந்த ஆண்டு, போர்களுக்கும், சண்டைகளுக்கும் நடுவில் வளரும் இளம் பெண்கள் மறும் பெண் குழந்தைகளின் வாழ்வு பற்றி பேசியிருக்கிறது……


பெண் குழந்தைகளுக்கெதிரான பிரச்சனைகளை கவனத்தில் கொண்டு கனடா அரசு பல புதிய உத்திகளை நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளது. இதற்கென.

          Because…….I am Girl

 என்ற ஒரு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.  பெண்குழந்தைகளின் வாழ்விலும், வசந்தத்திலும் பங்கு கொள்ளவேண்டுமென்று உலக மக்கள் அனைவரையும் அது வரவேற்கிறது.
பெண்கள் முன்னேற்றத்தை பற்றியும், அவர்களில் வாழ்வாதர பிரச்சனைகளை பற்றி குரல் கொடுக்கமுன்வரும் அனைவரையும் கனடா அரசு வரவேற்கிறது,  பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசும் நல்ல பேச்சாளார்களை பதிவுசெய்து கொண்டு, அவர்களை பேச வாய்ப்பளிக்கிறது.
  

பெண் குழந்தைகள், பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கப்படுவது இன்று சாதாரணமான ஒன்றாகிவிட்டது.  ஒன்றிரண்டு வெளியே வந்தாலும் நமக்கு தெரியாமல் போவது ஏராளம்.
மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் என்பதுபோல், இந்தக் குழந்தைகள் இதை சொல்லவும் முடியாமல், தடுக்கவும் முடியாமல்,  பல ஆண்டுகள், ஒவ்வொரு நாளையும் வலியோடும் வேதனையோடும் தாண்டிசெல்வது  வேதனையின் உச்சகட்டம்.


இங்கே பிரச்சனைகள் அலசுவதும், அதற்காக கண்ணீர் விடுவதும் மட்டும் போதாது.  இங்கே பேசப்படும் பிரச்சனைகளுக்கு ஒரு சிறு தீர்வாவது காணப்பட வேண்டும்.   ஒரு வலியை உணர்கிறோம், அதைவிட இன்னும் கொஞ்சம் அதிக வேறுவலி வரும்போது பழைய வலி மறைந்துவிடும் என்பது வலி பற்றிய ஆய்வியலார் கண்டுபிடிப்பு.-அப்படி நம்மால் இருக்கமுடிவதில்லை.


இந்த பிரச்சனை உங்களுக்கு ஒரு வலியை கொடுத்தது உண்மையென்றால்,  நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.  


உங்களின் அல்லது உங்களுக்குத் தெரிந்த பெண் குழந்தைகளோடு முடிந்தவரை அன்போடு பேசுங்கள்.  அவர்களில் வலிகளுக்கு நாம் மருந்தளிக்க முடியும் என்பதை புரியவவயுங்கள்.  அவர்களின் பிரச்சனைகளின் தீவிரத்தை புரிந்து கொள்ள முயன்று உங்களாலான உதவிகள் செய்யுங்கள்

பிரச்சனைகளை தீர்க்கும் வழிகளை சொல்லிக்கொடுங்கள். சுய பாதுகாப்பின் அவசியத்தை உணர்த்துங்கள்.


ஆண்களை விட பெண்கள் இதைச் சரியாக செய்யமுடியுமென்று நம்புகிறேன். உங்கள் வீட்டிற்கருகிலோ, அலுவலகத்திலோ, அல்லது வேரெங்கோ செல்லுமிடங்களிலெல்லாம், பார்க்கும் பெண் குழந்தைகளோடு, அன்பாய், ஆதரவாய் பேசுங்கள்.  உங்களிடம் சொன்னால் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துங்கள். 


வக்கிரம் பிடித்த இந்தச் சமூகத்தினால் குத்தி, கிழித்து, குதறப்பட்ட அந்த பிஞ்சு உள்ளங்களுக்கு  நீங்கள் மருந்தாகுங்களேன்.