Saturday, January 23, 2010

அம்மா.............................

நேற்று இரவு நண்பர் ஒருவரின் வீட்டிற்குச்  சென்றிருந்தேன். அப்போது மணி இரவு பத்து. நண்பரின் மனைவியும் குழந்தையும் ஊருக்கு சென்றிருந்தார்கள். கையிலிருந்த தன் சாவியில் கதவை திறந்து உள்ளே தாழிடும் போது, ஒரு வயதான குரல்..


நன்றி:
by Jinson Joseph Elayidom
www.getjins.com
                                                                     

ஏங்கண்ணு  வந்திட்டியா?  சீக்கிரம் வந்து படுத்துக்கலாமுல்ல,  பனி காலத்தில வெளில சுத்திகிட்டு.......??

ம்ம்...ம்ம்....நீங்க சாப்பிடீங்களா?  சரி தூங்குங்க.........என்று  சொல்லிவிட்டு, அவரின் பதில் கேட்காமல் அவர் இருந்த அறையைத் தாண்டி என்னை அழைத்துச் சென்றார் நண்பர்.

மீண்டும் அவர் குரல்....ஏங்கண்ணு யாரு வந்திருக்கா கூட?  காலடி சத்தத்தை கேட்டுருப்பாரென்று நினைத்தேன்,

நண்பர் வந்திருக்கார். என்று சொல்லி, என்னை உள்ளே அவர் அறைக்கு அழைத்துச் சென்றார்.

இரவு ஒரு மணிவரை பேசிக் கொண்டிருந்தோம். காலை 5 மணிக்கு விழித்து,  முகங்கழுவிக் கொண்டு டீ குடிக்க  வெளியே கிளம்பினோம்..  முன் அறையை தாண்டும் போது,

" ஏங்கண்ணு ? இந் நேரத்திலே முழிச்சிகிட்ட"?  டீ போட்டு தரட்டுமா?? மீண்டும் அம்மாவின் குரல். 

வேண்டாம், வெளியில போயி குடிச்சிக்கிறோம் என்ற நண்பரின் பதிலை ஏற்காமல்,

"இரு சாமி, நிமசத்தில டீ போட்டு தாரேன்". என்றபடியே போய் ஒரு நல்ல டீ கொண்டு வந்து கொடுத்து விட்டு,

"வெறு வயித்தில வெளிய போக வேண்டாங் கண்ணு, இருங்க ரெண்டு தோசையூத்தறேன், சாப்டுபோட்டு புறப்படுங்க"....என்றார்.

இவங்க எப்பத் தூங்கி எப்ப விழிக்கிறாங்கன்னே தெரியலையே?????இந்த வயதிலும் இவ்வளவு வளர்ந்த மகனின் மேல் எவ்வளவு அன்பு கொண்டிருக்கிறார் என்று எண்ணியபடி, வீட்டை விட்டு வெளியே வந்தேன்.

                     ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்றுப்
                    "பையல்" என்ற போதே பரிந்தெடுத்துச்-செய்யவிரு
                    கைப்புறத்தில் ஏந்தி கனகமுலை தந்தாளை
                     எப்பிறப்பில் காண்பேன் இனி.


என்ற  பட்டினத்தாரின் பாடல் வரிகள் ஏனோ  நினைவிற்கு வந்தன..........

தொல்காப்பியர் தொட்டு, சங்ககாலம் முதல் பின்னால் வந்த பாரதிவரை, எல்லோருமே, காதலியைப் பற்றி . தலைவனைப் பற்றி, நாட்டைப் பற்றி, சமூகம் பற்றி, இயற்கையழகு பற்றி இப்படி எவையெவற்றையெல்லாம் பாடியிருந்தாலும், மனைவி பற்றியோ, தாயைப் பற்றியோ பெரும் புலவர்கள் யாரும் பாடியதாக நினைவில் இல்லை. அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம், தாயிற் சிறந்ததொரு கோவிலும் இலை என்ற ஒரு சில வரிகள் தவிர.. 

பட்டினத்தடிகள் கூட தன் தாய் இறந்தபோது சிதைக்கு தீ மூட்டும் போதுதான் தாயின் பெருமைகளை நினைவு கூர்ந்து பல பாடல்கள் எழுதியிருக்கிறார்.


                             முந்தித் தவங்கிடந்து, முன்னூறு நாள் சுமந்தே
                             அந்திபகலாச் சிவனை ஆதரித்து- தொந்தி
                            சரியச் சுமந்து, பெற்ற தாயார் தமக்கோ
                            எரியத்தழல் மூட்டுவேன்.....

                            நொந்து, சுமந்து பெற்று,  நோவாமல் ஏந்தி முலை
                            தந்து, வளர்த் தெடுத்து தாழாமே-அந்திபகல்
                           கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய் தனக்கோ
                            மெய்யிலே தீ மூட்டுவேன்.

                            அரிசியோ நானிடுவேன், ஆத்தாள் தனக்கு,
                            வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல்-உருசியுள்ள
                            தேனே, அமிர்தமே செல்வத்திர வியப் பூ
                             மானே என அழைத்த வாய்க்கு..

                             அள்ளியிடுவ தரிசியோ, தாய் தலைமேல்
                             கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல்-மெள்ள
                             முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
                              மகனே என்றழைத்த தாய்க்கு.

                           வெகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பல்
                           ஆகுதே, பாவியேன் ஐயகோ-மாதக்
                            குருவி பறவாமல் கோ தாட்டி என்னை
                            சுருதி வளர்தெடுத்த கை....

                              முன்னையிட்ட தீ முப்புறத்திலே
                             பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே
                             அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே
                             யானுமிட்ட தீ மூள்க மூள்கவே....


காதற்ற ஊசியிம் வாராது  காண் கடைவெளிக்கே.. என்று கூறி .முற்றுந் துறந்த பட்டினத்தாருக்கே, தாயின் இறப்பை தாங்க முடியவில்லை யென்றால் நாமெல்லாம் எம்மாத்திரம். தாய் பற்றை துறக்கக் கூடாது, துறக்கவும் முடியாது என்பதை சமூகத்திற்கு விளக்கும் வண்ணமாக அமைந்திருப்பது பட்டினத்தாரின் வாழ்வு.




Thursday, January 21, 2010

நூறா யிரத்தில் ஒருவன்.........


சமீபத்தில், என் நண்பர் ஒருவரை நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்திக்கச் சென்றேன்.  அந்த ஊரின் மிகப் பெரிய வியாபார நிறுவனத்தின் உரிமையாளரான அவர், பலமுறை என்னை அவர் வீட்டுக்கு அழைத்தும் செல்ல முடியவில்லை.   இந்த முறை கண்டிப்பாக நீங்கள் வரும்போது எங்கள் வீட்டிற்கு வந்து விட்டுத்தான் செல்ல வேண்டும் என்று அன்பு கட்டளையிட்டிருந்தார்.

அதேபோல், நகர எல்லையை கார் தொட்டதும் அவரை அழைத்த போது, அவரின் அலுவலகத்திற்கு வழி சொல்லி அங்கேயே வரச் சொன்னார்.  மிகப் பெரிய அலுவலகம், வருடத்திற்கு பல கோடி ரூபாய்களுக்கு விற்பனை செய்து வரும் நிறுவனம் அது.  அவர் தந்தையாரால் தொடங்கப் பட்ட அந்த நிறுவனம், அவருக்கு உடல் நலமிண்மையால் மகனிடம் வியாபாரத்தை ஒப்படைத்து விட்டதாகவும், வீட்டிலேயே ஓய்வில் இருப்பதாகவும் அறிந்தேன். நண்பரோடு, பலவற்றையும் பேசிக் கொண்டிருந்து விட்டு, மதிய உணவிற்கு அவர் வீட்டிற்குச் சென்றேன்.

பளிங்கு மாளிகைகள், வில்லாக்கள், வெளிநாட்டுக் கார்கள் இப்படி எல்லாவற்றிலும் செல்வத்தை வெளிக்காட்டிக் கொண்டிருந்த அந்த குடியிருப்பு பகுதியில் இருந்த அவரின் புதிய வீட்டிற்கு சென்றோம். கடந்த ஆண்டுதான் அவர் தந்தையின் மேற்பார்வையில் கட்டி முடிக்கப் பட்டதாகவும்,  பல லட்ச ரூபாய் செலவானது என்றும் நண்பர் சொன்னார்.

வரவேற்பறையில் அமர்ந்திருந்த எனக்கு நண்பரின் மனைவி பழரசம் கொடுத்தார்கள். அவரின் தாயார் வந்து நலம் விசாரித்து விட்டு, பேசிக் கொண்டிருங்கள் என்று கூறிவிட்டு உள்ளே சென்றார். நண்பரும் வாருங்கள் அப்பாவை சந்தித்துவிட்டு வருவோம், என்று கூறி அருகிருந்த பெரிய அறைக்கு அழைத்துச் சென்றார்,

விசாலமான அறை, சென்னையில் பல வீடுகளே அந்த அறை அளவுதான் இருக்குமென்று நினைக்கின்றேன். குளிரூட்டப்பட்ட அந்த அறையின் சுவற்றில் ஒரு மிகப் பெரிய தொலைக் காட்சிப் பெட்டி  மாட்டப்பட்டு, அதில் பங்கு வணிகம் குறித்த தகவல்கள் ஓடிக் கொண்டிருந்தது. அறையின் நடுவில் உயரமான ஒரு கட்டில், அதில் படுத்துக் கொண்டு, மார்புவரை ஒரு போர்வையால் உடலை போர்த்திக் கொண்டு, தொலைபேசி ஒன்றை மார்பின் மீது வைத்துக் கொண்டு  பங்குகள் வாங்கவும், விற்கவும் சொல்லிக் கொண்டிருந்தார்.

என்னைப் பார்த்ததும், லேசாக சிரித்து தலையசைத்து விட்டு தன் பேச்சை தொடர்ந்து கொண்டிருந்தார்.  சில நிமிடங்களுக்குப் பிறகு, என்னைப் பார்த்து, "சொல்லுங்க...எப்படி இருக்கிறீங்க?" என்று மிகவும் உற்சாகமான குரலில் பேசத் தொடங்கியவர், தான் சிறுவயதில்,  ஈரோட்டில், சிறு தலைச் சுமை வியாபாரியாக தொழில் தொடங்கியதிலிருந்து தொடங்கி, பல நிகழ்வுகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.   இடையிடையே, பல தொலைபேசி அழைப்புகள்.  பங்கு வர்த்தக ஆணைகள் என்று தொடர்ந்து கொண்டிருந்தது.

அப்போது, யாரோ வந்திருப்பதாக உதவியாளர் ஒருவர் வந்து சொன்னதும், அவரையும் உள்ளே வரச் சொன்னார். வந்தவர்  இடம் வாங்க, விற்க உதவும் ஒரு இடைத்தரகர் என்பதை அவர்கள் பேச்சிலிருந்து தெரிந்து கொண்டேன். வந்தவர், அந்த நகரின் மையப்  பகுதியிலிருந்த ஒரு கட்டிடம், விலைக்கு வந்திருப்பதாகவும், விலை சுமார் 3 கோடி என்றும் சொன்னார்.   நண்பரின் தந்தையார், வேறு ஒரு கட்டிடத்தின் பெயரைக் குறிப்பிட்டு அதற்கு அருகிலிருக்கும் கட்டிடம் தானே நீங்கள் சொல்வது,  அது ரோடு குத்தாக இருக்குமே என்றார்.  வந்தவர் இல்லை என்று சாதித்தார்.  பிறகு விற்பவரிடமே தொலைபேசியில் பேச முடிவு செய்யப் பட்டு விசாரித்ததில் விற்பவர் ஆமாம், கட்டிடத்தின்  வட பகுதி ரோடு குத்தாக வரும் என்றார்.

வந்தவர் விடைபெற்றுச் சென்றவுடன், அவர், சற்றே தொலைவில் சுவற்றில் சாய்ந்து கொண்டிருந்த அவரின் துணைவியாரை,  அதாவது நம் நண்பரின் அம்மாவிடம் ஏதோ சொன்னார்.  உடனே நண்பரும் அவர் தாயாரும் சேர்ந்து, அவரை இடதுபுறமக திருப்பி படுக்க வைத்தனர்.   கட்டில் கீழ் சக்கரங்கள் பொருத்தப் பட்டிருந்ததால், கட்டிலும் அரைவட்டமாக சுற்றப் பட்டு தொலைக் காட்சி பெட்டியை பார்க்கும் வண்ணம் நிறுத்தப் பட்டது.

அதன் பிறகு தொடர்ந்து அவர் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து, நீங்கள் சாப்பிட்டு வாருங்கள் என்று சொல்லிவிட்டு, மீண்டும் தொலைபேசியில் யாருடனோ பேச ஆரம்பித்தார்.  வெளியே வந்து மதிய உணவிற்கு பிறகு, அவரிடம், நண்பரிடமும் விடைபெற்று வீட்டுக்கு வெளியே வந்தேன். என் கார், நண்பரின் அலுவலத்தில் நிறுத்தி விட்டு வந்திருந்தேன். நண்பருக்கு வீட்டில் ஏதோ வேலை இருப்பதாகவும், தன் காரில் போய் அலுவலத்தில் இறங்கி கொள்ளுங்கள் என்று கூறி அவரின் உறவினர் ஒருவருடன் என்னை அனுப்பி வைத்தார்.

செல்லும் வழியில் நண்பரின் உறவினர் சொன்ன தகவல்கள் என்னை, ஆச்சரியத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றுவிட்டது.  சுமார்,  10 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நாள் அதிகாலை, நண்பரின் தந்தையாருக்கு .  மார்புக்கு கீழே எந்த உறுப்பும் செயல்பட வில்லையாம். எத்தனையோ மருத்துவர்கள், மருத்துவமனைகள்..பலன் ஒன்றுமில்லை.

அவரும் அமைதியாக அதை ஏற்றுக் கொண்டு, படுத்த படுக்கையிலிருந்தபடி உலக விசயங்களையெல்லாம் பேசுகிறார்.  ரியல் எஸ்டேட், பங்கு வர்த்தகம், இப்படி பல தொழில்களை படுக்கையிலிருந்த படியே செய்து வருடத்திற்கு பல கோடிகள் சம்பாதித்து வருகிறார்.  என்று சொன்னார். படுக்கைப் புண் வராமல் இருக்க ஒவ்வொரு அரை மணிக்கொருமுறையும் அவரை இடதுபுறமாக அல்லது வலதுபுறமாக திருப்பி படுக்க வைக்கிறார்கள்.

நண்பரோடு பேசிக் கொண்டிருந்த போது தன் தந்தையின் மேற்ப் பார்வையில் புதிய வீடு கட்டியதாக சொன்னது நினைவிற்கு வந்தது. அது குறித்து கேட்டபோது, உண்மைதான். தினமும் காலை, உதவியாளர், துணைவியாருடன், கட்டிடப் பணி நடக்கும் இடத்திற்கு ஒரு வேனில் வருவார். ஸ்டெர்ட்சரில் படுத்துக் கொண்டே கட்டிட வேளைகளை பார்வையிடுவார்.  சிமெண்ட், மணல், இரும்பு போன்ற அனைத்திற்கும் படுக்கையிலிருந்தபடியே பலரிடமும் விலைபேசி வாங்கிவிடுவார்.  கட்டிடத்தில் சிறு குறைபாடு இருந்தாலும் கண்டுபிடித்துவிடுவார்.  மொட்டைமாடிக்கு மட்டும் தான் அவரால் செல்ல முடியவில்லை. என்பதை சொன்னவர், மேலும், சொன்னது என்னை வியப்பில் ஆழ்த்தியது.

வீடு கட்டி முடித்தபின், பழைய வீட்டிலிருந்த பொருட்களை புதிய வீட்டிற்கு மாற்றும் போது, பழைய வீட்டின் போர்டிக்கோவில் ஸ்டெர்ச்சரில் படுத்துக் கொண்டு, வெளியே செல்லும் பொருட்களை பட்டியலிட்டுக் கொண்டாராம்,  அந்த லாரி கிளம்பிச் சொல்லும் போது தானும் வேனில் கிளம்பி, புதிய வீட்டின் வாயிலில் உள்ள போர்டிக்கோவில் படுத்துக் கொண்டு உள்ளே வருவது சரியாக இருக்கிறதா  என்பதை உறுதி செய்து கொண்டாராம்.

என் வாழ்வில் அத்தனை உற்சாகமான ஒரு ஊனமான மனிதனைக் கண்டதில்லை.  என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்லுவார்,  " சுயமா எப்ப நம்ம காரியத்த நம்மால செய்யமுடியலையோ, அதுக்கப்பறம் உசிரோட இருக்கக் கூடாது" ஆனால் இவர் 15 ஆண்டுகளாக இப்படியே வாழ்கிறார், எந்த கவலையும், வருத்தமும் வெளியில் தெரியவில்லை. உற்சாகமாக செயல்படுகிறார்.

வாழ்க்கைப் போராட்டத்தில் அடிக்கடி சோர்வாகிப் போய்விடுகின்ற இந்த மனிதர்கள் மத்தியில் இவர் தனித்து தெரிகின்றார். நான் ஒவ்வொருமுறை சிறு தோல்விகளால் சலிப்பும் மன வேதனையும் அடையும் போதும் அவரை நினைத்துக் கொள்வேன்.  எனக்குள் மீண்டும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.

பல ஆண்டுகளுக்கு முன்னால் கண்ட ஒரு கட்டிடம் அல்லது இடத்தின் அமைப்பை இன்றும் சரியாக கணக்கிடும் மனிதரை பார்க்க ஆச்சரியமாக இருந்தது.  நடமாட முடியாத சூழலிலும், சுமார் நூறுக்கும் அதிகமான தொலைபேசி எண்களை நினைவில் வைத்துக் கொண்டு, எதையும் பார்க்காமல், தொலைபேசி மூலமே அனைத்தியும் நடத்திவரும் அந்த அற்புத மனிதர் நமக்கெல்லாம் ஒரு எடுத்துக் காட்டு.

சிறு தொய்வுக்களுக்கெல்லாம், உயிர் மாய்த்துக் கொள்ளும், அல்லது சோர்ந்து விழுந்துவிடும் மனிதர்கள் மத்தியில் இவர் ஒரு மாமனிதர்.  இப்படிப்பட்ட மனிதர்கள் நூறாயிரத்தில் ஒருவர் தான் இருப்பார்கள் என்று நம்புகின்றேன்.

Tuesday, January 19, 2010

''மிஞ்சி போட்ட ரஞ்சிதமே''

                  
பச்சை மணக்குதடி பாதகத்தி ஒம் மேல
இச்சை பட்ட நேரமெல்லாம் ஏங்கி முகம் வாடுறனே ..
பாக்கு துவக்குதடி பழைய உறவு மங்குதடி ..
ஏலம் கசக்குதடி இன்னொருவன் மையலாலே ...

தங்கத்துக்குத் தங்கம் இருக்க தனித் தங்கம் நானிருக்க..
பித்தாலத் தங்கத்துக்குப் பித்தாசை கொள்ளலாமா?
கடலில் தலைமுழுகி கப்பலில் சிக்கு உலர்த்தி
ரெங்கத்துப் பூ ஒடிச்சு நேரவாடி பேசிப் போவோம் ..
கரை போட்ட கழுத்தழகி கடுக்கை போட்ட முகத்தழகி..
மிஞ்சி போட்ட ரஞ்சிதமே மின்னவாடி பேசிப் போவோம் ..

ஒத்தபனை சித்தநந்த ஒழுகு பனை ராமேஸ்வரம்
கும்பபனை அறியவேறு குயிலு இருந்தும் கூவாதோ..
சோட நந்த கண்மாய்க்குள்ள சோடி புறா மேயயிலே ..
சோடி பிரிஞ்சன்னைக்கு சோரவிட்டேன் கண்ணீரை ..
கம்மாய்க்குள் கழுகு மரம் கலந்து பேசி ஆறுமாதம் ..
சந்திக்கிற நேரமெல்லாம் சனியன் வந்து நேரிடுதே...

கொலவாலு நெல்லுகுத்தி கொலயாம சோறு பொங்கி
எலவாங்க போன மச்சான் எவளோட தாமுசமோ ..
ஆத்துக்குள்ள அஞ்சரளி அத்தை மவன் வச்சரளி ..
காக்கிதுல்ல பழுக்குதில்ல கவ்வோதிபய வச்சரளி ..
எண்ணெ தேச்சு தலை முழுகி நடுத்தெருவே போரவரே ..
வண்ணமிட்ட தலைபோல என் கண்ணைப் பறிக்குதய்யா ...

(மதுரை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்த மீனாள் (வயது 45) என்பவர் சொல்ல அதைப் பதிவு செய்தது திருச்சி பிஷப் ஹீபர்கல்லூரியின் தமிழ்த் துறை மாணவ, மாணவிகள்)

நன்றி
http://thatstamil.oneindia.in/art-culture/folk/2005/folk1.html

Thursday, January 14, 2010

மொழி மாசு.........



மாசு........எங்கும்............எதிலும் மாசு.

உண்ணும் உணவில், குடிக்கும் நீரில், சுவாசிக்கும் காற்றில், இப்படி எங்குகாணினும்      மாசு...........

பேசும் மொழியையும் அது விட்டுவைக்கவில்லை...

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் மொழி மாசுபடுவதை தவிர்க்க, எத்தனையோ தமிழறிஞர்கள் பெருந்தொண்டாற்றினார்கள்.   பட்டியலிட்டால் மாளாது.....ஆனாலும், மாசு நீட்சியை தவிர்க்கமுடியவில்லை.


தனித்தமிழ் இயக்கங்கண்ட, மறைமலை அடிகள் பெயரை, புகைவண்டி நிலையத்திற்கு பெயராக சூட்டுவதோடு நின்றுபோனது......... நமது மொழியார்வம்.


உயர்சாதி நாங்கள் என்ற வரட்டு ஆணவத்தின் மீதான காதலில், நம்மில் பலரும் வடமொழிச் சொற்களை பேச்சு வழக்கில் பயன்படுத்துகிறோம்.   அதை மாற்ற முயலும் முயற்சியாக சிலவற்றை இங்கே காண்போம்.

நடைமுறை வாழ்க்கையில் மாறிப்போன சில தமிழ் வார்த்தைகள்........



தமிழ் மொழி        வடமொழி                          தமிழ் மொழி                 வடமொழி   

  சோறு        -             சாதம்                                       குழம்பு               -          சாம்பார்
 
  சுவைநீர்       -           ரசம்                                         வரிசை             -           பந்தி

  நலமா?        -          சவுக்கியமா?                          மகிழ்ச்சி           -          சந்தோஷம்

  அறிவாற்றல்    -    புத்திசாலித்தனம்               விளக்கு           -            தீபம்

  பூப்பலி, பூ செய் -    பூஜை                                    குடமுழுக்கு       -        கும்பாபிஷேகம்

  பிறவிப்பயன்    -    ஜென்ம சாபல்யம்             வீடுபேறு            -        மோட்ஷம்

 கணவன் மனைவி -   பதியும், பாரியாளும்,     துறவறம்          -      சன்னியாசம்

இப்படிய எத்தனையோ.........?


அன்பிற்கு பிரியமும்,                            குறும்புக்கு சேஷ்டையும்
 
அமைதிக்கு சாந்தியும்                            நாணத்திற்கு சங்கோஜமும்

நட்புக்கு சினேகமும்                                இழப்பிற்கு நஷ்டமும்

பகைக்கு விரோதமும்                            விருப்பத்திற்கு இஷ்டமும்

அறிவுக்கு புத்தியும்.                                   நினைவிற்கு ஞாபகமும்

நல்வாய்ப்பிற்கு அதிர்ஷ்டமும்          கனவுக்குப் பதில் சொப்பணமும்

பரவலாக   பயன்படுத்தப் படுகின்றன.



காற்று        -   வாயு                                 இரவு     -    ராத்திரி

நிலா            -    சந்திரன்                         ஏனம்     -    பாத்திரம்

அறம்           -    தர்மம்                            வினை    -    கர்மா

வானம்          -    ஆகாயம்                    செய்யுள்  -     கவிதா


என்று தமிழாக்கம்  செய்யும் அதிமேதாவிகளையும் நாம் காண்கின்றோம்.



தமிழர் தம் திருநாளாம் இன்று, பைந்தமிழ் வார்த்தைகளை பயன்படுத்துவோம். மொழி மாசுக்கு கட்டுப்பாட்டுகள் விதிப்போம்.  

" தலை போயினும் தயங்காது தமிழ்-போற்றிடத்துணிவாய்
  தமிழே இனி எனதாருயிர் - தலை தூக்கிடு தோழா...."


வாழ்க நிரந்தரம், வாழ்க தமிழ் மொழி  வாழிய வாழியவே
வானமளந்தானைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே
ஏழ்கடல் வைப்பினும், தன்மணம் வீசி, இசைகொண்டு வாழியவே
எங்கள் தமிழ் மொழி, எங்கள் தமிழ் மொழி, என்றென்றும் வாழியவே.


நண்பர் செந்திலின் இடுகைக்கள் உங்கள் பார்வைக்காக:

http://senthilinpakkangal.blogspot.com/2009/06/1.html

http://senthilinpakkangal.blogspot.com/2009/06/2.html

http://senthilinpakkangal.blogspot.com/2009/07/9.html




நன்றி:-
மறைமலையடிகள்
நிறைதமிழ் விழா குழு

தமிழ்க் கடல்

அலைஓசை

பரவும் தமிழ் மாட்சி

பெட்டாலிங் ஜெயா மணி மன்றம்.
மலேசியா.






Tuesday, January 12, 2010

கடலை, பொரி, முருக்கு.....

காவடி சிந்து

1865-1891 வரையில், திருநெல்வேலி ஜில்லா, சென்னிகுளத்தில் வாழ்ந்த அண்ணாமலை கவிராயர் தான் முதன் முதலில், காவடி சிந்து  பாடல்களைத் தமிழிலே அறிமுகம் செய்தவர். என்று அனைவராலும் போற்றப்படுபவர்.

சென்னிகுல நகர் வாசன் - தமிழ்த்
தேரும் அன்னாமலை தாசன் - செப்பும்
ஜகமெச்சிய மதுரக்கவி அதனைப்புய வரையில்
புனை தீரன் அயில் வீரன்

வண்ண மயில் முருகேசன் - குற
வள்ளி பதம் பணி நேசன் - உரை
வரமே தரு கழுகாசல பதிகோயிலின் வளம் நான்
வரவாதே சொல் வன்மாதே

சன்னிதியில் துஜஸ்தம்பம் - விண்ணில்
தாவி வருகின்ற கும்பம் - என்னும்
சலராசியை வடிவார்பல கொடிசூடிய முடிமீதினில்
தாங்கும் உயர்ந்தோங்கும்

அருணகிரி நாவில் பழக்கம் - தரும்
அந்தத் திருப்புகழ் முழக்கம் - பல
அடியார்கணம் மொழிபோதினில் அமராவதி இமையோர்செவி
அடைக்கும் அண்டம் புடைக்கும்

கருணை முருகனைப் போற்றி - தங்கக்
காவடி தோளின்மேல் ஏற்றி - கொழும்
கனலேறிய மெழுகாய்வரு பவரே வருமேகதி
காண்பார் இன்பம் பூண்பார்
என்ற அவர் பாடல்கள் மிகப் பிரபலமானவை.......

சமகாலத்தில் எழுதப்பட்ட, அல்லது அதற்கு முன்பே எழுதப்பட்ட, பஞ்ச கும்மிகள். இதே, காவடிசிந்துவில் எழுதப்பட்டிருந்தாலும், வெளியுலகிற்கு வராதது வருத்தமே.

யார் பறையன்?

கொங்கு மண்டலம் திருப்பூர், அவினாசிக்கு  அருகில் உள்ள திருமுருகன் பூண்டியில், கொங்கு மன்னன், விக்கிரம சோழனின் 12ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில், சிவபிராமணர்களுக்கு, நாள் தொறும் அமுது படிக்காக நாழியரிசி கொடையாகக் கொடுத்தவர் பெயர்  வெள்ளாளர், மாப்புள்ளிகளில் சோழன் பறையன் ஆன தனபாலன் என்று குறிக்கப்பட்டிருக்கிறது. என்ற தகவலை கல்வெட்டறிஞர் புலவர்.செ.இராசு அவர்கள் தன்னுடைய கொங்கு வேளாளர்கள் கல்வெட்டும், காணிப்பாடல்களும் என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.

வெள்ளாள மரபில் வந்த தனபாலன், அரசால், சபையோரால்,அல்லது ஊரால், சோழன் பறையன் என்ற பட்டம் பெற்றிருந்தான் என்பதை அந்த கல்வெட்டு தெரிவிக்கிறது.சோழன் புகழைப் பரப்புபவன்,.அல்லது பறை போன்ற கருவியை இயக்குபவன் என்ற பொருளில் " பறையன்" என்ற வார்த்தை வந்திருக்கலாம்.

உடுமலை வட்டம் சோழமாதேவியில் கிடைத்த விக்கிரம சோழன் கல்வெட்டில் கூட, கோவிலுக்கு கொடையளித்தவர் பெயர், "பறையன் ஆளுடைய நாச்சி" என்றிருப்பதையும் அவர் பதிவு செய்துள்ளார்.

இது எப்படி?, ஒரு குலத்திற்கு, அதுவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான குலப்பெயராக மாறியது என்பதுதான் ஆச்சரியம்.

திருமந்திரம்

கடந்த வாரம் கோவையில் அண்ணாச்சி, செல்வேந்திரன், சஞ்சய், பழமைபேசி, ஈரோடு கதிர் ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது வடகரைவேலன் அண்ணாச்சி அவர்கள் திருமந்திரம் புத்தகம் ஒன்றை எனக்குக் கொடுத்தார்.   இன்று காலை அதை எடுத்து வைத்து பார்த்துக்கொண்டிருந்தபோது பல ஆச்சரியமான விசயங்கள் கிடைத்தன.  நம்மில் பலரும் மிக இயல்பாக, பேசிவரும் வரிகள் திருமந்திரத்திலிருந்து எடுத்தாளப்படுகின்றன என்பதை அறிந்ததும் வியப்பாகியது. அவற்றில் சில


"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"


"மாணிக்கத்துள்ளே மரகதச் சோதியாய்"


"என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை
நன்றாகத் தமிழ் செய்யுமாறு"-  இது இடைச் செருகலாக இருக்குமோ?


"குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டிட்டால்"

"கிளியோன்று பூனையால் கீழது வாகுமே"

"உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே"

"அண்டஞ்சுருங்கில் அதற்கோரு அழிவில்லை"

"வாயொன்று சொல்லி, மனமொன்று சிந்தித்து"

"ஒளியும் இருளும் ஒருகாலும் தீரா"

"உள்ளம் பெருங்கோவில், ஊனுடம்பு ஆலயம்"

"கண்கானி இல்லென்று கள்ளம் பல செய்வார்"

"ஒன்றே குலமும், ஒருவனே தேவனும்"----(இது  அண்ணா சொன்னதில்ல?)

"தானே தனக்கு பகைவனும் நட்டானும்"(சொந்தக் காசில் சூனியம் )

"ஆசையறுமின்கள், ஆசையறுமின்கள்"-

"சிவ சிவ என் கிலர் தீவினையாளர்"

" தத்துவம் எங்குண்டு, தத்துவன் அங்குண்டு"


ஸ்ரீராமன் சிலோனுக்கு சென்றதில்லை

வசந்தம் வெளியீட்டகம் வெளியிட்டுள்ள " ராமன் சிலோனுக்குச் சென்றதில்லை" என்ற நூலை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.   நீண்டகாலமாக தொடர்ந்து வரும் ராமர் பாலம் பிரச்சனையை மையமாக வைத்து, இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்திற்கு ராமன் வரவேயில்லை, பாலம் கட்டவேயில்லை என்பதை வலியுறுத்தி எழுதியிருக்கிறார், ஆசிரியர்.  அதற்கான ஆதாரமாக சிலவற்றைச் சொல்லுகிறார்.

1.வால்மீகி ராமாயணத்தில் பாலம் வடக்கு தெற்காக கட்டியதாக சொல்லப் பட்டிருக்கிறது. ஆனால் உண்மையில், ராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையே உள்ள ஆதாம் பாலம், கிழக்கு மேற்காக உள்ளது.

2.ராமேஸ்வரத்திற்கும், சிலோனுக்கும், இடையே பாலம் கட்டினார், சரி, மண்டபத்திற்கும், ராமேஸ்வரத்திற்கும் இடையே உள்ள கடலை எப்படித் தாண்டினார்.   அப்படியென்றால் 2 பாலம் கட்டினாரா ராமர்?

இராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் பல்வேறு கட்டங்களில் பிற்ச்சேர்க்கை இருந்திருக்கிறது.  ஆரிய சிந்தனைகளையும், ஒட்டிய இடைச் செருகல்கள் இவ்விரு காவியங்களிலும் உண்டு என்று, ஜவகர்லால் நேரு தன் "இந்திய தரிசனம்" என்ற புத்தகத்திலும், கொண்டப்பள்ளி ராதாகிருஷ்ணன் " இந்திய தத்துவத்தின் ஒரு தரவு நூல்" என்ற புத்தகத்திலும் குறிப்பிட்டுள்ளனர்.


எல்லாஞ்சரி,  காசிக்கும், ராமேஸ்வரத்துக்கும் முடிச்சுப் போட்ட பிரகஸ்பதி யாருன்னு தெரியலையே?  காசிக்குப் போனா கண்டிப்பா, ராமேஸ்வரத்துக்கும் போகனும்னு சொல்லறது எத வச்சுன்னு தெரியலையே?


இதே போல், " தமிழரும் கீதையும்" என்ற ஒரு ஆய்வுக் கட்டுரையை ஐயா, பழ.நெடுமாறன் வெளியிட்டிருக்கிறார்கள்,  பாரதத்தில் கீதை என்பது ஒரு முழு நூல் அல்ல,  பாரதத்தின் ஆறாவது பர்வதமாகிய "பீஷ்ம பர்வம்" பல உபபர்வங்களாக பிரிக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு உப பர்வம் தான் "கீதாபர்வம்".   இதில் 13 முதல் 42 அத்தியாயங்கள் உள்ளன.  அவற்றில் 25 முதல் 42 வரை உள்ள அத்தியாயமே "கீதோபதேசம்".  

சங்க இலக்கியங்களிலொ, தேவார பதிகங்களிலோ, இன்னும் ஏன், ஆழ்வார்கள் பாசுரங்களிலோ, கீதை பற்றிய எந்த குறிப்பும் இல்லை என்பது கவனிக்கவேண்டிய ஒன்று.  "ஆளியால் மிக்க பார்த்தனுக்கு அருளி" என்ற ஒரு சில வரிகள் தவிர....கீதையின் சிறப்புகளைப் பற்றி யாரும் சொல்லவில்லை..

பல்வேறு கட்டங்களில் பல்வேறு நபர்களால், இடை செருகப் பட்டு இன்று ஒரு பெரிய புத்தகமாக்கப்பட்டுள்ளது.

ரேடியோவில் எங்கோ பாடிக்கொண்டிருக்கும், பட்டுக்கோட்டையின் பாடல்கள் எனக்கு கேட்கிறது............உங்களுக்கு...??????????????


       குறுக்கு வழியில்  வாழ்வு தேடிடும்
       குருட்டு உலகமடா- இது
       கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
       திருட்டு உலகமடா- தம்பி
   
                         தெரிந்து நடந்து கொள்ளடா-இதயம்
                         திருந்த மருந்து சொல்லடா.........


       இருக்கும் அறிவை மடமை மூடிய
       இருட்டு உலகமடா-வாழ்வில்
       எந்த நேரமும், சண்டை ஓயாத
       முரட்டு உலகமடா- தம்பி
                
                          தெரிந்து நடந்து கொள்ளடா-இதயம்
                          திருந்த மருந்து சொல்லடா........

___/\___

Thursday, January 07, 2010

கும்மியடிக்க வாங்க.........

இது நம்ம பதிவுலகத்தில அடிக்கிற கும்மியில்லைங்க.......ஏற்கனவெ நம்ம பாட்டன், பூட்டன் அடிச்ச கும்மிங்கோ.
பஞ்சப் புலம்பல்:

சென்னை மாகாணம் அதுவரை சந்தித்திராத பஞ்சத்தை 1866 ஆண்டின் துவக்கத்தில் சந்தித்தது. தலைவிரித்தாடிய பஞ்சத்திற்கு பலியானோர் கணக்கிலடங்கா. தமிழ் வருடம் "தாது" 1876-1877 ஆண்டுகளில் பஞ்சத்தின் கோரம் உச்சகட்டமாய் தலைவிரித்தாடியது. இதை "தாதுவருடப் பஞ்சம்" என்றழைத்தனர்..

பஞ்சத்தின் கொடுமைகள் ஒருபுறமிருப்பினும், அதையும் பதிவாக்கி வரும் தலைமுறைக்கு கொடுத்துச் சென்றிருக்கின்றனர் நம் பழந்தமிழர்.


காலங்காலமாக, வாய்மொழிப் பாட்டாக இருந்த பஞ்ச காலக் கொடுமைகளை கும்மிப் பாட்டாக பாடி வந்தனர். அந்த பஞ்ச கொடுமைகள் வாய்மொழிப் பாடல்களாகவும், சில ஏட்டுச் சுவடிகளாகவும்,  இருந்தவற்றை தொகுத்து, பஞ்ச கும்மிகள்" என்ற ஒரு புத்தகத்தை வரலாற்று ஆய்வாளர், புலவர்.செ.இராசு தொகுத்திருக்கிறார்கள். "காவ்யா" நிறுவனத்தின் வெளியீடு.  விலை ரூ60/-

பஞ்சத்தின் கோர முகங்களை படமெடுத்து காட்டிவிட்டுச் சென்றிருக்கும் நம் பழந்தமிழர் மொழி ஆளுமை ஆச்சரியப்பட வைக்கின்றன. அரசர்குளம் சாமிநாதன் இயற்றிய பஞ்ச கும்மிகளில் சில பாடல்கள் உங்கள் பார்வைக்காக.....

  என்ன செய்வோம் சோசியரே மழை
      எப்போது பெய்திடும் என்பாரும்
  ஈசா, செக தீசா, விசு வேசா, கைலாசா, - இது
      என்ன கொடுமையோ என்பாரும்.

 
  வீணாய் விதைத்த விதையிருந்தால் இந்த
       வேளைக்கு உதவுமே என்பாரும்
  விளையும், மழை பொழியும், எனப், பழநெல்லுகள், முழுதும்-முனம்
        விற்றது மோசந்தான் என்பாரும்


  ஆதியிலே ,விதை தூவையிலே, ஒரு
        ஆந்தை அலறியது என்பாரும்
   ஐயோ மழை, பெய்யாவிடில், வையம் இனி, உய்யும் வகை,
        ஆதாரம் வேறில்லை என்பாரும்


   துய்யிது மோசம் என்பாரும், பயிர்
        எல்லாம் கருகியது , என்பாரும்
   ஏதோ, இது சூதோ, சனி தீதோ, புவி மீதோர்- மழை
        இல்லாமல் போச்சுதே என்பாரும்


   நாயகியே இந்த  வாறு பூலோகம்
        நடுங்கி மயங்கிடும் நாளையிலே
   நலமாகிய, பல தானியம்,விலையானது, சில நாளையில்
        நாளுக்கு நாளாய் குறைந்ததடி.
        


தாயின் பரிதவிப்பு:
 
   பாலகனில்லை, என்றே தலமெங்கும்
        பணிந்தொரு கோடி தவம் புரிந்தேன்.
   பரிபூரணன், உமையளொடும், திருமாலின் அருளாலே உயர்
        பாங்குடன் உங்களைப் பெற்றெடுத்தேன்.


   பாகென்னும் சர்க்கரை முக்கனி போல் ,மொழி
        பாலகரே நீங்கள் பசித்தழுக
   பார்த்தேன், பழியேற்றேன், பொருள் தோற்றேன், இது தூர்த்தேனிது
        பாவமென்பாள், பரிதாப மென்பாள்.


   கையைப் பிடித்த என் மன்னவரே, பிள்ளை
        கஞ்சிக்க ழுகுதே, என்ன செய்வேன்
   களையாகுதே, விழி சோருதே, பழி நேருதே, ஒழியா-இது
        கவலையென்பாள், பிள்ளை சவலையென்பாள்.


தந்தையின் பதில்:

   சங்கு வெள்ளை, மோழைக் காளையை, நான் செவ்வாய்
         சந்தையிலும், வீதி மந்தையிலும்
   சலியா, துளம். மெலியாமலே, பலபேரிடம் நலமாகவே
         தையல ரேவிலை கூறி வந்தேன்.

  மாடாடு விற்போரைக் கண்டேன் அல்லால்-இதை
         வாங்குவோரைக் கண்ணில் காணேனடி
  மானேயடி, தேனே, வினை, தானே, இனி நானே-மனம்
         நாடிவந்தேன், எங்கும் ஓடி வந்தேன்.


  தோகைய ரே, காட்டில் கீரை பறிக்கத்
         துரிதமாய் எங்கெங்கும் போய்ப் பார்த்தேன்
  சுடராகிய, கொடிதாம், வெயில் படலால், மிக அடிவேரோடு
         சேர்ந்து கருகியே போச்சுதடி


  மாரியப்பன், முத்துவீரன், குமாரன்
        வைரவன் மற்றுள்ள பேரையெல்லாம்
  வரகோர், படி, தருவாய், உனை, மறவேன், என ஒருநாள் பகல்
        மட்டும் நின்று கெஞ்சிப் பார்த்தேன்.


  அன்னம் கண்டு அஞ்சுநாள் ஆச்சுதென்றார், அவர்
        ஆண்மையும், செல்வமும் போச்சுதென்றார்.
  அன்னமாம் நடை, மின்னலாம் இடை, கன்னலாம் மொழி- என்னவேவரு
        ஆரண்கே மனம் நொந்தேனடி....

  __/\__

Monday, January 04, 2010

நம்ம ஈரோடு-நிறைவு நாள் நிகழ்வுகள்

பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. கனிமொழி கொடியசைக்க, தந்தை பெரியார் நினைவு சமத்துவ பேரணி மாலை 5 மணியளவில் தொடங்கியது. "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற பதாகை ஏந்திய பள்ளி மாணவ மாணவியர், உடன்பிறப்புக்கள்,தமிழ் மையத்தினர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.




ஜிம்னாஸ்டிக்ஸ்



தண்ணீர் நிறைந்த பானையோடு " மதுரைக்கு போகாதடி" பாட்டுக்கு பெரியவர் ஆடிய ஆட்டம். அனைவரையும் கவர்ந்தது.



பார்வையாளர்களில் ஒரு பகுதி



பார்வையாளர்களின் மற்றொரு பகுதி


சின்னப் பொண்ணு குழுவினர்



பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்-தந்தை பெரியார் சமத்துவ அணிவகுப்பு
பெரியார் வார்த்தை ஒன்னும் கிடைக்கிலீங்களா?

ரெண்டு பேரும் தாடி வச்சிருக்கிறதுனால, வள்ளுவர் பாட்டப் போட்டு பெரியார் படத்த போட்டுட்டாயங்களோ?????



உள் நுழைவாயில்

நாங்கள்ளாம் பெரியார் பாசறையில் வளர்ந்தவங்க.... அதோட, மதசார்பின்மையை வலியுறுத்தரவங்க.....என்ன நாஞ் சொல்லறது

அதுனால தான் இந்த பிள்ளையாரு, அவசரடி  சர்ச், மசூதி எல்லாம்

கடவுள் இல்லை...இல்லவே இல்லை.....
கடவுளை நம்புபவன் முட்டாள்
வாழ்க        பெரியார்(க்கு) நாமம்.


நம்ம ஈரோடு-தொடர்ச்சி




ஈரோடு நகரின் அருகில் அமைந்திருக்கும் ஒரு கல்லூரியின் தாளாளர், இந்த நிகழ்வுகளை முன்னின்று நடத்துவதால்,  மேடை நிகழ்வுகளில் ஈரோட்டின் குறிப்பிட்ட இரண்டு மூன்று பள்ளி கல்லூரிகள் மட்டுமே நிகழ்வுகளில் பங்கெடுத்ததோடல்லாமல்,  பள்ளி கல்லூரிகளுக்கிடையிலான கலை நிகழ்சிகள், போட்டிகள் போல மாறிப்போனது நிகழ்வின் அபத்தம்.


குறிப்பிட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் இசை வடிவங்களாக ஆக்கப் பட்ட, அவர்கள் மட்டுமே கட்டி காத்து வரும்  பறை, தப்பு போன்றவற்றை கல்லூரி மாணவ மாணவியர் இசைத்தது, மனதிற்கு மகிழ்ச்சி தந்தது.




கொங்கு மண்ணில், துக்க நிகழ்ச்சிகளுக்கும், சில குறிப்பிட்ட கோவில்களில் மட்டுமே இசைக்கப் படுகின்ற அவற்றை அனைவர் மத்தியிலும் கொண்டு சென்ற பெருமை திரைத் துறையே சாரும்.  அவர்களின் இந்த குத்தாட்டாங்களினாலே இவை மக்கள் அனைவரும் ரசிக்கும் ஒரு இசை வடிவமாக மாறியிருக்கிறது.

பொதுவாக, கொங்கு மண்ணின் பெருமையை பரைசாற்றும், ஓரங்க நாடகங்கள், ஒயிலாட்டம், தெருக்கூத்துக்கள் இடம் பெறாதது வருத்தமே.


தமிழக கலாச்சார நிகழ்வுகளில், ஒன்றாக கோலாட்டத்தை, சேர்த்து, நவராத்திரி டாண்டியாவாக ஒரு கல்லூரி மாணவியர்  கொண்டாடியது கொஞ்சம் வருத்தமளித்தது.


" அதுஆட....இது ஆட...." போன்ற தொலைகாட்சிகளில் வரும் நிகழ்ச்சிகள் போல் நிகழ்வுகள் மாறிப்போனதை என்ன வென்று  சொல்வது?  மக்கள் ரசித்தார்கள், கை தட்டினார்கள், பங்கு கொண்டவர்களும் மிகத்திறமையாகத்தான் நடனமாடினார்கள். ஆனால்......இதைச் செய்வதற்கு தமிழ் மையம் எதற்கு.....?


கிராமியக் கலைஞர்களைக் கொண்டு நடத்தப் பட்டாலும், அனைத்திலும் சினிமாத்தனமான  நடன அசைவுகளின் சாயல் இருந்ததை மறுக்க முடியவில்லை.  மக்கள் இதைத்தான் ரசிக்கிறார்கள் என்ற முடிவுக்கு அவர்களும் வந்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது.


"சென்னை சங்கமத்தை"ப் போல் தமிழகம் முழுவதும் தமிழ் மையத்தின் மூலம் நடத்தத் திட்டமிட்டோம், அதற்கான முதல் முயற்சி தான் "நம்ம ஈரோடு" என்று அருட்தந்தை ஜகத் காஸ்பர் பேசினார்.  முதலில் தமிழ் கலாச்சாரம் எது என்பதை இவர்களுக்கு தமிழ் மையம் சொல்லித்தரவேண்டும் என்று தோன்றியது.


குறிப்பிட்ட பகுதிகளில் நடக்கும் போது, அந்த பகுதிகளைச் சார்ந்த, கலை மற்றும் கலாச்சாரத்தை வளர்க்கும் விதமாகவும், அழிந்து போகும் நிலையில் உள்ள கலைகளை தெரிவு செய்து அதை வளர்க்கும் விதமாகவும் அமைய வேண்டும் என்பது என் போன்றோர் அவா..


அருட்தந்தை ஜெகத் கஸ்பர் "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்று ஈரோட்டு மண்தான் ஆண்டவனையே குற்றஞ் சாட்டி  பேசியது என்ற வகையில் ஏதேதோ உணர்ச்சிகரமாக பேசினார்.   எனக்கும் ஒன்றும் புரியவில்லை.... .........



ஒன்றுமட்டும் புரிந்தது, இன்று காஸ்பர் இங்கு உங்களோடு பேசுவதற்கு காரணம், தந்தை பெரியார்,  ஏசுநாதருக்குப் பிறகு நான் ஒருவரை வணங்குவேன் என்றால் அது தந்தை பெரியாரைத்தான், அவர் இல்லையென்றால், நானெல்லாம் இன்று இந்த இடத்தில் இல்லை என்றார்.   மிக நிதர்சனமான வரிகள்.......வாழ்த்துக்கள் அருட்தந்தை அவர்களே.


நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவரின் பல பேச்சுக்கள், பார்வையாளர்களை முகஞ்சுளிக்க வைத்தது உண்மை. பொறுப்பாளர்களை துதி பாடியதும், உண்மையாக இருப்பினும், சபை நாகரீகம் மறந்து மேடையில் ரெக்கார்ட் டான்ஸ் பற்றிப்  பேசியது கொடுமை.

திரைப்படத்தில் "ஆடுங்கடா என்னைச் சுத்தி, நான் அய்யனாரு வெட்டுக்கத்தி" என்று நடிகர் விஜய் பாட, அவரைச் சுற்றி ஒரு பெண்கள் குழு பறை அடித்துக் கொண்டே ஆடுவார்கள்.   அந்த பாடலை தொலைக்காட்சிகளில் காணும்போதெல்லாம் இது சாத்தியமா?  பெண்களால் பறை அடித்துக்கொண்டே இவ்வளவு அழகாக ஆடமுடியுமா? என்று ஆச்சரியப்பட்டதுண்டு.   அதை இன்று நேரிலே கண்டேன்.






திண்டுக்கல் சக்தி கலைக்குடும்பத்தினர் நடத்திய முழுவதும் பெண்கள் பங்கேற்ற "வெற்றிப் பறை" என்ற நிகழ்வு.  அத்தனை பெண்களும், ஆண்களுக்கு நிகராக, பறை முழக்கி, ஆடியது,  நினைவில் நிற்கிறது.   மீண்டும் மீண்டும் அவர்களில் அசைவுகள், நடனமாடிய விதம், வெற்றி முழக்கமிட்டு அடித்த பறை ஒலி காதுகளில் இன்னும் இருக்கிறது......

வாழ்த்துக்கள் சக்தி குழுமம்.   விழா முடிந்ததும் அந்த குழுவின் இயக்குனர் சகோதரி. சந்திரா அவர்களையும் அவர்கள் குழுவையும் பாராட்டாமல் திரும்பி வரமுடியவில்லை.   வாழ்த்துக்கள்.  இந்த குழுவை நம் நண்பர்கள் கூட பயன் படுத்தி, ஆங்காங்கே இந்த நிகழ்ச்சியை நடத்தலாம்.  தொடர்புக்கு: சகோதரி சந்திரா அலைபேசி எண் 98421 10957-0451 2410957. www.sakthicentre.org. சுமார் 30 பேர் கொண்ட குழு 2 மணிநேரம் நடத்தும் நிகழ்ச்சிக்கு கட்டணம் ரூபாய் 25000/-

பள்ளியிலே படித்த அவ்வையாரின் ஆத்திச்சூடி படி  "ஊக்க    'மது'  கைவிடேல்" என்பதை இன்றும் நினைவில் நிறுத்தி பின்பற்றும் கல்லூரி மாணவர்களின் இசைக்கேற்ற குத்தாட்டம் ரசிக்கும்படி இருந்தது உண்மை.


தங்கமணியுடன் (வேறு வழியில்லாமல், ஞாயித்துகிழமை கூட தனியா ஊர் சுத்தினா எப்படின்னு திட்டுவாங்கறத தவிர்க்க)) வந்த நம் போன்ற பலரும், இசைக்கேற்ற குத்தாட்டம் போடமுடியாமல் தவித்தது போனது உண்மை.


ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் திரு. கணேச மூர்த்தி அவர்கள் வாழ்த்துரையில்  மனதிற்கு மிகுந்த ஆறுதல் அளித்தது.   அப்பாவை, தாடி என்றும் அம்மாவை மம்மி என்றும் அழைப்பதில் ஈரோடு மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.  தாத்தா, பாட்டி, தன் பேரக்குழந்தைகளை பேர் சொல்லி அழைக்கும் படியான தமிழ்ப் பேர்களை குழந்தைகளுக்கு வையுங்கள். எத்தனை தாத்தா, பாட்டிகளுக்கு தன் பேரன், பேத்தியின் பெயரை சரியாக சொல்லத்தெரியும்? என்ற அவரின் பேச்சுக்கு  திருவாளர் பொதுசனம் கைதட்டியது தான் நகைச்சுவையின் உச்சம்.

கிராமத்துக் கோவில்களில் மாரியாத்தாவுக்கும் வட மொழியில் அர்ச்சனை நடந்ததை கண்டித்து, கிராமக் கோவில் பூசாரிகளை கேட்டதற்கு, ஊர்க்கவுண்டர் தான் சமஸ்கிரதத்தில் பூசை செய்யச்சொன்னார் என்று சொன்னதையும் சொல்லி, தமிழ் வழிபடுவது அவசியம் என்றார்.

பாராளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதியிருந்தபோதும், அதை மொழிபெயர்த்து ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் கேட்க  முடியும் வசதிகள் இருக்கின்ற  போதிலும், நாம் உறுப்பினர்கள் தமிழில் பேசுவதில்லை என்ற குற்றச்சாட்டையும் வைத்தார்.

பாராளுமன்றத்தில் மற்றவர்கள் பேசும் போது, அதை தமிழில் மொழி பெயர்த்து, வழங்க வேண்டும் என்ற தன் வேண்டுகோளுக்கு, பாராளுமன்ற அவைத்தலைவர், சுமார் 484 மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்படுவார்கள் இது சாத்தியமா? என்று கேட்டதாகவும், அவர் குறிப்பிட்டார்.


ஈரோடு மாவட்டத்தின் சிறப்புகளை விளக்கும் விதமாக புகைப்படக்கண்காட்சி ஏற்பாடு செய்திருந்தது அருமை.  பல அரிய தகவல்களையும், புகைப்படங்களையும் காண முடிந்தது.


அருட்தந்தையின் ஆசியாலோ என்னவோ,  தமிழ் தேசியத் தலைவர்  தம்பி பிரபாகரனின் வண்ணப்படங்களும், ஈழம் குறித்த புத்தக்கங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.  தேசியத்தலைவர் வண்ணப் படங்கள் அச்சிடப்பட்ட காலண்டர்கள் பரபரப்பாக விற்பனையாகியதும், அருகே நம்மூர் போலீஸ் அதற்கு பாதுகாப்பு கொடுத்ததும் ஆச்சரியமளித்தன.


நாளை பாரளுமன்ற உறுப்பினர் திருமதி, கனிமொழி அவர்கள் சமத்துவ பேரணியை தொடங்கி வைக்க இருப்பதாகவும்,  நாக்கு, மூக்கா புகழ் சின்னப் பொன்னு அவர்களின் கலை நிகழ்ச்சிகள் இருப்பதாகவும் மேடையில் அறிவிக்கப் பட்டது.



நிகழ்ச்சி நடத்துவதிலும், மேடை நிர்வாகத்திலும் பல குழப்பங்கள் இருந்தாலும், இது ஒரு பாராட்டப் படவேண்டிய நிகழ்வுதான்.  "சர்க்கரை இல்லாத ஊருக்கு இழுப்பப்பூ  சர்க்கரை" என்ற சொலவடை நினைவிற்கு வந்தது என் குற்றமல்ல.



நாளை மீண்டும் சந்திப்போம்..........

Saturday, January 02, 2010

நம்ம ஈரோடு.......கூடல் 2010



வரவேற்பு அலங்காரங்கள்

நல்லாத்தான் இருக்கு....................


 
விளம்பர  போஸ்டர்ஸ்

மாடு விரட்டும் மனிதனுக்கு பின் உள்ள கொடி சமீபத்தில் அரசியல் கட்சியாக மாறிய ஒரு குறிப்பிட்ட சமூக அமைப்பின் கொடி போல் தெரிகிறதே. அவர்களுக்கும் இதற்கும் தொடர்பு  உண்டோ?


பனைந்தோப்புகளோ, பனங்காடுகளோ இல்லாத வாய்க்கால் பாசனப் பகுதிகளை உள்ளடக்கிய ஈரோடு மாவட்டத்துக்கும் பனைமரத்துக்கும் என்னங்க சம்பந்தம்??? இது யாரை திருப்தி படுத்த??????????


 
வரவேற்க முன் வரிசையில் காத்திருக்கும் பாண்டு வாத்தியக் குழு
பின்னனியில் தாரை, தப்பட்டை
என்று மடியு  மிந்த அடிமையின் மோகம்...........
 

இதுதான் கிராமிய உணவாங்ணா?
 
அரங்கை நிறைக்க பள்ளி விடுதி மாணவர்களா?
லீவ் விட்டாலும் இவங்க விடமாட்டாங்க போல


இது கொஞ்சம் ரசிக்கும் படி இருந்தது 



பாதி' ரியார் ஜெகத் கஸ்பரும். கனிமொழியும் சேர்ந்து "சென்னை சங்கமம்" அளவிற்கு நடத்துவாங்க, என்று சென்ற நமக்கு ஏமாற்றமே 
 ஆரம்ப நிகழ்வுகள்  படு சொதப்பல், 
பார்ப்போம் நாளை எப்படியென்று 



தண்ணிழல்

கடை ஏழு வள்ளல்கள் பற்றி பள்ளி, கல்லூரிகளில் படித்திருப்போம். பாரி, காரி, ஓரி, பேகன், ஆய், அதியன், நள்ளி ஆகிய எழுவரும் அவ்வாறு போற்றப் பட்டனர்.

சூடாமணி நிகண்டு வள்ளல்களை மூன்று வகைப்படுத்தியது.தண்டாது ஈவோரை தலைவள்ளல் என்றும், இரப்போர்க்கு ஈவோரை இடைவள்ளல் என்றும், தம்மை துதிபோர்க்கு கடை வள்ளல் என்றும் கூறுகிறது.


பிங்கல நிகண்டில்

சகரன் காரி நளன் துந்து 
மாரி நிருதி செம்பியன் விராடன் தலைவள்ளல்

அந்திமான் சிசுபாலன் அக்குரன் வக்கிரன் 
சந்திமான் கன்னன் சந்தன் இடைவள்ளல்

பாரி எழினி நள்ளி ஆய் மலையன் 
ஓரி பேகன் இவர்கடை வள்ளல்



சோழ நாட்டிற்கும், தொண்டை நாட்டிற்கும் இடைப்பட்ட பகுதி நடுநாடு எனப்பட்டது.  இந்நாடு மலைய மான் நாடு என்றும் மலாடென்றும், அழைக்கப்பட்டது.

தலைவள்ளல்களில் ஒருவரான மலையமான் திருமுடிக்காரியின் வரலாற்றை பேராசிரியர் திரு. அடிகளாசிரியன் “தண்ணிழல்” என்ற பெயரில் ஒரு காவியமாக படைத்திருக்கிறார்.

அதிலிருந்து சில பாடல் வரிகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கோவூர் கிழார் மனைவி நீரிரைக்க குளத்திற்கு செல்கின்றார். அங்கே காணும் காட்சியை அவர் சொல்வதாக அமைந்தது இப்பாடல்

தேம்புறு வண்டுக் கெல்லாம் 
தினந்தினம் தாய்போல் நின்றே
காம்  புறு பூவி  னாலே 
கள்ளினைக் காலை யூட்ட 
ஆம்பலும் கமலந் தாமும் 
அழைத்திடும் அழகைக் கண்டால் 
ஓம்புறு தாய்மை உள்ளம் 
உதித்திடும் உலகத்தோர்கே… 

பாசொளி இலையும் நல்ல 
பன்னிற மலரும் வண்டும் 
வீசொளிப் புனலும் துள்ளி 
வீழ்தரு கயலும் எல்லோன்
தேசொளி தன்னில் மூழ்கித் 
திகழ்குளத் தழகு நல்ல 
பேசொளி வேந்தன் நாட்டுப்
பேரழ கொத்த தம்மா. 

 குறிப்பு:
கடை ஏழு வள்ளல்கள் தவிர மற்றவர் பற்றிய கதைகள் நமக்கு கிடைத்ததாகத் தெரியவில்லை. நண்பர்களிடம் இருக்குமாயின் வலையேற்றுங்களேன்.



அன்புடன் ஆரூரன்.

Friday, January 01, 2010

எங்கள் அன்னை பூமி............பாரதம்




அதிகாலை 5 மணி
அரை டம்ளர் டீயிக்காய்
அவசரமாய் காத்திருந்தேன்
ஆறுமுகம் கடை வாசலில்
,
பஞ்சடைத்த உடல்
பசி அரித்த குடல்
கந்தையிலும் கந்தையாய்
எனக்கருகில் ஒருவன்

ரத்தத்தில் ஏறிப்போன சர்க்கரையால்
பாய்லர் பாலை விட கொதிப்பில் நானும்,
எச்சில் டீயாவது கிடைக்காதா என்று
ஏங்கி அந்த கிழட்டுப் பிச்சைக்காரனும்

அவசரமாய் டீ அடித்து
நடுத்தெருவில் கொட்டினான்
அந்நாள் நன்றாய் இருக்க
அன்னை பூமிக்கு அவிற்பாகமாம்