Wednesday, February 01, 2012

அறனெப்படுவது யாதெனில்


இந்த மாத பண்புடன் மின் இதழில் வந்திருக்கும் கட்டுரை:-

 

சில வாரங்களுக்கு முன்பு ஒரு நாள்,, நண்பர் விஜயராகவன்  புத்தகம் ஒன்றை என்னிடம் கொடுத்தார். வாங்கி வீடு திரும்பியவுடன், குழந்தைகளோடு பேசும்போதும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போதும், இரவு உணவு அருந்தும் போதும்,, திரும்பத் திரும்ப மேசையிலிருந்த அந்த புத்தகத்தை மிட்டாய்க்கடை வாயிலிலிருக்கும் சிறுவனைப் போலவே ஆசையோடு பார்த்துக் கொண்டே இருந்தேன்.  அது என்னை பெரும் தொல்லைக்குள்ளாக்கியது. நாளை மெதுவாகப் படிக்கலாம் என்ற என் வைராக்கியத்தை உடைத்து சுக்குநூறாக்குவதில் அது வெற்றி கண்டது. காரணம் அந்த அட்டையில் இருந்த அந்தத் தலைப்பு  "அறம்".

பொதுவாக எல்லாச் சிறுகதைகளையும் மேலோட்டமாக படிப்பதும், சிறப்பாக இருப்பதாகத் தோன்றினால், அதில் ஒரு அடயாளமிட்டு வைத்துவிட்டு இறுதியில் மீண்டும் ஒருமுறை நிதானமாக வாசிப்பதும், அதில் முக்கியமானவைகளைக் குறிப்பெடுத்து வைத்துக் கொள்வதும் வழக்கமாக கொண்டிருக்கின்றேன். இந்த முறை முதல் கதையைப் படித்தவுடன் மேலும் அடுத்த கதைக்கு நகரமுடியாத நிலை. எண்ண ஒட்டங்கள் பல்கிப் பெருகத் தொடங்கி விட்டன. மீண்டும் ஒருமுறை வாசித்தேன். அதற்குமேல் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு, படுக்கையில் படுத்தபின்னும் அதிகாலை வரை தூக்கம் வராமல் புரண்டு புரண்டு, ஏதேதோ அறற்றத் தொடங்கியிருக்கின்றேன். தொடர்ந்து இரண்டு நாட்கள் இதே மனோநிலையில் இருந்தேன்.


செட்டி குலமறுத்துச்
செம்மண்ணின் மேடாக்கி
எட்டி எழுகவென்றறம்."

இந்த வரிகள் ஏனோ என்னுள் திரும்பத் திரும்ப வந்து கொண்டே இருந்தது.  அதன் பின் சில நாட்களில் ஈரோடு வந்திருந்த ஜெ.மோ அவர்களைச் சந்தித்தேன். பேசிக் கொண்டிருக்கும் போது அவர், அந்த பதிப்பாளர் மட்டுமல்ல அவருடைய குடும்பமே நிலை குலைந்து போய் விட்டன. வாரிசுகள் கூட இன்று முகவரியற்றுப் போய்விட்டனர் என்றதும் எனக்கு ஏதோ போல் ஆகிவிட்டது.  யாரோ ஒருவர் செய்த தவறுக்கு ஒட்டுமொத்த சந்ததியினரும் பாதிக்கப் பட வேண்டுமா? இது எந்த வகையில் ஞாயம்? அறத்திற்கே கூட அறம் கிடையாதா? தவறிழைத்தவனுக்குத் தானே தண்டனை? மற்றவர்களுக்கு அது எப்படி?  இப்படி கேள்விகள் எனக்குள்ளே வந்து போனது.

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம், இன்று மிக உயர்ந்த நிலையில் வாழ்ந்து வருபவர்கள். அதில் ஒருவர் முன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதி, அவர் சகோதரர் மாநில அரசின் மிக உயர்ந்த பதவியில் இருந்தவர்., சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்றதாகக் கூறக் கேட்ட கதை இதுதான்.
நான்கு சகோதரர்கள், அதில் ஒருவர் பட்டாளத்திற்கு (இராணுவப் பணி) சென்று தன் சகோதரர்களுக்கு பணம் அனுப்பி, இங்கு பெரும் சொத்துக்கள் வாங்கி மகிழ்ச்சியோடு இருந்து வந்தனர். இராணுவத்திலிருந்தவர், போரில் மரணமடைந்துவிட, மற்ற சகோதரர்கள், மூத்த சகோதரரின் மனைவி மற்றும் ஐந்து குழந்தைகளையும், வீட்டைவிட்டுத் துரத்திவிட்டனர். அப்பெண்மணி நீதிமன்றத்திற்கு சென்றார். இறந்தவரின் சகோதரர்கள் நீதிமன்றத்தில், சொத்துக்கள் அனைத்தும் தங்கள் உழைப்பால் ஈட்டியது என்றும் அப்பெண்மணிக்கு ஏதும் தர இயலாது என்று  உப்புப் பெட்டிமீது நின்று சத்தியம் செய்ததாக கூறப்படுகிறது. (நீதி மன்றங்களில் உப்பு நிறைந்த பெட்டியின் மீது நின்று சத்தியம் செய்யும் வழக்கம் இருந்திருக்கும்போலிருக்கிறது. இன்றும் இருக்கிறதா என்று தெரியவில்லை) பின்னர் அந்தப் பெண்மணியும் ” அறம் உண்மையாயின் அது கேட்கட்டும்” என்று கூறி வெளியேறி, தன் சகோதரர்கள் உதவியுடன், சிறு சிறு வீட்டு வேலைகள் செய்து தன் குழந்தைகளைப் படிக்கவைத்து உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றிருக்கின்றார்.  தன் அண்ணிக்கும் அவரின் குழந்தைகளுக்கும் தீங்கிழைத்த மற்ற சகோதரர் குடும்பங்கள் இன்று சின்னாபின்னமாகி, இளவயதிலேயே அவர்களின் குழந்தைகள் இறப்பதும், பித்துப் பிடித்து சுயநினைவிழந்து வாழ்வதையும் நானே பார்த்திருக்கின்றேன். 

இரண்டு ஆண்டுகளுக்கு முன், அந்தப் பெண்மணியின் குழந்தைகளையும், பேரக் குழந்தைகளையும், மற்ற சகோதரர்களின் வாரிசுகள் அழைத்து வந்து குல தெய்வக் கோவிலில் விளக்கு வைத்து, அவர்கள் ஒவ்வொருவரின் கால்களிலும் (சிறு குழந்தைகளின் கால்களில் கூட வயதான ஆண்களும் பெண்களும்) விழுந்து மன்னிப்பு கேட்டு கதறி அழுத  நிகழ்ச்சி நடந்தது. அதை நேரில் பார்த்தேன் யாரோ செய்த தவறுக்கு அவர்கள் சந்ததியினர் பாதிப்பது எதனால் என்ற கேள்வி எழுகிறது.

"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் " என்றார்களே, அதுபோல அறம் கூற்றுவனைப் போன்றதா? அறம் தவறிழைத்தவனுக்கு தண்டனை தரக்கூடிய நீதிபதியா?  "அறம்" பற்றி யோசிக்கத் தொடங்கினேன்.

"அறஞ்செய விரும்பு" என்ற அவ்வையிலிருந்து தொடங்கியது என் தேடல். அறம் என்றால் நல்லவை என்ற பொருளில் தான் அவ்வை சொல்லியிருக்க வேண்டும்  அறம் என்றால் தானம் என்று பொருள் சொன்ன ஒன்றாம் வகுப்பு ஆசிரியரை நினைத்துக் கொண்டேன். நல்லவற்றைச் செய்யவேண்டும் அவ்வாறு செய்வதனால் அறமே தலையாயிருந்து நண்மை பெயக்கும் என்ற பொருளில் சொல்லியிருப்பார்களோ?

நன்னெறி பாடிய கருணை சிவப்பிரகாசர்.




கொள்ளுங் கொடுங்கூற்றங் கொல்வான் குருகுதன்முன்
உள்ளங் கனிந்தறஞ்செய்து உய்கவே-



என்றார். இங்கேயும் நல்லது செய்யவேண்டும் என்று சொன்னதாகவே தோன்றியது.  நல்லது என்பது எதையாவது யாருக்காகவாவது தருவது என்ற பொருள் எல்லா இடத்திலும் மறைந்து தோன்றத் தான் செய்கிறது. இதை தான, தர்மம், என்ற பொருள் மதிப்பீடு சார்ந்ததாகவே பார்த்துப் பழகிவிட்டோமோ என்றும் தோன்றுகிறது..

அப்படி என்றால் அறம் என்றால், நண்மை செய்வது, பிறருக்கு ஏதாவது பிரதிபலன் பாராமல் தருவது, என்ற பொருளில் கொள்வது சரியானதுதானே. மூன்றாம் நூற்றாண்டில் கொங்கு மண்ணிற்கு வந்த சமணர்கள் கொடைதான் இந்தப் பெயர் " அறமோ"? என்ற என்னமும் பின் தொடர்கிறது. சமணப் பள்ளி இருந்த  "அறச்சாலையூர்" என்ற ஊர் ஈரோடுக்கு அருகில் இருப்பதும், அறச்சாலையம்மன் என்ற பெண்தெய்வத்தின் கோவிலும் இங்கிருக்கின்றதே, நண்மை செய்வோர்க்கு நல்லது அல்லது செய்வோர்க்கும் தண்டனையும் தருவதே அறம் என்ற முடிவுக்கு வரமுடிகிறது. ஒரு சமூகத்தை நல்வழிப்படுத்தவும், ஏற்ற தாழ்வுகளுக்கு சமாதானம் சொல்வதற்குமான காரணிகளாய் உருவாக்கப்பட்டிருக்க வேன்டும் இவையெல்லாம்.அறம் மறுப்பவன் தண்டிக்கப் படுவான், என்ற கருத்தினாலே உருவாக்கப் பட்டவைதானே இந்த தெய்வ உருவங்களெல்லாம்.


அப்பத்தா இப்படிச் சொன்னாங்கன்னா, அப்புச்சி வேற மாதர சொல்லறாரே.....



அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பது இல்லாயின் நன்று.

அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.


இப்படி சொல்லிகிட்டே வந்தவரு, திடீர்னு மெரட்ட ஆரம்பிக்கிறார்......

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.


தலைப்பாகை, நீள கோட்டு, மேலே அங்கவஸ்திரம் அணிந்து, கையில் அழகான ஒரு வாக்கிங் ஸ்டிக்கோடு கம்பீரமாக நடந்து வந்து, கப்பலோட்டிய தமிழனய் வசனம் பேசியபோதும், சிறையிலே கட்டம் போட்ட கைதி உடையணிந்து செக்கிழுத்த செம்மலாய் வ.உ..சியாக வே வாழ்ந்து காட்டினார் சிவாஜி கணேசன்.

வெள்ளிப் பனிமலை மீதுலாவுவோம் அடி
மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்..

என்ற பாடலில் மெய் சிலிர்த்துப் போனோம்.  வ.உ.சி யே நேரில் வந்திருந்தால் இந்த அளவிற்கு அவரைக் கொண்டாடி இருப்போமா? என்பது சந்தேகமே.

கதர் துணியால் தைக்கப் பட்ட கை வைத்த பனியன், இடுப்பிலே ஒரு பழைய வேட்டி, செருப்பில்லாத கால்கள், ஒரு சிறிய வீட்டில், கைகளில் மண்ணெண்ணை கேன்கள், பொது மக்களுக்கு மண்ணெண்ணை விற்பனை செய்து, அதன் மூலம் ஈட்டிய பணத்தில் தன் குடும்பத்தை காப்பாற்றி வந்தார் வ.உ.சி என்ற செய்தி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. சுதேசி கப்பல் கம்பெனியில்  தொடங்கி, அருந் தமிழுக்கு அவர் ஆற்றிய பணிகள் எத்தனை எத்தனை?  ஒரு கப்பல் நிறுவனம் நடத்தியவர் , சாதாரண மண்ணெண்ணை வியாபாரம் செய்து பிழைக்கும் நிலைக்கு ஆளானது எப்படி?  சரி எப்படியோ? அவர் அதை எப்படி எடுத்துக் கொண்டார் என்பதை விட நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதே இங்கு முக்கியம்.  ஒரு வேளை அவரும் ஏதாவது பெருந்தவறு செய்தவராக இருப்பாரோ? யாரையாவது ஏய்த்துப் பிழைத்திருப்பாரோ?  ஆனால் அப்படியெல்லாம் அவர்மீது குற்றச் சாட்டுகள் வரவில்லையே....பின் எப்படி இப்படி

இதுக்கும் அப்புச்சி ஒரு பதிலு வச்சிருக்காரு.........

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்



நல்லவர்கள் மோசமான நிலைக்கு போவதும், கெட்டவர்கள் நல்ல நிலையில் வாழ்வதைப் பார்க்கும் போது "கலி முத்திப் போச்சு" என்று நம் ஊரில் பேசுவார்கள். ஆனால் அப்புச்சிக்கே இதுக்கு காரணந் தெரியலை,  அதனாலதானோ என்னவோ செவ்வியான் கேடும் நினைக்கப் படும்(ஆராயப்படவேண்டியது) என்கிறார். அப்புச்சிக்கே தெரியலைன்னா அப்புறம் நமக்கெங்கே........
.
அறஞ்சூழும், அறம் கூற்றாகும், அப்புடி இப்புடின்னு ஊருக்கெல்லாம் கதை சொன்னவரு, அவரு குடும்பத்திற்கு அதை சொல்லிருந்தாருன்னா திகார் பக்கம் போற வேலை இருந்திருக்காது பாருங்க.

சரி நமக்கெதுக்கு அரசியலெல்லாம்................

மொத்தத்திலே, அறமோ?, மறமோ? எதையாவது சொல்லி, எழுதி பயமுறுத்தி எங்களை மாதிரி அப்பாவி பொது மக்களை அயோக்கியப் பயங்ககிட்ட இருந்து காப்பாதுங்கடா சாமீ...................எங்களால இவனுங்க செய்யறத சகிச்சிக்கவும் முடியல, எதிர்க்கவும் முடியல.





2 comments :

Admin said...

அறத்தை ஆராய்ந்த அனுபவத்தை கட்டுரையாக தந்திருக்கிறீர்கள்..
சிலப்பதிகாரத்தில் ஆரம்பித்து ஔவையையும் ஐயனையும் கடந்து அரசியலை அடைந்து அறத்தைப் பற்றி ஆராய அலைமோதியதை அழகாக சொன்னது சிறப்பு..முறம் செய்தவர்கள் எல்லாம் அழிந்துகொண்டிருப்பதைப் போலதான் அறம் செய்தவர்களும் அழிந்துகொண்டிருக்கிறார்கள்.அறம் என்றால் அம்மாயி அப்பிச்சி ஞாபகம் எல்லோருக்கும் வருகிறது.எதற்கு சொன்னார்கள் என்று யோசிக்கும் எண்ணம் யாருக்கும் வருவதில்லை.

vasu balaji said...

மொதலாளி நீங்க சீக்கிரம் சுகி சிவம் மாதிரி டிவி பொட்டில வரணும்.:)