Wednesday, November 20, 2013

மாமேதை அ.மார்க்ஸ் அவர்கள் கவனத்திற்கு…… முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்-- ஒரு பார்வை






முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத் திறப்புவிழாவிற்கு ஓரிரு நாட்கள் முன்பு, அங்கே செல்லும் வாய்ப்பு கிடைத்தது.  தலைவர் பழ. நெடுமாறன் ஐயா அவர்களைச் சந்தித்ததும், அவரோடு நினைவு முற்றத்தைச் சுற்றி வந்ததும்,  பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் என்றவுடன் அது வெறும் ஈழப்போரின் இறுதிநாட்களின் காட்சியமைப்பு என்ற எண்ணமே அனைவருக்கும் ஏற்படும்.   ஊடகங்களும் அதையே முன்னிறுத்துகின்றன.  ஆனால் அதையும் தாண்டிய செய்திகளும் தமிழக வரலாறும் அங்கே நிலைநிறுத்தப் பட்டிருக்கிறது என்ற உண்மையை ஏனோ அனைவருமே ம(றை)றந்துவிட்டிருக்கின்றனர்.
 
நினைவு முற்றம் மூன்று பகுதிகளைக் கொண்டதாக அமைந்திருக்கிறது.  உள்ளே நுழைந்தவுடன் சமீபத்திலே இடிக்கப் பட்ட சுற்றுச்சுவருக்குள் அமைந்திருக்கும், பூங்கா, முள்ளிவாய்க்கால் இறுதிப்போர் காட்சிகள், ஒருபுறம், அதன் எதிர்புறத்தில் ஈழப் போரில் இந்திய மற்றும் தமிழக அரசின் நிலைப்பாடுகளை எதிர்த்தும், எம் மக்கள் வதைக்கப்படுவதையும், கண்டித்து உயிர்தியாகம் செய்த முத்துக்குமரன் உட்பட்ட தியாகிகளின் முகவடிவம் சுதையினால் வடிக்கப் பட்டிருக்கிறது. இவை இரண்டிற்கும் இடையே, தமிழ்த்தாயின் சிலை எழுப்பபட்டிருக்கிறது.







 பூங்காவை அடுத்து அமைந்துள்ள மண்டபத்தில் ஈழப்போரில் பங்குபெற்று வீரமரணம் அடைந்த விடுதலைப்புலிகளின் முக்கியப் பொறுப்பாளர்களின் படங்கள் மிக அழகாகவும் உயிரோட்டத்துடனும் வரைந்து வைக்கப்பட்டிருக்கிறது.  ஈழப் போர் மட்டுமன்றி,  சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டி ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழ் வீர மரவர்கள், மருது சகோதரர்கள், வேலு நாச்சியார், ஒண்டிவீரன் செண்பகராமன்,உள்ளிட்ட  மாவீரர்களின்  வண்ணப் படங்கள் வரைந்து வைக்கபட்டிருக்கின்றன. இதில் பலரின் பெயர்கள் கூட வரும் தலைமுறைக்கு தெரியாமல் போயிருக்கும். அப்படங்களுக்குக் கீழே அவர்களைப் பற்றிய சிறு குறிப்பும் எழுதப்பட்டிருக்கின்றன.

இதனை அடுத்த கூட்ட அரங்கம் என்னை மிகவும் கவர்ந்தது. பெரும் ஆச்சரியத்தையும் அளித்தது.  கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் தமிழ் மொழிக்காக பாடுபட்ட மறைந்த, எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் அனைவரது படத்தையும் தேடித்திரிந்து கொண்டுவந்து அரங்கைச் சுற்றி சட்டமிட்டு மாட்டிவைத்தது பெரும்பணியே.  இதற்காக இந்தத் தமிழ்ச்சமுதாயம் பழ.நெடுமாறன் ஐயா அவர்களுக்கு பெரும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.




எத்தனையோ தமிழறிஞர்கள், அவர்களின் பெயர்களைக்கூட நான் கேள்விப்பட்டதில்லை, அவர்களின் படங்களையெல்லாம் ஒரே இடத்தில் பார்க்கும்படி அமைத்திருக்கிறார்.   பெரும் சிரமங்களுக்கு மத்தியில் தமிழறிஞர்களின் படங்களை பெரும் பொருட்செலவில் தேடிப்பிடித்து கொண்டுவந்து மாட்டியிருக்கிறார்.  உமறுப்புலவரின் படம் கிடைக்கவில்லை, அவரின் உறவினர்களிடம் கூட முயற்சித்துவிட்டேன். கிடைக்கவில்லை. கிடைத்தால் நன்றாக இருக்கும் என்ற வருத்தத்தை தெரிவித்தபோது ஆடிப்போய்விட்டேன்.(யாரிடமாவது இருந்தால் கொடுத்துதவுங்கள்)

கட்சி, மதம், சாதி போன்ற வேறுபாடுகளின்றி அனைவரின் படத்தையும் சேகரித்து வைத்திருக்கின்றார். வட மற்றும் தென் தமிழக எல்லைப்போராட்ட மறவர்களின் படங்களும்  இடம்பெற்றிக்கின்றன.  சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரின் படம் ஏனோ என்னை மிகவும் கவர்ந்தது. அதுவரை அவரைப் புகைப்படத்தில் கூட நான் பார்த்ததில்லை.

இயல்,இசை, நாடகம், என்னும் முத்தமிழுக்கும் தொண்டாற்றி, மறைந்து போனவர்களின் படங்களைப் பார்க்கவேண்டியாகிலும் ஒரு முறை சென்றுவாருங்கள்.



இந்தப் படமும் ஏதோ ஒரு பரவசத்தை என்னுள் எழுப்பியது. 


சிறு விளக்கங்கள்:

1.   திரு.அ மார்க்ஸ் அவர்கள் நேற்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பெரியார் படம் இல்லை, என்று எழுதி,திராவிட, தமிழ்தேசிய இயக்கத் தோழர்களுக்குள் தன் வழக்கமான சிண்டு முடியும் பணியை தொடங்கிவிட்டிருக்கிறார்.  மன்னிக்கவேண்டும் திரு. மார்க்ஸ் ஐயா, தமிழ் மொழிக்குத் தொண்டாற்றியவர்களின் படங்கள் மட்டுமே அங்கே அமைக்கப் பட்டிருக்கிறது.  நீங்கள் ஒருமுறை உங்கள் கிருதாவைக் குறைத்துக் கொண்டு சென்று பார்த்துவாருங்கள்.  காலஞ்சென்ற தமிழறிஞர்களின், அல்லது மொழிக்கான தன் பங்கீட்டைச் செய்தவர்களின்  படங்கள் ஏதாவது விட்டுப்போயிருந்தால் அதையும் வைக்கச் சொல்லி கேட்டுக் கொள்ளலாம்.. சர்வதேசியம் பேசும் உங்களைப்போன்றவர்களுக்கு இதெல்லாம் புரியாது….விட்டுவிடுங்கள்

2.   இரண்டாவதாக வீர சுதந்திரம் வேண்டிப் போர் புரிந்த வீர மறவர்களின் படங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையில் காந்திபடம் இல்லை, காமராசர் படம் இல்லை என்றெல்லாம் பேசத்தொடங்கிவிடாதீர்கள்………போருக்கும் போராட்டத்திற்குமான வேறுபாடு தெரியாதவரல்ல நீங்கள்.  இங்கே இருப்பது போர் வீரர்களின் நினைவு முற்றம். 
   
   உங்களைபோன்ற மாமேதைகள், நேரில் சென்று பார்த்து, பின்னர் விமர்சிப்பதோ, அல்லது ஆலோசனைகள் சொல்வதோதான் அழகு. யாரோ ஒரு கைத்தடியின் அல்லது அல்லக்கையின் அரைகுறைப் பேச்சைக் கேட்டுக் கொண்டு எழுதுவதை தவிர்க்குமாறு அன்புடன் வேண்டுகிறேன
 
 











3 comments :

பழமைபேசி said...

ஆகா... நல்ல பதிவு... இன்னும் படங்களுடன் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

ராஜ் said...

Nice information..

பட்டிகாட்டான் Jey said...

தகவல்களுக்கு நன்றி.