நீண்ட வீடடங்கிற்கு பிறகு திறந்து விடப்பட்ட
அந்த ஒரு நாள் காலை, என்ன செய்வதென்று தெரியாததாலும், புதிதாய் பெற்ற சுதந்திரத்தை
அனுபவித்துத் தீர்த்துவிடவேண்டும் என்ற பேராசையாலும், பலமாதங்களாய் பயன்படுத்தாமல்
இருந்த அந்த ஷூவை எடுத்து மாட்டிக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன். ஈரோடு நகரின் மையப்பகுதியில்
இருக்கும் வீட்டிலிருந்து, இப்படி காலாற நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. அங்கிருந்து நூறு மீட்டர் தூரத்தில் கோட்டை தொண்டீசுவரன் கோயில்.
கஞ்சி போட்டு சலவை செய்த காவி நிற வேட்டி,
அதே நிறத்தில் ஜிப்பா, இடது தோளின் மீது ஒரு மடித்த துண்டு, அளவான கண் கண்ணாடி,(ஒரு
காலத்தில் அதற்குப் பெயர் மூக்குக் கண்ணாடி, மூக்குல மாட்டிகறதால அப்படி இருக்குமோ)
நீண்ட தாடி, ஒரு கையில் வாக்கிங் ஸ்டிக், பணி ஓய்வு பெற்ற அந்தப் பள்ளி ஆசிரியர், தன் பேரனின் கையை விட்டுவிட்டு,
கோயில் கோபுரத்தை நிமிர்ந்து பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு, மீண்டும் அவன் கையைப்
பற்றிக் கொண்டு நடக்கத் தொடங்குகிறார்.
கோயில் வாசலை நெருங்க நெருங்க, பச்சை தட்டின்
வாசனையோடு, சாணிக் குப்பையின் நெடி. பெருமாள் கோவிலுக்கு எதிரில், ஒரு நீள கீத்துக்
கொட்டகை, அதில் எந்த நேரமும் கூடாரம் கட்டிய,
இரண்டு மூன்று ஒத்தை மாட்டு வண்டிகள். அருகேயே அசைப் போட்டுக் கொண்டே இருக்கும் மாடுகள்.
அந்தப் பகுதியின் வண்டிப் பேட்டை. உள்ளூர் போக்குவரத்திற்கு அதை விட்டால் வேறு வழியில்லை.
“ரயில்வே ஸ்டேஷன் போகனும், வண்டிப் பேட்டையில
போயி பொன்னுச்சாமி கவுண்டர் வண்டியக் கூட்டிட்டு வா,…..
கூலி பேசி கூட்டிட்டு வா….
ரெண்டு ரூவாதான் தருவம்னு சொல்லு……
அப்பாவின் குரல் எங்கிருந்தோ சம்பந்தமில்லாமல்
கேட்கிறது.
நிதானமாக வாக்கிங் ஸ்டிக்கை ஊன்றி, அடிமேல்
அடி எடுத்து நடக்கும் தாத்தாவின் கைகளை உதறிட்டு வேகமா நடக்கத் தொடங்குகிறேன்.
ஈசுவரன் கோயில்ல இருந்து நேர் கிழக்க நடந்தா,
ஆனந்தா லாட்ஜ். அதற்கு அடுத்து தான் மகாத்மா காந்தி, வந்து தங்கிய சேட் வீடு. ஆனந்தா லாட்ஜ் நேர் எதிரில் அனுமந்தராயன்
கோயில். இப்ப அந்தக் கோயிலைக் காணோமா, இல்லை,
எனக்கு அடையாளம் தெரியலையான்னு தெரியல. கிழக்கு அனுமந்தராயன் கோயில் வீதியில ஒரு இருநூறு அடி நடந்தா, பழைய ஆசுபத்திரி காம்பவுண்ட்.
அதுதான் இப்ப இருக்க “கனி மார்க்கெட்”. அந்த இடத்தில ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் இருந்ததா
நினைவு. அதன் ஓரங்கள்ல வரிசையா கடைகள் இருக்கும்,
நடுவுல மைதானம் இருக்கும். சின்னச் சின்ன அரசியல் கூட்டங்கள் நடக்குமிடமாகவும் இருந்தது.
பின்னால் நிறைய கடைகள் வந்து, உள்ள நுழைய முடியாதபடிக்கு ஆகிவிட்டது.
காளிதாஸ் சேட் வீடு தாண்டி, ஐஞ்சு கடை லைன்,
அதைத் தாண்டினா மணிக்கூண்டு. உள்ளூருக்குள்ள கொஞ்சம் கவுரவமான இடத்துக்குப் போகனும்னா
குதிரை வண்டி தான். மாட்டு வண்டியை விட கொஞ்சம் காசு கூடுதல். மணிக்கூண்டின் ஓரத்தில பெரிய தொட்டி இருக்கும்.
அதில் தண்ணீர் இருக்கும். அதைச் சுற்றி குதிரைகளைக் கட்டி வச்சிருப்பாங்க. அதுகளுக்கு
சவாரி வர்ற வரைக்கும், புல்லுக் கட்டும், தொட்டித் தண்ணியும். வண்டிக்காரருக்கு பீடிக் கட்டும் சாட்டைக் குச்சியும்.
மையத்தில ஒரு மணிக்கூண்டு இருந்தது. அதிலிருந்த பிரிட்டீஷ் கடிகாரம் எப்போதாவது மணிகாட்டும்.
பழைய ஆசுபத்திரி காம்பவுண்ட்க்குள்ள நுழைஞ்சு,
அந்தப்பக்கம் வெளியில வந்தா, மறுபடியும் பிரப் ரோடு. அதிலிருந்து வடக்க நடந்தா ஒரு
நுறு அடியில மேற்கு பார்த்த மாதிரி டவுன் ஸ்கூல். பெரிய பெரிய மரங்கள், எந்த நேரமும் பறவைகளின் கீச்சொலி, இடையிடையே பள்ளிக் குழந்தைகளின்
சத்தமுமா ஒரு சின்ன வனம். அதையும் இப்பொழுது காணோம். அதை இடித்து விட்டு நகராட்சி,
வணிக வளாகம் கட்டிவிட்டது. அதைத் தாண்டுனவுடனே வாசகசாலை. அப்ப அதோட பேரு “ரீடிங் ரூம்”. அது ஈரோடு நகரசபையால் நடத்தப்பட்ட இந்த
ரீடிங் ரூமுக்கு “காக்ஸ்” ரீடிங் ரூம் என்று
பெயர். ( காக்ஸ் என்ற அதிகாரி, அப்போதைய நகரசபையில் பிரதிநிதியாக இருந்தவர்.) தினசரிகள்,
வார இதழ்கள், இப்படி எல்லாம் அங்க போடப்பட்டிருக்கும். அந்த கால கட்டத்துப் பெருசுகளோட
ஜாயிண்ட்.
அப்படியே வந்தா மணிக்கூண்டு. தாண்டி நேரப்
போனா ஈரோட்டோட பழமையான கொங்கங்கலம்மன் கோயில். என்னதான் ஈசுவரங்கோயிலும், பெருமா கோயிலும்
கோட்டையில இருந்தாலும், அதெல்லாம் பெரிய மனுசங்களுக்கானது. ஊர் பஞ்சாயத்து, சமுதாய ஒப்பந்தங்கள், கொங்கு நாட்டு,
ஊர்க் கூட்டங்கள் நடந்ததெல்லாம் இந்த கொங்கலம்மன் கோயில்லதான். 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோயில்ல, காலிங்கராயன்
கால்வாய் வெட்ட, ஊர்க் கூட்டம் நடத்தியதாகவும், பூப் போட்டுப் பார்த்து, அம்மன் வாக்கு
கொடுத்ததாகவும் ஒரு கல்வெட்டு கிடைச்சிருக்கு. வெள்ளை, சிவப்பு அரளிப் பூக்களை ஒரு
காகிதத்தில மடிச்சி,குலுக்கிப் போட்டு, யாராவது சின்னக் குழந்தைய, அதுல ஒன்னை எடுக்கச்
சொல்லுவாங்க. சிவப்பு வந்தா ஒப்புதல் கிடைத்ததா பொருள். அப்பல்லாம், பல கல்யாணங்கள் இந்த பூ வாக்கு கேட்டுதான்
நடந்தது. எவனுக்கு ஜாதகம் இருந்தது? எங்க போயி பொருத்தம் பார்த்தாங்க?. எல்லாம் “பூ
வாக்குதான்”.
குலுக்கிப் போடற பொட்டணத்தில ஒன்னை எடுத்துக்
கொடுக்கற சிறுவர்களுக்கு ஒரு கட்டி கல்கண்டு தருவாங்க. அவங்க விரும்பினபடி, வாக்கு
வந்தால், எக்ஸ்ட்ராவா இன்னும் கொஞ்சம் கல்கண்டு. அதனாலயே, நல்லவாக்கு வரனும்னு நான்
வேண்டிகிட்டே பொட்டணத்தை எடுத்துக் கொடுப்பேன். அவங்களுக்கும் சந்தோஷம், எனக்கும் சந்தோஷம்.
கொங்கலம்மன் கோயிலைத் தாண்டி வந்து, ஆர்.கே.வி
ரோட்டுல இடது கைப்பக்கம் கொஞ்சதூரம் போனா, பழைய பஸ் ஸ்டேண்ட். அதான் இப்ப இருக்கற கிருஷ்ணா
தியேட்டர் முன்னாடி இருக்கிற காலியிடம். அப்படியே நேராப் போனா காமராஜர் பெயரால் அமைந்த
நகராட்சி மேல் நிலைப்பள்ளி, கருங்கல் பாளையம்,
பத்திரப் பதிவு அலுவலகம், காவிரிக் கரை. கொங்கலம்மன் கோயில் வீதியில் வந்து, வலது பக்கம்
திரும்ப, கொஞ்ச தூரத்தில மணிக்கூண்டு. கிழக்க ஜின்னா வீதி, அதுல அப்படியே போனா
E.A. பீரான் பீடி கம்பெனி, பாய் வீடு, தாண்டிப் போனா வளையக்கார வீதி, அசோகா பாக்கு
கம்பெனி, அப்புறம் காரை வாய்க்கால். அதான் காலிங்கராயன் வாய்க்கால். சுண்ணாம்பைக் குழைச்சு
தளம் போட்டிருக்கறதால வாய்க்காலொட, அந்த இடத்துக்கு காரை வாய்க்கால்னு பேர். அது வளைஞ்சு
கோணையா போற இடம் “கோண வாய்க்கால்”
ஈசுவரன் கோயில் வீதி நேர் குத்துல மணிக்கூண்டு,
அதுக்கு அந்தப் பக்கம் கணேஷ் பவன் ஓட்டல், நெய்
நிறைய ஊத்தி, முறுகலா கிடைக்கும் ரவா முந்திரி தோசை ஐய்யரு கடை சாம்பார்.
கணேஷ் பவன் எதிரில “ நாடி நாடிப் போடுவது, போடப் போட நாடுவது” T.A.S ரத்தினம் பட்டணம் பொடி, , செக்குல உலக்கைய வச்சிகிட்டு இடிச்சிகிட்டுருக்கற, ஒரு முறுக்கு
மீசை வச்ச ஒரு பெரிய மனித பொம்மை. அங்கிருந்து மூக்குப் பொடி வாசம். அதுக்கு நேர் எதிரில
நரசுஸ் காப்பித்தூள் கடை.
இதைத் தாண்டி நேராப் போன டவுன் ஸ்கூலோட இன்னொரு
கேட் வரும். அதுக்கு எதிர்க்க இருக்கற தெரு அக்ரஹார வீதி. அதில நுழைஞ்சு வலது கைப்
பக்கமா திரும்பின நகைக் கடை சந்து, டவுன் போலீஸ் ஸ்டேஷன். இடது கைப்பக்கமா போன அதே
பழைய வளையக்கார வீதி.
அக்கரஹார வீதி பூரா பெரும்பாலும் பாத்திரக் கடைகள்,
துணிக்கடைகள். அங்க ஒரு சவுடேஷ்வரி அம்மன்
மடம் ஒன்னு இருக்குது. நவராத்திரி காலங்களில் ரொம்ப சிறப்பா இருக்கும். அப்படியே
நேரப் போனா, 1,2, செட்டியார் மளிகைக் கடை. அதைத் தாண்டினா, இடது கைப்பக்கம் அந்தக்
காலத்தில பிரபலமான “உண்ணி டாக்டர்” வீடு ஆசுபத்திரி. உண்ணி டாக்டருக்கு அப்படி என்ன பெரிய பேருன்னு,
வீட்ல இருக்கற பெருசுகளைக் கேட்டுத் தெரிஞ்சிக்குங்க.
டவுன் போலீஸ் ஸ்டேசன் ஒட்டி நேர் கிழக்க போகும்போது, நடுமாரியம்மன் கோவில், தந்தை பெரியார் பிறந்து வாழ்ந்த வீடு, தொடர்ந்து கிழக்க போன மகாஜன பள்ளி. ஈரோட்டின்
மிகப் பழமையான பள்ளிகளில் இதுவும் ஒன்று. இந்தத் தமிழ்ப் படுத்தறேன் பேர்வழிகள் இப்ப
இதை “மாசன மேல் நிலைப் பள்ளி”ந்னு மாத்தியிருக்காங்க. “ மகாஜன” ங்கற வார்த்தையின்
பொருளும் “மாசன” ங்கற வார்த்தையின்
பொருளும் ஒன்னாகுமா என்ன? நல்ல “முழிபெயர்ப்பு”.
ஒலிக்கு குடுக்கற முக்கியத்துவத்தை, மொழிக்கு கொடுக்காம போனதுதான் கொடுமை.
இன்றைய காமராஜ் முனிசிபல் பள்ளிதான் அன்றைய
லண்டன் மிஷன் பள்ளி. அதுதான் ஈரோட்டின் முதல் உயர்நிலைப் பள்ளி. தந்தைப் பெரியாரின்
தூரத்து உறவினரான சிக்கய்ய நாயக்கர் அவர்களால,
இந்த மகாஜன பள்ளியும், சிக்கய்ய நாயக்கர் கல்லூரியும். ஈரோடு கூட்டுறவு அர்பன்
பேங்க்கும் துவங்கப்பட்டது. அவருடைய அழகான,
பெரிய மாளிகையை வங்கி நடத்த கொடுத்துவிட்டார்.
இன்னைக்கும் ஈரோடு கூட்டுறவு அர்பன் பேங்க அங்கதான் நடந்து வருது. ஈரோட்டின்
மிகப் பழமையான கட்டிங்கள்ல இதுவும் ஒன்னு. 1912ல துவங்கிய இந்த வங்கி, நில அடமான வங்கியா
இருந்தது. ஈரோடு நகரத்தின் பொருளாதார வளர்ச்சியில் இந்த வங்கியின் பங்கு மிகவும் பெரிது.
அந்தத் தெருவோட கடைசியில “ஸ்டோர்ஸ்” அப்படிங்கற லைன் வீடுகள், அதை ஒட்டியே ஒரு
சின்ன அக்ரஹாரம், ஒரு ராகவேந்திரர் மடம், பிறகு வாய்க்கால். அதுக்கு பக்கத்திலயே வாய்க்கால்
மாரியம்மன் கோயில்.
காலிங்கராயன் வாய்க்கால் பவானி லட்சுமி நகர்
தாண்டி, கிழக்க கொஞ்ச தூரம் வந்து, அப்புறம் தெக்க நோக்கி ஓட ஆரம்பிக்கும். பவானியில்
இருந்து பிராமணப் பெரிய அக்ரஹாரம் வழியா ஈரோடு வந்தா, உங்களுக்கு இடது கைப் பக்கமா
தெற்கு நோக்கி காவேரி ஆத்துக்கு இணையா ஓடி வரும். ஈரோடு அசோக புரம் தாண்டி, கிருஷ்ணம் பாளையத்துக்கு வடக்க வந்து, கருங்கல்
பாளையத்துகிட்ட, காவேரி ஆத்துக்கு முன்னாடி ஒரு டர்ன் அடிச்சி, தென் வடலா ஓடும்.
அன்றைய ஈரோடு நகரத்தோட, எந்தப் பகுதியிலிருந்தும்
கிழக்கு நோக்கிப் போனா காலிங்கராயன்ல தான் போயி முடியும். குயிலான் தோப்பு, அடுத்து
பழைய ரிஜிஸ்டர் ஆப்பீஸ் தண்ணி டேங்க்க்கு எதிர் ரோடு, அடுத்து பாரதியார் கடைசியா பேசிய
நூலகம் இருக்கும் தெரு, அடுத்து இந்திரா நகர் செல்லும் தெரு, அடுத்து வளையக்கார வீதி
கடைசி, அக்ரஹார வீதி கடைசி,டவுன் போலீஸ் ஸ்டேசன் வீதி, கச்சேரி வீதி கடைசி இப்படி எந்தத்
தெருவில போனாலும் காலிங்கராயன் வாய்க்கால்ல தான் போய் முடியும்.
வாய்க்கால் மாரியம்மன் கோவில்ல இருந்து திரும்பி
வந்தா, கச்சேரி. அதான் முன்சிப் கோர்ட். உருதுவும்
பெருஷியும் கலந்த வார்த்தை முன்சிஃப். அதுக்குப் பொருள் நியாயம் அல்லது நேர்மை. இன்னும் அந்த வார்த்தை மாறலை.
மணிக்கூண்டுல இருந்து அப்படியே தெக்க நடந்தா,
டவுன் போலீஸ் ஸ்டேஷன். அதுக்கு எதிர்த்தாப்ல மாரப்ப கவுண்டர் ரொட்டிக் கடை. ஈரோடு சட்ட
மன்ற உறுப்பினராகவும், ஈரோடு நகர்மன்ற தலைவராக இருந்த திரு. மா. சுப்பரமணியம் அவர்களோட
தந்தையார் நடத்தி வந்தது. அதை ஒட்டியே சிந்தாமணி சூப்பர் மார்க்கெட். இந்தத் தெருவில
துவங்கி பிரகாசம் வீதியில் முடியும். டவுன் போலீஸ் ஸ்டேசனுக்கு அடுத்த கட்டிடம், பெரியார்
மன்றம். ரொம்ப பிரபலமான இடம். திராவிட இயக்கக் கூட்டங்களும் நடக்கும், திருக்குறள்,
தமிழ் இலக்கிய, சமய இலக்கியக் கூட்டங்களும் நடக்கும். நீ எதைப் பேசினா என்ன? வாடகை வந்தாச் சரின்னு, சமய
கூட்டங்களுக்குக் கூட வாடகைக்கு கொடுத்தாரு பெரியார். தாலுக்கா ஆப்பீஸ் பக்கத்துலயே பெரிய சர்ச், பன்னீர் செல்வம் பார்க்ல இருக்க சி.எஸ். ஐ சர்ச், அதை ஒட்டி இருக்கு கவர்ன்மெண்ட் ட்ரைனிங் ஸ்கூல் ங்கற ஜி.டி.எஸ் ஸ்கூல். இன்று பெண்கள் மேல் நிலைப்பள்ளியாக இருப்பது முன்பு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியாக இருந்தது. 8 ஆம் வகுப்பு முடித்து ஒரு ஆண்டு ஆசிரியர் பயிற்சி முடித்து பணியாற்றும் வசதி இருந்தது.
தலைமைத் தபால் நிலையம்,
மரப்பாலம். கச்சேரி வீதி, குடியரசு பத்திரிக்கை அலுவலகத்துக்கு முன்னாடி ஒரு தெரு.
மண்டபம் வீதி. அதில ஒரு சிமெண்ட் பூச்சிலாத ஒரு இரண்டு மாடி செங்கல் கட்டிடம். அதுதான்
அன்றைய லைப்ரரி. இன்னும் அந்தக் கட்டிடம் அங்க இருக்கு. ஆனா ரொம்ப சிதிலமடைஞ்சி போச்சு. அடுத்தது, நடராஜா தியேட்டர். இதைப் பத்திப் பேசாம இருக்க முடியாது. வாரத்துக்கு இரண்டு புதுப்படங்கள். பழைய ஆங்கிலப்
படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைச்சது அங்கிருந்துதான். 1950-1970 வரையில் வெளி
வந்த பல ஆங்கிலப் படங்களை திரையிட்டு, ஹாலிவுட்டை ஈரோட்டுக்கு அறிமுகப்படுத்தியதே இவங்கதான்.
மறக்க முடியாத நினைவுகள்.
நடராஜா தியேட்டரில் இருந்து வெளிய வந்து
இன்னும் தெக்க போனா, மகாஜனா ஸ்கூல் கிரவுண்ட்.
பல கால்பந்து விளையாட்டு வீரர்களை உருவாக்கிக் கொடுத்த இடம். கல்லும், மண்ணும், பாறையுமா இருக்கும். அதிலயும்
ஃபுட்பால் ஆடறது ஆச்சரியமா இருக்கும். வழக்கமா
ஆண்டுக்கு ஒருமுறை பெரிய மாரியம்மன் கோவில் பக்கத்தில் இருக்கும் சி.எஸ்.ஐ பள்ளி மைதானத்தில
ஃபுட்பால் மேட்ச் நடக்கும். பெரிய கேலரிகள் கட்டி, டிக்கட் போட்டு 15 நாட்கள் நடக்கும்
அதுதான் ஈரோட்டோட திருவிழா. சீசன் டிக்கெட்டும் கிடைக்கும். தமிழகம் முழுவதிலுமிருந்து வீரர்கள் வருவார்கள்.
அவர்களுக்கென்று பெரும் ரசிகர் படையும் இருக்கும்.
மகா ஜனா ஸ்கூல் கிரவுண்டு, ரயில்வே இன்ஸ்டிடுயூட்,
சி.எஸ்.ஐ பள்ளி கிரவுண்டு, வ.உ.சி பூங்கா கிரவுண்ட், அந்த கால இளைஞர்களின் போக்கிடம். 12 வருட பள்ளி
வாழ்க்கையை ஆறு பள்ளிகளில் படித்து முடித்தது, அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தின்
உறுப்பினரானதில் தொடங்கி, இடது சாரிக் கூட்டங்களில் கலந்து கொண்டது, எ.ஸ்.கே.சி ரோட்டில்
இருக்கும் தொழிற்சங்க அலுவலகத்தில் தவமாய்க் கிடந்தது, பின்னர் திராவிடியன் ஸ்டாக்கா
மாறி, உதய சூரியனை வரைந்து தள்ளியது, இலக்கிய வட்ட, சதுர, முக்கோணங்களில் பெரும் கனவுகளோடு
திரிந்தது, வ.உ.சி பூங்காவில் வார இறுதி நாளில் வட்டமாய் அமர்ந்து அவரவர் கவிதைகளைப்
பகிர்ந்து கொண்டது, கையெழுத்துப் பத்திரிக்கை நடத்தியது, அந்த கால கட்டங்களில் சந்தித்த
மனிதர்கள், அங்கு நடந்த சுவராசியங்களையும்
எழுத வேண்டும்.
மகாஜன ஸ்கூல் கிரவுண்ட இருந்து திரும்பவும்
மேற்கில் வந்தால் புது ரயில்வே ஸ்டேஷன். பழைய ரயில்வே ஸ்டேஷன் வெங்கடப்ப நாயக்கர் கல்யாணமண்டபம்
அருகில், தற்பொழுது மாவட்ட கல்வி அலுவலகம் இருக்கும் இடத்திற்கு எதிரில் இருந்தது.
காலைமாடு சிலையிலிருந்து வடக்கே வந்தால்
பெரும்பள்ளம் ஓடைப் பாலம். அது தாண்டி இடது
கைப்பக்கம் முழுக்க முள்ளுக் காடு. பெரியார்
நகர் இருக்குமிடம். காந்திஜி ரோட்டிலிருந்து விரியும் காலியிடம், பெரிய ஆலமரம், வேப்பமரம்.
பாறைத்திட்டு, அதன் மேல் ஏரிக் கருப்பண்ண சாமி. சுற்றியிருந்த காலியிடம் எத்தனையோ பேர்களுக்குப்
புகலிடம். எல்லாம் தொலைந்து போய், சாமியும்
சிங்கிள் பெட்ரூம் அப்பார்ட்மெண்டுக்கு வந்து சேர்ந்துவிட்டார்.. ரயில்வே ஸ்டேஷனுக்கு
எதிரிலிருந்த முத்துக் குமார் தியேட்டர் (இன்றைய சண்டிகா) மட்டும் இருக்கு. காந்திஜி
ரோட்டுல இருந்த மாணிக்கம் தியேட்டர், சென்ட்ரல் தியேட்டர், மஞ்சமண்டிகிட்ட இருந்த ஸ்டார்,ராஜாராம்,
தியேட்டரெல்லாம் தற்போது இல்லை. நகரம் விரிவடைந்ததில் தொலைந்து போனவை.
பஸ் ஸ்டேண்ட்டில் இருந்து பஸ் வெளியில் வந்து
சவிதா மருத்துவமணை நோக்கிப் போகும் வழியில், நாச்சியப்பா வீதி முக்கு, அடைக்கப்பட்டு,
தனியார் தொண்டு பட்டியா இருந்ததும், பன்னீர் செல்வம் பார்க்கில் இருந்து திருவேங்கடசாமி
வீதி நுழையும் இடத்தில், சிலுவைகளைத் தாங்கிய கல்லறைகள் நடுவீதீயை அடைத்துக் கொண்டு
இருந்ததும், திறந்து விடப்பட்டது, நகர விரிவாக்கம் கொடுத்த பரிசுகள்.
ஈரோடு நகரத்தை இரண்டாய்ப் பிளந்துக ஓடிக் கொண்டிருந்த கழிவு நீர்ப் பாதை, எடுப்பு கக்கூஸ், நகராட்சியின் பெரியம்மை தடுப்புப்
பணிகள், கோஷா ஆஸ்பித்திரி, வெற்றுக் காலிலும், சைக்கிளிலும் அலைந்து திரிந்த சூரம்பட்டி சூரியன் சோப் கம்பெனி
கிரவுண்ட்,பெரியார் நகர் காடு, சூரம்பட்டி அணைக்கட்டு, வ.உ.சி பூங்கா, ஈரோடு வாட்டர்
ஹவுஸ், ஒவ்வொரு வருடமும் குடியரசு நாளில் கொடியேற்றி விட்டு, மாவட்ட ஆட்சியர் நகரத்தின்
பெரிய மனிதர்களுக்கு டீ பார்ட்டி தரும் பிரஃப் ரோடு ஆபிசர்ஸ் கிளப், பெரிய மனிதர்களின் பொழுதுபோக்கு இடமான காஸ்மா பாலிடன் கிளப், ஈரோடு டென்னிஸ் கிளப், செங்குந்தர் பள்ளி, கலைமகள்
கல்வி நிலையம், திருக்குறள் பேரவை, சன்மார்க்க
சங்கம், ஜவகர் இல்லம், சி.கே.கே அறக்கட்டளை நடத்திய இலக்கிய விழாக்கள், கச்சேரி
வீதியின் துவக்கத்தில இருந்த பூர்ணா ஹோட்டல், அதற்கு எதிரில் இருந்த தாலுக்கா ஆபீஸ்,
கிளைச்சிறை, கோர்ட் வாசலில் அழைப்பிற்காக காத்துக் கிடக்கும் கைவிலங்கிடப்பட்ட குற்றவாளிகள்,
பூர்ணா ஹோட்டல் மாடியில் இருந்த சனாமி ஹாலில், விடிய விடிய ஆடிய டேபிள் டென்னிஸ், ஸ்ரீதர்
டீக்கடை, நான் நேரில் பார்த்திராத தமிழ் திரைப்பட உலகில் பெரும்பங்காற்றிய ச.து.சு
யோகியார், பெ.தூரன், பேரா. வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர், பின்னாட்களில் கண்டு உரையாடி,
வியந்த புலவர் வை.நடேசனார், புலவர் கமாலுதீன், தமிழாசிரியர் ஆறுமுகனார், வானம்பாடிக்
கவிஞர் தலைமை ஆசிரியர், முருகு சுந்தரம், புலவர் இராசு, வழக்கறிஞர் சு.வெங்கட்ராமன்,
பள்ளிபாளையம் தொழிலதிபர் கே. லட்சுமணன் இளம்
வயதில் இடது சாரி சிந்தனைகளை விதைத்த வழக்கறிஞர் ஸ்டாலின் குணசேகரன், மருத்துவர் ஜீவானந்தம்,
இப்படி எத்தனையோ இடங்கள், மனிதர்கள் வந்து
போகிறார்கள்.
மெட்ராஸ் ஓட்டல், அதற்கு எதிரில் இருந்த
ஆரிய பவன், சத்தி ரோடு மீசைக்காரர் ஓட்டல்,
மரப்பாலம் முதலியார் கடை, இப்படி எழுதறதுக்கும் நிறைய இருக்கு.
,
சரி…சரி…நேரமாச்சு, தாத்தா கையை உதறிகிட்டு வந்தமில்ல, அவரு தேடிகிட்டிருப்பாரு.
மெதுவா, அவரு நடந்து மணிக்கூண்டு சுத்தி வடக்க சத்திரோடு கொங்கு பெருமா கோயில் வழியா,
வூட்டு வர்றதுக்குள்ள, நாம நல்ல புள்ளையாட்டம்
வூட்டுக்குள்ள போயி உக்கார்ந்துக்குவோம்.
பழைய நினைவுகளைப் பேசத் துவங்கினால் நிறுத்த
முடிவதில்லை.
SOME DAYS, I WISH I COULD GO BACK IN LIFE. NOT
TO CHANGE ANYTHING, BUT TO FEEL FEW THINGS TWICE- யாரோ