Wednesday, July 23, 2014

கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்


கோதை ஆண்டாள்.....தமிழை ஆண்டாள்.......





”திரு” என்ற சொல்லுக்கு வைணவத்தில் பெருமையும் சிறப்பும் உண்டு. பூசைக்குப் பெயர், திருவாராதனம். சமயற்கூடம் என்பதோ “திருமடப் பள்ளி” துளசியோ “ திருத்துழாய்”, பாயாசமோ “ திருக்கண்ணமுது” அபிசேகத்திற்கு பதிலாக “திருமஞ்சனம்” என்றெல்லாம் அழகுபட அழைப்பதில் இருந்தே “திரு” வுக்கு வைணவம் தரும் முக்கியத்துவம் உலகறியும்.

இங்குள்ள குளம் கூட “திருமுக்குளம்” தான். தாளித்துக் கொட்டுவதுகூட “திருமாற்றம்” ஏன் மண்கூட “ திருமண்” தான்.பின் ஏன் திருவில்லிப்புத்தூருக்குப் பதில் ஸ்ரீ வில்லிப் புத்தூர்? என்ற ஆசிரியரின் இந்தக் கேள்வியிலிருந்தே தொடங்க வேண்டும் இந்தப் புத்தகம் குறித்த அறிமுகத்தை





மதிப்பிற்குரிய ரத்தனவேல் ஐயா அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடி விடைபெறும்போது, இந்தப் புத்தகத்தையும், இனிய பால்கோவாவையும் கொடுத்து வழியனுப்பினார்.  ஆண்டாளின் கவிச்சுவைக்கு முன்னே பால்கோவா வின் இனிப்புச் சுவை எடுபடவில்லை.  மீண்டும் மீண்டும் ஆண்டாளின் வரிகளே முன்னின்றன. அவள் வரிகள் மட்டுமல்ல, அவள் குறித்த செய்திகளும் இனிமைதான்.

திருவில்லிப்புத்தூர் குறித்தும் ஆண்டாள் திருக்கோயில் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கோயில்கள், சிறப்புகள் குறித்த ஒரு சிறந்த விளக்கக் கையேடு என்றுதான் சொல்ல வேண்டும். மிக அழகிய அட்டைப்படத்தோடு நல்ல தாளில் அச்சடிக்கப் பட்டிருக்கும் இந்த நூல், உண்மையில் நல்ல வழிகாட்டி.

கோயிலின் அமைப்பு குறித்த படங்கள், செய்திகள், பல்வேறு பாடற்குறிப்புகள், இவையனைத்தையும் ஒன்றுகூட்டி இதை வெளியிட்டிருக்கின்றனர். ஆசிரியர் மற்றும் பதிப்பகத்தாருக்கு வாழ்த்துக்கள்.  திருவில்லிப்புத்தூர் போகும் முன் இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு புறப்பட்டிருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். இதைப் படித்த பின்பு, மீண்டுமொருமுறை இந்தமாதமே ஆடிப் பூரத்துக்குள்  சென்றுவரவேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்கின்றேன்.

பார்ப்போம்……”அவளருளாளே அவள் தாள் வணங்கி…..”

சுவையான, பல அறிய தகவல்களையும் கோர்த்துக் கட்டிய அழகான மலர்மாலைதான் “ஆண்டாள்”.

திருப்பாவையின்  13ஆம் பாடலில் வருகின்ற வெள்ளியெழுந்து வியாழம் உறங்கிற்று என்ற வரிகளின் அடிப்படையில் சுக்கிரன் எழுவதும் குரு விடைபெறுவதும் கி.பி. 8ஆம் நூற்றாண்டில் ஒரே ஒருமுறை நிகழ்ந்தது. அதன் அடிப்படையில், கி.பி 731ஆம் வருடம் டிசம்பர் மாதம் 18ஆம் நாள் காலை3.30 மணியிலிருந்து 4 மணிக்குள் இது நிகழ்ந்திருக்கும் என்ற கணக்கீடு சரியோ? தவறோ?  ஆனால் ஆச்சரியமூட்டுகிறது.

ஆண்டாள் கோயில் அமைப்பு, அங்கிருக்கும் மண்டபங்கள், அவற்றில் காணப்படும் சிற்ப மற்றும் ஓவியங்கள் குறித்த தகவல்கள், கோயில் வரைபடம், போன்ற பல்வேறு தகவல்களை தருகிறது இந்தப் புத்தகம்.


வடபத்ர சயனர் திருக்கோயில்
ஆண்டாள் திருக்கோயில்
சக்கரத்தாழ்வார் கோயில்
திருப்பூர நந்தவனம்
வைத்தியநாதசாமி கோயில்
சுற்றியுள்ள பகுதிகள்
திருவிழாக்கள்
ஆண்டாள் பாசுரங்கள்

ஆய்வுப் பகுதிகள்  போன்ற 18 தொகுப்புகளை உள்ளடக்கிய இந்த நூலைப் படித்துவிட்டு திருவில்லிப்புத்தூருக்குச் செல்வதே நல்லதே. இதைவிட இந்தக் கோயில் குறித்த சிறப்பான தகவல்களை உள்ளடக்கிய நூல் ஏதும் இருக்கிறதா? என்று தெரியவில்லை. அப்படியிருந்தால் தெரிவியுங்கள் நண்பர்களே.

சிலபல தேவையற்ற சைவ வைணவ ஒப்பீடுகள், வரலாற்று தகவல் பிழைகள், ஆகியவற்றைத் தவிர்த்திருக்கலாம்.  நூலாசிரியர் பற்றிய குறிப்பும் இதில் இல்லை. அட்டைப் படத்திற்கு கீழ், திருவில்லிப்புத்தூர், ஸ்ரீ வில்லிப்புத்தூர் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது.  

திருவில்லிப்புத்தூர் கோயில் குறித்த பல்வேறு சுவையான தகவல்களுக்காக இதை வாங்கிப் படிக்கலாம்.