கொடுங்கோளூர் அஸ்வதி காவு தீண்டல்
சேரமான் பெருமா கோதையார்
சுந்தரமூர்த்தி
நாயனார் வாழ்ந்த 8 ஆம்
நூற்றாண்டில் மகோதைய நாட்டில் திரு அஞ்சைக்களத்தைத் தலைநகராகக் கொண்டு அரசு நடத்தி வந்தவர் சேரமான் பெருமா
கோதையார். ஒவ்வொரு நாளும், பூசை முடிந்த
பின், அவரின் பூசையை ஏற்றுக் கொண்டதாக
தில்லை நடராசப் பெருமானின் சிலம்பொலி கேட்கப்பெற்றவர். ஒரு நாள் சிலம்பொலி கேட்கவில்லை. தன் வழிபாட்டில் குறை இருக்குமோ என்று அஞ்சி,
உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற போது
சுந்தரனின் பாடல்களில் மயங்கி இருந்ததால் ஒலி எழுப்ப தாமதமாகி விட்டது
என்று இறைவன் சொன்னதும், சுந்தரர் பால் தீராத அன்பும் மரியாதையும் கொண்டவராகி
சுந்தரரைத் தேடிச் சென்று சந்தித்து தன்னோடு திருவஞ்சைக்களம் அழைத்து
வந்திருக்கிறார் பெருமா கோதையார். சில
நாட்களில் சுந்தரரை கயிலைக்கு அழைத்துச்
செல்ல வெள்ளையானை வருகிறது. தானும்
வருகிறேன் என்று அவரோடு தன் வெள்ளைக் குதிரையில் கயிலை சென்றடைந்ததாகவும், அங்கு
இறைவன் முன் ” திருக்கயிலாய ஞான உலா “ என்ற நூலைப் பாடினார். இது பெரியபுராணத்தின்
வழி நாம் அறியும் கதை. . அழகான கோயில்.
சேரமான் பெருமா கோதையாரும் சுந்தரரும், இசுலாத்தைப்
பற்றியும், நபிகள் நாயகம் பற்றியும் அறிந்து, வணிகத்திற்காக வந்த அரேபியர்களோடு
மெக்கா சென்று இசுலாத்தில் இணைந்ததாகவும், மாலிக் பின் தினார் என்பவரின் தலைமையில்
இசுலாம் போதகர்களை அழைத்து வந்ததாகவும் இங்கு கொடுங்கலூரில் கி.பி 612ல் ஒரு
பள்ளிவாசல் கட்டியதாக சொல்லப்படுகிறது. .
இந்தியாவில் கட்டப்பட்ட முதல் பள்ளிவாசல் மாலிக் பின் தினார் பள்ளிவாசல் ஆகும்.
கண்ணகி-கோவலன்
ஆரியப்படை கடந்த
நெடுஞ்செழியன் என்று பேசப்பட்ட முதலாம் நெடுஞ்செழியன் கடைச் சங்க காலப்
பாண்டியப் பேரரசன் என்பதும், கண்ணகியின் காற்சிலம்பை விற்கப்போன கோவலன்
கொலைக்களப்பட்டதும், ”பொன்செய் கொல்லன் தன் சொல் கேட்ட யானோ அரசன் யானே கள்வன்”
என்று உயிர் விட்டதும், ஒருமுலை குறைந்த
திருமாபத்தினி, ”பார்ப்பார்,அறவோர், பசு, பத்தினிப்பெண்டீர், மூத்தோர் குழவி
நீக்கி, தீத்திறத்தார் பக்கமே சேர்க என்று
சொல்லி மதுரையை எரித்துவிட்டு, மலைநாடு நோக்கிச் சென்று, அங்கிருந்த குன்றக் குரவர்கள் சந்தித்ததும்,
பின் வானம் ஏகியதும், அதன் பின்னர் கூல வணிகன் சீத்தலை சாத்தனார் மூலமாக இந்தக்
கதையை கேட்ட சேரன் செங்குட்டுவன் இமயமலை சென்று கல் எடுத்து, தடுத்த கனக
விசயர்களின் தலையில் அதை ஏற்றி கொண்டுவந்து கண்ணகிக்குக் கோயில் கட்டியதும், இதை
இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்னும்
காப்பியமாகப் படைத்ததும் பள்ளியில் படித்த கதைதான்.
துயரமே வடிவான கண்ணகி மலைஉச்சியிலிருந்து வானம் ஏகினாள்
என்ற கதையும், அது நடந்ததாக நம்பபடுகிற இடத்தில், சேரன் செங்குட்டுவன்
இமயத்திலிருந்து கல் எடுத்து வந்து கோயில் கட்டியதாகவும் வரலாற்றாளர்கள்,
தமிழறிஞர்கள் நம்பும் இடம் தேனி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் உள்ள மங்களாதேவி
கோயில். இடிந்த நிலையில் இருந்த அந்தக்
கோயிலில் இருந்த கண்ணகியின் சிலை தற்போது தனியார் ஒருவர் வசம் இருப்பதாக படித்த
ஞாபகம்.
சேரர்களின் தலைநகராக , மகோதைய புரமாக இருந்து, திரு
அஞ்சைக்களமாகவும் வளர்ந்து, ஒரு பெரும்
இரகசியங்களைத் தனக்குள்ளே புதைத்து வைத்திருக்கும், இன்றைய சிற்றூர் , கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில்
உள்ள கொடுங்கோளூர்.
ஒவ்வொரு வருடமும்
மலையாள மீன மாதத்தில்(மார்ச்-ஏப்ரல்) பரணி நட்சத்திரத்தில் கொடுங்களூர்
பகவதி கோவில் முழுக்க பரணி தீபம் ஏற்றப்படுகிறது.
“ கோழிக்கல்லு மூடல்” என்னும் நிகழ்வோடு துவங்கும் இந்த நிகழ்வு அதற்கு
அடுத்த நாள் அஸ்வதி காவு தீண்டல் என்ற ஒரு நிகழ்வோடு நிறைவடைகிறது. கொடுங்கோளூர் கோயிலின் முக்கிய தெய்வம் பகவதி
அம்மன் எனப்படும் பத்ரகாளி. ஏழடி
உயரத்தில் எட்டு கைகளோடு, தாருகன் தலையைக் கொய்து
ஒரு கையில் ஏந்தியபடி மீதக் கரங்களில் பலவிதமான ஆயுதங்கள் இருக்க, அதில்
ஒரு கரத்தில் சிலம்பும் ஏந்தியபடிக்கு,
பலா மரத்தில் செய்த ஒரு பெரிய ஆவேசமான மரச் சிற்பம். தாருகன் என்னும் அரக்கனை அழிப்பதற்காக பகவதி
அம்மை பத்ரகாளியாக உருவெடுத்து தாருகாவதம் செய்த கதையும் பரசுராமர் துவங்கி ஆதிசங்கரர் வரை பலரையும்
தொடர்பு படுத்தி பல்வேறு கதைகள் பேசப்படுகின்றன.
தெறிப்பாடல்கள்:-
தெறி என்பதற்கு கெட்ட வார்த்தை என்று பொருள்.
தெறிப்பாடல்கள் என்பவை கொச்சையான மொழி நடையில்
பாலியல் உறுப்புகளை உள்ளீடாகக் கொண்டு பாடப்படும் இந்த வகைப்பாடல்கள் மிக
வித்தியாசமானவை.
அஸ்வதி காவுதீண்டல்
ஜரிகை கரை வைத்த சிவப்பு சேலை, உடல் முழுதும் விதவிதமான நகைகள், காலில்
சலங்கைகள், அதற்கு மேல் பெரிய அளவிலான சிலம்பு அணிந்த நிலையில் பெண் வேடம் பூண்ட ஆண்கள் அல்லது திருநங்கையர்/நம்பியர்,
அவர்களோடு ஆண்களும் பெண்களுமாய் ஒரு இருபது பேர்.
கைகளில் பெரிய அரிவாள். அதைச் சுற்றி சலங்கைகள் கட்டப்பட்டிருந்தன. கூட்டத்தில் ஒருவர் ஏதோ ஒரு வரியை பாடிக்
கொண்டே ஆட, உடன் இருக்கும் மற்றவர்கள்
அதைத் திரும்பப் பாடியோ அல்லது அதன் கடைசி ஓரிரு வார்த்தைகளைத் திரும்பச்
சொல்லிக்கொண்டோ பகவதி அம்மன் கோயிலை
நோக்கிச் சென்று கொண்டே இருந்தனர்.
இப்படி ஓரிரு குழுக்களல்ல, ஓராயிரம் குழுக்கள். கோழிக்கல் மூடல் என்ற நிகழ்வு அதைத்
தொடர்ந்து கைகளில் வைத்திருக்கும் அரிவாளால் தங்கள் தலைகளில் அடித்துக் கொண்டு,
முகம் எங்கும் ரத்தக் களறியோடு தெறிப்பாடல்களைப் பாடிக் கொண்டு கோவிலைச் சுற்றி
வந்து கொண்டே இருந்தார்கள். மாலை 5
மணியளவில் அந்த ஊரின் அரச குடும்பத்தைச் சேர்ந்த மூத்தவர் கொடி அசைத்து
காவுதீண்டல் நிகழ்வைத் துவங்கி வைக்கிறார். அதுவரை தெறிப்பாடல் பாடிக்கொண்டு ஆங்காங்கே
நின்று கொண்டிருந்த ஒட்டு மொத்த மக்களும் வெறிபிடித்தவர்கள் போல், தங்கள் கைகளில் வைத்திருக்கும் நீண்ட
கம்புகளைக் கொண்டும், அரிவாளின் பின்புறத்தைக் கொண்டும் பகவதி அம்மன் கோயிலின்
சுவற்றின் மீதும் கூறையின் மீது ஓங்கி அடித்துக் கொண்டே சுற்றி
வரத்துவங்குகின்றனர். சுமார் ஒரு மணி
நேரம் நடக்கும் இந்த நிகழ்வு பார்ப்பதற்கு வித்தியாசமானது. அச்சமூட்டுவதும் கூட.
அஸ்வதி காவு தீண்டல் நிகழ்ச்சி நடக்கும் நாளில், இந்தக்
கோயிலின் பூசகர்களாக இருக்கும் நம்பூதிரிகள், கோயிலைப் பூட்டிக் கொண்டு
அங்கிருந்து சென்றுவிடுகின்றார்கள். இது
முழுக்க முழுக்க பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களால் நடத்தப்படுகின்றது. காவு தீண்டல் முடிந்த பின் கோயிலைச் சுத்தம்
செய்து, மூடிவைத்து சடங்குகள் செய்கின்றார்கள் இங்கிருக்கும் நம்பூதிரிகள்.
இந்தக் கோயில் பற்றி பல்வேறு நாட்டார்
கதைப்பாடல்கள் இருக்கின்றன. பெரும்பாலும் இவை பழங்குடி இன மக்களாலேயே
பாடப்படுகின்றன என்பது கவனிக்கபட வேண்டிய ஒன்று.
மதிப்பிற்குரிய எழுத்தாளர் சத்ய பெருமாள் பாலுசாமி
அவர்களின் “ கொடுங்கோளூர் கண்ணகி ஏன் தெறி பாடுகின்றாள்” என்ற புத்தகத்திலிருந்து
இவற்றை அறிய முடிந்தது. இந்த அஸ்வதி காவு
தீண்டல் நிகழ்வு குறித்து மிக விரிவாக, ஆய்வு நோக்கில் இந்த நூலை
எழுதியிருக்கின்றார். வாசிக்க வேண்டிய
நூல். இந்த நூலின் இறுதியில் அவர் இந்த
ஆய்வில் கண்டடைந்த பதிவு செய்திருக்கின்றார். இந்தக் கோயிலில் உள்ள பகவதி சிலைக்கு
பின்புறம் ஒரு பூட்டப்பட்ட அறை இருக்கின்றது.
அந்த அறைக்கும் சேர்த்துதான் பூசைகள் செய்யப்படுகின்றன். திரு. சத்யபெருமாள் பாலுசாமி அவர்களுடைய
ஆய்வின் படி மதுரையை எரித்த கண்ணகியின் உடல் அங்கே புதைக்கப்
பட்டிருக்கலாம் என்ற வகையில் அமைந்திருந்தது.
தன் ஆய்வை பல்வேறு கட்டமாக பிரித்து, இந்தக் கோயில் குறித்தும், இந்தச் சடங்குகள்
குறித்தும் அதற்கும் கண்ணகி கதைக்கும் உள்ள தொடர்பு குறித்து மிக விரிவாக
எழுதியிருக்கின்றார். இது கண்ணகிக்கான
கோயில், அல்லது கண்ணகியின் பள்ளிப்படை என்று நிறுவும் இவர் இதற்கு ஆதரவாக பல்வேறு
செய்திகளையும் நம்பிக்கைகளையும் ஆதாரங்களையும் முன் வைக்கிறார். ஆய்வு செய்ய வேண்டிய ஒன்று.
பவுத்த சங்கத்தில் ”வச்ராயுத பவுத்தம்” ஒரு பிரிவு
உண்டு. ஒரு காலத்தில் இந்தக் கொடுங்கோளூர்
கோயில் அந்த வச்ராயுத பவுத்தர்களின் பள்ளியாக இருந்தது என்ற ஒரு செய்தியை
படித்திருக்கின்றேன். அந்த நோக்கிலும்
இந்த கொடுங்கோளூர் பகவதியை அனுகி ஆராய வேண்டும் என்று நினைக்கின்றேன்.
https://www.youtube.com/watch?v=UjQ7msiT4dY