கருவிழி சிவப்ப, வானக்
கார்குழல் விரிந்து நீள,
இருபுற நெற்றி வேர்வை
இன்ப துன்பங்கள் பேச,
மருவறு இதழிரண்டும்
மயக்கத்தில் காய்ந்து நிற்க
திருமகள் வாழுகின்றாள்
சிலைநட மாடல் போலே.
இருபதும் பத்தும் தாண்டி
இள மகள் பருவம் சென்றும்
ஒரு தனித் துணைவன் இல்லை
உறக்கமும் உணவும் இல்லை
கருவுயிர்க் கின்றார் மற்றோர்,
கன்னியாய் இவள் நிற்கின்றாள்.
தெருவிளக் கெரிவ தேபோல்
சேவைக்கே பிறந்த பாவை.
கல்வியும் இல்லாள், காதல்
கலவியும் இல்லா ளாக
வல்விதி தனையே எண்ணி
வடித்த கண்ணீரோ பொன்னி
சொல்வது யார்மேற் குற்றம்?
தோகையின் அழகைப் பார்த்தும்
இல்லறம் தருவா ரில்லை
எந் தமிழ் நாட்டின் கண்ணே.
பவுர்ணமி வருதல் கண்டாள்
பகல் கண்டாள், இரவும் கண்டாள்
அவளுக்கு பருவம் வந்து
ஆயின பதினேழு ஆண்டு;
கவலைக்கும் வயது அஃதே!
கலைமகள் சொன்னா ளில்லை
நவமணி முகத்தைப் பார்த்தும்
நல்லவர் வந்தாரில்லை!
கழுவினாள் உடம்பை நித்தம்,
கவலையுடன் பொட்டும் வைத்தாள்
தழுவுவான் இல்லை என்றால்
தண்ணீரில் இன்பம் ஏது
அழுவதும் தனியே பாவி
அமைவதும் தனியே யானாள்
தொழுவதில் குறைச்சலில்லை
தொடர்ந்தவள் கோவில் சென்றாள்.
என்ன இக்கொடுமை, பெண்மை
ஏனிந்தப் பிறப்பை ஏற்றாள்?
முன்னேறிவிட்ட தாமே
மோகனப் பெண்ச மூகம்!
பின் தங்கும் இனங்கள் மட்டும்
பிள்ளைகள் பெறலாம்;நாட்டில்
முன்னேறும் சமூகம் என்றால்
முப்பதில் அழத்தான் வேண்டும்!
இந்தியா உரிமை நாடாம்
எல்லோர்க்கும் உரிமை உண்டாம்
மந்திரி எவர் வந் தாலும்
மயங்குவார் ஓட்டுக் காக;
செந்தணல் கொதிக்கும் மண்ணில்
திருமகள் பிறக்க லாமா?
வந்ததைத் பெறத்தான் வேண்டும்
வாழிய தலைவர் கூட்டம்.
- கவியரசு கண்ணதாசன்
5 comments :
எந்தத் தொகுப்பிலிருந்துன்னு போடுங்க சாமியோவ்.
நெஞ்சை நெகிழ வைக்கும் அருமையான, அழகு கவிதை.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
மனப்பூர்வ வாழ்த்துகள்.
Very Good !! Keep it Up!
//எந்தத் தொகுப்பிலிருந்துன்னு போடுங்க சாமியோவ்.//
kannadasan kavithaigal -volume 7
vanathi pathipagam
மாம்ஸ், மொத பாரா தமிழ் எழுத்து மாதிரியே இருக்குது ஆனா ஒன்னும் புரியல. ஒரு வேளை ஆங்கில எழுத்துகளை உபயோகித்து ஸ்பானிஷ் எழுதற மாதிர்யா? ;-)
Post a Comment