Friday, January 06, 2012

கம்பனும் நானும்.................


கா.சு பிள்ளை உரை எழுதி வெளியிட்ட தனிப்பாடல் திரட்டு 2ம் பாகம் புரட்டிக் கொண்டிருந்தேன்.  கம்பன் எழுதியதாகக் குறிப்பிடப்பட்டிருந்த பாடல்களைப் படித்தேன். இவைகளையுமா? கம்பன் எழுதியிருப்பார்,  என்ற ஆச்சரியமும் வியப்பும் மேலிட்டது.  இராமாயணம் எழுதிய கம்பன் வேறு இவர் வேறா? இருவரும் ஒருவரா? யாராவது சொல்லுங்களேன்???

கோயில் வாசலில் இருக்குமாறு சொல்லிவிட்டுச் சென்ற தாசி குறித்துப் பாடியது

இல்லென்பார் தாமவரை யாமவர்தம் பேரறியோம்
பல்லென்று செவ்வாம்பன் முல்லையும் பாரித்து
கொல்லென்று காமனையுங் கண்காட்டிக் கோபுரக்கீழ்
நில்லென்று போனாரென் நெஞ்சைவிட்டுப் போகாரே


பொருத்தமில்லாத் தாசி குறித்துப் பாடியது

சொல்லியைச் சொல்லினமுதான செல்வியைச் சொற்கரும்பின்
வில்லியை மோக விடாய்தவிர்விப்பாளை விழியம்பினாற்
கொல்லியைக் கொல்லியம் பாவையொப்பாளைக் குளிரொற்றியூர்
வல்லியைப் புல்லிய கைக்கோவிவர் வந்து வாய்ப்பதுவே


தான் இறக்கும்போது

ஆன்பாலுந் தேனு மரம்பைமுதன் முக்கனியும்
தேம்பாயு வுண்டு தெவிட்டு மனந்-தீம்பாய்
மறக்குமா வெண்ணைய் வருசடையா கம்பன்
இறக்கும்போதாயினி

இராமயணம் எழுதக் காளியை பந்தம் பிடிக்கச் சொல்லியது

ஒற்றியூர் காக்க வுறைகின்ற காளியே
வொற்றியூர்க் காகுத்தன் மெய்ச்சரிதை-பற்றியே
நந்தா தெழுதுதற்கு நல்லிரவின் மாணாக்கர்
பிந்தாமற் பந்தம் பிடி


காவிரி எச்சிநீர் எனப்பாடியது.

மெய்கழுவி வந்து விருந்துண்டு மீளுமவர்
கைகழுவு நீர் போலுங் காவிரியே-பொய்கழுவும்
போர்வேள் சடையன் புதுவையான் றன் புகழ்
யார் போற்ற வல்லா ரறிந்து.


குலோத்துங்கன் அவையில் இருந்த அவர், அவனோடு கோபங் கொண்டு கொங்கு மண்டலத்திற்கு வந்திருந்து, ”மங்கல வாழ்த்து” என்னும் வேளாளர் திருமணச் சடங்குகள் குறித்தும் பாடியதாக திருச்செங்கோடு முத்துசாமி கோனார் குறிப்பிடுகின்றார். இவரே இதை 1913ல் பதிப்பித்தவர். இராமாயணக் கம்பன் எழுத்து நடைக்கும் இதற்கும் மிகுந்த வேறுபாடு இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.

மங்கல வாழ்த்து:


  அலைகடல் அமிழ்தம் ஆரணம் பெரியவர்
திங்கள் மும்மாரி செல்வம் சிறந்திடக்
கந்தன் இந்திரன் கரிமா முகத்தோன்
சந்திர சூரியர் தானவர் வானவர்
முந்திய தேவர் மூவருங் காத்திட
நற்கலி யாணம் நடந்திடும் சீர்தனில்
தப்பிதம் இல்லாமல் சரசுவதி காப்பாய்!
சீரிய தினைமா தேனுடன் கனிமா
பாரிய கதலிப் பழமுடன் இளநீர்
சக்கரை வெல்லம் தனிப்பலாச் சுளையும்           10

சீருடன் நெய்யும் தேங்காய் பழமும்
வாரியே வைத்து வரிசை குறையாமல்
முறைமை யதாக முக்காலி மேல்வைத்து
மணம் பொருந்திய மாப்பிள்ளை தனக்குக்
குணம் பொருந்திய குடிமகனை அழைத்துத்
தெள்ளிய பாலால் திருமுகம் துடைத்தபின்
அரும்பிய மீசையை அழகுற ஒதுக்கி
எழிலுடை கூந்தலுக்கு எண்ணெய் தனையிட்டுக்
குணமது சிகைக்காய் கூந்தலில் தேய்த்து
ஏழு தீர்த்தம் இசைந்திடும் நீரை

எளிய நாட்டு வழக்கச் சொற்களால் பாடியிருக்கிறார் போலும் என்று கொங்கு அறிஞர்கள் விளக்கம் தருகிறார்கள்...இதில் எந்த அளவு உண்மையிருக்கிறது என்று தெரியவில்லை.

திருக்கை வழக்கம்

பிள்ளையார் வழிபாடு

கங்கைபெறும் காராளர் கருவியெழு பதுமுரைக்க
அங்கைபெறும் வளைத்தழும்பு முலைத்தழும்பு மணியமலை
மங்கைபெறும் திருவுருவாய் வந்துறைந்தார் தமைவலஞ்செய்
கங்கைபெறுந் தடவிகடக் களிற்றானைக் கழல்பணிவாம்

நீலி தனக்(கு) அஞ்சி நின்ற வணிகேசனுக்காக்
கோலி அபயம் கொடுக்கும் கை. 15


ஆதுலர்க்குச் செம்பொன் அளிக்கும் கை, ஆகமங்கள்
வேத புராணங்கள் விரிக்கும் கை. 27

நாவில் புகழ்க் கம்பநாடற்(கு) அடிமை என்றே
மாவைக் கரைத்து முன்னே வைக்கும் கை 34

ஏர் எழுபது ஓதி அரங்கேற்றுங் களரியிலே
காரி விடநாகம் கடிக்கும் கை. 35
இதற்கு பொருள் யாராவது முதலில் சொல்லுங்கய்யா........

கனக்கவே
அன்(று) ஈன்ற நா(கு) எழுபதான எருமைத் திறத்தைக்
கன்றோடு நல்கும் கடகக் கை. 49
எருமை என்ற சொல்லின் வேர்ச்சொல் எதுவாக இருக்கும்?????????????????



ஏர் எழுபது:

நீற்றோனும் மலரோனும் நெடியோனும் என்கின்ற
தோற்றாள ரிவராலே தொல்லுகம் நிலைபெறுமோ
மாற்றாக காவேரி வளநாடர் உழுங்கலப்பை
ஊற்றாணி யுளதாயின் உலகுநிலை குலையாதே

19 உழுவோனின் சிறப்பு

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாருந்
தொழுதுண்டு பின்செல்வா ரென்றேயித் தொல்லுகில்
எழுதுண்ட மறையன்றோ இவருடனே இயலுமிது
பழுதுண்டோ கடல்சூழ்ந்த பாரிடத்திற் பிறந்தோர்க்கே

இதுபோல் திருக்குறளிலிருந்து ஒரு முழுக் குறளையும் கம்பன் ஏதாவது ஓரிடத்தில் கையாண்டிருக்கிறாரா?  தெரிந்தவர் சொல்லுங்களேன்....

சடகோபர் அந்தாதி, சரசுவதி அந்தாதி ஆகியவையும் கம்பரால் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது......


இப்படியும் ஒரு பாடலை கம்பன் பாடியதாக கூறுகின்றனர்.....

செட்டிமக்கள் வாசல் வழி செல்லோமே செக்காரர்
 பொட்டி மக்கள் வாசல் வழி போகோமே,
 முட்டிபுகும் பார்ப்பார் அகத்தை எட்டிப்பாரோமே
 எந்நாளும் காப்பாரே வேளாளர் காண்!"


மங்கல வாழ்த்து, திருக்கை வழக்கம், ஏர் எழுபது போன்றவை படித்து ரசிக்கத்தக்கனவாக அமைந்திருந்தாலும், கம்பனின் பெயரை ஏதோ பெருமைக்கு இழுத்துவிட்டுக் கொண்டது போல தோன்றுகிறது. இது என் தனிப்பட்ட கருத்து.  குறித்த சரியான விளக்கம் கிடைத்தால் என் எண்ணத்தை மாற்றிக் கொள்ள நான் தயாராக இருக்கின்றேன்.


இராமாயணத்தின் கம்பனைப் படித்தபின், இதை ஏனோ என் மனம் ஏற்க மறுக்கிறது.............

5 comments :

அகல்விளக்கு said...

உதாரணங்களுடன் அருமையான அலசல்...

பாடநூல்களிலும், ஆராய்ச்சிக்கட்டுரைகளிலும் கம்பர் ஒன்பது நூல்களை எழுதியதாகத்தான் குறிப்பிடுகின்றனர். அவற்றில் ஏரெழுபது, திருக்கை வழக்கம்,
சரஸ்வதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, சிலையெழுபது, மும்மணிக்கோவை ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

ஆனால் கம்பராமாயணத்திற்கும் மேற்கண்ட மற்ற படைப்புகளுக்கும் இடையில் தென்படும் வசீகரக்குறைவு கொஞ்சம் முரணாகத்தான் தோன்றுகிறது. :)

vasu balaji said...

மொதலாளி இது புலவருங்களுக்கு. எங்கள மாதிரி பாமரனுக்கு எழுதுங்க மொதலாளீ:)))

குறும்பன் said...

இவர் வேற கம்பராக இருக்க வாய்புண்டு. கம்பர் பரம்பரையை சேர்ந்தவராக இருக்கலாம். அதனால் பெயரில் கம்பர் ஒட்டிக்கொண்டிருக்கலாம்.

அன்புடன் நான் said...

வணக்கம்.... தங்களுக்கும் நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

giri said...

நன்று