Tuesday, March 20, 2012

நாஞ்சில் நாடனுடன்...........




அரசியலும் அதிகாரமும் கட்டவிழ்த்துவிடும் சமூக  அநீதிகளை சகித்துக்கொண்டு சுரணை கெட்டுக்கிடக்கும் தமிழ்ச்சமூகத்தின் அறவுணர்வுகளை தட்டி எழுப்புவதே தன் எழுத்தின் காரியமென்று உறுதி கொண்டிருப்பவர்

நாஞ்சில் நாடன். மண்ணிலிருந்தும் மனிதரிலிருந்தும் முளைத்து எழுபவை அவரது கதைகள். நிராகரிப்பின் துயரிலிருந்து திரண்டு எழுவது அவரது மொழி. அவரது மெய்யான வாசகன் அவருடைய ஒவ்வொரு படைப்பையும் படித்து முடித்தவுடன் தலைகுனிவையே அடைவான். இதுகாறும் சமூகம் சார்ந்தும் சக மனிதர்கள் சார்ந்தும் பொறுப்பின்மையுடன் நடந்துகொண்டமைக்காக உள்ளூர வருந்துவான். வாசகனின் இந்த சுய பரிசீலனையை சாத்தியப்படுத்துவதால்தான் நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள் இலக்கியமாக ஆகின்றன..

-எம்.கோபாலகிருஷ்ணன்.
கான் சாகிப் நூலுக்கான பின்னுரையிலிருந்து..


இதைவிடச் சிறப்பாக இவரைப் பற்றிச் சொல்லிவிடமுடியாது. அப்படிப் பட்ட ஒரு ஆளுமையோடு இரண்டு நாட்கள்………….மறக்கமுடியாத நாட்கள்…..

முப்பது ஆண்டுகளுக்கு முன்னால், பிரிக்கப் படாத பாரதம் போல் இருந்த எங்கள் வீட்டின் முன்புறம் சுமார் 50 பேர் அமரக்கூடிய இரட்டைக் கோப்பு கொட்டகை ஒன்று இருக்கும்.  அதன் இருபுறங்களிலும் மரங்கள் நிறைந்தும், நல்ல காற்றோட்டத்தோடு அழகாக இருக்கும்.

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை மாலைவேளையிலே, பந்தலினுள்  விரிப்புகள் விரித்து அதன் முன்னால் ஒருசிறு மேசையும் வைக்கப் பட்டிருக்கும். இரண்டு மணிநேரம் அங்கே கம்ப ராமாயண, சிலப்பதிகார, திருஅருட்பா வகுப்புகள் நடக்கும்.  புலவர் வை. நடேசனார், புலவர் கமாலூதீன், கல்வெட்டறிஞர் புலவர். செ. இராசு போன்றோர் வாரந்தோறும் வந்து வகுப்புகள் நடத்துவார்கள். காலப் போக்கில் அவையெல்லாம் கரைந்து போய்விட்டன.

நண்பர் விசயராகவன் நாஞ்சிலார் நமக்கு வகுப்பெடுக்கப் போகிறார் என்றவுடன் எனக்கு இவையே நினைவிற்கு வந்தன.

காலை 10.30 மணிக்கு, திரு விசயராகவன், கிருட்டிணன் மற்றும் நண்பர்களோடு வந்த நாஞ்சில் அவர்களை, ஈரோடு வலைப்பதிவர்கள் குழுமத்தின் தலைவர். திரு தாமோதர் சந்திருவின் நெசவு ஆலை முன் இருந்த மூங்கில் சோலையில் . திரு டி.வி.எஸ் விஸ்வம் அவர்களோடு வரவேற்றோம். 

தமிழகத்தின் ஆகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரும்,  சாகித்திய விருது பெற்றவரும், எல்லோரும் கொண்டாடும் ஒரு மனிதரை, தமிழக எழுத்துலகத்தின் ஒரு பெரும் ஆளுமையை  வரவேற்க பதட்டத்தோடு காத்திருந்த எனக்கு, ஏமாற்றமே. புகைப் படங்களில் முன்பே பார்த்திருந்தாலும் கூட, இயல்பாய் நட்போடு ஒரு சிரிப்பு, அன்போடு ஒரு கை குலுக்கல், வாஞ்சையோடு ஒரு  பார்வை,……இப்படியாய் நம் வீட்டிற்கு வரும் தந்தையின் நண்பரைப் போல், நெருங்கிய உறவினரைப் போல், மிக இயல்பாய், நட்பாய், ஒரு மனிதரைச் சந்தித்தவுடன்  நிறைவோடு விரைவில் சமநிலைக்கு வந்தேன்.

எழுத்தாளர் சூத்திரதாரியும், கவிஞர் மோகனரங்கனும், நண்பர்களும் உடன்வர,  பனிக்கட்டிகள் உடைக்கப் படவேண்டிய அவசியமில்லாமல் எளிதாய்  கரைந்தோம்….எந்தவொரு கிருதாவும் இல்லாமல் விரைவாய் .கலந்தோம்.

முறையாக ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டபின், தன் பேச்சைத் துவங்கினார் நாஞ்சில்.

எல்லோருக்கும் வணக்கம், முதல்ல சில விசயங்களை தெளிவுபடுத்திக்கனும். நம்மல்ல பலர் தப்பா நினைக்கிறமாதிரி, தமிழ்ல நான் பெரும் புலவர், அப்படிங்கற மாதிரி ஒன்னும் கிடையாது. நீங்க நாலு புஸ்தகம் படிச்சிருந்தீங்கன்னா நான் ஐந்து புஸ்தகம் படிச்சிருப்பேன். அவ்வளவுதான்.

 இப்படிச் சொல்லி, திருக்குறளில் தொடங்கி சங்க இலக்கியத்தைத் தொட்டு, சிலப்பதிகாரத்தில் புகுந்து,, மணிமேகலையில் நடந்து, தேவார திருவாசகத்தில் ஊடோடி, பிரபந்தத்தில் முடித்தபோது சுமார் 5 மணிநேரம் கடந்து போயிருந்தது.

13 பக்கங்கள் கொண்ட நாஞ்சிலின் ஒரு கையெழுத்துப் பிரதியை நண்பர் கிருட்டிணன் அனைவருக்கும் நகலெடுத்துக் கொடுத்திருந்தார். அதில் அன்று அவர்பேச இருந்த பாடல்கள் அழகாக, எழுதப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நாஞ்சில் அவர்கள் எடுத்துக் கொண்டிருந்த முயற்சியும் அக்கறையும், அதில் தெரிந்தது.


திருக்குறளில் படைச் செருக்கு அதிகாரத்தில் தொடங்கியவர் புறநானூறுக்குள் புகுந்ததும் வேகமெடுக்கத் தொடங்கியது.

ஆடு நுனி மறந்த கோடுயர் அடுப்பில்-என்ற பெருந்தலைச் சாத்தனார் குமணனைப் பார்த்துப் பாடியதை அழகாக விளக்கிச் சொன்னார். அதே பாடலை பின் வந்த ஒப்பிலாமணிப் புலவர் பாடியதையும் விளக்கினார்.

யாழொடும் கொள்ளா, பொழுதொடும் புணரா என்ற பாடல் அதியமான் நெடுமான் அஞ்சியைப் பார்த்து ஒளவையார் பாடிய பாடலும் ரசிக்கத் தகுந்தவை..

கன்றும் உண்ணாது கலத்தினும் புகாது என்ற ஒரு குறுந்தொகைப் பாடல். ஒரு பெண்ணின் காதல் உணர்வை, பிரிவாற்றாமையை, இதைவிடச் சிறப்பாக யார் சொல்ல முடியும். ஒரு பெண்ணைத் தவிர.  பல நூற்றாண்டுகளுக்கு முன் பேசப்பட்ட பெண் உடலரசியல்.

உடற்கு அழுதனையோ? உயிற்கு அழுதனையோ, ஆற்றுநர்க்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர் போன்ற மணிமேகலைச் செய்யுளை அவர் விளக்கிப் பேசியது அழுத்தமாய் நினைவில் நிற்கிறது.

நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்ற அப்பர் வரிகளை விரிவாகப் பேசினார். காரைக்கால் அம்மையாரின் பதிகத்திலிருந்து சில பாடல்கள், ஆண்டாள் திருவாய்மொழியிலிருந்து சிலபாடல்கள், பிரபந்தங்கள், என தொடர்ந்த 5 மணிநேரப் பேச்சைப் பற்றி எழுதத் தீராது.

இந்த நிகழ்வின் மொத்தத்தையும் ஒலிப்பதிவு செய்துள்ளேன்..  விரைவில் வெளியிடுகின்றேன்.

இந்த நிகழ்ச்சியினை சிறப்பாக ஏற்பாடு செய்து கொடுத்த நண்பர்கள் வழக்குரைஞர் கிருட்டிணன், விசயராகவன், பாரதி புத்தக நிலையம் இளங்கோ, சிவா, மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்.

பெங்களூரிலிருந்தும், சென்னையிலிருந்தும் கும்பகோணத்திலிருந்தும், கோவையிலிருந்தும் சேலத்திலிருந்தும் இன்னும் பல ஊர்களில் இருந்தும் வந்து, இந்நிகழ்வில்  கலந்து கொண்ட அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி.







10 comments :

Kodees said...

கொடுத்து வச்சவர் நீங்க!

vasu balaji said...

உங்க பேச்சு கா:(

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றிங்க கோடீஸ்...


//உங்க பேச்சு கா:(//
ஆசானே என்ன ஆச்சு?? ஏதும் குத்தமிருந்தா மாப்பு கொடுக்கோணுஞ்சாமீ..............

Kumky said...

கலக்குறீஙக மொதளாலி...

பவள சங்கரி said...

அழகாக வர்ணித்துள்ளீர்கள். நாஞ்சில் நாடன் அவர்களின் எளிமை கண்டும் ஆச்சரியமாக இருக்கிறது. ஒளிப்பதிவு செய்த கோப்பை விரைவில் இணைத்தால் நலம். பகிர்விற்கு நன்றி.

அன்புடன்

பவள சங்கரி.

ஆரூரன் விசுவநாதன் said...

//கும்க்கி கும்க்கி said...

கலக்குறீஙக மொதளாலி...///

எல்லாம் பெரியவங்க உங்க ஆசிர்வாதந்தான்......

சத்ரியன் said...

உங்கள் செவிப்புலன் ஆனந்தம் அடைந்திருக்கும்.

பகிர்வுக்கு நன்றிங்க மாமா.

(ஒலி கோப்பை பதிவேற்றுங்கள்.)

பா.ராஜாராம் said...

ஆரூரார், பகிர்தலுக்கு நன்றி!

அமர பாரதி said...

அருமையான நிகழ்வு மாம்ஸ். மகிழ்ச்சி.

அமர பாரதி said...

அருமையான நிகழ்வு மாம்ஸ். மகிழ்ச்சி.