“பன்னிரு திருமுறைகள்” சைவ
சமயம் நமக்கு அளித்த ஒரு அற்புதமான தொகுப்பு.
அப்பர், சம்பந்தர், சுந்தரர், மணிவாசகர், சேக்கிழார் உள்ளிட்ட ஐவரோடு சேந்தனார், காரைக்கால் அம்மையார், திருமூலர்
உள்ளிட்ட 22 பேர் (திருமுறை ஆசிரியர்கள் மொத்தம் 27 பேர்). எழுதிய செய்யுள்களின்
தொகுப்பே பன்னிரு திருமுறைகள்.
இந்த 22 பேரில், நக்கீரர், கல்லாடனார்,கரூவூர்த்தேவர்,
பட்டினத்தார் இவர்களோடு ஓரே ஒரு பாடலை சோமசுந்தரக் கடவுளே எழுதியதாக சைவர்கள்
நம்புகின்றனர். திரு ஆலவாயுடையார் திருமுகப் பாசுரம் என்று அழைக்கப் படும் அந்தப்
பாடல் 11ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டிருக்கிறது
மதிமலி புரிசை மாடக் கூடற்
பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிற
கன்னம் பயில்பொழில் ஆல வாயின்
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
எனத்தொடங்கும் அந்தப் பாடல். திருமுகம் எழுதுவது என்றால் கடிதம்
எழுதுவது என்று பொருள். இதுவே பிற்கால இலக்கியங்களில் சீட்டுக் கவியானது. சீட்டுக்
கவி குறித்தான என் பழைய பதிவு.
https://arurs.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF
மதுரை சொக்கநாதர், சேரமான் பெருமான் என்னும் சேர மன்னனுக்கு ஒரு
கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில்,
இந்தக் கடிதம் கொண்டு வரும் பாண பத்திரன் என்னும் தன் பக்தனுக்கு பொருளுதவி செய்ய
வேண்டுகிறார். இதில் குறிப்பிடப்படும் மன்னன் சேரமான் பெருமான் 63 நாயன்மார்களில்
ஒருவர். திருத்தொண்டர் புராணத்தில்
அவருடைய பெயர், கழற்றறிவார் நாயனார். நாள் தோறும் பூசையின் முடிவில், நடராசப் பெருமானின்
சிலம்பொலி அவருக்கு கேட்குமாறு அருளப்பட்டிருந்தது. ஒரு நாள் பூசை முடிந்தபின்
சிலம்பொலி கேட்கவில்லை. பூசையில் ஏதோ தவறிருக்குமென்று கலங்கினார் மன்னர். தம்பிரான் தோழன் சுந்தர மூர்த்தியாரின்
பாடல்களில் ஒன்றிப் போய் சிலம்பை ஒலிக்க மறந்து விட்டேன் என்று இறைவன் சொன்னதாக
பெரியபுராணம் சொல்கிறது. இதன் மூலம் சுந்தரமூர்த்தி நாயனாரின் மீது அளவிலாத பக்தி
கொண்டு அவரைத் தேடிக் கண்டடைகிறார். பிறகு இருவரும் பல ஆலயங்களை தரிசித்துக்
கொண்டு, திருவஞ்சைக் களம் என்ற ஊரை அடைகின்றனர்.
“தானெனை
முன் படைத்தான்” என்ற அற்புதமான தேவாரம் பாடிய இடம். தருமபுரம் சுவாமிநாதர் பாடக் கேட்ட தருணங்கள்
மறக்கமுடியாதவை.
கேரளத்தில், கொடுங்களூருக்கு
அருகில் இருக்கும் இந்தத் தலத்திலிருந்து, வெள்ளையானையில் ஏறி சுந்தரர் கையிலயம் சென்றதாகவும்,
அவரைத் தொடர்ந்து, தன் வெள்ளைக் குதிரையில் சேரமான் பெருமானும் , அவரோடு கைலாயத்தை
அடைந்து இறைவன் முன் திருக்கைலாய ஞான உலாவைப் பாடியதாக பெரியபுராணம் குறிப்பிடுகிறது.
ஆடல்வெம்பரி மீதேறி மாகயிலையில் ஏகி
ஆதியந்த உலா ஆசுபாடிய
சேரர் கொங்கு வைகாவூர் நன்நாடதனில்
ஆவினன் குடிவாழ்வான தேவர்கள் பெருமாளே.
(திருப்புகழ் - பழநி)
10 ஆம் திருமுறையில் உள்ள திருக்கைலாய ஞான உலா, பொன் வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக்கோவை உள்ளிட்ட
மூன்றும் கழற்றறிவார் என்னும் சேரமான் பெருமான் பாடியவை.
கலைக்கிட மானதமிழ்ப்பாடு சுந்தரர் காதல் நட்பால்
கொலைக்கிட மானநெறிநீங்கு வெள்ளைக் குதிரையின்மேல்
தலைக்கிடும் எண்ணெய் முழுகாமல் சேரனும் தண்கையிலை
மலைக்கு உடம்போடு சென்றான் அதுவும் கொங்கு மண்டலமே
- கொங்கு மண்டல சதகம்
சேரர்களின் தலைமையிடமான வஞ்சி எங்கிருக்கின்றது என்பது குறித்தான
சர்ச்சை நெடுங்காலமாக இருக்கின்றது. சேரர்
தலைநகர் வஞ்சி என்பது தற்போதைய கரூவூரே என்று சொல்லுவார் கல்வெட்டறிஞர் புலவர் இராசு.
இப்படியாக, சுந்தரருடன் சேரமானும் கையிலை சென்று விட்டார் என்கிறார்
சேக்கிழார். அவரின் திடீர் மறைவிற்குப் பிறகு பல தொன்மங்கள் உருவாகின.
சேரமான் பெருமான், என்ற கழற்றறிவார், அரேபியப் பயணிகளோடு சேர்ந்து
மெக்கா சென்று நபிகளாரைக் கண்டு இசுலாத்தைத் தழுவி, நபிகளாரால் தாஜுதீன் என்று பெயர்
மாற்றப்பட்டதாக ஒரு கதை சொல்லப்பட்டு வருகிறது.
கொடுங்களூருக்கு அருகில் உள்ள சேரமான் ஜும்மா மசூதியை நபிகளாரின் 13 முக்கிய
சீடர்களில் ஒருவரான மாலிக் பின் தினார் என்பவர் கிபி629ல் கட்டியதாக வரலாற்றுக் குறிப்புகள்
பேசுகின்றன. இந்தியாவில் கட்டப்பட்ட முதல் மசூதி இதுதான். தன்னோடு வந்த மாலிக் தினாருக்கு
சேரமான் ஒரு கடிதம் எழுதிக் கொடுத்ததாகவும் அந்தக் கடிதத்தில், மசூதி கட்டிக் கொள்ள
அனுமதிக்குமாறு தனக்கு பின் ஆட்சிக்கு வந்தவர்களுக்கு எழுதியிருந்ததாகவும் நம்பப் படுகிறது.
மெக்கா சென்ற சேரமான் பெருமான் ஏமனில் இறந்ததாக சொல்லப்படுகின்றது. ஏமனில் உள்ள இந்திய
அரசரின் கல்லறை பலராலும் பார்வையிடப்படுகின்றது.
ஆலவாய் இறைவன் பாணபத்திரர் பொருட்டுத்
திருமுகப்பாசுரம் அருளிய பெருமை உடையவர். இந்நாயனார் வரலாறு பெரிய புராணத்தில் சேக்கிழார்
சுவாமிகளால் கழறிற்றறிவார் புராணம் வெள்ளானைச் சருக்கம் ஆகியவற்றில் சுந்தரர் வரலாற்றோடு
இணைத்துக் கூறப்பட்டுள்ளது. காலம் சுந்தரர் வாழ்ந்த காலம். கிபி840-865 என்பது பலராலும்
ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. நபிகளார் வாழ்ந்த
காலம் கி.பி570-632.
சேரமான் என்பது பொதுப்பெயர்.
கழற்றரிவாருக்கு முன்பே யாராவது ஒரு சேரமன்னர் இசுலாத்தைத் தழுவியிருக்கலாம். எதற்காகவோ
யாராலோ இரண்டு வேறு வேறு நிகழ்ச்சிகள் ஒன்றாக்கப் பட்டிருக்கலாம்.
வரலாறுகள் யூகங்களால் கட்டமைக்கப்பட்டவை என்று பொதுவாக நம்பப்பட்டாலும்,
வரலாறு ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கோ திட்டவரைவுக்கோ ஏற்ப இயங்குகிறது (இதுவே வரலாற்றுவாதம் என்று அழைக்கப்படுகிறது) என்ற ஹெகலின் கருத்தினை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.
கி பி 629க்குப் பிறகு, பல்வேறு கால கட்டங்களில் இந்த மசூதி புணரமைக்கப்பட்டிருக்கிறது. . இங்குள்ள ரோஸ்வுட் சொற்பொழிவு மேடையும் (மிம்பர் படி) கரும்பளிங்குக் கற்களும் மிகவும் பழமையானதாகும். இதில் கரும்பளிங்குக் கற்கள், மெக்காவில் இருந்து எடுத்து வரப்பட்டதாக நம்பப்படுகிறது
இந்த சேரமான் மசூதி
சில ஆண்டுகளுக்கு முன்பு புணரமைக்கப்பட்டபோது பல அடையாளங்கள் அழிந்து போயின. தற்போது
கேரளத்தின் சிறந்த ஆர்க்கிடெக்ட்களில் ஒருவரான பென்னி குரியகோஸ் அதை சீரமைத்திருக்கிறார்.
No comments :
Post a Comment