Sunday, December 26, 2010
Wednesday, November 10, 2010
எப்படிக் கேட்டது அவன் அழைப்பு???
மாலை ஆறு மணிக்குள், நகரின் ஒரு பகுதியில் விரிந்து
கிடக்கும் பெருவணிக அலுவலகங்கள் அடங்கிய அந்தத் தெரு, தன் வணிகத்தண்மையைக் கொஞ்சம்
கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தது..
பெரும்பாலும் அலுவலகங்களே நிறைந்திருந்தாலும், தரை தளத்தில் வணிக
நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டு, மாடிப்பகுதியில் குடும்பத்தோடு வாழ்ந்து வரும்
பலரும் வசிக்கும் பகுதி அது.
காலையிலிருந்து கால் கடுக்க நின்று, தீபாவளி போனஸ்
எவ்வளவு வரும்?, எப்போது வரும்? என்ற எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருந்த
தொழிலாளிகளும், எப்படியோ இவர்களுக்கு சிக்கலில்லாமல் போனஸ் கொடுத்து விட்டு
ஓடிப்போய் விடலாம் என்ற எண்ணத்தோடு முதலாளிகளும், தங்களின் அன்றைய நாளை முடிக்க விரைந்து கொண்டிருந்தனர்.
திடீரென்று ஏதோ ஒரு வலியை உணரத் தொடங்கினேன். மனதிற்குள் கலக்கம். என்ன வென்று தெரியாத ஒரு பதட்டம் என்னுள்
ஒட்டிக் கொண்டது. அதை வெளிக் காட்டிக்
கொள்ளாமல், எழுந்து வீட்டிற்கு வெளியே வந்தேன்.
தெருவின் தொடக்கத்தில் இருந்த தெருக் குழாயில்
தண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. அதை
நிறுத்த யாருக்கும் நேரமில்லை. வணிக
நிறுவனங்கள் வெளிக் கொண்டுவந்து கொட்டிய அட்டைப் பெட்டிகள், சணல் கயிறுகள், காகித
குப்பைகள் தெருவெங்கும் பரவிக் கிடந்தன.
குழந்தைகள் வெடித்த பட்டாசுக் குப்பைகளும் சேர்ந்து கொள்ளத்
தொடங்கியிருந்தது.
தெருவெங்கும் வண்ண வண்ண உடைகளில், குழந்தைகளும்,இளம்
பெண்களுமாக பலரும் மத்தாப்பு வெடித்துக் கொண்டிருந்தனர். குளித்து அழகாக
உடையுடுத்தி, தலைசீவி, பூ வைத்து, வளைக்கரங்கள் குலுங்க அதைச் செய், இதைச்
செய்யாதே, இப்படி நட என்று குழந்தைகளை அதட்டிக் கொண்டிருந்தாள் என் மனைவி. வீடெங்கும் இனிப்பு கலந்த நெய்யின் வாசமும்,
குழந்தைகள் எரித்த பட்டாசின் கந்தக மணமும் கலந்து ஏதோ ஒரு புது வாடையைக் கொண்டு வந்திருந்தது.
வீட்டுக்கு வெளியே இருந்த அந்தக் குப்பைத் தொட்டி
நிரம்பி வழிந்திருந்தது. விதவிதமான
அட்டைப் பெட்டிகளில், அழகழகான பெண்கள் அடக்கமாக சிரித்துக் கொண்டிருந்தனர். சில மணிகளுக்கு முன்னே, வண்ண விளக்குகளுக்கு
நடுவே கடையில் காட்சிப் பொருளாக, பலரையும்
கவர்ந்திழுத்த வண்ணப் பெட்டிகள் இப்பொழுது சேறும், சகதியுமான குப்பைத்தொட்டியை ஆக்கிரமித்திருந்தது.
ஆணழகனின் படம் போட்ட அண்டர்வேர் விளம்பரமும் ஐஸ்வரியாராயின் சோப்பும்,
விளம்பரமும், விற்பனையை அதிகரிக்கின்றன என்பதென்னவோ உண்மைதான். ”அரசமரத்தச்
சுத்தி வந்து அடிவயித்த தொட்டு பார்த்துகிட்டாளாம்” என்று தாத்தா எப்பொழுதோ சொன்னது, இப்பொழுது நினைவுக்கு வருகிறது.
குவிந்திருந்த குப்பைகளுக்கு நடுவே இருந்த ஒரு சாக்கு
மூட்டை அசைந்ததாக தோன்றியது. உற்றுப்
பார்த்தால் அப்படி ஏதும் தோன்றவில்லை. அங்குமிங்கும் பார்வையைச் சுழற்றிக்
கொண்டிருந்தபோது, மீண்டும் குப்பைத் தொட்டியில் ஏதோ சலசலப்பு. உற்றுப் பார்த்தால்
எல்லாம் அமைதியாகவே தெரிந்தது.
மழை சற்று வலுக்கத் தொடங்கியிருந்தது. குழந்தைகளோடு நானும் இரவு உணவு முடித்து
உறக்கத்தில் ஆழ்ந்தேன். நள்ளிரவில்
மீண்டும் குப்பைத் தொட்டி, சாக்குப் பை, சலசலப்பு,. திடுக்கிட்டு விழித்துப்
பார்த்தால் மணி அதிகாலை 3.00. முன்
கதவுகளை திறந்து கொண்டு வீட்டிற்கு வெளியே வந்து எட்டிப் பார்த்தேன். எந்த அசைவும்
இல்லை, ஆனால் சாக்குமூட்டை கொஞ்சம் இடம் நகர்ந்தது போல இருந்தது. இருக்காது....நாம் தான் சரியாக கவனிக்க வில்லை என்று
எனக்குள் சொல்லிக் கொண்டு மீண்டும் போய் படுத்தேன்.
குழந்தைகள் உடலை ஒரு பந்து போல சுருட்டிக் கொண்டு,
பெரிய மிருதுவான கம்பளிக்குள் சுருண்டு தூங்கிக் கொண்டிருந்தன. ஏ.ஸி யை நிறுத்தி விட்டு, ஃபேனை மெதுவாக சுழல
விட்டுவிட்டு. வெளியே வந்தேன்.
வாழ்க்கை மிக இனிமையானது. வெயிலின் கடுமையை குறைக்க , குளிர்சாதனங்கள், மழை
பெய்தால், அதில் நனையாமல், பாதுகாப்பாக நின்று மழைய ரசிக்க, மொட்டை மாடியில்
கண்ணாடி கூண்டு, மாலைத் தென்றல் வீச ஏதுவான சன்னல்கள். குளிர் காலத்தில்,
வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ள மின்சார கணப்பு, இப்படி நன்றாகத்தான் இருக்கின்றது
நம் கண்டுபிடிப்புக்கள் எல்லாம். எவ்வளவு கொடுத்து வைத்தவன் இந்த மனிதன். இயற்கையின் இடர்களும், காலச் சூழலும் தன்
இயல்பை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் வாழத் தெரிந்திருக்கிறது இவனுக்கு என்று,
எண்ணிக் கொண்டிருக்கும் போதே ஏனோ சாக்கு மூட்டை நினைவிற்கு வந்தது.
இதற்குள் குழந்தைகள் எழுந்துவிட, எண்ணைக் குளியலுக்கு
அவர்களை தயார்படுத்திவிட்டு, மனைவி கொடுத்த காப்பியோடு வாசலுக்கு வந்தேன். மீண்டும்
ஏனோ அந்த சாக்கு மூட்டையைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது.
காலை மணி 6. மெல்ல வெளிச்சம் பரவத் தொடங்கியிருந்தது.
இதற்கு மேல் எனக்குப் பொருமை இல்லை. அந்த
சாக்குமூட்டையைப் பிரித்துப் பார்த்தால் தவிர நிம்மதி வரப்போவதில்லை. ஏனோ இந்த 12 மணி நேரமாக அந்த சாக்கு மூட்டை
என்னை தொடர்ந்து சலனப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
வீட்டு கார் செட்டைத் திறந்து, ஒரு மூங்கில் கம்பை
கையில் எடுத்துக் கொண்டு, குப்பைத் தொட்டியை நெருங்கினேன். அதை நெருங்க நெருங்க
ஏதோ ஒரு பய உணர்ச்சி, தயக்கம், என்னைத் தடுமாறச் செய்து கொண்டே இருந்தது.
என்னவாக இருந்தாலும் சரி, என்று எனக்குள் சொல்லிக்
கொண்டே, கையிலிருந்த மூங்கில் கம்பைக் கொண்டு அந்த மூட்டையை உருட்ட முயற்சித்தேன்.
கம்பை விட்டு நெம்பத் தொடங்கியவுடன் அது அசையத் தொடங்கியது. பயத்தில் வியர்வை ஆறாக
பெருகியது. கால்கள் ஏனோ
நடுங்குகின. கைகள் மரத்துப்போன நிலையில்
பலமிழந்தது போன்ற உணர்வு.
இதற்குள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த
குழந்தைகள், ஓரிரு பெரிய பையன்கள், அருகிருந்த கட்டிடத்தின் காவலாளி எல்லோரும்
குப்பைத் தொட்டிக்கு அருகே வந்தனர். மடித்துக்
கட்டிய லுங்கி, நடுங்கும் கைகளில் ஒரு கம்பு, அருகே சென்று பார்ப்பதா? விலகி
ஓடிவிடுவதா என்ற குழப்பத்தில் இருந்த, என்னுடைய பரிதாப நிலை அவர்களை, என்னருகே
கொண்டு வந்திருக்க வேண்டும்.
இந்த மூட்டை
ஏதோ அசையற மாதிரி இருக்குது. கொஞ்சம்
திறந்து பாருங்க, என்று சொன்னவுடன், அந்த
காவலாளி, அப்படியெல்லாம் ஒன்னுமிருக்காது சார் என்று சொல்லியவாறே, அந்த சாக்கு
மூட்டையை எட்டி உதைத்தார். இப்போது, முனகல் சத்தத்தோடு மூட்டை அசையத் தொடங்கியது.
பயத்தில் நான் இரண்டடி பின் வாங்கித் திரும்பினால், என்னருகே யாரும் இல்லை. காவலாளி 10 அடி தள்ளி, குழந்தைகளோ இன்னும் 20
அடி தள்ளி நின்று கொண்டிருந்தனர்.
ஒரு கிழிந்த லுங்கி, அவன் மேல் சுற்றப்
பட்டிருந்தது. சுய நினைவு அற்ற நிலையிலே
அவன் இருந்தான். மலமும், சேறும் குப்பைகளும் அவன் மேல் ஒட்டியிருந்தன. ஈக்கள் அவன் காயங்களின் மீது மொய்த்துக்
கொண்டிருந்தன. ஏதோ ஒரு பிச்சைக்காரனைப் போல் இருந்தான்.
திடீரென்று மழை வலுக்கத் தொடங்கியிருந்தது. அவனை
அப்படியே விட்டுவிட்டு, அருகிருந்த கட்டிடத்திற்குள் நாங்கள் அனைவரும் புகுந்து
கொண்டோம். மழையில் நனைந்த படியே சுய
நினைவின்றி கிடந்தான். அவனைத் தொட்டுத்
தூக்கி மழையில்லா இடத்தில் வைக்க யாரும் தயாராக இல்லை நான் உட்பட.
ஏதோ ஒரு அருவருப்பு, பயம், ....
அவனை மருத்துவமணைக்கு தூக்கிச் செல்ல ஆம்புலன்ஸ்
வரவழைக்கலாம் என்ற போது அருகே இருந்த யாரும் பதில் சொல்ல வில்லை. அருகிருந்த ஒரு கல்லூரி மாணவன் மட்டும், சார்,
108 ல் யாரும் எடுக்கவில்லை. நான் போய்,
ஆட்டோ கூட்டிக் கொண்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு பைக்கை எடுத்துக் கொண்டு
சென்றான்.
மற்றவர்கள் அனைவருமே கலைந்து சென்றுவிட்டனர்.
என்னையும் அவனையும் தனித்து விட்டு........அவனை என்னால் பார்க்க முடியவில்லை. பார்க்காமலும் இருக்க முடியவில்லை. அந்தப் பக்கம் திரும்பி நின்று கொண்டேன். ஆனாலும் அவன் யார்? எங்கிருந்து வந்திருப்பான்?
யார் அவனை அடித்திருப்பார்கள்? என்ற கேள்விகள் என்னைக் குடைந்து கொண்டே
இருந்தன. அவன் முகத்தைப் பார்த்து
அடையாளம் சொல்ல அவன் குடும்பத்தாருக்கே இயலாது என்றுதான் தோன்றுகிறது.
அதற்குள் ஒரு ஆட்டோ வந்தது. நானும் அந்தக் கல்லூரி
மாணவனும் இவனை அரசு மருத்துவமணையில் சேர்க்க வேண்டும் என்ற போது ஆட்டோக்காரன்,
என்னையும் ஏனோ அருவருப்பாக பார்த்தான்.
நல்ல நாள் அதுவுமா, காலையில மொத சவாரி, இப்படியா கிடைக்கும்? என்று
புலம்பிய வாரே சாதாரணமாக வாங்கும் கட்டணத்தில் நான்கு மடங்கு அதிகமாக
தந்தாகவேண்டும் என்று கூறி, ஏற்றிக் கொண்டான்.
. அந்த
காவலாளியும் கல்லூரி மாணவனும் ஒரு பைக்கில் புறப்பட்டனர். மருத்துவமணையில் பணியில்
இருக்கும் ஒரு செவிலியின் பெயரைச் சொல்லி, நான் அனுப்பியதாக சொல்லுங்கள். நான் பேசிக் கொள்கிறேன். என்று சொல்லிவிட்டு
போன் பேச வீட்டிற்குள் நுழைந்தேன்.
வாசலிலே ஒரு முறைப்போடு என் மனைவி. நல்ல நாள் அதுவுமா, இப்படியா போயி குப்பைத்
தொட்டியயும், வியாதியஸ்தனையும் தூக்கிகிட்டு?????? கர்மம்..கர்மம்...என்று தலையில்
அடித்துக் கொண்டாள்.
இது நடந்து 15 தினங்களுக்குப் பிறகு, ஒரு நாள் மாலை
அலுவலகத்திலிருந்து திரும்பி வந்த போது, வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த ஒருவர்
என்னைப் பார்த்து கும்பிட்டார். நானும்
பதிலுக்கு கும்பிடும் போது கவனித்தேன்.
கைகளில் அதே சிகப்பு நிற முறுக்குக் கயிறு.
ஆந்திராவைச் சேர்ந்த அவர், ஏதோ ஒரு வணிக நிறுவனத்தில்
வேலை செய்து வந்தாராம். போனஸ் பணம்
வாங்கிக் கொண்டு திரும்பியபோது, யாரோ சிலர் அவரை அடித்து பணம், வாட்ச், மோதிரம்
போன்றவற்றை பறித்துக் கொண்டு அவரைச் சாக்கில் போட்டு கட்டி என் வீட்டிற்கருகே
கொண்டுவந்து போட்டு விட்டனர். என்றார்.
அந்த இரவு, மழையிலும், குளிரிலும், உடல் முழுதுமான
வலியிலும், நினைவு வரும்போதெல்லாம், வாயை அசைக்க முடியவில்லை. முகமெங்கும் வீங்கியிருந்ததாலும், ரத்தம்
அதிகமாக வெளியேறியதாலும், வாய்விட்டு கத்த முடியவில்லை. அடிக்கடி மனதுக்குள்
சத்தம் போட்டு அழுவேன். நினைவிழப்பேன்.
மீண்டும் நினைவு வரும்போது மனதுக்குள்ளாகவே கத்திக் கதறுவேன்.
என்னைக் காப்பாற்ற எந்த சாமியும் வரவில்லை. ஒரு மனிதன் கூடவா இல்லை.....என்று அரட்டிக்
கொண்டிருந்தேன். உங்களால் காப்பாற்றப் பட்டேன்.
”நன்றி சாமீ” என்று கூறி கண்ணீர் வழிய கும்பிட்டான்.
எப்படிக் கேட்டது அவன் அழைப்பு எனக்கு. அந்தத் தெருவில் எத்தனையோ பேர் வந்து போய்க்
கொண்டிருக்கும் போது, குளிரூட்டப் பட்ட அறையில். சிறப்பு தொலைக்காட்சி
நிகழ்ச்சிகள், ஓடிக் கொண்டிருக்க, குழந்தைகளின் குதூகலம், வித விதமான உணவுகள்
மனைவியின் அன்புப் பரிமாற்றம், இப்படி மதி மயங்கிய நிலையில் இருந்த எனக்கு........
எப்படிக்
கேட்டது அவன் அழைப்பு???
.
Labels:
சிறுகதை-அனுபவம்
Thursday, October 14, 2010
அழிக்கப்படும் புராதனங்கள்- மாவட்ட ஆட்சியருக்கு ஒரு வேண்டுகோள்
புதுக்கோட்டை புராதனங்கள் அபாய நிலையில்!!!
Posted by fourthpress on October 13, 2010
புதுக்கோட்டை மாவட்டமே, தொன்மையானது
என்றால் அது மிகையாகாது. ஏனெனில், கற்கால மனிதர்கள் வாழும் குகைகள், புதை
பொருள் தாளிகள், cane circle எனப்படும் கல் வளைவுகள், நடுகற்கள்
ஆரம்பித்து, ஜைன குகைகள், புடைப்பு சிற்பங்கள், மூலிகை ஓவியங்கள், முதல்
தமிழ் மூல எழுத்துக்களாம் பிராம்மி எழுத்துக்கள், முதல் காலச் சோழர்களின்
கோயில் ஆகியவை நிரம்பிய, சித்தன்னவாசல், குடுமியான் மலை, நார்த்தாமலை,
கடம்பர்மலை, ஆளுருட்டிமலை ஆகியவை
நிரம்பிய பகுதி புதுக்கோட்டை. அந்தப் பெயர் இனி நிலைக்குமா என்பது
சந்தேகமே. கடந்த சில மாதங்களாக மிக அதிகமாக கல் குவாரி
காண்டிராக்டர்களால், அடி முடி காணாமல், தொல்லியல் துறையின் சட்டங்கள்,
தடுப்பு சட்டங்கள், (ban) ஆகியவை மதிக்கப் படாமல், இந்த காலத்தால் அழியாத
புராதனச் சின்னங்கள் பெயர்ந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எந்நேரமும்
அதிரும் குண்டுகளால், குகைகளும், நிற்கும் இடங்களும் மக்கள்
நடமாடுகையிலேயே ஆட்டம் கொண்ட வண்ணம் உள்ளது. இப்படியே தொடர்ந்தால்,
மத்தியத் தொல்லியல் துறையால் காக்கப்படும் இச்சின்னங்களும் குவாரிக்
கற்களாக இரையாகும் நாள் வெகுதூரமில்லை. மத்திய தொல்லியல் துறை
அதிகாரிகளையும், அங்குள்ள காவலர்களையும் தொடர்பு கொண்ட போது, யாரிடம்
முறையிட்டாலும், அரசியல் பலமிக்க கல் குவாரிக் காரர்களை தடுக்க
முடியவில்லை என்று வருத்தமே தெரிவிக்கின்றனர். இனியும் தாமதியாமல், தமிழ்
நாடு அரசு தொல்லியல் சின்னங்கள் உள்ள மலைகள் முழுவதையுமே காப்பதற்கான
சட்டம் இயற்றி,(இல்லை இருக்கும் சட்டத்தை தூசி தட்டி எடுத்து) உடனேயே இந்த
காலவரையற்ற குண்டுவெடிப்புகளை தடுக்காவிட்டால், தமிழகத்தின் தொன்மைக்குப்
பெருமையாக விளங்கும் இச்சின்னங்கள் இனி புகைப்படங்களாக மட்டும் காணும்
நிலை உருவாகிவிடும். அரசு உடனடியாக கவனிக்குமா?
மாபெரும் அழிப்பு நடவடிக்கையை நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு மின் அஞ்சல் அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
வலைப்பதிவர்கள் அனைவரும் தங்கள் வலைப் பக்கங்களில் இதை மறு வெளியிடு செய்து தருமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.
அன்புடன்
ஆரூரன் விசுவநாதன்
நன்றி:-http://fourthpillar.wordpress.com/
The Collector,
Pudukottai Dist.
Order immediatly to stop quarrying. Such
a monument can not be built by present or future govt. Such monuments
are telling poetry, history of geography of glorious past.
Regds:\
collrpdk@tn.nic.in
Labels:
அவசரம்-பொது
Friday, October 01, 2010
இலக்கிய இன்பம்
பல்வேறு சிறப்புக்களை தன்னுள்ளே பொருந்தியிருக்கும் மொழி நம் தமிழ் மொழி என்பதில் சந்தேகமில்லை. ஒரு பொருளை அல்லது பயன்பாட்டைக் குறிக்க பொதுவான சொற்கள் இருப்பினும், நம் மொழியில் சிறப்புப் பெயர்களால் குறிப்பிடப்படுவது சிறப்பே.
ஒருவன் - ஒருத்தி என்ற சொற்களை ஆண்பால் - பெண்பாலைக் குறிக்கப் பயன்படுத்துகிறோம். ஒருவர் என்ற சொல் இருபலரையும் குறிக்குமுகமாக பயன்படுத்தப் படுவது நம் சொல் வளத்தினை உலக்குக்குப் பறைசாற்றுகிறது.
“ ஒருவனுக்கும் ஒருத்திக்கும் உருவென்றால் அவ்
வுருவை இக் தொருத்தன் என்கோ? ஒருத்தி என்கோ?
இருவருக்கும் உரித்தாக ஒருவர் என்றோர்
இயற்சொல் இல தெனின் யான் மற் றென் சொல் வேனே.”
-குமரகுருபரர்
இலை என்ற ஒற்றைச் சொல் பொது வழக்காக இருப்பினும் இதற்கு நான்கு வேறு சொற்களும் உண்டு. மா, வாழை முதலின ”இலை” என்றும்..நெல், கேழ்வரகு முதலியன ”தாள்” என்றும், கரும்பு, சோளம் போன்றவை “தோகை” என்றும், தென்னை, பனை போன்றவை ”ஓலை” என்றும் வழங்கபடுகிறது.
பூ என்ற பொதுப்பெயர் அரும்பும் போது “அரும்பு” என்றும், பேரரும்பான போது “போது” என்றும் மலர்ந்த பின் மலர் என்றும், வீழ்ந்தபின் “வீ” என்றும் வாடிய பின் ”செம்மல்” என்றும் அழைக்கப் படும்.
போதொடு நீர் சுமந்தேத்தி, புகுவார் அவர்பின் புகுவே-அப்பர்
அரும்பு என்னும் ஒரு நிலைக்கே, அதன் அளவையொட்டி, அரும்பு, மொட்டு, முகிழ், முகை, மொக்குள் என்ற பல்வேறு சொற்களால் அறிப்படுகின்றன.
”உடலால் இருவர், உயிரால் ஒருவர் ”, ”ஈருடல் ஓருயிர்” என்ற பதங்களெல்லாம் வெறும் பிதற்றல்களாக போயிருக்கும் இந்நாளில், தலைவனும் தலைவியிம் எவ்வாறு ஒன்றாயிருந்தனர் என்பதை “மருவிய பாங்கி மதியிடம் படுத்தல்” என்னும் அகப்பொருள் துறையின்கண் அமைந்த கச்சியப்ப முனிவரின் இந்தப் பாடல்.
உயிர் எழுத்துக்களில் மட்டுமன்றி மெய்யெழுத்துக்களிலும் அகரம் கரந்து உறைகிறது. “ அகர முதல எழுத்தெல்லாம்” என்ற வள்ளுவரின் கருத்துக்கு விளக்கம் தருவது போல் அமைந்துள்ளது .
” பன்னீருயிரும் பதினெண் உடலும் பயின்று இயக்கும்
அந்நீர் என அடல் வேலோன் தனக்கும், அமிழ்து உயிர்க்கும்
முந்நீர் தரள முறுவல் முரி புரு வத்திவட்கும்
நன்னீர் உயிர் ஒன்று, மெய்யிரண்டாகி நயந்ததுவே”
இனிமை என்பது தமிழுக்கு “ழ” கரத்தால் மட்டும் ஏற்பட்டதன்று, எழுத்தினிமை போன்றே, சொல்லினிமை, செய்யுளினிமை, அணியினிமை, இலக்கியவினிமை, இசையினிமை, கூத்தினிமை எனப் பிற இனிமைகளுமுண்டு.
-தேவநேயப் பாவாணர், - தமிழ் வரலாறு.
Labels:
மொழி
Thursday, September 23, 2010
ஆண்......பாவம்........

பொதுவுடமை தத்துவம்
கலைந்த தலை
எண்ணை வடியும் முகம்
வீச்சமாய் ஒரு நைட்டி
விதரணை யில்லாப் பேச்சு
வீட்டுக்குள் இவள்.....
முடிந்த அளவு தவிர்க்கின்றேன்
இவளின் பார்வையை
மலர்ந்த முகம்
அலை கூந்தல்
தளிர் நடை
அழகில் சோலை
கடைத் தெருவில் அவள்
தாண்டிச் சென்ற பின்னும்
தொடர்கின்றேன் திருட்டுதனமாய்............
அவர்கள் கடந்ததும்
திரும்பிப் பார்த்து........
த்தூ..இவனும் ஒரு மனிதனா?
எப்படி வெறித்துப் பார்க்கிறான்?.
சொன்னாள் என்னவள்
திரும்பிப் பார்க்கிறேன்
தாண்டிச் சென்றவளை.....
அவளும் திரும்பி ஏதோ
சொல்கிறாள் அவனிடத்தில்.....
இதைத்தான் அவளும் சொல்லியிருப்பாளோ!!
ஏனோ நானும் அவனும்
வெட்கப்படவில்லை.
வேதனைப் படவுமில்லை.
எவன் சொன்னான் -தோற்றுவிட்டது
பொதுவுடமை தத்துவமென்று.
Labels:
ஆண் பாவம்.....-1 புனைவு
Thursday, September 09, 2010
புலம் பெயர் மண்ணில் ஒரு தமிழனின் அஞ்சல் தலை
மலேசிய தமிழ் நெறிக் கழகத் தோற்றுநர் பாவலர்.அ.பு.திருமாலனாரின் உருவப்படம் தாங்கிய அஞ்சல் தலை மலேசிய அஞ்சல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த மண்ணில் நடைபெறும் இது போன்ற நிகழ்வுகள் பெருமகிழ்ச்சியைக் கொடுக்கின்றன. பெருமிதமடையச் செய்கின்றன.
இது குறித்த பிற பதிவுகள்:
தமிழ்நெறிப் பாவலர் அ.பு.திருமாலனார்(மலேசியா)
தமிழ் நெறி ஞாயிறு பாவலர் அ. பு. திருமாலனாருக்கு அஞ்சல் தலை
Tuesday, September 07, 2010
பீட்டர் பாண்டியன்.............................................
மதுரைப் பகுதியில் 1812-1828 வரை ஆட்சியாளராக இருந்த ஆங்கிலேயர் ரெளஸ் பீட்டர். பெரிய குளம், போடி பகுதிகளில் வன விலங்குகளின் தொல்லைகளுக்கு உள்ளான மக்களைக் காப்பாற்றிய பெருமை அவரையே சாரும். மதுரை மீனாட்சியம்மன், அழகர் கோவில்களுக்கு பெருமதிப்பிலான தங்க நகைகளை காணிக்கையாக அளித்தவர்.
இவரின் கொடைத்திறத்தையும், வீரத்தையும் பாராட்டி அக்காலத்தில் நிறைய நாட்டுப்புறப் பாடல்கள் இருந்திருக்கின்றன. பாண்டிய மன்னனே திரும்ப வந்து ஆள்வதாக மக்கள் கருதி அவரை “பீட்டர் பாண்டியன்” என்றே அழைத்திருந்திருக்கின்றனர். “பீட்டர் பாண்டியன் அம்மானை” என்ற நூலும் அக்காலத்தில் பிறந்திருக்கின்றது. அந்த நூல் இன்று கிடைக்கவில்லை.
அரசாங்க கருவூலத்திலிருந்து பணத்தை எடுத்து ஏழை எளிய மக்களுக்கு வாரி வழங்கிய அவரை ஆங்கில அரசாங்கம் பதவி நீக்கம் செய்தது. அதைத் தொடர்ந்து அவர் 1828 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் வெண்சலவைக் கல்லறை மதுரை தெற்கு ஆவணி மூல வீதியின் மேற்குப் பகுதியில் உள்ள தேவாலயத்தில் முன் தளத்தில் உள்ளது.
பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களின் ”அறியப்படாத தமிழகம் ”நூலிலிருந்து........
Monday, September 06, 2010
மழுங்கிப் போன தமிழனும்...... மறந்து போன தலைவனும்.........
தண்ணீர் விட்டா வளர்த்தோம்.....சர்வேசா
கண்ணீரால் வளர்த்தோம்
நேற்றைய செய்தி தாள்கள், ஊடகங்கங்கள், இணையங்கள், எங்கு காணினும் ஆசிரியர் தின விழாச்
செய்திகள், வாழ்த்துக்கள். டாக்டர் ராதா கிருஷ்ணன் பிறந்த நாள் விழா செய்தி தொகுப்புகள். பள்ளிகளில் ஆசிரியர்கள் ஆட, பாட, மாணவர்கள் வேடிக்கை பார்க்க, மாணவர்கள் ஆசிரிய ஆசிரியைகளைப் பற்றி கவிதை மழை பொழிய சிறப்பாக முடிந்தது ”ஆசிரியர் தினம்”
இந்த கொண்டாட்டங்கள் குறித்த எந்த வருத்தமும் எனக்கில்லை. 1947க்கு முன்னர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாத, சுதந்திரப் போராட்டத்தில் எந்த ஒரு சிறு பங்களிப்பும் செய்திராத, ஆதிசங்கரர் தொகுத்த இந்து மத சாரத்தை ஒருங்கிணைத்து இந்து தத்துவ ஞான மரபு குறித்த புரியாத புத்தகங்கள் எழுதினார் என்பதைத் தவிர என்ன செய்துவிட்டார்? சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்.
உலக தத்துவ ஞானிகளில் ஒருவர் என்று உருவகப்படுத்தப்பட்ட இவரின் தத்துவங்களும் தீர்க்க தரிசன வரிகளும் இன்று எங்கே போயிவிட்டன். சோசலிச கொள்கைகளில் நம்பிக்கை கொண்டு மத வாதத்திற்கு எதிராக இருந்த பண்டித நேரு அவர்களாலேயே நிராகரிக்கப் படமுடியாத அளவிற்கு திடிரென சர்வபள்ளி ராதா கிருஷ்ணன் குடியரசுத் தலைவராக வளர்ந்த கதையின் பின்னனி குறித்து பலரும் பேசுவதை எழுதுவதை கேள்விப்பட்டிருக்கின்றேன்.
இந்த விவாதங்களுக்கு நான் வரவில்லை.......
வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள் நேற்று
"ஒருநாடு உரிமையோடு விளங்க வேண்டுமென்றால் முதலில் அதன் பொருளாதாரச்
சுரண்டலைத் தடுக்க வேண்டும்; இரண்டாவதாகத் தாய்மொழியின் வாயிலாக அறிவை
வளர்க்க வேண்டும். இந்த இரண்டும் எல்லா நாடுகளுக்கும் பொதுவான உணமை. இதனை
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே நன்றாக உணர்ந்து வாழ்க்கையில் காட்டித்
தொண்டு செய்தவர் வ.உ.சி"
என்று டாக்டர் மு.வ. அவர்கள் சொன்னது போல் நாடு
மொழி இரண்டிற்கும் பெருந்தொண்டாற்றிய பெருமகன்.
நன்றி-தமிழ் விக்கி
வ.உ.சி யின் பிறந்தநாளை அனைவரும் மறந்து
போனதுதான் வருத்தப்பட வேண்டிய விசயம். தமிழக அரசோ, காங்கிரஸ் கட்சியோ
யாரும் இதைப் பற்றி கவலைப் பட்டதாக தெரியவில்லை.
அருந்தமிழுக்கு அவர் ஆற்றிய பணிக்காகக்கூட அவரை நினைத்துப் பார்க்கவில்லை தமிழக தமிழறிஞர்கள்.
சிறையில் இருந்த நாட்களிலேயே தமிழ் இலக்கிய இலக்கணங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிய வ.உ.சி. அவர்களால் தமிழன்னைக்குக் கிடைத்த அணிகலன்கள் பல.
- வ.உ.சிதம்பரம் பிள்ளை தற்சரிதம் (சுயசரிதம்)
- திருக்குறள் மணக்குடவர் உரைபதிப்பு
- மனம் போல் வாழ்வு (மொழி பெயர்ப்பு தத்துவ நூல்)
- அகமே புறம் (தத்துவம்)
- மெய்யறம் (ஆன்மீகப்புரட்சி நூல்)
- திருப்பொய்கையார் இன்னிலை (பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. அதன் உரைநூல்)
- தொல்காப்பியம் இளம்பூரணர் உரைபதிப்பு
- வலிமைக்கு மார்க்கம் (மொழிபெயர்ப்பு நூல்)
- சாந்திக்கு மார்க்கம் (தத்துவம்)
- சிவஞானபோத உரை (சைவ சித்தாந்த உரை நூல்)
- மெய்யறிவு (அற நூல்)
வாழ்ந்த வள்ளுவனையே ஏற்காத காரணத்தால் மறக்கடிக்கப் படுகிறாரோ? இல்லை மழுங்கிப் போகத் தொடங்கிவிட்டானோ தமிழன்..........
(கடவுள் வாழ்த்தில் தொடங்கி முதல் நான்கு அதிகாரங்களை வள்ளுவர் எழுதியிருக்க வாய்ப்பில்லை. இது ஏதோ இடைச் செருகல் என்று முதன்முதலில் சொன்னவர் வ.உ.சி. )
Friday, August 27, 2010
மறைந்த போன தமிழ் நூல்கள்.......
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தமென்றாலும் வேண்டேன்
உதிப்பித்த பன்னூல் உளிர அடியேன்
பதிப்பிக்கவே கடைக்கண் பார்
விருந்தமிழ்தமென்றாலும் வேண்டேன்
உதிப்பித்த பன்னூல் உளிர அடியேன்
பதிப்பிக்கவே கடைக்கண் பார்
தமிழ் தாத்தா உ.வே. சா அவர்களின் நினைவு நாள் நாளை ஆகஸ்ட் 28.. அவர்தம் பெரும்பணியை நினைவுகூறாமல் இருக்கமுடியாது. அனலாலும் புனலாலும் அயலார் படையெடுப்பாலும், சமயச் சண்டைகளாலும், கரையான் அரிப்பாலும் அழிந்து போக இருந்த பல புத்தகங்களை தொகுத்து வழங்கியவர். தன் வாழ்நாளின் பெரும்பணியாக இதைச் செய்து முடித்தார்.
மயிலை சீனி வெங்கடசாமி அவர்கள் தொகுத்து எழுதிய மறைந்து போன தமிழ் நூல்கள் என்ற புத்தகத்தை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு புத்தகம் இருந்தது என்பதை நமக்குச் சொல்வது உரையாசிரியர்கள் கொடுக்கும் மேற்கோள்களே. அதன் படி கீழ் குறிப்பிட்ட நூல்கள் மறைந்து போய்விட்டன என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.
தனக்கு குழந்தை இல்லாத மயிலை. சீனி வெங்கடசாமி அவர்கள் இரண்டு குழுந்தைகளை தத்தெடுத்து தன் வீட்டில் வளர்த்து வந்தார். எதிர்பாராதவிதமாக அக்குழந்தைகளும் இறந்து போயினர். நம் வீட்டு குழந்தைகள் போல் தமிழ் அன்னையின் எத்தனையோ குழந்தைகள் மறைந்து போயிருப்பார்கள். தொலைந்து போன தமிழன்னையின் குழுந்தைகளை மீட்டெடுப்பது ஒருபுறமாயினும், தொலைந்து போன குழுந்தைகளின் கணக்கையாவது எடுப்போமே என்ற முயற்சியில் இதை எழுதி வெளியிட்டுருக்கின்றார்.
பதிப்பாசிரியர் ச. மெய்யப்பன் அவர்களின் “மெய்யப்பன் தமிழாய்வகத்தின் “ மூலம் வெளியிடப்பட்ட இந்த நூல் அறிஞர் மயிலை. சீனி. வெங்கடசாமி அவர்களால் தொகுக்கப் பட்டிருக்கிறது. தமிழார்வளர்கள் அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டியது.
எந்தெந்த உரையாசிர்களினால் எந்தெந்த இடங்களில் இந்த மறைந்து போன புத்தகங்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன என்பதை மிக அழகாக பாடல்களோடு கொடுத்துள்ளார்.
மனிதன் காணாமல் போனால் காவல் நிலையத்தில் கண்டுபிடித்துக் கொடுப்பது போல காணாமல் போன இலக்கியங்களை கண்டுபிடித்துக் கொடுக்க ஒவ்வொரு நாட்டிலும் ஏதாவது ஒரு அமைப்பு இருக்கிறதா? என்ற கேள்வில் தொடங்குகிறது ஊ. ஜெயராமன் (கொற்றன்கனை) அவர்களின் தொடக்கவுரை.
மறைந்த போன நூல்களின் பட்டியல்.
இலக்கிய நூல்கள் நூல் ஆசிரியர்
1. அகத்திணை ஆசிரியர் பெயர் இல்லை
2. அசதி கோவை இடைக்கால ஒவையார்
3 அண்ணாமலைக் கோவை கமலை ஞானப் பிரகாசர்
4 அரையர் கோவை நூலாசிரியர் பெயர் இல்லை
5 அறம் வளர்த்த முதலியார் கலம்பகம் பிற்காலப் பாண்டியர் ஒருவர்
6 இராமீசுரக் கோவை கயாதரர்
7 இன்னிசை மாலை நூலாசிரியர் பெயர் இல்லை
8 கச்சிக் கலம்பகம் தத்துவப் பிரகாச ஞானப்பிரகாசர்
9 கண்டனலங்காரம் நூலாசிரியர் பெயர் இல்லை
10 காரி கோவை காரி நாயனார்
11 காரைக் குறவஞ்சி காரைத்தீவு சுப்பையர்
12 கிளவித் தெளிவு நூலாசிரியர் பெயர் இல்லை
13 கிளவி மாலை நூலாசிரியர் பெயர் இல்லை
14 கிளவி விளக்கம் நூலாசிரியர் பெயர் இல்லை
15 குண நாற்பது நூலாசிரியர் பெயர் இல்லை
16 குமாரசேனாசிரியர் கோவை குமாரசேனாசிரியர்
17 கோயிலந்தாதி நூலாசிரியர் பெயர் இல்லை
18 சிற்றெட்டகம் நூலாசிரியர் பெயர் இல்லை
19 தமிழ் முத்தரையர் கோவை நூலாசிரியர் பெயர் இல்லை
20 திருவதிகைக் கலம்பகம் உத்தண்ட வேலாயுத பாரதி
21 திருமறைக்காட்டந்தாதி சேரமான் பெருமான்
22 தில்லையந்தாதி நூலாசிரியர் பெயர் இல்லை
23 நந்திக் கோவை நூலாசிரியர் பெயர் இல்லை
24 நறையூரந்தாதி நூலாசிரியர் பெயர் இல்லை
25 நாலாயிரக் கோவை ஒட்டக் கூத்தன்
26 பல்வசந்த மாலை நூலாசிரியர் பெயர் இல்லை
27 பொருளியல் நூலாசிரியர் பெயர் இல்லை
28 மழவை எழுபது நூலாசிரியர் பெயர் இல்லை
29 வங்கர் கோவை நூலாசிரியர் பெயர் இல்லை
30 வச்சத் தொள்ளாயிரம் நூலாசிரியர் பெயர் இல்லை
31 வல்லையந்தாதி குறட்டி வரதையன்
இந்த நூல்களிலிருந்து நமக்குக் கிடைத்த ஓரிரு பாடல்களையும் ஆசிரியர் வெளியிட்டுள்ளார். பல நூல்களில் ஆசிரியர் வரலாறோ யார் மீது பாடப்பட்டதென்றோ தெரியாமலும் இருக்கின்றது.
புறப்பொருள்
1. ஆசிரிய மாலை நூலாசிரியர் பெயர் இல்லை
2 தகடூர் யாத்திரை அரிசில்கிழார், பொன்முடியார் முதலியொர்
3 பெரும்பொருள் வுளக்கம் நூலாசிரியர் பெயர் இல்லை
4 கூடல சங்கமத்துப் பரணி நூலாசிரியர் பெயர் இல்லை
5 கொப்பத்துப் பரணி நூலாசிரியர் பெயர் இல்லை
6 தென்றமிழ் தெய்வப் பரணி ஒட்டக்கூத்தர்
7 வேறு பரணி நூல்கள் நூலாசிரியர் பெயர் இல்லை
8 வீரமாலை புலவர் பாண்டி கவிராசர்
9 பேர்வஞ்சி மறச் சக்கரவர்த்திப் பிள்ளை
காவியங்கள்
1 பழைய இராமாயணம் நூலாசிரியர் பெயர் இல்லை
2 ஜைன இராமாயணம் நூலாசிரியர் பெயர் இல்லை
3 சங்க காலத்துப் பாரதம் நூலாசிரியர் பெயர் இல்லை
4 பெருந்தேவனார் பாரதம் பாரதம் பாடிய பெருந்தேவனார்
5 வத்சராசன் பாரதம் வத்சராசன்
6 குண்டலகேசி நாதகுத்தனார்
7 வளையாபதி நூலாசிரியர் பெயர் இல்லை
8 புராண சாகரம் நூலாசிரியர் பெயர் இல்லை
9 விம்பசாரக் கதை நூலாசிரியர் பெயர் இல்லை
இலக்கிய நூல்கள்
1. அந்தாதி மாலை சேந்தன்
2 அமிர்த பதி நூலாசிரியர் பெயர் இல்லை
3 அந்தாதிக் கலம்பகம் அகோர முனிவர்
4 அளவை நூல் நூலாசிரியர் பெயர் இல்லை
5 அவினந்த மாலை, அரசசட்டம், வருத்தமானம் நூலாசிரியர் பெயர் இல்லை
6 அறிவுடை நம்பியார் சிந்தம் நூலாசிரியர் பெயர் இல்லை
7 ஆயிரப்பாடல் கமலை ஞானப் பிரகாசர்
8 ஆரியப் படலம் நூலாசிரியர் பெயர் இல்லை
9 இசையாயிரம் நூலாசிரியர் பெயர் இல்லை
10 இராசராச வுஜயம் நாராயண பட்டாதித்யன்
11 இராமயண வெண்பா நூலாசிரியர் பெயர் இல்லை
12 இரும்பல் காஞ்சி நூலாசிரியர் பெயர் இல்லை
13 இளந்திரையம் நூலாசிரியர் தகவல் இல்லை
14 இறைவானறையூர்ப் புராணம் திருமலை நாயினார் சந்திரசேகரர்
15 ஓவிய நூல் நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
16 கன்னிவன புராணம் பரசமயக் கோளரி மாமுனி
17 அஷ்டதச புராணம் பரசமயக் கோளரி மாமுனி
18 கலைக் கோட்டுத் தண்டு கலைக்கோட்டு தண்டம்
19 காங்கேயன் பிள்ளைக் கவி பெரியான் ஆதிச்ச தேவன்
20 காசியத்திரை விளக்கம் யாழ்ப்பாணம் மயில்வாகனப் புலவர்
21 கிளி விருத்தம், எலி விருத்தம் நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
22 கோட்டீச்சுர உலா கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர்
23 குலோத்துங்கச் சோழ சரிதை நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
24 கோலநற்குழல் பதிகம் நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
25 சதகண்ட சரிதம் நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
26 சாதவாகனம் நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
27 சாந்தி புராணம் நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
28 சித்தாந்தத் தொகை நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
29 சூத்ரக சரிதம் சிற்பக் கலைஞர் லலிதாலயர்
30 செஞ்சிக் கலம்பகம் நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
31 சேயூர் முருகன் உலா கவிராசர்
32 தசவிடு தூது திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
33 தண்டகாரணிய மகிமை நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
34 தன்னை யமகவந்தாதி யாழ்ப்பாணம் காரைத்தீவு முருகேசையர்
35 திருக்காப்பலூர் குமரன் உலா திருக்காமி அவதானியார்
36 திருப்பட்டீசுவரப் புராணம் இரேவண சித்தர்
37 திருப்பதிகம் நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
38 திருப்பாலைப் பந்தல் காளிங்கராயர் உண்ணாமலை நாயினார்
39 திருமேற்றளி புராணம் இரேவணசித்தர்
40 திருவலஞ்சுழி புராணம் இரேவணசித்தர்
41 திரையக் காணம் நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
42 துரியோதன கலம்பகம் நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
43 தேசிக மாலை நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
44 நல்லைநாயக நான்மணிமாலை காரைத்தீவு சுப்பையர்
45 நாடத சரிதை நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
46 பரமத திமிரபானு மறைஞான சம்பந்தர்
47 பரிப்பெருமாள் காமநூல் நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
48 பரிபாடை நூ லாசிரியர் பற்றிய தகவல் இல்லை
49 பிங்கல சரிதை நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
50 வாமன சரிதை நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
51 பிங்கலகேசி நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
52 அஞ்சனகேசி நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
53 காலகேசி நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
54 தத்துவதரிசனம் நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
55 புட்கரனார் மந்திரநூல் நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
56 மஞ்சரிப்பா ஞானப் பிரகாசர்
57 மல்லிநாதர் புராணம் நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
58 மாடலம் மாடலனார்
59 மார்க்கண்டேயனார் காஞ்சி நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
60 மாறவர்மன் பிள்ளைத்தமிழ் நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
61 முப்பேட்டுச் செய்யுள் நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
62 மூவடி முப்பது நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
63 வாசுதேவனார் சிந்தம் நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
64 வீரணுக்க விசயம் பூங்கோயில் நம்பி
இசைத் தமிழ் நூல்கள்
1 இசைத்தமிழ்ச் செய்யுட்டுறைக் கோவை நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
2 இசை நுணுக்கம் சிகண்டி முனிவர்
3 இந்திரகாளியம் பாரசவ முனிவர் மாமளேந்திரர்
4 குலோத்துங்கன் இசை நூல் குலோத்துங்கச் சோழன்
5 சிற்றிசை நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
6 பேரிசை நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
7 பஞ்ச பாரதீயம் நாரதர்
8 பஞ்ச மரபு அறிவனார்
9 பதினாறு படலம் நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
10 பெருநாரை/பெருங்குருகு நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
11 வாய்ப்பியம் வாய்ப்பியனார்
நாடகத்தமிழ் நூல்கள்
1 அகத்தியம் அகத்தியமுனிவர்
2 இரச ராசேசுவர நாடகம் திருவாலன் திருமுதுகுன்றன்
3 காரைக் குறவஞ்சி காரைத்தீவு சுப்பையர்
4 குணநூல் நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
5 குருஷேத்திர நாடகம் காரைத்தீவு முருகேசையர்
6 கூத்தநூல் நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
7 சந்தம் நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
8 சயந்தம் நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
9 செயன்முறை நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
10 செயிற்றியம் செயிற்றினார்
11 சோமகேசரி நாடகம் மாப்பாண முதலியார்
12 ஞானாலங்கார நாடகம் யாழ்பணத்து மாதகல் மயில்வாகனப் புலவர்
13 திருநாடகம் நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
14 நூல் நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
15 பாரதசேனாபதீயம் ஆதிவாயிலார்
16 பரிமளகா நாடகம் மாப்பாண முதலியார்
17 மதிவாணர் நாடக்த்தமிழ் நூல் பாண்டியன் மதிவாணன்
18 முறுவல் நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
19 பூம்புலியூர் நாடகம் பரசமயக் கோளரி மாமுனி
20 கடகண்டு நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
21 வஞ்சிப்பாட்டு நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
22 மோதிரப் பாட்டு நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
23 விளக்கத்தார் கூத்து விளக்கத்தார்
இலக்கண நூல்
1 அகத்தியம் அகத்தியர்
2 அகத்தியர் பாட்டியல் அகத்தியம்
3 அணியியல் நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
4 அவிநயம் அவிநயனார்
5 அவிநய உரை இராச பவித்திர பல்லவ தரையன்
6 இன்மணியாரம் நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
7 நாலடி நாற்பது என்னும் அவிநயப்புறனடை நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
8 கடிய நன்னியார் கைக்கிளைச் சூத்திரம் கடிய நன்னியார்
9 கவிமயக்கறை நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
10 காக்கைப் பாடினியம் காக்கைப் பாடினியார்
11 குறுவேட்டுவச் செய்யுள் நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
12 லோகவிலாசினி நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
13 பெருவளநல்லூப் பாசாண்டம் நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
14 கையனார் யாப்பியல் கையனார்
15 சங்கயாப்பு சங்கயாப்புடையார்
16 சிறு காக்கைப் பாடினியம் சிறு காக்கைப் பாடினியார்
17 செய்யுளியல் நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
18 செய்யுள் வதுமை நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
19 தக்காணீயம் நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
20 தத்தாதிரேயப் பாட்டியல் நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
21 நக்கீரன் அடிநூல் நக்கீரர்
22 நக்கீரர் நாலடிநானூறு நக்கீரர்
23 நத்தத்தனார் இயற்றிய நத்தத்தம் நத்தத்தனார்
24 நல்லாறன் மொழிவரி நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
25 பரிப்பெருமாள் இலக்கணநூல் பரிப்பெருமாள்
26 பர்மாணனார் யாப்பிலக்கணம் பரிமாணனார்
27 பல்காப்பியம் பல்காப்பியனார்
28 பல்காப்பிய புறனடை நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
29 பல்காயம் பல்காயனார்
30 பனம்பாரம் பனம்பாரனார்
31 பன்னிருபடலம் தொல்காப்பியர் முதலிய பன்னிருவர்
32 பாடலம் பாடலனார்
33 பாட்டியல் மரபு நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
34 புணர்ப்பாவை நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
35 போக்கியம் நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
36 கிரணியம் நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
37 வது விச்சை நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
38 பெரிய பம்மம் நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
39 பெரிய முப்பழம் நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
40 பேராசிரியர் மயேச்சுவரர் இலக்கண நூல் மயேச்சுவரர்
41 மாபுராணம் நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
42 பூதபுராணம் நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
43 முள்ளியார் கவித்தொகை முள்ளியார்
44 யாப்பியல் நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
45 வாருணப் பாட்டியல் நூலாசிரியர் பற்றிய தகவல் இல்லை
மயிலை சீனி வெங்கடசாமி அவர்கள் இதைத் தொகுக்கும் போது, மேற்ச்சொன்ன புத்தகங்கள் இருந்திருக்கவேண்டும் என்பதை ஆதாரங்களோடு வெளியிட்டிருக்கிறார். எந்தப் புத்தகத்தைப் பற்றி எந்த பாடலில்,அல்லது எந்த புத்தகத்தில் இருக்கின்றது என்ற எடுத்துக்காட்டுகளோடு எழுதியிருக்கின்றார்.
மேற்சொன்ன புத்தகங்களில் சில முழுமையாக கிடைக்காமல் சில பாடல்கள் மட்டும் கிடைத்திருந்தாலும் அவற்றையும் மறைந்து போன தமிழ்நூல்கள் வரிசையில் சேர்த்துள்ளார்.
அவரின் அரும்பணியை நினைவு கூர்வோம்..........மேற்சொன்ன நூல்கள், இதில் இடம்பெறாத நூல்கள் அல்லது நூல்கள் பற்றிய தகவல்கள் நம்மிடம் யாரிடமாவது இருக்குமாயின் அதை புதுப்பிக்கவும் முயற்சி செய்யலாம். அதற்கான பணியைச் செய்ய ஆர்வமாக இருக்கின்றேன்.
அன்புடன்
ஆரூரன்.
Labels:
படித்ததில் பிடித்தது
,
மொழி
Wednesday, August 25, 2010
இலக்கிதம்.......
இலக்கியம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாதவர்கள் இத் தமிழ்கூறும் நல்லுலகில் இல்லையென்றே சொல்லாம். ஆனால் இலக்கியம் என்ற வார்த்தை தொல்காப்பியர் பயன்படுத்தவில்லை. வள்ளுவன் அறிந்திருக்க வில்லை. இளங்கோவும் கம்பனும் பயன்படுத்தியிருக்கவில்லை.
மணிவாசகர் தன் திருவாசகத்தில் முதல்முறையாக இலக்கிதம் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்..
இலக்கு-இலக்கியம், இலக்கு-இலக்கணம், இலக்கு-குறி: குறிக்கோள். சிறந்த வாழ்க்கைக் குறிக்கோளான அறத்தை எடுத்துக் காட்டுவது இலக்கியம். சிறந்த மொழிக்கூறிகளான அமைப்பை எடுத்துக் கூறுவது " இலக்கணம்"
செய்யுள் என்ற பெயராலே தொல்காப்பியனார் இலக்கியத்தைக் குறிப்பிடுகின்றார். நூல் என்ற பெயராலே இலக்கியம் குறிப்பிடப்பட்டிருந்தது வள்ளுவன் காலத்தில்.
ஆங்கிலத்தில் இலக்கியம் என்னும் பொருள் பயக்கும் literature எனும் சொல் கி.பி.1812ல் தான் பயன்பாட்டிற்கு வந்ததாக ஆக்ஸ்போர்டு அகராதி தெரிவிக்கிறது.
கவின்மிகு சொற்களைக் கொண்டு கற்பனை நயத்தோடு கலையழகும் புலப்படுமாறு படைக்கப் படுபவை எல்லாம் "இலக்கியம்" எனப் போற்றத்தக்கன என்றும் இலக்கியத்தை விளக்கலாம். என்பது தமிழறிஞர்கள் கூற்று.
வில்லியம் வோர்ட்ஸ்வர்த் கற்பனையை இருகூறாக்கி இரண்டு பெயர்களை தந்துள்ளார்.
ஆக்கக் கற்பனை
பொருளைக் கண்டதும் அதன் புறத்தோற்றம் முதலியவற்றில் ஈடுபடாமல் அதன் அகத்தை ஊடுருவி நோக்கியும் உட்கருத்தை அறிந்தும் அவற்றின் பயனாகத் தோன்றுவது அந்தக் கற்பனை.
நினைவுக் கற்பனை:
இதில் ஆக்க வேலை ஒன்றும் இல்லை. அதற்கு மாறாக நமது நினைவைத் தட்டி எழுப்புகிறது. நாம் என்றும் கான்கிற பொருளையே நினைவு படுத்துகிறது. ஆனால் படித்தவுடன் அப்பொருள்களின் நினைவு அதுவரை நாம் அனுபவியாத ஒரு புதிய ஆற்றலோடு மனதில் தோன்றுகிறது.
இதுதான் இலக்கியம் என்பதை விட என்னால் ரசிக்கும் படியாக எழுதப்படுவதெல்லாம் என்னைப் பொருத்தவரையில் இலக்கியம் என்ற அளவிலேயே என் புரிதல்......
எனைக் கவர்ந்த சில இலக்கிய வரிகளை பகிர்ந்துள்ள ஆசைப்படுகின்றேன்.
நீரிடை உறங்கும் சங்கம், நிழலிடை உறங்கும் மேதி
தாரிடை உறங்கும் தண்டு தாமரை உறங்கும் செய்யாள்
-கம்ப இராமாயணம்.
பஞ்சி ஒளிர் விஞ்சுகுளிர்
பல்லவம் அணுங்கச்
செஞ்செவிய கஞ்சம்நிமிர்
சீறடியாள் ஆகி
அஞ்சொலிள மஞ்ஞையென
அன்ன மென மின்னும்
வஞ்சியென நஞ்செமென
வஞ்ச மகள் வந்தாள்
சூர்ப்பணகை குறித்து கம்பன்........
"கொய்த மலரை கொடுங்கையிலணைத்து
மொய்குழலில் சூட்டுவான் முன் வந்து தையலாள்
பாதாரவிந்தத்தே சூட்டினான்: பாவை இடைக்கு
ஆதாரமிண்மையறிந்து"
-புகழேந்தி புலவர்.
தண்டு லாவிய தாமரைப் பொய்கையில்
மொண்டு நீரை முததருகேந்தினாள்
கெண்டை கெண்டையெனக் கரையேறினாள்
கெண்டை காண்கிலள் நின்று தயங்கினாள்.
தன்னிளவு அவள் முகமோ
தாரகைகள் நகையோ
விண்ணீளம் கார்குலழோ
மேவும் எழிலெல்லாம் மெல்லியின் வாய்க் கள்வெறியோ
-பாரதிதாசன.
்
பெருந்திணை பற்றி பாரதிதாசன்
இளமை ததும்ப
எழிலும் ததும்ப
காதல் ததும்ப
கண்ணீர் ததும்பி...........
என் மகள் கிழவனுடன் போனாள்.....
தொல்காப்பியர் சொல்வதுபோன்றும் இன்னும் பலர் சொல்வது போன்றும் அமைவது தான் இலக்கியம் என்றால் இன்றைய உலகில் பல நவீன இலக்கிய வியாதிகள் ஒழிந்து போயிருக்கும் என்பதே உண்மை....
முதல் போடுபவன் முதலாளி அல்ல முதலை ஆள்பவன் முதலாளி
எழுதுபவன் எழுத்தன் எழுத்தை ஆள்பவன் எழுத்தாளன்.
Labels:
இலக்கியம்
,
நிகழ்வு
,
படித்ததில் பிடித்தது
Monday, August 16, 2010
கடலை, பொரி....
காவடிச்சிந்து என்ற பெயரால் புகழ் பெற்ற சிந்து பாடல்களைப் பாடியவர் சென்னிகுளம் அண்ணாமலைக் கவிராயர். இது குறித்த என் முந்தைய பதிவு.
http://arurs.blogspot.com/2010/01/blog-post_12.htmlபல கும்மிப் பாடல்களும் காவடிச் சிந்து நடையில் எழுதப் பட்டதையும் இங்கே காணலாம்
http://arurs.blogspot.com/2010/01/blog-post_07.html
மகாகவி பாரதியும் பல பாடல்களை காவடிச் சிந்துவில் எழுதியிருப்பினும் முதல் பாடலாக நினைப்பதும், அவர் மிக இளவயதில் பாடியதாக் கூறப்படுவதுமான பாடல்.
“பச்சைத் திருமயில் வீரன்
அலங் காரன் கொளமாரன் -ஒளிர்
பன்னிரு திண்புயப் பாரன் - அடி
பணி சுப்பிரமணியற் கருள்
அணிமிக்குயர் தமிழைத் தரு
பக்தர்க் கெளிய சிங்காரன் - எழில்
பண்ணு மருணாச்சலத் தூரன்”
அண்ணாமலை ரெட்டியார் தனது 26ஆவது அகவையில் 1891 ஆம் ஆண்டு காசநோயினால் மறைந்தார். அப்போது மகாகவிக்கு வயது சுமார் 9 இருந்திருக்க வேண்டும். அண்ணாமலை கவிராயரின் பாதிப்பு பாரதியிடமும் இருந்தது குறிப்பிடத் தகுந்தது.
அதேபோல் துணைவியார் செல்லம்மாவைப் பார்த்து பாடியதான இந்தப் பாட்டும்
”தேடக் கிடைக்காத சொன்னமே-உயிர்
சித்திரமே! மட அன்னமே! - அரோ
சிக்குது பால் தயிர் அன்னமே!-மாரன்
சிலைமேல் கணை கொலை வேலென
விரிமார்பினில் நடுவே துளை
செய்வது கண்டிலை இன்னமே-என்ன
செய்தேனோ நான் பழி முன்னமே
கன்னத்தினில் குயில் சத்தமே- கேட்கக்
கன்றுது பார் என் சித்தமே- மயக்
கஞ் செய்யுது காமப்பித்தமே-உடல்
கனலேறிய மெழுகாயினது
இனியாகிலும் அடிபாதகி
கட்டியணைத்தொரு முத்தமே-தந்தால்
கைதொழுவேன் உனை நித்தமே”
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = == = = = == = = = = = = = = = = = =
திருமணம் ஆகாத நண்பர்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் என்ற குறுஞ்செய்தி எனக்கு திருமணமான நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார்.
”கல்யாணம் ஆகாதவனுக்கு ஒரு கவலைன்னா, ஆனவனுக்கு ஆயிரம் கவலை”. பல நேரங்களில் திருமணமான நண்பர்கள், திருமணமாகாத நண்பர்களைப் பார்த்து டேய்...நானே மாட்டிகிட்டு முழிக்கிறேன்......என்று சிலாகிப்பதைப் பார்க்கமுடிகிறது........
மகாகவி என்ன சொல்கிறார்...............
“வசிட்டனுக்கு இராமற்கும் பின்னொரு
வள்ளுவர்க்கு முன் வாய்த்திட்ட மாதர்போல்
பசித்தோராயிர மாண்டுதவஞ் செய்து
பார்க்கினும் பெறல் சால வரிது காண்,
புசிப்ப தும்பரினல் அமுதென்றெணிப்
புலையர் விற்றிடுங் கள்ளுணலாகுமோ
அசுத்தர் சொல்வது கேட்கலிர், காளையீர்!
ஆண்மை வேண்டின் மணஞ்செய்த லோம்புமின்.
அதுசரிதான்......நாம என்ன வசிட்டனா? இராமனா? வள்ளுவனா?
ஆனாலும் ஒன்னைச் சொல்லித்தான் ஆகோனுங்க.........
நம்ம தங்கமணிக்கு ஈடாவாங்களா இவங்கெல்லாம்........நம்மையே வச்சி குடும்பம் நடத்தறாங்கல்லோ......... என் தங்கமணி வாழ்க.......
என்னவேணா பேசலாங்கண்ணு.....ரவைக்கு வூட்டுக்குப் போகணுமில்ல.....அதான்!!!!!!
Labels:
கடலை
,
பொரி.... காவடி சிந்து
Subscribe to:
Posts
(
Atom
)