Thursday, August 05, 2010

செவலைத்தாய்..........



ஒரு பனி படர்ந்த காலைப் பொழுது!

‘குள்ளி கன்னுப் போட்டிருச்சு’
அம்மாவின் குரல் கேட்டு
போர்வைக்குள்ளிருந்து
சிட்டாய்ப் பறந்தேன் கட்டுத்தறிக்கு!

அங்கே...வாஞ்சையோடு கன்றை
        நீவியபடி....... குள்ளி.!

கொம்பு முதற்கொண்டு, குள்ள உருவமென்பதால்
“குள்ளி” அதற்கு காரணப் பெயராயிற்று.!

அன்றிலிருந்து குள்ளிக்கு
என்னையும் சேர்த்து இரண்டு கன்றுகள்!

பசியெடுத்தால் அதன் மடியில் அமுதுண்பேன்!
குஷி வந்தால் அதன்மேல்தான் சவாரியும்.!

யார் குள்ளியின் செல்லம்?
எனக்கும், அண்ணனுக்கும் போட்டி
ஒரு நாள் தீர்மானமாயிற்று.....நான் தானென்று!

நண்பர்கள் அண்ணனை அடிப்பது போல்
பாவனை செய்வர்-அப்போது
மவுனம் காக்கும் -குள்ளி!

என்னைத் தொடும்போது-துடித்துப் போகும்!
அலறிக் கத்தும்.....கொம்பில் குத்த வரும்.!

குள்ளிக்குக் குத்தத் தெரியுமா?
அதற்கு கோபம் கூட வருமா?
அந்தக் கணம் அதிசயத்துப் போனேன்.!

அம்மா சுட்டுத்தரும் ராகி ரொட்டி
எங்களைவிட குள்ளிக்குத்தான்....
அதிகம் போய்ச்சேரும்!

இருள் பிரியாத காலையிலேயே....
பனைமரத்தடிக்கு ஓடுவோம்!

மரமேறிகள் செதுக்கிப் போடும்
நொங்கு சள்ளியை சேகரிக்க-அது
எங்கள் குள்ளிக்கு ரொம்பப் பிடிக்கும்.!

விடுமுறை நாட்களில்
எங்களுக்கு காலைப் பொழுது விடிவதும்
மாலை மயங்குவதும் குள்ளியோடுதான்.

வாயற்ற அந்த செவலைத்தாயின்
பாசப்பிணைப்பில் பின்னிக்கிடந்த
அந்த அமுத பொழுதுகளில்....
ஒருநாள் விஷக் காற்று வீசிவிட்டது.....

ஆம்...தேவைகளின் தேடலுக்காய்-நாங்கள்
புலம் பெயர்ந்த போது-குள்ளியை
விற்றுவிடத் தீர்மாணித்தார் அப்பா!

உணர்வு லயிப்பில், ஒரே சுருதியில்
குள்ளியும் நானும் இருந்த காலம்.....

அப்போது அடம்பிடித்து அழுத எனக்கு
அப்பா சமதானம் சொன்னார்...

“குள்ளி வீசகன்னு போட்டிருச்சு...
 வீட்டுக் ஆகாதென்று”   

குள்ளியும் சேர்ந்தது தானே நம் குடும்பம்?
என்ற கேள்வி மனதுக்குள்ளேயே அமுங்கிப் போனது

இப்போது...எங்கிருக்கிறாய் குள்ளி

வயதாகிப் போனதால்
“மேற்கே” லாரியில் ஏற்றப் பட்டிருப்பாயோ?
இதை நினைக்கும்போதெல்லாம்
உள்ளுக்குள் சிதறிப்போகின்றேன்.

குள்ளி..உள்ளம் குளிர உறவாடிய-செவிலியே
உனக்குத் தெரியுமா?

ஒவ்வொரு மாட்டுப் பொங்கலின் போதும்
நான்....பொங்கலிடுவது பானையில் அல்ல
கண்களில் என்று!

உன்னை இப்போதும் தேடிக் கொண்டிருக்கின்றேன்
என் வீட்டுப் பசுக்கள் ஈனும் போதெல்லாம்....

நன்றி:-
 முனைவர். சா. சிவமணி
 தமிழ் விரிவுரையாளர்
 சி.நா. கல்லூரி, ஈரோடு.

11 comments :

பழமைபேசி said...

ஏன்? ஏன்?? தாயகம் வந்திருக்கும் இவ்வேளையில், தொலைந்து போனதுகளின் மத்தியில், வெந்த புண்ணில் வேல் எதற்கு??

அவ்வ்வ்வ்......

புலவன் புலிகேசி said...

மிக அருமை....

vasu balaji said...

கண் நிறைஞ்சு, மனசு கனத்துப் போச்சு.

க.பாலாசி said...

பழைய நினைவுகளைத் தூண்டி உணர்வினை கிள்ளிப்பார்க்கிறது கவிதை...

நல்ல பகிர்வு...

பவள சங்கரி said...

உண்மையிலேயே மனதை நெகிழ வைத்த கவிதை. வாழ்த்துக்கள் ஆரூரன்.

கண்ணகி said...

உணர்வுகள் அழகாக எழுத்தில் வருகிறது...

கலகலப்ரியா said...

அருமை...

தெய்வசுகந்தி said...

மலரும் நினைவுகள் !!!!!!!!!!!

அன்பரசன் said...

நம்ம ஊரு பக்கம் போக வச்சிட்டீங்களே அண்ணே...
சூப்பர்

Radhakrishnan said...

அருமை, பகிர்ந்தமைக்கு நன்றி.

தாராபுரத்தான் said...

மறக்க முடிவதில்லை.. எங்க வீட்டிலும் ஒரு குள்ளி..