Friday, August 06, 2010

சீட்டுக் கவி

சீட்டுக்கவி என்பது தமிழ் மொழியில் உள்ள தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களில் ஒன்றாகும். இன்ன இன்ன தகுதிகளையும், திறமைகளையும், பட்டங்களையும் கொண்டிருக்கும் நான்,  இன்ன இன்ன தகுதிகளையும் இன்ன இன்ன திறமைகளையும் கொண்டு சிறப்புற்றிருக்கும் இன்னாருக்கு எழுதும் சீட்டாவது,  இதில் கண்டுள்ளவற்றை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கோரி ஒரு சீட்டு எழுதுவதாகும்.

பெரும்பாலும் கவிஞர்கள், புலவர்கள் மன்னர்களுக்கு பொருள் பெற வேண்டி, எழுதுவதாகவே அமையும்.

சீட்டுக்கவியின் மூல முதலாய் கருதப்படுவது திருமுகப் பாசுரம்.  பாணபத்திரருக்கு தேவையான பொருளுதவி செய்யுமாறு (அதாங்க திருவிளையாடல் படத்தில வருவாரே...அவருதான்) சேரமான் பெருமானுக்கு, ஆலவாய்ச்சிவன் எழுதியதாகப் குறிப்பிடப்பட்டு, பன்னிரு திருமுறைகளில், பதினோராம் திருமுறையின் முதல் பாடலாக சேர்க்கப்பட்டுள்ளது.

அந்தப் பாடல்:

மதிமலிபுரிசை மாடக் கூடல்
பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிறகு
அன்னம் பயில்பொழில் ஆல வாயில்
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்:

பருவக் கொண்மூப் படிஎனப் பாவலர்க்கு
உரிமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா உகைக்கும் சேரலன் காண்க!

பண்பால் யாழ்பயில் பாண பத்திரன்
தன்போல் என்பான் அன்பன்; தன்பால்
காண்பது கருதிப் போந்தனன்
மாண்பொருள் கொடுத்து வரவிடுப்பதுவே

                               -ஆலவாய்ச்சிவன்

இன்ன பிற சீட்டுக்கவிகள்:


ஸ்ரீ எட்டயபுரம் ராஜராஜ ராஜேந்த்ர மகாராஜ வெங்கடேசு ரெட்டப்ப பூபதி அவர்கள் சமூகத்திற்கு கவிராஜ ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி எழுதும் சீட்டுக்கவிகள்

    பாரிவாழ்ந்திருந்த சீர்த்திப் பழந்தமிழ் நாட்டின்கண்ணே
    ஆரிய! நீயிந் நாளில் அரசு வீற்றிருக்கின்றாயால்
    காரியங்கருதி நின்னைக் கவிஞர்தாங் காணவேண்டின்
    நேரிலப் போதே யெய்தி வழிபட நினைகி லாயோ?

    விண்ணள வுயர்ந்த வெங்கடேசு ரெட்ட மன்னா!
    பண்ணள வுயர்ந்த தென்பண், பாவளவுயர்ந்த தென்பா;
    எண்ணள வுயர்ந்த வெண்ணில் இரும்புகழ் கவிஞர் வந்தால்
    அண்ணலே பரிசு கோடி அளித்திட விரைகிலாயோ?

                                                                               -சுப்பிரமணிய பாரதி
                                                                                        1919-மே-02

நன்றி:http://www.visvacomplex.com/cittu_kavi1.html

காரையூர், நல்லசேனாபதி சர்க்கரை மன்றாடியார் துனைவியார், வள்ளிநாயகி அம்மையாருக்கு எழுதிய சீட்டுக்கவி:
  சிவராத்திரித் தேவையிதெனச் சீட்டுக்கவி:
  திருமருவு பழநிமலை முருகேசர் அரவிந்த
        செங்கமல பாத தியானம்
    திரிகின்ற தண்டுமிண் டுகள்கொண்ட கவிமலை
        செகுத்திடச் செய்வச் சிரம்
    செய்யகார் காலமழை என்னவே மதுரித
        செழுந்தமிழ் கொழிக்கும் மேகம்
    தென்பரவு மங்கைபுர இலட்சுமண பாரதி
        தெளிந்தெழுதி விட்ட நிருபம்,

  தருவுலவு காரையூர் நல்லசே னாபதிச்
         சர்க்கரைமன் றாடி ராசன்
     தனதுமனை யாள்இனிய கற்பினில் அருந்ததி
         சமானசற் குணபூ டணி
     சந்ததி நிரம்பிவளர் சிவமலைப் பல்லவன்
         தந்தசீ மந்த புத்ரி
     தருமமிகு பயிறகுல வள்ளிநா யகியெனும்
         தாய்மனம் மகிழ்ந்து காண்க,

  அருள்பரவு சிவன்உமைக் குத்திருக் கல்யாணம்
         ஆனசுப தினம்நா ளையே
     ஆகையால் மாங்கலிய விரதபூ சனைசெய்ய
         ஆரும்ஆ தரவ றிகிலேன்
     ஐந்துவள் ளப்பச்சை அரிசிபா சிப்பயறு
         அதற்குள்ள மேல்முஸ் திதி
     ஆவின்நெய் வெல்லம் உழுந்துபால் தயிர்வெண்ணெய்
         அரியதயிர் எண்ணு கறிகாய்

 மருவுலவு சந்தனம் குங்குமம் புனுகுசவ்
         வாதுபரி மளமும் உனது
      மருமகட் கோர்புடவை பாக்குவெற் றிலைநல்ல
         வாழையிலை இவையா வுமே
      வாணருக் கார்அனுப் பினதெனக் கேட்பவர்
         மனதுமென் மேலும் மெச்ச
      மன்னர்புகழ் சர்க்கரைத் துரைராசி தந்ததென
         வரவனுப் பிடவேண் டுமே!

                                                                        ~ மடவளாகம்
                                                                            இலக்குமண பாரதி (1767 -1859)

நன்றி:http://nganesan.blogspot.com/2009/07/chittukkavi.html

ஓலைத்தூக்கு:
மன்னர்களைப் பாடிப் பரிசில் வேண்டுமுகமாக ஓலைத்தூக்குகள் அமையும்:

பாரதியின் ஓலைத் தூக்கு(இதுதான் பின்னாடி கூஜா தூக்குறதுன்னு ஆகியிருக்குமோ?)
ராஜமகா ராஜேந்த்ர ராஜகுல
      சேகரன் ஸ்ரீராஜ ராஜன்
தேசமெலாம் புகழ்விளங்கும் இளசைவெங்க
      டேசுரெட்ட சிங்கன் காண்க!
வாசமிகு துழாய்த்  தாரன் கண்ணனடி
      மறவாத மனத்தான் சக்தி
தாசனெனப் புகழ்விளங்கும் சுப்ரமண்ய
      பாரதிதான் சமைத்த தூக்கு!

வியப்புமிகும் புத்திசையில் வியத்தகுமென்
       கவிதையினை வேந்த னே!நின்
நயப்படுசந் நிதிதனிலே நான்பாட
       நீகேட்டு நன்கு போற்றி
ஜயப்பறைகள் சாற்றுவித்துச் சாலுவைகள்
       பொற்பைகள் ஜதிபல் லக்கு
வயப்பரிவா ரங்கள்முதற் பரிசளித்துப்
       பல்லூழி வாழ்க நீயே!



சீட்டுக்கவி எழுதுவது தனக்காகப் பொருள் வேண்டித்தான் எழுத வேண்டும் என்பதில்லை.  பிறருக்காகவோ, பொது காரியங்களுக்கு பணம் பொருள் போன்ற ஏது வேண்டியாகினும் எழுதப்படலாம்.

பாரதிக்குப் பின் வந்த புதுமைப்பித்தனும் சீட்டுக்கவிகள் எழுதியுள்ளார். ஆனால் அவர் எழுதியது எந்த மன்னருக்கும் இல்லை. அவரது நண்பர் ரகுநாதனுக்குத்தான். மன்னருக்குத்தான் எழுத வேண்டுமா என்ன? தனக்கு வேண்டிய பொருளை வாங்கி வரும்படி ரகுநாதனுக்கு கவிதை வடிவில் எழுதினார்.

''அல்வா எனச் சொல்லி
அங்கோடி விட்டாலும்
செல்வா நீ தப்ப
முடியாதே! - அல்வா
விருது நகர்க் கெடியில்
உன்னுடனே கட்டாயம்
வருது எனக் காத்திருப்பேன்
நான்.

சென்னைக்குப் பதினேழில்
சீட்டுக் கொடுத்துவிட்டு
உன்னைப் பிறகங்கே
சந்தித்து - பின்னை
ஊருக்குப் போவேன்
உறுதியாய் வா அங்கே
நேருக்கு மற்றவையப்
போ."


நன்றி:http://ninaivu.blogspot.com/2004/06/2.html


கல்லூரி நாட்களில் என் தந்தைக்கு நானும் ஒரு சீட்டு எழுதியிருக்கின்றேன். அது .

அப்பா,

நலம்,...... நலத்துக்குப் பணம். உடன் அனுப்பவும்.......ஆரூரன்.


நல்ல தமிழ் மொழியில், அழகான சீட்டுக் கவி ஒன்றை தருமாறு அன்புடன் வானம்பாடி யூத் பாலா அவர்களை அழைக்கின்றேன். அவர் விரும்புகின்றவர் இதைத் தொடரலாம்.......

அன்புடன்
ஆரூரன்.


வேண்டுகோள்கள்:


முதலில் தன்னைப் பற்றி (தற்புகழ்ச்சியாக தொடங்க வேண்டும்) பின் வேண்டுபவர் சிறப்பைச் சொல்ல வேண்டும், பின்னர் வேண்டும் பொருள் குறித்தும் விளக்கவேண்டும்.

ஆண்டவனை நோக்கியோ, ஆள்பவனை நோக்கியோ. பதிவுலக நண்பர்களை நோக்கியோ, மறைந்த மூதாதையர்களை நோக்கியோ.........எப்படி வேண்டுமாயினும் இருக்கலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~

16 comments :

vasu balaji said...

சீட்டுக் கவியெழுத
சீண்டி நீர் விட்டாலும்
அப்பா என்னால்
முடியாதே - ஆரூர
ஈரோட்டுக் கதிரெழுதும்
கவிதை எதுவெனினும்
சிமிட்டலில் எழுதுவேன்
நான்.

அகல்விளக்கு said...

சீட்டுக்கவி பற்றி நல்ல அறிமுகம் அண்ணா...

நீங்கள் எழுதிய சிறு சீட்டுக்கவியும் சூப்பர் ரகம்... :-)

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
க.பாலாசி said...

//அப்பா,
நலம்,...... நலத்துக்குப் பணம். உடன் அனுப்பவும்.......ஆரூரன்.//

இது கலக்கலான சீட்டுக்கவி... ஆமா சீட்டுக்கு வெகுமதி கெடச்சுதா இல்லையா?

நல்ல பகிர்வு...

//வானம்பாடிகள் said...
சீட்டுக் கவியெழுத
சீண்டி நீர் விட்டாலும்
அப்பா என்னால்
முடியாதே - ஆரூர
ஈரோட்டுக் கதிரெழுதும்
கவிதை எதுவெனினும்
சிமிட்டலில் எழுதுவேன்
நான்.//

எங்கத்தலைவரு எவ்ளோ ஆசையா கூப்பிடுறாரு... லொல்லப்பாருங்க...

தேவன் மாயம் said...

சீட்டுக்கவிபற்றி அறியத்தந்தமைக்கு நன்றி!

அன்புடன் நான் said...

உங்கள போல நானும் சீட்டு கவி எழுதியிருக்கிறேன்......

அதற்கு சீட்டில பணமுடிப்பு வரும்.(மணியாடர்)

அன்புடன் நான் said...

பகிர்வு... நல்லாயிருக்குங்க.

Radhakrishnan said...

சீட்டுக் கவி எடுத்து பாத்திருவோம்.

இராகவன் நைஜிரியா said...

சீட்டுக் கவி... சுகமான நண்பரைத்தான் அழைத்துள்ளீர்கள்...

சீட்டுக் கவி பற்றி அறியத் தந்ததற்கு மிக்க மகிழ்ச்சி..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

சீட்டுக் கவியைப் பற்றி கலக்கலான அறிமுகம்.

பழைய சீட்டுக் கவிதைகளை விட புதுமைப்பித்தனின் கவிதை அல்வா மாதிரி இனிக்கிறது. அது தான் புதுமைப்பித்தனின் சிறப்பு.

பாலாண்ணனின் கவியும் கலக்கல்.

அடிக்கடி இது போன்ற பதிவுகளைக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கலகலப்ரியா said...

இருங்க இருங்க... அருமையா இருக்கும் போலருக்கே... வந்து படிச்சுக்கறேன்..

ஹேமா said...

சீட்டுக்கவி...புதுசா இருக்கு.

கலகலப்ரியா said...

சூப்பர் மேட்டர் ஆரூர்... :D.. ஐ லைக் இட்...

||(இதுதான் பின்னாடி கூஜா தூக்குறதுன்னு ஆகியிருக்குமோ?)||

நல்லா ஆராய்ச்சி பண்றீங்க...

sakthi said...

அருமை வித்தியாசமான முயற்சி

வால்பையன் said...

//கல்லூரி நாட்களில் என் தந்தைக்கு நானும் ஒரு சீட்டு எழுதியிருக்கின்றேன். அது .

அப்பா,

நலம்,...... நலத்துக்குப் பணம். உடன் அனுப்பவும்.......ஆரூரன்.//


நாமெல்லாம் ஒரே செட்டு!
(ஷேவிங் செட்டான்னு கேட்கக்கூடாது)

meiporul said...

அருமையான கட்டுரை அண்ணா! தொன்மை வாய்ந்த நூல்கள் குறித்து உணர்ந்து கொள்ள முடியும்