எங்கணும் இலஞ்சப் பேயாம்
இருளினுள் இருள் சேர்ந்து
தங்கிடும் இந்த நாட்டில்
சராசரி மனிதன் கூட
எங்கனம் சுரண்டி வாழ்ந்தால்
எப்படிப் பணம் கிடைக்கும்
மங்களம் சுவைப்போம் என்றே
மருகியே வாழ்கின்றானே.
அறம்பாடும் கவிஞ ரெல்லாம்
அநீதியர் கால் தலையைத்
திறமாக வைத்துக் கொண்டார்
தேவைக்குப் பதவி பெற்றே
சிறப்பினை விற்றுவிட்டார்
திருடர்கள், மடையர் ஈனர்
பிறர் பொருள் மோசம் செய்வார்
பெரியதோர் பெயரெடுத்தாரே.
பொருட்செல்வம் சமமாய் வேண்டும்
பொழுதெல்லாம் உழைக்கும் மக்கள்
வருநலம் அடைய வேண்டும்
வல்லடி வழக்கு மற்றை
தருதுயர் எல்லாம் இங்கே
தான் மறைந்திடுதல் வேண்டும்
செருவிலா தண்மை வேண்டும்
தீமைகள் அழிய வேண்டும்.
எங்கனும் ஓலம் அந்தொ
எங்கணும் ஏமாற்றுக்கள்
எங்கனும் சூழுந் துன்பம்
எங்கனும் இடர் வெள்ளங்கள்
எங்கனும் சூது சூழ்ச்சி
எங்கனும் வேதனைகள்
எங்கனும் இதுவே நாட்டின்
இயல்பென்றால் நாடா ஈது!
விடுதலை நல்லோருக்கா?
வீணர்க்கா என்ற கேள்வி
நடுநிலை நின்று பார்ப்பார்
நன்கெண்ணிச் சொல்லவேண்டும்
கெடுதலை புரிகின்றார்கள்
கேடெல்லாம் புரிகின்றார்கள்
இருநிலம் ஏய்க்கின்றார்கள்
இதுதானா? விடுதலை
வீதியின் ஓரம் சென்றால்
மேடையில் வாழும் மக்கள்
வாதையின் தன்மை கண்டே
மனந்துடிக்கின்றோம் இந்தத்
தீதினை மாற்றுதற்கோர்
செயல் திட்டம் கண்டோமில்லை
யாதினும் சுயநலங்கள்
நாளெல்லாம் தலை விரிக்கும்
சனநாயகம் இங்கேதான்
தனியாட்சி செய்வதாக
இனிமேலும் சொல்லல் அந்தோ
இயற்கையாய் நகைப்புக் காகும்
சந்தையில் ஆடு கூட்டும்
தண்மைபோல் இந்த நாட்டில்
சொந்த நற்பொருள் படைத்தோர்
தொடர்ந்துழை வர்க்கம் தன்னை
எந்தநாளும்தான் ஏய்ப்பர்
எங்கே சீர் சமத்துவந் தான்?
சுதந்திரம் சிந்தியுங்கள்
சோரத்தின் மறுபெயர்தான்
சுதந்திரம் என்றால், இந்தச்
சுதந்திரம் சுட்டெரித்த
சுதந்திரம் என்ற மற்றோர்
தூய்மையைப் படைக்க வேண்டும்
சுதந்திர நாடா ஈது
தூ! தூ!தூ! வெட்கக் கேடு!
துறைதோறும் துறைதோறும் தன்
சுதந்திரப் பெயரினாலே
பறைசாற்றும் கையூட்டுக்கள்
பணம் தந்தாலன்றி ஏதும்
குறைநீக்க ஏலா நல்ல
கோப்புகள் தூங்கும் கோட்டை
சிறையான தாமோ உண்மை?
செயலூக்கம் எல்லாம் பொய்யோ?
பொருட்செல்வம் சமமாய் வேண்டும்
பொழுதெல்லாம் உழைக்கும் மக்கள்
வருநலம் அடைய வேண்டும்
வல்லடி வழக்கு மற்றை
தருதுயர் எல்லாம் இங்கே
தான் மறைந்திடுதல் வேண்டும்
செருவிலா தண்மை வேண்டும்
தீமைகள் அழிய வேண்டும்.
ஈடிலா என்றன் நாடே
இன்றமிழ் அன்னை நாடே
பேடியர் வீரம் இல்லாப்
பேதையர் வாழும் நாடாய்
வாடி நீ போவதும் ஏன்
வரலாற்றை மறப்பதும் ஏன்
நீடிய துயிலை என்று
நீகளை வாயோ நாடே!
இதெல்லாம் இப்பொழுதில்லை, 1983ல் இப்படித்தான் நாடு இருந்ததாம்....மலையாளத்தான் ஆட்சியிலே மாண்புகழ் கொண்ட தமிழ்நாடு இப்படித்தான் இருந்ததாம்.
செந்தமிழர் நாட்டை-மலையாளி
சிம்மாசனமிருந்து ஆளுகின்றார்.
சந்தனக் கன்னடமாது-இவரின்
சபையின் தர்ம பத்தினியாம்!
இதெற்கெல்லாம் தீர்வுதான் என்ன? அவரே சொல்கிறார்.....
அச்சமெனும் பேடிமையும் நீங்க வேண்டும்
அறிவார்ந்த மூதறிஞர் தமிழகத்தின்
மெச்சுபுகழ் முதலமைச்சர் ஆகவேண்டும்
ஆகா......செம்மொழி மாநாட்டுக்கு துண்டு போட்டாச்சுல்ல.....
அங்கிருந்த மாந்தர்-எவரும்
அநீதி கேட்க வில்லை-கடல்
பொங்கிவரும் போதில்-வானம்
பொறுமி இடிக்கும் போதில்-கானச்
சிங்கம் சினக்கும் போதில்-எரி
மலைகள் வெடிக்கு போதில்-அடே
இங்கே என்னமிஞ்சும்-அருள்
எண்ணம் ஈனம் பொசுக்கும்
துகிலை உரிய துரோபதை-பட்டத்
துன்பவாதை உழன்று-புன்மை
எகிரி எகிர்ப் பாயும்-உண்மை
எழுச்சி காண ஆயும்-இன்றுன்
தகிக்கும் பாரதப் போரா-மக்கள்
ஆட்சி நடக்கும் ஈதே-நாட்டில்
வகிக்கும் நிலைகள் எங்கும்-ஈதை
மக்கள் ஆட்சி உணர்க!
பேரளவில் மக்கள்-படித்த
பேடியர்கள் கூட்டம்-அழகு
மாரளவில் பெண்கள்-காமம்
மாந்துகின்ற புண்கள்-அந்த
நாரளவில் உறவாம்-கொள்ளும்
நந்தவன மலர்கள்-மாந்தர்
ஈரமில்லா நெஞ்சர்-பேடி
எண்ணத்தின் கீழ் இருந்தார்.
வாய்திறக்கவில்லை-ஒருவர்
வம்பு கேட்கவில்லை-அந்தோ
தாய் தன்னை பெண்டாள-மாற்றான்
தாவி வந்தபோதும்- இந்தப்
பேய்மனத்தர் நல்லார்-ஏற்ற
போர்வை தன்னிலேதான் -வெட்கம்
வாய்மூடித்தான் இருப்பர்-இந்த
வம்பு நமக்கேன் என்றே!
என்ன நடந்தாலும்-நாட்டை
எவரே ஆண்டாலும்- தம்மின்
நண்மை பெரிதாக-வயிறு
நாளும் நிரம்பிவிட்டால்-மேண்மைத்
தன்னளவில் கண்டு ஓங்கும்
தர்மம் மறந்து வாழ்வார்-தன்னால்
இன்னிலைமை இந்த- நாடு
இன்னல் பெற்றதுண்மை!
அடி கொடுத்த உடனே-உண்மை
அடங்கிப் போனதாலே-தமிழ்க்
குடிகள் தன்னை மாற்றார்-என்றும்
கோலோச்சியே வாழ்ந்தார்-இன்னும்
விடியவில்லை தமிழர்-உண்மை
வெல்ல வைக்கவில்லை-எவனும்
மடியைப் பிடித்து அறைந்தால்-தமிழன்
மரியாதையாக ஒப்புவானே!
பேடியின் கீழ் மோசம்-இந்தப்
பேதமையைத் தடுக்கும்-தீய
கூடிவாழ்ந்து சோரம்-போகும்
கொள்கை தமிழர் கண்டே-வாழும்
மோடிவேசம் கலைக்கும்-எண்ணம்
முனைந்து மாற்றும் அருளும்-உண்மை
பாடி வீடு கண்டால்-மட்டும்
போதா தென்றே-எண்ணித்
தீமைமோதும் போது-உண்மை
திறமடங்க வேண்டாம்-மோசத்
தீமை வெல்ல வைத்து-உண்மை
ஊமை ஆகவேண்டாம்-தொடும்
தீமை அரசும் ஆள-உண்மை
தினம் தினம் கை கட்டி-அந்தோ
ஆமை போன்று அடங்கல்-இன்றோ
அதுவே நாக ரீகம்.
வந்த இனங்களெல்லாம்-இங்கே
வாழ்ந்து செழிக்கையிலே-உழை
செந்தமிழர் இனமே-மட்டும்
சீரழிந்து செல்வதேன்?-மனம்
நொந்து தவித்தாலும்-பிறர்
நோவடி தந்தாலும்-அதை
எந்தவிதம் வெல்லலாம்-என்ற
எண்ணமிலாத தன்றோ?
தன்னினம் தமிழினத்தை-என்னும்
தமிழனே தான் காட்டிக் கொடுக்கின்றான்
அன்னிய இனத்தானின் தயவுக்கோ
அவமானம் இன்றியே தவமிருப்பான்
என்னென்ன இழிவுண்டோ அத்தனை
இழிவையும் ஏற்றே இத்தமிழன் வாழ்ந்தால்
முன்னேற்றம் என்றுவரும்-தமிழா
மூளை மழுங்காமல் சால நீ சிந்திப்பாய்
இதெல்லாம் , எம் இனம் வீடிழந்து, நாடிழந்து, உற்றார், உறவிழந்து, அநாதைகளாய், அகதிகளாய் வாழும் சூழல் ஏற்பட்ட போது எழுதியது என்று நீங்கள் நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல
பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்களின் விடிந்தால்?....விடுதலை! என்னும் நூலிலிருந்து சில பகுதிகள்
9 comments :
இஃகிஃகி..
அய்ய்ய்ய்ய்யோ... அய்ய்யோ
கம்முனே இருக்க மாட்டீங்களா..
கண்ணாடிய புடுங்கி வச்சுட்டா, இனிமே இப்படி படிக்கமாட்டீங்க
பகிர்வுக்கு நன்றிங்க!!
ஒரு வயத்தெரிச்சல கொட்டிட்டு வந்தா இவரு ஊதி விடுறாரு
:)
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்தக் கவிதைகள் பொருந்தும் போல..
பகிர்விற்கு நன்றிங்க.
பகிர்வுக்கு நன்றி தல.. ஒவ்வொரு வருஷமும் இதை நீங்க போடுற மாதிரித்தான் இருக்கும்..:-(((
மிகவும் சிறப்பான கவிதை தொகுப்பு . அருமை . உங்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் .
மாமா,
எப்படா கொண்டு போய் இவனுங்க கண்ணுல படும்படியாக் காட்டலாம்னு இத்தன நாளா காத்துக்கிட்டு இருந்தீங்களோ?
இன்றைய நாள் இதுக்கு உகந்ததுதான்.
பகிர்விற்கு நன்றிங்க மாமா
காலத்துக்கேற்ற கவிதை. எல்லா காலத்துக்கும் பொருந்தக்கூடியதோ? நல்ல் பகிர்வுப்பா......
Post a Comment