மாலை ஆறு மணிக்குள், நகரின் ஒரு பகுதியில் விரிந்து
கிடக்கும் பெருவணிக அலுவலகங்கள் அடங்கிய அந்தத் தெரு, தன் வணிகத்தண்மையைக் கொஞ்சம்
கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தது..
பெரும்பாலும் அலுவலகங்களே நிறைந்திருந்தாலும், தரை தளத்தில் வணிக
நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டு, மாடிப்பகுதியில் குடும்பத்தோடு வாழ்ந்து வரும்
பலரும் வசிக்கும் பகுதி அது.
காலையிலிருந்து கால் கடுக்க நின்று, தீபாவளி போனஸ்
எவ்வளவு வரும்?, எப்போது வரும்? என்ற எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருந்த
தொழிலாளிகளும், எப்படியோ இவர்களுக்கு சிக்கலில்லாமல் போனஸ் கொடுத்து விட்டு
ஓடிப்போய் விடலாம் என்ற எண்ணத்தோடு முதலாளிகளும், தங்களின் அன்றைய நாளை முடிக்க விரைந்து கொண்டிருந்தனர்.
திடீரென்று ஏதோ ஒரு வலியை உணரத் தொடங்கினேன். மனதிற்குள் கலக்கம். என்ன வென்று தெரியாத ஒரு பதட்டம் என்னுள்
ஒட்டிக் கொண்டது. அதை வெளிக் காட்டிக்
கொள்ளாமல், எழுந்து வீட்டிற்கு வெளியே வந்தேன்.
தெருவின் தொடக்கத்தில் இருந்த தெருக் குழாயில்
தண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. அதை
நிறுத்த யாருக்கும் நேரமில்லை. வணிக
நிறுவனங்கள் வெளிக் கொண்டுவந்து கொட்டிய அட்டைப் பெட்டிகள், சணல் கயிறுகள், காகித
குப்பைகள் தெருவெங்கும் பரவிக் கிடந்தன.
குழந்தைகள் வெடித்த பட்டாசுக் குப்பைகளும் சேர்ந்து கொள்ளத்
தொடங்கியிருந்தது.
தெருவெங்கும் வண்ண வண்ண உடைகளில், குழந்தைகளும்,இளம்
பெண்களுமாக பலரும் மத்தாப்பு வெடித்துக் கொண்டிருந்தனர். குளித்து அழகாக
உடையுடுத்தி, தலைசீவி, பூ வைத்து, வளைக்கரங்கள் குலுங்க அதைச் செய், இதைச்
செய்யாதே, இப்படி நட என்று குழந்தைகளை அதட்டிக் கொண்டிருந்தாள் என் மனைவி. வீடெங்கும் இனிப்பு கலந்த நெய்யின் வாசமும்,
குழந்தைகள் எரித்த பட்டாசின் கந்தக மணமும் கலந்து ஏதோ ஒரு புது வாடையைக் கொண்டு வந்திருந்தது.
வீட்டுக்கு வெளியே இருந்த அந்தக் குப்பைத் தொட்டி
நிரம்பி வழிந்திருந்தது. விதவிதமான
அட்டைப் பெட்டிகளில், அழகழகான பெண்கள் அடக்கமாக சிரித்துக் கொண்டிருந்தனர். சில மணிகளுக்கு முன்னே, வண்ண விளக்குகளுக்கு
நடுவே கடையில் காட்சிப் பொருளாக, பலரையும்
கவர்ந்திழுத்த வண்ணப் பெட்டிகள் இப்பொழுது சேறும், சகதியுமான குப்பைத்தொட்டியை ஆக்கிரமித்திருந்தது.
ஆணழகனின் படம் போட்ட அண்டர்வேர் விளம்பரமும் ஐஸ்வரியாராயின் சோப்பும்,
விளம்பரமும், விற்பனையை அதிகரிக்கின்றன என்பதென்னவோ உண்மைதான். ”அரசமரத்தச்
சுத்தி வந்து அடிவயித்த தொட்டு பார்த்துகிட்டாளாம்” என்று தாத்தா எப்பொழுதோ சொன்னது, இப்பொழுது நினைவுக்கு வருகிறது.
குவிந்திருந்த குப்பைகளுக்கு நடுவே இருந்த ஒரு சாக்கு
மூட்டை அசைந்ததாக தோன்றியது. உற்றுப்
பார்த்தால் அப்படி ஏதும் தோன்றவில்லை. அங்குமிங்கும் பார்வையைச் சுழற்றிக்
கொண்டிருந்தபோது, மீண்டும் குப்பைத் தொட்டியில் ஏதோ சலசலப்பு. உற்றுப் பார்த்தால்
எல்லாம் அமைதியாகவே தெரிந்தது.
மழை சற்று வலுக்கத் தொடங்கியிருந்தது. குழந்தைகளோடு நானும் இரவு உணவு முடித்து
உறக்கத்தில் ஆழ்ந்தேன். நள்ளிரவில்
மீண்டும் குப்பைத் தொட்டி, சாக்குப் பை, சலசலப்பு,. திடுக்கிட்டு விழித்துப்
பார்த்தால் மணி அதிகாலை 3.00. முன்
கதவுகளை திறந்து கொண்டு வீட்டிற்கு வெளியே வந்து எட்டிப் பார்த்தேன். எந்த அசைவும்
இல்லை, ஆனால் சாக்குமூட்டை கொஞ்சம் இடம் நகர்ந்தது போல இருந்தது. இருக்காது....நாம் தான் சரியாக கவனிக்க வில்லை என்று
எனக்குள் சொல்லிக் கொண்டு மீண்டும் போய் படுத்தேன்.
குழந்தைகள் உடலை ஒரு பந்து போல சுருட்டிக் கொண்டு,
பெரிய மிருதுவான கம்பளிக்குள் சுருண்டு தூங்கிக் கொண்டிருந்தன. ஏ.ஸி யை நிறுத்தி விட்டு, ஃபேனை மெதுவாக சுழல
விட்டுவிட்டு. வெளியே வந்தேன்.
வாழ்க்கை மிக இனிமையானது. வெயிலின் கடுமையை குறைக்க , குளிர்சாதனங்கள், மழை
பெய்தால், அதில் நனையாமல், பாதுகாப்பாக நின்று மழைய ரசிக்க, மொட்டை மாடியில்
கண்ணாடி கூண்டு, மாலைத் தென்றல் வீச ஏதுவான சன்னல்கள். குளிர் காலத்தில்,
வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ள மின்சார கணப்பு, இப்படி நன்றாகத்தான் இருக்கின்றது
நம் கண்டுபிடிப்புக்கள் எல்லாம். எவ்வளவு கொடுத்து வைத்தவன் இந்த மனிதன். இயற்கையின் இடர்களும், காலச் சூழலும் தன்
இயல்பை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் வாழத் தெரிந்திருக்கிறது இவனுக்கு என்று,
எண்ணிக் கொண்டிருக்கும் போதே ஏனோ சாக்கு மூட்டை நினைவிற்கு வந்தது.
இதற்குள் குழந்தைகள் எழுந்துவிட, எண்ணைக் குளியலுக்கு
அவர்களை தயார்படுத்திவிட்டு, மனைவி கொடுத்த காப்பியோடு வாசலுக்கு வந்தேன். மீண்டும்
ஏனோ அந்த சாக்கு மூட்டையைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது.
காலை மணி 6. மெல்ல வெளிச்சம் பரவத் தொடங்கியிருந்தது.
இதற்கு மேல் எனக்குப் பொருமை இல்லை. அந்த
சாக்குமூட்டையைப் பிரித்துப் பார்த்தால் தவிர நிம்மதி வரப்போவதில்லை. ஏனோ இந்த 12 மணி நேரமாக அந்த சாக்கு மூட்டை
என்னை தொடர்ந்து சலனப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
வீட்டு கார் செட்டைத் திறந்து, ஒரு மூங்கில் கம்பை
கையில் எடுத்துக் கொண்டு, குப்பைத் தொட்டியை நெருங்கினேன். அதை நெருங்க நெருங்க
ஏதோ ஒரு பய உணர்ச்சி, தயக்கம், என்னைத் தடுமாறச் செய்து கொண்டே இருந்தது.
என்னவாக இருந்தாலும் சரி, என்று எனக்குள் சொல்லிக்
கொண்டே, கையிலிருந்த மூங்கில் கம்பைக் கொண்டு அந்த மூட்டையை உருட்ட முயற்சித்தேன்.
கம்பை விட்டு நெம்பத் தொடங்கியவுடன் அது அசையத் தொடங்கியது. பயத்தில் வியர்வை ஆறாக
பெருகியது. கால்கள் ஏனோ
நடுங்குகின. கைகள் மரத்துப்போன நிலையில்
பலமிழந்தது போன்ற உணர்வு.
இதற்குள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த
குழந்தைகள், ஓரிரு பெரிய பையன்கள், அருகிருந்த கட்டிடத்தின் காவலாளி எல்லோரும்
குப்பைத் தொட்டிக்கு அருகே வந்தனர். மடித்துக்
கட்டிய லுங்கி, நடுங்கும் கைகளில் ஒரு கம்பு, அருகே சென்று பார்ப்பதா? விலகி
ஓடிவிடுவதா என்ற குழப்பத்தில் இருந்த, என்னுடைய பரிதாப நிலை அவர்களை, என்னருகே
கொண்டு வந்திருக்க வேண்டும்.
இந்த மூட்டை
ஏதோ அசையற மாதிரி இருக்குது. கொஞ்சம்
திறந்து பாருங்க, என்று சொன்னவுடன், அந்த
காவலாளி, அப்படியெல்லாம் ஒன்னுமிருக்காது சார் என்று சொல்லியவாறே, அந்த சாக்கு
மூட்டையை எட்டி உதைத்தார். இப்போது, முனகல் சத்தத்தோடு மூட்டை அசையத் தொடங்கியது.
பயத்தில் நான் இரண்டடி பின் வாங்கித் திரும்பினால், என்னருகே யாரும் இல்லை. காவலாளி 10 அடி தள்ளி, குழந்தைகளோ இன்னும் 20
அடி தள்ளி நின்று கொண்டிருந்தனர்.
ஒரு கிழிந்த லுங்கி, அவன் மேல் சுற்றப்
பட்டிருந்தது. சுய நினைவு அற்ற நிலையிலே
அவன் இருந்தான். மலமும், சேறும் குப்பைகளும் அவன் மேல் ஒட்டியிருந்தன. ஈக்கள் அவன் காயங்களின் மீது மொய்த்துக்
கொண்டிருந்தன. ஏதோ ஒரு பிச்சைக்காரனைப் போல் இருந்தான்.
திடீரென்று மழை வலுக்கத் தொடங்கியிருந்தது. அவனை
அப்படியே விட்டுவிட்டு, அருகிருந்த கட்டிடத்திற்குள் நாங்கள் அனைவரும் புகுந்து
கொண்டோம். மழையில் நனைந்த படியே சுய
நினைவின்றி கிடந்தான். அவனைத் தொட்டுத்
தூக்கி மழையில்லா இடத்தில் வைக்க யாரும் தயாராக இல்லை நான் உட்பட.
ஏதோ ஒரு அருவருப்பு, பயம், ....
அவனை மருத்துவமணைக்கு தூக்கிச் செல்ல ஆம்புலன்ஸ்
வரவழைக்கலாம் என்ற போது அருகே இருந்த யாரும் பதில் சொல்ல வில்லை. அருகிருந்த ஒரு கல்லூரி மாணவன் மட்டும், சார்,
108 ல் யாரும் எடுக்கவில்லை. நான் போய்,
ஆட்டோ கூட்டிக் கொண்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு பைக்கை எடுத்துக் கொண்டு
சென்றான்.
மற்றவர்கள் அனைவருமே கலைந்து சென்றுவிட்டனர்.
என்னையும் அவனையும் தனித்து விட்டு........அவனை என்னால் பார்க்க முடியவில்லை. பார்க்காமலும் இருக்க முடியவில்லை. அந்தப் பக்கம் திரும்பி நின்று கொண்டேன். ஆனாலும் அவன் யார்? எங்கிருந்து வந்திருப்பான்?
யார் அவனை அடித்திருப்பார்கள்? என்ற கேள்விகள் என்னைக் குடைந்து கொண்டே
இருந்தன. அவன் முகத்தைப் பார்த்து
அடையாளம் சொல்ல அவன் குடும்பத்தாருக்கே இயலாது என்றுதான் தோன்றுகிறது.
அதற்குள் ஒரு ஆட்டோ வந்தது. நானும் அந்தக் கல்லூரி
மாணவனும் இவனை அரசு மருத்துவமணையில் சேர்க்க வேண்டும் என்ற போது ஆட்டோக்காரன்,
என்னையும் ஏனோ அருவருப்பாக பார்த்தான்.
நல்ல நாள் அதுவுமா, காலையில மொத சவாரி, இப்படியா கிடைக்கும்? என்று
புலம்பிய வாரே சாதாரணமாக வாங்கும் கட்டணத்தில் நான்கு மடங்கு அதிகமாக
தந்தாகவேண்டும் என்று கூறி, ஏற்றிக் கொண்டான்.
. அந்த
காவலாளியும் கல்லூரி மாணவனும் ஒரு பைக்கில் புறப்பட்டனர். மருத்துவமணையில் பணியில்
இருக்கும் ஒரு செவிலியின் பெயரைச் சொல்லி, நான் அனுப்பியதாக சொல்லுங்கள். நான் பேசிக் கொள்கிறேன். என்று சொல்லிவிட்டு
போன் பேச வீட்டிற்குள் நுழைந்தேன்.
வாசலிலே ஒரு முறைப்போடு என் மனைவி. நல்ல நாள் அதுவுமா, இப்படியா போயி குப்பைத்
தொட்டியயும், வியாதியஸ்தனையும் தூக்கிகிட்டு?????? கர்மம்..கர்மம்...என்று தலையில்
அடித்துக் கொண்டாள்.
இது நடந்து 15 தினங்களுக்குப் பிறகு, ஒரு நாள் மாலை
அலுவலகத்திலிருந்து திரும்பி வந்த போது, வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த ஒருவர்
என்னைப் பார்த்து கும்பிட்டார். நானும்
பதிலுக்கு கும்பிடும் போது கவனித்தேன்.
கைகளில் அதே சிகப்பு நிற முறுக்குக் கயிறு.
ஆந்திராவைச் சேர்ந்த அவர், ஏதோ ஒரு வணிக நிறுவனத்தில்
வேலை செய்து வந்தாராம். போனஸ் பணம்
வாங்கிக் கொண்டு திரும்பியபோது, யாரோ சிலர் அவரை அடித்து பணம், வாட்ச், மோதிரம்
போன்றவற்றை பறித்துக் கொண்டு அவரைச் சாக்கில் போட்டு கட்டி என் வீட்டிற்கருகே
கொண்டுவந்து போட்டு விட்டனர். என்றார்.
அந்த இரவு, மழையிலும், குளிரிலும், உடல் முழுதுமான
வலியிலும், நினைவு வரும்போதெல்லாம், வாயை அசைக்க முடியவில்லை. முகமெங்கும் வீங்கியிருந்ததாலும், ரத்தம்
அதிகமாக வெளியேறியதாலும், வாய்விட்டு கத்த முடியவில்லை. அடிக்கடி மனதுக்குள்
சத்தம் போட்டு அழுவேன். நினைவிழப்பேன்.
மீண்டும் நினைவு வரும்போது மனதுக்குள்ளாகவே கத்திக் கதறுவேன்.
என்னைக் காப்பாற்ற எந்த சாமியும் வரவில்லை. ஒரு மனிதன் கூடவா இல்லை.....என்று அரட்டிக்
கொண்டிருந்தேன். உங்களால் காப்பாற்றப் பட்டேன்.
”நன்றி சாமீ” என்று கூறி கண்ணீர் வழிய கும்பிட்டான்.
எப்படிக் கேட்டது அவன் அழைப்பு எனக்கு. அந்தத் தெருவில் எத்தனையோ பேர் வந்து போய்க்
கொண்டிருக்கும் போது, குளிரூட்டப் பட்ட அறையில். சிறப்பு தொலைக்காட்சி
நிகழ்ச்சிகள், ஓடிக் கொண்டிருக்க, குழந்தைகளின் குதூகலம், வித விதமான உணவுகள்
மனைவியின் அன்புப் பரிமாற்றம், இப்படி மதி மயங்கிய நிலையில் இருந்த எனக்கு........
எப்படிக்
கேட்டது அவன் அழைப்பு???
.
23 comments :
சிலிர்க்க வைக்கிறது அனுபவம். சில அமானுஷ்யங்களுக்கு விளக்கமேயிருக்காது. :)
உள்ளுணர்வுகள்......ESP {Extra sensory Perception] என்கிறார்கள் இதை. ஆனால் அடிப்படையில் அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலொழிய இது போன்று சக்திகள் வேலை செய்யாது.....
முதலாளி, எதோ, மிகப்பிரமாதமா எழுதி இருக்கார்னு தெரியுது... கால அவகாசம் வாய்க்கும் போது வந்து வாசிக்கிறனுங்க....
சார்.. உண்மையில் நீங்க அந்த சாக்குப்பையை நெருங்க நெருங்க எனக்கு பீதியாகவே இருந்தது. அதற்குள் ஓர் உயிருள்ள மனிதன் இருந்தான் என்றவுடன் பாதி உசிரே போனமாதிரி ஆயிடுச்சுங்க..
இந்த அனுபவத்தை என்னன்னு சொல்றது... உண்மையில் வாயடைச்சுப்போச்சு...உங்களோட சேர்ந்திருந்த அந்த கல்லூரி மாணவருக்கும், அந்த காவலாகிக்கும் சேர்த்து எனது வணக்கங்கள்.
kooda ninu parkira mathiri vivarichu elutheerkenga , oru bayam illa enamo aluthu manasula
நல்ல அருமையான பதிவு
ரொம்பவும் நெகிழ்ச்சியாய் இருக்கு ஆரூரன்... சிலிர்க்க வைக்கிறது...
பிரபாகர்...
பிரமிக்க வைத்த மனிதராக நீங்கள். மனிதர்களில் பலர் பல விசயங்களை உதாசீனபடுத்துகிறார்கள். நீங்களும் சாக்கு மூட்டை என உதாசீனபடுத்தி இருந்து இருந்தால்... எப்படி கேட்டது அவன் அழைப்பு! எப்படி கேட்காமல் போனது அவன் அழைப்பு என இருந்து இருக்கும்!
நெகிழ வைத்து விட்டீர்கள். தங்களுக்கும் கல்லூரி மாணவருக்கும் பாராட்டுகள்.
சிலிர்க்க வைக்கும் சம்பவம் ...
Great!
நீங்க செய்தது நல்ல செயல். நீங்கப் பார்த்து 12 மணிநேரம், அவர் அதற்கு முன் எவ்வளவு நேரம் வலியில் துடித்திருந்தாரோ! பாவம்.
ம்ம்...
நன்றிங்க ஆசானே
நன்றிங்க நித்திலம்
நன்றிங்க பழமை
நன்றிங்க பாலாசி
நன்றிங்க ரோகிணி
நன்றிங்க வேலு
நன்றி பிரபா
நன்றிங்க எல்கே
நன்றிங்க வி.ராதாகிருஷ்ணன்
நன்றிங்க சேது
நன்றிங்க சங்கர்
ப்ரியா.........ம்ம்ம்
என்ன, ஒரு ”ம்” கொறையுது.....
//கைகளில் மணிக் கட்டிற்கு அருகே ஒரு சிவப்பு முறுக்கு கயிறு. எந்தச் சாமி காப்பாத்தும் என்று நினைத்துக் கட்டிக்கொண்டானோ? தெரியவில்லை....ஆனா காப்பாத்தத்தான் சாமியக் காணல...//
ஏன் காணல. நீங்க தான் அது. தெய்வம் மனுஷ்ய ரூபேணா என்பது இது தான்! உங்களில் நானும் பார்க்கிறேன் தெய்வத்தை!
அவருக்கு நீங்கள் உயிர்கொடுத்த " தெய்வம்..."..சில சமயம் கடவுள் நேரில் வருவதில்லை என்பார்கள்
என்னங்க இது? கொடுமையே?? நாட்டுல என்ன நடக்குது???
அதிர்ச்சியாகவும் இருக்கு... அதே நேரத்துல உங்களால ஒரு இயிர் பிழைச்ச மகிழ்ச்சியும்!!!
ஆனாலும், ஊரை நினைச்சா மிகவும் அச்சமா இருக்குங்க...
நினைத்தே பார்க்கமுடியவில்லை!
மிகப் பெரிய கனம் மட்டும் அழுத்துகிறது
U R REALLY GREAT !!! THANK GOD!!!
நல்ல சிறுகதை. தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்
பாராட்டுகள் நல்ல பதிவு .
உண்மையாச் சொல்றேங்க. ஆரூரன் அப்படிங்கிறதுக்கு எனக்கு அடிச்ச visiting card இந்தப் பதிவு. அழியாத கோலங்கள்ல சேர்த்திருக்கேன்..
Post a Comment