போன மாசத்தில ஒரு நா பாருங்க, எங்கூட்டு தொரசாணியம்மா, கெனாவுல எந்தச் சாமியோ வந்து கோயலுக்கு வான்னு சொல்லி கூப்பிடுச்சுங்களாம். வந்துது வம்பு,நாயத்துக் கிழமையன்னைக்கு கோழி யோப்பிட எழுப்பி, பிளசருல ஏத்தி, கோயக் கோயலாச் சுத்த வச்சிபுட்டா.
போனயெடத்தில, ஒரு கோய வாசல்ல கோந்திருந்தப்ப, ஐயமாரு ரெண்டு பேரு வந்து பெருமாளுக்கு பாவாடை சாத்தப் போறாங்க, வெரவா உள்ளுக்கு போங்கன்னு சொன்னாங்க. கூடக் கோந்திருந்த என் சின்ன மவன் ஏம்பா ! ஆம்பிள்ளைச் சாமிக்கு பாவாடை கட்டறாங்க.. வேட்டி தானே கட்டோணும்னான். நம்ம வாய்தான் சும்மாவே இருக்கறதில்லைல, என்றாகண்ணு செய்யறது, வெள்ளாயிக்குப் போட்ட வேட்டி வந்து சேருலையையோ என்னவோ? அப்பிடின்னேன்.பண்ணையக்காரி மொறைச்ச மொறையில, கோய வெளக்கெல்லாம் எண்ணையில்லாம, பத்த வக்காமயே ’குப்’னு பத்திப் போச்சுங்க.
ரெண்டு நாளைக்கு முன்னால நம்ம நண்பர் நடத்திற பொஸ்தக கடைக்குப் போயி பேசிகிட்டிருந்தனுங்க. அப்ப ரொம்ப நாளா விக்காம, அழுக்கு புடிச்ச பொஸ்தவங்களை ஒரு ஓரத்தில கொட்டி வச்சு, 50% தள்ளுபடின்னு எழுதியிருந்துதுங்க. தொரத்த முடியாததை, விக்க முடியாதத படியை விட்டு வெளிய தள்ளறதால அதுக்குப் பேர் ”தள்ளுபடி”ன்னு வந்திச்சோ! ந்னு தோனுச்சு. ”தங்கம் வாங்குனாலும், தவுடு வாங்குனாலும், தள்ளுபடியில்லாம வாங்கிடாதடா! கொசுறு இல்லாம வாங்கின காயும், மசிறு இல்லாம வாங்கின நாயும் வீண்” அப்பிடின்னு சொல்லுவாருங்க ஒரு பெருசு. சரி, என்னதான் இருக்குமுன்னு அதெயெல்லாம் பொரட்ட ஆரம்பிச்சனுங்க....
ஏகப்பட்ட புத்தகங்கள். எல்லாம் மொழி, இனம், சமூகம், சமயம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள். பல்வேறு தொகுப்புகள்.ஆராய்ச்சி மாணவர்களுக்குப் பயன் படும் எண்ணற்ற புத்தகங்கள். ”கடைதிறந்தேன். கொள்வாரில்லை” என்ற வடலூர் வள்ளல் வாக்கு எனக்குள் தோன்றி மறைந்தது. தள்ளுபடியிலும் விற்க முடியாமல் போனால், ஏதாவது நூலகத்திற்கு நன்கொடையாக கொடுத்து விட்டு, காலியாக இருக்குமிடத்தில் ஏதாவது சமையல், பரிகாரபூசை, சோதிடம் அழகுக் குறிப்புகள் என்று ஏதாவது கொஞ்சத்தை வாங்கி வைத்து நட்டத்தை ஈடு கட்ட வேண்டும் என்று நண்பர் சொன்னபோது உடலெங்கும் கோபமும், ஆத்திரமும் பொங்கி வழிந்தன. அதிலிருந்த சில புத்தகங்களை முழு விலை கொடுத்து வாங்கினேன். அதிலிருந்து நான் அவ்வப்போது படிக்கும் புத்தகங்களில் இருந்து சில மறந்து போன, மறைந்து போன பழந்தமிழர் பண்பாடு, நாகரிகம், மொழி,சொல், இலக்கியங்களில் இருந்து எனக்குப் பிடித்த, நான் ரசித்த வற்றை எழுத முயற்சிக்கின்றேன். படிப்பதில் இருக்கும் சுகம் எழுதுவதில் இல்லை என்று வரிகளை முன்னிறுத்தி என் சோம்பல் தனத்தை நியாப்படுத்தி வந்திருக்கின்றேன். ஏனோ இந்த முறை எழுத வேண்டும் என்று தோன்றுவதால்..எழுதத் தொடங்குகிறேன்.......எத்தனை நாளைக்கோ?????????
சரி, நாயத்துக்கு வருவோம். வழக்கம்போல விடியக்கால 4 மணிக்கு எந்திருச்சு கோந்துகிட்டு, கொண்டாந்த பொஸ்தொகத்துல ஒன்னை எடுத்து வச்சு பொரட்ட ஆரம்பிச்சேன். அதுல கெடச்சது இந்த ”பாவாடை சாற்றுதல்” விளக்கம்.
”யாழ் வல்லோனாகிய நாரத முனிக்குச் சிவபெருமான் உரைத்த ஸ்ரீ ரங்க மகத்துவம் என்னும் புத்தகம் என் பார்வையில் பட்டது. அது 1878 ஆம் ஆண்டில் அச்சிடப்பட்ட குஜிலிக் கடைப் பதிப்பு. அதை புரட்டினேன். அதில் ரங்கநாதருக்கு என்னென்ன உணவு வகைகளைப் படைத்தார்கள் என்று கூறும் பகுதி கண்ணில் பட்டது. ”......பொங்கல், சர்க்கரைப் பொங்கல், அக்கார அடிசில்,புளியவரை,எள்ளவரை,மிளகவரை,கடுகவரை,தருவி சாதம் என்று சொல்லப்படுகின்ற முப்பத்திரண்டு பொங்கலும், தோசை, வடை, அப்பம்,எள்ளுருண்டை,அதிரசம்,மனோகரம்,சுகியம்,தேன் குழல், கோதுமை ரொட்டி,யானையடி அப்பம்,முதலான கச்சாய வகைகளும்....துய்ய நெய்,புத்துருக்கு நெய், கற்கண்டு,சீனி,சருக்கரை முதலானதுகளும் சொரிந்து கம கமவென்று பரிமளிக்கும்படியான “திருப்பாவடை”யும் செய்து....”
பேச்சு வழக்கில் “திருப்பாவாடை” என்று சொல்லப்படுகிறது.கல்வெட்டு சாசனங்களிலும் திருப்பாவாடை என்று எழுதப்பட்டதை கண்டிருக்கின்றேன்.ஒரு சாசனத்தில் மட்டும் “திருப்பாவடை” என்று எழுதியிருந்ததையும் கண்டேன்.திருப்பாவாடை சரியா? திருப்பாவடை சரியா என்ற ஐயமும் எனக்கு வந்தது. திருப்பாவடை என்ற சொல்லே சரியானது என்றும் உணர்ந்தேன். ஆனால் பாவடை என்ற பெயர் எப்படி வந்தது என்ற ஆராய்ச்சியில் புகுந்தேன்.
திருப்பாவடை என்பது ஒரு இனிப்பு பண்டம்.அது சர்க்கரைப் பொங்கல் அல்ல,அதைவிட விசேஷமானது. இது செய்வதற்கு,”பதின்கலம் போனகப் பழய அரிசியும்,இருகலம் மணிப்பருப்பும்,நாலு நிறை சர்க்கரையும்,நூறு தேங்காயும், பத்து பலாப்பழமும் வேண்டியிருந்ததை சிதம்பரக் கோயில் சாசனத்தில் கண்டேன். எனவே, பாவு+அடை=பாவடை.ஓகோ, பாகடையாயிருக்குமோ? பாகு+அடை=பாகடை. சரிதான் பாகடை, என்பது பாவடை என்று திரிந்திருக்கவேண்டும்.பிறகு பாவடை என்பது பாவாடையாயிருக்கும் என்று எனக்குள் முடிவு செய்தேன்.
வெல்லம், சர்க்கரை,கற்கண்டு இவற்றை நெய்யுடன் கலந்து சேர்த்து பாகு காய்ச்சினால் மிக இனிமையாகவும், கமகமவென்று பரிமளிக்கவும் செய்யும்......புத்துருக்கு நெய்யுடன் கற்கண்டுபொடியைக் கலந்து பாகு காய்ச்சி, துய்ய நெய்யுடன் சர்க்கரை கலந்து பாகு காய்ச்சி வைத்துக் கொண்டு, பழைய அரிசியுடன்,மணிப்பருப்பையும் சர்க்கரையும் கலந்து, பலாப்பழத்தை துண்டு துண்டாக நறுக்கிப் போட்டு சர்க்கரைப் பொங்கல் செய்து, முந்திரிப் பருப்பும், திராஷையும் இட்டு நெய் விட்டு கிளறி, இதனுடன் முன்பு காய்ச்சி வைத்த கற்கண்டு பாகையும், சர்க்கரைப் பாகையும் கலந்து கிளறி பாகடை செய்தால் அதற்குப் பாகடை என்று பெயர் சூட்டாமல் வேறு என்ன பெயர் சூட்டுவது????
மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் கட்டுரைகள் தொகுதி-2
இதப் படிச்சவொடனே எனக்குள்ளார இருந்த நள மகாராசா ’படக்’னு முழிச்சிகிட்டாரு. சரி நாம இத செஞ்சு பாத்திர வேண்டியதுதான்னு முடிவு கட்டி, சமயக்கட்டுக்குள்ள நுழைஞ்சிட்டேன். டீவி பொட்டில சோறாக்கறத சொல்லித்தாரங்கல்லோ அதாட்டம், எல்லாத்தையும் எடுத்து முன்னாடி வச்சிகிட்டு, பார்த்தா பலாப்பலத்தை காணோம். இத எங்கடா போயி வாங்கறதுன்னு ஒரே ரோசனை. அந்த நேரத்தில் பொசுக்குன்னு உள்ளாரவந்த எங்கூட்டம்மிணி, தென்ன பண்டறீங்க...இன்னேரத்தில் எந்திரிச்சு கோந்துகிட்டுன்னா? இல்லகண்ணு, பொஸ்தகத்துல ஒரு சமயலப் பத்தி படிச்சேன்...அத செஞ்சுபார்க்கலாம்னு வந்தேன். அதச் செய்யறதுக்கு பலாப் பலம் வேணும். அப்படின்னேன். அடக் கூறு கெட்ட மனுசா, விடியகால 5மணிக்கு எந்தூருல பலாப்பழம் விக்குதுன்னு கேட்டு போட்டு, இதெயெல்லாம் தூக்கி ஓரப் போட்டுட்டு, போயி பாலு கரக்கற வழியைப்பாரு, சொசைட்டிக்கு பாலூத்த போகோனும்னு.சொல்லிபுட்டு போயிட்டாளுங்க...
இதாராவது படிச்ச போட்டு, செஞ்சுபாருங்க. நல்லாருந்தா, பொட்டனங்கட்டி கொஞ்ச எங்கூருக்கு அனுப்பியூடுங்க.....நல்லா வரலையா, சரி விடுங்க. வேற பொஸ்தகத்தில ஏதாவது எழுதியிருக்கானு பார்த்து போட்டு, முயற்சிக்கலாமுங்க.....
25 comments :
கலக்கிப்யிங்
ஆ... நெம்ப நாளைக்கப்புறம் முதலாளி கடை திறந்திருக்காரு... இருங்க மறுக்கா வந்து வாசிக்கிறேன்!
அஃகஃகா... முன்னுரை கலக்கல்.... சொல்ல வந்த பற்றியமும் சிறப்பு... இருங்க... அல்லாத்துக்கும் ஒரு தாக்கல் உடுறேன்...
ஆஹா...
மாம்ஸ் திரும்பவும் பதிவராயிட்டாருங்கோ!!!
சங்கமம் கன்ஃபார்ம்ங்கோ!
அன்பின் ஆரூரன்,
அருமையான பதிவு. நகைச்சுவையோடு சேர்த்து நல்ல தகவலும்... ஆக நல்ல விருந்தோடு ஆரம்பித்திருக்கீக.. இன்னும் நிறைய எதிர்பாக்கலாமா.....?
அடங்கப்போய். சாமியாடிட்டீங் மொதலாளி..:)))
உங்கூருபாஷை இத்தனை அழகா ? நானும் முதலாளி ன்னு சொல்லலாமில்லையா . அடிக்கடி எழுதுங்கள். படித்ததை பகிர்ந்தது அழகு .
மாமா,
அருமை அருமை.
( எத்தன நாளு வேண்டுதலு! வருஷங்கழிச்சி வந்திருக்காரு.)
//Mahi_Granny //
நானும் முதலாளி ன்னு சொல்லலாமில்லையா ????
நீங்களுமா??????
மாம்ஸு, அது பிட்ஸாவாத்தான் இருக்கும்.
ஏனுங் பெரிய மொதலாளீவ்.,
சத்தியமா சொல்லிப்போட்றனுங் சாமி...
இது உங்கட எழுத்து இல்லீங் சாமி..
எங்க குலதெய்வ குரலு போல இருக்குதுங்க மொதலாளி...
காய ஒடைச்சு பூசை போட்றனுங்க..
கொஞ்சம் பொறுத்துக்க வேணும் எசமான்..
//தென்ன பண்டறீங்க..//
தென்னுங்க... இதொன்னை வெச்சி சொல்றேன்... மொதலாளியோட எழுத்தேதானுங்க ஆனைக்காரரே!!
சூப்பருங்ணா.... =))) தரோலி எஞ்சாயிட்டு..
இப்டி அடிக்கடி எழுதுங்க..
இது... ஒரு வேளை.. வடையை... திருப்பா (திருப் பாடல்) சொல்லிப் பாடிச் சாத்துறதால அப்டிப் பேரு வந்திருக்குமோ...
திருப்பா வடை...
Liked it very much....
அடடா....... பாவாடை ரகசியம் இதுதானா?
பனியில் உறைந்த காய்கறிகள் பிரிவில் பலாப்பழம் என்று கிடைத்ததை ஒரு நாள் வாங்கிவந்தேன். பிறிதொருநாள் அதைக் கறி சமைக்க எடுத்தால் அது பலாக்காய் இல்லை. பழமாக இருக்கிறது. என்ன செய்ய? அவ்வளவு ருசியாகவும் இல்லை.மணம் மட்டுமே தூக்கல். வழிக்கு வராதென்று சக்கப்ரதமன் செய்து பெருமாளுக்கு நிவேதனம் செய்தேன்.
பாவாடை அப்போதே தெரிந்திருந்தால் பாவடை செய்திருப்பேனே!!!!!!
அருமையான பதிவு.
அருமையான எழுத்து நடை.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி.
கொங்கு மணம் கமழ்கிறது.
வாழ்த்துகள். பாராட்டுகள்.
தொடர்ந்து எழுதவும்.
சார்.. செம கலக்கல் எழுத்து... துள்ளல் நடை...
நல்ல பகிர்வும்.. நானும் அந்த ரெஸிபிய ட்ரை பண்றனுங்..
gans,pazamaipesi,kadir,aasaan,vallamai,mahi granny,kannan, siva,kumki,athusari,rathnavel,priya,mmansoor rajan,thulasi gopal,balasi,jaffer......
thank u friends
கலக்குங்க. தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள். நன்றாக எழுதியுள்ளிர்கள், தொடருங்கள்.
நமது வீடுகளில் செயப்படும் சர்க்கரை பொங்கலைவிட அதிக சுவை கொண்டது சர்க்கரை பாவாடை.
ஒரு சிறு செய்தி : சர்கரை பாவாடை சார்த்துதல் என்பது சிதம்பரம் நடராஜ பெருமானுக்கே உரியது என்பதும் சிதம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் பெயர்பெற்ற சொல் சர்க்கரை பாவாடை என்பதுமாகும். சொல்லும்போதே நாக்கில் எச்சில் ஊரும் அளவுக்கு பிரபல்யம் அதன் சுவை.
பக்தர்கள் தங்களின் வேண்டுதலின்படி பரிகாரமாக சிதம்பரம் நடராஜ பெருமானுக்கு சர்க்கரை பாவாடை சார்த்துதல் உண்டு என கேள்விபட்டுள்ளேன். சர்க்கரை பாவாடை சார்த்துதல் என்பது பஞ்சாமிர்த அபிழேகம் போல் வேண்டுதலின்படி இறைவனுக்கு சர்க்கரை பாவாடையை சார்த்தி அதாவது இறைவனின் மேலெலாம் பூசி வழிபடல் என கேள்விபட்டுள்ளேன். மடப்பள்ளி( கோயில் சமையலறை )யில் சர்க்கரை பாவாடை வாங்கி நான் சாபிடுள்ளேன்.
இந்த சிதம்பரம் கோயில் வட்டார வழக்குப்படி பார்த்தால் திரு என்றால் இறைவன், இறைவனுக்கு சார்த்தப்படும் பாவு ஆடை = திருப்பாவாடை என வந்திருக்கலாம்.
ரொம்ப நாளைக்கப்புறம் விஜயமாக இருந்தாலும் அருமையாக எழுதியிருக்கீங்க சகோ.. கொங்கு வாசம் சூப்பராக வீசுது..
Kalakkalo kalakkal
Post a Comment