Thursday, December 29, 2011

நெஞ்சு பொறுக்குதில்லையே...........


 இப்படித்தான் பாருங்க, ஒருநா மாலையில, அலுவலகத்திலிருந்து வூட்டுக்குப் போயிச் சேந்த நேரம், முன்னாடி பட்டாசலையில கோந்திருந்த எளைய மவன் உள்ளுக்க நொழையும்போதே, ஒரே சத்தம். தென்ன சாமி சத்தம்னு? கேட்டா, அவுங்காத்தா, அவங்கேட்ட ஏதோ ஒன்னை வாங்கித் தரலையாம். சரி கண்ணு நா வாங்கித்தாரேன்னு சமாதானப் படுத்திப் போட்டு, பண்ணையக்காரிகிட்டப் போயி, ஏங்கண்ணு, கொழந்தை கேட்டா வாங்கித் தாராணுமல்ல, அவங்கோட என்ன ரவுசு உனக்குன்னு? கேட்டேன்.  கண்ணாமுழி ரெண்டும் வெளியவர மாதர ஒரு மொறை மொறைச்சுப் போட்டு, உள்ளுக்கப் போயிட்டா. 
                                                                    
என்னாடா இது வம்பாப் போச்சு,ஒன்னைச் சமாளிக்கப் போயி, இப்ப ரெண்டைச் சமாளிக்க வேணுமாட்டருக்கேன்னு மலைச்சுப் போயிட்டனுங்க.  சரி என்ன பண்டறது, ரவைக்குச் சோறு வெணுமில்ல, அப்புடியே பின்னாடியே போயி, சமாதானப் படுத்திக் கேட்டா, விளையாட்டுப் பொருள் ஏதோ புதுசா வந்திருக்குதாமா, ஐஞ்சாயன்ரன்ருவா வெலையாம். அவங்கோடப் பள்ளியோடத்தில படிக்கிற எல்லாருகிட்டயும் அது இருக்காம், அதனால அதை வாங்கியே கொடுத்தாகனும்னு அடம்புடிக்கிறான்னு சொன்னா. சரி கண்ணு! ஏதோ கொழந்தை ஆசைப்படறான் வாங்கிக் கொடுத்துப் போடுன்னு நாஞ்சொல்ல, ஆமா, இப்புடியே செல்லங் குடுத்துக்  கெடுத்துப் போடுங்கன்னு என்னையுந் திட்டிப் போட்டுப் போயிட்டா.

நல்ல சோத்துக்கு வழியில்லாத காலத்தில, பள்ளியோடத்துக்கு பசியோட போவானேன்னு எங்கம்மா,  நாலணாவுக்கு குச்சிக் கிழங்க(மரவள்ளிக் கிழங்கு) வாங்கி, இட்டிலி குண்டாவுல  வேவவச்சு, ஆவி பரக்க திங்கக் கொடுத்து பள்ளியோடத்துக்கு அனுப்பிச்சது நாபககத்துக்கு வந்தது. ”கொடிது, கொடிது இளமையில் வருமை”ன்னு எங்க பாட்டியாயா எந்த காலத்திலயோ சொன்னது நெனவுக்கு வந்திச்சு. வெளையாட்டா எல்லாத்தையும் கடந்து வந்தாச்சு. நம்ம குழந்தைகள், அந்த சிரமத்தப் படக்கூடாதுங்கறதுல கவனமா இருக்க வேண்டியிருக்குன்னு நினைச்சுகிட்டுத் தூங்கப் போயிட்டனுங்க.

ஊருக்கு வெளியே  சிறு நூல் நெசவு தொழிற்சாலை நடத்திவார நானு, வெடியறதுக்கு முன்னாடியே அங்கபோறது வழக்கம். நம்மள மாதர சிறு தொழிற்சாலைங்க இருக்கற இடமது. மில்லு வாசக் கதவுக் கிட்ட, ஒரு ஓரத்தில்  ஒரு துணிமூட்டை சாத்தி வச்சிருந்த மாதர இருந்தது. இந்த நைட் வாச்சுமேன் குளுருக்கு இப்புடி போத்திகிட்டு கோந்திருக்கானோன்னு பார்த்தா, ஒரு 10,12 வயசுப் பையன். ஒறையற பனியில  இங்கெங்கடா வந்தாயிவன்னு ஒரே ரோசனை.  யாரப்பா நீ?ன்னு கேட்க, அவன் வாயிலருந்து ஒரு வார்த்தையும் வரலை. கண்ணுல முட்டிகிட்டிருந்த தண்ணி கொட்ட ஆரம்பிச்சுது. வாச்சுமேனைத் தேடுனா, அவன் மில்லுக்குப் பின்னால இருக்கற பாய்லர்கிட்டப் போய், அந்தச் சூட்டோட கதகதப்புல தூங்கிட்டிருந்தான். எழுப்பி டீ வாங்கியாறச் சொல்லி அந்தப் பையனுக்கு கொடுத்துபோட்டு விசாரிச்சா, எந்த மவராசனோ வேலைக்கு சேத்திகறன்னு அந்தப் பையன வரச்சொல்லிபோட்டு, இவங்கதவப் பூட்டிட்டு போயிட்டான். உத்தரப் பிரதேசத்தில இருக்கற கோண்டா மாவட்டத்தில இருந்து தெனக் கூலி 50ரூவாயிக்கு ஆசைப்பட்டு அந்தப் பையன் ரயிலைப்புடிச்சு இங்க இரவு 11 மணிக்கு வந்து சேர்ந்திருக்கிறான். எங்கெங்கயோ சுத்தி வழி கண்டுபுடிச்சு விடியக்காலைல இங்க வந்து சேர்ந்தது தெரியவந்துச்சு. 

விரைவில் இந்தியத் தாய்த் திருநாடு வல்லரசாகும் என்று மேடைக்கு மேடை பேசித்திரியும், அரசியல்வாதிகளை நினைத்தால் கோபமும் வெறுப்பும் கொப்பளிக்கிறது. ஒரு வேளைச் சோற்றுக்கு வழியில்லாம், தினக்கூலி ஐம்பதைத் தேடி ஈராயிரம் மைல் கடந்து வந்து, மொழி தெரியா ஊரில், கடுங்குளிரில் எதிர்கால இந்தியா சுருண்டு படுத்திருக்க, வெட்கப் படவேண்டியவர்களெல்லாம் வீராப்புப் பேசித் திரிவதை என்னவென்று சொல்வது. விடுதலை பெற்று, மக்களாட்சி மலர்ந்ததாக மார்தட்டத் தொடங்கிய இந்த 65 ஆண்டுகளில் இன்னும் குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி ஏட்டளவிளேயே இருப்பது வேதனைக்குரிய ஒன்று. வருமான வரியோடு புதிதாய் கொண்டுவந்த கல்வி வளச்சிக்கான சிறப்பு  வரி (educational cess)என்ற பெயரில் கடந்த பல ஆண்டுகளாக திரட்டப் பட்ட தொகை யாருடை வளர்ச்சிக்கு சென்று சேர்ந்தது என்று தெரியவில்லை.  குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்புச் சட்டம் செயல்படும் விதமும் பாராட்டுக்குரிய ஒன்று. தொழிற்கூடங்களில் குழந்தைத் தொழிலாளிகள் இல்லை என்ற பலகையை எல்லா நிறுவனங்களும் பொருத்தி வைத்திருக்கின்றனவா என்று பார்ப்பதோடு அதன் பணி முடிவடைந்து விடுகிறது.


மேட்டுப் பாளையத்தில இருந்து ஊட்டிக்கு போற வழியில இருக்கற ஒரு உண்டு உறைவிடப் பள்ளியோடத்தில கொண்டுபோயி குழந்தைகளைச் சேர்க்கோணும்னு பண்ணையக்காரி ஒரே ரவுசு. சரின்னுபோட்டு, விண்ணப்பம் வாங்கப்போனா, அந்தப் பள்ளிக்கோட வாசலில 100,200 கார் வருசையா நின்னுகிட்டிருந்தது. நாலாங்கிளாஸ் படிக்கிற ஒரு கொழந்தைக்கு, விண்ணப்பப் படிவம் ஆயரத்து இருநூறு ரூவா. வருசக்கட்டணம் ஒன்னரை லட்சன்ருவா. எங்கபோயி முடியுமோ இதுன்னு வெசனமாப் போச்சு.   போனவருசத் தலைவரு சமச்சீர் கல்வி கொண்டாந்துட்டதுல நட்டப் பட்டதென்னவோ நாமதான். புதுசு புதுசாப் படிப்பு. சி பி எஸ் சிங்கறாங்க, ஐ சி எஸ் சி ங்கறாங்க, ஒன்னும் வெளங்கள. பஞ்சாயத்துபோர்டு பள்ளியோடத்துல படிச்சு, சீமையில(அமெரிக்காவில்) வேலைபார்த்துகிட்டிருக்கற நம்ம மாப்பு நாபகத்துக்கு வந்தாரு. என்னத்தச் சொல்லறது எல்லாம் காசப்புடிச்ச சனியன் செய்யற வேலை.


இந்திய அரசியலமைப்புச் சட்ட நிர்ணய சபை மாநில அரசுகளின் அதிகாரங்கள், மத்திய அரசுகளின் அதிகாரங்கள் என்று பிரித்து வகைப்படுத்தியபோது, பள்ளிக் கல்வியை மாநிலங்களின் அதிகாரங்களுட்படுத்தியது சரிதான என்ற கேள்வி எழுத் தொடங்கியுள்ள நேரத்தில். ஒரே மாநிலத்தில், ஒரே வகுப்பில் படிக்கும் இரு மாணவர்களின் கல்வித்தரம் வேறுவேறாக அமைந்திருப்பது கேலிக்குறியது. இந்த லட்சணத்தில் ” ஒரே இந்தியா” என்று உணர்ச்சி பொங்கும் கூக்குரல்கள் நாடெங்கும். உண்ணும் உணவில், உடுத்தும் உடையில், வாழ்க்கை முறையில் ஏற்றதாழ்வுகள் இருப்பதைக் கூடச் சகித்துக் கொள்ளலாம், ஆனால் வருங்கால இந்தியா எனச் சித்தரிக்கப் படுகின்ற, குழந்தைகளுக்கு அடிப்படை அறிவு கொடுப்பதில் கூட ஏற்றதாழ்வு இருப்பதை சகித்துக் கொள்ள முடியவில்லை.  “வலுத்தவன் வாழ்வான்” என்ற காட்டுமிராண்டித்தனங்கள் தொடர்வது, வளர்ந்த நாகரீகச் சமுதாயத்தின் வெட்கக் கேடுகள். மிகுந்த பொருட்செலவில் நல்ல பள்ளிகளில், நல்ல பாடத்திட்டங்களில் பயிலும் குழந்தைகளோடு போட்டியிட முடியாமற்போகும், பொருளாதரத்தில் பின் தங்கிய பெரும்பாண்மைச் சமுதாயத்தின் இளந்தளிர்கள், எதிர்காலத்தில் கள்ளியாய், முட்செடியாய் மாறிப்போகும் சூழ்நிலை கண்முன்னே தெரிகிறது. அடுத்த தலைமுறைக்கான சமூக விரோதிகளை உருவாக்கும் பணியை அரசாங்கங்கள் தொடங்கிவிட்டதாகவே தோன்றுகிறது.  சமூக ஏற்ற தாழ்வுகள் இவர்களுக்கு அவசியமான ஒன்று. இல்லையென்றால் நலத்திட்டங்கள் என்ற பெயரில் எப்படிக் கொள்ளையடிப்பது?.


எதையோ பேசப்போக, எங்கெங்கயோ போயிடுச்சு நெனப்பு. சரி, விசியத்துக்கு வருவோம். மறுக்கா, ஒரு நா, அந்தப் பையனை தெருவில பார்த்தேன். என்னப்பா? எப்படி இருக்க, என்ன செஞ்சுகிட்டிருக்கன்னு கேட்டேன். பிளாஸ்டர் ஆப் பாரிஸ்னு  ஒரு மாவுப் பொருளு, அதைக் கொழைச்சு, அச்சுல அழுத்தி எடுத்து, வூட்டுள்ளார இருக்கற வரவேற்பரையில சீலிங்ல ஒட்டிகிட்டா அழகா இருக்குமாம். அதைச் செய்யற வேலையாம் அவனுக்கு. நாளொன்னுக்கு சோத்துக்குப் போக 30ரூவா குடுக்கறாங்களாம். இந்தூருல வேலை முடிஞ்சி போச்சு, நாளைக்கு திருப்பூருக்கு போகோணும். அங்கொருத்தரு பெரியவூடு கட்டிகிட்டிருக்காராம், அங்கயே போயித் தங்கி, வேலை செஞ்சி கொடுக்கோணும்முன்னு சொல்லிப் போட்டு அவஞ் சொன்னான், அண்ணா, இந்த மாசம் எங்கம்மா அப்பாவுக்கு, 800ரூவா அனுப்பப் போறேன். அங்க தம்பி தங்கசியோட சோத்துக்குக்கூட நெம்ப சிரமப்பட்டுகிட்டிருக்காங்க. இங்க இருக்கற தபாலாபீஸ்ல குடுத்தா, எங்கூருல இருக்கற அப்பா அம்மாகிட்ட கொண்டுபோயிக் குடுத்துருவாங்களாமா? நெசமாவுமே குடுத்துருவாங்களா?ன்னு கேட்டான்.  என்ன பதில் சொல்றதுன்னே தெரியலை எனக்கு. ஆமான்னு தலையாட்டிட்டு, அவனை பக்கத்துல இழுத்து, என்னோட சேர்த்து இருக்கிக் கிட்டேன்.


அரண்மனை போன்ற வீடுகளும், அலுவலகங்களும் பொழிவோடும், நம்மை அசரவைக்கும் அழகோடும் அமைந்திருந்தாலும், அவற்றை எந்தப் பிஞ்சுக் கரங்கள், ஒரு வேளை உணவுக்கான கனவில் உருவாக்கிக் கொடுத்திருக்கும்  என்று நினக்கும் போது, எல்லாம் மறந்து போய் அருவெறுப்பான எண்ணங்களே எங்கும் தோரணமிட்டுத் தெரிகின்றன.  பழங்கதைளும் புராணங்களும் கட்டமைத்தச் சமூகமும் அதன் விழுமியங்களும் தொடர்வதில், ஒரு நண்மை இருப்பதாகவே தோன்றுகிறது. பத்து வயது கிராமத்துச் சிறுவன் தன் உழைப்பின் மூலம் ஈட்டிய பொருளில், தன் குடும்பத்திற்கு ஒரு சிறுதொகையை, அனுப்பி வைப்பது என்பதே அவற்றின் வெற்றி.  தாய் தந்தையரை தோளிலே சுமந்து சென்று காப்பாற்றிய சிரவணின் கதை, போன்றவற்றைச் சொல்லிச் சொல்லி, சமூகம் தன் கட்டுமானத்தை விடாப்பிடியோடு வலுப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது. இந்தியப் பாரம்பரியம், கலாச்சாரம் என்ற கற்பனைகளைக் கட்டமைத்து, ஏய்த்துப் பிழைப்பதும், தர்மம், நியாயம் என்ற பெயர்களைச் சொல்லி அடுத்தவர் உழைப்பைத் திருடித் திண்பதிலே வெற்றி காண்பதை காணும்போதெல்லாம்,  நெஞ்சு பொறுக்குதில்லையே...............

பத்து வயதுச் சிறுவனுக்கு அடிப்படையான உணவும், உறைவிடமும், கல்வியும் கொடுக்க முடியாமல், போன ஒரு மனிதன், தன்னால் பிறந்தான், தனக்குப் பிறந்தான் என்று பெருமைப்பேசித் திரிவதும், அவனின் உழைப்பில் கிட்டும் சிறு தொகையை ஏற்றுச் செலவழிப்பதும் எந்தச் சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதாகிறது.  இப்படி எத்தனையோ மனிதர்களை விளிம்பு நிலைக்குத் தள்ளி, பச்சிளங் குழந்தைகளைத் தொழிலாளிகளாக்கி, “முப்பதுகோடி சனங்களின் சங்கம், முழுமைக்கும் பொதுவுடமை” என்று பேசித் திரிவதினாலோ, வல்லரசாகி, உலக நாடுகளின் நன்மதிப்பை பெற்றுவிடுவதினாலோ நாம் வளர்ந்த சமூகமாகி விடமாட்டோம்.

பிஞ்சுக்கரங்கள் தொழிற்சாலைகளில் கடுமையாகப் பாடுபடுவதும், புத்தங்கங்கள் ஏந்த வேண்டிய கைகளில், திருப்புளியும், மசியும் படர்ந்திருப்பது வேதனையளிக்கிறது. அந்த மசியும்,கரியும், இந்த தேசத்தின் மீது பூசப்பட்டதாகவே உணர்கிறேன்.

நெஞ்சு பொறுக்குதில்லையே.......


11 comments :

vasu balaji said...

அங்க சுத்தி இங்க சுத்தி மனசுல ஒரு லோடு பாரம் ஏத்தி வச்சிட்டீங்களே மொதலாளி. அப்பறம் இன்னோரு விசயம், மாப்பு கூட கேட்டிருந்த கவனம். கொங்குதமிழ்ல ஏதாச்சும் புத்தகம் இருக்குங்களான்னு. மண்டையொடைச்சிட்டு பொனைவெல்லாம் எழுதவேணாம். இப்புடி அனுபவத்தை எழுதலாமுல்லோ. பாருங் சாமி.

கோவி said...

நம்ப ஊரு தமிழோட அழகு அழகுதானுங்,, ஒனிமே இப்படி நானும் நம்மட ப்ளாகுல இந்த மாதிரி பண்ணி பாக்குறேனுங்.

KARTHIK said...

சும்மா நாட்ட குத்தம் சொல்லிமட்டும் ஒன்னும் ஆவரதில்லை மாமா..
இந்தப்பையனுக்கு இருக்குர புத்தி அவங்கப்பனுக்கு இருந்திருக்கனும்...

KARTHIK said...

பாவி பையன ஒரு பத்தாங்கிளாசாவது படிக்கவெச்சிருக்கலாம் :-(((

பழமைபேசி said...

மைசூர்ப்பாகாட்டம், நெகுநெகுன்னு வாகா வழிஞ்சோடுது நடை... அப்பப்பா, பத்துநாளைகொன்னு எழுதீட்டா அவிங்க ஏன் பதிவர்கள்ல ஒருத்தரா நீங்க இருக்குறதை ஒளிக்கப் போறாங்க சொல்லுங்க!!

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
எல்லா இடங்களிலும் வட இந்தியாவிலிருந்து வந்த சிறு பையன்கள், பெண்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். மனசு மிகவும் வேதனைப்படுகிறது.

Ramesh Lulla said...

Heart pains 1

Mahi_Granny said...

கொங்குத் தமிழில் மட்டுமில்லை . இப்படி அழகுத் தமிழிலும் கலக்குறீங்க . சுற்றிலும் நடப்பதை பார்த்ததில் ஒரு பதிவு.

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

இப்படிப்பட்ட விபரங்களை புத்தகமாக வெளியிடலாமே ..

சத்ரியன் said...

மாமா,
‘பூங்கொத்து’ அனுப்பி வெச்சிருக்கேன்.

என்னா அடி, என்னா அடி!
வீட்டை ஆளுறவங்களுக்கும், நாட்டை ஆளுறவங்களுக்கும்.

arasan said...

சும்மா நறுக்குன்னு சொல்லிருக்கிங்க ...
கொஞ்சுந்தமிழில் இனிமையாய் இருக்குங்கோ படிப்பதற்கு ...