Thursday, July 04, 2013

புண்ணாக்கு





ஒருவாரமா பண்ணையக்காரி ரவுசு தாங்கமுடியல..……பாலு நல்லால்ல, காயி நல்லால்ல…….கீரை நல்லால்ல…….எல்லாம் வெலையும் அதிகம்…ஒரு ருசியுமில்ல….ஒரே கலப்படம்………….பேசாமா நம்ம இடத்துல, வூட்டுக்குத் தேவையானதை நாமளே பயிர் செஞ்சிக்கலாம்னு சொல்லி, நாலு வெதை பொட்டணத்தையும், ஒரு கொத்தையும்  கையில கொடுத்து, அதோட விட்டாளா…….நல்லதா ரெண்டு எருமை வாங்கிவுட்டா பாலுக்கு பாலுமாச்சு, வெண்ணை வாங்கற செலவுமிச்சமுன்னா பாருங்க……….நொந்து போயிட்டேன்….


. போனவாரமே  பெருசு சொல்லிச்சு, கண்ணூ……….கெரகம் கெட்டுக் கெடக்கு……பாத்து கவனமா இருடான்னு……. என்னிக்கு நாம கேட்டிருக்கிறோம்…….புதுசா இன்னிக்கு கேக்க……..

சீக்கிரமே கோவணம், கட்டிகிட்டு, மமுட்டி புடிக்கப் போறேன்……….   தம்பி சுரேஷ் மறக்காம போட்டா புடிக்கற பொட்டியோட வந்திரு…………


ஊரெல்லாம் சுத்தி, ஒலைச்சு, கலைச்சு, வூடுவந்து சேந்து, ரவைக்கு என்னாடா கெடைக்கும்னு பார்த்தா, கோதுமைச் சோறாம் .  கேட்டா, ஒடம்புக்கு அதான் நல்லதாம்.  சக்கரை நோவு வராதாம், கொதிப்பு நோவு வராதாம். என்னத்தைச் சொல்ல……..ஏங்கண்ணூ….துளி எண்ணையாவது ஊத்தி கெளரி வைக்கலாமுல்ல….இப்புடி வரட்டியாட்டமிருக்கேன்னு கேட்டது தப்பாப் போச்சு. 

இந்த யெயற்கை வெவசாயம்,  கிராமிய வொணவு, வொணவே மருந்துன்னு சொல்லிகிட்டிருக்கறவங்களைக் கட்டிவச்சு ஒதைக்கோணும்னு தோணுது.

ஊருல விக்கிற எண்ணையெல்லாம் ஒரே கலப்படமாம். வெலையும் அதிகமாம்…..என்னத்தச் சொல்ல……….சரி இவளோட மல்லுக் கட்டிகிட்டுருக்க முடியாதுன்னு முடிவு செஞ்சி, காலைலயே நாடார் கடைக்குப் போயி, நல்ல, கடலையெண்ணை வாங்கிப்போடுவோம்னு முடிவு செஞ்சிட்டேன்.

காலம்பற ஏந்திருச்சு, நாடாரு கடைக்குப் போனா கடலையெண்ணை லிட்டர் 160/-..  ரூவாயாம்……. செரி இதெல்லாம் நமக்கு கட்டுபுடியாகாது…… நாமளே போயி பருப்பு வாங்கி, ஆட்டிகிட்டு போயிடலாம்னு, பொறப்பட்டு, நசியனூர் யாவாரியப் பாத்து, 15 கிலோ கடலைப் பருப்பை வாங்கி பிளசருல தூக்கிப் போட்டுகிட்டு, நேரா மேட்டுகடை அறவைமில்லுக்குப் போயி கூடவே கோந்திருந்து, ஆட்டச் சொல்லிப் போட்டு, ஒரு ஒரமா உக்கோந்திருந்தேன்.

 பொறப்படும்போதே வூட்டுகாரி சொன்னா, எங்கியாவது கேண மாதிரி, வேடிக்கை பாத்துகிட்டுருந்தா அறைக்கிறவன் ஏமாத்திப்போடுவான். கவனமா பக்கத்திலயே இருந்து வாங்கிகிட்டு வந்திருன்னு.  புண்ணாக்கை அவங்கிட்ட உட்டுபோட்டு வந்திடாத, கையோட வாங்கியாந்திரு.  இல்லைன்னா அவன் அதுல எண்ணையோட எடுத்து வச்சிக்கிவான்னா.

நானும் செக்கைச் சுத்தி சுத்தி வந்து கவனமா பாத்துகிட்டிருந்தேன். கடேசில பாத்தா 6கிலோ எண்ணையும் 11கிலோ புண்ணாக்கும் கெடச்சுது.  அடக் கெரகமே, இந்தப் புண்ணாக்கை வச்சிகிட்டு என்ன செய்யறது தெரியாம வூட்டுக்கு வந்து சேந்தேன்…..

கடலை கொட்டை 15 கிலோ  1125ரூவாய்
அறவைக்கு                      105ரூவாய்
பிளசருக்கு டீசல்                 500ரூவாய்
ஆகமொத்தம்                    1730ரூவாய்
எண்ணை கெடச்சது             6கிலோ
புண்ணாக்கு                      9கிலோ……

மொத்தத்தில  ஒரு லிட்டர் 288/-ருவாய்க்கு வாங்கியிருக்கேன். இந்த புண்ணாக்கை என்ன செய்யறதுன்னு தெரியல……….

எந்த கெரகம் புடிச்சவனாவது எந்த டிவியிலாச்சும், புண்ணாக்கு தின்னா இந்த வியாதி வராது, அந்த சத்து இருக்குதுன்னு சொல்லாம இருக்கோணுமேன்னு வேண்டிகிட்டுருக்கேன்.


2 comments :

பழமைபேசி said...

இஃகிஃகி... வாங்க ராசா வாங்க!!

vasu balaji said...

அரச்சப்ப 11 கிலோ வந்த புண்ணாக்கு ஊட்டுக்கு வரங்காட்டியும் 9 கிலோவானது எப்படி? நடுவுல யாரூட்டுக்கு போச்சு அந்த புண்ணக்கு:))