Wednesday, December 18, 2013

அவளின் ஆகச் சிறந்த நாள்- திருவாதிரை




 
 

மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக்
கையாற் குடைந்து குடைந்து உன் கழல்பாடி

ஆனந்தி….அந்த அவரைக்காய எடுத்து சின்ன பாத்திரத்துக்கு மாத்திரு…..உமா இலையைக் கழுவிப் போட்டு காயெல்லாம் எடுத்து வச்சிடு..

ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல் போற் 
செய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல் 

அந்த அவியலுக்கு கொஞ்சம் தயிறு ஊத்தி வச்சிடு…..குக்கர் சத்தம் குறைஞ்சிருச்சான்னு பாத்து, ஒரு பாத்திரத்தில எடுத்து வைச்சிடு

மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்

ஏப்பா, போயி குளிச்சிட்டு வரலாம்ல, மச மசன்னு நின்னுகிட்டு…..நல்ல நாளும் அதுவுமா இப்படியா குளிக்காம வீடுபூரா சுத்திகிட்டிருக்க…

உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம் 
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.

உங்கப்பா வந்திட்டாரா? …காலைல கோயிலுக்குப் போனமா? வந்தமான்னு இல்லாம……போறவங்க வாரவங்ககிட்ட நாயம் பேசிகிட்டிருந்தா நேரம் காலந் தெரியாது இந்த மனுசனுக்கு….


மருமகள்களையும், எங்களையும் (நான், என் தம்பி), கூடவே என் அப்பாவையும் சேர்ந்து விரட்டிக் கொண்டிருக்கிறாள் என் அம்மா, பூசையறையில் இருந்தபடியே.


ஒரு திரைப்படத்தின் தொடக்கக் காட்சியில் வரும் வீடு போலவே இருந்தது என் வீடும்….


நிம்மதியா சாமி கும்பிட விடறீங்களா?   சரி.சரி. எல்லாரும் வாங்க..படைச்சு சாமி கும்பிடனும்…..குழந்தைங்க எல்லாம் பசியோட இருக்குதுங்க…..


வருடத்தின் ஆகச்சிறந்த அந்த நாளை அவள் இழக்கத் தயாராகயில்லை. தனித்தனியாக வசித்துவரும் நாங்கள் அனைவரும் ஒன்றுகூடுவது, இது போன்ற ஏதாவது ஒரு சில நாட்களில் தான். 


அவளுக்குத் தெரிந்த பாடல்களையெல்லாம் பள்ளிக்கூடச் சிறுமி மனப்பாடச் செய்யுள் ஒப்பிப்பது போல், எந்தச்  சாமியிடமோ சொல்லித் தீர்த்துக் கொண்டிருக்கிறாள்.  நாங்கள் எல்லோரும் கை கூப்பியபடி அவள் பாடுவதையே பார்த்துக் கொண்டிருப்பதில் அவளுக்குள், ஒரு பெருமிதம். 


அவள் பாட்டுப் பாடி, பூசை செய்ய, இரண்டு மகன்களும், மருமகள்களும், கணவனும் கை கட்டி, கண் மூடி நின்று கொண்டிருக்கும்போது அளவில்லா ஆனந்தத்தில் திளைத்திருக்கவேண்டும் அவள் மனம். ஒரு காலத்தில், உணவு மேசையில் உப்பு வைக்கப்படாமலிருந்ததால், எட்டி உதைத்து மொத்த உணவையும் கீழே கொட்டி, இரண்டு நாள் அழுது புரண்டு மன்னிப்பு கேட்டும், இரங்கி வராத தன் கணவன், தன் முன் அமைதியாய் தன் ஏவல்களைக் கேட்டிக் கொண்டிருப்பது அவளுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கத்தானே வேண்டும்.


 பூசையில் வைத்திருந்த மஞ்சள் கயிறுகளை வெற்றிலை பாக்கோடு வைத்து, மருமகள்களிடம் கொடுத்து, புருசங்கால்ல விழுந்து, தொட்டுக் கும்பிட்டு, நல்லபடியா நோய் நொடியில்லாம இருக்கோணும்னு வேண்டிகிட்டு, மஞ்சக் கயிறை கட்டிக்குங்க……. 


என்று கொடுத்தவள், அவர்கள் எங்கள் கால்களில் விழுந்து வணங்குவதை உறுதிப்படித்திக் கொள்ளுவிதமாக, எங்கள் அருகில் வந்து நின்று கொண்டாள்.  என் மனைவி என் காலில் விழுந்து வணங்கி, மஞ்சள் கயிறைக் கொடுத்து, தலை குனிந்து நிற்கும் காட்சி அவளுக்கு கொடுத்த சந்தோசத்தை அளவிடமுடியாது.  ஏனோ இன்று எப்பொழுதும் விட மகிழ்ச்சியாக இருப்பதாக தோன்றுகிறது.  .


அத்தை நீங்களும் மாமா காலில விழுந்து கும்பிட்டு மஞ்சகயிறு கட்டிக்குங்க என்று பெரிய மருமகள் சொன்னதும் ஏனோ அவள் அதை ரசிக்கவில்லை என்று தோன்றியது........


இத்தனை வருசத்துக்கப்புறம் என்ன விரதம், சாங்கியம்…ம்ம்ம்….என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டே, தன் கணவனிடம் மஞ்சள் கயிறு தட்டத்தை நீட்டினாள்……


எதற்காகவும் அவளின் அந்த ஆகச்சிறந்த நாளை அவள் இழக்கத் தயாராகவில்லை…….




1 comment :

பழமைபேசி said...

ஆகா... எல்லாம் உங்க ஆயுள்க்காகத்தானுங்க!! அதிலென்ன அவளின் ஆகச்சிறந்த நாள்??