வளங்களையும், வெற்றிகளையும்,
பெருமைகளை மட்டுமல்ல, பேரிடர் காலங்கள் குறித்தும், அவற்றின் தாக்குதல்கள், வலிகள்,
துயரங்கள், இழப்புகள் இப்படி பலவற்றையும்,
வாழ்வியல் சரிதைகளாகவோ, பாடல்களாகவோ, புதினங்களாகவோ, ஏதோ ஒருவகையில் பதிவு செய்துவிட்டுச்
சென்றுள்ளார்கள் அந்நாளைய மக்கள். அன்றைய நாளின் துயரத்தைப் பதிவு செய்வதன் மூலம்,
வரலாற்றைப் படைக்கின்றோம் என்ற பெருமிதமோ, யாரையோ, எதற்கோ வஞ்சம் தீர்த்துக் கொண்டோம்
என்ற திருப்தியோ இல்லாமல், அவை அன்றைய சோர்வைத்
தணிக்கும் புலம்பல்களின் வெளிப்பாடாகத்தான், இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.
1876-77 ஆம் ஆண்டு
தமிழ் தாது வருடம். பெரும் பஞ்சம், மழையின்மை, வறுமை, கொடிய நோய் தொற்று,
இப்படி பலவும் மனிதசமூகத்தை திணறடித்துக் கொண்டிருந்த காலம். அந்த நாட்களை மையப்படுத்திக்,
காலங்காலமாக வாய்மொழிப்பாடல்களாகவும், சுவடிகளிலும் இருந்தவற்றைத் தொகுத்து, வரலாற்று
அறிஞர் புலவர்.செ.இராசு அவர்கள் ”பஞ்ச கும்மிகள்” என்ற நூலை வெளிக்கொணர்ந்திருந்தார். காவ்யா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட அந்த நூல்
தான் நான் படித்த முதல் துயரமான நூல். அதில் குறிப்பாக அரசர்குளம் சாமிநாதன் எழுதிய பாடல் வரிகள். பலநாட்கள் மன நிம்மதி இழந்து தவிக்க வைத்தன. ஆனாலும்,
அவற்றின் மூலம் அன்றைய சூழலை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. ரெட் டீ நாவலில் பி. எச்.
டேனியல் குறிப்பிடுவது போல, இன்றைய நமது செல்வங்கள் கூட, இறந்த காலத்தின் துன்பங்களின்
மீது கட்டியமைக்கப்பட்டவைதான் என்பதை உணர வைத்தன.
வலியைத் தின்று
தீர்க்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.
எதிர்கொண்டு போராடும் மனநிலையிலும், வலுவிலும் நாம் இல்லை. இயலாமை, நம்மிடையே
ஒரு, பேரமைதியை விதைத்திருக்கிறது. இனி என்ன நடந்தால் என்ன? என்ற மனோநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம். இந்த காலகட்டத்தினை, ஏதோ ஒருவகையில் பதிவாக்கிவிட
வேண்டும் என்று ஏதோ ஒன்று உள்ளிருந்து என்னை உந்திக் கொண்டே இருக்கிறது. ஏன் பதிய வேண்டும்? என்ற கேள்வி வருவதையும் தவிர்க்க
முடியவில்லை.
தமிழ் இலக்கிய
உலகமும், ஆர்வலர்களும், தங்களால் இயன்ற அளவில், இந்தப் பேரிடர் காலத்தினை பதிவு செய்துவிட
முடியாதா? என்று தவிக்கின்றனர். கொரோனா பேரிடரைப்
பதிவு செய்ய வேண்டிய அவசியம் குறித்தான பதிவுகளைத், தொடர்ந்து சமூக வலைதளங்களில் பார்க்க
முடிகின்றது. ஓரிரு பதிப்பகங்கள், அமைப்புகள்,
போட்டிகளையும் அறிவித்திருக்கின்றன.
சமூக வலைதளங்களின்
தாக்கங்கள் இல்லாத ஒரு எழுத்தாளரை, இன்று தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. பெரும்பாலானவர்களின் எழுத்துக்களில், அவர்கள் அறிந்தோ,
அறியாமலோ, ஏதோ ஒரு சாயம் ஒட்டிக் கொள்கிறது.
எதை எழுதினாலும், உள்ளார்ந்து, அரசின் மீதான காய்ச்சல் இல்லாமல் எழுதவே முடியாது,
என்ற நிலைக்கு தமிழ் எழுத்தாளர்கள் தள்ளப்பட்டிருப்பது போலத் தெரிகிறது, அரசுகளும்
அரசர்களும், விளிம்பு நிலை மனிதர்களை கைவிட்டு, பல நூறு வருடங்கள் ஆகிவிட்டன,
பத்தாயிரம் வார்த்தைகளில்
சிறுகதைகளைப் புனைபவர்களையும், விடிய விடியக் கண் விழித்துக், காதலை மீட்டெடுப்பவர்களையும்,
ஐரோப்பிய, ரசிய மொழிபெயர்ப்புகளின் தாக்கத்தால், குறியீடுகள் மூலம் அரசுக்கெதிராய்
புரட்சி நடத்திக் கொண்டிருப்பவர்களையும், ”கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே” என்று
எழுதி, பக்கங்களை நிரப்புபவர்களையும், கொரோனோவின் நிமித்தமாய் விட்டுவிடுவோம்.
உறவினர் வீட்டிற்கு,
ஓரிரவைக் கழிக்க வந்தது ஒரு குடும்பம். ஒற்றைப் படுக்கை அறை கொண்ட அந்த வீட்டில், தற்போது
இரண்டு குடும்பங்கள். 4 பெரியவர்கள் 3 குழந்தைகள். பொருளாதார சிக்கல், அது ஏற்படுத்தும் மன உலைச்சல்களோடு,
வெடித்துச் சிதறும் நிமிடத்திற்காக கணன்று கொண்டிருக்கிறது அந்த 300 சதுர அடி எரிமலை.
10மைல் தூரத்தில்,
இருக்கும் தொழுவத்தில், பசியால் கதறும் பசுவின் குரல், கனவில் கேட்கிறது என்று சொல்லி,
அதிகாலை 3 மணிக்குத் சைக்கிளை எடுத்துக் கொண்டு போகும் 70 வயது முதியவர்.
ஆளரவமற்ற தெருவில்,
உடைந்த, ஒட்டுப் போட்ட, செல்போனில் இருந்து வரும் இளையராஜா பாடலோடும், அரைக்கட்டு பீடியோடும், காசில்லாத இரும்புப் பெட்டி(ATM)க்குப் பாதுகாப்பாய்
கிடக்கும் சீருடை அணிந்த கிழட்டுக் காவலாளி
100 ரூபாய் பணத்திற்காக,
கீரைக்கட்டோடு நாள்தோறும் ராஜநடை போடும்,
70 வயது ராஜகுமாரி.
ஒட்டுமொத்த ஊரும்,
உயிர் பயத்தில் பதுங்கியிருக்க, எப்போதோ தெருவில் பார்த்த, யாரோ ஒருவனுக்காக, சோறு
கட்டிக் கொண்டு திரியும் தன்னார்வலர்கள்.
அழுகி நாற்றமெடுக்கும்
கழிவுகளோடு, தன் நாளைத் தொடங்கும், துப்புரவுப் பணியாளர்கள்
உயிரைப் பணயம்
வைத்துத் தாயம் உருட்டிக் கொண்டிருக்கும் மருத்துவப்பணியாளர்கள்.
இப்படியான என்னற்றவர்களின்
எழுதப்படாத துயரங்களைப், பதிவு செய்துதான் வைப்போமே.
இந்தப் பேரிடர்
காலத்தினைப் பதிவு செய்யும், நல்ல படைப்புகளைத் தேடித்தேடி வாசித்துக் கொண்டே இருக்கின்றேன். என் பார்வைக்கு வராதவை, நிறையவே இருக்கும் என்று
நம்புகிறேன்.
நீங்கள் வாசித்த,
அல்லது எழுதிய, கொரோனா பேரிடர் காலத்தைப் பதிவு செய்யும் படியான, நல்ல படைப்புகளுக்கான
சுட்டியை இங்கே குறிப்பிட்டால், மகிழ்வேன். படைப்பாளிகளும், நேரடியாக என்னுடைய மின்னஞ்சலுக்கும்
அனுப்பி வைக்கலாம். அவற்றைத் தொகுத்து, அச்சில் கொண்டு வரும் எண்ணமும் இருக்கிறது.
.”மாடு கட்டிப்
போரடித்தால் மாளாது” என்பது மட்டுமல்ல நம் வரலாறு. பசிக் கொடுமை தாங்காமல், தன்னையும்
தன் குடும்பத்தையும், அடிமைகளாக விற்றுக் கொண்டதும் நம் வரலாறுதான்.
No comments :
Post a Comment