Tuesday, January 24, 2012

வட்டார வழக்கு.........

நேற்று மாலை மின் தமிழ் குழுமத்தின். திரு கண்ணன் அவர்களோடு அலைபேசியில் பேசினேன். கடந்த வாரம் தமிழ் மரபு அறக்கட்டளையைச் சார்ந்த திரு. நா. கண்ணன் அவர்களும், திருமதி சுபா அவர்களும் ஈரோடு வந்திருந்தனர்.  மின் தமிழ் குழுமத்தின்உறுப்பினர் திருமதி. பவள சங்கரி அவர்களின் பேரன்பினால் இவர்கள் இருவரையும் சந்திக்கும் வாய்ப்பு பெற்றேன். அவர்களோடு சேலம் கவிஞர். தமிழ்நாடன் அவர்களைச் சந்தித்து பேசி வந்தோம். பல அறிய தகவல்களோடும், புத்தகங்களோடும் ஊர் திரும்பினோம்.. 


ஈரோட்டிலிருந்து சேலம் செல்லும் வழியில் பல்வேறு செய்திகளை அனைவரும் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது.  செல்லும் வழியெங்கும் கொங்கு வட்டார வழக்கில் நான் பேசுவது குறித்து விமர்சனங்களும், பாராட்டுகளும் கிடைக்கப் பெற்றேன்.

கிராமியச் சுழலில் வளராமல், நாகரீகமென நம்பப் படுகின்ற நகரச் சூழலில் வளர்ந்தவன் நான். வட்டார வழக்கில்  மக்கள் பேசுவதை கேட்கும்பொழுது மகிழ்சி அடைந்ததை வார்த்தைகளில் எழுதிட முடியாது.  ஆனால் நான் கல்லூரியில் முதுகலை பட்டம் முடித்து ஈரோட்டிற்கு வந்த சேர்ந்த பொழுது, ஒன்றை தெளிவாக உணர முடிந்தது.  நாகரீகம்,  படித்தவன் என்ற போர்வைக்குள் தம்மை நுழைத்துக் கொள்:வதற்காக,  மக்கள்  வட்டார வழக்கை விடுத்து, நாகரீகத் தமிழுக்கு மாறிப்போனதை காண முடிந்தது.
 
திருமணவீட்டிலிருந்து, சிறு தெருமுனை கடை வரை, எங்காவது உணவு வேளையில், ”சோறு கொடுங்க” ”சோறு இருக்கிறதா?” என்று நான் கேட்ட போது அவர்கள் என்னை நம்ப முடியாமல் பார்த்தனர். உணவு வேளைகளில் அனைவரும் ”ரைஸ் போடுங்க, ரைஸ்எடுத்துகிட்டு வா” ”மீல்ஸ் எடுத்துகிட்டு வாங்க” அப்படி பேசுவதை கேட்ட போது எனக்குள்ளே ஏதோ வலி வந்தது உண்மை.  சோற்றுக்கும் அரிசிக்கும்முள்ள வேறுபாடு தெரியாதவர்கள் இல்லை இந்த மனிதர்கள். நாகரீகம் என்ற பெயரில் இவர்களின் பேச்சும் நடவடிக்கையும் என்னை வேதனைப் படுத்தியது உண்மை.

வட்டார வழக்கில் பேசுபவன், படிக்காதவன், நாகரீகச் சமுதாயத்தைச் சாராத அறிவிலி என்ற எண்ணம்  மக்களிடையே வேரூன்றத் தொடங்கியது.  என் தோட்டத்தில் வேலை செய்பவரிடமும், எனக்கு கீழே வேலை செய்பவரிடமும்,நான் பழகும் நண்பர்களிடமும், நான் பேசும் மொழியால் கடைபிடிக்கும் நாகரீக நடவடிக்கைகளினாலும், என்னை உயர்ந்தவன் என்று காட்டிக் கொள்ள வேண்டிய விருப்பமும் அவசியமும் எனக்கு இல்லை. எனவே எல்லோரிடமும் என் வட்டார வழக்கில் பேசத் தொடங்கினேன். சக மனிதனாக மதிக்கும், என்  உடன்பணியாற்றுபவர்களோடு சுற்றத்தோடும் நட்போடும் என் வட்டார வழக்கில் பேசுவதன் மூலம் நெருக்கமாய்  இருப்பதாய் உணர்ந்தேன். அதை இன்று வரை தொடர்கின்றேன்.

 என் வட்டார வழக்கில் நான் பேசுவது எனக்கு இயல்பானது அல்ல. ஆனாலும், விடாப் பிடியாக என் வட்டார வழக்கில் இயன்ற அளவு பேச முயற்சிக்கின்றேன். என் பாட்டனும் முப்பாட்டனும், பேசிய இந்த வழக்கு மொழி என் மக்களோடு என்னைநெருக்கமாக்கியிருக்கிறது.  சிறு உணவு விடுதி அல்லது தேநீக் கடையில் சென்று “ ஏனுங் ரெண்டு டீ போடுங்” ” கிழக்க மழையுங்களா?” ”தெக்க போறனுங்க, மறுக்கா நாளைக்கு தான் வருவனுங்” இப்படி வட்டார வழக்கில் நான் பேசுவதால் நான் நாகரீகமனிதனாக, படித்தவனாக ஏற்கப்படாமல், இந்த மேட்டிமைச் சமூகத்தால் நிராகரிக்கப் படலாம். அது குறித்த கவலை எனக்கு இல்லை.

என் அன்பின் நண்பர் பழமைபேசிmaniyinpakkam.blogspot.com,pazamaipesi.com அமெரிக்க மண்ணிலே கணிப்பொறி வல்லுனராக பணியாற்றும் இந்த வேளையிலும், அவர் யாரிடம் பேசும் போது ஆங்கில கலவாத தனித் தமிழிலும், வட்டார வழக்கிலும் பேசுவது எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது/. இன்றைய என்னுடைய வட்டார வழக்கு மீதான காதலுக்கு அவரின் நட்பே ஊக்கமாக அமைந்தது.

வேற்று மாநிலத்தில் அல்லது வேற்று நாட்டில், நம் மொழி பேசுபவரோடு ஏற்படும் சந்திப்பு எந்த அளவு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் நமக்கு கொடுக்குமோ, அதே அளவு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தருகிறது எனது வட்டார வழக்கில் என் மக்களோடு நான் பேசுவது. 

பேராசிரியர் கண்ணன் இன்று மாலை என்னோடு அலைபேசியில் பேசும் போது சொன்னார், உங்களால் நானும் கடந்த ஒரு வாரமாக பாண்டித் தமிழில் பேசுகிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். எனக்கும் மகிழ்ச்சிதான்.  என் மொழியால் நான் எங்கிருந்துவருபவன், எப்படிப் பட்டவன்,என்பதை இனங்கான ஏதுவாக அமைந்திருக்கும் வட்டார வழக்கு தவிர்த்து ”ஷ,”வையும்” ஜ “வையும் இன்னும் இருக்கும் அத்தனை கிரந்த எழுத்துக்களையும்,வம்படிக்கு இணைத்துக் கொண்டு எனக்கு பழக்கமில்லாத ஒரு புதிய பேச்சு வழக்கு மொழியை பின்பற்றி என் மேட்டிமைத் தண்மையை காட்டிக் கொள்ள எனக்கு விருப்பமில்லை.

வட்டார வழக்கு, மொழியின் திண்மையினை சீர் குலைக்கும். சாதீயத்தை கட்டமைக்க முனைகிறது, மொழியின் பெருமையை கெடுக்கும் என்று பேசும் பேரறிஞர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். வட்டார வழக்கு என்பது வித்தியாசமான ஒரு வேற்று மொழியில்ல. இன்று நீங்கள் பேசும் நாகரீகத்தமிழின்  பல வேர்ச்சொல்களைத்தான் நாங்கள் இன்றும் பயன்படுத்துகிறோம்.  எங்கள் வட்டார வழக்கின் சிறப்பே இன்னும் நாங்கள் வேர்ச்சொற்க:ளோடும் மரபுப் பெயர்களோடும் புழங்கிக் கொண்டிருப்பதுதான். . ஒலிக் குறிப்புகளில் ஓரிரு மாத்திரைகள் கூடக் குறைய வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் இவையும் இயல்பானவையே.

சொந்தங்களையும், நட்புகளையும், உறவுகளையும் பிரிந்து,பொருள் ஆதாரம் தேடும் சூழலில், நமக்குள்ளே நாம் தொலைந்தே வெகுகாலமாகிவிட்டது.ஆனாலும்  இன்று இணையப் பெருவழியில் வட்டார வழக்கு பெருமைக்குரிய விசியமாக மாறிப்போனதில் எனக்கு மகிழ்ச்சியே.  பல நேரங்களில் வட்டார வழக்கில் நாம் பலரும் பேசத் தொடங்கியுள்ளதை காணமுடிகிறது.

வட்டார வழக்கில் எழுதப் படும் கதை மற்றும் கட்டுரைகள் பெரும் வரவேற்பை பெருகின்றன.  நட்சத்திர எழுத்தாளர்கள் கூட அவரவர் வட்டார வழக்கில் எழுதிக் குவிக்கின்றனர். திரைப்பட வசனங்களில் கூட வட்டார வழக்கே முன்னிறுத்தப் படுகிறது.

வாழ்க தமிழ்ச் சமூகம்


வட்டார வழக்கில் எழுதப்பட்ட ஒரு கவிதை......



என்னெய அடீங்கொ
கொல்லுங்கொ
காவலுக்கு ஆள் போடுங்கொ
நீங்கொ பாத்து வெச்சிருக்கிறெ
மாப்புள்ளைக்கெ என்னெக் கெட்டி வெய்யுங்கொ
கட்டிக்கெறென்
அவனுக்கு புள்ளெ பெத்துத் தரச்சொல்லுங்கொ
பெத்துக்கெறென்
ஆனா
என்னிக்காவது ஒரு நா
எங்கெய்யாவது ஒரு வாட்டி
அவரு வந்து ‘வா போயர்லாம்’னு
கூப்புட்டுப்போட்டார்னு வெய்ங்கொ
என்றெ அப்பன் மேல சத்தியமாச் சொல்றென்
போட்டெதும் போட்டபெடி கெடக்கெ
அப்பிடியெ அவருகூடப்போயிர்ருவென்…. ஆமா….

                                               -கவிஞர் மகுடேசுவரன்.
                                           http://kavimagudeswaran.blogspot.com/


திரு. பெருமாள் முருகன் அவர்களின் சிறுகதை:

மாப்புக் கொடுக்கோணுஞ்சாமி..........


http://www.perumalmurugan.com/2011/11/blog-post.html



27 comments :

G.Ganapathi said...

இவத்திகாள / அவத்திகாள ன்னு நாம பேசறப்ப சொல்லிடம்ன இந்த நாகரீக பதர்கள் பார்க்கும் பார்வை சொல்லில் அடங்காது ஆணும் நமக்கு வம்படிய அப்படியேதாங்க வரும் . இந்த விசுக்க இல்லாட்டியும் இன்னொருவிசுக அவுங்களும் பெசுவங்கனு நம்பிக்கை தாங்க . இங்க மலேசியாவுல கொஞ்சம் பரவலைங்க ( வழக்கம் போல பீட்டர் உடற பொண்ணுங்களை தவிர்த்து ) ரொம்ப ந அப்பறமும் பவிசுட்டு இருந்தேன் மாரியான சொற்களை கேட்க்கிறேன்

vasu balaji said...

அப்புடி போடுங்க மொதல்ஸ்:))

Ambeesan said...

That was during November 1960. After our father's demise, the family [of 7 brothers, a sister and recently widowed mother] shifted from Ammayanayakkanur to Erode, where our elder brother had in his possession railway quarters. Though was born in Munar, I was brought up in Madurai district [Bodinayakkanur, Uttamapalayam, Cumbum, and then Ammayanayakkanur]and was not conversant with the dialect of Tamizh spoken in Erode.
One evening mother asked me to get some vegetables from the nearby roadside market. Then I was around 16 years - having completed SSLC at the age of 14/15 followed by PUC.
Vendors were selling vegetables in small heaps. I asked a woman vendor for the price of brinjal. She said,"Oriyooru naalaNa". That was what she repeatedly said. I did not know what she said and hence returned home empty handed.When I explained to mother what the vendor told me, she also could not decipher that. Ultimately after my brother returned from work he said what that vendor meant - it was, "Oru kooru (heap) naalu aNa."

அகல்விளக்கு said...

ரொம்ப அருமைங்க அண்ணா...

இழுத்து இழுத்து இங்கிலீசு பேசுறதத்தான் இப்போ பெருமைன்னு நினைக்கிறாங்க... ஆனா உண்மையான பெருமை அவங்கவங்க வட்டார வழக்குமொழி பேசுறதுதான்னு யாரும் புரிஞ்சுக்கிறது இல்ல...

Kodees said...

அருமை ஆரூரன். நா நெனச்சத அப்பிடியே சொல்லீட்டிங்க! என்ன சொல்ல!! இதப்படிக்கச்சொல்லுங்க எல்லாருத்தையும்.

பழமைபேசி said...

நாம் நாமாக இருப்பதால நமக்கெல்லாமே பெருமைங்க மாப்பு... இஃகி

அமர பாரதி said...

நல்ல பதிவுங்க மாம்ஸு.

//அத்தனை கிரந்த எழுத்துக்களையும்,வம்படிக்கு இணைத்துக் கொண்டு எனக்கு பழக்கமில்லாத ஒரு புதிய பேச்சு வழக்கு மொழியை //

இன்னொரு பக்கம் சமீபமா (அந்த சமீபம் இல்ல) படிச்ச சில பதிவுகள்ல வலுக்கட்டாயமா வட்டார வழக்க தவறா உபயோகிப்பதும் நடக்கிறது. வட்டார வழக்கு என்பது அதுவாக வர வேண்டும். அது பழக்கமில்லன்னா தெரிஞ்ச மாதிரி பேசலாம். வம்படியா வட்டார வழக்கு பேசறதும் தப்புதானே?

cheena (சீனா) said...

அன்பின் ஆரூரன் - வட்டார வழக்கு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. கிராமங்களில் இருந்து பலர் பணி நிமித்தம் நகரங்களுக்குச் சென்று - இங்கு வரும் போதெல்லாம் நகர நாகரீகத் தமிழைத் தான் பேசுகிறார்கள்.என்ன செய்வது ......

மகுடேஸ்வரனின் கவிதையும் பெருமாள் முருகனின் கதையும் அருமை. மிக மிக இரசித்தேன். நல்வாழ்த்துகள் ஆரூரன் - நட்புடன் சீனா

ILA (a) இளா said...

பேச்சுவழக்கை பேச்சுக்கு மட்டும் சரி, அதையெ எழுதுவதால் மொழி நசுங்குகிறதுன்னு ஒருத்தர் சொன்னாருங்க. அதுக்கு என்ன பதில் சொல்ல?

Mahi_Granny said...

உங்கள் பதிவின்படி ''ஒலிக் குறிப்புகளில் ஓரிரு மாத்திரைகள் கூடக் குறைய வேண்டுமானால் இருக்கலாம்''ஆனால் கேட்கும் போது இனிமையாக இருக்கே. அதென்ன உங்க வட்டாரத்தில் மட்டும் தனி தமிழ் பாடத்திட்டம் ஏதேனும் இருந்ததா?நீங்கள் புழங்கும் நிறைய வார்த்தைகள் என் வட்டாரத்துக்கு உண்மையாலுமே புதிது. மகுடேஸ்வரனின் கவிதை வழக்குச் சொல்லுக்காக மட்டுமில்லாமல் சிரிக்க வைத்தது .

அன்புடன் நான் said...

மிக துடிப்பான கட்டுரை.
உங்க உணர்வுக்கு என் வணக்கம்.


அண்மையில் எனக்கு வலியேற்படுத்தியது.... ஒரு தமிழனின் அடையாளாமான உழவர் பண்டிகைக்கு கூட happyபொங்கல் சொல்லுறானுவோ...

இந்த கட்டுரையில் நான் மிக நெகிழ்ந்தேன்.
அதற்காக உங்களை பாராட்ட மாட்டேன்.... உங்க வட்டார மொழியை பேசுவது உங்க கடமை!

இதை பகிர்ந்தமைக்கும்... யாருக்கும் கவலைப்பட்டு பகட்டுக்காக இல்லாமல்... நீங்க நீங்களாகவே இருப்பதற்கு என் வணக்கம்.

நன்றி.

ஓலை said...

Enunga! enra sanaththin paasai pesuveegalaa ?
:-)

ஆரூரன் விசுவநாதன் said...

//கணபதி//
//நமக்கு வம்படிய அப்படியேதாங்க வரும் . இந்த விசுக்க இல்லாட்டியும் இன்னொருவிசுக அவுங்களும் பெசுவங்கனு நம்பிக்கை தாங்க //

மனிதர்கள் மாறிக்கொண்டேதான் இருக்காங்க கணபதி. சீக்கிரம் வருவாங்க

ஆரூரன் விசுவநாதன் said...

//நன்றீங்க ஆசானே//

ஆரூரன் விசுவநாதன் said...

//நன்றிங்க அம்பீசன்//

ஆரூரன் விசுவநாதன் said...

//அகல்விளக்கு//

உண்மைதான் ராசா, காலம் மாறிகிட்டே வருது. சீக்கிரம் எல்லோரும் அதைப் பேசும் சூழலுக்கு வந்திருவோம்.

நடிகர் வடிவேலு பாண்டித்தமிழில் பேசி நடித்தபின், இப்பொழுது நகர மக்களும் அதே முறையில் தங்களை அறியாமல் பேசுவதைக் காண முடிகிறது. நாம் பேசப் பேச, அதுவே வழக்கமாகிவிடும்.

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றிங்க கோடீஸ்.....அடிக்கற மணியை அடிப்போம். சீக்கிரம் விடிஞ்சிடும் கவலை விடுங்க.

ஆரூரன் விசுவநாதன் said...

//அமரபாரதி//

//வலுக்கட்டாயமா வட்டார வழக்க தவறா உபயோகிப்பதும் நடக்கிறது. வட்டார வழக்கு என்பது அதுவாக வர வேண்டும். அது பழக்கமில்லன்னா தெரிஞ்ச மாதிரி பேசலாம். வம்படியா வட்டார வழக்கு பேசறதும் தப்புதானே?//

இல்லைங்க மாப்ள, வட்டார வழக்கோடு சிறப்பே அதன் ஒலிக் குறிப்புகளும், சொற்களுந்தான். ரொம்பப் புடிச்சுபோச்சுன்னுனா இப்படித்தான் (over excitement)உற்சாகத்தில ஏதாவது ஏடாகூடமா பண்டிப் போடறாங்க. சரி விடுங்க சரி பண்டுவோம். பேசறவன் படிக்காதவன் சொன்னவனெல்லாம் இப்ப அதே வழக்கு பேச வச்சிருக்கமுல்ல. அதுவே பெரிய விசியந்தானுங்களே

ஆரூரன் விசுவநாதன் said...

//பழமைபேசி//
நன்றிங்க மாப்பு

//சீனா-ஐயா////

நன்றிங்க ஐயா.

ஆரூரன் விசுவநாதன் said...

ILA(@)இளா said...

பேச்சுவழக்கை பேச்சுக்கு மட்டும் சரி, அதையெ எழுதுவதால் மொழி நசுங்குகிறதுன்னு ஒருத்தர் சொன்னாருங்க. அதுக்கு என்ன பதில் சொல்ல?
ஏனுங் மாப்ள...இதுல ஒன்னும் உள்குத்து இல்லைங்கல்ல.....
இஃகி....இஃகி....

//மொழி நசுங்குகிறதுன்னு//
அதெல்லாம் நாம பார்த்து, ஒடுக்கெடுத்துக்கலாம் வுடுங்க...இவனுங்க மறுக்கா நசுக்காம இருந்தாச் செரி... இஃகி...



ஊருல இருந்து அம்மாயி எழுதற கடுதாசி என்ன நடையில இருக்குமுங்க.....

கிராமத்தில உங்களோட படிச்சவிங்க கடுதாசு, அதே பேச்சு வழக்கில தானுங்களே இருக்கும்....அது மாதர தான் இதும்.....

ஆரூரன் விசுவநாதன் said...

//Mahi_Granny said...

உங்கள் பதிவின்படி ''ஒலிக் குறிப்புகளில் ஓரிரு மாத்திரைகள் கூடக் குறைய வேண்டுமானால் இருக்கலாம்''ஆனால் கேட்கும் போது இனிமையாக இருக்கே. அதென்ன உங்க வட்டாரத்தில் மட்டும் தனி தமிழ் பாடத்திட்டம் ஏதேனும் இருந்ததா?நீங்கள் புழங்கும் நிறைய வார்த்தைகள் என் வட்டாரத்துக்கு உண்மையாலுமே புதிது. மகுடேஸ்வரனின் கவிதை வழக்குச் சொல்லுக்காக மட்டுமில்லாமல் சிரிக்க வைத்தது .

January 25, 2012 1:26 AM
Delete
Blogger சி.கருணாகரசு said...

மிக துடிப்பான கட்டுரை.
உங்க உணர்வுக்கு என் வணக்கம்.


அண்மையில் எனக்கு வலியேற்படுத்தியது.... ஒரு தமிழனின் அடையாளாமான உழவர் பண்டிகைக்கு கூட happyபொங்கல் சொல்லுறானுவோ...

இந்த கட்டுரையில் நான் மிக நெகிழ்ந்தேன்.
அதற்காக உங்களை பாராட்ட மாட்டேன்.... உங்க வட்டார மொழியை பேசுவது உங்க கடமை!

இதை பகிர்ந்தமைக்கும்... யாரக்கும் கவலைப்பட்டு பகட்டுக்காக இல்லாமல்... நீங்க நீங்களாகவே இருப்பதற்கு என் வணக்கம்.

நன்றி.//


நன்றிங்க கருணாகரசு.

நன்றிங்க மகி அம்மா

ஆரூரன் விசுவநாதன் said...

//Mahi_Granny said...

உங்கள் பதிவின்படி ''ஒலிக் குறிப்புகளில் ஓரிரு மாத்திரைகள் கூடக் குறைய வேண்டுமானால் இருக்கலாம்''ஆனால் கேட்கும் போது இனிமையாக இருக்கே. அதென்ன உங்க வட்டாரத்தில் மட்டும் தனி தமிழ் பாடத்திட்டம் ஏதேனும் இருந்ததா?நீங்கள் புழங்கும் நிறைய வார்த்தைகள் என் வட்டாரத்துக்கு உண்மையாலுமே புதிது. மகுடேஸ்வரனின் கவிதை வழக்குச் சொல்லுக்காக மட்டுமில்லாமல் சிரிக்க வைத்தது .

January 25, 2012 1:26 AM
Delete
Blogger சி.கருணாகரசு said...

மிக துடிப்பான கட்டுரை.
உங்க உணர்வுக்கு என் வணக்கம்.


அண்மையில் எனக்கு வலியேற்படுத்தியது.... ஒரு தமிழனின் அடையாளாமான உழவர் பண்டிகைக்கு கூட happyபொங்கல் சொல்லுறானுவோ...

இந்த கட்டுரையில் நான் மிக நெகிழ்ந்தேன்.
அதற்காக உங்களை பாராட்ட மாட்டேன்.... உங்க வட்டார மொழியை பேசுவது உங்க கடமை!

இதை பகிர்ந்தமைக்கும்... யாரக்கும் கவலைப்பட்டு பகட்டுக்காக இல்லாமல்... நீங்க நீங்களாகவே இருப்பதற்கு என் வணக்கம்.

நன்றி.//


நன்றிங்க கருணாகரசு.

நன்றிங்க மகி அம்மா

ஆரூரன் விசுவநாதன் said...

//ஓலை said...

Enunga! enra sanaththin paasai pesuveegalaa ?
:-)

தென்ன இப்புடிச் சொல்லிப்போட்டிங்க.

நம்ம பக்கம், சனத்துக்கு சனம் மொழி ாறாதுங்க...தெங்கியாவது
ஒன்னு ரெண்டு வார்த்தை வேணா மாறி இருக்கலாமுங்க.

தாய் மொழி வேறையா இருக்கவங்க கூட நம்மோட பேசும் போது இப்புடித்தானுங்களே பேசுறாங்க..

வட்டாரம்பூரா ஒரே பேச்சு தானுங்களே.

CS. Mohan Kumar said...

அருமை, நீங்க எழுதியது மிக சரி. மகுடேஸ்வரன் கவிதையும் அழகு

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

எங்கு சென்றாலும் நமது வட்டார வழக்கை பேசுவது தவறொன்றுமில்லை..என்னாலே நான் சொல்றது சரிதான்லே ...

சத்ரியன் said...

மாமா,

அருமையான பகிர்வுங்க.

என்னாவொன்னு, என் ஊரு வழக்குல பேசனேன்னு வை. கேக்கற ஆளுக பூரா அடிக்க வருவாக.

( ஒருமையில வார்த்தைகள் சரளமா வரும். வடமாவட்டவாசிகளுக்கே உரிய தனித்துவம் இது. என்னை என்ன செய்யச் சொல்றீங்க.)

கொங்கு நாடோடி said...

அண்ணா கலக்கிபுட்டிங்க போங்க... பலமைபேசி அண்ணன்கூட பேசறாப்போவும் நம்மூருக்கு ஒருக்கா போயிட்டுவந்தாபுல இருக்குமுங்க...