Tuesday, March 05, 2019

சொல்லிய பாட்டின், பொருளுணர்ந்து ……

அவள் எனக்கு அக்கையா, அம்மையா, என்றெல்லாம் தெரியாது. ஆனால் நினைவு தெரிந்த நாளிலிருந்து, எல்லாவற்றையும், நான் அவளிடம் மட்டுமே பகிர்ந்து கொண்டிருக்கின்றேன். நடுங்கும் குளிரில், குளித்த ஈரத்தோடு, அவளிடம் மட்டுமே ”எங்கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க” என்று பிதற்றியிருக்கின்றேன்..


”அவளிடம் நான், கேட்டதெல்லாம் கிடைத்திருக்கிருக்கிறது. அவள்தான் கொடுத்தாளா என்றெல்லாம் தெரியாது. நான் கேட்பேன். அது கிடைத்துவிடும். அதனால் சொல்லுகிறேன், அவள் கேட்டதையெல்லாம் தருபவள்.. ஆனால் நான் பலமுறை தேவையில்லாதையும் அவளிடம் கேட்டிருக்கின்றேன். அதையும் அவள் தந்தே இருக்கின்றாள்.


. வேண்டி, நீ யாது அருள் செய்தாய்,
யானும், அதுவே வேண்டின் அல்லால்,
வேண்டும் பரிசு ஒன்று உண்டு எனில்,
அதுவும், உன் தன் விருப்பு அன்றே 

அப்படி ஒரு நம்பிக்கை எனக்கு, அவள் மீது

.
அன்று ஒரு நாள், பள்ளியிலிருந்து திரும்பும் போது, அடிவயிற்றில் ஒரு பெருவலி. கால்கள் துவள்கின்றன. தொடைச் சதைகள் கழன்று, உதிர்ந்து போவது போல ஒரு நடுக்கம். ஒருபக்கம் வித்தியாசமான மன எழுச்சி, மற்றொரு பக்கம் வலியின் உக்கிரம். கால்கள் நடுங்க, கண்ணீர் எந்த நிமிடமும் வெளிவரத் தயாரான நிலையில், கூட அவளைத்தான் தேடினேன். உடன் வந்தவர்களைத் தவிர்த்து, மர நிழலில் ஒரு நிமிடம் கண்களை மூடி, “ஆத்தாளை எங்கள் அபிராம வள்ளியை”….


இதோ வந்துவிட்டாள். மென்மையாய்ச் சிரித்தபடியே, மையிட்ட தன் பெரிய கண்களை விரித்து, ஒரு நொடி மூடி, தலையை ஒரு புறமாய் வெட்டிச் சாய்த்து மீண்டும் சிரிக்கின்றாள். அப்புறமென்ன, அவள் தான் கூடவே வருகிறாளே……..
பல ஆண்டுகளுக்குப் பிறகொரு நாள், இப்படித்தான், கை, கால்கள் நடுங்க, பதட்டமும், படபடப்புமாக, பலபேர் என்னையே உற்றுப் பார்க்க, ”கண்ணா நீ பேகனே” பாடச் சொன்னபோது, புன்னகையோடு மறுத்து, “ஆத்தாளை எங்கள் அபிராம வள்ளியை” என்று பாடிக் கொண்டிருந்த போது, அவளே வந்து விட்டாள். அதேபோல், மையிட்ட தன் பெரிய கண்களை மலர்த்தி, ஒரு நொடி மூடி, தலையை, ஒருபுறமாய்ச் சாய்த்து, மீண்டும் சிரிக்கின்றாள்.


சரி இவள் தான் இருக்கிறாளே என்ற நம்பிக்கையில், கழுத்தையும் நீட்டி, பிள்ளையையும் பெற்றாகிவிட்டது. இந்தக் கொஞ்ச காலத்தில் அவளை எப்படியோ மறந்திருந்தேன். புதிது புதிதாய்ப் பிரச்சனைகள் வர, மீண்டும் அவள் நினைவிற்கு வருகின்றாள். வெயிலில் தானே நிழல் தேவைப்படுகிறது. இப்படி ஒரு பயித்தியக்காரனை என் தலையில் கட்டி விட்டவளை சும்மா விடக்கூடாது. எவ்வளவுதூரம் நம்பிக்கையோடு இருந்தேன்.
சரி அவள் மட்டும் என்ன செய்வாள், தேடித்திரிந்து, விரதமிருந்து, தவம் செய்து, ஒரு பித்தனையல்லவா மணந்திருக்கிறாள். அவனுக்காகவே வாழ்ந்தும் இருக்கிறாள்.. அவனோடு, சண்டையிட்டுச் சலித்துமிருக்கிறாள்


ஆவேசமாய் கிளம்பி வந்து சேர்ந்த போது, ஆத்தாளை எங்கள் அபிராம வள்ளியைப் என்று பாட மனது வரவில்லை. கண்ணீர் பொங்க, ஆத்திரத்தோடு, திட்டித் தீர்க்க, இதோ, மீண்டும் அவள் வந்துவிட்டாள். அதே கண், கழுத்து அசைவுகள்…..அதே சிரிப்பு. ஆத்திரமாய் வருகின்றது எனக்கு. எதிரே இருந்த தூணில் சாய்ந்து அமர்ந்து, கொண்டுக் கேலியாய்ச் சிரித்தபடியே…

ஏன் மகளே, என்னைப் பற்றி இப்பொழுதெல்லாம் பாடுவதில்லை?….”

பாடு மகளே………..அந்தப் பட்டனின் பாட்டை ஒருமுறை பாடு 


என்ன செய்வது இவளை? எப்படியான துயரத்தில் இருக்கின்றேன், இவள், தன்னைப் புகழ்ந்து பாடச் சொல்லி, ஏகாந்தமாகக் கேட்டு ரசிக்க நினைக்கின்றாள். பொருமையிழந்து, விம்மி, வெடித்து, அழத் துவங்குகிறேன். கலைந்த தலையோடும், வியர்வையில் நனைந்த உடையோடும், கண்ணீரில் கறைந்த மையோடும், மொத்தமாய் உடைந்து வந்திருக்கிறேன். இவள் என்னைப் பாடச் சொல்லுகிறாள்…….


ஆத்தாளை! எங்கள் அபிராம வள்ளியை ! அண்டம் எல்லாம்

ம்ம்ம்… அருமை….அருமை..

பூத்தாளை! மாதுளம் பூ நிறத்தாளை! புவி அடங்கக் காத்தாளை

ம்ம்ம்…..சபாஷ்

வரும் கோபத்தில் என்னசெய்வதென்றே தெரியவில்லை. முழு சக்தியையும் திரட்டிக் கொண்டு, கத்தத் துவங்கிறேன்….

அங்குச பாசம் குசுமம் கரும்பும், அங்கை
சேர்த்தாளை! 


நிறுத்து………நிறுத்து…….மீண்டும் ஒருமுறை அந்த வரிகளைப் பாடேன்……


மனம் முழுக்க வேதனையும், வலியும் நிறைந்து வழிகிறது. என்னை நானே சுட்டுப் பொசுக்கிக் கொண்டாலொழிய இது தீராது. எல்லாவற்றிலும் குற்றம் கண்டு பிடிக்கும் கணவன், என் ஏழ்மையை, குத்திக் காட்டி, வார்த்தைகளால் கிழிக்கும் அவன் தாய், போதாதற்கு அவ்வப்போது என் உடல் போதாமை……. நிரந்தர வறுமை…….எத்தனை நாள் தான் இந்த நரகத்தில் வாழ்வது?
உன்னையே நம்பிய என்னை ஏன் இப்படிப் பாடாய் படுத்துகிறாய்? என்று ஒரு வார்த்தை கேட்டுவிட்டு என்னை நானே கொன்றொழித்துக் கொள்ள நினைத்து இங்கே வந்தாள், இவள்……


ம்ம்ம்…பாடு மகளே………..

அங்குச பாசம் குசுமம் கரும்பும் , அங்கை
சேர்த்தாளை

அசட்டுப் பெண்ணே…. என்றாவது இதன் பொருள் உணர்ந்து பாடியிருக்கிறாயா? 


போடிப் பயித்தியக்காரி…… என்ன நிலையில் நான் இருக்கின்றேன். இவளைப் புகழ்ந்து பாட வேண்டுமாம், கூடவே பொருளும் சொல்ல வேண்டுமாம்…..குரல்வளையை கடித்துத் துப்ப வேண்டுமென்று தோன்றுகிறதே. ஒன்றும் சொல்லாமல் அவளையே உற்றுப் பார்க்கிறேன்.
எட்டி என்னை அருகே இழுத்து, தன் தோளில் சாய்த்துக் கொண்டு, ஒரு கையால் என்னை அணைத்துக் கொள்கிறாள். அதற்காகவே காத்திருந்தது போல நானும், அவளுள் ஒடுங்கிக் கறைய விரும்பி, இன்னும், இன்னும், நெருக்கமாய் இறுக்கிக் கொள்கிறேன். 


என்னை, கொஞ்சம் விளக்கி தன் முன்னே நிறுத்தி என் முகத்தைப் பார்த்தபடியே……..

மகளே……

உயிர்கள் எல்லாவற்றிர்க்கும் மூலாதாரமாய் இருக்கும் என் கையில், காமத்தைத் தூண்டும் தாமரையும், உடலைப் பசலையாக்கும் மாம்பூவும், பிற உணர்வுகளை நீக்கும் அசோகப் பூவும், படுக்கையில் கிடத்தச் செய்யும் முல்லைப் பூவும், விரகத்தில் ஆழ்த்தக் கூடிய நீலோற்பமும் கொண்ட மாறன் கணைகள் ஐந்தும் எதற்காக? என்று யோசித்தாயா?


முக்தம் என்பது, கையிலிருந்து விடுபட்டுச் செல்லும் ஆயுதம் அம்பு, போன்றவை. அமுத்தம் என்பது, கையில் வைத்துக் கொண்டே பயன்படுத்துவது வாள், போன்று. முக்தா முக்தம் என்பது, கையிலிருந்து விடுபட்டுச் செல்லும், ஆனால் மீண்டும் கைக்கே திரும்பி வந்துவிடும். பாசக்கயிறு சக்கரம் போன்று. பாசமும், அங்குசமும், கரும்பு வில், இந்த மூன்றும் எனக்கெதற்கு?


இப்போது என்ன சொல்ல வருகின்றாய்? நொந்து கிடக்கும் என்னிடம் தத்துவ விசாரமெல்லாம் எதற்காக? உன்னைப் பாடிப் பாடித்தானே நொந்து கிடக்கின்றேன்.


மகளே……… 

.எதையும் அசைத்துப் பார்க்கும் பாச அங்குசம் என்னிடம் இருக்கிறது. மலர் அம்புகளும் கரும்பு வில்லும் இருக்கிறது. இதெல்லாம் எனக்கே தேவைப்படுகிறது.

எதிர்காலத்தில் பிரச்சனை வரும் என்று நினைத்தால், முக்தத்தால் முன்னமே விரட்டியடி. மீறி வந்துவிட்டால் அமுக்தத்தால் அறுத்துப் போடு. முக்தாமுக்தத்தைச் சரியாய் பயன்படுத்து.


என்ன எழவோ? ஒன்னும் புரியலை…..


ஆண், யானை தான். நாம் பாகன்கள். யானையும் பாகனும், ஒன்றாய் வாழ வேண்டியது தான், நாகரீக சமூகத்தின் கட்டமைப்பு. யானைக்கு மதம் இயல்பு.. அது அத்து மீறும். இழுத்துக் கட்டி வைக்க முடியாது. அவிழ்த்து விடவும் முடியாது. பாசக் கயிற்றை வீசி கட்டுக்குள் வை. வெகுண்டு ஓடும் போது, கயிற்றை தளர்வாக்கு. நிதானிக்கும் போது கயிற்றைக் கறந்து கொள். அங்குசத்தை அளவாய் பயன்படுத்து.


யானை, எப்போதோ, எங்கிருந்தோ, யாரோலோ கிடைத்த அனுபவச் சுவட்டில் மிடுக்கு காட்டும். கிறுக்கதனங்களை முன்னிறுத்தும். நான் தான் பெரியவன் என்று அலட்டிக் கொள்ளும். கொஞ்சம் அன்பாய் கேட்டுப்பார், சந்தித்த அவமானங்களையும், வலிகளையும் கொட்டிக் குமுறி அழும். குழந்தையைப் போல, கொஞ்சி விளையாடும். கிரங்கிக் கிடக்கும். அதுதான் யானையின் இயல்பு.


சில நேரங்களில் வீம்பு காட்டும். பெரும் எடையைக் கட்டி இழுக்கும். உடல் அளவாலும், வலுவாலும், எளிதாய் நம்மைப் பாதுகாக்கும். எதிர்ப்பவரை மிரட்டிப் பணியவைக்கும். கோட்டைக் கதவுகளை தன் மத்தகங்களால் முட்டிப் பெயர்த்து எறியும். போரில் பெருவிருப்பு காட்டும். வெற்றிக் களிப்பில் இராச நடை போடும். இத்தனை வலிமையும் பெருமையும் இருந்தாலும்………..
ஓரடி அங்குசத்திற்கு அடிமைதானே…..….


என்னையறியாமல்…….


இப்போது, நான் பாடத் துவங்குகின்றேன்

No comments :