Tuesday, March 05, 2019

ருசி……………

சொந்தங்களோடும் நட்புகளோடும் ஆண்டாண்டாய் சொந்த ஊரில், வாழ்பவனின் சிக்கல் இவர்களுக்கு எங்கே புரியப் போகிறது. ஒருவருடத்திற்கு சுமாராய் 50 முகூர்த்த நாட்கள் என்று வைத்துக் கொண்டால், குறைந்த பட்சம் 200 அழைப்புகள். சராசரியாக ஒரு முகூர்த்ததிற்கு முன்று அல்லது நான்கு அழைப்புகள். தூரத்தில் மண்டபம் இருந்தால், முதலில் அந்த இடத்திற்குச் செல்வதும், அப்படியே குறைத்து, குறைத்து, வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் திருமண மண்டபத்திற்கு கடைசியாய்ச் செல்வது. ஒருவேளை ஏதாவது ஒரு காரணத்தால், நேரமாகிப் போனாலும், காலையில் முதல் வேலையாக இரவு விட்டுப் போன இடத்திற்கு சென்று வந்துவிடுவது இப்படியே ஓடிக் கொண்டிருக்கிறது வாழ்க்கை.


பலநேரங்களில் சோம்பேறித்தனத்தால் திருமணங்களுக்குச் செல்லாமல் விட்டுவிட்டு, பின்னாளில் அவர்களைச் சந்திக்கும் போது ஊரில் இல்லை அவசரமாய் வெளியூர் பயணம் என்று பொய் சொல்வதற்கும் நான் தயங்கியதில்லை.


நேற்றும் அப்படித்தான். உள்ளூர் திருமணங்களைக் காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து பவானி சென்றாகி விட்டது. கூடவே பயண வழி பேச்சுத் துணைக்காய் பதின்ம வயது மகனும். 


இப்படித்தான் ஒரு முறை ஒரு திருமணவீட்டிற்கு சென்று வீடு திரும்பும்போது, 


சமையல் சூப்பர்ப்பா. வயித்துல இடமே இல்லை. ரொம்ப சாப்பிட்டேன். ஒன்னு ரெண்டு ஐட்டத்தைச் டேஸ்டு கூட பார்க்கலைப்பா.


இல்ல கண்ணு, சுவைங்கறது இட்லிலையோ, தோசைலையோ ருமாலி ரொட்டியிலையோ இல்லை. அதுக்கு குடுக்கற குழம்புலதான் இருக்குது. குழம்பு மேல இருக்க ருசி ஆசையில நாம் நிறைய சாப்பிட்டுடறோம். இனிமே, கொஞ்சமா அதை எடுத்துகிட்டு, நிறைய குழம்போ, சாம்பாரோ தொட்டு சாப்பிட்டு பழகிட்டம்னா, அந்த ருசி மீதான ஆசை தீர்ந்துடும். வயிறும் பத்திரமா இருக்கும்.


ஆமாப்பா இனி அப்படித்தான் சாப்பிடனும்….


இப்படி அவ்வப்போது என் அனுபவங்களையும், பல நேரங்களில் பட்ட அவமானங்களையும், நாட்பட்டும் தீராத வலிகளையும் கூட சொல்லித் தீர்த்துக் கொள்வது வழக்கமாகிவிட்டது.


அந்தத் திருமணவீட்டிற்குள் நுழைந்து, மணமகனான நண்பனோடும் நட்புகளோடு அரட்டையும், படங்களும் கூடவே செல்ஃபியும் எடுத்து முடிந்தாகிவிட்டது.. இன்னும் இரு திருமண நிகழ்ச்சிக்களுக்கும், போக வேண்டிருக்கிறது. மணி 7.40. எப்படியும் 9 மணிக்குள் மற்ற இரண்டு நிகழ்வுகளையும் முடித்து கடைசியாய் செல்லும் திருமணவீட்டிலோ, அல்லது எங்கே அதிகமாய் பசி உணர்வை, மூக்கு மூளைக்கு அனுப்பி வைக்கிறதோ அங்கு, அல்லது நிம்மதியாய் வீட்டிற்குச் சென்று மதிய வைத்த சாம்பாரில் இரண்டு இட்லியோடு இரவு உணவை முடித்தால், பெருந்துயரைக் கடந்த உணர்வில் அன்றைய நாள் முடிவடையும். 


உண்பதென்னவோ இரண்டு இட்டிலிதான். அதுக்கே மூனு வேளையும், மெட்ஃபார்மின் 500 மிலி கிராமைத் தொட்டுக்கலைன்னா சீக்கிரம் சொர்க்கத்துக்கு போக வேண்டியிருக்கும் என்று உறுதியாய் சொல்லியிருக்கின்றார் குடும்ப மருத்துவர். 


அப்பா பசிக்குது, இந்த கலியாண வீட்டிலேயே சாப்பிட்டறலாம்..
ரொம்ப பசிக்குதா? அடுத்த கலியாண வீட்டுல சாப்பிட்டுக்கலாமே. மணி 8 கூட ஆகலை.


இல்லைப்பா, பசிக்குது, இங்கயே சாப்பிடலாம்…


ம்ம்ம்…சரி


ஒரு சிறிய காத்திருப்பு. இப்போதெல்லாம் திருமண வீடுகளில் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவர் பின்னாலே போய் நின்று கொண்டு, சீக்கிரம் சாப்புட்டு இடத்தைக் காலி செய்யுடா என்று சொல்லாமல் சொல்வதும், சாப்பிட்ட எச்சில் இலையை எடுப்பதற்கு முன்பே அந்த இடத்தில் சென்று அமர்ந்து கொள்வதும் கொஞ்சம் கூட அருவருப்பைக் கொடுப்பதில்லை. .


பந்தியிலே அனைத்தையும் பரிமாறிவிட்டு, சமைத்த அனைத்தும், எல்லா இலைகளிலும் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு, போததற்கு வரிசைக்கு இரண்டு பேர் நின்று கொண்டு தேவைகளைக் கேட்டு, பரிமாறும் பந்தி கவனிப்பு நாட்களும் 

உண்ணீர் உண்ணீர் என்று ஊட்டாதார் தம் மணையில் உண்ணாமை கோடி பெறும் என்ற அவ்வையின் வரிகளும் இப்பொழுதா நினைவுக்கு வரவேண்டும். நல்ல வேளை, அப்படி எந்த சிக்கல்கள் எல்லாம் இங்கில்லை
நல்ல சுவையான உணவு. 10ரூ உளுந்து வடைக்கே நான்கு கப் சாம்பார் வாங்கி, வடையை அதில் கரைத்துக் குடிக்கும் எனக்கு, அது நல்லதொரு விருந்துதான்.


சாப்பிடும் போது, பேசக்கூடாது. கவனம் தட்டுல இருக்கற, சோத்துல இருக்கணும். அப்பத்தான் ருசி தெரியும். பராக்குப் பாத்துகிட்டு, புத்தகம் படிச்சிகிட்டு, சோறு திண்ணா ருசி எப்படிப்பா தெரியும் என்பார் என் தாத்தா. மீதமிருக்கும் ஒரு ரொட்டித் துண்டை, ஒட்டு மொத்த குடும்பமே சாப்பிடவேண்டிய சூழலிலும், சாப்பாட்டு மேசையைத் துடைத்து, அதன் மீது ஒரு பழைய துணியை அழகாய் விரித்து வைத்துக், காலியாய் கிடக்கும் ஒரு கண்ணாடி சீசாவின் மேற்புறத்தில், வாசலில் இருக்கும் ஏதாவது ஒரு பூவைக் கொஞ்சம் காம்பு, இலை, தண்டோடு பறித்து வைத்து, அழகாக்கி, குளித்து, கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு, முறையாய் கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு, இருக்கும் அரை ரொட்டித் துண்டை கத்தியாளும் முற்கரண்டியாலும் வெட்டி உண்பது ஆங்கிலேயர்களின் பாணி என்று சொல்லுவார்கள். இவரும் போன பிறவியில் அப்படிப் பிறந்திருப்பாரோ என்னவோ?


ஒரு பள்ளி ஆசிரியரான அவர், பள்ளியிலிருந்து வந்து, ஒரு சொம்பு தண்ணியைக் குடித்துவிட்டு, மூன்று நான்கு வீடுகளுக்கு ட்யூஷன் சொல்லிக் கொடுத்துவிட்டு, வீட்டுக்கு வந்தவுடன், குளித்து, துவைத்த வேட்டியும், பழைய கிழிந்த வேட்டியில் தைக்கப்பட்ட கை வைத்த பனியனையும் போட்டுக் கொண்டு, திருநீறு அணிந்து, சாமி கும்பிட்டு, சாப்பிட உட்காரும் போது, நாங்கள் அனைவரும் அவருக்காக காத்திருப்போம். ஒட்டு மொத்த குடும்பமும் ஒன்றாய் அமர்ந்து உண்ணும் காலத்தில், கரண்டி, குழம்புக் குண்டாவில் உராய்வது கூட அவருக்கு பிடிக்காது. கவனம் சிதறுகிறது என்பார். , சிறு சத்தம் கூட வராது. குண்டாவுக்கு வலிக்காத அளவில் தான் கரண்டிகள் பயன்படுத்தப்படும். தரையில் ஒரு பொருளை வைக்கும் போதும், எடுக்கும் போதும் கூட சத்தமில்லாமல் தான் நடக்க வேண்டும். தின்றதென்னவோ குச்சிக் கிழங்கும், நொய்யரிசிக் கஞ்சியும்தான்.


என் அப்பா இன்னும் மோசம். இலையிலிருந்து கடைசி வாய்ச் சோற்றை எடுக்கும் போது, சரியாக அவரிலையில் புதிய சோறு இருக்க வேண்டும். இலையப் பார்த்து சோறு போடாம என்ன கழட்டற வேலை உனக்கு, என்று இலையோடு சேர்த்து தூக்கி எறிவார். இலையையும் அவர் முகத்தையும் கைகளையும் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு முறை கையை வேண்டாம் என்று அசைப்பார். ஏதாவது வேண்டுமென்றால், ஒரு முறை நிமிர்ந்து பார்ப்பார். எல்லாமே சைகைகளிள் தான். உடனே அவருக்கு என்ன வேண்டும் என்பதை இலையைப் பார்த்து, முடிவு செய்து அதை அளவாய் வைக்க வேண்டும். ம்ம்ம்… என்று சத்தம் நீளமாக வந்தால் இன்னும் கொஞ்சம் வைக்க வேண்டும். ம்… என்ற சத்தம் அதன் அளவில் அரை மாத்திரை குறைந்தால் போதும் என்று பொருள். 


ம்ம்ம்ம்…அதெல்லாம் ஒரு கனாக் காலம். 


பந்தியிலே அமர்ந்தவுடன் ஒவ்வொன்றாய் வந்தது. வழக்கம் போல தலை குனிந்தபடி, சாம்பாரில் நசுக்கி ஊற வைத்த தோசைத் துண்டை எடுத்து வாயில் போட்டு, அதன் சுவையை உணரத் தொடங்கும் முன் யாரோ நம்மைப் பார்ப்பது போன்ற உணர்வு. நிமிர்ந்து பார்த்தால் எதிர் வரிசையில் யாரும் தெரிந்தவர்கள் இல்லை. கொஞ்ச நேரத்தில் மீண்டும் அதே உணர்வு. நிமிர்ந்து பார்த்தால், அவரவர் வேலையில் அவரவர் கவனம். மீண்டும் ஒருமுறை கூர்ந்து ஒவ்வொருவராகப் பார்க்கிறேன். 


எதிரில் ஒரு பெரியவர். 65 வயதிருக்கலாம். துவைத்து ஆனால் தேய்க்கப் படாத பழைய வேட்டி சட்டை. மழிக்கபடாமல் சில வாரங்கள் ஆன தாடி, ஒரு சாதாரண கிரமாத்து நெசவாளி போன்ற தோற்றம். மென்மையான உடல்வாகு, ஆம் அந்த திருமண மண்டபம் இருந்த பகுதி, நெசவுத் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. 


அவர் பார்வை மட்டும் ஏனோ அங்கும் இங்கும் அலைந்த படியே. இலையைப் பார்ப்பதும், ஓரு துண்டு தோசையைப் பிய்த்து உண்ணாமல் கைகளிலேயே வைத்துக் கொள்வதும், பின் நிமிர்ந்து எதிரிலிருப்பவர்களை ஒருமுறை பார்ப்பதும், உணவு பரிமாறுபவர் எங்கிருக்கிறார் என்று பார்ப்பதும், பிறகு மீண்டும் அதே துண்டு தோசை, எதிரிலிருப்பவர்கள், பரிமாறுபவர், இப்படி ஓரிரு முறைகள் தொடர்ந்து.


ஆர்வத்தில் கவனிக்க ஆரம்பித்தேன். அவர் பிச்சைக் காரரைப் போலவோ, திருட வந்தவர் போலவோ இல்லை. இலையில் ஒரு தோசையும், கொஞ்சம் சேமியாவும் இருந்தது. சாம்பாரும் கூட இருந்தது. ஆனால் அவர் முகம் பரிமாறுபவரைத் தேடியது, பின் நான் கவனிப்பதையும் பார்த்தார். நான் தலைகுனிந்து கொள்ள, அவரும் பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டார். கொஞ்ச நேரத்துக்கு இதே விளையாட்டு.


அப்பா…

ம்ம்ம்….

அப்பா…..

ம்ம்ம்ம்…பேசாம இலையப் பாத்து சாப்பிடு….

அப்பா….அங்க பாருங்க

சரி...ஒழுங்கா இலையப் பார்த்து சாப்பிடு

இல்லப்பா….

தெரியும்….நீ அமைதியா இரு…..

கொஞ்ச நேர அமைதிக்குப்பின்….

அப்பா…அப்பா…அங்க பாருங்க……...தாங்க முடியாத ஆச்சரியம் அவனுக்கு…

கண்ணு அமைதியா சாப்பிடு…

அவரு ஏன்பா அப்படி செய்யறாரு

அப்புறமா சொல்லறேன்…நீ இலையப் பார்த்து சாப்பிடு


உணவு பரிமாறுபவர் சப்பாத்தி கொண்டு வருகிறார். அந்தப் பெரியவர் ஒன்றை வைத்ததும் இன்னொன்று வைக்கச் சொல்லுகிறார். பரிமாறுபவர் நகர்ந்தவுடன் என்னைப் பார்க்கிறார். நான் தலைகுனிந்து பார்க்காதவாறு இருக்க சுற்றும் முற்றும் பார்க்கிறார். யாரும் கவனிக்க வில்லை.


அவர் கண்களில் தயக்கம், கூச்சம், அவலத்தில் கொதிக்கும் மனம், அவமானப்பட்டுவிடுவோமோ, என்ற அச்சம். அவர் கண்கள் ஏனோ ஒளிர்வது போல எனக்குத் தோன்றியது. வலது கையில் இரண்டு சப்பாத்திகளையும் சுருட்டி எடுத்து, மேசைக்கடியில் இருக்கும் இடது கையில், உள்ளிருப்பது வெளியில் தெரியும்படியான, ஒரு பாலித்தின் பை. அதில் அந்த சப்பாத்திகளைப் போட்டுவிட்டு, மீண்டும் தோசை ஒரு துண்டைப் பிய்த்துக் கொண்டு, என்னைப் பார்க்கிறார், எதிரிலிருப்பவர்கள் அனைவரையும் பார்க்கிறார். யாரும் கவனிக்காததால், மீண்டும் பரிமாறுபவரைக் கண்கள் தேடுகின்றன.. 


கடவுளே, எதற்காக இப்படி ஒரு காட்சியை என் கண் முன் காட்டுகிறாய். உணவு உள்ளே செல்ல மறுக்கிறது. கண்கள் ஏனோ கலங்குகிறது. அமைதியாய் சாப்பிடுங்கள். போகும் போது, நிறைய கட்டித் தருகிறேன், என்று சொல்ல ஆசை. நன்றாய் சாப்பிடுங்கள், இனி நான் உங்களைப் பார்க்க மாட்டேன். வேண்டியதை பைகளில் நிரப்பிக் கொள்ளுங்கள் என்று மட்டுமே, எனக்குள்ளேயே சொல்லத்தான் முடிந்தது.


ஆனால் ஒன்று நிச்சயம், மழைக்காகிதப் பையில் அவர் சேமித்து வைத்தது, கண்டிப்பாக அவருடைய நாளைய தேவைக்காக இருக்காது என்றுதான் நினைக்கின்றேன். ஒருவகையில் இவர்கள் தேவனுக்கு நெருக்கமானவர்களாகத் தெரிகிறார்கள். இவர்களின் தேவைகள் எப்பொழுதும் சேர்த்து வைக்க முடியாதவை. இதைத்தான் தேவனும் மத்தேயு வழியாகச் சொல்லியிருப்பாரோ


ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையதினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்.’ - மத்தேயு 6:34


இவருக்கு இணையான ஒருவர் இவர் வருகைக்காக குளித்து முடித்து, கந்தல் சீலையை துவைத்துக் கட்டிக் கொண்டு திருநீறு பூசிக் கொண்டு தட்டோடு காத்துக் கொண்டிருக்க வேண்டும். இலையை அப்படியே மூடி வைத்து விட்டு, எழுந்து வெளியே காத்திருக்கின்றேன். அவரைப் பின் தொடர்ந்து சென்று ஏதாவது உதவ முடியுமா என்று பார்ப்பதற்காக. 


அவரைக் காணவில்லை. வெளியே வந்த மகன் கேட்கிறான், அந்த தாத்தா, வெறும் இட்டிலி தோசை, சப்பாத்தி எடுத்துகிட்டுப் போறரு. கொழம்போ, சாம்பாரோ எடுத்துகிட்டுப் போகலையே….


”அவருக்கு எப்படிப்பா ருசி மீதான ஆசை தீரும்”


இல்ல கண்ணு, .அவருக்கு ஆசை, உசுருமேல. அதற்கு ருசி அவசியமில்லை
அவனுக்கு புரிந்திருக்காதுதான். . அவன், குச்சிக் கிழங்கும் நொய்யரிசிக் கஞ்சியும் குடித்து வளர்ந்தவனில்லையே……

No comments :