Tuesday, March 05, 2019

“பொன் நரகம்”





நகரத்தினை ஒட்டிய அந்தப் பகுதியில், அப்போது தான், புதிதாய் குடியேறியிருந்தேன்.   பெருநகரத்தின் முக்கிய வழித்தடத்திலிருந்து சில நூறு மீட்டர்களே தள்ளி இருந்தாலும், நகரத்திற்கும் தனக்கும், ஒரு சம்பந்தமும் இல்லாதது போலவே அது இருக்கிறது.

பெரிய, பெரிய வீடுகள். ஒவ்வொன்றும்,  கோடிகளை விழுங்கியிருக்கும். அசர வைக்கும் கட்டிடங்கள், சுருக்கி எழுதப்பட்ட அரண்மனைகள். மக்கள் வசிக்கிறார்களா இல்லையா என்பதே தெரியாத, பண்டிகை நாட்களுக்கும், சாதாரண நாட்களுக்கும்,  எந்த ஒரு பெரிய வேறுபாடும் இல்லாத, வாகனங்களின் இரைச்சல், பந்து விளையாடும் அல்லது கூட்டமாய் சைக்கிள் ஓட்டும் குழந்தைகளின் சத்தம், பள்ளி, கல்லூரிப் பேருந்துகளின் பெருமூச்சுகள், இப்படி  எதுவுமே இல்லாது,  காற்றடித்தால் மட்டுமே விழித்தெழுந்து, இலை உழுப்பும், தூங்குமூஞ்சி மரங்களோடு, ஆழ்ந்த அமைதியை உள்ளடக்கிய,  புழுதியில்லாத, பெருந்தெருக்கள்..

எப்போதாவது ஓரிருவர் நிற்கும், ஒரு மளிகைக் கடை, சத்தமே இல்லாமல் ஆனால் ஒரு நாளின் எல்லா நேரங்களிலும் திறந்திருக்கும்  ஒரு தையற்கடை.  60தைக் கடந்த ஒரு தையற்காரர். அவ்வப்போது பெரும் இரும்புக் கதவுகளுக்குப் பின்னிருந்து வெளிப்பட்டு, மீண்டும் உள்ளே புகுந்து கொள்ளும்  பெரிய பெரிய கார்கள்.

குடியிருப்பின் நடுவில் இருக்கும் செல்வ விநாயகர் கூட ஒரு ஒழுங்கில் தான் அவர்களோடு குடியிருந்தார். சரியாக காலை, மாலை இரு நேரங்களிலும் 6.30 மணிக்கு அடக்கமாய் மணியடிக்கும். யாராவது ஓரிருவர் நின்று கொண்டிருப்பார்கள். அமைதியாய், தீபாரதனையையும், நைவேத்தியத்தையும் ஏற்றுக் கொண்டு, அருள்பாலித்து வந்த அந்த விநாயகருக்கும் அந்தப் பகுதி மக்களுக்குமான  உறவுகூட வித்தியாசமாக இருந்தது.

அன்று ஏனோ, நான்கு மணிக்கே விழித்துவிட்டேன்.  எப்பொழுதும் உறங்கியே கிடக்கும் தெரு பரபரப்பாய் இருந்தது. ஆங்காங்கே,  தண்ணீர் ஏற்றும் மோட்டார்களின் சத்தம், வாசல், கிறீச்சிடும் கதவுகள், வாசல் தெளிக்கும் சத்தம், ஆனால் இவையெல்லாம் கூட, ஒரு நிதாமான அமைதியுடன். கிட்டத்தட்ட எல்லா விட்டு வாசல்களிலும், ஸ்வெட்டர் போட்டுக் கொண்டு, காதிற்கு மப்ளரோ, குல்லாயோ, துண்டோ கட்டிக் கொண்டு நிதானமாய், தன் வீட்டு வாசலில் விழுந்து கிடக்கும் இலைதழைகளை நளினமாய் கூட்டி, பக்கத்து வீட்டுக்கும் தன் வீட்டுக்கும் இடையிலான புள்ளியில் சரியாக நிறுத்துவதுமாய், வாசல் தெளிப்பதுமாய், குறுக்கும் நெடுக்குமாய் நான்கு கோடுகளை கோலமாய் போட்டு விட்டு, வாசலில் இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதுமாய், பெரும் உயிர்ப்போடு இருந்தது. 

அதே போல, ஸ்வெட்டர் குல்லாயோடு, ரகசியமாய் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டு, அந்தத் தெருவின் இந்த முனையில் இருந்து, அந்த முனை வரை, மென்மையாய் நடைப்பயிற்சி செய்யும் ஒரு  கூட்டம்.

ஆனால், காலை ஆறரை மணிக்கு தெருவில் ஒருவரும் இல்லை.  ஒட்டுமொத்தமாய் எங்கொ போய் மறைந்திருந்தனர். தொடர்ச்சியாக ஒருவாரம் கவனித்தும் பார்த்துவிட்டேன்.  ஒரு மாற்றமும் இல்லை. 

இது என்ன ஆச்சரியம், பகலெங்கும் உறங்கியும் ஓய்வெடுத்தும், பின்னிரவில் விழித்து, இரவு முழுவதும் உயிர்ப்போடு திரியும், nocturnal life வகையை சார்ந்தவர்களோ? இன்னொன்றையும் கவனித்தேன், அங்கே இருப்பவர்கள் அனைவரும் 60 வயதைக் கடந்தவர்கள்.

அவ்வப்போது, காய்கறிக்காரர், பழைய இரும்பு, பழைய பேப்பர் வியாபாரிகளின் சத்தம் மட்டும் கேட்கும். ஆனால் யாரும் அவர்களை சட்டை செய்ததுபோலவே இருக்காது.  யாருமற்ற வேளையில் பகற் பொழுதில், இருப்பைக் காட்டவோ, பயத்தைப் போக்கிக் கொள்ளவோ கரையும் காகங்கள் போலவே, அவர்களும் கடந்து போவதாக, நான் நினைத்துக் கொள்வேன்.

அன்று வழக்கத்திற்கு மாறாக, எதிர் வீட்டு வாசலில் ஒரு வயதானவர் நின்று, அங்கிருந்த ஒரு ஆக்டிவா வண்டியை உற்றுப் பார்ப்பதும், பின்னர், தெருவைப் பார்ப்பதுமாக இருந்தார்.  ஏதோ உதவி எதிர்பார்ப்பவர் போல இருந்தார்.  நான் அவரைக் கவனிப்பதைப் பார்த்தவுடன் லேசாக சிரித்துத் தலையை அசைத்தார்.

ஏன் சார்? எதும் பிரச்சனையா?

இல்லை, இந்த வண்டி பங்க்சர் ஆயிடுச்சு. நகத்த முடியல, கொஞ்சம் ஓரமாய் தள்ளி நிறுத்தனும்….என்றபடியே,  என்னைப் பார்த்தார்.

சரிங்க சார், நீங்க நகர்ந்துக்குங்க, நான் தள்ளி வச்சிடறேன்….

அதன்பிறகு, எப்போதாவது சந்திக்கும் போது, நட்போடு ஒரு தலையசைப்பை, அவரும் நானும் தொடர்ந்தோம். அவரிடம் கேட்கவும், அறியவும் எனக்குள் நிறைய இருந்தாலும், ஏதோ ஒன்று என்னைத் தடுத்துக் கொண்டே இருந்தது.

ஒரு ஞாயிறு மாலை, நான் எப்பொழுதாவது செல்லும், அந்தச் சிறுகுன்றின் பாறை ஒன்றில் எனக்கு முன்னேமே அவர் வந்து அமர்ந்திருந்தார். வழக்கமான புன்னகை, லேசான தலையசைப்பு. வழக்கத்திற்கு மாறாய் ஏதோ பேச வருகிறார். அவருக்கு எதிரில் இருந்த பாறைத் திட்டில் நான் அமர

இங்க, நீங்க அடிக்கடி வருவீங்களா?

இல்லைங்க சார், எப்பவாவது…….

பரந்து, விரிந்த பெரு வளி. எதற்காகவும்,  எதிலும் அடைபட்டுக் கொள்ள விரும்பாத இயற்கை…….…ம்ம்ம்

நான் பதிலேதும் சொல்லவில்லை..

அடுத்த அரைமணிநேரம் நாங்கள் இருவரும், எதுவும் பேசாமல், எதிலோ கரைந்திருந்தோம்.

காத்து சிலுசிலுங்குது. புறப்படலாமா? என்றபடியே எழுந்து நின்று, என்னைப் பார்க்க, நானும் அவரைப் பின் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தேன். கீழ் இறங்கும் பாதையில், அவ்வப்போது தடுமாறி, என் தோளையோ, கையையோ,  பற்றிப் பின், மெதுவாக விடுவிப்பதுமாக வந்தார்.

சார் வாங்க, என் கையைப் பிடிச்சிக்குங்க, தரை பூரா, சரளைக் கற்களா இருக்கு…..

இல்லல்ல, வேணாம்….நானே நடந்திருவேன். எத்தனை வருசமா இங்க வர்றேன். பழகின பாதைதான்…….

அதன் பிறகு, அவர் வேகத்தைக் குறைத்துக் கொண்டு, தடுமாறாமல் கவனமாய் நடக்கத் தொடங்கிவிட்டார். இருந்தாலும் ஓரிரு இடத்தில் கால்கள் தடுமாற என் கைகளை அனிச்சையாய் பற்றிப் பின், விலக்கி….. பின், பற்றி…. கடைசியாய் சமதளத்தை அடையும் முன்பு, காலுக்குக் கீழே இருந்த கற்கள், பாரத்தில் இடம்மாற, தடுமாறிச் சரிந்தவரை தூக்கி விட்டுப் பார்க்கிறேன். காலின் ஓரத்தில் சிராய்ப்பு, லேசாய் ரத்தம் எட்டிப் பார்க்கிறது. இடுப்பில் எங்கோ அடிபட்டிருக்க வேண்டும். முகம் வலியைக் காட்டிக் கொடுக்கிறது.

சார்………ரொம்ப வலிக்குதுங்களா?

இல்லையெனும் படியான ஒரு தலையசைப்பு……...

எதுல வந்தீங்க…….

கால் டேக்ஸி……….

சார்…என் கூட வாங்க, நானும் வீட்டுக்குத்தான் போறேன்…..

அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. ஒரு திட்டில், தலையைக் குனிந்தபடி, அமர்ந்திருந்த  அவர் நிமிர்ந்து,

உங்களுக்கு எதுக்கு, சிரமம்……

சார் அதெல்லாம் ஒன்னுமில்ல, இருங்க என் காரை எடுத்துட்டு வர்றேன்.

கொஞ்ச நேரத்திலேயே,  அவர் ஏதோ அமைதியில்லாதது, போல தெரிந்தது. அதுவரை நாங்களிருவரும் ஏதும் பேசிக் கொள்ளவேயில்லை.

சார்…..தண்ணி குடிக்கறீங்களா? ஏதும் சிரமமா இருக்கா?

வண்டியை தெரு ஓரத்திற்கு சென்று, நிறுத்தி விட்டு, பின்னிருக்கையில்  கிடந்த பாட்டிலை எடுத்து அவரிடம் கொடுக்க, அவர் அமைதியாக கைகளில் வாங்கிப், பின் ஏதோ யோசனையில் மடியில் வைத்துக் கொண்டார்.

ஆர்வோ வாட்டர் தான் சார். இன்னைக்குப் பிடிச்சதுதான்….

தலையை அசைத்து, பாட்டிலைக் கவிழ்த்து, தண்ணீரைக் குடித்துவிட்டு,  என்னைத் திரும்பிப் பார்க்கிறார். கண்ணாடிக்குள் தெரியும் அவர் கண்களில் ஏதோ ஒரு கலக்கம்., அவரை அறியாமலே குடித்த தண்ணீர் எதுக்களித்து வெளிவர, அவர் கையை வைத்து அடைத்துக் கொண்டே, அவசரசமாய்த் திரும்பி கார் கதவை திறக்க முயல,……. மீறி டாஸ்போர்டு முழுவதும்

சாரி…சாரி…என்று தன் கர்ச்சீப்பை எடுத்து அவசரசரமாய் டாஷ்போர்டைத் துடைக்க முயற்சிக்க…

சார் ஒன்னுமில்ல. பதட்டமாகாதீங்க….நான் அப்புறம் தொடைச்சிக்கறேன்.. கொஞ்சம் சாஞ்சு உக்காருங்க என்றபடி இருக்கையை கொஞ்சம் பின் நகர்த்தி, தளர்வாக்க முயற்சிக்கையில் அவர் கண்கள் சொருக, வியர்வை பெருகி வழிகிறது.  அவசரசரமாய், சட்டைப் பையிலிருந்து ஒரு அட்டையை எடுத்து என் கைகளில் கொடுத்தபடியே இருக்கையில் சரிய, அந்த அட்டையில், ஏதோ சில பெயர்கள், கூடவே அவர்களின் செல்ஃபோன் எண்கள்.

கார் முழுதும் முதுமையின் மணம். ஏசியை அவர் பக்கமாக, முழுவதும் திருப்பி, சட்டையின் மேலிரண்டு பட்டன்களைக் கழட்டிவிட்டு, கொஞ்சம் தண்ணீரைக் கைகளில் எடுத்து  அவர் முகத்தில் தெளிக்க….சட்டென்று விழித்தவர் ஒருமுறை கண்களைச் சுழல விட்டு, பின் என்னைப் பார்த்தவருக்கு கடைசி நிமிடங்கள் நினைவிற்கு வந்து விட்டிருந்தது. 

மீண்டும் கண்களை  மூடிக்கொள்கிறார்.

திடீரென்று, என் கையில் இருந்த அந்த அட்டையை அவசரமாய் பிடுங்கி   அதையே உற்றுப் பார்த்து, கண்களை மூடிக் கொள்கிறார். அப்போது தான் கவனித்தேன், அந்த அட்டையின் மற்றொரு புறத்திலிருந்த, ”சாய்பாபா” எங்களிருவரையும்,  வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

சார்……………..சார்……………

ஹாஸ்பிட்டல் போலாமா?  பக்கத்துல கே.எம்.சி.ஹெச் இருக்கு அங்க போகட்டுமா?

வேண்டாம், என்று தலையை ஆட்டியவர், கொஞ்சம் அமைதியாய் இரு. என்று எனக்கு கையைக் காட்டுகிறார்.

ஓரிரு நிமிடங்களில் விழித்து எழுந்தவர், சாரி….உங்களுக்கு சிரமம் கொடுத்திட்டேன், என்றபடியே மீண்டும் டாஷ்போர்டு ஈரத்தைத் துடைக்க ஆரம்பித்தார்

சார்….சார்…விடுங்க அப்புறமா நான் கழுவிக்கிறேன்…..நீங்க சாஞ்சு சவுகரியமா உக்கார்ந்துக்குங்க… வீட்டுக்கு பக்கத்துல வந்திட்டோம்..

அவர் வீட்டின் ஓரமாய், வண்டியை நிறுத்திவிட்டு, அவர் இருக்கைப்பகுதிக் கதவைத் திறந்து, அவர் தோளை ஒரு கையால் பற்றி, மற்றொரு கையால் அவர் கைகளைப் பற்ற, அவர் உதறிக் கொண்டு சுற்றும் முற்றும் பார்க்கிறார். 

இல்லையில்லை…நானே வந்திருவேன்… நீங்க கொஞ்சம் கதவை மட்டும் திறந்துவிடுங்க என்றபடி தன் வீட்டின் சாவியைக் கொடுத்தார்.

பெரிய ஹால்.  உயர்தரமான சோபாக்கள். அலங்காரங்கள். அந்த அறைமுழுவதும் பணம் பொருளாய் மாறிக் கொட்டிக் கிடந்தது. மிக நாகரீகமான உடையில், ஒரு இளம் தம்பதியினர், அருகே அழகான ஒரு பெண் குழந்தை அதன் முன்னிரண்டு பற்களை இழந்தும், வாய் திறந்து, எந்தக் கவலையுமில்லாமல், சிரித்துக் கொண்டிருக்கும் பெரிய படம்.

உட்காருங்க என்று சொல்லியபடியே,  அவர் அமர

அறைக் காற்றில் ஏதோ ஒரு சலனம், ஒரு நிமிடம் உடல் நடுங்கி, பின் தளர்வாகிறேன்.  எதிரில், மெலிந்த, வெளிர்ந்த ஒரு வயதான, பெண்மணி.

நான் எழுந்து வணக்கம் சொல்ல,  எதிரே இருந்தவர் திரும்பிப் பார்த்து,

தம்பி எதிர்த்த வீட்டில இருக்காரு.  வாக்கிங் முடிஞ்சி வரும்போது பார்த்தேன், இவர் தான் கொண்டு வந்து விட்டாரு.

நான் ஏதோ சொல்லத் துவங்க, எதிரிலிருந்தவரின் வலது கை அவசரவசரமாக, ஏதும் சொல்ல வேண்டாம் என்பதைப் போல இடவலமாய் ஆடியது.

வார்த்தைகளை விழுங்கிவிட்டுத், தலையை மட்டும் அசைக்கிறேன். காற்றுச் சலனம் மென்மையாய் சுழன்று உள்ளே நகர்ந்தது.

அவர், மெல்லிய குரலில், ஏதாவது சொன்னா அவ பயந்துக்குவா. எனக்கு ஒன்னுமில்லை. கொஞ்சம் அசிடிட்டி அவ்வளவு தான். ஒரு பேண்டோஸெக் சாப்பிட்டாப் போதும், சரியாயிரும்.

காற்றுச் சலனம் மீண்டும் வந்தபோது, ஒரு தட்டில் ஓரிரண்டு பிஸ்கட்டுகள்,  டம்ளரில் கொஞ்சம் தண்ணீர்.

காபி……என்ற ஒரு வார்த்தை, மட்டுமே எனக்குக் கேட்டது.

தண்ணீரை  கொஞ்சம் குடித்துவிட்டு, இல்லைங்கம்மா, நான் புறப்படறேன். இன்னொரு நாள் வர்றேன்.

இருவரும் தலையசைத்து விடை கொடுக்க, அங்கிருந்து வெளியேறி நடக்கிறேன்.

ஓரிரண்டு வாரங்களுக்குப் பிறகு, அதே மலையடிவாரம், அதே பாறைத் திட்டு, நாங்களிருவரும்……………. எங்களுக்கிடையே பேரமைதி.

திடீரென்று நீங்க என்ன செய்யறீங்க?

சார் நான் நகராட்சிப் பள்ளியில தமிழாசிரியர்.  அப்பா அம்மா நசியனூர் பக்கத்தில கிராமத்தில இருக்காங்க. மனைவி, இரண்டு குழந்தைகள். இந்தப் பகுதிக்கு இப்பத்தான் குடிவந்திருக்கேன்.

அவர் கண்கள் மிளிர,  நாங்களும், டீச்சர்ஸ்தான். கவர்ன்மெண்ட் ஹை ஸ்கூல்ல மேத்ஸ் சொல்லிக் கொடுத்தேன்.  வீட்டுல அவங்க, பஞ்சாயத்து ஸ்கூல்ல சயின்ஸ் டீச்சர்.  பையன், எம்டெக் முடிச்சு, அமெரிக்கா போயி 10 வருசமாச்சு. 

திடிரென்று உற்சாகமாகி, உங்க வீட்டுக்கெதிரா, இருக்காரே ஸ்டீபன், அவரும் டீச்சர்தான். நம்ம தெருவுல இருக்கற பெரும்பாலானவங்க டீச்சர்ஸ், கவர்ன்மெண்ட் எம்ப்ளாயீஸ் தான். பாலகோபால் சயின்ஸ், ஜெகன்நாதன் காமர்ஸ், பி டி ஜேம்ஸ், எல்லாருமே டீச்சர்ஸ்தான்.   

உங்களுக்கு ஒன்னு தெரியுமா? நம்ம பழைய கலெக்டர் சுந்தரேசன் இருந்தாரே அவர் என்னோட ஸ்டூடண்ட்.

கத்துக் குடுக்கறதுங்கறது ஒரு கலை.  எல்லாருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கறதில்லை.  அவர் குரல் அவரறியாமல் உயர்கிறது.  அப்படி ஒரு பெருமிதம் அந்தக் குரலில். ஏதேதோ, பேசிக் கொண்டே இருக்கிறார்.  தன்னுடைய கதையையும், தான், கற்றுத்தந்த மாணவர்களில், பலர், இன்று பெரிய மனிதர்களாக இருப்பதை பற்றியும் சொல்லிக் கிட்டே வந்தவர், இடையில் ஒரு நிமிடம் பேச்சை நிறுத்தி,

கட்டுத் தரையைக் கூட்டி, சாணி வழிச்சிப் போட்டுட்டு, கிழிஞ்சு, பட்டன் இல்லாத டவுசரை அரணாக் கயிறுல சுருட்டி விட்டுகிட்டு, 3 மைல் நடந்து போயி, சத்துணவுன்னு போட்ட கோதுமைக் கஞ்சியைக் குடிச்சுதான் படிச்சு வளர்ந்தோம்.   படிச்சி, வேலை வாங்கி, கலியாணம் கட்டி, குழந்தைகளைப் பெத்து வளர்த்தி,  அவங்களைப் படிக்க வச்சு, அவங்களுக்கு கல்யாணம் செஞ்சு வச்சு, எவ்வளவோ சிரமப்பட்டிட்டோம். அதனாலதான், இன்னைக்கு நல்ல நிலைமைல,   நிம்மதியா வாழறோம், என்று சொல்லியபடியே தன் கண்ணாடியைக் கழற்றி, கண்களைத் துடைத்துக் கொண்டு, என்னை நிமிர்ந்து பார்த்தவரிடம்,  கேட்க எனக்கு ஒரு கேள்வி  இருந்தது.

நான், என்ன கேட்கப் போகிறேன், என்பது அவருக்குப் புரிந்திருக்க வேண்டும்.   ஒரு நிமிடம் என்னை உற்றுப் பார்த்துவிட்டு,

ஒருமுறை, காற்றை ஆழமாய் உள்இழுத்து, வெளியே விட்டு, அமைதியாய், வேண்டாம் என்பதாய் தன் வலது கையை இட வலமாக அசைக்கிறார்.  அந்த நாளுக்குப் பிறகு,  நாங்களிருவரும் பேசிக் கொள்வதேயில்லை.




1 comment :

தருமி said...

ஆரூரான்,

நீங்க இன்னும் “சின்னப் பையன்” தானே - என்னைப் பொறுத்தவரை! இன்னும் ஓய்வு பெறும் நிலை வர இன்னும் பல ஆண்டுகள் நீங்கள் காத்திருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன். அதனால் தான் ஓய்வு பெற்ற ஒரு ‘பெரியவரின்’ “சோக” வாழ்க்கையைப் பற்றி எழுதியுள்ளீர்கள். உங்கள் எழுத்து என்னவோ எப்போதுமே மிகவும் பிடித்த இறுக்கமான எழுத்து தான். ஆனால் கருத்து தான் கொஞ்சம் எனக்கு உதைக்குது!

என் வயது காலத்தில் நான் தனி வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு பெற்றவங்களைப் பிரிய ஆசைப்படவில்லையா? அதே போல் இன்று என் பிள்ளை ஆசைப்பட்டால் மட்டும் அது தவறா? பெரியவரின் பிள்ளை அயல்நாடு சென்று விட்டான். அப்பா அம்மா இங்கே தனிமையில். இது தான் இயற்கை. இதில் என்ன சோகம். என் பிள்ளை என்னைத் தோளில் எப்போதும் தூக்கிக் கொண்டே திரிய வேண்டும் என்பதா சரி? பறவைக்கு இறக்கை முளைத்தாகி விட்டது. அது பறந்து போயே ஆக வேண்டும். அது தான் சரி. நானும் அப்படித்தானே இருக்க ஆசைப்பட்டேன்.

இந்த ஓய்வு வாழ்க்கை நீங்கள் நினைப்பது போல் அத்தனை கடினமான, சோகமான வாழ்க்கையல்ல. (ஆனால், ஓய்வூதியம் இல்லாவிட்டால் எப்படி என்று தெரியவில்லை.) சொல்லப்போனால் இது முழுச் சுதந்திரமான வாழ்க்கை. பிள்ளைகள் நன்றாக இருக்கிறார்கள் - எங்கோ! அது மட்டும் தான் எங்களுக்கு வேண்டும்.

(ஒரே ஒரு அச்சம் மட்டும் வயதான மனதில் அவ்வப்போது எட்டிப் பார்க்கும் - உடல் நலம் பற்றிய அச்சம். கஷ்டப்படாமல், கஷ்டப்படுத்தாமல் போக வேண்டுமே என்ற ஒரே கவலை கொஞ்சம் தலை நீட்டிப் பார்க்கும்.) இது பிள்ளைகள் கூடவே இருந்தாலும் ‘பெருசு’களுக்கு வரக்கூடிய / இருக்கக் கூடிய கவலைதான்.

இதையும் வாசிங்களேன் : https://dharumi.blogspot.com/.../192-for-eyes-of-senior...