Monday, March 02, 2020

இயற்றலும்….. ஈட்டலும்….. காத்தலும்……..

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு
(அதிகாரம்:இறைமாட்சி குறள் எண்:385)
கடும் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், வங்கிகளில் வராக்கடன் உயர்வு, நுகர்வு குறைவு போன்றவை, இந்தியப் பொருளாதாரத்தை சரிவிற்கு இட்டுச் செல்வதை அறியமுடிகிறது. பொருளாதார மந்தநிலை, எந்த அளவிற்கு சமூகத்தையும் அதன் நல்லியல்புகளையும் குலைத்துப் போடுகின்றது, என்பதைப் பற்றிப் பேசித்தான் ஆகவேண்டியிருக்கிறது. பொருளாதார மந்தநிலை குறித்த கவலை, ஒவ்வொருவருக்குள்ளும் பெரும் அச்சத்தைத் தரத்தொடங்கியிருக்கிறது. இதற்கு முன்னும், இவ்வாறான கவலைகளோடு இந்தச் சமூகம், பலநூறு ஆண்டுகளைக் கடந்து வந்திருக்கிறது. ஆனால் அன்றைய சூழலுக்கும், இன்றைக்கும் நிறைய வேறுபாடுகளைக் காண முடிகிறது
இதுவரை இந்தச் சமூகம் கண்ட மிக மோசமான சூழல்களும், சாவுகளும், உணவுக்கானதாக மட்டுமே இருந்திருக்கிறது. மழை பொய்த்துப் போய், வறட்சியின் பிடியில் எதையும் விலைகொடுத்து வாங்கமுடியாத நிலையும், விலை கொடுத்தாலும் கிடைக்காத பொருளாகவும் உணவு மாறியிருந்தது. கட்டற்ற வணிகம், இன்று உணவுப் பொருட்களை விளைத்துக் குவித்திருக்கிறது. அரசும் தன் பங்கிற்கு, உணவுப்பொருட்களை வாங்கி, இருப்பு வைத்தோ, இறக்குமதிகள் செய்தோ, விலைச் சமனை உறுதி செய்து கொள்கிறது. உணவு இன்று ஒரு பெரும் சிக்கலானதாக இல்லை. இந்தியாவைப் பொறுத்தவரை, ”பட்டினிச்சாவுகள்” (starvation) முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டதாக அரசுகள் தொடர்ந்து சொல்லிக் கொண்டேதான் இருக்கின்றன. ஆனாலும் “ கரிபி ஹட்டாவ்” (remove poverty) ”பேக்காரி ஹட்டாவ்”(remove unemployment) போன்ற குரல்கள் ஒலித்துக் கொண்டேதான் இருக்கின்றன. 70 ஆண்டுகளுக்கு மேலாக ஒவ்வொரு அரசும் இதையேதான் சொல்லி வருகின்றன. வார்த்தைகளும் சொல்லும் விதமும் வேண்டுமானால் மாறியிருக்கலாம்.
ஆகச்சிறந்த பள்ளிகளில், அதீத கட்டணத்தில் படிக்க வைத்தால் மட்டுமே வாழ்வில் சிறக்க முடியும் என்பது நம் அனைவரின் நம்பிக்கை. துவக்கப் பள்ளிகாலத்தில் இருந்து, உயர்நிலை வரை கிட்டத்தட்ட 12 ஆண்டுகள், இப்படியான செலவுகளில் துவண்டுதான் போய்விடுகிறோம். ஒரு கட்டத்தில் தொடரவும் முடியாமல், வெளியேறவும் முடியாமல், அகப்பட்டுத் தவிக்கின்றோம்.
மோசமான சுற்றுச் சூழல், முறையில்லாத உணவுப் பழக்கம், கலப்பட உணவுப் பொருட்கள் அல்லது பூச்சிக் கொல்லிகள் மற்றும் செயற்கை உரங்கள் ஆகியவற்றால் ஏற்படும் உடல் பாதிப்புகள், வாழ்நாள் முழுதுக்குமான நோய்கள் என, மருத்துவச் செலவினங்களும் கூடிப் பெருகியிருக்கின்றன. இன்றைய நாளில் வீட்டு வாடகை, போக்குவரத்துச் செலவினங்கள், மிகவும் கூடியிருக்கின்றன.
நாற்பது வருடங்களுக்கு முன், தூத்துக்குடியிலிருந்து பிழைப்புக்காய், சென்னை வந்திறங்கிய அந்த மனிதர், அந்தப் பெருநகரத்தின் ஏதோ ஒரு மூலையில் காலூன்றி, சிறு சிறு தொழில்கள் செய்து, அன்றைய நாளில் புறநகராய் இருந்த வேளச்சேரியில், ஒரு இடத்தை விலைகொடுத்து வாங்கி, தனக்கான ஒரு ஓலைக் குடிசையைக் கட்டி, அதில் இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்த கதையை, அவர் என்னிடம் சொல்லச் சொல்ல மனம் கணத்து அமர்ந்திருந்தேன். அந்த மாநகரத்துக்குள் அவர் செய்யாத தொழிலே இல்லை என்ற அளவிற்கு கணவன் மனைவியும் உழைத்துச் சலித்திருந்தனர். வளர்ந்த மகன் தன் நண்பர்களோடு சேர்ந்து, ஏதோ ஒரு மசாலா நிறுவனம் அமைப்பதற்காக, பெரும் கனவோடு இரண்டு அறை, சமயலறை கொண்ட வீடாய் மாறியிருந்த தன் குடிசையை, வங்கியில் அடமானம் வைத்துக் கொடுத்த பணம், சிலவருடங்களில் தீர்ந்து போய், இன்று வராக்கடன் பட்டியலில் இடப்பட்டிருக்கிறது. வீட்டின் முன் வந்து, வங்கி அலுவலர்கள் நின்று சத்தம் போடுவதைத் தாங்கமுடியாமல், அவமானத்தில் குன்றி “என் வீட்டை எடுத்துக் கொண்டு, ஐந்து லட்சம் பணம் கொடுங்கள், இங்கே வாங்கிய சில்லறைக் கடன்களைக் கொடுத்துவிட்டு, மீண்டும் தன் மீன் பிடிகிராமத்திற்கே சென்றுவிடுகின்றேன்” என்கிறார் அழுதபடியே. அருகில் அமர்ந்திருந்த அவர் மகனோ கவலை ஏதுமின்றி வாட்ஸ் அப்பில் மூழ்கி இருந்தார்.
ஒரு வங்கியின் கடன் வசூல் பொறுப்பு மேலாளரோடு, நகரின் மிகப்பெரும் செல்வந்தர்கள் வசிக்கும் பகுதியில் இருந்த, ஒரு பிரமாண்டமான வீட்டிற்கு சென்ற போது, வீட்டினுள் யாருமில்லை. மேலாளர் அவரிடமிருந்த சாவியின் மூலம் வீட்டைத் திறந்து காட்டினார். வீட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும், பணம் ஏதோ ஒரு பொருளாகி, நிறைந்திருந்தது. நீண்ட நாட்களாய் பூட்டிக் கிடப்பதால் புழுதியும், துக்கமும் நிரம்பி இருந்தன. வாசலில் நான்கு கார்களோடு, தோட்டக்காரன், டிரைவர், வருவோர் போவோர் என்று பரபரப்போடு, சில வருடங்களுக்கு முன் இயங்கிக் கொண்டிருந்திருந்த அந்த வீடு, இன்று தன் வெளிக்காட்டமுடியாத துயரத்தோடு தவித்ததை உணர முடிந்தது. வீட்டின் வரைபடங்கள், ஆவணங்களைப் பார்த்தபின், வீட்டின் உரிமையாளரைப் பற்றிக் கேட்டபோது, அவர் இறந்துவிட்டார், அவர் மனைவி, மற்றும் ஒரே மகளுக்கும் ஏதும் தெரியாது. உறவினர்களோ, நண்பர்களோ பெரிதாய் யாருமில்லை. வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார் அந்தப் பெண்மனி என்றார், வங்கி மேலாளர்.
இப்படி ஆயிரமாயிரம் பேர் தங்கள் செல்வங்களை, இந்த வியாபாரக்கடலிலே கரைத்துவிட்டுக் கரையைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
பெரும் தொழில் நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனை மந்தநிலையைக் காரணமாக்கி, வேலை நாட்களைக் குறைத்துக் கொண்டிருக்கின்றன. பல நிறுவனங்கள் ஆட்குறைப்பிலும் இறங்கியுள்ளன. வேலைவாய்ப்பு குறித்த கணக்கீடுகளின் படி, இந்திய அளவில் வேலை செய்யத் தகுதியானவர்களில் கிட்டத்தட்ட 9 சதவீதப் பேர் வேலையின்றித் தவிக்கின்றனர். இதில் மிக அதிகமாக திரிபுரா 28.6 சதவீதப்பேரும் ஹரியானா மாநிலத்தில் 27.6 சதவீதம் பேரும், இமாச்சலத்தில் 20.2 சதவீதம் பேரும், இராஜஸ்தானில் 15.9 சதவீதப்பேரும் வேலை வாய்ப்பின்றி இருப்பதாகத் தெரிவிக்கிறது.
திறந்தவெளிச் சந்தை மற்றும் கட்டற்ற உற்பத்திப் பெருக்கத்தின் விளைவுகளை, உலகச்சந்தைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே காணத்துவங்கியிருந்தாலும், இந்தியாவுக்கு இது முற்றிலுமே புதியதுதான். மிகப்பெரிய நாடு, உள்நாட்டு நுகர்வே, மிகப்பெரிய சந்தை என்று நம்பிக் கொண்டிருந்த நிலை மாறிவிட்டிருக்கிறது. மக்கள் நுகர்வைக் குறைத்துக் கொண்டிருக்கின்றனர். எதிர்காலம் குறித்த அச்சம் ஒவ்வொருவரிடமும் தெரிகிறது.
சுமார் 136 கோடிப் பேர் வாழும் இந்த நாட்டில், கணக்கீட்டு ஆண்டு 2019-20 ல் வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பித்தவர்கள் 5.65 கோடி. இவர்களில், மத்திய, மாநில, பொதுத்துறை ஊழியர்கள் சுமார் 2.50 கோடி. மீதமிருக்கும் 3.15 கோடியில், 2.62 கோடிபேர், தங்களுக்கு வரி கட்டுமளவிற்கு வருமானம் இல்லை என்று கணக்கு சமர்ப்பித்துள்ளார்கள். ஒட்டுமொத்த மக்கட்தொகையான 136 கோடியில், வெறும்53 லட்சம் பேர் மட்டுமே, வரி கட்டுமளவுக்கு தொழில் செய்து வருகிறார்கள். ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருட வருமானம் இருப்பவர்கள் 97689 பேர். இதில் சம்பளதாரர்கள் 49128. சுமார் 48561 பேர் மட்டுமே தொழில்கள் செய்து அதன் மூலம் ஆண்டிற்கு ஒருகோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்களாக இருக்கின்றார்கள்.
இந்தச் சூழலில், இளையதலைமுறையினரின் பொறுப்பற்ற போக்கும், காணும் பொருட்களையையெல்லாம் நுகரும் ஆசையும், மிக மோசமான இடத்திற்கு தள்ளிக் கொண்டு செல்கிறது. ஏமாற்றுவது, திருடுவது, கொள்ளையடிப்பது, எப்படியாவது பணத்தைத் தேடுவது என்ற எண்ணங்கள் பெருகிவருவதைக் காணமுடிகிறது.
உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் நகரத்தில், போலியான பெயரில் 15 நிறுவனங்கள் துவங்கப்பட்டு, அந்தப் பெயர்களிலேயே TAN(tax deduction account number) மற்றும் PAN எண்கள் பெறப்பட்டு,கட்டாத TDS(Tax deducted at sources) சை திரும்பப் பெற்றிருக்கின்றனர். வருமானவரித்துறை பலநூறு கோடிகளை இழந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த வழக்கு தற்போது சிபிஐ வசம் இருக்கிறது.
கடந்த செப்டம்பர் 12ஆம் நாள் இந்தியாமுழுவதும் 336 இடங்களில் சுமார் 1500 அலுவலர்களை ஒன்றினைத்து, நடத்தப்பட்ட திடீர் சோதனையில், முறைகேடாக பலநூறு கோடிகள் in put tax credit வகையில் திரும்பப் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 2018-19 ஆம் ஆண்டில் மட்டும் 37946 ஆயிரம் கோடிகள் அளவிற்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கின்றன. கடந்த ஜூன் 2019 வரை சுமார் 12472 வழக்குகள், 59,793 கோடிகள் வரை வரி ஏய்ப்பு மற்றும் போலி ரசீதுகளை சமர்ப்பித்து, பணத்தை திரும்பபெறுதல் போன்ற குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக மாநிலங்களவையில் நிதித் துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருக்கிறார். 40,000 கோடிகள் மதிப்பிலான ஜிஎஸ்டி திரும்பப் பெரும் விண்ணப்பங்களை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
பணமில்லாத வர்த்தகம் ஒரு சிறந்த முறையாக உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அது கொடுக்கும் அதிர்ச்சிகளுக்கு அளவே இல்லை. ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கிரித்திஹ் என்ற ஒரு சிறிய கிராமத்தில் 1000 பேர்களில் 900 பேர் சைபர் கிரைம் போலீஸாரால் தேடப்படுபவர்கள் என்ற ஒரு செய்தி ஆச்சரியத்தைக் கொடுக்கலாம். படிப்பறிவில்லாதவர்கள் என்று நாம் நினைக்கும் நபர்கள் தான் மிகச் சிறப்பாக இதைச் செய்கிறார்கள். கோவாவைச் சேர்ந்த சிட்னி லிமோஸ் என்ற 37 வயதுடைய தொழிலதிபருக்கு, நிதி மோசடி குற்றங்களுக்காக 500ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியிருக்கிறது துபாய் நீதிமன்றம். இது ஒன்றும் வேடிக்கைக்காகச் சொல்லவில்லை, அவர் செய்த குற்றங்களின் அளவு அத்தனை அதிகம்.
உத்தரப்பிரதேசத்தின் கான்பூர், லக்னோ நகரிங்களில் TDS (Tax deducted at Sources) என்ற வகையில் முன்கூட்டியே அதிக வரி செலுத்தியதாகச் சொல்லி, செலுத்தாத வரியைத் திரும்பப்பெற்றிருக்கின்றனர். தற்போது இந்த வழக்கு சிபிஐ வசமிருக்கிறது.
இந்திய ரயில்வேயின் IRCTC, CRIS போன்ற போலியான தளங்கள் வடிவமைத்து போலியாக ஈ-டிக்கட் வழங்கிய வழக்கில் , குற்றவாளியே, இரயில்வேயிற்கு இதுகுறித்த வாட்ஸ் அப் தகவல்களை வழங்குவதெல்லாம், இந்தியாவில் மட்டுமே நடக்கும் என்று நினைக்கின்றேன்.
அமெரிக்காவின் ”சார்லஸ் பொன்ஸி” பெயரால் அழைக்கப்படும் பொன்ஸி சதிகள் இன்றுவரை இந்தியாமுழுவதும் நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கின்றன. அனுபவ் பிளாண்டேஷனில் துவங்கி ஈமு கோழிவரை, இன்னும் ஏதேதோ. இதற்கெல்லாம் காரணமாக, பேராசை என்ற ஒன்றே, முன் வைக்கப்படுகிறது. ஆனால் அதுமட்டுமே காரணமாக இருக்க முடியாது.
சில நாட்களுக்கு முன்பு, என்னைச் சந்திக்க வந்த வங்கி அலுவலர் ஒருவர், வாங்கிய கடனை கட்ட முடியாமல், நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் கையகப்படுத்தப்பட்ட ஒரு வணிக வளாகத்தைக் குறைவான விலைக்கு வாங்கித்தருவதாகவும், பதிலுக்கு அவரை ”கொஞ்சம் கவனித்தால் போதும்” என்று சொன்னபோது, என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
2015ல் இருந்து பெரும் கடன்களை, வங்கிகளிடமிருந்து வாங்கிக் கொண்டு, இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்குத் தப்பியோடிய 70 அல்லது 80 பேரைப்பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறோம். இங்கே உள்ளூரிலேயே, ஒருவர் கடனை அடைக்க முடியாமல் தன் சொத்தை இழக்கிறார். அவருடைய சொத்து மதிப்பை விட மிகக் குறைவான விலைக்கு அவர் சொத்தை விற்று, அவருக்கும், வங்கிக்கும், மறைமுகமான நட்டத்தை ஏற்படுத்துகின்றனர்.
காலங்காலமாய் நடந்து வரும் conventional crime என்பதைத் தாண்டி, சமூக பொருளாதாரக் குற்றங்கள் socio economic offences எண்ணிக்கை கணிசமாகக் கூடிக் கொண்டேயிருக்கின்றன. வழக்கமான குற்றவியல் வழக்குகள் போல், கோபம், அவமரியாதை, பழம்பெருமையைக் காப்பாற்ற என்று அல்லாமல், இந்தச் சமூகப் பொருளாதாரக் குற்றங்களுக்கு, சொத்து சேர்ப்பில் உள்ள ஆர்வம், அல்லது பேராசை, போன்றவையே காரணமாக அமைகின்றன. conventional crime எனப்படும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போன்றவற்றிலிருந்து மாறுபட்டு, இந்தப் பொருளாதார குற்றங்கள், இவர்களுக்குள் எந்தவொரு குற்ற உணர்ச்சியையும் கொடுப்பதில்லை. தண்டனைகள் குறித்த பயங்களும், இந்த வகைக் குற்றவாளிகளுக்கு வருவதில்லை.
National crime records bureau (NCRB)2017 ஆம் ஆண்டின் தகவல்களின் படி, இந்தியாவின் 8 மாநிலங்கள், 67.2% பொருளாதாரக் குற்றங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதில் ராஜஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது. உத்தரப்பிரதேசம், தெலுங்கானா, மிக முக்கிய இடங்களை வகிக்கின்றன. மேற்கு வங்கம், பீகார், கர்நாடகம், அஸ்ஸாம் ஆகிய எட்டு மாநிலங்கள் ஒட்டுமொத்த குற்றங்களில் 67.2 சதவீதமாக் இருக்கின்றன.2017ஆம் ஆண்டு கணக்கீட்டின் படி, 1,48,972 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. 8926 நிறுவனங்கள் பெற்ற கடன்கள், வராக்கடன்களாக மாறியிருக்கின்றன. அதன் மொத்ததொகை 1,17,464 ஆயிரம் கோடிகள்.
பொருளாதாரக் குற்றங்கள் பெருகும் போது, வங்கிகள் தங்கள் முதலீட்டை இழக்கத் துவங்குகின்றன. மூலதனப் பற்றாக்குறையும், தொடர்ந்து பொருளாதார மந்தமும் உருவாகின்றன. பொருளாதாரத்தைச் சீர்செய்ய, அரசு, பொதுமக்களிடமிருந்து பெறும் வரிப்பணத்தை, வங்கிகளுக்கு முதலீடாக வழங்குகிறது. தொடர்ந்து வங்கிகள் கடன் அளிக்கின்றன.
மீண்டும் மற்றொரு நாளில், பொருளாதாரக் குற்றங்கள் பெருகலாம், வங்கிகள் தங்கள் முதலீட்டை இழக்கலாம். மீண்டும் வங்கிகளுக்கு, முதலீடுகள் தேவைப்படலாம். அரசும் தன் வரிப்பணத்தில் இருந்து, மீண்டும் முதலீடுகளைத் தரலாம், நாமும் இன்னும் கூடுதலாக, வரி செலுத்த வேண்டியும் வரலாம்

2 comments :

soms erode said...

புதிய பார்வை,இந்தியாவின் கவலைதரும் எதிர்காலத்தை எச்சரிக்கும் ஆசை....நன்று

Malar Selvam said...

நல்லதொரு அலசல்❗