Thursday, December 03, 2009

வனம்………..

கடந்த ஒரு மாதமாக கடுமையான வேலை. திருவாசகத்தை எளிய நடையில் பதம் பிரித்து, உரையுடன் வெளிக்கொண்டு வர திட்டமிட்டிருந்தார் எனது தந்தையார். அவரது பணியில் அவருக்கு துணையாக செயல்பட வேண்டிய சூழ்நிலை.

திருவாசகத்தை ஓதுவார்களை வைத்து பாட வைத்து, அதன் பின்னனியில் மாணிக்கவாசகர் சென்று வந்த கோவில்களையும் இணைத்து ஒரு டி.வி.டியும், பாடல்கள் மட்டுமான ஒரு எம்பி3 யும் சேர்த்து வெளியிடுவது என்று முடிவு செய்திருந்தோம். பணிகள் கிட்டதட்ட முடிவடைந்து விட்டது. நாளை மறுதினம் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பன்னிரு திருமுறை வளர்ச்சி மையத்தில் நாளை மறுநாள் வெளியிடப் பட உள்ளது.

இந்த பணிகளின் காரணமாக வலைப்பக்கத்திற்கே வரமுடியாத சூழ்நிலை. பணிகள் நிறைவடைந்த நிலையில் அப்பாவை கோலாலம்பூர் வழியனுப்பிவிட்டு அதே வேகத்தில், இரண்டு நண்பர்களோடு வனத்திற்குள் புகுந்தேன்.





மூன்று நாட்கள், ஆசனூர், பண்டிப்பூர், முதுமலை, சுல்தான் பத்தேரி, வயநாடு, என சுற்றிவிட்டு இன்று காலை வீடு வந்தேன். ஒவ்வொருமுறையும் வனம் எனக்குப் புத்தம் புதிதாய் தெரிகிறது. நிறைய கற்றுக் கொடுக்கிறது…..



 

 

 

 
 நேற்று அதிகாலை 5மணிக்கு முதுமலை காட்டுப் பாதை திறப்பதற்காக காத்துக் கொண்டிருந்தோம். அப்போது நான்கு பைக்குகளில் 8 இளைஞர்களும், மூன்று (காதலர்களா அல்லது நண்பர்களா என்று தெரியவில்லை,) பைக்குளில் இளஞ்ஜோடிகளும் எங்களோடு காத்துக் கொண்டிருந்தனர். பாதை 6மணிக்கு திறந்தவுடன், உற்சாகமாக எங்களைப் பார்த்து கையசைத்துவிட்டு, ஆரவாரத்துடன் புறப்பட்டு வனத்திற்குள் நுழைந்தனர். நாங்கள் மெதுவாக பின் தொடர்ந்தோம், சில நிமிடங்களில் எங்கள் கண்களிலிருந்து மறைந்தனர்.

சிறு வண்டுகளின், பெயர் தெரியாத பறவைகளின் ஒலி, தவிர வேறேதும் இல்லை. வனம் அவர்களை விழுங்கிவிட்டதோ என்று எண்ணிக் கொண்டிருந்தேன். சூரியக் கதிர்கள் மெல்ல நுழையத் தொடங்கின.

மெல்ல ஊர்ந்த படி சென்று கொண்டிருந்தோம். திடீரென்று ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்கத்தொடங்கியது. செல்லச் செல்ல அந்த குரல் தெளிவாக கேட்கத்தொடங்கியது. ஒரு திருப்பத்தில் அவர்களைக் கண்டோம். அரைமணிக்கு முன்பாக மகிழ்சியில் சென்ற அந்த குழுவில் இரண்டு இளைஞர்கள், பிணமாக……..

மற்றவர்கள் அந்த இறந்த உடல்களைச் சுற்றி, நின்று கதறி அழுது கொண்டிருந்தனர். அவர்களுள் ஒரு பெண் பெருங்குரலெடுத்து கதறி அழுதாள். அங்கும் மிங்கும் ஓடினாள், இறந்து கிடந்த அந்த உடல்களை தன்னோடு வந்தவர்களுக்கு காட்டி காட்டி ஏதோ சொல்லி அழுதாள். அவள் பேசிய மொழி எனக்கு புரியவில்லை, அனேகமாக கூர்க் பகுதியைச் சார்ந்தவளாக இருக்கவேண்டும்.

சாலை வளைவில் திரும்பாமல், அவர்கள் நேராகச் சென்று,மரத்தில் மோதி, அந்த இடத்திலேயே இறந்து விட்டிருந்தனர். மற்றவர்கள் அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தனர். அதிகாலை அமைதிக்கு நடுவே அவளின் ஓலம் என்னை ஏதோ செய்தது.

என் வாழ்வில் மிக அருகில், பார்த்த, சில நிமிடங்களுக்கு முன் நடந்த மரணம். வன விலங்குகள் ஒலிகளைக் கேட்டு மிரண்டு அருகே வரலாம், எனவே அமைதியாக இருக்கச் சொல்லுங்கள் என்று அந்தப் பெண்ணின் நண்பரிடம் ஆங்கிலத்தில் சொன்னேன். அவரும் அந்தப் பெண்ணை அமைதிப் படுத்த முயன்றார்.

அந்தப் பெண்ணின் அழுகை இன்னும் என் நினைவுகளை விட்டு விலக மறுக்கிறது. நகரத்தின் நாகரீக மங்கை, தன் நிலை மறந்து, உடலெங்கும் சேறும், சகதியும், ரத்தமுமாக அழுது புரண்டது ஏனோ என்னை வதைத்தது. சில நிமிடங்களுக்கு முன் தன்னோடு சிரித்துப் பேசி, ரசித்தவன் நொடிகளுக்குள் பிணமென்றால்……….? அவளின் மனநிலை எப்படி இருந்திருக்கும். …………

என் கண்களில் நீர் வழிகிறது….அந்த முகந்தெரியாத பெண்ணையும், அவள் இழப்பையும் என்னும் போது…........

14 comments :

vasu balaji said...

/ஒரு டி.வி.டியும், பாடல்கள் மட்டுமான ஒரு எம்பி3 யும் சேர்த்து வெளியிடுவது என்று முடிவு செய்திருந்தோம். பணிகள் கிட்டதட்ட முடிவடைந்து விட்டது. நாளை மறுதினம் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பன்னிரு திருமுறை வளர்ச்சி மையத்தில் நாளை மறுநாள் வெளியிடப் பட உள்ளது.//

மிக உன்னதமான பணி ஆரூரன்.

படங்கள் மிக அழகு.

அந்த அவலம் கலங்கடிக்கிறது.

vasu balaji said...

கமெண்ட் ஃபீட்ஸ் மறையுது ஆரூரன். செலக்ட் பண்ண கஷ்டமாயிருக்கு. feeds, பின் தொடர எழுத்துரு குறைச்சா போதும்.

ஈரோடு கதிர் said...

அருமையான பணி முடிச்சிருக்கீங்க

பாராட்டுக்கள்

ஈரோடு கதிர் said...

அடப்பாவமே... அந்த பெண் வாழ்க்கை முழுதும் இந்த வலியை சுமக்கனுமே....

Unknown said...

ஒரு மகிழ்ச்சி..
ஒரு வருத்தம்..

இராகவன் நைஜிரியா said...

முதலில் படிக்கும் போது இருந்த மகிழ்ச்சி, கடைசியில் வர வருத்தமாக மாறிவிட்டதுங்க..

கண் எதிரில் சில நிமிடங்களுக்கு முன் சிரித்தவர்கள் இறந்து விட்டார்கள் .. கொடுமைடா சாமி

Anonymous said...

கண் முன்னே பழகியவர்கள் இறப்பதைப்பார்ப்பது கொடுமை.

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி பாலாண்ணே.......

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி கதிர்

நன்றி பட்டிக் காட்டான்

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி சின்ன அம்மிணி

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி ராகவன்

வால்பையன் said...

மிக வருத்தமான செய்தி தல!

அவ்வளவு வேகமாவா போனாங்க!,
வேகம் மிகக்கொடியது தான்!

கலகலப்ரியா said...

அருமை..!

ஆரூரன் விசுவநாதன் said...

thank you vaal

thank you priya