Wednesday, September 19, 2018

பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் மருந்து…….









வழக்கமாய் வார இறுதிக்கு வருபவள்,  முன்பாகவே, வந்திருக்கிறாள்.  முகமும் தெளிவாய் இல்லை. வந்தவள், நேரே அவள் அறைக்குள்ளே புகுந்து கொண்டு,  அறையை விட்டு வெளியே வரவேயில்லை. உடலைக் குறுக்கிக் கொண்டு,  போர்வைக்குள் சுருண்டு கிடப்பவளைப் பார்க்க கவலையாக இருக்கிறது.

என்னம்மா? உடம்பு சரியில்லையா?

ம்ம்ம்….இல்லம்மா……

மாப்பிள்ளையோட ஏதும் சண்டையா?

…….நீண்ட மவுனத்திற்குப் பிறகு……”ம்”.

சரி, இந்தக் காப்பியைக் குடி……என்று நீட்டிவிட்டு, அவள் அருகிலேயே அமர்ந்து கொண்டேன்.  வளர்ந்த, படித்த,  பெரிய நிறுவனத்தில் பெரிய பதவியில் இருக்கும், மணமான  மகளிடம் எதை? என்னவென்று எப்படிக் கேட்பது?

சிறிய மவுனத்திற்குப் பிறகு அவளே பேசத் தொடங்குகிறாள்….

நான் எதைச் சொன்னாலும், அப்படியெல்லாம் இல்லை….அதாவது….ன்னு ஆரம்பிச்சு, நான் என்ன சொன்னனோ அதையே வேற வார்த்தையில சொல்லறான்மா….

நான் செய்யறதெல்லாம் முட்டாள்தனமா இருக்குதுங்கறான்மா. சின்னச் சின்ன விசியத்துக்கெல்லாம் ஏதாவது ஒரு காரணம் வச்சு என்னை திட்டறான். நேத்து ஷாப்பிங் போன இடத்துல கூட சண்டை.  அவருக்குத் தெரிந்ததெல்லாம் எனக்கும் தெரிஞ்சிருக்கனும், ஆனா கொஞ்சம் அதிகமாத் தெரிஞ்சிருந்தாலும் பிரச்சனை…..ஒன்னுமே தெரியாம இருந்தாலும் பிரச்சனை. என்ன செய்யறதுன்னே தெரியலைம்மா…..

எனக்குள்ளே சிரித்துக் கொள்கிறேன். நானும் இப்படித்தான். பல ஆண்டுகளுக்கு முன்பு, இதையே தான், என் அம்மாவிடம் சொன்னேன். இன்று என் மகள் என்னிடம்.

குமறுன்னு இல்லாம வாக்கப்பட்டேன், மலடுன்னு இல்லாம பிள்ளப் பெத்துக்கிட்டேன்”, அதுக்கு மேல ஒண்ணுமில்ல,  ”உழவும் தரிசும் ரெடத்திலே, ஊமையும் செவிடனும் ஒரு மடத்திலே”ம்பாங்க,   என்ன தாயி செய்யமுடியும். அனுசரிச்சுப் போயித்தானே ஆகனும்.

என் அம்மா, என்னிடம் இப்படித்தான் சொன்னாள். படிக்காதவள் பாவம், அதற்கு மேல் தெளிவாகச் சொல்ல, அவளுக்குத் தெரியவில்லை,

எங்கோ படித்த வரிகளை நினைவுபடுத்தி அவளுக்குச் சொல்லுகிறேன்.  

Men are not really complicated.  They are very simple, literal creatures. They usually mean what they say.  We spend hours in trying to analyze what they have said. Really it is obvious. Take him literally.

ஒரு அம்மாவாக இதைத்தானே சொல்ல முடியும். இப்படியான ஆறுதல்கள் தானே அவளை உயிர்ப்புடன் வைத்திருக்கிருக்கும்.

போம்மா….உனக்கு அவனைப் பத்தி எதுவும் தெரியாது.  சொன்னாலும் நம்ப மாட்ட…………

அப்பா மாதிரி அன்பா, அமைதியா, பொறுப்பா இருந்திருந்தா,  எவ்வளவு நல்லாயிருந்திருக்கும்? எவ்வளவு தப்பு செஞ்சாலும் கூப்பிட்டு அமைதியா உக்காரவச்சு, பொறுமையா, விளக்கமா பேசுவாரு. 

ம்ம்ம்ம்…. நானும் அப்படித்தான் நெனைச்சேன்.  என் புருசன், என் அப்பா மாதிரி இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும். ஆனா எங்கம்மா சொன்னா, அவ புருசன், அவங்கப்பா மாதிரி இருந்திருந்தா நல்ல இருந்திருக்கும்னு.

குழப்பமும் அதிர்ச்சியும் அவளிடத்தில்…….. நான் பதில் ஏதும் சொல்ல வில்லை. என் சேலைகளுக்கிடையே  வைத்திருக்கும் என் டயரியை எடுத்து வந்து அவளிடம் நீட்டினேன்.  ஆச்சரியத்துடன் வாங்கித் திறந்து பார்க்கிறாள். எனக்குத் தெரியும்,  அதற்கு மேல்  எனக்கு அங்கே வேலையில்லை.

அந்த டயரியைப் பிரித்துப் பார்க்கிறேன். முதல் பக்கத்திலிருந்தே எழுதத் தொடங்கியிருக்கிறாள் என் அம்மா.  அப்படி என்னதான் எழுதியிருப்பாள்…..


முதல்அத்தியாயம்

எங்கிருந்தோ அடித்த காற்றில், பறந்து வரும் தூசிகளும் மழைநீரும் எப்படியோ,  என்னையும் இழுத்து வந்து அந்த மண்ணில் போட்டுவிட்டன.  அடிப்படையில், ஏதோ ஒரு கிளையில் காய்த்து, அது பழுத்து, வெடித்துச் சிதறியபோது, விடுதலை பெற்றுச் சுதந்திரமானேன். ஆம், நான் ஒரு விதை.  நான் விழுந்த இடமெங்கும் குப்பை, தூசி, இதுவரை அறிந்திடாத மண்வாசம், இவையெல்லாம் எனக்கு மொத்தத்திலும் புதிது. 

எனக்கு மரத்தைத் தெரியும், கிளையைத் தெரியும், பூவைத்தெரியும், காயைத் தெரியும், அது கனிந்து வரும் கனியைத்தெரியும். மண்ணும், மற்ற ஊர்வனவும் எனக்குப் புதிதானவைதான். இருந்தாலும், விழுந்த இடத்தில் முளைத்து வரத்தானே வேண்டும். 

ஈரம் என்னையும், மண்ணையும் இணைத்தது. நாங்கள் இருவரும் பின்னிப்பிணைந்து களித்துக் கிடந்தோம்.  அதுவும் கொஞ்ச காலம் மட்டுமே. சூரியன் கொதித்துக் கிளம்ப, மண்காய, முடிந்த அளவு ஈரத்தை உறிஞ்சி எடுத்து ஒரு நிலைக்கு மேல், என்னையும் இறுக்கிப் பிடித்து இருந்தது. மயங்கிக் கிடந்த அந்த நாட்களை நானும் ரசிக்க வில்லை, மண்ணும் ரசிக்கவில்லை. ஆனால் பிரிக்கமுடியாதபடிக்கு இருந்தோம்.

இப்படியே நாட்கள் கழிந்த பின்னால் பெய்த மழையில், மண் தன் ஈரத்தை மீண்டும் என் மீது காட்டி, களிப்புச் சுவையை நினைவூட்டியது, ஆனால் அது ஏனோ என்னை ஈர்க்கவில்லை. என் பிரச்சனையைப் போய் எந்த மரத்திடமும்  சொல்லமுடியாது.  அதுதான் என்ன செய்யும்?

மண் எப்பொழுதும் நீர் தேடித்திரியும். மண்ணின் குணம் வேறு, என் குணம் வேறு. என்ன செய்வது? இனி மண் இன்றி  நான் இல்லை. என்னைத் தாங்கிப்பிடித்து வேறூன்ற வைத்து, கிளை பரப்பி, பூ பூத்து, காயாகி, கனிந்து இன்னொரு வித்தையும் வெளிக்கிளப்பி விட்டதே.

அவனுடைய இயல்பும், என்னுடைய இயல்பும் எப்பொழுதுமே எதிரெதிரானவை.  நிதானம் என் இயல்பென்றால், வேகம் அவன் இயல்பு. எதையும் ஏற்பது என் இயல்பென்றால், எதையும் எடுத்தெறிவது அவன் இயல்பு. என் எல்லாச் செயல்பாடும் மனதிலிருந்துதான், அவன் இயல்புகளோ மூளை மடிப்புகளில் இருந்துதான். இணைந்த புதிதில் ஒருவொருக்கொருவர் ஆச்சரியப்பட்டு, வியந்தோம், ரசித்தோம்.  ஆனால் தொடர்ந்து அப்படி இருக்க முடியவில்லை.

என் நிதானம் அவனுக்கு எரிச்சல், அவன் வேகம் எனக்கு பயம்.  கலை என் காதல், அவனுக்கோ காசு.  எனக்கு ஓவியங்கள் மீதும், அவனுக்கு ஓவியாக்கள் மீதும்.….

துவக்கத்தில் எல்லாம் சரியாய்த்தான் இருந்தது.  பிசகிய புள்ளி மிகச்சரியாகத் தெரியவில்லை என்றாலும், கிட்டத்தட்ட புரிந்து கொள்ள முடிந்தது.

மண்ணின் மீதான அச்சம் எனக்கிருந்தாலும், எதிர்பார்ப்பு என்னிடம் இல்லை.  ஆனால் மண்ணுக்கோ நிறைய எதிர்பார்ப்புகள் இருந்ததை மறுத்துவிடமுடியாது. விதை குறித்த கற்பனைச் சித்திரங்களை மண் எப்படியோ தனக்குள் வளர்ந்துக் கொண்டிருந்தது. மண்ணைப் பொறுத்தவரை விதை என்பது, அதன் வீரியத்திற்கான வடிகால்.

ஆண்  தான் பார்க்கும் அல்லது கேள்விப்படும் நிகழ்வுகளைக் தன் முன் அனுபவங்களோடு கோர்த்துப் பார்த்து, இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்து அதன் பின்புலத்திலேயே செயல்படுகின்றான்.  அவனுக்கு ஒன்று புரிவதேயில்லை, இருவர் இணைந்து பயணிக்கும் போது ஒவ்வொருவரின் செயல்பாடும் அவரவர் அனுபவத்தின்பாற்பட்டது என்பது.

என்னை முட்டாளாகப் பார்ப்பதில் தான் அவனுக்கு எவ்வளவு மகிழ்ச்சி.  எப்போதாவது என்னையறியாமல் என் புத்திசாலித்தனம் வெளிப்பட்டுவிட்டால், ம்ம்…..ம் இதெல்லாம் கூட உனக்குத்தெரியுமா? யாரு சொல்லிக் கொடுத்தா? என்ற நையாண்டி கலந்த பாராட்டில் எதோ ஒரு வன்மம் தெரியும்.

முதலில் என்னை முட்டாளாக்கும் முயற்சியில் இறங்கியவன். இயலாத பொது  முடக்கும் விதமாக என் குறைகளைப் பெரிதுபடுத்தத் தொடங்கினான்.. உறவுகளில் இருக்கும் பிரச்சனைகள், பொருளாதார சூழ்நிலை, இயலாமை, இப்படி எந்தவொரு வாய்ப்பு கிடைத்தாலும் அதைப் பயன்படுத்தி என் வாயை அடைக்கச் செய்து வெற்றி பெற்றுவிட்டதாக நினைத்துக் கொள்கிறான். நான் முடங்கப் பழகிக் கொண்டேன்.

அத்துடன் அந்த முதல் அத்தியாயம் முடிவடைந்திருந்தது.

அதற்காகவே காத்திருந்தவள் போலக், காப்பிக் கோப்பைகளோடு உள்ளே வரும் அம்மாவின் முகத்தை உற்றுப் பார்க்கிறேன்.  வழக்கமான, எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாத முகம், என் பார்வையைத் தவிர்த்தபடி அருகே அமர்கிறாள்.

தூரத்தில் எங்கோ பாப் மார்லி  கதறிக் கொண்டிருக்கிறார்…..

Man to man
Is so unjust


1 comment :

திண்டுக்கல் தனபாலன் said...

என்னவொரு ஆழ்ந்த அத்தியாயம்...!

அசர வைக்கும் எழுத்து நடை...

வாழ்த்துகள் ஐயா...