Tuesday, September 11, 2018

அவிபலி










என்ன இருந்தாலும், நீங்கள்  என்னைப் பலி கொடுத்திருக்கக் கூடாது அப்பா…………..



அவிபலி, நவகண்டம், தூங்குதலைக் கொடுத்தல், என்பதைப் பற்றி பலரும் பரவலாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதைப்பற்றிச் சொல்ல என்னிடமும் சில வரிகள் இருக்கின்றன. நானும் அப்படித்தான் ஒரு நல்ல நாளில் பலி கொடுக்கப்பட்டேன். அது ஒரு அற்புதமான அனுபவம்.  இதில் விசித்திரம் என்னவென்றால், நான் பலியாகப் போகின்றேன் என்பதும் எனக்குத் தெரியாது, ஏன் பலி கொடுக்கப்பட்டேன் என்பதும், எனக்குத் தெரியாது. எனவே இதை அவிபலி என்று சொல்லலாமா? கூடாதா? என்றும் தெரியவில்லை.


இந்தப் பழக்கம் வேட்டையாடி இனக்குழுவில், இருந்து வந்திருக்க  வேண்டும். தன் கொள்கைக்காக, தன் குடும்ப நலனுக்காக, தன் குழுவின் வெற்றிக்காக ஆட்டுக் கிடாயையோ, ஆண் எருமையையோ, சேவலையோ பலி கொடுப்பதும், அது வளர்ந்து, பின்னாளில் மனிதர்களைப் பலிகொடுக்கும் வழக்கமாக மாறியிருக்கலாம். இதைத்தான் அவிபலி என்று தொல்காப்பியமும் கூறுகிறது. இதே காரணங்களுக்காக கடவுள் முன் தன் உறுப்புகளைத் தானே அரிந்து  படையலாக்குதல், என்ற நவகண்டமும் வந்திருக்கலாம். விஜயாலயன் கல்வெட்டு ஒன்றில் நிசும்ப சூதனி என்ற கொற்றவைக்கு கோவில் எடுத்த செய்தியும் அதற்கு பலி கொடுத்ததையும் கல்வெட்டு சொல்லுகிறது.


அடிக்கழுத்தின் நெடுஞ்சிரத்தை அரிவராலோ,
அரிந்த சிரம் அணங்கின் கை கொடுப்பராலோ,
கொடுத்த சிரம் கொற்றவையைப் பரவுமாலோ,
குறையுடலம் கும்பிட்டு நிற்குமாலோ.
என்கிறது கலிங்கத்துப் பரணி.


மெய் வரு காளி முன்னர், மெய் உறுப்பு அனைத்தும் வீரன், கொய்வரு நிலையில் கொய்து கொடுத்தனன் என்ப மன்னோ”
என்று அரவானின் களப்பலியை வில்லி பாரதம் பேசுகிறது.

அவிபலி என்பது பெரும்பாலும் கொள்கை விருப்போடு  செய்து கொள்வது, அல்லது குடும்பத்தின் அல்லது சமூகத்தின் வேண்டுகோளின்படி செய்வது, இதை அப்படிச் சொல்வதை விட, நிர்பந்தத்தின்படி  ஒருவரைச் செய்து கொள்ள வைப்பது, என்று சொல்வதும் பொருத்தமாக இருக்கும்.  பன்னெடுங்காலமாய் தொடரும் ஒரு பழக்கமிது.  இறப்பிற்குப் பின்னால் அந்த உயிர் என்னவாகும் என்ற கேள்வியும் அது சார்ந்த பயமும், அவன் நினைவில் கல் நட்டு, விளக்கு வைத்து  வழிபடுவதும், அவன் குடும்பத்துக்கு நிதி ஆதாரங்களைச் செய்து கொடுப்பதும் வழக்கில் இருந்திருக்கின்றன

அப்படி ஒன்றும் பெரிதான கொள்கையோ, கோரிக்கையோ எனக்குள் இருந்ததில்லை. ஆனால் என்னைச் சுற்றி இருந்தோர்க்கு ஏதோ ஒன்று இருந்திருக்க வேண்டும்.  என்னை யார் கேட்டார்கள்?, நெருங்கிய சுற்றமும் குடும்பமும் இணைந்து அவர்களாகவே முடிவு செய்திருந்தார்கள்.

அவர்கள் முடிவெடுத்த ஓரிரு நாளில்,  குடும்பத்தின் சிறு சிறு சிக்கல்கள்,கவலைகள் என் முன்னால் பெரிதுபடுத்தப்பட்ட திரையில் காட்டப்பட்டன.  அவர்கள் சொல்வதை நான் அப்படியே கேட்டுக் கொண்டு செயல்படுவதன் மூலம், எதிர்காலத்தில் நானும், என்  குடும்பமும் பெறப்போகும் பெரும்பலன்களும் விரித்துரைக்கப்பட்டன. ஆனால்  என்னுடைய சிறு சிறு கேள்விகள் கூட, அவர்களைப் பெரும் பதட்டத்துக்குள்ளாக்கியது. முடிந்த அளவிற்கு நான் பெரிதாய் யோசிக்காத அளவிற்கு என்னைப் பார்த்துக் கொண்டார்கள்.

எதிர்காலத்தில் நான் அனுபவிக்கப்போகும் சொர்க்கலோகம் குறித்தான கற்பனைகளும் கூடவே சந்தேகங்களும் எனக்குள்ளே  வரத்தொடங்கின.  இதற்காகவே நெருங்கிய உறவில், ஏற்கனவே அவிபலி கொடுத்த  குடும்பங்களைச் சார்ந்த, சிலரைப் பிடித்துக் கொண்டு வந்து என்னோடு இருக்க வைத்தனர்.  அவர்களும் சொர்க்கம், தேவலோகம், இந்திரன், காமதேனு, கற்பக விருட்சம், ஐராவதம், போன்ற வற்றையெல்லாம் எனக்கு எடுத்துச் சொன்னார்கள்.


கோனேரி ராயனின் அரச பயங்கரவாதத்தை  எதிர்க்கும் வண்ணம், திருவரங்கம் தெற்கு கோபுரத்திலிருந்து அழகிய மணவாள தாசன் ஸ்ரீ கார்யம் அப்பாவையங்கார் கீழே குதித்து அரங்கனை அடைந்தாராம். தொடர்ந்து இரண்டு ஜீயர்களும் அவ்வாறே.


சுல்தானியப் படையெடுப்பையடுத்து, திருவரங்கன் ஆலயப் பண்டாரத்தைக் கொள்ளையடிப்பதைத் தடுக்க, எம்பெருமானடியார் என்ற தேவரடியார், சுல்தானியத் தளபதிக்கு இச்சையூட்டி, கிழக்கு கோபுரத்தின் மீதேற்றி அவனைக் கட்டித் தழுவியபடி கீழே குதித்து உயிர் துறந்ததாக வரலாறு.


17ஆம் நூற்றாண்டிலே, தில்லை நடராசர் ஆலயத்திற்குள் கோவிந்தராசப் பெருமானுக்குத் தனிக் கோயில் எடுக்கச் செஞ்சி நாயக்கர்கள் முயன்ற போது, தீட்சதர்கள் 20 பேர் தில்லைக் கோபுரத்தின் மீதேறிக் குதிக்க முற்பட, அரசுப் படை அவர்களைச் சுட்டுக் கொன்று தற்கொலையைத் தடுத்ததாக ஆவணங்கள் பேசுகின்றன.


சொக்கநாத நாயக்கர் ஆட்சியின் போது வறட்சியும் பஞ்சமும் வந்து, வரி கொடுக்க இயலாமல் மக்கள் துவண்டபோது, சாமி தூக்குவோரின் கூலிக்கு வரி விதித்ததைத் தாளாத கோவில் ஊழியர் மதில் மேல் ஏறிக் கீழே குதித்து இறந்தார்.


திருவரங்கம் கிழக்குக் கோபுரத்தின் வடபுற நிலைக்காலில் இருந்து பெரியாழ்வார் கூட…..


நவாப் சாகிப் ஆட்களோடு ஆங்கிலப் படை திருப்பரங்குன்றம் கோயிலுக்குள் நுழைவதைத் தடுக்க வைராளி முத்துக் கருப்பன் மகன் குட்டி என்பவனை உயிர்த்தியாகம் செய்ய வேண்ட, சமூகத்திற்காக அவனும் அவ்வாறே செய்தான். எல்லப்ப முதலி மகன் ஆண்டராவளி முதலியும் இதைச் செய்தான்.

 தெய்வேந்திரபட்டர், குட்டிபட்டி பட்டர்
சிதம்பரம் பிள்ளை, விழுப்பாத ரய்யர் ஆறுகரைப்
பேர் உள்ளிட்டாரும் கூடி வயிராவி முத்துக் கருப்பன்
மகன் குட்டி வயிராவியை கோபுரத்திலேறி விழச்
சொல்லி அவன் விழுந்து பாளையம் வாங்கிப் போன
படியினாலே அவனுக்கு ரத்தகாணிக்கைப் பட்டயம்
எழுதிக் கொடுத்தோம்...! என்று ஒரு கல்வெட்டு பேசுகிறது.

குட்டி வயிராவிக்கும்  வேறு வழியிருந்திருக்காது. அவனை யோசிக்கவே விட்டிருக்கமாட்டார்கள். எனக்குத்தான் அனுபவம் இருக்கிறதே. நானொன்றும் கதைகளைப் படித்து, அவிபலி குறித்துப் பேசவில்லை. அனுபவத்தில் பேசுகிறேன். தேவேந்திர பட்டர், குட்டி பட்டர், சிதம்பரம் பிள்ளை,விழுப்பாதரய்யர், ஆறுகரைப்பேர் மற்றும் ஊரே திரண்டு வந்து வயிராவி முத்துக் குட்டியைக் கேட்டுக் கொண்டதால் அவனும் அவர்களோடு சேர்ந்து அவன் மகன், குட்டி வயிராவியைக் கேட்டுக் கொண்டதால், அவன் கோபுரத்தின் மீதேறிக் குதித்தான். என் கதையும் இதேதான்.  பெயர்களும் உறவுமுறையும்  தான் வேறு வேறு. 


தன் அவயங்களை தானே ஒன்றொன்றாக அறுத்துப் பலியிடுபவனாகவோ? தன் நம்பிக்கைக்காக, அல்லது தன் சமூகத்தின் நம்பிக்கைக்காக, அல்லது தன் குடும்பத்தின் வேண்டுகோளுக்காக, அல்லது வேறு எதோ ஒரு காரணத்திற்காக மதிலேரிக்குதிப்பவனை,  கத்தியை நிலத்தில் ஊன்றி அதன் மீது வீழ்பவனை, களப்பலியாக தன்னையே ஒப்புக் கொடுக்கிறவனைப் பற்றி என்ன பெரிதாய்ச் சொல்லிவிடமுடியும்.

”அவிபலி” இது ஒன்றும் இரவோடிரவாக, யாருக்கும் தெரியாமல்  கயிற்றில் தொங்குவதோ, அரளி விதையைக் குடிப்பதோ அல்ல.  பலியாகுபவரை அழைத்து மஞ்சள், ஏலம், பச்சைக் கற்பூரம், சந்தனம் கரைத்த நீரிலே நீராட்டி, திருநீறும் குங்குமம் சாற்றி, புத்தம் புதிய பட்டாடைகள் அணிவித்து, ஆபரணங்கள் பூட்டி, பரிமள களப கஸ்தூரி பூசி, வெற்றிலை பாக்கு கையில் கொடுத்து,  கொம்பு, காளம், மல்லாரி,  சங்கு, மேளம் என பஞ்ச வாத்தியங்கள் முழங்க, பஞ்ச தீவட்டிகளோடு, மாற்று நடை சாற்றின் மேல் நடந்து, நடன சங்கீதங்களோடு, மாநகரின் நான்கு வீதிகளிலும் உலா வர வழியெங்கும்  உற்றார், ஊரார்  மலர் தூவி,  வாழ்த்த, சமய முதலி முன்னின்று நற்கதி அடைய என்று வாழ்த்த ”நற்பலி” நடந்தேறும்.

என்னையும்  இப்படித்தான் பலி கொடுத்தார்கள். என்னவொரு வித்தியாசம் எனக்கான காரணம் வேறாக இருந்ததோடு,  அவிபலியாக்கப் பட்ட பின்னும் தொடர்ந்து முளைத்தெழும் என் உறுப்புகளை அரிந்து அரிந்து நவகண்டம் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன் இன்று வரை.   


பொதுவாகக் ஆட்டுக் கிடாயை, சேவலை, வாராளி முத்துக் கருப்பன் மகன் குட்டியை, எல்லப்ப முதலி மகன் ஆண்டவராளியை என போத்தைத்தானே பலி கொடுப்பார்கள். பெட்டைகளைப் பலியிடுவது வரலாற்றிலும் வழக்கில்லையே. அப்படியே இருந்தாலும், என்னை நீங்கள் பலி கொடுத்திருக்ககூடாது அப்பா………

எந்தக் குலத்தைக் காக்க, எந்த  சமூகத்தின் மீதான நம்பிக்கையில், எந்தச் சாமியின் மனங்குளிர, என்னைப் பலி கொடுத்தீர்களோ அந்தச் சாமியும், அதுகுறித்தான நம்பிக்கையும் இனியாவது பலி கேட்காமலிருக்கட்டும்.
  
நல்லதொரு நாளில், தோட்டத்துத் தெற்கு வலவில் இருக்கும் அந்த ஒற்றை வேப்ப மர நிழலில் எனக்கான ஒரு நடுகல்லைத் தேடியெடுத்து நட்டுவைத்து விடுங்கள். அது, இன்னும், உங்கள் மீதான என் நம்பிக்கைக்கும் அன்பிற்குமான அடையாளமாக இருந்துவிட்டுப் போகட்டும்.


No comments :