Wednesday, September 26, 2018

சிறு கோட்டுப் பெரும் பழம்….

அன்பிற்குரியவனே,

வரையறுக்கப்பட்ட ஒரு சட்டத்திற்குள்,  குறுக்கும் நெடுக்குமான உணர்வுக் கட்டங்களில், ஒருவரை ஒருவர் உவகையோடு தேடித் துரத்துவதும், ஒருவர் மற்றொருவரை முடக்கிப் புஜம் உயர்த்துவதும், நீ முயன்று என்னைச் சுற்றி இறுக்குவதும், முயன்று நான் தப்பிச் சென்று,  பதிலுக்கு  உன்னை சுற்றி வளைப்பதையும்,  விழிப்புணர்வின் எல்லைகளை , விருப்போடு உடைத்துத் தள்ளி, ஒவ்வொன்றாய், ஒருவரிடம் மற்றொருவர், இழந்து இழந்து,  இறுதியில், ஒருவருக்குள் ஒருவராய்,  இருவருமே கரைந்து போய் ஒன்றுமில்லாமல் போகும், அந்த விளையாட்டுக்கும்  ”சதுரங்கம்” என்றே பெயர் சொன்னாய்.

பொதுவாக,  இருவர் மட்டுமே ஆடும் ஆட்டம் என்று சொல்லிவிட்டு, இன்னொன்றையும் சொன்னாய், இது,  “ நாம் இருவர் மட்டுமே ஆடும் ஆட்டம்”, என்றும் சொன்னாய்.

அந்த ஒரு நாளில், அந்த ஒரு ஆட்டத்தையும், நீயே துவக்கி வைத்தாய். உன் ஆசை தீர முன்னேறினாய்.. இந்தச் சதுரங்க ஆட்டத்தைப் பற்றி விளக்கமாய் பேச ஏதுமில்லை, ஆட ஆடவே உனக்கு, ஆட்டம் புரியும்,  என்று சொல்லி, நேரடியாய் என்னைக் களமிறக்கினாய். அதற்கு முன்பாக அது குறித்த இயல்பான கிளர்ச்சி  மட்டுமே எனக்குள் இருந்தது.

ஆட்டமும் புதிது, ஆடும் களமும் புதிது.  ஆட்ட விதிகளையும், வழிமுறைகளையும் எழுத்திலும், பேச்சிலுமே அறிந்திருந்த நான், உன்னிடம் தோற்றுக் கொண்டே இருந்தேன். நீயும் அதைத்தான் எதிர்பார்த்து இருந்திருப்பாய். நண்பர்களிடமிருந்தோ, புத்தகங்களிலிருந்தோ, இணையங்களிலிருந்தோ, புதிது புதிதாய், ஆட்ட நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு வந்து, என்னிடம் பரிட்சித்துப் பார்த்தாய்.  ஒவ்வொரு முறையும் உன் ஆட்ட முறையை மாற்றி, என்னைத் திணறடித்தாய். என்னை அறியாமல் நானும் இந்த ஆட்டத்தில் ஒரு பெரு விருப்பு கொள்ளத் தொடங்கினேன்.  ஏதேதோ கற்றுக் கொடுத்தாய். எல்லாமே எனக்குப் புதிதுதான்.

ஒவ்வொரு முறை நீ வெட்டிச் சாய்க்கும் போது, புத்துணர்வோடு நான் கிளைத்து எழுந்தேன்.  உன்னைச் சுற்றி வளைத்து, அசையமுடியாமல் முடக்கிப் போட்டு, உன் தவிப்பை ரசித்தேன். நீ, முயன்று என்னைச் சாய்க்க, நான் மீண்டு எழ, நீ, மீண்டும் சாய்க்க, விழ, எழ எனும் அந்த,  அலகிலா விளையாட்டை, அனைத்தும் மறந்து, ஆடி மகிழ்ந்தோம்.

இடையில் கொஞ்ச காலம், உற்பத்திக் கடமைகளால் துவண்டபோது,  உன்னோடு அதிகமாக, நெருங்க முடியவில்லை.  ஆனாலும் வாய்ப்புகளை உருவாக்கி, என்னோடு விளையாடவே விரும்பினாய்.  நானும் என்னால் முடிந்தவரை, உனக்காக, உன்னோடு விளையாடினேன்.

கடமையும், காயங்களும் மறைய மறைய, மீண்டும் ஆடும் ஆசை வரத் தொடங்கியது.  நீ கொடுத்து நான் பெற்றதும், நான் கொடுத்து நீ பெற்றதும் நினைவுக்கு வரத் தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக, ஆட்டம் பற்றிய நினைவுகள் மீளத் துவங்கி, என்னையும் அதற்குள் இழுத்துக் கொண்டது. நான், ரசித்து ஆடத்துவங்கிய காலகட்டங்களில், என் ஆட்டமுறையும், நுட்பங்களையும் ரசித்த நீ, ஒரு இடத்தில், தடுமாற ஆரம்பித்தாய்.

உனக்குச் சரிசமமாக, நான் ஆட விளையும் போது தான், நீ, என்னில் இருந்து, விலக ஆரம்பித்தாய். என் வேகம் உனக்குள்   பயத்தை  கொடுத்ததா? என்று எனக்குத் தெரியவில்லை. நேரமில்லை, வேலை, களைப்பு, தலைவலி, குடும்பச் சூழ்நிலை, உடல்நிலை, சரியில்லாத மனநிலை, இப்படி எத்தனையோ காரணங்களைச் சொல்லி என்னோடு விளையாடுவதைத் தவிர்த்து வந்தாய்.

ஒரு கட்டத்தில், இந்த வயதிற்கு மேல் என்ன விளையாட்டு?  நான் கொடுத்திருக்கும் இராமாயணம், மகாபாரதங்களைப் பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டு, அவ்வப்போது, யாரோ இருவர் ஆடும் ஆட்டத்துக்கு நடுவராக மாறியிருந்தாய்..

அன்புக்குரியவனே,

ஒரு பின்னிரவில், உன், தோட்டத்து வீட்டின் முற்றத்தில், காலங்கள் கடந்து, தலைமுறை, கண், சாட்சியாமாய் நிற்கும், அந்த தேன் தூறும், பலா மரத்தின் அடியில், பெருங்களிப்பில், நீ சொன்ன அந்தப் பாடல் எனக்கு இப்பொழுதெல்லாம் அடிக்கடி நினைவிற்கு வருகிறது, ”சாரல் சிறு கோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு, இவள் உயிர்தவச் சிறிது,” என்ற அந்தப் பாடலை உனக்குச் சொல்லிக் கொடுத்தது யாரென்று தெரியவில்லை.

அன்புக்குரியவனே,

இங்கே நான், விருப்போடு கற்றவை, அனைத்தும், நீ எனக்குச் சொல்லிக் கொடுத்தவையே.  நான் கற்றிருந்தவைகளை விட, நீ கற்பித்ததைத்தான் நான் மிகக் கவனமாகப் படித்தேன்.  எனக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருந்தது, ”நீ மகிழ்வாய் இருந்தால் தான் நான் மகிழ்வாய் இருக்க முடியும்” என்றுதான்.  உண்மையில்,  நானே உணர்ந்தேன், நீ மகிழ்வாய் இருக்கும் போதெல்லாம், நானும் மகிழ்வாய் உணர்ந்தேன். ஏனென்றால்,  எனக்கு, உன்னை மட்டுமே பிடித்திருக்கிறது.

அன்புக்குரியவனே,

இந்த விளையாட்டு உனக்கு ஏன் விருப்பமானதாக இருந்தது? என்று எனக்குத் தெரியாது.  ஆனால் எனக்கு ஏன் விருப்பமானதாக இருக்கிறது  தெரியுமா?, இந்த ஆட்ட நேரத்தில் தான் நீ என்னை உற்று கவனிக்கிறாய்.  உன் மனம் என்னைச் சுற்றிச் சுற்றியே திரிகிறது. என்னை நீ கவனிப்பதையும், என் மனதோடு இயைந்து பயணிக்கும் உன் மனம், உடல், புத்தி மூன்றின் ஒருங்கிணைந்த அந்த செயல்பாடுதான்,  எனக்குப் பிடித்தமானதாக இருக்கிறது.

அன்புக்குரியவனே,

இது வெறும் சதை அடுக்குகளின் உராய்வில், ஏற்படும் உடல் கிளர்ச்சியல்ல.  என்  அசைவுகளை, என மணத்தை, என் பெருமூச்சை, உவகையோடு நீ, நெருங்கிப், பார்த்து, நுகர்வதில் ஏற்படும் மனக் கிளர்ச்சி.

அன்புக்குரியவனே,

விளையாட்டு இங்கே, ஒரு பிரச்சனை அல்ல.  உடல் நெருங்கி, முகம் உயர்த்தி, தோள் தொட்டு, உற்று ஒரு நிமிடம் என்னைப் பார்.  பொங்கிவழிந்தோடும் என் உணர்ச்சிகள் சொல்லும், என் காதலின் தீவிரத்தை.  உன் சிறு அணைப்பில் வடிந்தோடும் என் எல்லா ஏக்கங்களும்.

அன்புக்குரியவனே,

நீ கற்றவைகளை ஆசை தீர என்னிடம் சோதித்துப் பார்த்துச் சலித்துவிட்டாய். .  நான்   கற்றதை, களி தீர,  யாரிடம் போய்ச் சோதித்துப் பார்க்கட்டும்?.

அன்பிற்குரியவனே,,

துவக்கத்தில் நீ சொல்லிக் கொடுத்ததை, அப்படியே நினைவில் நிறுத்தி,  உனக்கும் நினைவூட்டுகிறேன்.  இது இருவர் மட்டுமே ஆடும் ஆட்டம், ஆம், “ நாம்,  இருவர் மட்டுமே ஆடக் கூடிய  ஆட்டம் ”.

நானும், அதற்கு மட்டுமே  பழகியிருக்கின்றேன்.


1 comment :

திண்டுக்கல் தனபாலன் said...

சொல்ல வார்த்தைகள் வரவில்லை...

சிறப்பு...

வாழ்க நலம்...