Tuesday, September 04, 2018

NOT BY BREAD ALONE

எப்படியெல்லாம் மாறிவிடக்கூடாது என்று நானும் என் குடும்பமும் பயந்து கொண்டிருந்தோமோ அப்படியெல்லாம் நான் மாறிவிட்டிருக்கிறேன். ஃபுட்பால் கோச் மைக்கேல்,  எங்கள் வெற்றிக்கென வகுத்துக் கொடுத்திருந்த, நான்கெல்லைகளில் இரண்டை முடிந்த அளவு ஒவ்வொரு முறையும் உடைத்துத் தகர்த்து விடுதலையானதாக உணர்ந்து கொண்டிருக்கின்றேன்.


என்னைப் பார்த்து நண்பர்களெல்லாம் பரிதாபப் படுகிறார்கள். உறவுகளெல்லாம் கேலியாகச் சிரிக்கிறார்கள். மகனும் மனைவியும் கவலையோடும் கண்ணீரோடுமே இருக்கிறார்கள்.  நான் மட்டும் இங்கே என்ன ஆனந்தத்தோடா இருக்கிறேன்?


கனவுகளையும் நம்பிக்கைகளையும் ஆசைகளையும் அதனுடே கொஞ்சம் அறவுணர்வையும் உள்ளடக்கிய ஒரு பந்தாக நான் மிதந்து கொண்டிருக்கின்றேன்.  என்னால் பறக்க முடியும். லேசான சிறு உதையில் என் திசை மாறும். இயல்பு நிலைக்கு மாறானதல்ல இது.  ஆனால் இந்தச் சமூகம் எனக்குள்ளிருக்கும் அறக்காற்றை வெளியேற்றி, பின் அதனுள் கொஞ்சம் கொஞ்சமாக தன் அழுக்கு நீரை உட்செலுத்தி மூழ்கடிக்கப் பார்க்கிறது. எங்கள் இருவருக்குமான போராட்டத்தில் வெற்றி பெற எனக்கு அவ்வப்போது, கொஞ்சம் கிராஸும், நிறைய ஆல்கஹாலும் தேவைப் படுகிறது.


பள்ளி, முதல் கல்லூரி வரை வழக்கமான சுவராசியத்தோடே கடந்து,  என் சி சி யில் மாநிலத்தில் முதலிடத்தில் தேர்வும் பட்ட மேற்படிப்பில் முதல் வகுப்பிலுமே தேர்வாகியிருந்தேன். ஆழமான காதலொடு அழகான மனைவியும் கிடைத்திருந்தாள்.  ஒரு வேட்டை நாய் வேலையும் கிடைத்தது.


”கோப்ரா” பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நீங்கள் நினைப்பதுபோல் இல்லை, இது இராணுவத்தின் ஒரு படையணி. இதன் பணிகள் குறித்து  நான் பெரிதாய்ச் சொல்ல விரும்பவில்லை. தீவிரவாத அமைப்புகள், தேச விரோத சக்திகளை முறியடிக்க அரசால் உருவாக்கப் பட்ட ஒரு படைப்பிரிவு.  இதில், நானும் ஒருவன்.


பயிற்சி காலத்தில்  சொல்லிக் கொடுக்கப் பட்ட முதல் பாடமே ” சொல்வதைச் செய், அது கொல்வதானாலும்”. ஒரு வருடத்தில் உடலோடு மனத்தையும் கல்லாக ஆக்கியிருந்தேன். அடுத்த சில வருடங்களில், சதைகள் பிய்ந்து, ரத்தமும் கண்ணீரும் வழியும் முகங்கள் ஆனந்தத்தையே கொடுக்கத் தொடங்கியிருந்தன. ரத்தமும், கண்ணீரும், வெறும் நாடகங்கள் என்றே போதிக்கப்பட்டிருந்தன.  எங்களைப் பொறுத்த வரை மேலிடத்திலிருந்து சுட்டிக் காட்டப் படும் அத்தனை பேரும் சமூக விரோதிகள் தான்.  தேசத் துரோகிகள் தான்.


ஐந்தாவது ஆண்டில், அரைக் கிறுக்கு மனநிலையில் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டேன்.  காலையில் எழுந்து குழந்தைகளைப் பள்ளிக்குத் தயார்செய்து, மனைவியோடு குழந்தைகளை அவரவரிடத்தில் இறக்கிவிட்டுப், பணி முடிந்தபின் அனைவரையும் மீண்டும் ஏற்றிக் கொண்டு வீடு வந்து, தொலைகாட்சி செய்தி, விவாதமேடைகளைப் பார்த்து, பசிக்காக உண்டு, கடமைக்காக கட்டிப் புரளும் உங்களால் என் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள முடியாது.


மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு தொடர்ச்சியில், 700 தொழிலாளிகளோடு இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு வங்க முதலாளியின் தேயிலைத் தோட்டத்தில் நான் ஒரு இணை மேலாளர். தேயிலைத் தோட்டங்களுக்கிடையே அழகிய தோட்டத்தோடு கூடிய யாரோ ஒரு ஆங்கிலய அதிகாரி கட்டி, விட்டுவிட்டுப் போன ஒரு பங்களா, அதில், ஒரு சமையல் காரன், ஒரு தோட்டக் காரன், இவர்களோடு நானும் இன்னும் சில உயிரினங்களும்……


என்னுடைய வேலை துவங்கும் நேரம் அதிகாலை 4.30 மணி. தொழிலாளர்கள் யார் யார் எந்தெந்தப் பகுதியில் என்ன வேலை செய்ய வேண்டும் என்ற உத்தரவினைக் கொடுத்து, அவர்களை அனுப்பி விட்டு, முந்தய நாளின் பறிக்கப் பட்ட தேயிலைகளின் எடை குறிப்புகள்,  கவனிக்கப் படவேண்டிய இடங்கள், செய்யப் படவேண்டிய பணிகள் முடித்து என் இருப்பிடம் வரும் போது 10.30 மணியாகிவிடும்.


பச்சைத் தேயிலையைக்  கொதிக்கும் நீரில் போட்டு, மூன்று நிமிடங்கள் உச்சபச்ச வெப்பத்தில் கொதிக்க வைத்து, அதில்  எலுமிச்சைப் புல்லும், பொதினாவின் காம்புகளையும், கொஞ்சம் சர்க்கரையும் சேர்த்த ஒரு அருமையான தேத்தண்ணீர், உதட்டிற்கு அருகில் கொண்டு செல்லும் போதே, ஒரு அடர்த்தியான வாசனை மூக்கிற்குள் புகுந்து மூளை நரம்புகளைத் தட்டியெழுப்பிப், பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தும். அப்படியொன்றும் பெரிதாய் சுவையில்லை என்றாலும்,  இந்தக் குளிருக்கு அது உயிரின் மூலம் வரை கதகதப்பைக் கொடுத்து,  ஒரிரு நிமிடத்தில் உற்சாக நிலைக்குக் கொண்டு வந்து விடும்.


தொரை……டீ கொடுக்கட்டுங்களா?


கொழுத்துச் சளைத்த ஆங்கிலேயன் விட்டுவிட்டுப் போன சிலவற்றில் இதுவும் ஒன்று.  மேலாளர்கள், இணை, துணை மேலாளர்கள் எல்லோரும் இங்கிருக்கும் தொழிளாலர்களுக்கு “ தொரைமார்கள்” தான்.


திரும்பிப் பார்க்காமலேயே, ”உம்” என்று  சொல்லிவிட்டு, எப்போதும் எனக்குப் பிரியமான அந்த  இசையைக் கசிய விட்டேன்.


When the wicked carried us away in captivity,
Requiring of us a song,
Now how shall we sing the lord’s song
in a strange land

By the rivers of Babylon
There we sat down
Ye-eah…… we wept,
When we remembered  zion


தேவ வாக்காக சில நேரங்களில் மனநிலைக்கு ஏற்பச் சூழல்களும் கருத்துச் சொல்லத் துவங்கிடுகின்றன.


,பச்சைத் தேயிலையின் மணம்… கையில்  ஒரு டிரே, அதில் மூடியுடன் கூடிய ஒரு அழகான கப். ஐரோப்பிய பாணி கெட்டிலில் குடிக்கத் சுடுநீர். நிமிர்ந்து பார்த்து விட்டு, என் முன்னே கிடந்த அந்த ஆங்கிலேயர் காலத்து, தேக்கு மேசையின் மீது கண்களைச் செலுத்துகிறேன்.  புரிந்து கொண்டு அதன் மீது வைத்து விட்டுச் சற்றுத் தள்ளி ஓரமாய் கைகளைக் கட்டிக் கொண்டு நிற்கிறார் அந்தக் கிழட்டுச் சமையல்காரர். அந்தத் தேநீரை நான் லேசாய்ப் பருகி, திருப்தியாய் தலையை அசைத்தால் மட்டுமே அவர் அங்கிருந்து நகருவார். அவருக்குத் தெரியாதா என்ன?  எத்தனை “ தொரை”களைப் பார்த்திருப்பார்.


அந்தக் கப்பை  உதடுகளுக்கு அருகில் கொண்டு சென்று, ஆழமாய் காற்றை மூக்கில் உறிஞ்ச உறிஞ்ச நுரையீரல் முழுவதும் இலை கசியும் காற்று…..காற்று ஏற ஏற உடல் கணக்கிறது. இதயத் துடிப்பும் அதிகரிக்கிறது. சவ்வுகளுக்கு ஊடாய்ச் செல்லும் காற்று ரத்த நாளங்களைத் துடிக்கச் செய்கிறது. அழுத்தம் கூடுகிறது. அதிவேகமாகக் காற்றை வெளியேற்றுகிறேன். முடிந்தவரை உள்ளிருக்கும் மொத்தக் காற்றையும் வெளியேற்றுகிறேன். உடல் லேசாகிறது. உடல் எடை குறைகிறது. என்னவொரு ஏகாந்தமான நிலை. மீண்டும் ஒருமுறை……மீண்டும் ஒரு முறை……அவர் இன்னும் அங்கேயே நின்று கொண்டிருக்கிறார். எரிச்சலாய் இருக்கிறது. 


நிமிர்ந்து பார்த்து, செல்லச் சொல்லித் தலையை அசைக்கிறேன். ஓரிரு அடிகள் சென்று மீண்டும் தயங்கி, அங்கேயே நிற்கிறார். இதற்கு மேலும் அவரை இம்சிக்க விரும்பவில்லை.  கொஞ்சமாய்க் குடித்துத் தலையை அசைக்கிறேன். அவர் இன்னும் நகரவில்லை. என் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.  லேசாய்ச் சிரித்து, மீண்டும் தலை அசைக்கிறேன். அவர் முகத்தில் அதீத மகிழ்ச்சி. பெரும் உற்சாகம் அவர் உடல்மொழியில்.


இந்த மண்ணின் மைந்தன் அவர். அவரின் அப்பாவும் தாத்தாவும் இன்னும் முன்னோரும் இங்கேயே அடிமைகளாகப் பிறந்து அப்படியே வளர்ந்து அப்படியே மறைந்தவர்கள். அவர் மகனும், பேரனும் கூட அப்படியே இருந்தால் தான் எங்களைப் போன்றோர்கள் ““தொரை”” களாகவே காலந்தள்ள முடியும். என்ன அருமையான மனிதர்கள்.  எவனோ ஒருவன் ஒருநாள் திடீரென்று வந்து, இந்த நிலங்கள் அனைத்தும் என்னுடையவை.  உங்களுக்குச் சோறு போட்டு, செலவுக்கு காசும் தருகிறேன் என்றதும் கேள்விகளே இன்றி அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்.


நல்ல வேளையாக, நான் ஏதோ ஒரு சிறுநகரத்தில் பிறந்து, வளர்ந்து, படித்து எப்படியோ “தொரை”யாகவும் ஆகிவிட்டேன். பெரிய நகரத்தில் பெரிய இடத்தில் பிறந்த, என்னை விட இன்னும் கொஞ்சம் விவரமான அந்த வங்காளி, பெரிய தொரை ஆகிவிட்டார்.


”தொரை”


பதட்டமும் துயரமும் நிறைந்த அந்தக் குரல். அதே கிழட்டுச் சமையற்காரன்.  கைகள் நடுங்க, கண்கள் கலங்கி,  தடுமாற்றத்துடன் ஏதோ சொல்ல வந்து, அதுவும் முடியாமல் வெளிப்பக்கத்தை நோக்கிக் கையைக் காட்டுகிறார்.  நிதானமாய் எழுந்து, அவரைக் கடந்து, வெளியே சென்றால், சற்று தள்ளி இருக்கும் கார் நிறுத்தும் இடத்தில் நான்கு பெண்கள் சுற்றிக் கூடியிருக்க அதிலிருந்து ஒரு பெண்ணின் அலறல்..... அப்படி ஒரு அலறலை நான் அதுவரைக் கேட்டதே இல்லை.....தொடர்ந்து பிறந்த குழந்தையின் அழுகுரல்......


ஒம்பது மாசப் புள்ளைய வவுத்தில வச்சிகிட்டு, எலை பறிக்க வராதன்னு சொன்னாக் கேக்கமாட்டீங்கறாளே. எனக்கு விதிச்சத யாரு என்ன செய்யமுடியுங்க்கா?  எங்காத்தா பெத்துப் போட்டுட்டு கண்ணை மூடிட்டா. அப்பன் பாத்துக் கெட்டி வச்சவன் எங்க போனானோ?. ஆனா, எம் புள்ளைய அப்புடி நான் விட்டறமாட்டேங்க்கா ந்னு காலைல தான் சொல்லிகிட்டிருந்தா, நல்லபடியா ரெண்டு உசுரும் பொழைச்சிக்கனும் ஆத்தா........


சமையற்காரன் கொண்டு வரப் போயிருக்கும் சுடு தண்ணீருக்காக காத்திருக்கும் வேளையில் ஒரு பெண் புலம்பிக் கொண்டு இருக்கிறாள்.


அரைமணி நேரத்தில், எல்லாம் முடிந்துவிட்டது. சமையற்காரர் கொடுத்த ஒரு பழைய ”கோட்” டினை விரித்து அதன் உட்பக்கம் மடித்து செருகப்பட்ட ஒரு லுங்கிக்குள் புதைந்தபடி, யாரோ ஒரு பெண்ணின் கைகளில் ஏதோ ஒரு நம்பிக்கையில் புதிதாய் பிறந்த ஒரு உயிர்.  நூறு அடி தள்ளி கார் நிறுத்துமிடத்தில் புதிதாய் ஒரு பிணம்.


ஒரு வாரத்திற்குப் பிறகு, அலுவலகத்திலிருந்து திரும்பும் போது, அதே குழந்தையுடன் சில பெண்கள். கொஞ்சம் வயதான பெண்மனி முன்னே வந்து,  நாங்க எல்லாரும் வேலைக்குப் போயித்தான் சோறு திங்க வேண்டியிருக்குங்கய்யா. இந்தக் குழந்தையைப் பார்த்துக்க முடியலை.  கோயம்புத்தூருல இருக்கற கெவருமெண்டு ஆசுபத்திரில அனாதைக் கொழந்தைகளை வாங்கிக்கறாங்கலாம். இதைக் கொண்டு போயி அங்க விட்டுட்டு வர்றதுக்கு வழி பண்டுங்கய்யா.


“ எம் புள்ளைய அப்புடியெல்லாம் விட்டறமாட்டேங்க்கா” என்ற குரல் எங்கிருந்தோ கேட்கிறது.


கொஞ்சம் தள்ளி  நின்றபடி என் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார் அந்தச் சமையற்காரர். அவர் கண்களில் ஏதோ ஒரு புது ஒளி. என்னிடம் எதற்கோ அனுமதி கேட்பது போன்ற ஒரு கெஞ்சலான பார்வை. ஒரு நிமிடம் திரும்பி அந்தக் குழந்தையைப் பார்க்கிறேன். எந்தக் கவலையுமின்றி நல்ல உறக்கத்தில் அது.


ஒருமுறை அவரைப் பார்த்துவிட்டு அந்தக் குழந்தையைப் பார்த்து மீண்டும் அவரைப் பார்க்கிறேன். பெரு மகிழ்ச்சியுடன்  பாய்ந்து சென்று அந்தப் பெண்மணியின் கைகளிலிருந்த குழந்தையைப்  பறித்துக் கொண்டு தன் சமையலறை நோக்கி ஓடுகிறார்.


மனைவியின் வேலை, மகனின் படிப்பிற்காக நகரத்தின் புறநகர்ப்பகுதியில் அவர்களிருவரும், இங்கே  தேயிலை மணத்துக்கும், கொஞ்சம் மனிதர்களுக்கும் இடையிலே  நான்.  மனைவி இறந்து, மகன்களும் எங்கோ நகரத்துக்கு வேலைக்குச் சென்ற பின்னால், சமையலறைக்கும் எனக்கு மிடையே இந்தச் சமையற்காரர். இப்போது புதிதாய் எங்களிருவருக்குமிடையே இந்தக் குழந்தை.


இனி இந்த வீட்டில் இரண்டு அனாதைகள் மட்டும் இல்லை, என்று எனக்குள்ளே சொல்லிக் கொள்கிறேன்.

No comments :