Sunday, March 15, 2020

பட்ஜெட் அறிவோம்







          இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர். கே. சண்முகம் செட்டியார்


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பட்ஜெட் என்ற வார்த்தை எந்த இடத்திலும் பயன்படுத்தப்படவில்லை. இங்கிலாந்தில் நிதிநிலை அறிக்கையை பையில் போட்டு எடுத்துவருவார் நிதியமைச்சர். அந்தப் பையிற்கு பட்ஜெட் என்று பெயர்.  நாளடைவில் அதுவே ஆகுபெயராகி நிலைத்துவிட்டது.

நிதிநிலை அறிக்கை:

நிதிநிலை அறிக்கை என்பது ஒரு அரசின் வரவு செலவு கணக்குகளைக் குறிப்பிடும். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து மார்ச் 31ஆம் தேதிவரையிலான கால கட்டத்திற்கு, அரசிடம் எந்தெந்த வகையில் பணம் வரும், அதை எந்தெந்த வகையில் செலவிடப்போகிறார்கள் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு, சட்டமன்றத்தில், அல்லது பாராளுமன்றத்தில் சம்பந்தப்பட்ட நிதியமைச்சர்கள் வெளியிடுவார்கள்.  இந்த வரவு செலவு திட்டம்

1.   வருவாய்க் கணக்கு (revenue accounts)
2.   மூலதனக் கணக்கு  (capital accounts)
3.   பொதுக் கணக்கு    (general accounts)

என்ற மூன்றையும் உள்ளடக்கியிருக்கும்.


வருவாய்க் கணக்கு:

வருவாய் கணக்கில் வரவினங்கள்( revenue receipts), வருவாய் கணக்கில் செலவினங்கள்(revenue expenditure) என்று இரண்டு பகுதிகள் இருக்கும்.  வருவாய் வரவினங்களில், (i) வரி வருவாய் (tax revenue), (ii) வரி அல்லாத பிற வருவாய், (non tax revenue) (iii) உதவி மான்யங்களும் பங்களிப்புத் தொகைகளும் (grants and assistance) என்றும் வருவாய் வரவினம் மூன்றையும் உள்ளடக்கியிருக்கும்.
விற்பனை வரி, கலால் வரி, வருமானவரி போன்ற வரி இனங்களில் இருந்து பெருவது வரி வருவாய்.  வட்டி, வாடகை, சேவைகளின் மீது பெறும் தொகை வரியல்லாத வருவாய், மத்திய அரசிடமிருந்து பெறப்படும் உதவித்தொகைகள் மானியங்கள் மூன்றாவது வருவாயாகும்.

     வருவாய் வரவினங்கள்             வருவாய் செலவினங்கள்


1 வரி வருவாய்
2 வரிவருவாய் அல்லாத பிற வருவாய்கள் (வட்டி, வாடகை, ஈவுத்தொகை(dividend) போன்றவை
3.உதவிகளும் மானியங்களும்

1.   சம்பளம், பென்ஷன், மற்றும் அரசு செய்யும் பொது செலவுகள்
2.   சமூகப்பணிகளுக்கான செலவுகள்
3.   பொருளாதாரப் பணிகளுக்கான செலவுகள்
4.   உதவிகளும் மாநியங்களும்

மூலதன வரவினங்கள்                மூலதன செலவினங்கள்

1.   மத்திய அரசிடமிருந்தோ, சந்தையிலிருந்தோ பெறப்படும் கடன்கள்
2.   சொத்தையோ பங்கையோ(disinvestment) விற்று வரும் தொகைகள்
3.   வெளிநாட்டுக் கடன்கள்
1.   மூலதனத்தை உருவாக்கும் செலவுகள்
2.   கட்டிடங்கள்,சாலைகள், பாசனவசதிகள், இயந்திரங்கள், பங்கு மூலதனம்
3.   வாரியங்கள், கழகங்கள், கூட்டுறவு சங்கங்களுக்கு, வழங்கப்படும் கடன் தொகைகள்
அரசின் வருவாய் வரவினங்களைவிட(revenue receipts) வருவாய்செலவினங்கள் கூடியிருக்கும் நிலையை,  நிதிப் பற்றாக்குறை (BUDGET DEFICIT) என்கிறோம்.

வழக்கமான வரி வசூல்,  சமூக நலத்திட்டங்கள் என்று அரசுகள் செயல்பட்டாலும், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கும், கூட்டுறவுச் சங்கங்களுக்கும், உள்ளாட்சி மன்றங்களுக்கும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக(infrastructural development), தொடர்ந்து நடத்துவதற்காக,  பெரும் தொகை செலவிடவேண்டியிருக்கிறது. அதற்காக மத்திய அரசிடமிருந்தோ, நிதிச் சந்தையிலிருந்தோ, பொதுமக்களிடமிருந்தோ, குறிப்பிட்ட வட்டியில் பணத்தைப் பெற்று செலவுகள் செய்கின்றன.

மூலதனக்கணக்கிற்கான (capital account) பற்றாக்குறையை, வருமானக் கணக்கின் உபரித்தொகை( income over expenditure) சமண் செய்யுமானால், அது ஒரு சிறந்த நிதி நிலை அறிக்கையாக இருக்கும்.  ஆனால், தற்போதைய நிலையில், வருவாய் கணக்கின் பற்றாக்குறையைச் சமாளிக்க, முதலீட்டுக்கணக்கிலிருந்து எடுத்துவருகிறோம்.  அதாவது, கடன் வாங்கி வளர்ச்சிப் பணிகளுக்குச் செலவு செய்வதற்கு பதிலாக, கடன் வாங்கி செலவு செய்து வருகிறோம். இன்னும் எளிதாகச் சொன்னால், நம் வீடுகளில் நடப்பதுதான், கடன் வாங்கி தொழில் அபிவிருத்தி, இடம், கட்டிடம், வாங்குவது போன்ற முதலீட்டுச் செலவுகளைச் செய்யாமல், கடன் வாங்கி வீட்டுச் செலவுகளைச் செய்து வருகின்றோம். நம் வருவாய் உயராது, ஆனால் செலவினங்களோடு வட்டியும் கூடி, மேலும் கடனாளியாகிறோம். நம்மைப் போலவே தமிழக அரசும், ரிசர்வ் வங்கியில் over draft வசதியைப் பெற்று அவ்வப்போது தன் நிதி தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறது.

இந்திய அரசின் வருவாய் வரவினங்கள் மற்றும் செலவினங்களின்  ஏப்ரல் 2019 முதல் ஜனவரி 2020 வரையிலான தரவுகள் வெளியாகி இருக்கின்றன. 10 மாதங்கள் முடிவடைந்த நிலையில் வருவாய் வரவினம் 12.82லட்சம் கோடிகள். இதில் வரி வருவாய் 9.98லட்சம் கோடி, வரி அல்லாத வருவாய் 2.52 லட்சம் கோடி.  வருவாய் செலவினங்கள் பத்துமாத அளவிற்கு,22.68லட்சம் கோடி ரூபாய்கள். வருவாய் பற்றாக்குறை 9.85லட்சம் கோடிகள்.  இந்த வருவாய் செலவினங்களில், 20லட்சம் கோடிகள் வருவாய் செலவினங்களுக்கும் 2.68 லட்சம் கோடிகள் மட்டும் முதலீடுகளாக செலவிடப்பட்டிருப்பது கவனிக்க வேண்டிய ஒன்று.

பொதுக்கணக்குகள்:

உள்ளாட்சி மன்றங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் வைப்புநிதி, ஒப்பந்ததாரர்கள் செலுத்தும் முன்பணம், கருவூலங்களில்(treasury) நீதி மன்றங்களில் செலுத்தப்படும் வைப்புநிதிகள், போன்றவை பொதுக் கணக்கில் காட்டப்படும்.

நிதிநிலைக் குறிப்பும், அதன் இணைப்புகளும்:

2003 ஆம் ஆண்டு, தமிழ்நாடுநிதி நிலை நிருவாகப் பொறுப்புடமைச் சட்டம் என்ற ஒரு சட்டத்தால்,இந்த நிதிநிலை அறிக்கைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும், நிதியமைச்சரின் நிதிநிலை அறிக்கையைத் தொடர்ந்து, அதைப் புரிந்து கொள்வதற்கான வழிகாட்டி நூலாக,1993-94ல் இருந்து இந்த வெளியீடு அரசால் வெளியிடப்படுகிறது. இது அரசின் நிதிநிலை அறிக்கையைப் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

இதன் முதல் பகுதியில், பொதுவான நிதிநிலை, ஆய்வுகள், புள்ளிவிவரங்கள் இருக்கும். இரண்டாவது பகுதியில் வருவாய் வரவினங்களையும், வருவாய் செலவினங்களையும், விளக்கதோடு தருகிறது.  கடந்த ஆண்டின் செலவு, இந்த ஆண்டு திட்டமிடப்பட்ட தொகை, (budget estimation) செய்யப்பட்ட செலவு, (actuals) போன்றவற்றை விரிவாகப் பேசுகிறது.

நிதி நிலை அறிக்கையைப் படிக்கும் முன் தமிழக அரசின் வரவு-செலவுத் திட்ட விளக்க நூலை ஒருமுறை படித்துப் பாருங்கள்? (தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் வெளியிடப்படுகிறது)



தமிழக அரசின் 2021 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் விளக்கக் குறிப்புகள் இந்தச் சுட்டியில் கிடைக்கின்றன.

தமிழக அரசின் வருவாய் கணக்குகள், வருவாய் செலவினங்கள்  உள்ளிட்ட பல தகவல்களும் இதில் அடங்கியிருக்கும்.  நிதியமைச்சரால், சட்ட மன்றத்தில் வழங்கப்படும் உரை, பொது தகவல்கள் மட்டுமே இருக்கும்.  ஆனால் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் (annual financial statement) புள்ளி விவரங்களோடு, கடந்த ஆண்டைய திட்டமிடப்பட்ட தொகை, அதில் கூடுதல் அல்லது குறைதல், வரும் ஆண்டுக்கு திட்டமிடப்பட்ட தொகை ஆகியவை புள்ளி விவரங்களாக இதில் அடங்கியிருக்கும். கீழ் உள்ள சுட்டியில் அதை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.



Tuesday, March 03, 2020

சொல் பொருள் மௌனம் – ஆசிரியர். கவிஞர். மோகனரங்கன்

வேர்கள், கணையாழி, காலச்சுவடு, வேட்கை, சாம்பல், புது எழுத்து, யாதுமாகி, உயிர்மை, இந்தியா டுடே, மழை, பனிக்குடம் ஆகிய பத்திரிக்கைகளில் பல்வேறு காலகட்டங்களில் வெளிவந்த தம் கட்டுரைகளோடு, மேலும் சிலகட்டுரைகளை இணைத்து, இந்த நூலை வெளிக் கொணர்ந்திருக்கிறார், கவிஞர் மோகனரங்கன்.
மொத்தம் 42 கட்டுரைகளை உள்ளடக்கிய இந்த நூல், கிண்டில் நூலாக வெளிவந்திருக்கிறது.
”விமர்சனம் என்பதன் பணி ஒரு படைப்புக்கு சாத்தியமான மிகச்சிறந்த வாசிப்பின் வழி அதை மதிப்பிட்டுக் கூறுவதுதான். எந்த விமர்சனமும் இலக்கிய ஆக்கத்தையும் இலக்கிய வாசிப்பையும் கட்டுப்படுத்தவோ வழிநடத்தவோ முடியாது. விமர்சனம் என்பது படைப்பு - வாசிப்பு என்ற இலக்கிய செயல்பாட்டை புரிந்துகொள்ள உதவக்கூடியது மட்டுமே. அவ்வகையில் நிபந்தனைகள் முன்முடிவுகள் ஏதுமின்றி ஒரு படைப்பின் முன் திறந்த மனதுடன் தன்னை நிறுத்திக்கொண்டு ஒருவன் உருவாக்கிக்கொள்கிற கருத்துக்களும் மதிப்பீடுகளுமே ரசனை அடிப்படையிலான விமர்சனம் எனப்படும். ஒரு ரசனை விமர்சகன் தன் வாசிப்பு செயல்பாட்டில், முதலாவதாக தன் வாழ்க்கை அனுபவத்தையும் இரண்டாவதாக தன் வாசிப்பு அறிவையும் மூன்றாவதாக பொதுச்சூழலில் இருந்து பெறப்பட்ட பிற துறை அறிவினையும் பயன்படுத்தி தனது மதிப்பீட்டிற்கான தர்க்கங்களை உருவாக்கிக் கொள்கிறான் என்கிறார். இலக்கிய விமர்சனம் வாசகனுக்கு எந்த உண்மைகளையும் அறுதியிட்டுக் கூறமுடியாது.
வடிவம் பற்றிய படைப்பாளியின் ஆழமான பிரக்ஞையுடன் எழுதப்படும் கச்சிதமான படைப்புகளை விடவும், எவ்விதமான கட்டுப்பாடுமின்றி படைப்பின் இச்சா சக்திக்கு தன்னை முற்றிலுமாக ஒப்புக்கொடுத்துவிடும் எழுத்தாளனின் எழுத்துகள் முக்கியமானவை. அத்தகைய படைப்புகள் பலவும் வடிவரீதியாக பல குறைபாடுகளைக் கொண்டிருந்தாலுமேகூட அவற்றினூடாக அப் படைப்பாளியின் ஆழ்மனம் (ஒருவிதத்தில் அது சமூகத்தின் கூட்டு நனவிலி மனமும் கூடதான்) மொழியைச் சந்திக்கும் தருணங்கள்தான் மிகவும் மதிப்புடையவை.”
என்ற எழுத்தாளர் ஜெயமோகனின் விமர்சனக்கலை வரிகளோடு வருகிறது, முதல் கட்டுரை.
ஒரு எழுத்து எழுதப்படும் போது, பெரும் அங்கீகாரங்களையோ, கடும் விமர்னங்களையோ, தர்க்க வாதங்களையோ எதிர்பார்த்து எழுதப்படுவதில்லை. அது அந்த எழுத்தாளனின் சுயம் சார்ந்த அனுபவ வெளிப்பாடு. அந்த வகையில் ஜெமோவின் விமர்சனக் கொள்கையைப் படித்துவிட்டு, அவர் குறிப்பிடும்படியான ஒரு எழுத்தை, ஒருவன் எழுத முடியுமா? என்ற சந்தேகம் வருகிறது.
முன்னாலே சொல்கிறார், மிதமிஞ்சிய வடிவப் பிரஞ்யுடன், நவீன அழகியல் கூறுகளுடன் எழுதப்பட்டதால், மொளனி,சுரா,ஜி நாகராஜன் நகுலன் போன்றவர்கள் எல்லைக் குட்பட்டே செயல்பட்டார்கள் என்கிறார் ஜெமோ.
இதை எந்த வகையில் புரிந்து கொள்வது என்று எனக்குத் தெரியவில்லை. இந்த விமர்சனங்கள், திரு.ஜெ.மோகனின் பழமை சார்ந்த சமூக வளர்ப்பு, சூழல், கலாச்சாரப் பின்னனி, சுய அனுபவம் போன்ற கூறுகளை உள்ளடக்கியதாகத்தான் பார்க்க முடிகிறது. ஒரு எழுத்தை, ஒரு படைப்பை விமர்சிப்பதற்கு, பொதுத்தன்மை சார்ந்த அளவீடுகள் இருக்கமுடியாது. அவரவர் வளர்ந்த பின்னனியில், மட்டுமே இதைப் பார்க்க முடிகிறது
.இந்தக் கட்டுரைகளில், திரு.ஜெ.மோ, தன் அனுபவங்களையும், தான் சார்ந்து வளர்ந்த சமூக கட்டமைப்புகளையும், தனிமனிதனாக தனக்குள் ஊட்டப்பட்டவைகளையும், தனது இலக்கியம் சார்ந்த நம்பிக்கைகளையும், தராசின் ஒரு தட்டில் வைத்துக் கொண்டு, மற்ற எழுத்தாளர்களின் படைப்புகளை, எதிர் தட்டில் வைத்துப் பேசுவதன் மூலம், அதை ஒரு கறாரான விமர்சனம் என்று சொல்லுகிறார்.
”தமிழ் இலக்கிய விமர்சன மரபிற்கு ஒரு பெரும் கொடை இந்நூல் வரிசை” என்ற கவிஞர் மோகனரங்கனின் வரிகளில், பெரிதாய் எனக்கு உடன்பாடு இல்லை.
இது தனிப்பட்ட சில படைப்பாளிகளின் படைப்புகளைப் பற்றி மதிப்பிடும் கட்டுரைகளாக இருந்தாலும், இன்னொரு பார்வையில் தமிழ் புனைகதைகளின் அரை நூற்றாண்டு கால வரலாறாகவும் இதை வாசிக்க முடியும் என்கிறார் நூலாசிரியர். இதைத்தாண்டி, எழுத்தாளர் ஜெயமோகனின் ”நூல் விமர்சனங்கள் குறித்த” கட்டுரைகளில் பெரிதாய் ஏதுமில்லை என்று எனக்குத் தோன்றுகிறது.
எழுத்தாளர் ஆ.முத்துலிங்கம் குறித்த கட்டுரை எனக்குள் பல திறப்புகளைக் கொடுத்திருக்கிறது. ஆ.முத்துலிங்கத்தின் நூல்களை, மீண்டும் ஒரு முறை வாசிக்க வேண்டும். அது கொடுக்கப்போகும் ஆனந்தம் குறித்த கற்பனை, அளவிடமுடியாததாக இருக்கிறது.
எம். எஸ் குறித்த கட்டுரை வாசித்த பிறகு, அவரின் நூல்களை வாசிக்கும் ஆவல் இருந்தாலும், வழக்கொழிந்த மொழி நடையை நினைத்தால் அச்சமாகவும் இருக்கிறது
வரலாற்றின் மனசாட்சியைத் தீண்டும் குரல்
நூலாசிரியர், கவிஞர் மோகனரங்கன், வாசிப்பில் உணர்ந்ததில் கொஞ்சமாவது, அதை எழுதிய எழுத்தாளர் திரு.ஜெயமோகன் உணர்ந்து எழுதியிருப்பாரா என்ற சந்தேகம் எனக்கு ஏன் வந்தது? என்று தெரியவில்லை. ஆனால் வாசிக்க வேண்டிய கட்டுரை. அது என்னை பல்வேறு தளங்களுக்கு இழுத்துச் செல்கிறது என்பதும் உண்மை
தான் வாசிக்கும் ஒவ்வொன்றையும், தனக்குள்ளே கட்டமைத்து வைத்திருக்கும் சட்டகத்திற்குள் வைத்து, தனது வாசிப்பின் மீதான நம்பிக்கைகளால் அவற்றை இறுக்கிக் கட்டி, ஏற்கனவே அடிக்கப்பட்டிருக்கும் மரபு ஆணியில் மாட்டித் தொங்கவிட்டு, அதில் தன் முகத்தைப் பார்க்கும் பாங்கிலேயே இந்த நூல் இருக்கிறது என்று தோன்றினாலும், அதைத் தாண்டி நான் எடுத்துக் கொள்வதற்கு நிறையவே இதில் இருக்கின்றன, என்று மனது சொல்லிக் கொண்டே இருக்கிறது. அத்தனையும் ஒருங்கே குவித்து, மனதில் நிறுத்துவது சாத்தியமில்லாக் கனவுதான். நிதானமாகத்தான், வாசிக்க முடிகிறது. வாசிக்க வேண்டிய நூல்.
எழுத்தாளர்கள் திரு.சு.வேணுகோபால், திரு.சி.சு.செல்லப்பா, திரு. பாவண்ணன் மொழிபெயர்ப்புகள், திரு. கோபிகிருஷ்ணன், திரு. பெருமாள்முருகன், திரு. எம்.ஜி.சுரேஷ்,திரு.ராஜகவுதமன்,திரு.மு.தளையசிங்கம்,திரு.சூத்திரதாரி கோபாலகிருஷ்ணன்,திரு.கி.ஆ.சச்சிதானந்தம், திரு.யூமா வாசுகி, திரு ஜெகதீஷ், திரு.எஸ்ரா, திரு யுவன் சந்திரசேகர்,திரு.ஜெயமோகன்,திரு.மெளனி, திரு.ஜோ டி குருஸ், போன்றவர்களின் படைப்புகளை, நமக்கு அறிமுகப்படுத்துகிறார். ஓரிரு இடங்களில், எந்த படைப்பு குறித்துப் பேசுகிறார்?, யார் குறித்துப் பேசுகிறார்? என்பது குறித்த தடுமாற்றம் வருகிறது. புதிதாய் வாசிப்பைத் தொடங்கியிருப்பவர்களுக்கு கொஞ்சம் கடினமாக இருக்கலாம்.
பகுதி இரண்டில், கவிஞர்கள், திரு.இராஜ சுந்தராஜன், திரு பிரம்மராஜன், திரு தேவதச்சன், கவிஞர் அபி, திரு.பாதசாரி, திரு.பிரமிள், திரு.நகுலன், திரு ஆத்மாநாம்,திரு.கலாப்பிரியா, திரு.யுமா வாசுகி, திரு.சி.மணி, போன்றவர்களின் கவிதை வரிகளை, உதாரணங்களோடு நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.
ஆழ்ந்த வாசிப்பு உள்ளவர்கள், நுல்களை விமர்சிக்க விரும்புகிற புதியவர்கள் புதுக்கவிதைகள் எழுதுபவர்கள், புதிதாய் வாசிப்பில் இறங்கியிருப்பவர்கள், என அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய படைப்பு இது.
#நூல் அறிமுகம்

Monday, March 02, 2020

நானி பல்கிவாலா

தமிழ் வருடப்பிறப்பு, ஆடிப் பெருக்கு, ஆயுதபூசை, தீபாவளி, பொங்கல், என கடந்து வந்த பண்டிகை நாட்களை நினைத்துப் பார்க்கும் போது, ஆச்சரியமாக இருக்கிறது. ஒவ்வொன்றையும் நாம் எவ்வளவு மகிழ்வோடு கொண்டாடினோம். குழந்தைகளாக நாம் அதைக் கொண்டாடினோம் என்றால், பெரியவர்களும் அவர்கள் பங்கிற்கு நம்மோடு இணைந்து கொண்டாடித் தீர்த்தார்கள். இன்று நம் குழந்தைகளும், தயாராக இல்லை, நாமும் தயாராக இல்லை. பண்டிகைகளும், சிறப்பான நாட்களும் வெறும் சம்பரதாயங்களாகவே மாறிவிட்டிருக்கின்றன. அடுத்த தலைமுறை இந்த நாட்களை நினைவில் வைத்துக் கொள்வதே, விடுமுறை நாள் என்பதிலாகத்தான் இருக்க வேண்டும்.
”பட்ஜெட் பண்டிகையும்” அப்படியான ஒரு முடிவை எட்டிவிட்டிருப்பது பெரும் கவலையளிக்கிறது. ஒரு காலத்தில், ஆகாசவாணி செய்தி நேரத்தின் போது ஊரே, தெரு டீக்கடைகள், முக்கிய சந்திப்புகளில், கூடி நின்று வானொலிச் செய்திக்காகக் காத்திருக்கும். பெரும்பாலும் என்னென்ன பொருட்களின் மீது வரி கூட்டியிருக்கிறார்கள் என்பதே முக்கியமான தேடலாய் இருக்கும். நேரடி வரி பற்றிய கவலையாருக்கும் இருந்ததில்லை. காரில் வைத்திருப்பவர்கள் மட்டும்தான் வருமானவரி கட்டவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த காலம் அது. அடுத்த நாள் செய்தித்தாள்களில் மக்கள் முகம் புதைத்துக் கிடப்பார்கள். அது விலை குறையும், இது விலை கூடும் என்ற பேச்சு நகரெங்கும் நிரம்பியிருக்கும். ஊர், இயல்புநிலைக்கு வருவதற்கு, ஓரிரு நாட்களாகும். ஒரு பொருளின் மீது வரி விதிப்பதற்காகத்தான் பட்ஜெட் கூட்டப்படுகிறது என்று நம்பிய நாட்களும் உண்டு.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட, பட்ஜெட் என்பது பெரும் பண்டிகை நாளாகத்தான் இருந்தது. காலைச் செய்தித்தாள்களில் பட்ஜெட் தவிர்த்த வேறு எந்தச் செய்தியும் அதிகம் இடம் பெறாது. நிதி அமைச்சர்களின் பொருளாதார முழக்கங்கள், நாட்டின் கடன் சுமை, கிடைக்கபோகும் திட்டங்கள், இந்த வருசமாவது நம்மூருக்கு ரயிலு வருமா? என்ற ஆதங்கங்கள், இப்படி எல்லாவற்றிர்க்கும், ஏதோவொரு பதில் அன்றைய செய்தித்தாளில் இருக்கும்
”நானி பல்கிவாலா” இந்தப் பெயரை இன்றைய தலைமுறை அறிந்திருக்காததில் வியப்பு ஏதுமில்லை. நாம் மறந்த எத்தனையோ பேர்களில் அவரும் ஒருவர். 1920 மும்பையில் ஒரு சாதாரண பார்ஸி குடும்பத்தில் பிறந்து ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்று, பம்பாய் பல்கலைக் கழகத்தில் பேராசிரியரானவர், அதை விடுத்து சட்டக் கல்லூரியில் சேர்ந்து, இந்தியாவின் மிகச்சிறந்த வழக்கறிஞராகச் செயல்பட்டவர். வருமானவரி மற்றும் வணிக வரிச் சட்ட வழக்குகளை மட்டும் நடத்திவந்த இவர், பின்னாளில் உச்ச நீதிமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டங்களைப் பகுத்தாய்வதில், பெரும் பங்காற்றினார்.
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் முடிந்த வாரத்தில், பட்ஜெட் குறித்த பெரும் ஆய்வைப், பொது மக்கள் மத்தியில் நிகழ்த்துவார் பல்கிவாலா. ஒருகாலத்தில் மிகப்பிரபலமான ”பல்கிவாலா பட்ஜெட் ஆய்வுகள்” 1958ஆம் ஆண்டு ”கிரீன் ஹோட்டல்” என்ற சிறிய ஓட்டலில் துவங்கியது. பின்னாளில் பம்பாய் கிரிகெட் மைதானம் நிரம்பும் அளவு, பெரும் கூட்டமாக மாறியிருந்தது. எந்த விதக் குறிப்பும் கைகளில் வைத்துக் கொள்லாமல், இரண்டு மணி நேரத்திற்கு, பட்ஜெட் குறித்த தகவல்களை அலசி ஆராய்வார். பல்கிவாலாவின் நண்பரும் இணைந்து பணியாற்றியவரும் முன்னாள் அட்டர்னி ஜென்ரல் சோலி சொராப்ஜி கூறுவார் “ நானியின் பட்ஜெட் பேச்சைக் கேட்க தொழிலதிபர்கள், வழக்கறிஞர்கள், வணிகர்கள், பொது மக்கள் என அனைத்துத் தரப்பினரும் காத்து இருந்திருக்கிறார்கள். இந்திய கிரிகெட் கிளப் வளாகத்தில் நடக்கும் இந்தப் பட்ஜெட் உரையைக் கேட்க 20000 பேர்களுக்கு வசதிகள் செய்யப்படும். உண்மையில் இந்தியாவில் நிதியமைச்சரால் ஒரு பட்ஜெட் உரையும், நானியால் மற்றொன்றும் வழங்கப்பட்டது”
“ politically cleaver, but economically un sound” 1971ல் நானி தலைப்பிட்டுப் பேசிய பேச்சில் துவங்கி, 1989 வரை தொடர்ந்து ஒவ்வொரு பட்ஜெட் குறித்தும் ஒரு விமர்சனத்தை வைத்து வந்தார்.
இந்திய வருமான வரிச் சட்டங்களில் இருக்கும் சிடுக்குகள் குறித்துப் பேசும் போது, இந்தியாவின் ”தேசிய அவமானம்” என்று குறிப்பிடும் அளவிற்கு கடுமையான விமர்சகராக இருந்தார். வருமானவரிச்சட்டங்கள் எளிமையாக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக செயல்பட்டு வந்தார். அதன் தொடர்ச்சியாக, பேங்க் ஆப் இந்தியா, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் ஆகியவற்றின் தலைவராக இருந்த திரு A.D செரிஃப் அவர்களால் துவங்கப்பட்ட, “forum for free enterprise” ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் குறித்த உரைகளை இன்றும் நடத்திவருகிறது. நானி பல்கிவாலா அறக்கட்டளையும் கடந்த 2/2/2020 அன்று ஒரு கூட்டத்தை மும்பையில் நடத்தியது.
கடந்த பிப்ரவரி 18 ஆம் நாள், முன்னாள் திட்டக் கமிஷனின் துணைத்தலைவராக இருந்த மாண்டெக் சிங் அலுவாலியா அவர்கள் வெளியிட்ட ”பேக் ஸ்டேஜ்” என்ற நூலில், UPA ஆட்சி செய்த தவறுகளையும் சேர்த்தே குறிப்பிட்டிருக்கிறார். அதை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டு, வாழ்த்தியும் பேசியிருக்கிறார்.
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி, நாமெல்லாம் காதலர் தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்த போது, தமிழக துணைமுதல்வர், மற்றும் நிதியமைச்சர், இந்த ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை வெளியிட்டார்.
யாரோ?, யாருக்காகவோ?, எதற்காகவோ? பட்ஜெட் என்ற மனநிலையில் தான் நாம் செயல்பட்டுவருகிறோம். சட்டமன்றத்தில் சொன்னால் போதாது, என்று நினைத்தோ என்னவோ, தற்போது பட்ஜெட் விளக்கூட்டங்களை நடத்த உள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
மாநில நிதி நிலை அறிக்கையையோ, மாநில வரவு செலவு கணக்குகளையோ, படிக்காமல் விட்டுவிடுகின்றோம். குறைந்த பட்சம், நாம் வசிக்கும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் வரவு செலவு திட்டங்களையாவது படிக்க முயற்சி செய்வோமே. அனைத்துமே அந்தந்த அமைப்புகளின் இணைய தளத்தில் கிடைக்கின்றன. நாம் வசிக்கும், ஊரின் மொத்த மனிதர்களும் சேர்ந்து, அரசுக்கு வரியாக எவ்வளவு தொகையைக் கொடுத்திருக்கிறோம், அதை அவர்கள் நமக்கு எந்த விதத்தில் பயனுள்ளதாக செலவு செய்திருக்கிறார்கள் என்பதையாவது தெரிந்து கொள்வோமே. நம் குழந்தைகளுக்கும் அதை வாசிக்கக் கற்றுக் கொடுப்போமே.
பொருளாதாரம், பட்ஜெட், போன்ற வார்த்தைகளின் மீதான ஒவ்வாமையே நம்மை தடுத்துக் கொண்டிருக்கிறது. நாம் கொடுக்கும், ஒவ்வொரு பணத்திற்கும் அரசுகள் கணக்குக் கொடுக்க வேண்டும். கொடுக்கின்றன. நாம் தான் அவர்களிடமிருந்து வெகுதூரம் தள்ளி நிற்கின்றோம். நாமே இந்த நிலையில் இருந்தால், விளிம்புநிலை மனிதர்கள் நிலை………..
பெரும் எதிர்பார்ப்புகளுக்கும், கடும் விமர்சனங்களுக்குமிடையே, வெளியான அரசின் வரவு செலவு திட்டங்கள், தங்களுக்கே உரித்தான சிறப்பினை இழந்து, வெறும் சம்பரதாயமாக, மாறிப்போனதற்கு நாம் மட்டுமே காரணம். படித்த, சமூக அக்கறை கொண்ட சமூகமாக மாறத்தான் வேண்டியிருக்கிறது. வரவு செலவுக் கணக்குகளை பகுத்தாய்ந்து பார்ப்போம். அதுகுறித்துப் பொதுவெளியில், சமூக வலைதளங்களில், பேசுவோம். முடிந்தால் தகுதியானவர்களைக் கொண்டு, அந்தந்த ஊர்களில் விவாதங்கள் நடத்துவோம். தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டுவோம். அரசின் நலத்திட்டங்கள், தேவைப்படுவோரைச் சென்றடைய உதவியாக இருப்போம்.
எந்த சார்பு நிலையோ, எதிர்பார்ப்போ இன்றி, தன் தேச மக்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் வரவு செலவு திட்ட அறிக்கையின் மீது பெரும் விவாதங்கள் நடைபெறக் காரணமாக இருந்த திரு. நானி பல்கிவாலா, தான் இறந்தபின், தன் ஆசைகளாக எழுதி வைத்த உயிலின் தமிழாக்கத்தைத் தந்திருக்கின்றேன்.
எனது சுவாசம்,
நிரந்தரமாக இளைப்பாற நேர்கையில்....
எனது விழிகள்...
கதிரவனின் வனப்பைக்
கண்டிராத ஒரு மானுடனுக்கு
வாழ்க்கையின் வரமாகட்டும்
எனது இதயம்...
வலியின் உச்சத்தில்
உறைந்து போனவனின்,
உயிர் துடிக்க உதவட்டும்
எனது ரத்தம்....
விபத்தில் சிக்கிய இளைஞனின்
உயிரைக் காத்து,
அவன் தலைமுறையை வளர்க்கட்டும்.
என் சிறுநீரகங்கள்……….
விஷம் தோய்ந்தவனின் இரத்தத்தை
வடித்தெடுக்கட்டும்.
என் எலும்புகள்……
முடமான ஒரு குழந்தையை,
நடமாடச் செய்யட்டும்.
எரிந்து மீந்த என் மிச்சம்…..
காற்றில் விரவி
மலர்களுக்கு எருவாகட்டும்.
என் பாவங்கள் சாத்தானுக்கும்,
ஆன்மா கடவுளுக்கும் படைக்கப்படட்டும்.
என்னில், எதையாவது புதைக்க வேண்டுமாயின்,
சகமனிதன் மீது நான் காட்டிய
பாரபட்சங்களையும், குற்றங்களையும் புதையுங்கள்.
என்னை நினைவிற்கொள்ள விருப்பம் கொண்டால்……
உன்னைத் தேடுவோர்க்கு,
கருணைமிகு வார்த்தைகளாலோ
செயலாலோ, உன்னால்
ஆனதைச் செய்துகொடு……
நான் உயிர்த்திருப்பேன், உன் நினைவுகளில்………..
-நானி
இந்த உயிலை, தமிழாக்கம் செய்து தந்த, ஈரோடு வாசல் சகோதரி திருமதி. ராதா மனோகரன் அவர்களுக்கு என் அன்பும் நன்றியும்.

இயற்றலும்….. ஈட்டலும்….. காத்தலும்……..

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு
(அதிகாரம்:இறைமாட்சி குறள் எண்:385)
கடும் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், வங்கிகளில் வராக்கடன் உயர்வு, நுகர்வு குறைவு போன்றவை, இந்தியப் பொருளாதாரத்தை சரிவிற்கு இட்டுச் செல்வதை அறியமுடிகிறது. பொருளாதார மந்தநிலை, எந்த அளவிற்கு சமூகத்தையும் அதன் நல்லியல்புகளையும் குலைத்துப் போடுகின்றது, என்பதைப் பற்றிப் பேசித்தான் ஆகவேண்டியிருக்கிறது. பொருளாதார மந்தநிலை குறித்த கவலை, ஒவ்வொருவருக்குள்ளும் பெரும் அச்சத்தைத் தரத்தொடங்கியிருக்கிறது. இதற்கு முன்னும், இவ்வாறான கவலைகளோடு இந்தச் சமூகம், பலநூறு ஆண்டுகளைக் கடந்து வந்திருக்கிறது. ஆனால் அன்றைய சூழலுக்கும், இன்றைக்கும் நிறைய வேறுபாடுகளைக் காண முடிகிறது
இதுவரை இந்தச் சமூகம் கண்ட மிக மோசமான சூழல்களும், சாவுகளும், உணவுக்கானதாக மட்டுமே இருந்திருக்கிறது. மழை பொய்த்துப் போய், வறட்சியின் பிடியில் எதையும் விலைகொடுத்து வாங்கமுடியாத நிலையும், விலை கொடுத்தாலும் கிடைக்காத பொருளாகவும் உணவு மாறியிருந்தது. கட்டற்ற வணிகம், இன்று உணவுப் பொருட்களை விளைத்துக் குவித்திருக்கிறது. அரசும் தன் பங்கிற்கு, உணவுப்பொருட்களை வாங்கி, இருப்பு வைத்தோ, இறக்குமதிகள் செய்தோ, விலைச் சமனை உறுதி செய்து கொள்கிறது. உணவு இன்று ஒரு பெரும் சிக்கலானதாக இல்லை. இந்தியாவைப் பொறுத்தவரை, ”பட்டினிச்சாவுகள்” (starvation) முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டதாக அரசுகள் தொடர்ந்து சொல்லிக் கொண்டேதான் இருக்கின்றன. ஆனாலும் “ கரிபி ஹட்டாவ்” (remove poverty) ”பேக்காரி ஹட்டாவ்”(remove unemployment) போன்ற குரல்கள் ஒலித்துக் கொண்டேதான் இருக்கின்றன. 70 ஆண்டுகளுக்கு மேலாக ஒவ்வொரு அரசும் இதையேதான் சொல்லி வருகின்றன. வார்த்தைகளும் சொல்லும் விதமும் வேண்டுமானால் மாறியிருக்கலாம்.
ஆகச்சிறந்த பள்ளிகளில், அதீத கட்டணத்தில் படிக்க வைத்தால் மட்டுமே வாழ்வில் சிறக்க முடியும் என்பது நம் அனைவரின் நம்பிக்கை. துவக்கப் பள்ளிகாலத்தில் இருந்து, உயர்நிலை வரை கிட்டத்தட்ட 12 ஆண்டுகள், இப்படியான செலவுகளில் துவண்டுதான் போய்விடுகிறோம். ஒரு கட்டத்தில் தொடரவும் முடியாமல், வெளியேறவும் முடியாமல், அகப்பட்டுத் தவிக்கின்றோம்.
மோசமான சுற்றுச் சூழல், முறையில்லாத உணவுப் பழக்கம், கலப்பட உணவுப் பொருட்கள் அல்லது பூச்சிக் கொல்லிகள் மற்றும் செயற்கை உரங்கள் ஆகியவற்றால் ஏற்படும் உடல் பாதிப்புகள், வாழ்நாள் முழுதுக்குமான நோய்கள் என, மருத்துவச் செலவினங்களும் கூடிப் பெருகியிருக்கின்றன. இன்றைய நாளில் வீட்டு வாடகை, போக்குவரத்துச் செலவினங்கள், மிகவும் கூடியிருக்கின்றன.
நாற்பது வருடங்களுக்கு முன், தூத்துக்குடியிலிருந்து பிழைப்புக்காய், சென்னை வந்திறங்கிய அந்த மனிதர், அந்தப் பெருநகரத்தின் ஏதோ ஒரு மூலையில் காலூன்றி, சிறு சிறு தொழில்கள் செய்து, அன்றைய நாளில் புறநகராய் இருந்த வேளச்சேரியில், ஒரு இடத்தை விலைகொடுத்து வாங்கி, தனக்கான ஒரு ஓலைக் குடிசையைக் கட்டி, அதில் இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்த கதையை, அவர் என்னிடம் சொல்லச் சொல்ல மனம் கணத்து அமர்ந்திருந்தேன். அந்த மாநகரத்துக்குள் அவர் செய்யாத தொழிலே இல்லை என்ற அளவிற்கு கணவன் மனைவியும் உழைத்துச் சலித்திருந்தனர். வளர்ந்த மகன் தன் நண்பர்களோடு சேர்ந்து, ஏதோ ஒரு மசாலா நிறுவனம் அமைப்பதற்காக, பெரும் கனவோடு இரண்டு அறை, சமயலறை கொண்ட வீடாய் மாறியிருந்த தன் குடிசையை, வங்கியில் அடமானம் வைத்துக் கொடுத்த பணம், சிலவருடங்களில் தீர்ந்து போய், இன்று வராக்கடன் பட்டியலில் இடப்பட்டிருக்கிறது. வீட்டின் முன் வந்து, வங்கி அலுவலர்கள் நின்று சத்தம் போடுவதைத் தாங்கமுடியாமல், அவமானத்தில் குன்றி “என் வீட்டை எடுத்துக் கொண்டு, ஐந்து லட்சம் பணம் கொடுங்கள், இங்கே வாங்கிய சில்லறைக் கடன்களைக் கொடுத்துவிட்டு, மீண்டும் தன் மீன் பிடிகிராமத்திற்கே சென்றுவிடுகின்றேன்” என்கிறார் அழுதபடியே. அருகில் அமர்ந்திருந்த அவர் மகனோ கவலை ஏதுமின்றி வாட்ஸ் அப்பில் மூழ்கி இருந்தார்.
ஒரு வங்கியின் கடன் வசூல் பொறுப்பு மேலாளரோடு, நகரின் மிகப்பெரும் செல்வந்தர்கள் வசிக்கும் பகுதியில் இருந்த, ஒரு பிரமாண்டமான வீட்டிற்கு சென்ற போது, வீட்டினுள் யாருமில்லை. மேலாளர் அவரிடமிருந்த சாவியின் மூலம் வீட்டைத் திறந்து காட்டினார். வீட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும், பணம் ஏதோ ஒரு பொருளாகி, நிறைந்திருந்தது. நீண்ட நாட்களாய் பூட்டிக் கிடப்பதால் புழுதியும், துக்கமும் நிரம்பி இருந்தன. வாசலில் நான்கு கார்களோடு, தோட்டக்காரன், டிரைவர், வருவோர் போவோர் என்று பரபரப்போடு, சில வருடங்களுக்கு முன் இயங்கிக் கொண்டிருந்திருந்த அந்த வீடு, இன்று தன் வெளிக்காட்டமுடியாத துயரத்தோடு தவித்ததை உணர முடிந்தது. வீட்டின் வரைபடங்கள், ஆவணங்களைப் பார்த்தபின், வீட்டின் உரிமையாளரைப் பற்றிக் கேட்டபோது, அவர் இறந்துவிட்டார், அவர் மனைவி, மற்றும் ஒரே மகளுக்கும் ஏதும் தெரியாது. உறவினர்களோ, நண்பர்களோ பெரிதாய் யாருமில்லை. வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார் அந்தப் பெண்மனி என்றார், வங்கி மேலாளர்.
இப்படி ஆயிரமாயிரம் பேர் தங்கள் செல்வங்களை, இந்த வியாபாரக்கடலிலே கரைத்துவிட்டுக் கரையைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
பெரும் தொழில் நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனை மந்தநிலையைக் காரணமாக்கி, வேலை நாட்களைக் குறைத்துக் கொண்டிருக்கின்றன. பல நிறுவனங்கள் ஆட்குறைப்பிலும் இறங்கியுள்ளன. வேலைவாய்ப்பு குறித்த கணக்கீடுகளின் படி, இந்திய அளவில் வேலை செய்யத் தகுதியானவர்களில் கிட்டத்தட்ட 9 சதவீதப் பேர் வேலையின்றித் தவிக்கின்றனர். இதில் மிக அதிகமாக திரிபுரா 28.6 சதவீதப்பேரும் ஹரியானா மாநிலத்தில் 27.6 சதவீதம் பேரும், இமாச்சலத்தில் 20.2 சதவீதம் பேரும், இராஜஸ்தானில் 15.9 சதவீதப்பேரும் வேலை வாய்ப்பின்றி இருப்பதாகத் தெரிவிக்கிறது.
திறந்தவெளிச் சந்தை மற்றும் கட்டற்ற உற்பத்திப் பெருக்கத்தின் விளைவுகளை, உலகச்சந்தைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே காணத்துவங்கியிருந்தாலும், இந்தியாவுக்கு இது முற்றிலுமே புதியதுதான். மிகப்பெரிய நாடு, உள்நாட்டு நுகர்வே, மிகப்பெரிய சந்தை என்று நம்பிக் கொண்டிருந்த நிலை மாறிவிட்டிருக்கிறது. மக்கள் நுகர்வைக் குறைத்துக் கொண்டிருக்கின்றனர். எதிர்காலம் குறித்த அச்சம் ஒவ்வொருவரிடமும் தெரிகிறது.
சுமார் 136 கோடிப் பேர் வாழும் இந்த நாட்டில், கணக்கீட்டு ஆண்டு 2019-20 ல் வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பித்தவர்கள் 5.65 கோடி. இவர்களில், மத்திய, மாநில, பொதுத்துறை ஊழியர்கள் சுமார் 2.50 கோடி. மீதமிருக்கும் 3.15 கோடியில், 2.62 கோடிபேர், தங்களுக்கு வரி கட்டுமளவிற்கு வருமானம் இல்லை என்று கணக்கு சமர்ப்பித்துள்ளார்கள். ஒட்டுமொத்த மக்கட்தொகையான 136 கோடியில், வெறும்53 லட்சம் பேர் மட்டுமே, வரி கட்டுமளவுக்கு தொழில் செய்து வருகிறார்கள். ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருட வருமானம் இருப்பவர்கள் 97689 பேர். இதில் சம்பளதாரர்கள் 49128. சுமார் 48561 பேர் மட்டுமே தொழில்கள் செய்து அதன் மூலம் ஆண்டிற்கு ஒருகோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்களாக இருக்கின்றார்கள்.
இந்தச் சூழலில், இளையதலைமுறையினரின் பொறுப்பற்ற போக்கும், காணும் பொருட்களையையெல்லாம் நுகரும் ஆசையும், மிக மோசமான இடத்திற்கு தள்ளிக் கொண்டு செல்கிறது. ஏமாற்றுவது, திருடுவது, கொள்ளையடிப்பது, எப்படியாவது பணத்தைத் தேடுவது என்ற எண்ணங்கள் பெருகிவருவதைக் காணமுடிகிறது.
உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் நகரத்தில், போலியான பெயரில் 15 நிறுவனங்கள் துவங்கப்பட்டு, அந்தப் பெயர்களிலேயே TAN(tax deduction account number) மற்றும் PAN எண்கள் பெறப்பட்டு,கட்டாத TDS(Tax deducted at sources) சை திரும்பப் பெற்றிருக்கின்றனர். வருமானவரித்துறை பலநூறு கோடிகளை இழந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த வழக்கு தற்போது சிபிஐ வசம் இருக்கிறது.
கடந்த செப்டம்பர் 12ஆம் நாள் இந்தியாமுழுவதும் 336 இடங்களில் சுமார் 1500 அலுவலர்களை ஒன்றினைத்து, நடத்தப்பட்ட திடீர் சோதனையில், முறைகேடாக பலநூறு கோடிகள் in put tax credit வகையில் திரும்பப் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 2018-19 ஆம் ஆண்டில் மட்டும் 37946 ஆயிரம் கோடிகள் அளவிற்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கின்றன. கடந்த ஜூன் 2019 வரை சுமார் 12472 வழக்குகள், 59,793 கோடிகள் வரை வரி ஏய்ப்பு மற்றும் போலி ரசீதுகளை சமர்ப்பித்து, பணத்தை திரும்பபெறுதல் போன்ற குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக மாநிலங்களவையில் நிதித் துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருக்கிறார். 40,000 கோடிகள் மதிப்பிலான ஜிஎஸ்டி திரும்பப் பெரும் விண்ணப்பங்களை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
பணமில்லாத வர்த்தகம் ஒரு சிறந்த முறையாக உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அது கொடுக்கும் அதிர்ச்சிகளுக்கு அளவே இல்லை. ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கிரித்திஹ் என்ற ஒரு சிறிய கிராமத்தில் 1000 பேர்களில் 900 பேர் சைபர் கிரைம் போலீஸாரால் தேடப்படுபவர்கள் என்ற ஒரு செய்தி ஆச்சரியத்தைக் கொடுக்கலாம். படிப்பறிவில்லாதவர்கள் என்று நாம் நினைக்கும் நபர்கள் தான் மிகச் சிறப்பாக இதைச் செய்கிறார்கள். கோவாவைச் சேர்ந்த சிட்னி லிமோஸ் என்ற 37 வயதுடைய தொழிலதிபருக்கு, நிதி மோசடி குற்றங்களுக்காக 500ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியிருக்கிறது துபாய் நீதிமன்றம். இது ஒன்றும் வேடிக்கைக்காகச் சொல்லவில்லை, அவர் செய்த குற்றங்களின் அளவு அத்தனை அதிகம்.
உத்தரப்பிரதேசத்தின் கான்பூர், லக்னோ நகரிங்களில் TDS (Tax deducted at Sources) என்ற வகையில் முன்கூட்டியே அதிக வரி செலுத்தியதாகச் சொல்லி, செலுத்தாத வரியைத் திரும்பப்பெற்றிருக்கின்றனர். தற்போது இந்த வழக்கு சிபிஐ வசமிருக்கிறது.
இந்திய ரயில்வேயின் IRCTC, CRIS போன்ற போலியான தளங்கள் வடிவமைத்து போலியாக ஈ-டிக்கட் வழங்கிய வழக்கில் , குற்றவாளியே, இரயில்வேயிற்கு இதுகுறித்த வாட்ஸ் அப் தகவல்களை வழங்குவதெல்லாம், இந்தியாவில் மட்டுமே நடக்கும் என்று நினைக்கின்றேன்.
அமெரிக்காவின் ”சார்லஸ் பொன்ஸி” பெயரால் அழைக்கப்படும் பொன்ஸி சதிகள் இன்றுவரை இந்தியாமுழுவதும் நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கின்றன. அனுபவ் பிளாண்டேஷனில் துவங்கி ஈமு கோழிவரை, இன்னும் ஏதேதோ. இதற்கெல்லாம் காரணமாக, பேராசை என்ற ஒன்றே, முன் வைக்கப்படுகிறது. ஆனால் அதுமட்டுமே காரணமாக இருக்க முடியாது.
சில நாட்களுக்கு முன்பு, என்னைச் சந்திக்க வந்த வங்கி அலுவலர் ஒருவர், வாங்கிய கடனை கட்ட முடியாமல், நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் கையகப்படுத்தப்பட்ட ஒரு வணிக வளாகத்தைக் குறைவான விலைக்கு வாங்கித்தருவதாகவும், பதிலுக்கு அவரை ”கொஞ்சம் கவனித்தால் போதும்” என்று சொன்னபோது, என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
2015ல் இருந்து பெரும் கடன்களை, வங்கிகளிடமிருந்து வாங்கிக் கொண்டு, இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்குத் தப்பியோடிய 70 அல்லது 80 பேரைப்பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறோம். இங்கே உள்ளூரிலேயே, ஒருவர் கடனை அடைக்க முடியாமல் தன் சொத்தை இழக்கிறார். அவருடைய சொத்து மதிப்பை விட மிகக் குறைவான விலைக்கு அவர் சொத்தை விற்று, அவருக்கும், வங்கிக்கும், மறைமுகமான நட்டத்தை ஏற்படுத்துகின்றனர்.
காலங்காலமாய் நடந்து வரும் conventional crime என்பதைத் தாண்டி, சமூக பொருளாதாரக் குற்றங்கள் socio economic offences எண்ணிக்கை கணிசமாகக் கூடிக் கொண்டேயிருக்கின்றன. வழக்கமான குற்றவியல் வழக்குகள் போல், கோபம், அவமரியாதை, பழம்பெருமையைக் காப்பாற்ற என்று அல்லாமல், இந்தச் சமூகப் பொருளாதாரக் குற்றங்களுக்கு, சொத்து சேர்ப்பில் உள்ள ஆர்வம், அல்லது பேராசை, போன்றவையே காரணமாக அமைகின்றன. conventional crime எனப்படும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போன்றவற்றிலிருந்து மாறுபட்டு, இந்தப் பொருளாதார குற்றங்கள், இவர்களுக்குள் எந்தவொரு குற்ற உணர்ச்சியையும் கொடுப்பதில்லை. தண்டனைகள் குறித்த பயங்களும், இந்த வகைக் குற்றவாளிகளுக்கு வருவதில்லை.
National crime records bureau (NCRB)2017 ஆம் ஆண்டின் தகவல்களின் படி, இந்தியாவின் 8 மாநிலங்கள், 67.2% பொருளாதாரக் குற்றங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதில் ராஜஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது. உத்தரப்பிரதேசம், தெலுங்கானா, மிக முக்கிய இடங்களை வகிக்கின்றன. மேற்கு வங்கம், பீகார், கர்நாடகம், அஸ்ஸாம் ஆகிய எட்டு மாநிலங்கள் ஒட்டுமொத்த குற்றங்களில் 67.2 சதவீதமாக் இருக்கின்றன.2017ஆம் ஆண்டு கணக்கீட்டின் படி, 1,48,972 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. 8926 நிறுவனங்கள் பெற்ற கடன்கள், வராக்கடன்களாக மாறியிருக்கின்றன. அதன் மொத்ததொகை 1,17,464 ஆயிரம் கோடிகள்.
பொருளாதாரக் குற்றங்கள் பெருகும் போது, வங்கிகள் தங்கள் முதலீட்டை இழக்கத் துவங்குகின்றன. மூலதனப் பற்றாக்குறையும், தொடர்ந்து பொருளாதார மந்தமும் உருவாகின்றன. பொருளாதாரத்தைச் சீர்செய்ய, அரசு, பொதுமக்களிடமிருந்து பெறும் வரிப்பணத்தை, வங்கிகளுக்கு முதலீடாக வழங்குகிறது. தொடர்ந்து வங்கிகள் கடன் அளிக்கின்றன.
மீண்டும் மற்றொரு நாளில், பொருளாதாரக் குற்றங்கள் பெருகலாம், வங்கிகள் தங்கள் முதலீட்டை இழக்கலாம். மீண்டும் வங்கிகளுக்கு, முதலீடுகள் தேவைப்படலாம். அரசும் தன் வரிப்பணத்தில் இருந்து, மீண்டும் முதலீடுகளைத் தரலாம், நாமும் இன்னும் கூடுதலாக, வரி செலுத்த வேண்டியும் வரலாம்