Wednesday, September 02, 2009

தீரன் சின்ன மலையும் -நானும் தொடர்ச்சி......




இந்த மாதத்தின் துவக்கத்தில் ஒரு நாள் 

நண்பர் ஒருவருடன் விருந்து ஒன்றில் கலந்து கொள்வதற்காக , “ஓடா நிலை” வரை சென்றிருந்தேன். “ஓடாநிலை” 3கி.மீ. என்று பார்த்தவுடன் என் மனம் “ஓடும் நிலை”க்கு வந்துவிட்டது.

உடன் வந்த நண்பரிடம் ஓடாநிலை வரை போய்ட்டு வரலாம்…வண்டிய நேரா விடுங்கன்னா…. 

அவரு,……. .சா……..ர்……ஏற்கனவே மணியாயிருச்சு….. நீங்க அங்க போய் மரத்தையும், செவுத்தையும்  தொடவிக்கிட்டிருந்தீங்கன்னா…….

அப்பறமா……பாருங்க கடிக்க நாளு எலும்பு கூட இருக்காது…. அப்புறம் கெடா விருந்துக்கு போயும் பட்டினிதான்……..னார்.

அவரை சமாதானப்படுத்தி, ஓடாநிலையில் கோட்டை கட்டி வாழ்ந்து, கும்பிணியரின் படைக்கு சிம்ம சொப்பணமாக “ சென்னிமலைக்கும், சிவன் மலைக்கு நடுவே…நான் சின்ன மலை என்று முழங்கிய தீரன் சின்ன மலை நினைவிடத்திற்குச் சென்று சுற்றிப்பார்த்தேன்.


ஆங்கில ஆட்சியர்கள். சின்னமலையை பிடிக்க முடியாமல் போன கோபத்தில், அவன் கோட்டை அடையாளமில்லாத அளவிற்கு சுத்தமாக அழித்திருந்தனர், இப்பொழுது தமிழக அரசு ஒரு அழகான நினைவிடத்தை கட்டி அங்கே ஒரு சிலையையும் வைத்திருக்கிறது.

கி.பி.1708-1731 வரை காங்கேய நாட்டை ஆண்ட கொற்றவேல் சர்க்கரை உத்தமகாமீண்ட மன்றாடியார் குடும்ப வளர்ப்பு வாரிசான ரத்தின சர்க்கரை-பெரியாத்தா தம்பதியினரின் இரண்டாவது மகன் தீர்த்தகிரி. இவருடன் பிறந்தவர்கள் 4 சகோதரர்கள் ஒரு சகோதரி

கொங்கு நாடு மைசூர் உடையார்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. மைசூர் மன்னருக்கு உட்பட்ட திண்டுக்கல்லில் குதிரைப் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்த ஹைதர் அலி தன் பராக்கிரமிக்க வலிமையாலும், அறிவுக் கூர்மையாளும் மைசூர் உடையர் மன்னர்களை கை பொம்மைகளாக்கிவிட்டு, அரசினை ஆளும் உரிமை பெற்றான். 

ஹைதர் அலியின் அதிகாரிகளில் ஒருவன் கீழ்க்கரைப் பூந்துறை நாட்டில் சங்ககிரி என அழைக்கப்படுகின்ற குன்றத்தூர்ச் சாவடி யில் இருந்து அதிகாரம் செலுத்தி வந்தான். கொங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரிவசூல் செய்து வரும் பணம் சங்ககிரிக்கோட்டைக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து மைசூர், சீரங்கப் பட்டணம் ஹைதர் அலியின் கஜானா விற்கு போய்ச் சேரும். 

பூந்துறை வாரணவாசிக்கவுண்டனுக்கும், தாரமங்கலம் கெட்டி முதலிக்கும் இடையில் நடைபெற்ற போரில் இடையில் புகுந்து நய வஞ்சகமாக கொங்கு நாட்டை ஆளும் உரிமை பெற்றான் மைசூர் மன்னன். இதன் பிறகு கொங்கு நாடு மைசூர் உடையார்களுக்கு வரிசெலுத்தி அவன் ஆளுகைக்குட்பட்டது. 

ஒருநாள், தாராபுரம் பகுதிகளில் வரிவசூல் செய்த பண மூட்டைகள், அறச்சலூர், மேலப்பாளையம் வழியாக சங்ககிரி கோட்டைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. வழியில் இவர்களைச் சந்தித்த தீர்த்தகிரி

பண மூட்டைகள் எங்கே செல்கின்றன என கேட்க,

வீரர்களும் விவரத்தைச் சென்னார்கள். 

மைசூரில் இருக்கன்றவனுக்கு… இங்கென்றா வேலை? 

ஆரூட்டுப்பணம் ஆருக்கு? யெங்க நாட்டை யெங்குளுக்கே ஆளத் தெரியும். பணமூட்டையள ஒரு ஓரமா வச்சுபோட்டு, ஊர் போய்ச்சேருங்கடா…. ன்னு தீர்த்தகிரி சொல்லோ,

அவனுங்களும் 

எசமானரே, சங்கீரி கோட்டை திவான் மீரா சாகிப் எசமான் கேட்டா தென்ன சொல்லறதுங்க?…..எங்களை கொன்னுபோட்டுருவாருங்க…எப்படியாச்சும் எங்குசுற காப்பாத்துங்க… நாங்க…தென்னன்னு போய்ச் சொல்றதுங்க?… ன்னாங்க. 

வடக்க சென்னிமலைக்கும், தெக்க செவன் மலைக்கும் நடுவுல, இருந்த சின்னமலை வந்து வரிப்பணத்தை வாங்கிட்டான் போய் சொல்லு. ன்னுட்டு,  

பணமூட்டைகளை வாங்கீட்டு வூடு போய் சேர்ந்தான் வீரன் தீர்த்தகிரி. அன்றுமுதல் மைசூர் செல்லும் வரிப்பணத்தை பிடுங்கி ஏழை எளிய மக்களுக்கு வழங்கினான் சின்ன மலையாகிய தீர்த்தகிரி. 

வெள்ளையனுக்கல்ல, எவனுக்கும் வரிசெலுத்த மாட்டோம். எங்கள் வரிப்பணம் எங்கள் பூமியின் நலனுக்காக மட்டுமே செலவிடவேண்டும் என முழங்கிய மாவீரன் தீரன் சின்னமலை. 

தொடர்ந்து இவ்வாறு நடைபெறுவதால், சங்ககிரி திவான் மீரா சாகேப் சின்ன மலையை கைது செய்து வரும்படி,100 குதிரைப்படை வீரர்களை மேலப்பாளையம் அனுப்பினான். சின்னமலையும், நண்பர்கள் கருப்ப சேர்வையும், வேலப்பன் ஆகியோர் இணைந்து குதிரைப்படையை சின்னாபின்னமாக்கினர்.

7-12-1782ல் ஹைதர் அலி மரணமடைந்தார். அவர் வாரிசு, திப்பு சுல்தான் ஆட்சிப் பொறுப்பேற்றார். அரசாங்க வரிப்பணத்தை கொள்ளையிட்டது தவறென்றாலும், சின்னமலையின் வீரமும், விவேகமும் திப்புவை மிகவும் கவர்ந்தது. 

சின்னமலையின் புகழ் மைசூர், சீரங்கப்பட்டணம் வரை பரவியது. அப்போது… அந்தியூர் கச்சேரி திவான் கிரிமிரே சாயபுவிடமிருந்து, சிரஸ்தார் அமீர் அலி மூலம் ஒரு ஓலை சின்னமலைக்கு வந்தது. அதன்படி.

"மைசூர் திப்புவின் படைக்கு கொங்கு வீரர்களை சேர்க்க சின்னமலை உதவி செய்ய வேண்டும். நம் பொது எதிரி ஆங்கிலேயனை விரட்ட சின்னமலை போன்ற வீரர்கள் துணை திப்புவிற்குத் தேவை "

என்ற விவரமும் இருந்தது. அதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான வீரர்களை ஒன்று சேர்த்து, அவர்களுக்கு போர்ப்பயிற்சி அளித்து, அவர்களோடு மைசூர் சென்று திப்புவைச் சந்தித்தார் சின்னமலை. சின்ன மலையின் வீரமும் விவேகமும் கண்ட திப்பு, அவரை தன் படைத்தளபதிகளில் ஒருவராக்கினார்.

நான்காம் மைசூர்ப்போர் 1799ல் நடைபெற்ற போது, சின்னமலை தலைமையிலான கொங்கு படை, குறிப்பாக மழவல்லிப் போரில் பெரும் பங்கு கொண்டு வெற்றியீட்டியது. 

இறுதிப் போரில் ஆர்தர் வெல்லெஸ்ஸி என்ற வெலிங்டன் கோமகன் படைப் பொறுப்பேற்றான். இவனே பிற்காலத்தில் நெப்போலியனை போரில் தோற்கடித்தவன். ஸ்டூவர்ட், ஹாரிஸ், பிளாயிட் போன்ற தளகர்த்தர்களைக் கொண்ட பெரும்படை திப்புவைத் தோற்கடித்தது. 4-5-1799 அன்று திப்பு வீர மரணம் அடைந்தான்.

இனியும், ஆங்கிலேயர்களிடம் போரிடுவதில் அர்த்தம் இல்லை என்பதை உணர்ந்த கொங்கு படை, சின்னமலை தலைமையில் நாடு திரும்பியது. எப்படி பாஞ்சாலங்குறிச்சியில் முயல் நாயை துரத்தியது என்பார்களோ, அதுபோல் கொங்கு நாட்டு காடையூரில் காடைக் குருவிகள் எதிரி நாட்டுப்படையை விரட்டியடித்ததாக பரம்பரை கதை உண்டு. 

அப்படிபட்ட ஊரில் ஓடாநிலையில் தான் தன் கோட்டையை அமைத்தார் சின்னமலை. நொய்யல் ஆற்றின் தெற்கே மேலப்பாளையத்தில் இருந்து போர் புரிவதை விட மேலப்பாளையம் ஓடாநிலையில் கோட்டை அமைத்து வெள்ளையரை எதிர்த்தார் சின்னமலை. 

18-4-1792ல் சிவன் மலைக்குப் பக்கத்தில் ஒரு நிலத்தை வாங்கி அங்கே தன் படைவீரர்களுக்கு, பயிற்சி அளித்தார். நிலம் வாங்கியதற்காதாரமாக அந்நாளில் ஒரு செப்புப்பட்டயம் எழுதப்பட்டது இன்றும் பாதுகாத்து வரப்படுகிறது. எழுதி வாங்குவது என்ற வார்த்தை பயன்பாடு இதனால் தான் ஏற்பட்டிருக்குமோ? ஆங்கிலேய ஆட்சிக்கு முன்னரே, பத்திரபதிவு முறையை இவர்கள் பின்பற்றியிருப்பது தெளிவாகிறது. 

இதற்கிடையில் கொங்குநாட்டின் பாளையக்காரர்களுக்கிடையில் ஒற்றுமையிண்மை நிலவி வந்தது. இதனையடுத்து பாளையக்காரர்களை ஒன்றுதிரட்டி அவர்களிடம் வெள்ளையனை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் குறித்துப் பேசி, அதற்காக ஒரு பொது படை திரட்டி கோவைக்கோன் ஆனான் தீரன் சின்னமலை.

-தொடரும்…… 

தீரன் சின்னமலை கும்மிப் பாடல்கள் 

கட்டுத் தடிக்காரர் முன்னடக்க-உடன் 
கருப்பசேர்வையும் பின்னடக்க 
வட்டப் பொட்டுக்காரச் சின்னமலை
யதோ வார சவுரியம் பாடுங்கடி 

பட்டத்துக் கத்தி பளபளெனச் செல்லும் 
பாளையத்துக் காரர்கள் முன்னடக்க 
வெட்டுந்துரை மகன் சின்ன மலை
வரும் வேடிக்கை தன்னையும் பாருங்கடி 

பூனைக் குலமென வெள்ளைப்படையோடப்
பூரித்து வீரப் புலி போலச்
சேனைக் கதிபதி சின்னமலை 
வரும் தீரத்தை வந்துமே பாருங்கடி

கச்சைகட்டுந் தடிக்காரர்களே- வெள்ளைக் 
காரர்களையெங்கு கண்டாலும் 
காலையொடித்துத் துரத்துங்கள் என்றுமே 
கட்டளையிட்டானம் சின்னமலை

கும்மியடிப்பெண்ணே, பெண்ணே கும்மியடி
கொங்கைகள் குலுங்கிட கும்மியடி
எங்கும் புகழ்மிக்க சின்ன மலையதோ 
வார ஒய்யாரம் பாருங்கடி…..

நன்றி-
ம.பொ.சி-விடுதலைப்போரில் தமிழகம் 
கல்வெட்டறிஞர்.முனைவர். செ.இராசு 
கே.ஏ. மதியழகன்
புலவர் அ.மு. குழந்தை
புலவர். தே.பா.சின்னசாமி
விக்கிபீடியா-தமிழ் 
இன்னும் பெயர் தெரியாத பலர்.

8 comments :

க.பாலாசி said...

நல்ல அருமையானதொரு....வரலாற்று கட்டுறை...இதுவரை இந்த கதை நான் படித்ததில்லை....

ரொம்பவும் சிரமபட்டு இந்த வரலாறை தொகுத்திருப்பீர்கள் போல....

சின்னமலை தீர்ததகிரி என்ற பெயர்...எப்படி தீரன் சின்னமலை என்று மறுவியது பற்றி தாங்கள் குறிப்பிடவில்லை...அதையும் தெரிந்துகொள்ள ஆவல்...

இதிலும் தங்களின் இடமாறு தோற்றப்பிழையின் ’தென்ன‘ கலாச்சாரம் தொடர்கிறது...நன்றாக உள்ளது...

இன்னும் இந்த வரலாறு பற்றி தெரிந்துகொள்ள ஆவலாய் உள்ளேன்...நன்றி...

க. பாலாஜி (ஈரோடு)

ஆரூரன் விசுவநாதன் said...

தீர்த்தகிரி சின்னமலையானபின் அவன் வீர தீரத்திற்காக மக்கள் அவனை தீரன் என்றழைத்த கதை பின்னால் வரும்
வருகைக்கு நன்றி பாலாஜி.
அன்புடன்
ஆரூரன்

ஈரோடு கதிர் said...

//4-5-1977 //

???

ஈரோடு கதிர் said...

அற்புதமான தொகுப்பு

நீங்கள் கடந்த இரண்டு நாட்களாக தீரன் சின்னமலை பற்றி பேசிய போது. இவ்வளவு
ஆழமாக வாசித்திருப்பீர்கள் என நான் நினைக்கவில்லை.

தொடர்ந்து எழுதுங்கள், காத்திருக்கிறேன் வாசிக்க..

நன்றி

//நன்றி-
இன்னும் பெயர் தெரியாத பலர். //

இது முக்கியம்

ஆரூரன் விசுவநாதன் said...

4-5-1799 திருத்தப்பட்டு விட்டது. சுட்டிக்கு நன்றி கதிர்
அன்புடன்
ஆரூரன்

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி கதிர்.
இன்னும் தீரன் சின்னமலையும் நானும் என்னும் தலைப்பிற்கே வரமுடியவில்லை. விரைவில் வந்து, விரைவில் முடித்து விடுகிறேன். பயப்பட வேண்டாம்,
அன்புடன்
ஆரூரன்

முருக.கவி said...

//"இந்த மதத்தின்"//
நம்ம ஊரில் தோன்றிய தீரன் சின்னமலையைப் பற்றி அறிந்துகொண்டதோடு மட்டுமல்லாமல் எல்லோரும் அறிந்துகொள்ளும் வண்ணம் அழகான தொடராக எழுதியுள்ள விதம் அருமை. தங்கள் முயற்சி பாராட்டுக்குரியது.

கண்ணகி said...

நல்ல பதிவு.இன்னும் தெரிந்துகொள்ள ஆவல்...எழுதுங்கள்....